Advertisement

அத்தியாயம் – 7
டாக்டரைக் கண்டுவிட்டு சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தனர் வசீகரனும் நகுலனும். அவர்களிடம் வந்த ஹாஸினி,
“டாக்டர் என்ன சொல்லறாங்க…. வசீகரன்….” என்றாள்.
அவளை ஏறிட்டவனின் விழிகள் கண்ணீரில் மிதக்க ஹாஸினியின் மனது துடித்தது.
“என்னப்பா…. டாக்டர் என்ன சொன்னாங்க….” என்றார் ஏகாம்பரம் நகுலனிடம்.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன் நிமிர்ந்தான்.
“சார்… வளரோட தலையில் ஒரு கட்டி இருக்காம்…. அது இத்தனை நாள் கவனிக்காம விட்டதுல வளர்ந்துட்டே இருந்திருக்கு…. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே நீக்கலைன்னா அது பெருசாகி மூளையோட டச் ஆகிடும்…. அதுக்குள்ளே ஆப்பரேஷன் பண்ணி ஆகணும்…. இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாகிடும்னு சொன்னாங்க….” என்றான்.
“ஓ… காட்… எப்படி வசீகரன்…. இத்தனை நாள் தெரியாம இருந்துச்சு…. கவனம் இல்லாம இருந்துட்டிங்களா….” என்றாள் ஹாஸினி உண்மையான அக்கறையுடன்.
மற்றவர்களும் வசீகரனை நோக்க அவன் சொல்லத் தொடங்கினான்.
“அப்பா இறந்த சமயத்துல இருந்து அப்பப்போ என் தங்கைக்கு தலை வலி வந்துட்டு இருக்கும்…. அவளும் மாத்திரை போட்டுக்குவா… இல்லேன்னா தைலம் தடவிக்குவா…. தலைவலிக்காக கண் டாக்டரைப் பார்த்து கண்ணாடி போட வைச்சோம்… அதுக்கப்புறம் வலி கொஞ்சம் குறைவிருக்குன்னு சொன்னா….”
“நாங்க வேதனைப் படுவோம்னு வலிச்சதை சொல்லாம மறைச்சாளா…. இல்லை… சாதாரணமாய் எடுத்துகிட்டாளான்னு தெரியலை…. அம்மாவும், அப்பா போன துக்கத்துல எப்பவும் வருத்தத்தோட இருப்பாங்க…. அதனால சொல்லாம இருந்திருக்கலாம்….” என்றவன் நிறுத்தினான்.
“ம்ம்… அப்படி தான் இருக்கும்…. வசீகரன்…. காலேஜ்ல கூட வளர் அப்பப்போ தலை வலின்னு சொல்லி ரெஸ்ட் எடுத்திட்டிருப்பா….” என்றான் நகுலன்.
“ம்ம்…..” என்று பெருமூச்சு விட்ட ஏகாம்பரம், “இந்த விபத்து நடந்ததும் ஒரு விதத்தில் நல்லதா போயிருச்சு…. இப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிந்தது…. சீக்கிரம் ஆப்பரேஷன் செய்ய ஏற்பாடு பண்ணிடலாமே….” என்றார்.
“இந்த ஆஸ்பத்திரியில் அதுக்கான வசதி இல்லை சார்… கோவையில் ஒரு ஹாஸ்பிடலுக்கு கொண்டு போக சொல்லிட்டாங்க… இப்போதைக்கு ஆக்சிடண்ட் ஆன காயத்துக்கு மட்டும் சிகிச்சை கொடுத்திருக்காங்க…. ஒரு வாரத்துல இங்கிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க….”
“ஆப்பரேஷன்க்கு தான் லட்சக் கணக்கில் செலவாகும்னு சொன்னாங்க….” என்று நிறுத்தினான் நகுலன்.
அவர்கள் வசீகரனின் அன்னை படுத்திருந்த அறை வாயிலின் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்க அப்போது தான் கண் விழித்த சபர்மதியின் காதில் நகுலன் சொல்லிக் கொண்டிருந்தது விழுந்து விட்டது.
“சட்டென்று மகளின் நிலை மனதுக்குள் மின்னலடிக்க மீண்டும் அழத் தொடங்கினார். “அய்யோ…. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு… யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத எங்களுக்கு எதுக்கு இந்த சோதனை… கடவுளே… உனக்குக் கண்ணில்லையா…. வாழ வேண்டிய வயசுல என் பொண்ணுக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையா….” என்று அழத் தொடங்கினார்.
அவரை சமாதானப் படுத்த கற்பகம் முயன்றாலும் முடியவில்லை…. அவரது அழுகையைக் கேட்டு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் உள்ளே ஓடி வந்தனர்.
“அம்மா…. என்னம்மா இது…. நீங்க இப்படி அழுது ஆர்பாட்டம் பண்ணிட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன்….” என்ற வசீகரன் அன்னையின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான்.
“கண்ணா….. காலைல அவ்வளவு சந்தோஷமா கிளம்பிப் போனாளே…. ஒரே நாளுக்குள்ள அவளோட நிலமை இப்படி ஆகிருச்சே…. எனக்கு பயமாருக்கு கண்ணா…. அப்பாவைப் போல இவளும் நம்மை விட்டுப் போயிடக் கூடாது…. ஏதாவது பண்ணுடா….” என்றவர் கதறுவதைக் கண்டு அங்கே உள்ள அனைவரின் கண்களும் நிறைந்தது.
“இங்க பாருங்க மதியம்மா…. அப்படில்லாம் நம்ம பொண்ணை விட்டிருவோமா… நீங்க தேவை இல்லாம எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க…. நாங்கல்லாம் இருக்கோம்ல… பார்த்துக்கலாம்…. நீங்க தைரியமா இருங்க…. அது போதும்….” என்றார் நகுலனின் அன்னை கற்பகம்.
“எப்படிம்மா…. நான் தைரியமா இருக்கறது….. என் பொண்ணு உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்களே…. ஆப்பரேஷன்னு வரும்போது எத்தனை செலவாகுமோ….. நாங்க என்ன பண்ணுவோம்….. நினைச்சாலே எனக்கு பதறுதே…..” என்றவரின் கண்ணீர் கண்ணில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
“அத்தை…. அப்படியெல்லாம் என் வளரை நம்மை விட்டுப் போக விட மாட்டேன்…. சரி பண்ணிடலாம்….. நீங்க தைரியமா இருங்க….” என்று உணர்ச்சி வேகத்தில் நகுலனின் வாயில் இருந்து வார்த்தைகள் வர ஒரு நிமிடம் அனைவரும் மௌனமாக அவனையே பார்த்ததும்தான் நகுலனுக்கு தான் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.
அவனது அன்னை கற்பகம் மகனின் தோளைத் தொட்டு, “நகுலா…. என்ன நடந்ததுன்னு சொல்லிடுப்பா….” என்றதும் ஒரு நிமிடம் கண்ணை மூடி நிதானித்து விட்டு சொல்லத் தொடங்கினான்.
“அத்தை…. நாங்க ரெண்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்…. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வளர் அவளோட விருப்பத்தை என்கிட்டே சொன்னா…. படிப்பு முடியட்டும்னு காத்திருந்த நான் இன்னைக்கு தான் அவகிட்டே சம்மதம் சொன்னேன்…. அ… அதுக்குள்ள…. இப்படி ஆகிருச்சு….” என்று அவனும் கண் கலங்கினான்.
நகுலன் அன்னையிடம் விவரத்தை சொல்லி தான் அவரை ஹாஸ்பிடலுக்கு வரவழைத்திருந்தான். எதையுமே சரியாக செய்யும் மகனின் இந்த செயலும் அவருக்கு சரியாகவே தோன்ற அவரும் மருமகளுக்கு உதவ ஓடி வந்துவிட்டார்.
“என் மகன் விஷயத்தை சொன்னதும் கலங்கிப் போயிட்டேன்மா…. எத்தனை ஆசையோட இருந்திருப்பா என் மருமக…. அதெல்லாம் நிறைவேத்திக்க வேண்டியாவது அவளுக்கு சரியாகணும்….. சரியாகும்…. அதான் நானும் உதவி செய்ய ஓடி வந்துட்டேன்….”  என்று தன் சம்மதத்தை மறைமுகமாய் தெரிவித்தார்.
அதைக் கேட்டதும் புதிய சொந்தங்களின் அன்பில் நெகிழ்ந்த சபர்மதி அவரது கையை நன்றியுடன் பிடித்துக் கொண்டார். வசீகரனின் முகத்தைப் பார்க்க அவனது முகத்திலும் நகுலனைப் பற்றிய மெச்சுதல் தெரிந்தது. 
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹாஸினியின் அலைபேசி அழைக்க அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் அவள். பேசி முடித்துவிட்டு உள்ளே வந்தவள்,
“ஆண்ட்டி…. நீங்க பயப்படாம தைரியமா இருங்க…. ஆப்பரேஷன் பண்ணா சரியாகுற விஷயத்துக்கு இத்தனை கவலை எதுக்கு…. சரி பண்ணிடலாம்…. நம்பிக்கை தான் ரொம்ப முக்கியம்… அப்ப தான் எதையும் சரியா செய்ய முடியும்… நீங்க ரெஸ்ட் எடுங்க… ஒரு அவசரமான வேலை…. நாங்க கிளம்புறோம்…..” என்றவள், “வசீகரன்… ஒரு நிமிஷம் வாங்க….” என்றாள்.
படபடவென்று நம்பிக்கையோடு அழுத்தமாய் பேசிய அந்த காக்கி உடைப் பெண்ணை அதிசயமாய்ப் பார்த்தார் சபர்மதி.
அவளது நிமிர்வும் பேசிய தோரணையும் முக பாவமும் ஒரு நிமிடம் அவரது வேதனையை மறந்து அவளை கவனிக்க வைத்தது. அவள் பேசிய வார்த்தைகள் ஒரு அமைதியைத் தந்தது.
ஹாஸினியும் ஏகாம்பரமும் விடை பெற்று அறைக்கு வெளியே நடக்க வசீகரனும் அவர்களுடன் வந்தான்.
“வசீகரன்…. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க…. ரெண்டு நாள் கழிச்சு ஸ்டேஷன் வந்தா போதும்…. இதை வச்சுக்கோங்க…” என்றவள் பணத்தை அவனிடம் நீட்டினாள்.
“அ… அது வந்து…” என்று அவன் வாங்குவதற்கு தயங்க, “பிடிங்க…. தங்கச்சியை பார்த்துக்கோங்க…” என்றவள் அவன் கையில் பணத்தை திணித்தாள்.
“நாங்க வரோம்… வசீகரன்… கோவை ஹாஸ்பிடலில் ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க…. நான் பண்ணறேன்…” என்றவள் வெளியே நடந்தாள்.
வசீகரனிடம் வந்த ஏகாம்பரம், “தங்கச்சியைப் பார்த்துக்கோப்பா… ஆப்பரேஷனுக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுற வழியைப் பாருங்க…. என்னால முடிஞ்ச உதவியை நானும் பண்ணறேன்….” என்றவர் அவனிடம் விடை பெற்று ஹாஸினியின் பின்னால் ஓடினார்.
வண்டியை எடுத்தவள், “சார்…. அந்த சிவா கேஸ்ல ஒரு பையன் போட்டோவை பிரின்ட் போட்டோமே…. அந்தப் படத்துல இருக்குறது போல ஒருத்தன் சேலம் மார்க்கட்ல வட்டிக்கு குடுத்திட்டு இருக்கானாம்….. பணம் கொடுக்க லேட் ஆனா வட்டிக்கு வட்டி போட்டு வசூல் பண்ணி ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கானாம்…. இவனுக்கும் அவனுக்கும் கண்டிப்பா சம்மந்தம் இருக்கலாம்னு சேலம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்திருக்கு…….” என்றாள். 
“ஓ… சரி மேடம்… இப்போ நாம அங்கே தான் கிளம்புறோமா…. சேலம் ஸ்டேசனுக்கு நாம வர்ரதா சொல்லிட்டீங்களா மேடம்…” என்றார் ஏகாம்பரம்.
“ம்ம்…. அந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் தான் பேசினார்…. அவரே விசாரிச்சு சொல்லுறதா இருந்தாலும் சொல்லறேன்னார்…. இருந்தாலும் நாம நேர்லயே போயிட்டு வந்திடலாம்…” என்றவள் பிறகு சாலையில் கவனமானாள்.
நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருக்க வளர்மதி ஹாஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பி இருந்தாள். தலையில் இப்போதும் சின்ன கட்டு இருந்தது. கை கால்களில் மருந்து மட்டும் போட்டுக் கொண்டிருந்தாள்.
நகுலனைப் பற்றிய விஷயம் வீட்டுக்கும் தெரிந்து விட்டதால் அவனும் கற்பகமும் அவளைப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லுவர்.
வசீகரன் தான் வளர்மதியின் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருந்தான். கோவையில் வளர்மதியைப் பரிசோதித்துவிட்டு ஆப்பரேஷனுக்கு ஏழு லட்ச ரூபாய் ஆகுமென்றும் ஹாஸ்பிடலில் பத்து நாட்கள் ICU வில் இருக்கவேண்டி வருமென்றும் கூறி தற்காலிகமாய் மருந்து மாத்திரை கொடுத்திருந்தனர். 
ஆப்பரேஷன், அறை வாடகை, மருந்து செலவு எல்லாவற்றிற்கும் குறைந்தது பத்து லட்சம் ஆவது வேண்டி வரும் என்று தோன்றியது.
வசீகரனின் தந்தை நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற சொத்தை மட்டுமே அவர்களுக்காக சேர்த்து வைத்திருந்தார். இருப்பதும் வாடகை வீடு… மகளுக்காக சில நகைகள் வாங்கியது மட்டுமே அவரது சம்பாத்தியமாக இருந்தது.  அவர் இறந்த பிறகு கிடைத்த பணத்திலும் பெரும் பகுதி வளர்மதியின் படிப்புக்கும் குடும்பதுக்குமே செலவாகி இருந்தது.

Advertisement