Advertisement

முத்தக் கவிதை நீ – 4
வாழ்க்கை எப்போதுமே ஒரே விதமாகச் செல்வதில்லை. நாம் எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத விதமான திருப்பங்களோடு நமக்கு எப்போதும் வித்தியாசமான அனுபவங்களை தருவதே வாழ்வின் சுவாரஸ்யம். தனது வாழ்வின் கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் தனக்கான ஒரு சந்தோஷக் கூட்டை அமைத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏன் இந்தக் கடவுள் இப்போது தனக்கு இப்படி ஒரு திருப்பத்தை உருவாக்கினாரோ என்று மனதுக்குள் கசந்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா. 
வெகுநேரமாக அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டிருந்த மூவரும் அடுத்து என்ன என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தனர். அறையின் வெளியே ஹாலில் அத்தையின் குரல் ஓங்கி ஒலித்தது. “இந்த தோசை வார்க்கும் போது கொஞ்சம் நெய் ஜாஸ்தி விட்டு மொறுமொறுனு வார்த்தா தானே கொண்டு வா கொண்டு வானு நமக்கு பசிக்கும். நன்னா சாப்பிடலாம். இப்படியா வறட்டு வறட்டுனு வார்த்துப் போடுவா? எங்கம்மா எப்படி வளர்த்தா எங்கண்ணாவ. இப்படி எங்க மன்னி ருசியே இல்லாம சமைச்சுப் போட்டு தான் அவன் இப்படித் துரும்பா ஆகிட்டான். இருக்கட்டும் இனி நான் இங்கே தானே இருப்பேன். எங்கண்ணாவ நான் பார்த்துக்கிறேன்” வெட்டி ஜம்பமாய் தனது இருப்பை பறைசாற்றிக் கொண்டாள்.
அறைக்குள் இருந்த கமலாவிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. “எவ்வளவு திண்ணக்கம் பாத்தியா இவளுக்கு. நல்ல வக்கணையா நெய் ரோஸ்ட் தோசை சாப்பிட்டதுமில்லாம அவ அண்ணாவுக்கு நான் வாய்க்கு ருசியா செய்யலைன்னு குறை சொல்றத பாத்தியா. கொஞ்சமாவது அம்மா சீரியஸா இருக்காளேன்னு வருத்தம் இருக்கா பாரு. சரியான சாப்பாட்டு ராமன் குடும்பம். நன்னா ஏமாந்து போய் இந்தக் குடும்பத்துல குடுத்திட்டார் எங்கப்பா.” வராத கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்தபடி புலம்பத் தொடங்ககனாள். கீர்த்தி இத்தனை வருடங்களுக்குப் பின் இந்தப் புலம்பல் வேறா என்பதாய் பரிதாபமாக முழித்தான்.
அம்மாவின் புலம்பலில் தன் கவலையை மறந்தவளாய் வாய்பிளந்து சிறுமியாய் வேடிக்கைப் பார்த்திருந்தாள் நேத்ரா. கீர்த்திக்குத் தான் போதும் போதும் என்றானது. “அம்மா இப்போ கல்யாண வயசுல இருக்கிறது நீங்களா இல்லை நேத்ராவா? எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்போ சோககீதம் வாசிக்கறேளே. இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தனும்னு யோசிங்கோமா” என்றான் லேசான அதட்டலுடன்.
மகனின் அதட்டலில் நடப்பிற்கு வந்த கமலா “எப்படி ராஜப்பா இந்த கல்யாணத்தை நிறுத்தறது? உங்கத்தை ஆர்ப்பாட்டம் பண்ணுவாளேடா. அவ பிள்ளையை பார்த்தாலே பயமா இருக்கு. அம்மாடி நேத்ரா உனக்கு தலையில் இப்படியா எழுதனும் இந்த பகவான்.” மீண்டும் அடுத்த கச்சேரிக்கு தயாரானாள் கமலா.
“அம்மா!! நான் வேணும்னா அப்பாகிட்ட பேசிப் பார்க்கவா? இல்லைன்னா பாட்டிகிட்டயே பேசிறவா? அந்தக் கிருஷ்ணனைப் பார்த்தா எனக்கே பிடிக்கலை. இவனுக்கு எப்படிம்மா நேத்ராவைக் கொடுக்க முடியும்?” கீர்த்தியின் குரலில் எப்பாடுபட்டாவது இந்த திருமணத்தை நிறுத்திட வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. இதுவரை தனது விருப்புவெறுப்புகளை அதிகம் காட்டிக் கொள்ளாதவன்‌தான். எதிலுமே அதிகம் பட்டுக்கொள்ளாமல் தான் இருப்பான். ஏனோ இப்போது அவனுக்கே இந்த திருமண ஏற்பாட்டை ஏற்க இயலவில்லை.
“உங்கப்பாகிட்ட பேசிப் பைசா ப்ரயோஜமில்லைப்பா. அவருக்கு அவரோட அம்மா வார்த்தைக்கு மறுபேச்சு கிடையாது. பாட்டி இருக்கிற நிலைமைல இப்போ பேச முடியுமானு தெரியலையேப்பா.” விரக்தியுடன் பேசினார் கமலா. இதுவே வேறு யார் மாப்பிள்ளை என்றால் இந்நேரம் கமலா திருமணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளையும் முதல் ஆளாக நின்று செய்திருப்பார். விசாலத்தின் மகனாயிற்றே. எப்படி ஏற்றுக் கொள்வது!!!
கிருஷ்ணனும் அவனது அம்மாவைப் போலத்தான். பணவிஷயத்தில் ரொம்பக் கெடுபிடி. வைதீகம் செய்யப் போகும் இடங்களில் பண விஷயத்தில் ரொம்பக் கறாராக பேசிவிடுவான். சிறுவயது முதலே அவனுக்கு பணமே பிரதானமாகப் பட்டது. மனிதர்களை அவர்களது செல்வநிலையைக் கொண்டே எடைபோட்டான். அதனாலேயே அவனது தாய் நேத்ராவை மணந்து கொள்ளச் சொன்ன போது கொஞ்சம் யோசித்தான். அவனது இன்றைய செல்வ நிலையை வைத்துப் பார்க்கும் போது சீனிவாசனின் செல்வநிலை சற்றே கம்மி தான். ஆனால் நேத்ராவின் புகைப்படத்தைக் கண்டவன் சம்மதித்தான்.
“ஏன் மன்னி! நாளைக்கு கல்யாணத்தை வச்சிண்டு ஆத்துல யாருக்குமே பொறுப்பே இல்லையே? கல்யாணப்பட்டு எடுக்க வேண்டாமா? மன்னி நேத்ராவுக்கு என்ன விலையில் எடுக்கறேளோ அதே விலையில் நேக்கும் எடுங்கோ. நீங்க உங்க பொண்ணுக்கு என்ன குறைச்சா செய்யப் போறேள்? அப்படியே எம்புள்ளைக்கு நல்ல நாலு பவுன்ல சங்கிலியும் ரெண்டு பவுன்ல மோதிரமும் போட்டிருங்கோ. இப்போ இன்னிக்கு வாங்க முடியலைன்னா இன்னிக்கு தங்கம் ரேட்டுக்கு உண்டான பைசாவக் குடுத்திருங்கோ. நாங்க அப்புறமா வாங்கிக்கறோம். ஒரே பொண்ணுக்கு நீங்க செய்ய மாட்டேளா என்ன? எம்புள்ள மாதிரி மாப்பிள்ளை கிடைக்கிறதுன்னா சும்மாவா?” பெருமையில் ஜொலித்தது விசாலத்தின் முகம்.
‘செயினாம் மோதிரமாம். உங்க பையனுக்கு பொண்ணே குடுக்க கூடாதுனு சொல்லிண்டிருக்கேன். இதுல பட்டியல் வேறயா?’ செங்கொழுந்தாகிப் போனது கீர்த்தியின் முகம். மகனின் முகம் பார்த்தே கோபத்தை உணர்ந்த கமலா பொறுத்துக் கொள்ளும்படி கண்களாலேயே கெஞ்சினார். “என்ன மன்னி! நான் சொன்னதெல்லாம் காதுல விழுந்துதா? இல்லையா?’ என்றாள் விசாலம்.
“அது வந்து… அம்மா…..” கமலா சொல்லத் தெரியாமல் இழுக்கையில் “அட ஆமாம் மன்னி. மறந்தே போனேன் பாருங்கோ. அம்மாவோட வைரத் கோட்டை எனக்குத் தரேன்னு சொல்லியிருந்தா. ஞாபகப்படுத்தனும். நீங்க கூட நேத்ராக்கு வைரத்தோடு போடுவேள் தானே?” தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்டியபடி கேட்டாள். “நல்ல ஸ்டார்ங்கா ஒரு காபி போடச் சொன்னேன். பகவதி போட்டு வச்சிருப்பா. எடுத்துண்டு வரேன்” என்றபடி தன் கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு நடந்தாள் விசாலம்.
‘ஆசையப் பாரேன். வைரத்தோடு போடனுமாமே. ஓ போடுவாளே! நல்ல பெரிய கல்லா பார்த்து உங்க தலையிலேயே போடுவா’ மனதுக்குள் விசாலத்தை புரட்டி எடுத்தாள் நேத்ரா. ‘சரியான பணப்பிசாசு இந்த அத்தை . இவ அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காளாம். இவளுக்கு வைரத்தோடும் பட்டுப்புடவையும் தான் முக்கியமாப்போச்சாம். என்ன மனுஷியோ’ நேத்ரா நறநறவென பல்லைக் கடிக்கும் சத்தம் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திக்கு நன்றாகக் கேட்டது. அவனுக்குமே ‘என்னப் பிறவிகளடா இவர்கள்’ என்ற எண்ணம் தான்.
தன் கணவன் வீட்டுப் பெருமையும் தன் மகனது பெருமையையும் கேட்பவர்கள் காது நீயும் வரைப் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கும் விசாலத்தைக் கையாளும் வழி தெரியாமல் இருந்த வேளையில் கடவுளாய் பார்த்து அனுப்பியது போல் வந்து காப்பாற்றினார் யசோதா, கமலாவின் தங்கை.
“அக்கா! பாரு நம்ம குழந்தைக்கு கல்யாணம்னதும் எப்படி கரெக்டா வந்துட்டேன்னு. நீ எதுக்கும் கவலையே படாதேக்கா. நானிருக்கேன். என் பொண்ணிருக்கா. நாங்க எல்லா வேலையையும் பார்த்துக்கிறோம். அம்மாடி நேத்ரா இந்தாடா இந்த பூவை வச்சுக்கோ. கல்யாணக்களை வந்தாச்சு பாருக்கா.” அவர் தனது அக்கா மகளின் திருமணம் என்ற சந்தோஷத்தில் படபடத்தபடி நேத்ராவை அணைத்துக் கொண்டார்.
அவரது அருகில் நின்ற அவரது மகள் மீனா தற்போதைய திரைப்பட கதாநாயகியை நினைவுறுத்தும் ஆடை அலங்காரத்துடன் வந்திருந்தாள். நேத்ராவை மேலும் கீழுமாகப் பார்த்த மீனா “என்னக்கா நீ பெங்களூர்ல படிக்கிறனு சொன்னாளே. ரொம்ப டிரென்டியா இருப்பனு பார்த்தா இப்படி அம்மாஞ்சியா இருக்கியே. இப்படியா பழைய பாடாவதியா டிரெஸ் பண்ணிப்ப?” தனது முட்டியளவு ஸ்கர்ட்டை ஒருமுறை தட்டிவிட்டபடி தனது குட்டைமுடி துள்ளிவிழ தலையை ஆட்டியபடி பேசினாள். அவளது குட்டை ஸ்கர்ட்டுக்கும் இடுப்பை காட்டும் டாப்ஸுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் கழுத்தில் நல்ல கனமான சங்கிலியும் காதுகளில் மின்னிய ஒற்றைக்கல் வைரமும் டாலடித்தது.
நேத்ராவிற்கு தனது குட்டித் தங்கையா இவ்வளவு வளர்ந்திருக்கிறாள் என்ற ஆச்சர்யமே அதிகமாக இருந்தது. இருந்தும் மனதுக்குள் ‘நல்ல வேளை நான் பெங்களூரில் எப்படி இருப்பேன்னு நீ பார்க்கல’ என்று நினைத்துக் கொண்டாள். வீட்டில் எப்படி இருக்கிறாளோ அதற்கு நேரெதிர் தானே அவள் பெங்களூரில் இருந்தது. தான் வீட்டிற்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட இன்னும் முடியவில்லை என்று எண்ணும் போது மூச்சுமுட்டியது நேத்ராவிற்கு. இங்கே எப்படி தான் தனது சொச்ச வாழ்க்கையும் கழிக்கப் போகிறோமோ என்று நினைக்கும் போதே உள்ளுக்குள் உதறியது.
யசோதாவின் குரல் கேட்டு உள்ளே வந்த விசாலத்தின் பார்வை மீனாவையும் அவளது காதில் கழுத்தில் மின்னிய நகைகளிலும் சற்று நேரம் பதிந்து மீண்டது. ‘ஏன்டிம்மா நீ மீனா தானே?” என்ற விசாலத்தின் கேள்விக்கு தலையாட்டியபடியே அவளுக்கு அருகில் வந்தமர்ந்த மீனா விசாலத்துடன் லேட்டஸ்ட் நகை டிசைன் என்று நேத்ராவிற்கு புரியாத விஷயங்களைப் பேசத் தொடங்கினாள். தப்பித்தோம் பிழைத்தோமென கமலாவும் யசோதாவும் உள்ளே சமையலறைக்குச் சென்றனர். கீர்த்தி தந்தையைப் பார்க்கவென்ற சாக்கில் தப்பிப் பிழைத்து ஓடினான்.
வேறு வழியின்றி மாட்டிக் கொண்டது நேத்ரா மட்டுமே. பொறுமையாகப் பல்லை அழுந்தக் கடித்தபடி இருந்தவள் அவளையுமறியாமல் மீனாவையும் தனது அத்தயையும் பார்த்திருந்தாள். சற்று நேரத்தில் இவர்களது பேச்சு  அவளுக்குப் போரடித்தது. அத்தையையும் மீனாவையும் பார்த்தால் ஜாடிக்கேற்ற மூடி என்று ஏனோ தோன்ற அவளையுமறியாமல் அவளது இதழில் புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டது. விசாலமும் மீனாவும் லேட்டஸ்ட் டிசைன் நகைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். “அம்மா நீ இங்கேயா இருக்க?’” என்றபடி பெண்களுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.  
“வாடா கிச்சா! இது யாருன்னு தெரியறதா? நம்ம யசோதா பொண்ணு மீனாடா.எம்புட்டு உசரமா வளர்ந்துட்டா பார்த்தியா?” என்று ஏதேதோ பேசிக் கொண்டே போனார். அங்கே கிருஷ்ணனின் பார்வை மீனாவின் பார்வையோடு கலந்து அவர்கள் இருவரும் நயனபாஷையில் ஏதோ தனிக்கதை பேசத் தொடங்கியிருந்தனர். ஏதோ யோசனையில் இருந்த நேதாரவின் பார்வையில் இதுபட அவளை இவ்வளவு நேரம் ஆட்டிப்படைத்த கவலை மெல்ல அகன்றது. அவளையும் அறியாமல் மெல்லிய புன்னகை அவளது இதழ்களில் படர்ந்தது. 
‘டேய் மேக்னட்! இந்த தடவை நான் தப்பிச்சிருவேன் போலடா. நீ எங்கே இருக்கியோ தெரியல. உன்னை மறக்கவும் முடியல. என்னால் கடந்தும் போக முடியல. ஏன்டா இப்படி என்னைக் கொல்லற? தப்பு தான். அன்னிக்கு நிலைமையில் நான் அப்படித்தான் முடிவெடுக்க வேண்டி இருந்துச்சு. அதுக்காக இப்படியா கிடைச்சுது சான்சுனு தப்பிச்சு போவ நீ? மகனே என் கையில் மாட்டினா இருக்குடா உனக்கு. எங்கே இருக்கியோ நீ?  எங்கே இருந்தாலும் சீக்கிரமா வந்து சேருடா.’ மனதுக்குள் அவளின் அவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டாள். அங்கே அவளின் அவன், அந்த மேக்னட் விசா இன்டர்வ்யூகாக அமர்ந்திருந்தான்.
கவிதையாவாள்!!!!!!!

Advertisement