Advertisement

17 – முத்தக் கவிதை நீ
ஒருவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவர்களது வாழ்வின் வரமாகவோ சாபமாகவோ அமைந்து போகின்றார்கள். சில நண்பர்கள் நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும். ஹரிணியும் அப்படித்தான் நேத்ராவிற்கு. அவளுக்கு நன்கு புரிந்தது நேத்ராவிற்கு மைக்கேலின் மீது காதல் இருந்தது என்று. ஆனால் சாதாரணமாக சொன்னால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டாள். அதனால் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் சரிவரும் என்று தோன்றவே மைக்கேலிடம் அப்படி பேசினாள்.
இவளின் கையை உதறிய நேத்ரா நேராக மைக்கேலிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நிற்காது வடிய அவனை இறுக அணைத்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் விழித்தவனைப் பார்த்து ஹரிணி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். அவனுக்குப் புரிந்தது இவள் ஏன் இப்படி பேசினாளென.
மியா டெட்டியைக் கட்டிக் கொண்டாள். நிறைய நேரம் டெட்டிக்கு இருக்கும் மனமுதிர்ச்சியும் சமயோசித புத்தியும் அவளை ஸ்தம்பித்துப் போகச் செய்யும். “பேபி ஐ லவ் யூ” என்று ஹரிணியை இறுகக் கட்டிக் கொண்டாள் மியா. “ஐயே பேபி இதெல்லாம் தப்பு. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட்டே ஆகாது. உனக்குத்தான் காலேஜ்ல அத்தனை பசங்க படிக்கிறாங்களே, அவங்கள்ள ஒருத்தர செலக்ட் பண்ணிக்கோ சரியா.?” ரொம்பவே சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு பேசிய டெட்டியை சட்டென்று உதறி விலகிய மியா அவளை அடிக்க கையை ஓங்கவும் ஹரிணி ஓடத் தொடங்கினாள்.
இருவரும் மைக்கேலையும் நேத்ராவையும் சுற்றிச் சுற்றிச் ஓட கலங்கி நின்ற நேத்ரா கூட சற்று கவலை மறந்து சிரித்தாள். அவளது முகத்தில் சிரிப்பைக் கண்ட இருவரும் ஓடுவதை நிறுத்தி விட்டு அவளிடம் வந்தனர். “மிஸ்டர் ஆஸ்திரேலியா அண்ணா!! நல்லா பாத்துக்கோங்க. எங்க பேபிய சிரிச்சு முகமா தான் உங்ககிட்ட விட்டுட்டு போறோம். உங்குளக்குள்ளான ப்ரச்சனையை பேசித் தீர்த்துக்கோங்க. ஆனா எங்க பேபி அழுதா அவ்வளவு தான். இந்த மியாவோட உயிரைப் பணயம் வச்சாவது நான் என்னோட பேபிக்காக வருவேன். பேபி!! உனக்கென்ன பேசனுமோ பேசி ஒரு முடிவுக்கு வா. ஆனா கட்டாயம் ஒரு முடிவுக்கு வா. புரிஞ்சுதா?” என்று ஆள்காட்டி விரலை தூக்கி எச்சரிப்பது போல் செய்து விட்டு நாக்கைத் துருத்திக் காட்டினாள் நேத்ராவிடம்.
‘அதுக்கேன்டா இவ ஏன் உயிரை பணயம் வைக்கனும்?’ புரியாமல் விழித்த மியாவை பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பினாள் ஹரிணி. மனதில் தோன்றியதை அவளிடம் கேட்கவும் செய்தாள். “அவங்க ரெண்டு பேரோட ப்ராப்ளம் சால்வ் பண்ண ஏன் என்னோட உயிர பணயம் வைக்கனும்?” இடுப்பில் கை வைத்தபடி கேட்டவளின் கரங்களைப் பற்றி தன்னுடன் இழுத்துக் கொண்டவள் “பலி குடுக்கனும்னு முடிவு பண்ணியாச்சுன்னா அப்படித்தான் பேபி” என்றாள்.
“வாலு!!!!! எல்லாம் விட்டமின் கே அதிகமாச்சு உனக்கு. ஆமா இப்போ தனியா விட்டுட்டு வந்திருக்கியே. இப்போ மட்டும் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க மாட்டாங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் மியா. “போட்டுப்பாங்க தான். நல்லா அடிச்சுப்பாங்க. ஆனா கட்டாயம் யோசிப்பாங்க. பேபி. அவங்களக்குத் தேவை அவங்க ப்ரச்சனையை உட்கார்ந்து பேச ஒரு சான்ஸ், ஒரு அவகாசம். அதை ஏற்படுத்திக் குடுத்தோம்னா கட்டாயம் பேசி ஒரு முடிவுக்கு வருவாங்க” என்றாள் உறுதியான நம்பிக்கையுடன். 
மியாவும் டெட்டியும் அங்கிருந்து நகர்ந்த பின்னும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தனர் நேத்ராவும் மைக்கேலும். எங்கே தான் ஏதாவது பேசினால் அவள் மீண்டும் பழைய பல்லவியைத் தொடங்கி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு அதிகமாகவே இருந்தது. இந்த ஹரிணியின் சேட்டையால் ஒரு நிமிடம் அவசரப்பட்டு ஒத்துக் கொண்டாயிற்று இனி அடுத்து என்ன என்பதாய் சிந்தனை ஓடியது நேத்ராவிற்கு.
அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை டெட்டி இப்படி செய்வாளென. “உங்களைப் பிடிக்கலையாம். நீங்க உங்க நாட்டுக்கே போவீங்களாம், இல்லைன்னா இங்கேயே வேறு யாரையாவது பார்த்துப்பீங்களாம்” என்றதும் தான் நேத்ராவுக்கு உரைத்தது. ‘இப்போது வேண்டாம் என்று மறுத்து  இனி அவன் தனக்கு இல்லவே இல்லை என்று ஆகிவிட்டால்????? கடந்த முறை வேண்டாம் என்று அவனை அனுப்பி விட்டே வருடக் கணக்கில் குற்றவுணர்ச்சியில் செத்துப் பிழைத்தாயிற்று. பார்க்காமல் இருந்த வரை ஒன்றும் பெரிதாக பாதிப்பில்லை. இப்போது பார்த்ததும் தான் புரிந்தது இவனின்றி தன் வாழ்க்கை பூர்த்தியாகாதென்று’
“மேக்னெட்” என்று சொல்லும் அதே வேளை அவனுமே “பேபி” என்று சொல்ல இருவருமே சிரித்துக் கொண்டார்கள். இது இவர்களிடம் ஆரம்பம் முதலே நடக்கும் விஷயம். இருவருமே மற்றவரிடம் பேச விழையும் போது ஒரே சமயத்தில் அழைத்து பின் சிரித்துக் கொள்வார்கள். “எதுவுமே மாறவே இல்லை பார்த்தியா பேபி!!!! இன்னும் எல்லாம் அப்படியே தான் இருக்கு.” என்றான் மைக்.
“இல்லே மேக்னெட்!!!! நிறைய மாறியிருக்கு. பாரு தமிழை டமில்னு சொல்லிட்டிருந்த நீ இப்போ இவ்வளவு அழகா தமிழ் பேசற” என்றாள். “இது உனக்காக கத்துக்கிட்டது பேபி. இனி இங்கே தான் என் வாழ்க்கைனு தெரிஞ்சு போச்சு. இந்த நாடு தான் எனக்கு, இந்த மொழி தான்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா நான் மாறித்தானே பேபி ஆகனும். அதான் உனக்காக கத்துக்கிட்டேன் பேபி” என்றான்.
அவன் பேசப் பேச கண்களில் கண்ணீர் வழிய கேட்டிருந்தவளின் கரங்களை தனது தரத்துடன் இணைத்துக் கொண்டான் மைக்கேல். “போதும் பேபி. அழாதே. கடந்து போனதெல்லாம் போகட்டும். அதைப் பத்தி யோசிக்க வேண்டாம்” என்றான்.  “ஆனால் மைக் யோசிக்காம எப்படி இதுக்கான முடிவெடுக்க முடியும்?” என்றாள். அவளது முகத்தில் ஓடிய கவலையின் ரேகைகள் மைக்கேலுக்கு சங்கடத்தை அளிக்க “போன முறை நீ சொன்னதைக் கேட்டு நான் போனேன். இம்முறை அது நடக்காது. என்ன ஆனாலும் சேர்ந்தே சமாளிப்போம் பேபி. எது நடந்தாலும் நானிருக்கேன். சரியா?” என்றான் கைகளை அவளிடம் நீட்டியபடி.
மனதிற்குள் எப்படி முடியுமென  ஆயிரம் கேள்விகள் துளைக்க எங்கோ வெறித்திருந்தவள் அவனது “எது நடந்தாலும் நானிருக்கேன்”என்ற  வார்த்தையில் நினைவுகளால் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டாள். மைக்கேலுக்கும் நேத்ராவிற்கும் நட்பு பூக்கும் தருணத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் நேத்ராவின் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது.
கூடைப்பந்து மைதானத்தில் ஏற்பட்ட அறிமுகத்தின் பின் நேத்ராவை எங்கேனும் கண்டால் இருவரும் ஒரு சிநேகப்புன்னகையை பரிமாறிக் கொண்டனர். அதற்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால் ஏதாவது காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு இவன் நேத்ராவை தனது பார்வை வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்தான். 
அவளுக்கே தெரியாமல் அவளை ரசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு விஷயம். நேத்ராவிற்கு பிடித்த இரு பாடங்கள் கணினியும் வேதியியலும் தான். படிக்க பிடிக்கும் என்பதால் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல. கம்ப்யூட்டர் லேப்பில் தான் ஏஸி போட்டிருப்பார்கள். கெமிஸ்ட்ரி லேப்பில் தான் பசியெடுக்கும் போது நூடுல்ஸ் செய்து சாப்பிட அவளால் முடிந்தது. இந்த இரண்டு பாடங்களை எடுக்கும் டீச்சர்களுக்கு நேத்ரா ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தாள்.
இவள் திருட்டுத்தனமாக இப்படி ஏதாவது செய்து அனைவருக்கும் பங்கு வைத்துக் கொடுத்து அவர்களது சப்போர்ட்டையும் சம்பாதித்து கொண்டாள். அவளை எதிர்த்து புகார் கொடுக்க மாணவர்களில் யாரும் தயாராகவும் இல்லை. மேலும் அவளது வால்தனங்களை வகுப்பில் எல்லோரும் ரசிக்கவும் செய்ததால் முடிசூடா ராணியாகவே வலம் வந்தாள். எல்லாம் அன்று லேப்பில் அந்த விபரீதம் நடக்கும் வரை.
தனது தோழியின் பலவீனத்தை வைத்து அவளை தவறாக பேசியதற்காக ஒருவனைப் போட்டு நேத்ரா புரட்டி எடுத்த சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு எந்தவித மாற்றமும் இன்றி சாதாரணமாக கழிந்தது. ஆனால் ஏனோ மைக்கேலுக்கு உள்ளுக்குள் ஏதோ அலாரம் அடித்தபடியே தான் இருந்தது. இன்டர் ஸ்கூல் காம்படிஷனுக்கான ரிகர்சல்கள் ஆரம்பிக்க அனைவரும் அதில் மும்முரமாக இருந்தனர்.
நடனம், நாடகம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மாறுவேடம், என்று பலபோட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். மைக்கேலை பிரின்ஸிபல் ஆங்கில நாடகத்திற்கான ஒத்திகையில் உதவச் சொல்லிக் கேட்டிருந்தார். மைக்கேலும் சந்தோஷமாகவே ஒத்துழைத்தான். இவர்கள் பள்ளியில் இருந்து காந்தி காலத்திலிருந்து பழக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கே ப்ராக்டிஸ் கொடுக்கப்பட்டது.
காம்படிஷன் துவங்க இருதினங்கள் இருந்த நிலையில் அன்று லைப்ரரியில் இருந்த நேத்ராவை அவளது கெமிஸ்ட்ரி டீச்சர் லேபிற்கு அழைப்பதாக தகவல் வர அவள் கிளம்பிச் சென்றாள். நேத்ரா மட்டுமே கெமிஸ்ட்ரி லேபிற்குள் நுழைவதைப் பார்த்த மைக்கேலின் மண்டைக்குள் அலாரம் பலமாக ஒலிக்க அவளின் பின்னோடே ஓடினான். லேபிற்குள் இருந்து சற்று நேரத்தில் குழப்பமான சில குரல்கள் கேட்டன. அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாதவனாய் லேபிற்குள் நுழைந்தவன் யாரையும் காணாமல் குரல் வந்த திக்கை நோக்கி ஓடினான்.
லேபின் மறுகோடியில் இருந்த கப்போர்டுக்கு அருகில் இருவர் நின்றிருந்தது தெரிந்தது. வாயிலைப் பார்த்தபடி நின்றிருந்தாள் நேத்ரா. அவளைப் பார்த்தபடி நின்றிருந்தவனை மைக்கேலால் அடையாளம் காண முடியவில்லை. சற்று நெருங்கிப் போனதும் இவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. “உனக்கென்ன ஜான்சி ராணின்னு நினைப்பா? என்னை இதுவரைக்கும் யாருமே அடிச்சதில்ல. நீ????? ஆஃப்டர் ஆல் நீ…… என்னை அடிச்சிட்டுப் போயிருவியா? எல்லாரும் சொன்னாங்க அன்னிக்கு போய் ப்ரின்ஸிபல்கிட்ட கம்ப்ளெய்ன் பண்ண சொல்லி. ஆனா என்னை அடிச்ச உனக்கு நாந்தானே தண்டனை குடுக்கனும்? அதான்….. வா எங்கே போகப் பாக்குற? வந்து உனக்கான தண்டனையை வாங்கிட்டுப் போ” என்றான்.
மைக்கேலுக்கு தனது அலாரம் கரெக்டாகத்தான் சொல்லியிருப்பது புரிந்தது. ஆனால் இவன் பயந்தது போல் எல்லாம் நேத்ரா கலங்கவே இல்லை. கொஞ்சமும் பதறாமல் “யூ ஸ்டுபிட்!!!! என்னை எதாவது செஞ்சா நீ மாட்டிப்பனு கூடவா உனக்குத் தெரியல‌. அன்னிக்கு நீ நடக்க முடியாத சுபாவைப் பார்த்து கிண்டல் பண்ணது தப்பு தானே??? இப்போ எனக்கு கூடத்தான் தெரியுது உனக்கு மூளை இல்லைன்னு. அதுக்காக நான் உன்னை அதச்சொல்லி கிண்டல் பண்ணா நல்லாவா இருக்கும். அப்படித்தானே டம்போ. உன்னை அடிக்க ஜான்சி ராணியெல்லாம் எதுக்குடா?” பயம் என்பது சிறிதுமின்றி அவனுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள்.
மைக்கேலுக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. அவனே பைத்தியம் போல் பழிவாங்கப் போகிறேன் என்கிறான். இவள் அவனிடம் போய் வாயாடிக் கொண்டிருக்கிறாளே… என்று தோன்ற இருவரின் கவனத்தையும் கலைக்காமல் மெல்ல பூனைப்பாதம் வைத்து அவர்களை நோக்கி முன்னேறினான். இதற்குள் அவன்… அந்த பிரசாத் ஒரு பெரிய பீக்கரில் இருந்த திரவத்தை கையிலெடுத்தவனாய் நேத்ராவை நோக்கி அடியெடுத்து வைக்கலானான்.
“உனக்கெல்லாம் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கோம்னு திமிர் தான்டி. அதான் ரொம்ப ஓவரா பண்ற. நான் யாரை என்ன சொன்னா உனக்கென்ன. எனக்கு மூளை இல்லையா? இரு இப்போ யாருக்கு முகமே இல்லாமப் போகப் போகுதுனு பார்ப்போம்” என்றவனின் குரல் அநியாயத்துக்கு கரகரத்தது. “லூசாடா நீ? என்‌மேல ஆசிட் அடிச்சிட்டு நீ என்ன கோல்ட் மெடலா வாங்கப் போற? உன்னையும் பிடிச்சு உள்ள போடுவாங்க டா?” என்றாள் நேத்ரா அசராமல். பேச்சு அவனிடம் கொடுத்தாலும் கண்கள் தப்புவதற்கான வழியைத் தேடியபடி இருந்தது. “அதெல்லாம் எங்க டேடி பார்த்துப்பார். என்னை எப்படியும் அவர் எந்தக் கேசும் இல்லாம காப்பாத்திருவார். நீ இனி உலகத்துக்கு எந்த மூஞ்சியக் காட்டுவ? நீ இங்கே லேபுக்கு முடிக்காத பிராக்டிகல செய்யத்தான் வந்திருக்கனு எல்லாரும் நினைச்சிருப்பாங்க. அதனால் இப்போ இந்த ஆசிட் பட்டாக்கூட எக்ஸ்பெரிமெண்ட் பண்ணும் போது நடந்த விபத்துனு தான் நினைப்பாங்க. என் மேல் சந்தேகமே வராது.” கேவலமாக சிரித்தபடி நெருங்கினான்.
அவன் எதிர்பாராத நேரத்தில் அவனிடமிருந்து தப்ப நேத்ரா ஓடத் துவங்க அவள் பின்னே ப்ரசாத் ஓட மைக் லேபின் மறுபுறமிருந்து ஓடி வர சற்று நேரத்தில் அந்த ஆசிட் தெறித்து அங்கிருந்த கண்ணாடி உபகரணங்கள் வெடிக்கும் சத்தம் பலமாக கேட்க மைக்கேல் ஸ்தம்பித்து அப்படியே உறைந்து நின்றான்.
கவிதையாவாள்!!!???¿

Advertisement