“சொல்லுங்க அண்ணி… என்ன விஷயம்…..” என்றார் தன் தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை மூக்கில் மேலேற்றி விட்டுக் கொண்டே.
“என்ன ராஜிம்மா… உன்னையும் என் மருமகளையும் பார்க்க வரதுக்கு எங்களுக்கு ஏதாவது விஷயம் வேணுமா என்ன… சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்… சரி உனக்குப் பிடிக்குமேன்னு நம்ம தோட்டத்து ரஸ்தாளிக் குலை ஒண்ணைக் கொண்டு வந்தோம்…..”
“சும்மா சொல்லக் கூடாது…. அப்படியே கல்கண்டு மாதிரி இனிக்குது… நீ சாப்பிட்டு பாரு….” என்றார்.
“டேய் பாஸ்கர்…. அத்தை கிட்டே ஒண்ணும் பேசாம கூச்சப்பட்டுகிட்டு உக்கார்ந்திருக்கே… பேசு….. உன் முறைப்பொண்ணு எங்கே போயிருக்கான்னு விசாரி….” என்றார் மகனின் கையில் தட்டி.
அவன்… என்னவோ இப்போது தான் வயசுக்கு வந்த பொண்ணைப் போல் வெக்கத்தில் நெளிந்து கொண்டு சிரிப்புடன் அத்தையை ஏறிட்டான்.
“அத்த….. ஹாஸினி நல்லாருக்கா… எங்கே காணோம்…” என்றான் ஒருவித இளிப்புடன். அவனது இளிப்பைக் கண்டதும் ராஜேஸ்வரிக்கு அவர்கள் எதற்காக வந்திருப்பர் என்று ஒரு அனுமானம் ஓடியது.
அவர்களே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தவர் ராமு காப்பி கொண்டு வைக்கவும், “காபி குடிங்க….” என்றார்.
அவர்களும் காப்பியை ரசித்துக் குடித்தனர்.
ராஜேஸ்வரியின் அண்ணன் குணசேகர் இருக்கும் வரை ராஜேஸ்வரி உறவுகள் யாரையும் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததால் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருந்த தனபாக்கியம் அவரின் மறைவுக்குப் பிறகு அவ்வப்போது வந்து ராஜேஸ்வரியை நலம் விசாரித்துச் செல்வார்.
கணவனை இழந்து தன்னைப் போலத் தனியாக நிற்கும் அண்ணியை ஏனோ விரட்டியடிக்க அவருக்கும் மனம் வரவில்லை… ஊரிலிருந்த நிலபுலன்களை தனபாக்கியம் பார்த்துக் கொள்ள சரியாகப் படிப்பு வராமல் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்ட அவரது மகன் பாஸ்கரும் விவசாயத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டான்.
அத்தையின் சொத்துக்கு ஒரே வாரிசான ஹாஸினியை கல்யாணம் முடித்தால் அந்த சொத்தும் தனக்கு வந்து சேரும் என நினைத்து பாஸ்கரும் அவன் அன்னையும் அதற்கு அடி போட்டுக் கொண்டிருந்தனர்.
“அப்புறம் ராஜிம்மா… நம்ம பசங்களுக்கும் கல்யாண வயசாயிருச்சு… காலாகாலத்துல நடக்க வேண்டியதெல்லாம் நடக்கணும்ல… பையனுக்கு கல்யாண வயசாயிருச்சே…. இன்னும் பொண்ணு பார்க்கலயான்னு பாக்குறவங்க எல்லாம் கேக்கத் தொடங்கிட்டாங்க…”
“அதுக்கென்ன அண்ணி… பாஸ்கருக்கு பொண்ணு பார்த்திட வேண்டியது தானே… நான் ஏதாவது பார்க்கணுமா… புரோக்கர் கிட்டே சொல்லவா…” என்று பிடி கொடுக்காமல் பேசினார் ராஜேஸ்வரி.
அதைக் கேட்டு சற்று திடுக்கிட்டாலும் சமாளித்துக் கொண்ட தனபாக்கியம், “அதென்ன ராஜிம்மா… அப்படி கேக்கறே… கையிலேயே பொண்ணை வச்சுக்கிட்டு வெளியே தேடுவானேன்… லட்டு மாதிரி என் மருமகப் பொண்ணு இருக்கும்போது நாம எதுக்கு வெளியே தேடோணும்…” என்று மனதில் உள்ளதைப் போட்டு உடைத்தார்.
பாஸ்கரின் முகத்தில் அத்தை என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆவலும் சந்தோஷமும் நிறைந்திருந்தது.
அதைக் கேட்டதும் ராஜேஸ்வரியின் முகம் யோசனைக்குப் போக அதைக் கண்ட தனபாக்கியம்,
“என்னம்மா ராஜி… யோசிக்கறே…. எப்படி இருந்தாலும் உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்… நானும் என் பையனுக்கு பொண்ணு பார்க்கணும்… நமக்குள்ளேயே சம்மந்தம் வச்சுகிட்டா உறவும் விட்டுப் போகாதுல்ல….” என்றார்.
அவர் சொன்னது ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் ராஜேஸ்வரியின் மனதில் வேறு ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.
“அதெல்லாம் சரிதான் அண்ணி… ஹாஸினி இதுக்கு சம்மதிக்கணுமே….” என்றார்.
“நீ பேசிப் பாரு…. உறவு விட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லிப் புரிய வை… உன் பேச்சை உன் பொண்ணு தட்டுவாளா என்ன…” என்று சமயம் பார்த்து அடித்தார்.
“ம்ம்…. சரி அண்ணி… நான் அவகிட்டே பேசிட்டு சொல்லறேன்…” என்றவர், “சரி… நீங்க சாப்பிட்டு தானே போறீங்க….” என்றார்.
“ம்ம்ம்…. உன் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாமலா போவோம்…. போனா தான் நீ விட்டுருவியா…. சாப்பிட்டு சாயந்திரமா தான் கிளம்புவோம்… அதுக்குள்ளே ஹாஸினி வந்துச்சுன்னா பார்க்கவும் செய்யலாம் பாரு…” என்றார் தனபாக்கியம்.
ஆனால் ஹாஸினி அவர்கள் கிளம்பும் வரை வீட்டுக்கு வரவே இல்லை… மதிய உணவையும் வேண்டாம் என்று கூறி விட்டாள். எட்டு மணிக்கு சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தவள் ஹாலில் அன்னை காத்திருப்பதைக் கண்டதும் அவரிடம் சென்றாள்.
“ம்ம்… சரி மம்மி…..” என்று உடனே ஒத்துக் கொண்டு ஏதோ யோசனையுடன் எழுந்து சென்றவளின் குணம் அவருக்குப் புதிதாய்த் தோன்றியது. எப்போதும் ஏதாவது மறுத்துப் பேசிவிட்டே அதை செய்வாள்.
அவள் குளித்து பிரெஷ் ஆகி வரவும் உணவு மேசைக்கு சென்று அமர்ந்தார். அவள் ஹால் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளையே பார்த்தவர் அழைத்தார்.
மகளை ஆச்சர்யமாய்ப் பார்த்தவர் அவளை நோக்கி முறைத்தார்.
“உனக்காக சாப்பிடாம காத்திருக்கேன்… அப்புறம்னு சொல்லறே… எழுந்து வா… மதியமும் சாப்பிட வரலை…..” என்று கண்டிப்பான குரலில் கூறினார். அதைக் கேட்டதும் அன்னை தனக்காய் காத்திருப்பது மனதை உறுத்த டீவியை அணைத்துவிட்டு எழுந்து அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ராமு…..” அழைக்க அங்கே ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் ஹாஸினிக்கு தட்டை வைத்து சப்பாத்தி குருமா வைத்தார்.
ரெண்டு சப்பாத்தியை எப்படியோ உள்ளே தள்ளிவிட்டு அவள் எழுந்து செல்ல அவளது மௌனம் அந்த அன்னைக்கு வித்தியாசமாய்த் தோன்றியது.
சாப்பிட்டு விட்டு அவள் அறைக்கு வந்தவர் அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தார்.
சின்னப் பெண்ணாக இருக்கும்போதே மடியில் கிடத்தினால் “நான் என்ன குழந்தையா மம்மி…” என்று எழுந்து கொள்பவளின் இந்த வித்தியாசமான மனநிலை அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பதை அவருக்கு உணர்த்தியது.
ஒன்றும் பேசாமல் அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டவர் இதமாய் அவள் தலையை வருடி விட்டார். அதுவரை மனதுக்குள் இருந்த அலைப்புறுதல் நீங்கி இதமான அன்னையின் விரல் ஸ்பரிசத்தில் அவள் உறங்கிப் போனாள்.
தனபாக்கியம் சொன்ன விஷயத்தை மகளிடம் பேச வந்தவர், அவளது மனநிலை கண்டு மௌனமாய் இருந்தார்.
அவள் உறங்கியதும் கதவை சாத்திவிட்டு அருகில் இருந்த தன் அறைக்கு சென்றவர், தூக்கம் வராமல் ஏதேதோ யோசித்துக் கொண்டு வெகு நேரம் பால்கனியில் நடந்து கொண்டிருந்தார்.
அவரது மனது கணவனின் நினைவில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தனபாக்கியம் சொன்னது போல் பாஸ்கருக்கு மகளை யோசிக்க அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை… ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தலை வலித்து உடல் வேர்ப்பது போல் இருந்தது.
அப்போது தான் பிரஷருக்கான மாத்திரை குடிக்கவில்லை என்பது நினைவு வர வேகம் சென்று மாத்திரையை எடுத்து விழுங்கினார். கட்டிலில் சாய்வாய் அமர்ந்தவர் தலையணைக்கடியில் இருந்த ஒரு டைரியை எடுத்து அதில் இருந்த கணவனின் போட்டோவைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தார். கணவனின் நினைவுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே உறங்கிப் போனார்.
அடுத்த நாள் காலையில் எப்போதும் போல கம்பீரமாய் காக்கி உடையில் மாடிப்படி இறங்கி வந்த மகளைக் கண்டு மனம் நிறைந்தவர் அவளிடம் தனபாக்கியம் வந்த விஷயத்தைக் கூறினார்.
அதைக் கேட்டு திடுக்கிட்டவள், “மம்மி… என்னது… எனக்குக் கல்யாணமா…. அதும் அந்த பாஸ்கருக்கா…. என்ன விளையாடறீங்களா….” என்றாள்.
“ஹாஸினி… வீட்டுல பொண்ணு இருந்தா… சொந்தம் பந்தம்னு இருக்குறவங்க மகனுக்கு கேட்கத் தான் செய்வாங்க… உனக்கு பாஸ்கரைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லேன்னா… சொல்லு… வேற பாக்கலாம்….”
“சாரி மம்மி… என்னை இந்த விஷயமா வற்புறுத்தாதீங்க…. எனக்குக் கல்யாணத்தில் விருப்பமில்லை…. நான் இப்படியே இருந்திடறேன்… கல்யாணம்ங்கிற பேர்ல யாருக்கும் அடிமையா இருக்க என்னால முடியாது…. எனக்கு என் சுதந்திரம் முக்கியம்….”
அவள் சொன்னதைக் கேட்டு முதன் முறையாய் தன் வளர்ப்பு சரியில்லையோ… என்று யோசித்தார் ராஜேஸ்வரி. ஆண்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தை மகளின் மனதில் பதித்து விட்டேனோ…. இதை எப்படி சரி செய்வது… என்று வருந்தினார்.
“ஹாஸினி…. அதுக்குன்னு இப்படியே இருக்கப் போறியா…. எனக்குப் பின்னாடி உனக்கு ஒரு துணை வேணும்மா… உனக்கு பாஸ்கர் பிடிக்கலைன்னா பரவாயில்லை… புரோக்கர் கிட்டே சொல்லி வேற நல்ல மாப்பிள்ளை பார்க்க சொல்லறேன்…. இல்லேன்னா உன் மனசுல யாராவது இருந்தா சொல்லு…. அதையே பார்க்கலாம்….” என்றார்.
அன்னை கூறியதைக் கேட்டதும் சட்டென்று வசீகரனின் முகம் மனதில் மின்னித் தெளிய சட்டென்று மனதை அடக்கியவள்,
“எல்லா ஆம்பளைங்களும் பொண்ணுங்களை அவுங்களோட அடிமைன்னு தான் பாக்குறாங்க…. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முகத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் வேற முகத்தையும் காட்டுறாங்க…. என் மனசுல யாரும் இல்லை… கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற எண்ணமும் இல்லை… இதுக்கு மேல இதைப் பத்திப் பேசாதீங்க… ப்ளீஸ்…” என்றவள், “நான் வரேன்…” என்று கிளம்பி விட்டாள்.
கறாராய்ப் பேசிவிட்டு செல்லும் மகளையே பார்த்துக் கொண்டு நின்ற ராஜேஸ்வரி, என்ன சொல்லி மகள் மனதை மாற்றுவது என யோசித்தார். அவருக்கும் வேலை இருந்ததால் அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவர், வெளியே செல்லக் கிளம்பினார்.
கையில் கட்டுடன் வந்த வசீகரனைக் கண்டு அதிர்ந்தனர் ஜானகியும் சுபாஷிணியும்.
“என்னாச்சு தம்பி…. இப்படிக் கட்டு போட்டிருக்கு…. என்று ஜானகி பதட்டத்தோடு விசாரிக்க, “சின்னக் காயம் தான்மா….” என்று சிரித்தான் வசீகரன்.
“என்னங்க… என்ன நடந்துச்சு…..” என்று அவர் கணவரிடம் விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபாஷினியின் மென்மையான உள்ளம் வருந்தியது. அவன் காயத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் முக வாட்டத்துடன் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.
“சரி… வாங்க தம்பி…. சாப்பிடலாம்….” என்று உள்ளே சென்று மேசையில் சாப்பிட எடுத்து வைத்தார். தட்டில் தோசையை வைக்க அதைப் பிய்த்து சாப்பிட முடியாமல் கஷ்டப் பட்டான் வசீகரன்.
“அய்யய்யோ… சாப்பிட முடியலியா…. தம்பி…” என்ற ஜானகி மகளிடம் இட்லி ஊற்றுமாறு கூறினார்.
இட்லி வெந்ததும் துண்டுகளாக்கி அவனது தட்டில் வைத்த சுபாஷிணி ஒரு முள் ஸ்பூனையும் கொடுக்க வசீகரன் அவளை நன்றியுடன் பார்த்தான். அவளது பார்வையில் கவனமாய் இருப்பதில்லையா… என்ற கேள்வி இருந்தது.
ஸ்பூனில் இட்லித் துண்டைக் குத்தி சாம்பாரில் தொட்டு சாப்பிட்டு முடித்தான். ஏகாம்பரத்திடம் அவன் அன்னையிடம் இதைப் பற்றிக் கூற வேண்டாம்… எனக் கேட்டுக் கொண்டவன், அவர்களிடம் விடைபெற்று தன் அறைக்கு வந்தான்.
கண்ணாடியில் கிழித்ததால் கையின் காயம் மிகவும் வலித்தது. மாத்திரையைப் போட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான். அவனுடன் ரூமில் தங்கியிருந்த நண்பனும் அவர்களின் ஊரில் ஒரு விஷேஷத்துக்காய் சென்றிருக்க வசீகரன் மட்டுமே தனித்திருந்தான்.
கண்ணை மூடியவனின் காதுக்குள், “அய்யய்யோ… என்னாச்சு… வசீகரன்….” என்ற ஹாஸினியின் குரல் மென்மையாய் ஒலிக்க அவனது முகம் மென்மையானது. அவனது கைகளில் பதட்டமாய் அவள் சுற்றிவிட்ட கைக்குட்டையாய் அவன் மனம் காற்றில் சிறகடித்தது.
அவனை நினைத்து அவனுக்கே அதிசயமாய் இருந்தது. “அவளை தான் எனக்குப் பிடிக்கவில்லையே… பிறகு ஏன் அவளை ஒருத்தன் குத்த வந்தபோது நான் தடுக்க வேண்டும்…. எனக்கு காயமாகுமென்பதை மறந்து அவளை ஏன் காப்பாற்ற வேண்டும்…. அவளது பதட்டம் எனக்கு ஏன் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும்…. என்று கேள்விகளைத் தந்தது.