Advertisement

தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக அலைந்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் வசீகரன். அவனது முகமே போன காரியம் நடக்கவில்லை என்பதைக் கூறியது.
ஹாலில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சபர்மதியின் முகம் அழுததில் வீங்கியிருந்தது. அவருக்கு மனதுக்குள் பயமாகத்தான் இருந்தது. அத்தனை பணத்தை மகனால் புரட்ட முடியுமா என்று. சோர்வுடன் கட்டிலில் படுத்திருக்கும் மகளைக் காணக் காண அவரது கண்கள் நிற்காமல் ஊற்றெடுத்தது.
“கண்ணா….. சாப்பிட எடுத்து வைக்கட்டுமா….” என்ற அன்னையின் கலங்கிய முகம் அவனுக்கு சொல்லவொணா துயரத்தைக் கொடுத்தது.
எழுந்து அவர் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டவன், “ம்ம்… நீங்க சாப்டீங்களாம்மா…. வளர் சாப்பிட்டாளா….” என்று அவள் படுத்திருந்த அறைக்குள் கண்ணை ஓட்டினான்.
“ம்ம்…. அவளுக்கு தான் சாப்பிட்டு மாத்திரை போடணுமே… சாப்பிட்டோம்…. நீ வந்து சாப்பிடு…” என்றார்.
அவன் சாப்பிட அமர்ந்ததும் அமைதியாய் அவனுக்கு பரிமாறத் தொடங்கினார்.
சாப்பாட்டையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவன் அதைப் பிசைந்ததும் அவன் அருகில் மெல்ல வந்து நின்றாள் வளர்மதி. கடந்த பத்து நாட்களில் உருவமே மாறிப் போயிருந்தாள்.
“அண்ணா….. எனக்கு….” என்று வாயைத் திறந்தவளைக் கண்டு அவன் கண்கள் நிறைந்தது. அவள் முன்னால் அதைக் காட்டிக் கொள்ளாமல் வேகமாய் ஒரு உருளையை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவள் அவனை நோக்கிப் புன்னகைக்க அவளது தலையில் அன்போடு மெல்ல இடது கையால் கோதி விட்டான். “இந்தாடா….. இன்னொரு வாய் வாங்கிக்கோ….” என்று அவன் மீண்டும் மீண்டும் கொடுக்க அவளும் வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் செய்வதைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார் சபர்மதி.
“போதும்…. அண்ணா…. நீ சாப்பிடு….” என்று வளர்மதி கூறியதும் அவன் சாப்பிடத் தொடங்கினான். வளர்மதியின் உள்மனதோ, “இன்னும் எத்தனை நாளைக்கு நான் இப்படி அண்ணனிடம் சாப்பிடுவேனோ….” என்று கூறிக் கொண்டிருந்தது.
இரவு உணவு முடிந்து வாசலில் இருந்த நாற்காலியில் ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தார் ஏகாம்பரம். அடுக்களையில் சுபாஷிணி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க கணவனிடம் வந்து அமர்ந்தார் ஜானகி.
“என்னங்க… பனியில் வந்து உக்கார்ந்து ரொம்ப நேரமா ஏதோ யோசிச்சுகிட்டே இருக்கீங்க…. என்னண்ணு சொல்லுங்க….” என்றார் ஆதரவாக.
“அது…. நம்ம வசீகரன் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன் ஜானு…. நல்ல பிள்ளை… ராஜா ராம் சாரைப் போலவே நல்ல குடும்பம்…. அவுங்களுக்கு ஏன் இப்படி மாத்தி மாத்தி ஒவ்வொரு பிரச்சனையா வரணும்… தங்கைக்கு ஆப்பரேஷன் பண்ண பணத்துக்கு வேண்டி அந்தப் பிள்ளை படுற கஷ்டத்தைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு….” என்று வருந்தினார்.
“ம்ம்…. சரிதாங்க….. கடவுள் எப்பவும் நல்லவங்களை தானே அதிகமா சோதிக்குறார்…. ஆனா கண்டிப்பா கைவிட மாட்டார்…. நீங்க கவலைப் படாதீங்க….” என்றார்.
“ம்ம்ம்… அதும் சரிதான்…. அந்தக் குடும்பத்தை ரொம்பத்தான் சோதிக்குறார்….” என்றார் ஏகாம்பரம்.
சட்டென்று ஜானகியின் மனதில் ஏதோ எண்ணம் தோன்ற நெற்றியை சுருக்கி யோசித்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஜானு…. நீ என்ன யோசிச்சுட்டு இருக்கே…..” என்றார் ஏகாம்பரம் மனைவியிடம்.
“அது வந்து…. எனக்கொரு யோசனை தோணுது…. இந்த சமயத்துல இதைப் பேசுறது சரியா தப்பான்னு தெரியலை….” என்றார் தயக்கத்துடன்.
“என்ன யோசனைம்மா…. சொல்லு…. சரியா வரும்னா யோசிக்கலாம்….” என்றார்.
“நம்ம பொண்ணுக்கு இப்போ மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிட்டோம்….  அந்த மாப்பிள்ளையா ஏன் நம்ம வசீகரன் வரக் கூடாது…. சுபாக்கும் அவர் மேல ஒரு விருப்பம் இருக்குற போல எனக்குத் தோணுது….”
“அவர் தங்கைக்கு இப்படி ஆனதில் இருந்து அம்மனுக்கு நேர்ந்துகிட்டு விரதம் இருக்குறா…. அவர்கிட்டே அக்கறையா நடந்துக்குறா… அதான்….” என்று நிறுத்தியவர்,
“அவருக்கு நம்ம பொண்ணை சம்மந்தம் பேசி முடிவு பண்ணிட்டோம்னா அந்தப் பணத்தையும் நகையையும் அவருக்கு கொடுத்து ஆப்பரேஷனுக்கு உதவலாம்…. அதான் யோசிச்சேன்….” என்றார்.
“ம்ம்… நீ சொல்லுறதும் நல்ல யோசனையா தான் இருக்கு…. தங்கமான பிள்ளை… அன்பான குடும்பம்…. இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைக்கணும் தான்…. இருந்தாலும்…. இந்த நேரத்துல நகை, பணத்தைக் கொடுக்கறேன்…. என் மகளைக் கட்டிக்குறியான்னு எப்படிக் கேக்கறது…. அது தப்பில்லையா….” என்றவர் யோசித்தார்.
“சரி…. பார்ப்போம்…. அங்கே போகும் போது இந்த விஷயத்தை மெதுவா அவர் அம்மாக்கிட்டே சொல்லிப் பார்க்கிறேன்….” என்றவர்,
“சரி நேரமாச்சு…. உள்ளே போகலாம்….” என்றார். .
அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. “மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை ஆயிற்று… ஆப்பரேஷனுக்கு இதில் பத்தாத பணத்தை மட்டும் ஏற்பாடு செய்துவிட்டால் போதும்…” என்று நினைத்ததும் மனதில் சற்று சமாதானம் தோன்றவே சந்தோஷத்தோடு எழுந்து உள்ளே சென்றார்.
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த ஹாஸினி உறக்கம் வராமல் எழுந்து அமர்ந்தாள். அவளது மனது ஏனோ ஒரு அலைப்புறுதலில் தவித்துக் கொண்டிருந்தது.
உறங்கப் பிடிக்காமல் எழுந்தவள் கீழே இறங்கி வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
சில்லென்று முகத்தில் அறைந்த காற்று மனதுக்கு இதமாக இருக்க உடலை ஊடுருவிய மெல்லிய காற்றில் மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
ரோஜாப்பூக்களின் வாசம் நாசியை இதமாய்த் தாக்க பவள மல்லிப் பூக்களும் மற்ற பல பூக்களின் வாசனையும் சேர்ந்து தேகத்தை தழுவி ஒரு சுகத்தைக் கொடுத்தன. சிறு சிலிர்ப்புடன் தோட்டத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.
மாடியில் தன் அறையில் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ராஜேஸ்வரி, அதை மூடிவைத்துவிட்டு லைட்டை அணைப்பதற்காய் எழுந்தார்.
கண்ணாடி ஜன்னலின் வழியாக கீழே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த மகளின் உருவம் லைட் வெளிச்சத்தில் தெரிய புருவத்தை யோசனையாய் சுளித்தார்.
சில நாட்களாக அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஹாஸினியிடம் ஏதோ ஒரு தவிப்பு இருந்தது. வசீகரனை “வசீ…..” என்று அவள் குறிப்பிட்ட மறு நாளிலேயே அவனைப் பற்றி அவர் விசாரித்து இருந்தார்.
நல்ல விதமான அபிப்ராயமே கிடைக்க அவனைப் பற்றி மகள் ஏதாவது கூறுவாளா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹாஸினி உறங்காமல் இரவில் இப்படி நடை பயின்று கொண்டிருப்பது அவர் மனதை வருத்த ஒரு சால்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு அவரும் தோட்டத்துக்கு நடந்தார்.
“ஹாஸினி…..” பின்னிலிருந்து வந்த அன்னையின் குரலைக் கேட்டுத் திரும்பினாள்.
“நீங்க எதுக்கு மம்மி இந்தக் குளிரில் இங்கே வந்தீங்க….” அவளது குரலில் இருந்த அக்கறை அவரை நெகிழ வைத்தது.
அவளை ஆழ்ந்து நோக்கியவர், “நீ எதுக்கும்மா…. இந்த ராத்திரியில தோட்டத்துல நடந்துகிட்டு இருக்கே…. தூக்கம் வரலியா…. உன் மனசுக்குள்ளே என்ன போட்டு குழப்பிகிட்டு இருக்கே….” என்றார்.
“அப்படில்லாம் ஒண்ணும் இல்லைம்மா….. சும்மா தான்…. தூக்கம் வரலை… அப்படியே கொஞ்சம் நடக்கலாம்னு நினைச்சேன்…..” என்றாள் மகள்.
“ம்ம்…. அந்தப் பையனைப் பத்தி நீ ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சேன்…. ஆனால் நீ இதுவரை எதுவும் சொல்லவே இல்லை…. நானே அவரைப் பத்தி விசாரிச்சேன்…. பணம் இல்லைங்கறதைத் தவிர வேறொண்ணும் எனக்கு குறைவா தெரியலை…. நம்மகிட்டே இல்லாத பணமா….” என்று பேசிக் கொண்டே போனவரைப் புரியாமல் பார்த்தாள் ஹாஸினி.
“நீங்க…. நீங்க என்ன சொல்லறீங்க மா….” எனக்கு ஒண்ணும் புரியலையே…. என்றவளை நோக்கி சிரித்தவர்,
“ம்ம்…. அம்மாகிட்டே நீ சொல்லலைன்னா எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டியா…. உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும்… உனக்கு அந்தப் பையன் மேல ஒரு விருப்பம் இருக்குன்னும் தெரியும்…. தைரியமா கூட்டிகிட்டு வா…. அவர்கிட்டே நான் பேசிக்கிறேன்….” என்றார்.
நிஜமாலுமே ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்.
“மம்மி…. நீங்க என்ன சொல்லறீங்க…. யாரைப் பத்தி பேசறீங்க…. என்ன விசாரிச்சீங்க… எனக்கு ஒண்ணுமே புரியலை….” என்றாள் குழப்பத்துடன்.
“ம்ம்… உனக்கு நான் என்ன சொல்லறேன்னு நிஜமாலுமே புரியலையா….. இதை நான் நம்பணுமா….” என்று சிரித்தவர்,
“எப்படியோ உன் மனசுக்கு ஒருத்தரைப் புடிச்சு நீ கல்யாணத்துக்கு ரெடியானதே எனக்கு சந்தோசம் தான்…. மாப்பிள்ளையை என்னை வந்து பார்க்க சொல்லு…. அவரைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டாலும் நேர்ல தான் பார்க்கணும்னு முடிவா இருக்கேன்….”
“அவர் தங்கைக்கு ஆப்பரேஷன் முடிஞ்ச கையோட கல்யாணத்தை முடிவு பண்ணிடலாம்….. நல்ல வேளை… யாரையும் பிடிக்கலைன்னு மறுபடியும் வந்து நிப்பியோன்னு நினைச்சேன்…”
“அப்படி வந்து நின்னுருந்தா இந்த சொத்து எதுவுமே உனக்குக் கிடைச்சிருக்காது…. உன் கல்யாணத்துக்கு அப்புறம் தான் இது உன் பேருக்கு மாத்தி எழுதலாம்னு உன் அப்பா உயில்ல எழுதி வச்சிட்டு போயிருக்காரே…. அப்புறம் என்ன பண்ணுறது…. ” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
“சரி… சரி… ரொம்ப நேரம் ஆச்சு…. பனியில் நின்னு உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது…. எதையும் யோசிக்காம போயி நிம்மதியா படுத்து தூங்கு…. எனக்கும் தூக்கம் வருது…. வா… வா….” என்றவர் முன்னில் நடக்க அவள் அப்படியே சில நிமிடம் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.
கால்கள் அனிச்சையாக அவரைப் பின் தொடர மண்டைக்குள் அவர் சொன்ன வார்த்தைகளே மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று இரவு முழுதும் அதையே பலவிதத்தில் யோசித்துக் கொண்டிருந்தவள் மனதில் ஒரு யோசனை தோன்றியது.
அதை செயல்படுத்த நினைத்ததும் மனதில் ஒரு உற்சாகம் பரவ காலையில் வசீகரனை சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். வெகு நேரம் யோசனையோடு விழித்திருந்தவள், வசீகரனின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கதிரவன் கிழக்கில் உதிக்கத் தொடங்குவதற்கு முன் உறங்கிப் போனாள்.
செவ்வானத்தில் மலர்ந்திட்ட
கதிரவனைப் போல்
என் வானில் மலர்ந்திட்ட
செவ்வந்தியே……
என் அதிகாலையை
சுப வேளையாய் மாற்றவே
உன் குறுஞ்செய்தியும்
எனைத் தேடி வந்ததோ….
பனியெல்லாம் சூழ்ந்திருக்க
பறவையினம் சிறகடிக்க
பால்நிலவு சிவந்தது போல்
பகலவனும் உதித்து வந்தான்….
இதழ் வெடித்த மலரெல்லாம்
வீசுகின்ற பனியினிலே
இதழசைத்து மகிழ்ந்திருக்க
இனிதாகக் கேட்டது உன்
குறுஞ்செய்திக்கான இசை….
முன் அந்திச் சாரலிலே
நனைந்திருந்த இலைகளிலே
மிச்சமிருக்கும் பனித்துளி போல்
உனக்குள்ளும் ஒட்டிக்
கொண்டிருக்கிறதோ
என் மீதான காதல் துளிகள்….

Advertisement