அத்தியாயம் – 4
வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஏகாம்பரத்தின் மேசையில் ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் நிமிர்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று தான் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். ஹாஸினி வருவதைக் கண்டதும் அவன் முகம் தானாகவே மலர்ந்தது. காயமாயிருந்த கையுடனே அவளுக்கு ஒரு சல்யூட்டை வைத்தான்.
முகத்தில் கடுகைப் போட்டால் பொரிந்துவிடுமோ என்பது போல் கடுமையான முகத்துடன் உள்ளே வந்தவள் வசீகரனைக் கண்டதும் நின்றாள். அவளது பார்வை அவனது கையின் மேல் படிய அதைக் கண்ட வசீகரனின் கண்கள் சிரித்தன.
“இப்போ பரவாயில்லை மேடம்….” என்றான் அவள் பார்வைக்கு பதில் சொல்வது போல்.
அவன் விழிகளும் சிரிப்பதை ஆச்சர்யத்துடன் நோக்கியவள், “ம்ம்… பார்த்துக்குங்க…. அந்த தீவிரவாதி சிவா பைலை எடுத்திட்டு வாங்க….” என்றாள்.
ஏகாம்பரத்தின் மேசை மீதிருந்த அந்த பைலை எடுத்துக் கொண்டு போய் அவள் மேசையில் வைத்தான்.
“அந்த போட்டோ எங்கே…..”
“உள்ளே இருக்கு மேடம்…..”
“ம்ம்….. ஏட்டையா எங்கே….”
“இப்போ வந்திருவார் மேடம்… அந்த போட்டோவோட கம்ப்யூட்டர் பிரின்ட் வாங்கப் போயிருக்கார்…” என்றான் பவ்யமாக.
“சரி… நீங்க போகலாம்…..” என்றவள் அவன் சென்றதும் சில நொடிகள் அவன் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
பைலில் கண்ணைப் பதித்தவள் அதில் இருந்த ஒரு போட்டோவை வெளியே எடுத்தாள். ஒரு சிறுவனின் போட்டோ அது.
கொஞ்சம் பழைய போட்டோவாய் இருந்தது… அதன் ஓரத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று என்பதை சொல்லியது…. பல ரவுடித்தனங்களையும் தீவிரவாத செயல்களையும் செய்து வந்த சிவாவைப் பிடிக்க சென்ற சமயத்தில் தப்பியோடிய அவனிடமிருந்து கீழே விழுந்த பர்ஸில் இந்த போட்டோ இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே சிவாவின் வழக்கைப் பற்றிய குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தவள் முன்னில் நிழலாடவும் நிமிர்ந்தாள்.
ஏகாம்பரம் தான் நின்று கொண்டிருந்தார். அவளிடம் ஒரு கவரை நீட்டினார்.
அதில் இருபது வயதான ஒருவனின் ஓவியங்கள் இருந்தன.
தாடி வைத்தும், கிருதாவை நீட்டியும், ஹேர் ஸ்டைலை மாற்றியும், மீசையை நீட்டியும் குறைத்தும் என அவன் முகத்தை சில வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று படம் எடுத்துக் கொடுத்திருந்தான் அவள் நண்பனான கம்ப்யூட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆகாஷ்.
அதை வாங்கிப் பார்த்தவள், “ம்ம்… எல்லா ஸ்டேஷனுக்கும் இந்த போட்டோஸ் எல்லாத்தையும் மெயில் பண்ணிடுங்க… இந்த மாதிரி அடையாளத்தோட ஒருத்தன் எந்த ஏரியால இருந்தாலும் நமக்கு இன்பார்ம் பண்ண சொல்லணும்… ஸ்கேன் பண்ணிட்டு போட்டோஸ் என்கிட்டே கொண்டு வந்து கொடுங்க…. இன்ஸ்பெக்டர் என்னைப் பிடிச்சு காச்சுறார்….” என்றாள் கடுப்புடன்.
“சரி மேடம்….” என்ற ஏகாம்பரம், அதை வாங்கிக் கொண்டு கணினியை நோக்கிச் சென்றார். அவள் சொன்னது போல் எல்லாவற்றையும் செய்து முடித்து அந்தப் படங்களை அவளிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டவள், “நான் இன்ஸ்பெக்டரைப் பார்த்திட்டு அப்படியே லஞ்சுக்கு வீட்டுக்குப் போயிருவேன்… ஏதாவது தேவை இருந்தா என்னை மொபைல்ல கூப்பிடுங்க….” என்றவள் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவள் சென்றதும் தான் அங்கே உள்ளவர்கள் சற்று ஆசுவாசமாக உணர்ந்தனர்.
வசீகரனின் அலைபேசி அடிக்க அதை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ…..”
“அண்ணா… நான் மதி பேசறேன்….”
“மதி… சொல்லும்மா… எப்படி இருக்கே… அம்மா எப்படி இருக்காங்க….” என்றவன் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து சற்று ஓரமாக நின்று பேசத் தொடங்கினான்.
“அண்ணா… நாங்க நல்லாருக்கோம்… நீ எப்படி இருக்கே…. உன்னைப் பார்க்கணும் போல இருக்குண்ணா…. எப்போண்ணா ஊருக்கு வருவே… எனக்கு லாஸ்ட் செமஸ்டர் ரெண்டு நாள்ள தொடங்கப் போகுது…. நீ தானே எப்பவும் எக்ஸாம் டைம்ல என்னை நேரமா எழுப்பி விடுவே… நீ இல்லாம கஷ்டமா இருக்கு…”
“அடுத்த வாரம் என்னோட பிறந்த நாள் வருது…. அதுக்காவது ஊருக்கு வருவியா…” என்றாள் வருத்ததுடன்.
வெகு நாட்களுக்குப் பிறகு தங்கையின் குரலைக் கேட்டவன் அவளது ஏக்கமான பேச்சைக் கேட்டு வருந்தினான்.
“மதி… உன் எல்லா பிறந்த நாளுக்கும் நான் தானே முதல்ல வாழ்த்து சொல்லுவேன்… இந்த பிறந்த நாளுக்கும் கண்டிப்பா வந்திடறேன்மா… நீ எதைப் பத்தியும் யோசிக்காம தேர்வுக்கு நல்லா படி… நான் கண்டிப்பா வருவேன்… அம்மா என்ன பண்ணறாங்க…” என்றான்.
“அம்மா பக்கத்துல தான் இருக்காங்க… கொடுக்கறேன்….” என்றவள் அன்னையிடம் கொடுத்தாள்.
“வசீ…. கண்ணா… நல்லாருக்கியா… உடம்புக்கு ஒண்ணும் இல்லியே… உன்னைக் காணாம உன் தங்கச்சி தான் ரொம்ப வருத்தப் படுறா… ஒரு எட்டு வந்திட்டு போ கண்ணா…” என்றார்.
“ம்ம்… சரிம்மா… மதிக்குட்டி பிறந்த நாளுக்கு முதல் நாள் நான் வந்திருவேன்… நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்க…. அவளையும் நல்லா படிக்க சொல்லுங்க…” என்று பேசி முடித்து வைத்தான்.
அவர்களுடன் பேசியது மனதுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்க அடுத்த வாரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.
மதிய உணவிற்காய் வீட்டுக்கு வந்த ஹாஸினி சாப்பிட்டு விட்டு ஒரு பைலுடன் சோபாவில் வந்து அமர்ந்தாள்.
கண்ணை பைலில் ஒட்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்தார் ராஜேஸ்வரி.
“ஹாஸினி…. நான் சொன்னதைப் பத்தி யோசிச்சியா….” என்றார் அவளையே ஆழ்ந்து நோக்கிக் கொண்டு.
“எதைப் பத்தி மம்மி….” என்றாள் கண்ணை பைலில் இருந்து எடுக்காமலே.
“உன்னோட கல்யாணத்தைப் பத்தி…. என்ன முடிவு பண்ணி இருக்கே… பாஸ்கரைக் கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா… இல்லைன்னா புரோக்கர் கிட்டே சொல்லி வெளியே பார்க்கவா…” என்றார் அழுத்தமாக.
அவரது குரலில் நிமிர்ந்த ஹாஸினி, “எனக்கு தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்ல மம்மி… என் பிரண்டு ராதிகாவுக்கு நடந்ததை மறந்துட்டிங்களா…. எத்தனை குடும்பத்தைப் பார்க்கிறோம்…. யாராவது சந்தோஷமா இருக்காங்களா… எல்லா ஆம்பளைங்களுமே பெண்ணை அடிமை போல தானே பாக்குறாங்க… எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லைம்மா…” என்றாள் அவளும் பிடிவாதத்துடன்.
“ஹாஸினி… எல்லா ஆம்பளைங்களும் அப்படிக் கிடையாதுன்னு எத்தனை தடவை உன்கிட்டே சொல்லுறது…. உன் அப்பாவை யோசிச்சுப் பாரு… அவரை ஏதாவது குத்தம் சொல்ல முடியுமா… அவரும் ஆண் தானே… அவரைப் போல எத்தனையோ நல்லவங்களும் ஆண் வர்க்கத்தில் இருக்கத்தான் செய்வாங்க…”
“எல்லோரோட வாழ்க்கையும் ஒரே போல இருக்காதும்மா… யாருக்கு என்னண்ணு எழுதி இருக்கோ அதான் நடக்கும்…” என்றார் ராஜேஸ்வரி பொறுமையாக.
“அப்படி ஒரு ரிஸ்க் எடுத்துப் பார்த்து வாழ்க்கையைத் தீர்மானிக்க நான் தயாரில்லை மம்மி… எனக்குக் கல்யாணம் வேண்டாம்…. என்னை விட்டுருங்க….” என்றாள் அவளும் விடாமல்.
சோபாவில் இருந்து எழுந்த ராஜேஸ்வரி, “ஹாஸினி…. உனக்கு கல்யாணம் பண்ணறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்… உனக்கு பாஸ்கர் மேல விருப்பம் இருந்தா அவன் மாப்பிள்ளை…. வேற யாரையாவது பிடிச்சிருந்தாலும் சொல்லு… அப்படி ஏதும் இல்லைன்னா வெளியே பார்க்கப் போறேன்…. இதான் என் முடிவு….” என்றார்.
“அம்மா…. நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்டு என்னை நிர்பந்திக்காதிங்க…. எனக்கு இதில் விருப்பம் இல்லேன்னு சொன்னா விட்டுருங்க…. இது என்னோட வாழ்க்கை…. என் இஷ்டப்படி வாழ விடுங்க….” என்று பதிலுக்கு ஹாஸினியும் கத்தினாள்.
“என்னது…. உன் இஷ்டம்… உன் வாழ்க்கையா… அப்போ நான் யாரோவா….” என்று  உணர்ச்சிவசப்பட்டு கத்திய ராஜேஸ்வரி நிற்க முடியாமல் வியர்த்துக் கொட்ட தள்ளாடியபடி படபடப்புடன் சோபாவில் அமர்ந்தார்.
அதைக் கண்டு பதறியவள், “ராமு… அம்மாவோட மாத்திரைய சீக்கிரம் எடுத்திட்டு வாங்க….” என்று கத்தினாள்.
அவர் மாடிக்கு ஓடிச் சென்று ராஜேஸ்வரியின் மாத்திரையை எடுத்துக் கொண்டு கீழே வர அதை வாங்கி அன்னைக்கு கொடுத்தாள் ஹாஸினி.
அதைத் தட்டி விட்டவர், “உ… உனக்கு ஒரு கல்…யாணத்தை செய்து பார்க்கக் கூட முடியாம நானெல்லாம் உயிரோட இருந்து என்ன சாதிக்…கப் போறேன்… உசுரு போனா… போக…ட்டும்… என் வார்த்தைக்கு எப்போ உன்…கிட்டே மதிப்பில்லாம போயிருச்சோ…. இ… இனி நான் இருந்து என்ன பயன்….” என்றார் வியர்த்து வழிய மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டே.
தனக்கென இருக்கும் ஒரே உறவும் இப்படிக் கண்ணீருடன் கேள்வி கேட்டதில் மனம் தளர்ந்து போனாள் ஹாஸினி. அன்னையின் சொல்லில் பதறியவளின் கண்களும் கலங்கி இருந்தது.
“அம்மா….” என்று தன்னை ஆதரவாய்த் தொட வந்தவளின் கையைத் தட்டி விட்டார் ராஜேஸ்வரி.
அதில் மனம் நொறுங்கிய ஹாஸினி சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
“மம்மி…. நான் கல்யாணம் பண்ணிக்கணும்…. அதானே உங்க ஆசை…. பண்ணிக்கறேன்…. ஆனா எனக்கு நீங்க கொஞ்சம் டைம் தரணும்…. இந்த பாஸ்கரை எனக்குப் பிடிக்கலை… கொஞ்சமாவது எனக்குப் பிடிச்ச மாதிரி  யாராவது இருந்தா உங்ககிட்டே சொல்லறேன்… அதுவரை நீங்க என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது… ப்ளீஸ்… இந்த மாத்திரையை குடிங்க…” என்று நீட்டினாள்.
அவள் கூறியதிலேயே அவருடைய ரத்தக் கொதிப்பு பாதி குறைந்திருக்க அந்த மாத்திரையை வாங்கி தண்ணீரைக் குடித்து விழுங்கியவர், நிமிர்ந்தார்.
“சரி… உனக்கு இன்னும் மூணு மாசம் டைம் தரேன்…. உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு… இல்லேன்னா நான் வெளியே பார்ப்பேன்… நீ மறுக்கக் கூடாது…” என்றார்.
மனதுக்குள் அன்னை இதற்கு ஒத்துக் கொண்டதே பெரிதென்று நினைத்தவள், “சரி மம்மி….” என்று சம்மதித்தாள்.
“ம்ம்…..” என்றவர் நிம்மதியாய்க் கண்ணை மூடி சோபாவில் அமர்ந்தார். தான் பார்த்துக் கொண்டிருந்த பைலை அப்படியே போட்டு வந்ததில் அது படபடத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதைக் கையில் எடுத்தாள் ஹாஸினி.
அதில் அவள் வைத்திருந்த ஐந்து போட்டோக்களில் நான்கு மட்டுமே இருக்க மற்றொன்றைக் காணாமல் தேடினாள். அவள் ஏதோ தேடிக் கொண்டிருப்பதைக் கண்ட ராஜேஸ்வரி, “என்னம்மா… என்ன தேடறே….” என்றார்.
“இங்கே அஞ்சு போட்டோ வச்சிருந்தேன் மம்மி… இப்போ நாலு தான் இதில் இருக்கு…” என்றாள் அவள் தேடிக் கொண்டே.
தன் அருகில் இருந்த அந்த போட்டோவை அவர் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு “இது யாரோட போட்டோம்மா….” என்றார்.
“இது ஒரு தீவிரவாதி கையில் இருந்துச்சும்மா… ஒரு பழைய போட்டோவை வச்சு இப்போ எப்படி இருப்பாங்கன்னு ஒரு அனுமானத்துல கம்ப்யூட்டர்ல வரைஞ்ச போட்டோ இது…. இதோ… இதை வச்சு தான் மத்ததெல்லாம் நம்ம ஆகாஷ் டெவலப் பண்ணி கொடுத்தான்…” என்றாள் சோபாவிற்கு அடியில் விழுந்து கிடந்த போட்டோவை எடுத்துக் கொண்டே.
அதை வாங்கிப் பார்த்தவர், “இது பத்து வருஷத்துக்கு முன்னால எடுத்த போல தேதி சொல்லுதே….” என்றார்.
“ம்ம்… பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ தான் மம்மி… அதைதான் இருபது வயசுல எப்படி இருப்பான்னு டெவலப் பண்ணி இருக்கோம்…” என்றாள்.
“ஓ… இப்படில்லாம் பண்ண முடியுமா…..” என்றவர், உடனே எதையோ யோசிக்கத் தொடங்கி விட்டார். அவரைத் தொந்தரவு செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள் ஹாஸினி. அவள் மனதுக்குள் அன்னையின் பிடிவாதத்தை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி குடையத் தொடங்கியது.
ராத்திரி பத்து மணி ஆகியும் வசீகரனைக் காணாமல் ஹாலிலேயே காத்திருந்தாள் வளர்மதி. அடுக்களையில் எல்லா வேலையும் முடித்துவிட்டு வந்த சபர்மதி மகள் வாசலையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு புன்னகையுடன் அவள் அருகே அமர்ந்தார்.