Advertisement

“மதி… அண்ணன் வந்திடுவான்… நீ போயி படும்மா… காலைல நேரத்துல எழுந்திருக்கணும்… நாளைக்கு கடைசி பரீட்சை தானே… முடிஞ்சு வந்து உன் அண்ணனோட அரட்டை அடிக்கலாம்… இப்படி உக்கார்ந்துட்டு இருந்தா காலைல படிக்க முடியுமா….” என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் சபர்மதி.
“அண்ணன் வந்திடறேன்னு சொல்லுச்சு… இன்னும் காணோமே அம்மா….” போனுக்கு கூப்பிட்டாலும் நாட் ரீச்சபிள் வருது…” என்றாள் வருத்ததுடன்.
“ம்ம்… எப்படியும் நாளை உன் பிறந்த நாளுக்கு வந்திருவான்…… நீ போயி படு…..” என்றார் அவர்.
மனசில்லாமலே தன் அறை நோக்கி நகர்ந்தாள் வளர்மதி. அவள் சென்றதும் மகாபாரதம் புத்தகத்தை கையில் எடுத்தவர் சோபாவில் வந்து அமர்ந்தார். படித்து முடித்த அடையாளமாய் மடக்க வைத்திருந்த பக்கத்தைத் திறந்தவர் குந்திக்கு கர்ணன் தன் மகன் என்பதைப் பற்றி அறிந்த பின் உள்ள மனநிலையைப் படிக்கத் தொடங்கினார்.
மெதுவாய் குந்தியின் மனதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போனவரை சட்டென்று ஒலித்த அழைப்பு மணி நினைவுக்கு கொண்டு வந்தது.
எழுந்து ஆவலுடன் கதவைத் திறந்தவரின் முன்பு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் வசீகரன்.
“கண்ணா… வந்துட்டியா…. எப்படிப்பா இருக்கே…” என்றவரின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டவன், “நான் நல்லாருக்கேன்ம்மா…. நீங்க எப்படி இருக்கீங்க…” என்றான்.
“எனக்கு என்னப்பா… உன்னைப் பார்க்காம தான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… இப்படி இளைச்சுப் போயிட்டியே கண்ணா…” என்றவர் அவன் முகத்தை அன்போடு தடவ அன்னையின் அன்பில் அவன் மனம் நெகிழ்ந்தது.
“போயி பிரெஷ் ஆயிட்டு வாப்பா… சாப்பிட எடுத்து வைக்குறேன்…” என்றார்.
“ம்… மதி எங்கேம்மா…” தங்கையைத் தேடினான் வசீகரன்.
“ரொம்ப நேரமா உனக்காக வாசலையே பார்த்திட்டு உக்கார்ந்திருந்தா… நான் தான் போயி தூங்க சொல்லி அனுப்பி வச்சேன்… சாப்பிட எடுத்து வைக்கறேன்…. சீக்கிரம் வாப்பா…” என்றவர் அடுக்களைக்குள் நுழைய வசீகரன் அவனது அறைக்குள் நுழைந்தான்.
அவசரமாய் ஒரு குளியலைப் போட்டு ஹாலுக்கு வர ஹாட் பாக்ஸில் சூடான சப்பாத்தியும் குருமாவும் அவனுக்குக் காத்திருந்தன. வேகமாய் சாப்பிட்டு எழுந்தவன் தன் அறைக்கு சென்று ஒரு பெட்டியை எடுத்து வந்தான். தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.
போர்வைக்குள் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தவளை “மதி… மதி…” என மெல்ல அழைத்தான்.
அந்தக் குரலைக் கேட்டு சட்டென்று எழுந்து அமர்ந்தாள் அவள். அறை முழுவதும் இருட்டில் இருக்க எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் ஒளி கூட இல்லாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
அப்போது தீப்பெட்டி உரசும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்க்க மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டிருந்தான் வசீகரன். அவன் அருகே சபர்மதியும் இருந்தார்.
“இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மதிம்மா….” அவள் கை பற்றிக் குலுக்கி வாழ்த்துக் கூறியவன் கண்களை விரித்து வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி “எழுந்து வந்து கேக்கை வெட்டு….” என்றான் சிரிப்புடன்.
ஒரு நிமிடம் தூக்கம் தெளியாமல் அமர்ந்திருந்தவள் சட்டென்று எல்லாம் தலையில் உரைக்க “அண்ணா…. வந்துட்டியா….” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ம்ம்… வா… வந்து கேக் வெட்டு…..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு முன்னில் இருந்த டீப்பாய்க்கு அழைத்துச் சென்றான்.
கேக்கின் நடுவே இருந்த மெழுகுவர்த்தியை உயிரூட்டியவன் தங்கையின் கையில் பிளாஸ்டிக் கத்தியைக் கொடுத்தான். எல்லாவற்றையும் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சபர்மதி.
அங்கிருந்த கேக்கைப் பார்த்ததும் வளர்மதியின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன. அவளுக்கு மிகவும் பிடித்த பிளேக் பாரஸ்ட் கேக்…. அவள் கேக்கை வெட்டவும் வாழ்த்துக் கூறிய வசீகரனுக்கு கொடுக்கப் போனவள் சட்டென்று தன் வாயிலேயே போட்டுக் கொண்டாள். அதைக் கண்டு சிரித்தவன் சிறு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
அன்னைக்கும் கேக்கினை ஊட்டிவிட அவரும் வாழ்த்தினார். லைட்டின் சுவிட்சைத் தட்டினான் வசீகரன். அறை முழுவதும் பிரகாசமானது. அவள் கையில் பிறந்த நாள் பரிசாக ஒரு பெட்டியைக் கொடுக்க அதை திறந்தவள் முகம் மலர்ந்தது.
பெட்டிக்குள் இருந்த அழகான சுரிதார் அவள் புன்னகையை மேலும் பெரிதாக்கியது.
“அண்ணா… சூப்பர் அண்ணா… எனக்கு ரொம்பப் பிடிச்ச கலர்….” எனத் துள்ளிக் குதித்தாள்.
“ம்ம்….. உனக்குப் பிடிச்சிருந்தா சந்தோசம் டா….” என்றவன், “சரி நீ தூங்கு… நாளைக்கு எக்ஸாம் இருக்கு… சீக்கிரம் எழுந்திருக்கணும்ல…” என்று கூறிவிட்டு ஹாலுக்கு சென்றான்.
சபர்மதியிடம் அவள் அந்த டிரஸ்ஸைக் காட்ட அவரும் “ரொம்ப அழகா இருக்கும்மா… சரி… தூங்கு… காலையில் பார்க்கலாம்…” என்று சொல்லி வெளியே சென்றார்.
அடுத்த நாள் காலையில் நேரமே எழுந்து படித்துவிட்டு கோவிலுக்கு சென்று கடவுளிடம் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு கிளம்பியவள் கல்லூரிக்குள் உற்சாகத்துடன் நுழைந்தாள்.
அவளை எதிர்கொண்டாள் தோழி திவ்யா.
“ஹேய்… பர்த்டே பேபி…. ஹேப்பி பர்த்டே செல்லம்…. புது டிரஸ்ல கலக்குறே…. அண்ணன் கிப்ட்டா….” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ம்ம்… அண்ணா கிப்ட் தான்…. வா…. எக்ஸாம் கிளாஸ்க்கு போவோம்….” என்று நடந்தாள்.
“ம்ம்…. இப்போ ஓகே… பரீட்சை முடிஞ்சு வந்ததும் எங்காவது சொல்லாம கொள்ளாம நழுவினே…. அப்போ இருக்கு உனக்கு… இன்னைக்கு ஒழுங்கா ட்ரீட் குடுத்துடு….” என்றாள்.
“ம்ம்… குடுத்துட்டா போச்சு…. உங்களுக்கு இல்லாததா…” என்றாள் வளர்மதி புன்னகையுடன்.
அழகான பேபி பிங்க் நிற சுரிதாரில் அப்போது தான் மலர்ந்த பூவைப் போல் ஜொலித்தவளை இரு கண்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தன.
இருவரும் தேர்வு நடக்கும் அறையை நெருங்கவும் அவளை சூழ்ந்து கொண்டனர் வளர்மதியின் தோழியர்.
அனைவரின் வாழ்த்துக்களையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவளின் பார்வை ஆர்வத்துடன் உள்ளே செல்ல அதைக் கண்டு சிரித்தனர் தோழியர்.
“தேடும் கண் பார்வை தவிக்க…. துடிக்க….” என்று ஒருத்தி பாடத் தொடங்கவும் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவள் அவளை முறைத்தாள்.
“ஆஹா… என்ன பார்வை… உந்தன் பார்வை…” என்று அதற்கும் பாட்டு படிக்க அங்கிருந்து நழுவி உள்ளே சென்றாள்.
அதற்கு மேல் அவர்களும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. தேர்வு தொடங்குவதற்கான அடையாளமாய் மணி அடிக்கவும் அனைவரும் தேர்வு எழுதத் தயாராகினர்.
கையில் வினாத்தாளை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தான் விரிவுரையாளர் நகுலன். மாநிறத்தில் அளவான உயரத்தில் அழகாய் இருந்தான். கூர்த்த கண்களில் அறிவுக்களை வழிய அடர்த்தியான மீசை அவன் முகத்திற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டு இருந்தது.
அதே கல்லூரியில் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று முதல் வகுப்பில் தேச்சி பெற்றவன் அங்கேயே விரிவுரையாளராக பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது. ஒரு தோழனைப் போல் நட்போடு பழகும் அவனை மாணவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
தன் கையில் இருந்த வினாத்தாள் கட்டுகளை மேசையின் மீது வைத்து விட்டு நிமிர்ந்தவன் கையால் முடியை அழகாய் ஒதுக்கி விட்டுக் கொண்டான்.
ஒரு நிமிடம் பார்வையை மாணவர்களை நோக்கி ஓட விட்டவனின் முகம் ரோஜாப்பூவாய் மலர்ந்திருந்த வளர்மதியின் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி ரசனையுடன் நோக்கியது. அதற்குள் இரண்டாவது மணியோசை கேட்கவே தன் பார்வையை மாற்றிக் கொண்டவன் சட்டென்று கடமையில் கண்ணானான்.
தேர்வு முடிந்து அனைவரும் வெளியேற கடைசி ஆளாக தேர்வுத்தாளை நகுலனிடம் கொடுத்தாள் வளர்மதி.
சிறு புன்னகையுடன் அவளை நோக்கியவன், “ஹேப்பி பர்த்டே வளர்…” என்றான்.
அதைக் கேட்டதும் அவள் முகம் செந்தாமரையாய் மலர, அவனை தயக்கத்துடன் ஏறிட்டாள்.
“தே…தேங்க்ஸ்… உ…. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்…” என்று நிறுத்தினாள்.
“ம்ம்…. எங்கே வரணும்…..” என்றான் அதை எதிர்பார்த்தவனாய்.
“நாளைக்கு காலைல பார்க்குக்கு வர முடியுமா….” என்றாள்.
கல்லூரிக் காதலர்களுக்கு காதலை வளர்க்க ஏதுவாக அவர்கள் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு சின்ன பூங்கா இருந்தது. அவளையே ஒரு நிமிடம் உற்று நோக்கியவன், “நீ இன்னும் அதே தீர்மானத்தோட தான் இருக்கியா….” என்றான்.
“ம்ம்… என் முடிவு அன்னைக்கும் இன்னைக்கும் ஒண்ணு தான்… காலைல பார்க்குக்கு வருவீங்களா….” என்றாள் ஏக்கத்துடன் அவனை நோக்கி.
அவள் விழிகளின் பாவனை அவனுக்கு எதை உணர்த்தியதோ அவனும் வருவதாக ஒத்துக் கொண்டான். புன்னகையுடன் வெளியே செல்பவளை சந்தோசத்துடன் நோக்கியவன் தன் பணியைத் தொடர்ந்தான்.
வாழ்க்கையில் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து விட்டது போல் பெருமிதத்துடன் புன்னகை முகமாய் வெளியே வந்தவளைக் கண்ட தோழியர் அவளை சூழ்ந்து கொண்டனர்.
“ரகசியமாய்…. ரகசியமாய்…. புன்னகைத்தால்… பொருள் என்னவோ….” அவளை நோக்கி திவ்யா பாடவும் நாணத்துடன் சிரித்தவள்,
“இப்படியே என்னை கிண்டல் அடிச்சிட்டு இருந்தா நான் கிளம்பறேன்… உங்களுக்கு ட்ரீட்டும் கிடையாது… ஒண்ணும் கிடையாது….” என்றவள் முன்னே நடக்க அவள் பின்னே ஓடினர் தோழியர்.
“சரி… சரி… கோவிச்சுக்காதே…. கேண்டீன் போகலாமா……”
“ம்ம்… சரி… வாங்க….” என்று அவள் கூறியதும் அனைவரும் சந்தோஷத்துடன் கேண்டீனுக்கு நகர்ந்தனர்.
வளர்மதியின் மனதோ நாளை நகுலனை சந்திக்கப் போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கியது.
கண்ணாளனே… உனை
கண்ணால் கண்டால் போதும்….
வெண் மேகமாய்…. என்
நெஞ்சம் மிதந்து போகும்….
வான வீதியில் நட்சத்திர
பூவிரித்து உன் வரவிற்காய்
காத்திருக்கும் வெண்மதி நான்….
நான் வளர்ந்து முழுமதியாவதும்
தேய்ந்து தேய் பிறையாவதும்
உன் சொல்லில் தான் இருக்கிறது….
வந்துவிடு கண்ணா…
வானவில் தேரேறி…
சொல்லிவிடு கண்ணா….
சொர்கவாசலின் மந்திரத்தை….
நமக்கென ஒரு உலகம் – அதில்
நாளும் வீசும் பூங்காற்று….
மழைத்துளி என சிலிர்த்து
மனம் லேசா பறக்கும் பூஞ்சிட்டு…
கண்ணாளன் கண்ணுக்குள்
காட்சியாய் நான் மாற…
என் இதயக் கோவிலுக்குள்
விளக்கேற்ற வருவாயோ…

Advertisement