Advertisement

“ ஹேய் மேன். வொய் திஸ் லூக். நான் உண்மைய தான சொன்னேன். அப்போ காலம் வேற, இப்போ அவனவன் வேல தேடி வெளில போக வேண்டிய சூழ்நிலை. அப்போ மேன் பவர் குறைய தான செய்யும். “

“ அப்போ அந்த சூழ்நிலைய நாம தான் மாத்தணும். “ அழகன் ஒரு தினுசான குரலில் சொல்ல, 

“ அத மாத்த தான நாம இங்க உட்கார்ந்துருக்கோம். இன்னும் ஒரு மணி நேரத்துல மாத்திட்டு, நம்ப கிளம்பலாம் “ என பரமு சட்டை காலரை தூக்கிவிட்டு சொல்ல, பரமுவின் காலரை பிடிப்பது போல் அவன் பின்னங்கழுத்தை பிடிக்க, 

“ டேய் விடுட, சக கட்சிக்காரரின் கருத்து மற்றும் கழுத்து உரிமையை பறித்தவர் அப்படினு மீடியாக்கு நியூஸ் கொடுத்துடுவேன். பார்த்துக்க.

நான் என்ன இப்போ தப்பா சொல்லிட்டேன். இப்போ உடனே எல்லாம் மாத்தமுடியுமா, அப்புறம் இந்த வன்முறைலாம் என்கிட்ட வச்சுக்காத. என மிரட்டினான்.

“ நீ தான் தைரியமான ஆள் ஆச்சே பங்கு, நியூஸ் கொடுத்து தான் பாரேன். அப்புறம் கை உரிமை, கால் உரிமை, மற்றும் சில பல உரிமைகளும் பறிக்கப்படும். 

நம்ப டாப் கியர்ல போனாலும், கூட இருக்கறவங்கனு பிரேக் அடிச்சு கீழ தள்ளாம விடமாட்டாங்கனு அப்போவே அரசியல் மகான்லாம் சொல்லிவச்சுருக்காங்க. “ என அழகன் அவனின் காலரை சரி செய்தபடி சொல்ல,      

அதற்குள் அங்கே தேவியும் தாமரையும் ஸ்கூடியில் வந்திறங்கினர். ஒரு இளம்பச்சை நிற சல்வார், துப்பட்டாவை குறுக்கே அணிந்து முடி போட்டிருந்தாள். தலையில் கொண்டை, முகத்தில் போட்டு கூட வைக்காமல் தூங்கி எழுந்து வந்தது போல் இருந்தாள். முகத்தில் ஒரு களைப்பு, ஆனால் அதனையும் காலையில் கண்ணில் வைத்த மை மட்டும் அழியாமல் கொஞ்சம் அலுங்கி இருக்க, அப்படியே வந்திருந்தாள்.

காலையில் கடைக்கு வந்திருந்தவள், மதியத்திற்கு மேல் உடம்பு முடியவில்லை என அழகனுக்கு மெசேஜ் போட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தாள். இப்போது மாலை ஆகியிருக்க, எப்போதும் அவள் உடல்மொழியில் இருக்கும் ஒரு சுறுசுறுப்பு, கண்ணில் இருக்கும் துறுதுறுப்பு எல்லாம் வாடியிருந்தது. 

“ அழகா, அங்க பாரு உன் எதிர்கட்சி வந்தாச்சு. என்னமோ என் அந்த உரிமைய பறிப்பேன் இந்த உரிமைய பறிப்பேனு அறிக்க விட்ட, முடிஞ்சா உன் எதிர்கட்சிகிட்ட இப்படி பேசி பாரு, உன் மூஞ்சில விபூதி அடிச்சு வேப்பிலை அடிச்சுவிட்டுடுவா. “ என சொல்ல, அழகன் அப்போது தாமரையை பார்த்து கொண்டுதான் இருந்தான். அவன் மீசையும் தாடியும் மறைத்திருந்த உதட்டில் பிறர் அறியா சிறு புன்னகை. ஆனால் உடனிருந்த பாராமு கவனித்து விட்டான். 

“ என்னடா சைலன்ட்டா சிரிக்குற, எனக்கு தெரியாம ஏதாவது சம்பவம் நடந்துச்சா. “ என கலவரமாக கேட்க, அவனை பார்த்து யாரும் அறியா வண்ணம் கண்ணடித்தவன், தேவி அருகே நெருங்கவும் மரியாதையாய் எழுந்து நின்றான்.

“ நல்லா இருக்கிங்களா மாப்பிள்ள ? கட்சி வேல நல்லா போகுதா ? “ என விசாரிக்க, தாமரை அருகே வந்து சேர்ந்தவள், பரமுவை மட்டும் பார்த்து சிறியதாய் புன்னகைத்தவள், அழகனிடம் பெரியம்மா பேசிக்கொள்ளட்டும் என்று முகத்தை வேறு பக்கம் பார்த்து நிற்க, 

“ நல்லா இருக்கேன் அத்த, கட்சி வேல நல்லா போகுது. மாமா நல்லா இருக்காங்களா ? “ என அழகன் கேட்க,

“ எல்லாம் நல்லா இருக்காங்க. இந்த தடவ உங்க கட்சி தான் பதவிக்கு வரும். அதுக்கு நீங்க தகுதியான ஆள் தான் மாப்பிள்ள.“ என அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஆனால், 

“ அன்னைக்கு நீங்க சொல்லவும் தான் தெரிஞ்சது, இவ எவ்ளோ தைரியம் புடிச்சவனு. ஏதாவது பின் தொடர்ந்து பிரச்சனை வந்துட்ட என்ன செய்றதுனு  நான் நம்ப எல்லைவீரன் கோவிலுக்கு கூட்டிட்டு போய் பூஜா போட்டேன். அப்புறமா தான் நிம்மதி ஆச்சு. “ என சொல்ல, தாமரை தேவியை பார்த்து முறைக்க, அடுத்து அவள் பார்வை அழகனை யாரும் அறியா வண்ணம் முறைத்து வைக்க,

“ அப்படி எதுவும் பிரச்சனை வந்தா, நாங்க இருக்கோம்ல அத்த, நாங்க விட்ருவோமா. அதெல்லாம் பிரச்சனைய பார்சல் பண்ணி அனுப்பிட மாட்டோம். “ என அழகன் பார்வையை அவளிடம் சில நொடிகள் நிலைக்கவிட்டு தேவியிடம் உரைக்க, தேவி முகத்தில் ஒரு அசுவாசம்.

அது சில நொடிகளாக இருந்தாலும், அந்த பார்வையில் ஒரு ஏத்தம், குரலில் மறைக்கபட்ட சிறு எள்ளல் என எல்லாம் தாமரைக்கு தப்பாமல் பட்டது. அவள் விழிகள் அவனை இன்னும் நேரிடையாக முறைத்தது. பரமு இவர்களின் பேச்சில் ஏதோ புரிந்தவன்,

“தாமரைக்கு உடம்பு முடியல போல, ரொம்ப டயர்டா இருக்கு. உட்காருங்க. “ என பரமு சொல்ல, 

“ பெருசா ஒன்னும் இல்லப்பா, அடுத்து இவ போய் அகிலாவ கூட்டிட்டு வரணும். இங்க விட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடுவா. எனக்கு கால் வலி, நான் நடக்க வேணாம்னு என்னைய முதல வண்டில கூட்டிட்டு வந்துட்டா, அகிலா நடந்து வந்துட்டு இருக்கா, தாமர நீ போய் அம்மாவ கூட்டிட்டு வா. “ என சொல்லி அவளை அனுப்பிவிட்டு திண்ணையில் அமர்ந்தார்.

அழகனும் பரமுவும் தனியாக தள்ளி வந்தனர். 

“ அடேய் என்னடா பண்ணி தொலைச்ச, தாமர உன்ன அந்த முறை முறைக்குது. “

“ பங்கு, லோட்டஸ்க்கு ஒரு சின்ன பூஜா போட்டேன், அது சரியா வேல செஞ்சுடுச்சு. “

“ சின்ன புள்ள டா அது, அது ஏதாச்சும் பண்ணுச்சுனு, நீ எதுவும் பண்ணாத டா. “

“ லோட்டஸ்சு உனக்கு சின்ன புள்ளயா. அழுங்கமா எங்க சித்தப்புகிட்ட என்னைய பத்தி போட்டுக்கொடுக்குது. அந்த விஷயம் நடந்த அடுத்த நாளே அவங்க வீட்டுக்கு அவங்க அப்பா கிட்ட கட்சி விஷயமா பேச போயிருந்தேன். அப்படியே லோட்டஸ் செஞ்சு வச்ச வேலைய பத்தி கொஞ்சம் அரும பெருமையா சொல்ல, அவர் கூட புள்ள தைரியமா இருக்குனு சந்தோஷபட்டார். ஆனா அவங்க பெரியம்மா லோட்டஸ்ஸ புடி புடினு பிடிச்சிட்டாங்க. 

வேல பாக்குற எடுத்துல இப்படி நடந்துக்கலாமானு அத்தன கேள்வி, நல்லா சுத்தி சுத்தி கேள்வி கேட்டு டயர்ட் ஆக்கிட்டாங்க. அவர ஸ்டோர் ரூம்ல வச்சு லாக் பண்ணதுக்கு செம்ம திட்டு வேற, பச்ச மொளக அப்படியே அப்பாவியா நின்னுச்சு பாரு. என்னா பெர்ஃபார்மன்ஸ். 

அப்புறம் அத்தோடு முடிஞ்சதுனு நெனச்சேன். 

ஆனா அவங்க பெரியம்மாவுக்கு எங்க புள்ளைக்கு இதனால பிரச்சனை வருமோனு பயம் போல லோட்டஸ்ஸ கோவிலுக்கு கூட்டிட்டு போய் பூஜை  போட, கோவில் பூசாரி லோட்டஸ் முகத்தில ஃபுல்லா வீபூதி அடிச்சு, உட்சந்தலையில வேப்பிலை அடிச்சுனு ஒரு பெர்ஃபார்மன்ஸ் கொடுக்க, கரெக்ட்டா நான் அப்போ கோவில்ளுக்கு கேட் போடுற வேல விஷயமா அங்க போக, அப்படியே அந்த காட்சிக்கு சாட்சியா நான் ஆகிட்டேன். என சென்ற மாதம் நடந்ததை அப்படியே கண்கள் மின்ன கதை சொன்னான் அழகன்.

“ அடப்பாவி, அதான் அந்த புள்ள அந்த முறை முறைக்குதா. நான் அப்பவே நினச்சேன் டா, கடைல உன்கிட்ட அமைதியா போகுதேனு “   

“ ஒரு கட்சி தலைவர்னு கூட மரியாதை இல்லாம நம்பள சித்தப்புகிட்ட  மாட்டிவிடுவா, நான் சும்மா இருக்கணுமா. அவ அமைதி எல்லாம் இல்லடா, புலி பதுங்குது, எப்போ நான் சிக்குவேன்னு வைட் பண்ணிட்டு இருக்குது. பாவம் புலிக்கு இன்னைக்கு ஃபீவர். “ என அழகன் அசால்டாய்  தலைக்கோத, பரமு முறைத்தவாரே அவன் முடியை மீண்டும் கலைத்து விட்டான். 

“ ஹேர் ஸ்டைல்ல டிஸ்டர்ப் பண்ணாதடா, நம்ப இமேஜ் என்ன ஆகுறது. “ என பேசிக்கொண்டிருக்கும் போதே, அங்கே அவனின் வெவ்வேறு எதிர்கட்சி பிரமுகர்கள் வீட்டில் இருந்து ஆட்கள் வந்தனர். 

அதில் சிலர் அழகனிடம் மரியாதையுடன் பேசிவிட்டு வீட்டின் பெரியவர்களையும் பார்த்துவிட்டு செல்ல, அதில் ஒரு கட்சியின் பிரமுகர் சிவசு மட்டும் கொஞ்சம் முரண்டு பிடித்தவர், அழகன் வயதுக்கு சில வயது தான் மூத்தவர், அவர் உடன் வந்திருந்த ரகு, அழகனை விட இளைய வயது தான், ஆனால் கொஞ்சம் பேச்சு தாறுமாறாக தான் இருக்கும். அவர்கள் இருவரும் வந்ததும் இவர்கள் இருவரும் இன்னும் சற்று தள்ளி ஒரு பெரிய ஆலமரத்தடியில் இருந்த கல்திட்டில் அமர்ந்தனர். பெரியவர் ஒருவர் முடியாத இருக்கும் இடத்தில் தேவையில்லாத பிரச்சனை எதற்கு வைத்துக்கொண்டு, ஒதுங்கி இருப்போம் என அழகனும் பரமுவும் அமைதியாக அங்கே அமர, அதுவே ரகுவிற்கு கொஞ்சம் நகைப்பு கொடுக்க, கொஞ்சம் திமிராய் தான் பார்த்து வீட்டினுள் சென்றான். 

“ அழகா, அவன் ரொம்ப பண்றான் டா, ஒரு நாள் அவன தட்டி வைக்கணும். எங்க பார்த்தாலும் கரச்சல் கொடுத்துட்டே இருக்கான். நான் உனக்காக தான் பொறுமையா போய்கிட்டு இருக்கேன்.” 

“ விடு பங்கு, நம்ப ஏதாச்சும் செய்ய போய் அவன பெரிய மனுஷன் ஆக்கிவிட்டுட கூடாது. ஜஸ்ட் இக்னோர். “ என அழகன் சொன்னாலும். வீட்டினுள் ரகு ஒரு முடிவுடன் தான் இருந்தான்.  

 அதற்குள் தாமரை அகிலாவையும் வந்து இறக்கிவிட, திரும்பி போக வண்டியை எடுக்க, இவர்கள் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி விட்டு மரத்தின் அருகே வர, 

“ வா தாமர, ஏன் இவ்ளோ டல்லா இருக்குற, கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போ.” என பரமு எழுந்து நின்று வேறு இடம் காட்ட, 

“ அது இல்லண்ணா, தலைவர் கிட்ட கொஞ்சம் பேசணும்.” என சொல்ல,

புலி கிளம்பிடுச்சு போலயே. எப்படி தாக்குமோ, நம்ப சிக்குனா நம்பள சாட்சி ஆகிடுவாங்க, எஸ் ஆகுவோம் என நினைத்தவன்,   

“ நீ பேசு தாமர, ஒரு ஃபோன் கால் வந்துறேன். “ என சொல்லி மொபைல் எடுத்துக்கொண்டு சற்று தள்ளி நடந்துவிட்டான்.

ஆழகன் எதுவும் பேசாது, அசையாது அவளையே பார்க்க, 

“ நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். “

“ என்ன ? “  

“ ஏன் ஃப்ரெண்ட் கலா வீட்டு இடத்துக்கு கேஸ் போட்டுருக்கிங்க ?” சோர்வையும் மீறி ஒரு அழுத்ததுடன் கேள்வி வந்தது.

“ அத உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல. கூலாக பதில் சொன்னான்.

“ ரேஷன் கடைல நாங்க எல்லாம் லைன்க்கு நின்னா கூட, நீங்க யார் யாரையோ வயசானவங்களாம் கூட்டிட்டு வந்து எங்களுக்கு முன்ன வாங்க வைக்கிறிங்க, அது கூட பரவால, எங்க எல்லாத்தையும் விட எல்லா பொருளும் அவங்களுக்கு அதிகமா கொடுக்க வைக்கிறிங்க. சின்ன வயசுகாரவங்க கூட வராங்க அவங்களுக்கும் அதே தான் மூட்ட மூட்டையா கொடுக்குறிங்க. 

நம்ப ஊர் பஸ் ஸ்டாப் கிட்ட இருக்குற ரெண்டு தள்ளு வண்டி கடைல ஒரு கடையை மிரட்டி மூட வச்சுருக்கிங்க.

இதுலாம் என்ன சட்டத்துல இருக்கு ? 

இதுல பதவி ஆசை வேற ” என சொல்லி கிளம்பி விட்டாள்.

அழகன் புருவம் சுருக்கி செல்லும் அவளையே பார்த்திருந்தான். 

 

 

  

  

       

Advertisement