Advertisement

22- முத்தக் கவிதை நீ
தனக்குப் பிடித்த விஷயங்களை பொதுவாக அழகுபடுத்தி பார்ப்பது தான் மனித இயல்பு. ஆனால் ஏனோ சிலரின் இயல்பு வேறாய் இருக்கிறது. மைக்கேலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணித்தான் வெகு காலமாக அவனை பின்தொடர்ந்து அவனது இந்திய வருகையை தானும் பின்பற்றி ஸாஷா இந்தியா வந்தது. இங்கு வந்து அவனுக்கும் தனக்கும் தேனிலவு என்று வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்பியது.
ஆனால் ஸாஷாவே எதிர்பார்க்காத ஒன்று மைக்கேல் நேத்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் இவள் தான் என் வாழ்க்கை என் எல்லாமும் என்று உலகுக்கு பிரகடனப்படுத்தியது. அதனை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தனக்கு கிடைக்கவில்லை ஆனாலும் பரவாயில்லை ஆனால் இந்த நேத்ராவை திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியானாள் ஸாஷா. நேரில் பார்த்திராத போதும் ஏனோ மனதில் நேத்ரா மீது ஒரு வஞ்சம் உருவானது.
அப்படியொன்றும் மைக்கேலின் மீது காவியக் காதல் என்றெல்லாம் இல்லை. இன்றைய சூழலில் பலரைப் போல கூட்டிக் கழித்துப் பார்த்து வந்தது தான். ஆஸ்திரேலியாவில் மாடலிங் துறையில்  முன்னணியில் இருப்பவன். நல்ல சம்பாத்தியம். தானும் மாடலிங்கில் கால் பதித்து இப்போது ஓரளவு சம்பாதிக்க தொடங்கியாயிற்று. இப்போது இவனை மணந்து கொண்டால் இருவரது சம்பாத்தியம் சேரும். நாளை வேண்டாம் என்று ஒதுங்கினால் கூட அவனது சொத்தில்  நல்லதொரு பகுதியை வாங்கிக் கொண்டே பிரிந்திருக்கலாம்.
ஆனால் மைக்கேலைப் பிடிக்காமல் போகும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. அவனுடன் வேலை செய்த அனுபவத்தில் புரிந்த விஷயம் அவன் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவன். யாரையும் காயப்படுத்தக் கூடாதென்பதில் ரொம்பவே உறுதியானவன். ஆனால் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே ஒதுக்கம்.
அதற்கான காரணமும் இந்தியா வந்து இவள் கிளப்பிய நாடகத்தின் விளைவால் புரிந்தது. மைக்கேலை அவனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்ததில் அவனுக்குப் பிடித்தவள் யார் என்பது புரிந்தது. முதலில் இந்தக் குள்ளச்சியை தனது பாதையில் இருந்து எப்படி அகற்றுவது என்று பலவாறு யோசித்தாள். சில காலம் பின்தொடர்ந்தது சிலரை வைத்துக் காரியம் சாதித்ததில் கிடைத்தது தான் ஹரிணியின் அலைபேசி எண். நேத்ராவைப் பார்த்தால் பிறர் வம்புக்குப் போகாத பயந்த பெண் போல் தெரிய அவளை அழைத்து மிரட்டினால் ஒதுங்கிக் கொள்வாள் என்று எண்ணினாள். ஆனால் அவளோ வந்து பார் என்ற விதத்தில் இவளிடம் பதில் கொடுத்தது ஸாஷாவுக்கு குழப்பத்தைக் கொடுத்தது. அடுத்து என்ன யோசித்து தான் மைக்கேலுக்கு அழைத்து பேச வைத்தது.
அவனிடம் அன்பே ஆருயிரே என்றெல்லாம் உருகி நடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை ஸாஷாவிற்கு. நடித்தாலும் அவன் நம்பப் போவதுமில்லை என்பது தெரிந்த விஷயம். எனவே இனி இவனுக்கு அந்தக் குள்ளச்சி கிடைக்கப் போவதில்லை என்பதை புரிய வைத்தால் வேறு வழியின்றி தன்னிடம் வந்து விடுவான் என்ற எண்ணம் அவளுக்கு. அதனாலேயே நேத்ராவிற்கு அழைத்து மிரட்டியபின் சற்று நேரம் கழித்து மைக்கேலுக்கு அழைத்தாள். 
ஆனால் பாவம் அவள் எதிர்பார்த்த பதில் தான் அவனிடம் இல்லை. “ஸாஷா!¡! உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா? எப்படி இப்படி அறிவுகெட்டத்தனமா யோசிக்கிற? ஒன்னு இல்லைன்னா இன்னொன்னுனு வர்றதுக்கு இதென்ன வியாபாரமா? ஷீ இஸ் மை லைஃப். அவ இல்லாம நான் இல்லை. அப்படி நீ அவகிட்ட எதாவது மிஸ்பிஹேவ் பண்ணியிருந்தா இப்போவே அவகிட்ட சாரி சொல்லிரு. இஃப் யூ ஹர்ட் ஹர் ஐ வில் நாட் ஸ்பேர் யூ. மைண்ட் இட்” என்று விட்டு கோபத்தில் அழைப்பைத் துண்டித்தான்.
கோபத்தில் கை முட்டிகள் இறுகின. ஸாஷாவை அடித்து துவைத்து விட வேண்டும் போல் இருந்தது. தன்னிடமே இவ்வளவு பேசியவள் ஸ்பிரிங்கிடம் என்னவெல்லாம் சொன்னாளோ என்ற கவலையில் ஹரிணியின் எண்ணிற்கு அழைத்தான். அது சிலமுறை அடித்து ஓய்ந்தது. வெகு நேரம் காத்திருந்தவனுக்கு ஹரிணியிடமிருந்து வந்த குறுஞ்செய்தி குழப்பத்தை உருவாக்கியது.
என்ன தான் நேத்ராவின் அண்ணனிடம் சிலமுறை பேசியிருந்தாலும் அவனது ஃப்ளாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறை. சாதாரணமாகச் செல்ல வேண்டியிருந்திருந்தால் சந்தோஷமாக சென்றிருப்பார்களோ என்னவோ. இன்று மூவரிடமுமே சிரிப்பு என்பதே இல்லை. நேத்ரா எதையோ பெரிதாக பறிகொடுத்ததைப் போன்றிருந்தாள். மியாவும் டெட்டியும் முடுக்கி விடப்பட்ட இயந்திரமாய் இருந்தனர். ஏனோ இருவருக்கும் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்டு உணர்வு.
ஒவ்வொரு முறையும் கீர்த்தியிடம் பேச ஹரிணி தயாராய் இருக்கும் போதும் மியா அவளது கைகளைப் பற்றி இழுத்து தடுத்து விடுவாள். ஒருமுறை கோபம் வந்தது டெட்டிக்கு. “மியா!!!! நானே வராத தைரியத்தை வா வான்னு இழுத்து அண்ணாகிட்ட பேசப் போறேன். நீ ஏன் என் கையைப் பிடிச்சு இழுத்து தடுக்கிற?” என்றாள் சலிப்புடன்.
“டெட்டி எனக்கென்னவோ இப்போ இதுக்கான நேரமில்லைன்னு தோணுது. கொஞ்சம் பொறுமையா இரேன்”  டெட்டியை பொறுமை காக்க மன்றாடினாள் மியா. கீர்த்தியை நெருங்கவே அச்சமாய் இருந்தது இருவருக்கும். ப்ரதீப் வீட்டினர் வரும் நேரமானதால் வேறு வழியின்றி பொறுமை காக்க வேண்டியதாயிற்று. உள்ளறையில் நேத்ராவை தயார் படுத்தும் வேலையைச் சாக்கு வைத்து அங்கே அமர்ந்து புலப்பிக் கொண்டிருந்தனர்.
அறையில் அமர்ந்து எங்கோ சூன்யத்தை வெறித்தபடி இருந்தாள் நேத்ரா. உடல் மட்டுமே அங்கே. மனம் வேறெங்கேயோ பந்தயக்குதிரையாய் ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் மட்டும் நிற்காது கண்ணீரைச் சொறிந்தபடி இருந்தன. மியா தான் நேத்ராவின் கரங்களை பற்றி அழுத்தி அவளுக்கு சமாதானம் சொல்லியபடி இருந்தாள்.
நேத்ரா அழுவதைக் கண்டு பொறுக்காதவளாய் ஹரிணி “இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்போ குழாய் திறந்தா மாதிரி அழுதுகிட்டே இருக்க. அழாத ஸ்பிரிங். என்ன ஆனாலும் சரி மைக் தான் உன்னை கல்யாணம் பண்ணிப்பாங்க. இந்த கீர்த்தியண்ணாக்கு தெரியாதில்லியா மைக்கேல் பத்தி. தெரிஞ்சா கண்டிப்பா இதுக்கு ஏற்பாடு பண்ணவே மாட்டாங்க. தைரியமா இரு பேபி” என்றாள். 
நேத்ராவின் அழுகை குறையாததைக் கண்டு கோபம் வந்தது. “ஏன் பேபி!! எப்படியா இருந்தாலும் வீட்டில் சொல்லித் தானே ஆகணும்!!!! சொல்லாம சம்மதம் வாங்கிட முடியாது தானே??? இப்போ என்ன கல்யாணம் நிச்சயமா ஆகிருச்சு?” படபடத்தாள்.
ஹரிணியின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் நேத்ராவின் அழுகையைத் தாங்க முடியாதவளாய் ‘ப்ளீஸ்’ என்று மியா பார்வையாலேயே கெஞ்சினாள் அவளிடம். ஒருவழியாக நேத்ராவை அலங்கரித்து தயார் செய்தார்கள். ஆலிவ் பச்சை நிறப் பட்டுச் சேலை அவளுக்கு நன்றாக இருந்தது. அடங்காத காடாய் நின்ற அவளது முடியை கஷ்ட்ப்பட்டு ஒரு ஃப்ரெஞ்ச் ப்ளாட்டிற்குள் அடக்கினாள் மியா. வேறு எந்த எக்ஸ்ட்ரா அலங்காரமும் இன்றியும் கூட நேத்ரா தேவதையாகத் தெரிந்தாள். “ம்ஹும்!!! அந்த ப்ரதீப்போட அம்மா கட்டாயம் ஓகே சொல்லிருவாங்க.ஸ்பிரிங்க வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்களே.” உதடு பிதுக்கினாள் ஹரிணி.
நேத்ராவின் முகம் வாடுவது பொறுக்காத மியா “டெட்டி கொஞ்ச நேரம் பேசாம இரேன்பா” இறைஞ்சிக் கேட்க டெட்டி தோள்களை குலுக்கியபடி தனது அலைபேசியை எடுத்து நோண்டத்தொடங்கினாள். அவ்வளவு நேரம் சைலண்ட் மோடில் இட்டிருந்தததால் வந்திருந்த அழைப்புகளை அவள் பார்த்திருக்கவில்லை. மெல்ல தனது மொபைலோடு அறையின் மூலைக்குப் பதுங்கினாள்.
அடுத்த அறையில் பிரசவத்திற்காக மனைவியுடன் ஹாஸ்பிடல் வந்த கணவனைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்த கீர்த்திக்கு படபடப்பு அடங்கினபாடில்லை. இரண்டு நாட்களுக்கு முன் அவனது அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் திவாகர் இவனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தான். கீர்த்தி பொதுவாக அவனிடம் அவ்வளவு பேசுவதில்லை. காரணம் அவன் பெண்கள் விஷயத்தில் அவ்வளவு நாகரிகம் பாராது பேசுபவன். கீர்த்திக்கு அவன் பேச்சு அவ்வளவு பிடிப்பதில்லை. அதனால் ஒதுங்கியே இருப்பான்.
அரைமணி நேரம் அவனிஷ்டத்திற்கு பேசிக் கொண்டிருந்தவன் கிளம்பும் போது கீர்த்தியின் மேஜையில் அவன் வைத்திருந்த ஃபோட்டோ ஃப்ரேமை பார்த்ததும் நின்று விட்டான். சற்று நேரம் அதையே ஆழ்ந்து பார்த்திருந்தான். கீர்த்தியும் நேத்ராவும் அவர்களது பாட்டியுடன் எடுத்த புகைப்படம் அது. தன் தங்கையின் புகைப்படத்தை திவாகர் வெறித்துப் பார்க்கவும் கீர்த்திக்கு கோபம் தலைக்கேறியது.
“நீ வந்த வேலை முடிஞ்சதுன்னா நீ கிளம்பு திவாகர்.” என்று வெளிப்படையாகவே தனது கோபத்தை பேச்சில் காட்டினான் கீர்த்தி. “மச்சி!!!! கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே. இந்த பொண்ணு யாரு. நம்ம தங்கச்சியா?” என்றான் திவாகர். அவனது ‘நம்ம தங்கச்சி’யில் சற்றே கோபம் தணிந்தவனாய் ‘ம்ம்ம்’  என்று வேண்டா வெறுப்பாய் தலையாட்டி வைக்க திவாகர் இவனது வெறுப்பையோ அலட்சியத்தையோ சிறிதும் கண்டு கொள்ளாமல் தனது அலைபேசியில் எதையோ நோண்டியவன் ஒரு புகைப்படத்தை எடுத்து கீர்த்தியின் முன் நீட்டினான்.
பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. நேத்ராவின் புகைப்படம். அவளருகில் ஏதோ ஒரு வெளிநாட்டவன். அவர்களது பள்ளிகாலத்தில் வெளிநாட்டுக்காரர்கள் வந்தது கீர்த்திக்கும் தெரியும் ஆதலால் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் தன் தங்கையின் புகைப்படம் இவனிடம் எப்படி என்ற கேள்வி மட்டும் அரித்தது.
கேள்வியாக தன்னை நோக்கியவனை பார்த்து புனன்கைத்த திவாகர் “இது எங்கேயோ ஆன்லைன்ல பார்த்தேன் மச்சி. அந்த வெளிநாட்டுக்காரன் போட்டிருந்த வாட்ச் பிடிச்சிருந்துச்சுனு ஃபோட்டோவ எடுத்து வச்சேன். அதே மாதிரி வாங்கனும்னு.’” என்றபடி தான் வந்த வேலை முடிந்தது என்பது போல் தோள்களைக் குலுக்கிவிட்டு கிளம்பினான்.
மனதுக்குள் ஆயிரம் குழப்பங்களுடன் தவித்து நின்ற கீர்த்தியை அடுத்து வந்து குழப்பியது ப்ரதீப். பெங்களூர் வந்த காலத்தில் கீர்த்திக்கு பல விதங்களில் உதவியாக இருந்தவன். எந்த வம்புக்கும் போகாதவன். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். கணினி துறையில் மூளைக்காரன். அவன் அதிகம் பேசி கீர்த்தி பார்த்ததில்லை. 
கீர்த்தியிடம் வந்தவன் திக்கித் திணறி “வந்து கீர்த்தி…… கேட்கப்படாது தான். லைக் யூ நோ…,.  ஆனா அம்மா ஊர்ல இருந்து வந்திருக்கா. என்னோட கல்யாணம் பத்தி பேசினா. லைக் யூ நோ……. எனக்கு இப்போ கொஞ்ச நாளாக ஒன்னு தோணறது. அது …. வந்து..,… உன்னோட தங்கையை நேக்கு கல்யாணம் பண்ணித் தருவேளா???? ஆத்துல பெரியவாளாண்ட எல்லாம் கேட்டுச் சொல்றியா?” மென்று முழுங்கி கேட்டே விட்டான்.
ஏற்கனவே இருந்த குழப்பம் போதாதென இவன் வேறு குழப்பமும் கீர்த்திக்கு தலை சுற்றாத குறை. என்ன செய்வது என்று தெரியாமல் அவனிடம் தலையை ஆட்டிவிட்டு வந்தவன் தன் அன்னைக்கு அழைத்து ப்ரதீப் விஷயம் சொல்லிக் கேட்க கமலத்திற்கு சந்தோஷம். நல்லவன், நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், எந்த ப்ரச்சனையும் இல்லாத குடும்பம் வேறென்ன வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் பார்க்க வரச் சொல்லி விட்டாள்.
அது சம்பிரதாயமானபெண் பார்க்கும் படலமாக இல்லை. கமலத்தால் உடனே கிளம்பி வர இயலாத காரணத்தால் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் அடுத்த மாதம் நல்ல முகூர்த்தம் பார்த்து என்ற போது அந்த ப்ரதீப்பின் தாய் ரேணுகா தான் “அது அடுத்த மாதம் மெல்ல நடக்கும் போது நடக்கட்டும். நான் ஒரு தடவை உன் தங்கையைப் பார்த்து பேசிக்கறேனே” என்று கேட்டார். 
இவர்களுக்கும் மறுக்க வழியில்லாது போயிற்று. அதனாலே தான் இன்றைய விசிட். என்ன தான் தன் நண்பன் நல்லவன் படித்தவன் நல்ல வேலை என்று ஆயிரம் காரணம் சொல்லிக் கொண்டாலும் ஏனோ கீர்த்திக்கு உள்ளூர் ஒரே நமைச்சல். தான் தவறு செய்கிறோமோ என்ற உறுத்தல் வேறு. தன் தங்கையின் முகவாட்டம் வேறு அவனது மனதைப் பிசைந்தது. எதுவானாலும் இவர்கள் வந்து சென்ற பின் நேத்ராவிடம் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
சரியாக பத்தே முக்காலுக்கு ரேணுகாவும் ப்ரதீப்பும் வந்து சேர்ந்தார்கள். வழக்கமான சம்பிரதாயப் பேச்சுக்கள் அதிகம் இல்லாத போதும் கீர்த்தி ப்ரதீப்பிடமும் ரேணுகாவிடமும் பேசிக் கொண்டிருந்தான். ரேணுகா “கீர்த்தி!!!!! நல்ல நேரம் முடியறதுக்குள்ள உன் தங்கையை வரச்சொல்லு. மத்ததை அப்புறமா பேசிக்கலாம்.” என்று சொல்லிவிட அவனும் உள்ளறையில் இருந்த மியாவிடம் நேத்ராவை அழைத்து வரச் சொன்னான்.
அவ்வளவு நேரம் தனது மொபைலை நோண்டிக் கொண்டிருந்த டெட்டி கீர்த்தியின் வரவை பார்க்கவில்லை. ஆதலால் எதையோ மொபைலில் கண்டவள்  “யெஸ்” என்று துள்ளிக் குதித்திருந்தாள். கீர்த்தியைக் கண்டதும் பட்டென்று தனது மொபைலை மறைத்து கொண்டு “சாரி அண்ணா. நீங்க போங்க. நாங்க கூட்டிட்டு வர்றோம்” என்றாள்.
தலைநிமிராமல் இருந்த நேத்ராவிடம் மியா “ ரிலாக்ஸ் பேபி. உன்னை மீறி ஒன்னும் ஆகாது. வா” என்றுழைக்க அவளின் மறுபுறம் வந்த டெட்டியோ “ஸ்பிரிங்!!!!! கொஞ்ச நேரம் கழிச்சு இதுக்குப் போய் ஏன் இவ்வளவு நேரம் ஃபீல் பண்ணேன்னு யோசிக்கப் போற. ஸ்மைல் பேபி. வா வந்திருக்கிற மகாப்பிரபுவ பார்க்கலாம்” என்று இவளை அழைத்துச் சென்றாள்.
 நேத்ரா ஹாலுக்கு வந்து அங்கிருந்தவர்களுக்கு பொதுவாக ஒரு வணக்கத்தை சொன்னவளாய் மெல்ல தனது அண்ணனின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். ரேணுகாவிற்கு படுதிருப்தி என்பது அவரது பார்வையிலேயே தெரிந்தது. ப்ரதீப் லிட்டர் கணக்கில் ஜொள்ளிக் கொண்டிருந்தான். கீர்த்திக்கோ ‘என்னடா இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சேனே!!! இப்படி பட்டினி கிடந்தவன் படையலைப் பார்த்தா மாதிரி பார்க்கிறானே!’ என்று என்று தோன்றியது.
தன் மகன் புறம் திரும்பிய ரேணுகா “என்னடா பேசிறலாமா?” என்றதும் ப்ரதீப் தனது தொண்டையைச் செருமிக் கொண்டு “எக்ஸ்க்யூஸ் மீ!!!! எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுது. லைக் யூ நோ….. நானா வந்து உங்களாண்ட பேசினா அது தப்பு….. லைக் யூ நோ…. அதான் உங்கண்ணாகிட்ட சொன்னேன். நீங்க உங்க ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணலாம்….. நேக்கு நோ அப்ஜக்ஷன். ஆனா எங்காத்து பொம்மனாட்டிகள் யாரும் வேலைக்குப் போகல. ஸோ நீங்களும் போக வேண்டாம். லைக் யூ நோ… எங்க ஆஃபீஸ்ல எனக்கு ஆன்சைட் போற சான்ஸ் இருக்கு. சோ நம்ம அமெரிக்கா போயிடலாம்….. லைக் யூ நோ…. நீங்க என்னை நன்றாக பாத்துண்டா போதும்” என்று அளந்து கொண்டிருந்தான்.
“ப்ரதீப் !!!! நீ சொல்றதெல்லாம் ஓகே. ஆனா பாரு இப்போ தான் அவளுக்கு மேற்கொண்டு படிக்க, டெல்ஃப் யுனிவர்சிட்டி ல இருந்து ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு. இப்போ தான் மெயில் வந்தது. அதான் எப்படி சொல்லனு முழிச்சிண்டிருக்கோம். ஐம் சாரிடா. மாமி எங்களை மன்னிக்கனும். முன்னமே தெரிஞ்சிரிந்தா இதுக்கு ஏற்பாடே பண்ணியிருக்க மாட்டேன்” பவ்யமாக எழுந்து நின்று சொன்னது சாட்சாத் கீர்த்தியே தான். மயங்கிச் சரியாத குறை மற்ற மூவருக்கும். விபரம் புரிந்தவராய் ரேணுகா  நேத்ராவிடம் வந்து அவளது தலையில் கைவைத்து ஆசிர்வதித்து “நன்னா படிம்மா. ஷேமமா இரு.” என்று விட்டு கீர்த்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
என்னடா நடக்குதிங்க என்ற‌ முழித்தபடி நின்றனர்  பெண்கள் மூவரும். நேத்ராவோ கண்ணீர் பெருக கைகளைக் கூப்பியபடி அண்ணனின் முன் நின்றாள். மெல்ல அவளைத் தன் தோள் சாய்த்து தலைகோதினான் கீர்த்தி.
கவிதையாவாள்!!!!!!!!!!

Advertisement