Advertisement

26 – முத்தக் கவிதை நீ
சிலரைப் பார்த்தாலே தெரியும் அது உண்மைக் காதலா அல்லது வெறும் இனக்கவர்ச்சியா என்று. மைக்கேலுக்கு நேத்ராவின் மீதிருந்த காதல் ஆழமானது என்று கீர்த்திக்கு நன்றாகவே புரிந்தது. அவன் வகையில் தனது தங்கையை மைக்கேலுக்கு மணமுடிப்பதில் எந்த ஆட்சேபணையுமில்லை. இன்னும் சொல்லப் போனால் கீர்த்தி தாங்களாய்த் தேடியிருந்தால் கூட இப்படி ஒரு வரன் தங்கைக்கு கிடைப்பாது அரிது என்று புரிய மைக்கேலைப் பார்த்து பெருமைப்பட்டான்.
சீனிவாச சாஸ்திரியின் வீட்டில் பொதுவாக அவரது பேச்சை யாரும் தட்டியதில்லை. இதுவரை அவரும் தம்மக்களின் நலனுக்காகவே வாழும் மனிதர். மகன் மற்றும் மகளின் முகம் பாரத்தே அவர்களது தேவைகளைப் புரிந்து பூர்த்தி செய்பவர். அப்படித்தான் எண்ணியிருந்தான் கீர்த்தி. அவனறிந்த அப்பா குரலுயர்த்திப் பேசாதவர்.
தனக்கொரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதனை கண்டுகொள்ளாது கடந்து விடுவார். ஆனால் யாரையும் இதைத்தான் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. அவர் மைக்கேலிடம் என்ன பேசினாரோ?, என்ன காரணத்தினால் அப்படி பேசினாரோ என்று கேள்விகளால் குழம்பிய கீர்த்திவாசன் தெளிவிற்காக மைக்கேலைப் பார்த்தான்.
எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மைக்கேல் கீர்த்தியிடம் பேசத் தொடங்கினான். அவனது மனம் சில வருடங்களுக்கு முன்பான அன்றைய தினத்திற்கு சென்று விட்டது. 
நேத்ராவிற்கு எப்போதுமே தைரியம் கொஞ்சம் அதிகம் தான். கண்ணெதிரே தப்பு நடந்தால் அது யார் செய்தாலும் சரி தட்டிக்கேட்டு விடுவாள். அப்படிப்பட்டவளுக்கு அவளது பிசிக்ஸ் சாரின் மூலம் வந்து சேர்ந்தது ப்ரச்சனை. பிசிக்ஸ் மாஸ்டர் குமரன் கொஞ்சம் சந்தர்ப்பவாதி. காரியக்காரரும் கூட. அவருக்கு வேண்டிய மாணவர்களுக்கு அதாவது தன்னிடம் ட்யூஷன் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை வாரி வழங்கி மற்ற மாணவர்களிடம் கஞ்சமகாப்பிரபு என்ற பட்டம் பெற்றவர்.
தன்னிடம் ட்யூஷன் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பில் தனிகவனிப்பு. தன்னிடம் ட்யூஷன் வராத மாணவர்கள் என்ன தான் நன்கு படித்தாலும் அவர் கொடுப்பதென்னவோ வெறும் பாஸ் மார்க் மட்டுமே. மாஸ்டருக்கு பயந்து மாணவர்கள் இந்தப் ப்ர்ச்சனையை வெளியில் பேசாது இருக்க குமரனுக்கு வகுப்பு மாணவர்களைத் தன்னிடம் ட்யூஷனுக்குச் சேர்ப்பதில் எக்ஸ்ட்ரா வரும்படி வேறு.
அந்த முறை அரையாண்டுத் தேர்வில் குமரனின் கெட்ட நேரமோ என்னவோ நேத்ராவின் மதிப்பெண்களில் தனது கஞ்சத்தனத்தை தாராளமாகக் காட்டி வைக்க அன்றைய தினம் நேத்ரா ஸ்டாஃப் ரூமிற்குப் படையெடுத்தாள். சரியாக எழுதியும் ஏன் தனக்குரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று குமரனிடம் கேட்க அவரோ “எங்க கரெக்டா இருக்கு? இது இப்படியா எழுதுவாங்க? இதுக்குத்தான் ட்யூஷன் வான்னு சொல்றேன். நான் நோட்ஸ் குடுப்பேன்ல ட்யூஷன் வந்தா!” என்றார்.
அவரையே புரியாத பார்வை பார்த்தவள் “சரிதான் சார். ஆனா உங்க நோட்ஸ் படிக்கலைன்னாக்கூட நான் எழுதியிருக்கிறது கரெக்ட் தானே. ஏன் நீங்க மார்க் போடல?” என்றாள். ‘நீ என்ன லூசா?’ என்பது போல ஒரு அலட்சியப்பார்வை பார்த்த குமரன் “எல்லாம் எனக்குத் தெரியும். உனக்கு மார்க் வேணும்னா என்கிட்ட டியூஷன் சேர்ந்தா தான். இன்டர்னல் மார்க்கும் அப்படித்தான்.” என்றுவிட்டு நகர்ந்தார்.
அதுவரைப் பிடித்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க நேத்ரா தனது ஆன்ஸர் பேப்பரை எடுத்துக் கொண்டு ப்ரின்ஸிபலின் அறைக்குச் சென்று அவரிடம் நியாயம் கேட்க, பலன் குமரனுக்கு ஒரு இரண்டு மணிநேர அர்ச்சனை ப்ரின்ஸிபலிடமிருந்து. மெமோவுடன் வெளிவந்த குமரன் அறையின் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த நேத்ராவையும் மைக்கேலையும் பார்த்து ‘இரு உன்னை பாத்துக்கிறேன்’ என்று கருவியபடி சென்றார்.
இதெற்கெல்லாம் என்றுமே கவலைப்படாத நேத்ரா வழக்கம் போல் இருக்க ஒருமுறை பள்ளி முடிந்து வழக்கம் போல் தனது சைக்கிளைத் தள்ளியபடி வந்த நேத்ராவுடன் பேசியபடி இணைந்து நடந்த மைக்கேலையும் பார்த்து குமரனுக்கு நேத்ராவை எப்படி பழிதீர்க்க என்ற பகையுணர்ச்சிக்குத் தீனி கிடைத்தது.
அடுத்து நடந்த பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு வந்த சீனிவாச சாஸ்திரியை தனியாக அழைத்துச் சென்று “சார்!! நீங்க எவ்வளவு சாஸ்திரம் படிச்சவுங்க. எவ்வளவு பெரிய குடும்பம்! உங்க பொண்ணு போக்கு சரியில்லயே சார். இங்க ஒரு பையன் கூட சுத்தறா. படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா? அதுவும் உங்க பொண்ணா இருந்துகிட்டு இப்படி எல்லாம் பண்றாளே! கண்டிச்சு வைங்க சார். நீங்களெல்லாம் சாது மனுஷங்க. உங்க பொண்ணு ஏன் இப்படி இருக்காளோ?” என்று நன்கு திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார்.
இதுவரை நேத்ராவின் பேரில் இப்படி எந்த ஆசிரியர்களும் குறை சொன்னதில்லை. வெளியில் அரட்டையடிக்கும் நேத்ரா வீட்டில் அமைதியின் திருவுரு. சீனிவாச சாஸ்திரியால் நம்பவே முடியவில்லை. தன் மகளைப்பற்றியா இப்படி ஒரு குற்றச்சாட்டென. சீனிவாச சாஸ்திரி தனது மகளை தன் தாயின் மறுவுருவாகவே பார்த்தார்.
வீட்டினரைப் பொறுத்தவரையில் இயல்பிலேயே நேத்ரா ஒரு ரூல்ஸ் ராமானுஜம். அவளது வாலுத்தனங்களெல்லாம் வெளியில் மட்டுமே. சேஷ்டைகள் உண்டு என்றாலும் அவளது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட எந்தப் புகாரும் இதுவரை வந்ததில்லை பெற்றோருக்கு. இப்போது…. அதுவும் இப்படி ஒரு புகாரென்றால்??
குமரன் பேசப்பேச குறுகிப் போன சீனிவாசன் முகம் சிவந்து குன்றிப் போனார். அத்தனையையும் கேட்டபடி இருந்த நேத்ராவிற்கோ நிலைகொள்ளாக் கோபம் ஒருபுறமென்றால் தந்தை எப்படி இதை ஏற்றுக்கொள்வாரோ என்ற பதட்டம் மறுபுறம். என்றைக்காக இருந்தாலும் அவருக்குத் தெரியப்போவது தான். ஆனால் இது அதற்கான சமயமல்லவே.
தந்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றவளின் கைபற்றி தரதரவென இழுத்துக் கொண்டு வெளியேறினார் சீனிவாச சாஸ்திரி. இவர்கள் போவதையே புரியாமல் பார்த்திருந்த மைக்கேலிடம் வந்த குமரன் தனது ஓட்டை ஆங்கிலத்தில் “ஐ டெல்ட் ஹிம் அபௌட் யூ. ஆல் ஓவர். ஃபினீஷ்” என்று விட்டு மைக்கேலின் அதிர்ந்த பார்வைக்கு கிண்டலான சிரிப்பை பதிலாகக் கொடுத்தபடி சென்றுவிட்டார்.
என்ன நடந்தது என்று புரியாத போதும் குமரன் தன்னைப்பற்றி ஏதோ சொல்லி விட்டார் என்பது தெரிந்ததும் மைக்கேல் தானே நேரில் செல்வது என்று முடிவு செய்தான். அவன் வளர்ந்த நாட்டினைப் போல் ஆண் பெண் உறவுக்கான பார்வை இங்கேயும் இருக்கும் என்று எண்ணியது தான் தப்பாகிப் போனது. பள்ளியில் நேத்ராவின் முகவரியை வாங்கிக் கொண்டவன் அவளது வீட்டுக்கே செல்ல முடிவெடுத்தான்.
ஆனால் அவனுக்காக பள்ளியின் வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே காத்திருந்த சீனிவாச சாஸ்திரி அதிர்ச்சியைக் கொடுத்தார். இவனைக் கண்டதும் ‘வா’ என்பதாய் கையசைத்து அழைக்க அவரின் அருகில் சென்றவனிடம் ஆழ்ந்த தெளிவான குரலில் ஆங்கிலத்தில் “உங்களைக் குறை சொல்ல முடியாது. உங்க நாட்டு வளர்ப்பு வேற. நான் எம்பொண்ணைத்தான் குறை சொல்ல முடியும். ஆனா எது எப்படியோ, இது நடக்காது. எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்காதீங்க. என் வயசுக்காவது மரியாதை கொடுப்பீங்கன்னு நம்பறேன். இதுவே நாம பாத்துக்கிற கடைசி முறையா இருக்கட்டும்’ என்றபடி கைகூப்பனார்.
அவரது ஆழ்ந்த பார்வையும் அமர்ந்த குரலும் மைக்கேலை அசைத்துப் பார்க்க அடுத்து என்ன என்பது போல் நேத்ராவைப் பார்க்க அவளோ தலைநிமிராது சிலையாகி நின்றிருந்தாள். அவள் பேசுவாள் என்று இனி எதிர்பார்க்க இயலாதென்று புரிய மைக்கேல் தானே பெரியவரிடம் பேசிப் புரிய வைக்க முயற்சி செய்ய நினைத்தான்.
“இட்ஸ் நாட் ஹௌ யூ திங்க்…” என்று ஆரம்பித்தவனைக் கையுயர்த்தி அமைதியாக்கியவர் தன் மகளைப் பார்த்து “என் சம்மதமில்லாம எதுவும் உன் வாழ்க்கைல நடக்குமா? அப்படித்தான் நா பொண்ணு வளர்த்திருக்கேனா?” எனவும் ‘இல்லை’ என்று மறுப்பாய்த் தலையசைத்தவள் கண்ணீர் பெருகிய விழிகளினூடே இருவரையும் பார்த்து நிற்க, மைக்கேலிடம் திரும்பினார் சீனிவாசன்.
“நீங்க நல்லவாளாவே இருக்கலாம். உங்களுக்கு எம்பொண்ணு மேல ஏற்பட்டிருக்கிறது உண்மையான அன்பாக்கூட இருக்கலாம். ஆனா பாருங்கோ அதை ஏத்துக்கிற மனப்பக்குவம் எனக்கில்லை. நான் சாஸ்திரம் சம்பிரதாயம்னு நிறைய பார்க்கிறவன். அப்படியே வாழறவன். எங்களது ரொம்ப ஆச்சாராமான குடும்பம். நான் உங்களை ஏத்துக்க முடியாது. எம்பொண்ணுக்கு வேதம் தெரிஞ்ச ஒருத்தர் தான் கல்யாணம் செஞ்சு வைப்பேன். வேற கலாச்சாரத்த எங்குடும்பத்துல சேத்துக்க முடியும்னு நேக்குத் தோணல. அதனால இனி எம்பொண்ண நீங்க பாக்க வேணாம். ரெண்டு பேரும் பேசிக்க வேண்டாம். முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்கோ” என்றுவிட்டு தன் மகளின் கையைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு போய்விட்டார்.
———————————————————————————————————————————————
கீர்த்தி சிலையாகிப் போய் அமர்ந்திருந்தான். மைக்கேலிடம் தந்தை முன்பே பேசினார் என்பதே அவனுக்கு அதிர்ச்சி. அதிலும் அவரே தெளிவாகப் பெண் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்க இனி அடுத்து என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலொரு நிலை. 
பொதுவாகவே பள்ளிப் பருவத்துக் காதல் வெறும் இனக்கவர்ச்சி என்பது பரவலான கருத்து. அதனாலேயே அப்பா மறுத்திருக்கிறார் என்று கூட எண்ண இயலாதபடி அல்லவா பேசியிருக்கிறார். நேத்ராவிற்கும் மைக்கேலுக்குமான காதல் ஆழமானது என்று தனக்குப் புரிந்தாலும், நேத்ராவிற்கு மைக்கேல் நல்ல சாய்ஸ் என்று தன் மனது அடித்துச் சொன்னாலும் தான் அதை எப்படி அப்பாவிற்குப் புரிய வைப்பது என்பது தான் விளங்கவில்லை.
கீர்த்தியின் கவலை தாங்கிய முகமே சொன்னது மைக்கேலுக்கு இது அவனுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று. நேத்ராவை மணக்க வேண்டுமானால் தான் மீண்டும் சீனிவாச சாஸ்திரியிடம் பேசியே ஆகவேண்டும் என்பது தெளிவாகியது. ஏனென்றால் அவனுக்கு நன்கு தெரியும் தந்தையின் அனுமதியில்லாமல் நேத்ரா எதுவும் செய்ய மாட்டாளென. அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று மனதுக்குள் திட்டமிடலானான். கீர்த்தியுடன் சென்னை செல்வது என்று முடிவெடுத்தான்.
———————————————————————————————————————————————
அறைக்குத் திரும்பிய முப்பெரும் தேவியரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். நேத்ரா தன்னுணர்வற்றவளாய் எங்கோ வெறித்தபடி படுத்திருந்தாள். ஹாலில் குட்டிப்போட்ட பூனையாய் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்த டெட்டி தனக்குத்தானே அவ்வப்போது ஏதாவது சொல்லிவிட்டு பின் மறுப்பாய் தலையசைத்துக் கொண்டாள். ஹாலில் ஸோஃபாவில் அமர்ந்திருந்த மியாவுக்கு டெட்டியின் செய்கை சிரிப்பை வரவழைத்தது.
அவளையே பார்த்திருந்தவள் சற்று நேரத்தில் தனது பொறுமை பறக்க “டெட்டி!! அப்படி என்னதான் யோசிக்கிற?” என்று கேட்க அவளருகில் வந்தமர்ந்த டெட்டி “மியா எனக்கு ரொம்ப நாளா ஒரு டௌட். எனக்கென்னவோ நம்ம ஸ்பிரிங் அவங்கப்பாவ மீறி எதுவும் செய்வான்னு தோணல. அவளே ரெடின்னாலும் இந்த மைக்கண்ணா அப்படி எதுவும் முடிவெடுக்க மாட்டான். ஆனா இப்படியே போனா எப்போ தான் இதுக்கு ஒரு முடிவு வரும்?” என்றாள்.
“அதான் இப்போ கீர்த்திண்ணாக்கு தெரிஞ்சாச்சே. அவங்க பாத்துப்பாங்க டெட்டி.” என்று விஷயம் சாதாரணம் என்பது போல் சொன்னாள் மியா. “எனக்கு இது அவ்வளவு ஈஸின்னு தோணல மியா. ஆமா ஸ்பிரிங்கோட அப்பா ஏன் மைக்கண்ணாவ வேணாம்னு சொல்லியிருப்பாங்க? இவ்வளவு நல்ல மாப்பிள்ளை வேறெங்கே கிடைப்பாங்களாம்?” என்றாள் ஆதங்கமாய்.
“கீர்த்திண்ணா பேசிப் புரிய வைப்பாங்க அப்பாக்கு. அண்ணா பேசினா அப்பா புரிஞ்சுப்பாங்க டெட்டி. நீ ஏன் இப்படி தலையை உடைச்சிக்கிற?” என்றாள் மியா. “கரெக்ட் தான். கீர்த்திண்ணா பேசறதுல தான் இருக்கு. ஆனா அப்பா ஒத்துக்கனுமே. ஒத்துக்காம தளபதி படத்துல வர்ற மாதிரி ‘மைக்கேல்ங்கிறது யாரு? அவன் ஊரென்ன? என்ன குலம்? என்ன கோத்திரம்’னு பேசக்கூடாதே” என்று சாருஹாசன் குரலில் மிமிக் செய்து காட்ட அவ்வளவு குழப்பத்திலும் மியா அடக்கமுடியாது சிரித்து விட்டாள்.
———————————————————————————————————————————————
பெங்களூரின் ஒருகாலத்துப் புறநகர் பகுதியான கே ஆர் புரத்தில் அந்த குடியிருப்பு பகுதியில் உச்சஸ்தாயியில் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் ஸாஷா. “காசு வாங்கின தானே? என்னாச்சு? இன்னும் எத்தனை நாளாகும். அந்தப் பொண்ணக் கொல்ல இவ்வளவு நாளா? உன்னால் முடியலைன்னா சொல்லு பசவப்பா, நா வேற ஆளப்பாத்துக்கறேன்.” என்றாள். 
மறுமுனையில் இருந்து என்ன பதில் வந்ததோ, மீண்டும் “இதையே சொல்லிகிட்டே இரு. காரியம் ஒன்னும் பெரிசா ஆகல. இந்த வாரம் மட்டுந்தான் உனக்கு டைம். நான் நாளைக்குச் சென்னை போறேன். நீ வேலையை முடிச்சிட்டுக் கூப்பிடு. மீதி பணம் உன்னோட அக்கௌண்ட்டுக்கு போடறேன்” என்று விட்டு அமழைப்பைத் துண்டித்தவள் ‘வேஸ்ட் ஃபெல்லோஸ்’ என்று முணுமுணுத்தாள்.
கவிதையாவாள்!!!!

Advertisement