Advertisement

19 – முத்தக் கவிதை நீ
மனதில் பட்டதை வெளிபடையாக எந்த தயக்கமும் இல்ல பேசுவது எல்லாம் வரம். அது எல்லாருக்கும் அமையப் பெறும் வரமல்ல. மைக்கேலிடம் நேத்ரா “ஏன் என்னை ஃபாலோ பண்ற?” என்று கேட்டதும் பட்டென்று வந்து விழுந்தது பதில். “யூ ஆர் மைன்” சர்வசாதாரணமாக சொல்லியிருந்தான். நேத்ராவிற்கு அயர்ச்சியாக இருந்தது. அவளுக்குமே அவன் மேல் ஈர்ப்பு இருந்தது தான். இதுவரை யாரிடமும் தோன்றாத உரிமை ஈடுபாடு எல்லாம் இவன் மேல் ஏற்பட்டிருந்தது தான்.
ஆனால் என்னவோ எல்லாம் ஜெட் வேகத்தில் நடப்பதாக தோன்றியது. மைக்கேல் பள்ளிக்கு வந்தே ஒரு சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. அதற்குள் எப்படி????? மேலும் இது எல்லோருக்கும் அவர்களது பதின் வயதுகளில் வரக்கூடிய எதிர்பாலின ஈர்ப்பு போல் இருந்தால் இதை இப்படியே அல்லவா விட்டுவிட வேண்டும். எதிர்காலமே இல்லாத ஒரு விஷயத்தை தான் ஊக்கப்படுத்தி பின் இல்லை என்று ஆகும் போது அதை தாங்கிக் கொள்ளும் தெம்பு வேண்டுமல்லவா????
நேத்ராவின் கேள்விக்கு பதிலளித்த மைக்கேலுக்கு அதன்பின் அவளது ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் பற்றி யோசிக்கவில்லை. தனக்குத் தோன்றியதை சொல்லி விட்டோம். அவ்வளவே…. மற்றபடி இப்போதே இதை பெரிது படுத்த எல்லாம் அவனுக்கு தோன்றவே இல்லை. அவனுக்குமே அவன் பதிலளிக்கும் வரை இதைப் பற்றிய சீரியஸான சிந்தனை எல்லாம் இல்லை.
இதுவரை யாரிடமும் வராத ஒரு உணர்வு இவளைப் பார்த்ததும் வந்துள்ளது. இவள் தனக்கானவள், இவளுக்கான பாதுகாப்பு தனது கடமை, தனக்கான இன்ப துன்பங்களை தான் இவளுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம் என்ற தெளிவு அவனுக்கு வந்துவிட்டது. ஆனால் தனது இந்த உணர்வை தான் முதலில் மனதுக்குள் வைத்து ரசித்துக் கொண்டாட வேண்டும். இப்போதைக்கு இதை நேத்ராவிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
ஆனால் அவள் கேட்டதும் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விட்டான். அதன்பின் அவளுடைய பதில் என்ன என்ற கேள்வி எல்லாம் கேட்கவில்லை. இது எனக்கான உணர்வு. இதை இப்படியே நான் சற்று காலம் ரசித்துக் கொள்கிறேன் என்ற நினைப்பு இருந்தது. மேலும் இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ‘இது உன் மீதான எனக்கு ஏற்பட்ட உணர்வு. நீ கேட்டதால் இப்போது சொன்னேன். இல்லையென்றால் சொல்லியிருக்க மாட்டேன்.’ இவ்வளவு தான் மைக்கேலின் தற்போதைய மனநிலை.
இருவருமே தற்போதைய மனநிலையில் இதைப் பற்றி இன்னும் யோசிக்கவோ இதைப் பற்றி ஆராயவோ முற்படவில்லை. இருவருமே இதை அப்படியே விட்டுவிட முடிவு செய்தாற் போல் நடந்து கொண்டனர். இந்த பேச்சை இருவருமே கவனமாகத் தவிர்த்தனர். ஆனால் இருவருக்குமே புரிந்தது தங்களுக்கிடையேயான இந்த உணர்வு நாளிடைவில் ரொம்பவுமே பலப்பட்டது.
ஒருவழியாக நேத்ரா தனது மனதிலிருப்பதை ஒத்துக்கொள்ள வைக்க மைக்கேலுக்கு பிரம்ம ப்ரயத்தனமாயிற்று. அவள் மனதிலிருப்பது தான்தான் என்பது  தெளிவாகத் தெரிந்த போதும் அதை எதற்காக மறுக்கிறாள் என்பது தான் புரியாத குழப்பம் அவனுக்கு. பள்ளியிறுதியாண்டில் அவனிடம் பிரிவுக்காக அவள் சொன்ன காரணம் அப்போது அவன் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும்படியானது. ஆனால் அதே காரணத்தை இப்போதும் சொல்வதானால்???
அடிக்கடி தனிமையில் தன்னை சிறைவைத்துக் கொள்ளும் நேத்ராவை அவ்வப்போது டெட்டி தான் வெளியே இழுத்து வர வேண்டியிருந்தது. நேத்ராவின் நட்பு வட்டம் மைக்கேலுக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. ‘அண்ணா அண்ணா’ என்றழைத்தாலும் அடிக்கடி தனது காலை வாரும் ஹரிணி, என்ன தான் சிநேகமாகச் சிரித்தாலும் எப்போதும் தன்னை ஆராய்ச்சிப் பார்வை பார்க்கும் சௌமியா…. நேத்ராவின் உலகம் ரொம்பவும் அழகானதாகவே தெரிந்தது அவனுக்கு.
ஹரிணி அவனை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு விட்டாள். அவளைப் பொறுத்தவரை தங்கள் பேபியின் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவனுக்கு உதவுவதில் தப்பில்லை. ஆனால் ஏனோ மியாவால் மட்டும் அப்படி ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏனோ அந்த ஸாஷாவின் பதிவு அவளை மைக்கேலின் மீது நம்பிக்கை வரவிடாமல் செய்தது.
இந்தியச் சூழ்நிலையில் வளர்ந்தவளால் இன்னொரு பெண் இப்படி பகிரங்கமாக தனக்கும் ஒரு ஆடவனுக்குமான உறவைப் பற்றி பொய்யுரைப்பாளென நம்ப இயலவில்லை. இவன் நம்பிக்கை கொடுக்காமல் அந்தப் பெண் எப்படி அப்படி சொல்ல முடியும் என்பதே மியாவின் வாதம். அதனாலேயே டெட்டியிடம் அவனைக் கண்காணிக்கும்படி வலியுறுத்தினாள்.
“பேபி!!!! அந்தண்ணாவைப் பார்த்தா அப்படியா தெரியுது??? நம்ம கூட இருக்கும் போது அவங்களுக்கு நீயும் நானும் கண்ணுல தெரியவே மாட்டேங்கிறோம். அவங்க வாழ்க்கை நம்ம ஸ்பிரிங்கைச் சுத்தி மட்டுமே தான் இயங்குது. தன்னோட சொந்த நாடு, வீடு எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கிற மனுஷனை சந்தேகப்பட என்னால் முடியல. ஆனா, நான் எப்பவும் பார்த்துகிட்டே தான் இருக்கேன் பேபி. நம்ம ஸ்பிரிங்குக்கு ஏதாவது கஷ்டம்னா நம்மளத் தாண்டி தான் வரனும்” உறுதியான குரலில் சொன்னாள் டெட்டி.
“இப்போ சரி பேபி… ஆனா காலத்துக்கும் நீ அவங்க பின்னாடியே போவியா? நான் லாங்டெர்ம் ப்ரச்சனை வரக்கூடாதேன்னு யோசிக்கிறேன்.” கவலை அப்பட்டமாக தெரிந்தது மியாவின் முகத்தில். “வாழ்க்கை முழுதும் ஒரு மனுஷனை சந்தேகத்தோடயே பார்க்க முடியாது மியா. நம்ம பேபிக்கு நம்பிக்கை இருக்கு அந்தண்ணா மேல. அவங்களுக்கும் நம்ம பேபி தான் உயிர். இவங்க வாழ்க்கை நல்லா இருக்கும் பேபி. நம்பு” என்றாள் ஹரிணி.
மைக்கேல் பெங்களூர் வந்து இருமாதங்கள் ஆகிவிட்டது. அவனும் க்ரைஸ்ட் யுனிவர்சிட்டியில் கணினி துறையில் மேற்படிப்புக்கு சேர்ந்து விட்டான். அவனைப் பொறுத்தவரை வாழ்க்கை திருப்தியாகவே கழிந்தது. தினமும் காலை நேரம் இவர்களுது கல்லூரிக்கு வந்து ஒரு அட்டெண்டன்ஸை போட்டதும் தான் தனது கல்லூரிக்கே சென்றான். நாளொரு சண்டை பொழுதொரு சமாதானமுமாக அவனுக்கும் நேத்ராவிற்குமான நேரம் இனிதே கழிந்தது.
ஆனாலும் ஏனோ அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலவேயில்லை. அவன் இந்தப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் நேத்ராவுக்கு ஒரே படபடப்பாக இருக்கும். அவளது கவனம் சிதறும். பேச்சில் கவனம் இராது. எங்கோ பார்வை நிலைகுத்தி இருக்க மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும். ஓரிரு முறை முயற்சி செய்தவன் அதன்பின் விட்டுவிட்டான். எப்படியும் இனி இங்கே தான் எனும் போது காலத்தின் போக்கிலேயே நடக்கட்டும் என்று தீர்மானித்தான்.
நேத்ராவின் பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் என்ற நிலையில் மைக்கேலுக்கு ஒரே பரபரப்பு. அவனுக்கு முதல் வருட நினைவு தான் வந்தது. அது அவன் இந்தியா வந்த சிலகாலமாகியிருந்த வேளை. அவளிடம் நட்பாகி ஓரளவு பேசத் தொடங்கிய வேளை. மைக்கேல் இவர்களது வகுப்பிற்கு தங்களது கலாச்சாரம் பற்றிய வகுப்பெடுத்தான். அதனால் அங்குள்ள பழக்க வழக்கங்கள் பற்றி பேசும் பொழுது பொதுவாக பிறரை எப்படி வாழ்த்தும் பழக்கம் என்று பேச்சு ஆரம்பித்தது.
பேச்சு ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவி வகுப்பிலிருந்தவர்களின் பிறந்தநாள் பற்றி வந்தது.  அனைவரும் அவர்களது பிறந்த தேதி மாதம் பற்றி சொல்ல மைக்கேலின் கவனமோ ஸ்பிரிங்கின் மீது நிலைத்தது. அவளது பிறந்த தேதி தெரிந்ததும் தனது பிறந்தநாளுக்கும் அவளது பிறந்த நாளும் அடுத்தடுத்த தினமே என்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.
அவளது பிறந்த நாளுக்கு அவளுக்கு வித்தியாசமாக வாழ்த்துச் சொல்ல ஆசைப்பட்டான் மைக்.  ஏனோ தனது வாழ்த்து மட்டும் அவளுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அவளது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பானுவை தனியாக அழைத்து அவளிடம் இருந்து சில விஷயங்களை கறந்தவன் தான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டான். எங்கே வழக்கம் போல் அவளுடன் பேசினால் தன்னையும் அறியாமல் தனது திட்டத்தை உளறி விடுவோமோ என்று இரு தினங்களாக ஒதுங்கியே இருந்தான். ஆனாலும் அவளைத் தன் பார்வை வட்டத்திலேயே வைத்திருந்தான்.
நேத்ராவிற்கு ஏன் மைக் தன்னிடம் இரண்டு நாட்களாக சரியாக பேசவில்லை என்ற சந்தேகம் தலையைக் குடைந்தது. வலியச் சென்று பேசியும் அவன் அவ்வளவாக பேசாதது அவளுக்கு பெரிதும் மனவருத்தத்தை தந்தது. முதல் நாள் ‘ போடா!!! நீ பேசலைன்னா ஒன்னும் உலகம் சுத்தாம நிக்காது. எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் போதும்.’ என்று சொல்லிக் கொண்டு இறுமாப்புடன் சுற்றினாள்.
இரண்டாவது நாள் அவளது இறுமாப்பு தளர்ந்து போனது. தான் என்ன தவறு செய்தோம் என்றிவன் தன்னை தவிர்க்கிறான் என்பது தலையை உடைக்கும் கேள்வியானது. தன்னிடம் பேசாதவன் தன்னைப் பார்த்தால் ஒரு சின்னப் புன்னகையுடன் தன்னைக் கடந்து செல்பவன் பானுவிடம் மட்டும் ஏன் வலிய சென்று பேசுகிறான் என்று கேள்வி எழும்பியது. 
வழக்கமாக தனது வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் கேட்காமலே சொல்லும் பானு இந்த இரு தினங்களாக ஏனோ மௌனியாக அலைவதன் காரணம் புரியவில்லை நேத்ராவிற்கு. இவன் காந்தம் போல் தன்னை என்றோ தன்னை அவனுள் இழுத்துக் கொண்டான் என்பது அவளுக்கு அப்போது தான் புரிபட்டது. ‘இனி தாக்குப்பிடிக்க முடியாது மேக்னெட். எதுவானாலும் நேருக்கு நேர் கேட்டே விடலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் நேத்ரா.
அவளது பிறந்தநாளன்று காலை வழக்கம் போல் அவள் பள்ளிக்கு சீக்கிரமே வந்து விட அவளது மேஜையின் மேல் இருந்த ஒற்றை ரோஜாவும் “மீட் மீ இன் டெரஸ்” என்ற கார்டும் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பொதுவாகவே நேத்ரா தனது பிறந்தநாளன்று ஒன்றும் பெரிதாக கொண்டாட்டம் எதுவும் செய்வதில்லை. கமலா பிள்ளைகளுக்கு அன்றைய தினம் கோவிலில் அர்ச்சனைக்குக் கொடுப்பார். அவ்வளவே. மற்றப் பிள்ளைகள் போல் பள்ளிக்கு புதுத்துணி அணிந்து செல்வதோ மற்ற மாணவர்களுக்கு இனிப்பு கொண்டு செல்லும் பழக்கமோ இல்லை.
அதனாலேயே பள்ளியில் பானுவைத் தவிர யாருக்கும் நினைவு கூட இருக்காது. ஆனால் இன்று இப்படி ஒரு பூவும் ஒரு கார்டும் அவளுக்கு ஆச்சரியம் தான். தனது ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாத காரணத்தாலும் வகுப்பு தொடங்க இன்னும் நிறைய அவகாசம் இருப்பதாலும் மேலே செல்ல முடிவு செய்தாள். மொட்டை மாடிக்குச் செல்லும் வழி இவர்களது வகுப்பிற்கும் இன்னொரு வகுப்பிற்கும் இடையே இருந்தது. 
மாடிக்குச் சென்றவளுக்குப் பலத்த ஆச்சரியம். தண்ணீர் டேங்கிற்கு அருகே ஒரு டேபிள் போடப்பட்டு அதில் ஒரு பெரிய கிஃப்ட் டப்பாவும் ஒரு பூங்கொத்தும் இருந்தது. ஆர்வம் தாளாமல் அதனருகே சென்றவளின் பின்னிருந்து “ஹாப்பி பர்த்டே பேபி.” என்று ஆழ்ந்த குரலில் வாழ்த்து கேட்க திரும்பாமலே புரிந்தது அவளுக்கு இது மேக்னெட் தான் என.  
தனது பிறந்தநாளை நினைவில் வைத்து அதற்கென்று மெனக்கெட்டிருக்கின்றானே என்று தோன்ற கண்களில் கண்ணீர் வழிந்தது. மெல்ல அவளருகே வந்தவன் அவளிடம் ஒரு ரோஜாப்பூவினை நீட்டியபடி “நீ எனக்காக நிறைய வருஷங்கள் சந்தோஷமா வாழனும். எப்போவுமே சிரிச்சுகிட்டே இருக்கனும். நான் எப்போதுமே இதே சிரிச்ச முத்தத்தை தான் பார்க்கனும். ரிமம்பர். எப்போதும் என்ன ஆனாலும் நானிருப்பேன் உன்னோட” கட்டை விரலைக் காட்டி அவளுக்கு உத்திரவாதம் அளித்தான்.
அவ்வளவு நேரம் அடைத்து வைத்திருந்த அழுகை எல்லாம் மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்தாள் நேத்ரா. அவளையும் அறியாமல் அவனது கரத்தினுள் தஞ்சம் புகுந்திருந்தாள் அவள். மெல்ல அவளது தலைகோதியவன் “பேபி நீ இன்னும் கிஃப்ட் பிரிக்கவேயில்லையே” என்றான். இதுவரை தனக்குப் பிறந்தநாள் பரிசென்று யாருமே தந்திராததால் என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் சேர்ந்து கொள்ள ஆவலுடன் பிரித்தாள். வெள்ளை நிறத்தில் “பீ மைன்” என்றெழுதியிருந்த இதயத்தை கையில் வைத்திருந்த ஒரு குட்டி டெட்டி பியர். அதையே கண்ணீர் பெருக பார்த்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் மைக். அவளையும் அறியாமல் தலையை ஆட்டினாள் அதனை தன்னோடு இறுக அணைத்தபடி.
இந்த முறையும் பிறந்தநாளுக்கு  நேத்ராவை அசத்தும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணியவனுக்கு அவனையே அதிர வைக்கும்படி ஒரு குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது ..
கவிதையாவாள்!!!!!!!!

Advertisement