Advertisement

   ஊரில் ஊராட்சி மன்ற தேர்தல் வர, வேலைகள் எல்லாம் ஜரூராய் நடந்துக்கொண்டிருந்தது. பெரிய கட்சிகள் தொடங்கி சுயட்சை கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வமாய் மக்களிடம் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டுக்கு வீடு பரிசுகள், கடைகள் தோறும்  வேலை பார்த்தல், கூட்டங்கள், வீதி உலா, என ஊரே மாறியது போலிருந்தது. 

ஆளும் கட்சி எதிர் கட்சி இன்னும் சிறியது பெரியது என எல்லா கட்சிகளும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தது. அழகனது கட்சி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருந்தது. 

உள்ளூர் விவசாய பொருட்கள் விற்க ஊரின் நுழைவாயிலில் மிக பெரியதாக தனியாக விற்பனை கூடம் அமைத்திருந்தான். பச்சை பசேலென காய்கறிகள், கீரைகள் ஒருபுறம் என்றால், அதிலிருந்து மதிப்புக்கூட்டி தனியாக பொருட்கள் என தனியாக நூறு கணக்கில் இருந்தது. சோப் என்று எடுத்தால் பச்சை பயிறு, பப்பாளி, ஆவாரம் பூ, அரப்பு, கடலை மாவு, காற்றாழை, மஞ்சள் கிழங்கு, தேங்காய் பால், சந்தனம், வெட்டிவேர், நலங்கு மாவு, வேப்பிள்ளை என வித விதமான வகைகள்.

இன்னும் தைல வகைகள், சத்து மாவு, காய்கறி வத்தல், அரைத்துவிட்ட பொடிகள், சிறுதானிய கேக், சிறுதானிய ஐஸ் கிரீம், இன்னும் நிறைய வித விதமாக பொருட்கள் தயாரிக்க அதில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து தேவைப்பட்ட ஊர் மக்களுக்கு பயிற்சி கொடுக்க வைத்து அவர்களை இதெல்லாம் உற்பத்தி செய்ய வைத்துவிட்டான். 

இது மட்டும் போதாதே, விற்பனைக்கு சென்று சேர வேண்டுமே என சமூக வலைதளங்களில் நிறைய பகிர்ந்தான், தெரிந்தவர்களை பகிரவும் வைத்தான். விளைவு சுற்றுவட்டாரா மக்கள் மட்டும் இல்லாமல் மாவட்டம் முழுவதும் வர ஆரம்பித்திருந்தனர். மிக பெரிய சந்தை போல், தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் அளவு நல்ல வியாபாரம் ஆக ஆரம்பித்திருந்தது. ஆன்லைன் ஆர்டர் கிடைப்பது போலவும் செய்திருக்க, சந்தை ஆரம்பம் திருப்திகரமாகவே இருந்தது.

இங்கு வரும் மக்களை வரவேற்க என அழகனும் இவன் கட்சியை  அடையாளப்படுத்த இலவச நீர் மோர் பந்தல், சிற்றுண்டி கூடம், வழிகாட்டும் குழு என அமைத்து இவர்கள் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருந்தான். 

மக்களிடம் சொன்னதில் ஒன்றை செய்து விட்டான். இன்னும் ஒன்றை ஆரம்பித்திருந்தான். மணல் அள்ள தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழுக்கு போட்டு, மணல் அள்ளும் ஆற்றை ஒட்டி தினமும் மக்கள் போராட்டம் செய்யும் அளவு வழிநடத்தியிருந்தான்.      

இவன் போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்க, மக்களை ஒரேதாய் இருக்கச்சொல்லாமல், ஷிஃப்ட் போட்டு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. டே ஷிப்ட் நைட் ஷிப்ட் என எந்நேரமும் போராட்டம் நடக்கும். ஆற்றில் மணல் அள்ளும் ஆட்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காவல்துறை பாதுகாப்புடன் மக்கள் ஒத்துழைப்பும் இருந்ததால் இது சாத்தியமாகிற்று. 

அழகன் இவனது கட்சி ஆட்களையும் மக்களுடன் கலக்க விட்டிருந்தான், ஏதாவது பிரச்சனை கிளம்பிவிட்டால் அதை சரியாக கையாளவேண்டுமே. இவனே களத்தில் எந்நேரமும் இருக்க முடியாதே, அதனால் கட்சி ஆட்களுக்கும் இதில் இருந்தனர். 

மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கவில்லை. வீட்டில் ஒருவர் என கணக்கு வைத்து அவரவருக்கு தோதான நேரத்தில் போராட்டதில் கலந்துகொள்ள, அரசுக்கு தான் தலைவலியாக போய்விட்டது. 

உணவு, தண்ணீர், என வேறு சில கட்சிகள் கொடுக்க முன்வர, மக்கள் தாங்களே பார்த்துக்கொள்வதாய் சொல்லிவிட்டனர். அவர்கள் மனதளவில் தளர்வில்லாமல் இருக்க சின்ன சின்ன கலை நிகழ்ச்சிகள் நாட்டுபுற இசை நிகழ்சிகள் என மக்களே செய்துகொள்ள, போராட்டம் சோர்வடையவில்லை.

ஆனால் இன்னும் நல்ல முடிவு எட்டபடவில்லை, பகல் இரவு என எந்நேரமும் போராட்டம் தொடர, இவனும் அவ்வப்போது மக்களிடம் ஊக்கம் கொடுக்க, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

எல்லாம் சேர்ந்து அழகனையும் அவனது கட்சியையும் அந்த ஊரின் மக்கள் மனதில் இன்னும் நல்ல ஸ்திரமான நம்பிக்கையும் அறுவடை செய்ய, எளிதில் புறந்தள்ள முடியாத தஞ்சையின் இளம் அரசியல் ஆளுமையானன்.

அழகன் அப்படிதான், எதையும் செயலில் காட்டிவிடுவான். இருபத்தியோர் வயதில் தனியாக கட்சி தொடங்க போகிறேன் என நண்பர்களிடம் சொல்ல, எல்லாரும் சிரித்தனர். வீட்டில் பெருவுடையரை தவிர அனைவரும் மிக சாதாரணமாக தான் பார்த்தனர். ஆனால் அவர் தான் அவன் மீது நம்பிக்கை வைத்து ஆரம்பிக்க சொன்னார். 

ஆரம்பத்தில் சிறிதாக வேலைகள் செய்ய ஆரம்பித்தான். ஒவ்வொரு வாரமும் ஊரின் ஒவ்வோர் தெருவாக சென்று தனிப்பட்ட முறையில் குறைகள், பிரச்சனைகள் என கேட்டு தெரிந்து கொண்டு வெறும் பத்து பேருடன் அவனது கட்சி வேலைகளை தொடங்கினான். மெதுவாக மிக மெதுவாகவே வேலைகள் ஆரம்பித்து இண்டு இடுக்கு விடாமல் நிறைவாக குறைகளை தீர்க்க, மெல்ல மக்களிடம் கலக்க ஆரம்பித்தான். கட்சியில் இன்னும் இன்னும் ஆட்கள் சேர்ந்தால் கூட எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை, ஆனால் வேலைகள் அதன் போகில் நகர, மற்ற கட்சியினர், அந்த வேலைகள் எல்லாம் தாங்கள் செய்ததாய் பொய் செய்தி பரப்ப, ஊர் மக்கள் உள்ளுக்குள் கொந்தளிப்பு. 

ஆழகன் கட்சி செய்த வேலைக்கு யாருக்கு பெயர் போய் சேருகிறது என ஊருக்குள்ளே புகைச்சல். அவர்களது ஊர் சுகாதாரம் மட்டுமில்லாமல் ஆங்காங்கே சிறு சிறு வசதிகள் என அவர்கள் ஊரின் நிலைமை நன்றாக  உயர்ந்திருந்தது. பக்கத்து ஊர் ஆட்கள் வந்து பார்வையிடும் அளவு இருந்தது. அதை நான்கு வருடத்தில் சாத்தியமாகியிருந்தான் அழகன். 

அவனது முயச்சியின் பலன் அவனது எல்லையை தாண்டியும் அக்கம் பக்கம் பரவ, இந்த நான்கு ஆண்டுகளில் அவன் அடைந்ததை விட இப்பொழுது அவன் செய்தது அவனை மக்கள் மனதில் அசாத்தியமாக டபுள் சிக்சர் அடிக்க வைத்திருந்தது. 

இது எல்லாம் இப்படியிருக்க, இப்போது தான் முதன் முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டிபோடுகிறான். தேர்தலுக்காக அழகன் கட்சியின் ஆட்களும் களத்தில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். 

ஆனால் இதில் எதிலும் இல்லாமல் இப்போது அழகன் இருப்பது அந்த ஊரில் ஒரு பழைய வீட்டின் முன்பு. அந்த வீட்டின் திண்ணையில் பரமுவுடன் அமர்ந்திருந்தான். அங்கே வயதான பெரியவர்கள் கணவன் மனைவி இருவர் வசித்துவர, பிள்ளைகள் வெளிநாட்டில் கட்டட காண்ட்ராக்ட் வேலையில் இருந்தனர். 

சொந்தங்கள் அருகே இருந்தாலும், அவசர தேவைக்கு இளவட்டங்கள் ஒன்றிருவர் தவிர பெரிதாக யாரும் அப்போது இல்லை. பாதி பேர் வெளிநாட்டில் வெவ்வேறு காண்ட்ராக்ட் வேலை, சிலர் நல்ல உயர் பதவி வேலை, மற்றவர் உள்ளூரில் தோட்டம், சிறு தொழில், இன்னும் சிலர் அரசு வேலை என்றிருக்க, உள்ளூரில் தேர்தல் வேலையில் வெவ்வேறு கட்சிகளுக்காக இளவட்டங்கள் வேலையில் இருந்தனர்.

அந்த தம்பதியரில் கணவனுக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருக்க, நெருங்கிய சொந்தங்கள் சிலர் உடனிருந்தனர், மற்ற சொந்தங்கள் அவர்களை பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். 

“ எப்பா அழகா, நீ உன் ஆளுங்களா இங்க விட்டுட்டு போய் உன் கட்சி வேலைய பார்க்கலாம்ல. நாங்க தான் இத்தன பேர் இருக்கோம். நாங்க பார்த்துக்குறோம். “ என அருகில் அமர்ந்திருந்த பெரியப்பா முறையுள்ள ஒருவர் சொல்ல,

“ இல்ல பெரியப்பா, இருக்கட்டும். ஏதாவது அவசரம்னா அவங்கள கூப்பிட்டுக்கலாம். கட்சி வேல அது பாட்டுக்கு நடக்கும். எல்லாம் சொல்லிட்டு தான் வந்துருக்கோம். “ என தன்மையாக சொல்லி முடித்துக்கொண்டான். ஒருவேளை ஏதாவது பாதகமாக நடந்துவிட்டால், இறுதி காரியங்கள் பார்க்க தேவையான ஆள் உதவி இருந்தாலும் சிலவற்றிருக்கு பண உதவி தேவைபடலாம். அங்கே அவர்கள் உரிமையாய் கேட்க ஏதாவது தேவையாய் சொல்ல ஒரு ஆள் வேண்டும். அதனால் தானே இருந்துக்கொள்ளலாம் என அவனே இருந்துகொண்டான். 

சிறு கவலையுடன் ஒரு முறுவல் பூத்தது அந்த பெரியப்பாவிடம்,

“ எங்க அப்பா காலத்துல எல்லாம் இப்படி இல்ல. இளவட்டங்க சில பேர் வெளிய வேலைக்கு போன கூட, நிறைய பேர் இங்க தான் இருப்பாங்க, இப்படி உடம்பு முடியாதவங்க வீட்ல ஏதாவது அவசரம்னா, முறையா அவங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் தான அவங்கவங்க ஒவ்வொரு வேலையா எடுத்துப்போட்டு செய்வாங்க. கை வேலைக்கு காசு பணம் எல்லாம் அங்க தேவை இல்ல. எல்லாம் தான நடக்கும். ஆனா இப்போ அப்படியா. என்னத்த சொல்ல. “ என அழகனிடம் அவர் வேதனையை பகிர்ந்தவர், எழுந்து வேறு ஒரு உறவினரிடம் பேச சென்றார். 

“ அப்போ லோக்கல்ல மேன் பவர் இருந்த்துச்சு, இப்போ அப்படியா. “ என பரமு சொல்ல, அழகன் அவனை முறைத்தான்.

Advertisement