“ம்ம்ம்… ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்… சரி வா… உன்னோட டீடெயில் எல்லாம் குடு….” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார்.
உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய் உணர்ந்தது.
“யார் இவன்… அவனைப் பார்த்ததும் மறுபடியும் பார்க்கணும் போலத் தோணுது… அவனோட கண்கள்… ஹப்பா…. பேரைப் போலவே என்னவொரு வசீகரம்…” என்று தலையை உலுக்கிக் கொண்டவள்,
“அவன் யாரா இருந்தா நமக்கென்ன… அவனும் திமிர் பிடிச்ச ஆம்பளை வர்க்கம் தானே… அவனை முதல்லயே கொஞ்சம் தட்டி வைக்கணும்…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டதும் தான் அவள் மனம் அமைதியானது.
அடுத்த நாள் காலையில் புத்தம் புது காக்கி யூனிபார்ம் உடையில் விறைப்பாய் தயாராகி நின்ற வசீகரனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார் ஏகாம்பரம்.
அங்கே கடவுளை வணங்கி வெளியே வந்ததும் புதிய அரசுத் தொப்பியை சந்தனம் வைத்து அவனிடம் கொடுத்து தலையில் வைக்க சொன்னவர்,  நெற்றியில் சந்தனம் குங்குமத்தை வைத்து வாழ்த்தினார்.
“இது உன்னோட முதல் அடி தான்… உன்னுடைய திறமையால மேலும் மேலும் அடியெடுத்து வச்சு உயரத்தை அடையணும்… உன்னை நல்லவொரு டைரக்டரா பார்க்கணும்… உன் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு தான் உன் அப்பாவும் நினச்சாரு….”
“ஆனால் கடவுள் இந்த அரசாங்கத் தொப்பியை உன் தலையில் வச்சு அழகு பார்க்க நினைச்சிருக்கான்… எந்த வேலையா இருந்தாலும் நம்பிக்கையும் முயற்சியும் இருந்தா கண்டிப்பா முன்னேற முடியும்…. உன் அப்பாவைப் போல நீயும் ஒரு நேர்மையான போலீஸ்காரன்னு பேர் வாங்கணும்….”
“உன் படிப்புத் தகுதிக்கு அடுத்தடுத்து டெஸ்ட் எழுதி சீக்கிரமே பிரமோஷன் ஆகணும் தம்பி….” என்றவரின் குரல் நெகிழ்ந்திருக்க ஏனோ அந்த மனமார்ந்த வாழ்த்தினைத் தந்த அந்த மத்திய வயஸ்தனை வசீகரனுக்கு வெகுவாய்ப் பிடித்துப் போனது.
“ரொம்ப நன்றி சார்… உங்க வார்த்தைகளும் வாழ்த்தும் என் அப்பாவே சொல்லுற போல இருக்கு…” என்று அவர் கைகளை அன்புடன் பற்றிக் கொண்டான்.
“சரிப்பா… இன்னைக்கு என் வீட்டில் தான் உனக்கு காலை உணவு… நான் வீட்டுல சொல்லிட்டு தான் வந்தேன்… வா… போயி சாப்பிட்டு ஸ்டேஷனுக்குக் கிளம்பலாம்…” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு நடந்தார்.
“வசீகரன்… இந்த போலீஸ் வேலையை எல்லா தப்புகளும் செய்யுறதுக்கு உள்ள லைசன்ஸ்னு சிலர் நினைக்குறாங்க… ஆனா அப்படி இல்ல… எந்தத் தப்பும் செய்யலாம்னு மனுஷங்க நினைக்கும்போது அதை செய்ய விடாம தடுக்குறதுக்கான லைசன்ஸ் தான் இந்த வேலை…. ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியுதா….” என்றார்.
“ம்ம்… புரியுது சார்….” என்று கூறிக் கொண்டே அவருடன் நடந்தான்… ஏதேதோ பேசிக் கொண்டே நடந்தனர்.
“சார்… நம்ம எஸ் ஐ ஏன் இப்படி கடுகடுன்னு இருக்காங்க…. ஜான்சி ராணி னு பட்டப் பேரெல்லாம் வச்சிருக்கீங்க…” என்றான் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
“அது ஒரு கதைப்பா… அந்தப் பொண்ணோட தோழி ஒருத்தி உருகி உருகி  ஒருத்தனை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா… காதலிக்கும்போது கண்ணே… மணியேன்னு உருகினவன், கல்யாணம் ஆனதும் அவன் சுய ரூபத்தைக் காட்டி இருக்கான்…”
“தண்ணி, பொண்ணுன்னு சுத்துறது தெரிஞ்சு அந்தப் பொண்ணு கண்டிக்கவும் அடி, உதைன்னு துன்புறுத்த ஆரம்பிச்சுட்டான்…. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன அந்தப் பொண்ணு என் சாவுக்கு இவன் தான் காரணம்னு எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிச்சு….”
“அந்தப் பொண்ணும் நம்ம மேடமும் உயிர்த் தோழிங்க… அவுங்க காதலுக்கு உதவி கல்யாணத்துல சேரவும் காரணமா இருந்திருக்காங்க… அந்தப் பொண்ணைக் காதலிச்சு ஏமாத்தின அவனைப் போல எல்லா ஆம்பளைங்களும் மோசமானவங்கன்னு அவுங்க மனசுல ஒரு நினைப்பு…”
“அவனுக்கு சட்டம் தண்டனை கொடுத்தாலும் இவுங்க மனசுல ஆம்பளைங்கன்னா பெண்களை அடிமைப் படுத்துறவங்க…. கல்யாணம் பண்ணிட்டு பெண்களை அடிமையா நடந்துறவங்கன்னு பொதுவா ஆண்கள் மேல ஒரு வெறுப்பு வந்திருச்சு… காலம் தான் எல்லோரும் ஒரே போல இல்லைன்னு புரிய வைக்கணும்…” என்றார்.
அதைக் கேட்டதும், “ஓ… அதான் அந்த அழகான முகம் ஆண்களைக் கண்டாலே கோபத்தில் சிவக்குதோ…” என நினைத்துக் கொண்டே நடந்தான் வசீகரன்.
வீட்டு வாசலில் ஷூவைக் கழற்றிவிட்டு வீட்டுப் படியேறினர். ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தொலைவே இருந்தது அவரது வீடு.
“சுபா… சுபாம்மா….” என அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவரை,
“எதுக்குப்பா… என் பேரை ஏலம் போட்டுட்டே வரீங்க….” என்றபடி அடுக்களையில் இருந்து வந்தாள் அவரது மகள் சுபாஷிணி.
அமைதியான அழகான புன்னகைக்கும் முகம்….. நீண்ட கூந்தலை அழகாய்ப் பின்னிப் போட்டிருந்தாள். அவளைக் கண்டதும் வசீகரனுக்கு ஏனோ வளர்மதியின் நினைவு வந்தது.
மகளைக் கண்டதும் கனிவான பார்வையோடு அவளை நோக்கிய ஏகாம்பரம், “சுபாம்மா…. இவர் தான் வசீகரன்…. நம்ம ஸ்டேஷனுக்கு புதுசா ஒரு தம்பி வந்திருக்குன்னு சொன்னேன்ல… இவர் தான்…. அம்மா எங்கே… டிபன் ரெடியாகிடுச்சா….” என்று கேள்விகளை அடுக்கினார்.
வசீகரனின் சிரித்த முகம் கண்டதும் அவள் மனதில் பதிய அழகான சிரிப்புடன் அவனை வரவேற்றாள்.
“வாங்க…. அப்பா சொன்னார்… உக்காருங்க…” என்றவள்,
“அம்மா காய் வாங்க கடைக்கு போயிருக்காங்கப்பா… இப்போ வந்திருவாங்க… நீங்க வாங்க…. நான் சாப்பிட எடுத்து வைக்கறேன்…” என்றுவிட்டு உள்ளே செல்ல அவனை ஹாலில் இருத்திவிட்டு உள்ளே சென்றார் ஏகாம்பரம்.
வீட்டைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான் வசீகரன். அழகான சின்ன வீடு….  பெரிய ஹால், இரண்டு படுக்கை அறை, டைனிங் ஹால், கிட்சன், வராண்டாவுடன் ஓரளவிற்கு வசதியாய் இருந்தது.
அந்த சின்ன வீட்டை அங்கங்கே அலங்கரித்திருந்தது அழகான ஓவியங்கள். அதன் அருகே சென்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை பின்னிலிருந்து கேட்ட ஏகாம்பரத்தின் குரல் திரும்ப வைத்தது.
“அதெல்லாம் என் பொண்ணு சுபாஷிணி வரைந்ததுப்பா… ஓவியம் வரைவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்…. எப்பவும் எதையாவது வரைஞ்சு கிட்டே இருப்பா….” என்றார் மகளைப் பற்றி பெருமையுடன்.
“ம்ம்… ரொம்ப நல்லாருக்கு சார்… நல்ல திறமை இருக்கு… படத்தில் நல்லா உணர்வுகளைக் கொண்டு வந்திருக்காங்க… முறைப்படியான பயிற்சி எடுத்திருக்கலாமே…” என்றான் பாராட்டுதலுடன்.
அப்போது அதைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் சுபாஷிணி. அவனது பாராட்டில் அவள் முகம் மலர்ந்திருந்தது.
“சாப்பிட எடுத்து வைக்கவாப்பா….” என அவள் கேட்க பேசிக் கொண்டே டைனிங் ஹாலுக்கு சென்று அமர்ந்தனர்.
“எங்கே தம்பி… இவள் டிகிரி முடிச்சதும் அந்த நேரத்துல சரியா இவ அம்மாக்கு கர்ப்ப பாத்திரத்தில் ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்ய வேண்டியதா போயிருச்சு… அப்போ இவ தான் வீட்டையும் பார்த்து இவ அம்மாவையும் பார்த்துகிட்டா…”
“அதுக்கப்புறமும் அம்மாவை அதிகம் வேலை செய்ய விடாம ஓய்வுல இருக்க சொல்லிட்டு இவளே எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சுட்டா… தன்னைப் பத்தி யோசிக்காம குடும்பப் பொறுப்பெல்லாம் தலையில் ஏத்திக் கிட்டா….”
“ம்ம்ம்… இனி நல்ல ஒரு மாப்பிள்ளையா பார்த்து இவளை கை பிடிச்சு கொடுத்துட்டா போதும்… எப்ப தான் எங்களுக்கு நிம்மதி….” என்றார் பொறுப்புள்ள தந்தையாய்.
தந்தை கல்யாணத்தைப் பற்றிக் கூறியதும் சட்டென்று வசீகரனை ஏறிட்டவள், எதையோ எடுப்பது போல் உள்ளே சென்று விட்டாள்.
அப்போது ஏகாம்பரத்தின் மனைவி ஜானகி உள்ளே நுழைய, அவரைக் கண்டதும் எழுந்த வசீகரன் “வணக்கம்மா…” என்று கைகூப்பி வணங்கினான்.
தன்னைக் கண்டதும் பணிவாய் எழுந்து நின்றதோடு வணக்கமும் கூறிய அவனை கண்டதும் பிடித்துப் போனது ஜானகிக்கு.
“உக்காருங்க தம்பி… உங்க அப்பாவைப் பத்தி இவர் எப்பவும் சொல்லிட்டே இருப்பார்…. நீங்க இங்கே ஜாயின் பண்ண வந்திருக்கீங்கன்னு சொல்லிட்டு இருந்தார்… வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா… அவுங்க மட்டும் தனியா இருந்துக்குவாங்களா…. இப்போ எங்கே தங்கி இருக்கீங்க…” என்று விசாரித்துக் கொண்டே போனார்.
அவரை புன்னகையுடன் நோக்கியவன், “இங்கே தங்குறதுக்கு ஏதாவது வீடு பார்க்கணும்மா… நேத்து ஸ்டேஷன்ல தங்கி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன்… ஆனா கஷ்டம் தான்… தங்கச்சி தாராபுரத்தில் பைனல் இயர் படிச்சிட்டு இருக்கா… அதுனால அவுங்களுக்கு இங்கே வர முடியாது…. எனக்கு மட்டும் ஏதாவது மேன்சன் மாதிரி தங்கறதுக்கு கிடைக்குமான்னு பார்க்கணும்…” என்றான்.
“ஏங்க…. நம்ம நாலு வீடு தள்ளி பேச்சிலர்ஸ் தங்கி இருக்குற வீடு ஒண்ணு இருக்குல்ல… அதிலே ஒருத்தர் தானே தங்கி இருக்கார்… அவர் கிட்டே கேட்டு பார்க்கலாமே…” என்று தன் அபிப்ராயதைக் கூறினார் ஜானகி.
அதற்குள் சுபாஷிணி உள்ளிருந்து வந்தவள் அவர்களுக்கு தட்டில் இட்லி வைத்து சட்னி சாம்பார் பரிமாறினாள்.
“ம்ம்…. கேட்டுப் பார்க்கலாம்…. ஜானு… சரி… சாப்பிடுப்பா…” என்ற ஏகாம்பரம்,
“ஜானு… அந்த இட்லிப் பொடியைக் கொஞ்சம் எடுத்துக் குடு…” என்றார்.
அதை எடுத்துக் கொண்டு நல்லெண்ணெய் பாட்டிலுடன் வந்த ஜானகி அவருக்கு இட்லிப் பொடியைப் போட்டு நல்லெண்ணையை விட்டார்.
“தம்பி… இங்கே வீட்டுல என் பொண்ணு செய்த இட்லிப் பொடி… எனக்கு இது இருந்தா போதும்… வேற சட்னி எதுவுமே வேண்டாம்… பிரமாதமா இருக்கும்… அப்படியே என் அம்மாவோட கைப்பக்குவம் அவளுக்கு… நீயும் சாப்பிட்டு பாரு…” என்று அவனுக்கும் கொடுக்குமாறு கூறினார்.
மகளைப் பற்றி பெருமையோடு கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே சாப்பிட்டுப் பார்த்தவன் உண்மையிலேயே அதன் ருசியில் சொக்கிப் போனான்.
“ம்ம்….. உண்மைதான் சார்… ரொம்பப் பிரமாதமா இருக்கு… நல்ல கைப்பக்குவம் உங்களுக்கு…” என்று அங்கிருந்த சுபாஷிணியிடம் பாராட்டினான்.
அவள் கூச்சத்துடன் புன்னகைத்துக் கொண்டே “தேங்க்ஸ்…..” என்றாள்.
சாப்பிட்டு முடித்ததும் காப்பியைக் குடித்துவிட்டு அவர்களிடம் விடைபெற்று ஸ்டேஷனுக்கு கிளம்பினர்.
நடந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் சக அலுவலர்களின் சிரிப்பை வாங்கி பதில் சிரிப்பைக் கொடுத்து தங்கள் இருக்கைக்கு சென்றனர்.
இரவு முழுதும் டியூட்டியில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் ஏகாம்பரத்தின் அருகே வந்து, “சார்… நான் கிளம்பட்டுமா…” என்றார்.
“ம்ம்… சரி பழனிசாமி… நீ கிளம்பிக்கோ…” என்ற ஏகாம்பரம்,
“வசீகரன்…. இன்னைக்கு ரைபிள்ஸ் என்ட்ரி டியூட்டி எடுத்துக்கோ… புரியலையா… முன்னால பாரா நிக்கறது… அவர்கிட்டே அந்த ரைபிளை வாங்கிக்கோ… முதல் வேலை அதுவே ஆகட்டும்… என்ன… சரியா…” என்றார் அமைதியாக.
“சரி சார்…” என்று புன்னகையோடு அவரிடம் ரைபிளை வாங்கிக் கொண்டவன் ஸ்டேஷன் வாசலில் வந்து அட்டென்ஷனில் நின்று கொண்டான்.
தொப்பியை சரியாக்கியவன் ஏதோ ஏகே47ஐ கையில் கொடுத்தது போல் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தான். ரைபிளை ஒழுங்காய்ப் பிடிக்கத் தெரியாமல் சிறிது நேரம் நழுவவிட்டு திணறியவன் பிறகு சரியான பொசிஷனில் பிடித்து புன்னகையுடன் நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் டீக்கடையில் இருந்து ஒரு பையன் டீயுடன் வர அவனையும் டீ குடிக்க அழைத்தார் ஏகாம்பரம்.
அவர்கள் பேசிக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஜீப் சப்தம் கேட்க வசீகரன் அவசரமாய் ரைபிளுடன் வாசலுக்கு சென்று நின்றான். உள்ளே போலீஸ் மிடுக்குடன் நடந்து வந்தாள் ஹாஸினி, முன்னில் நின்றவனைக் கண்டதும் வேகமாய் அவளுக்கு சல்யூட் வைத்தவனின் கையில் இருந்து ரைபிள் நழுவி அவள் மீது விழப் போனது.
அதைக் கண்டதும் அவனை முறைத்தவள்,
“ஏன்… காலையில் ஒண்ணும் சாப்பிடலியா…” என்றாள். அவள் அக்கறையாய் விசாரிப்பதில் அதிசயித்தவன்,
“இல்லை மேடம்… இட்லி சாப்பிட்டேன்…” என்றான் புன்னகையுடன்.
“அப்ப சொங்கி மாதிரி நிக்காம கொஞ்சம் கம்பீரமா நிக்க வேண்டியது தானே…” என்று சிடுசிடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள். அதைக் கேட்டதும் காற்று போன பலூனாய் சுருங்கிப் போனது அவன் முகம்.
அழகான வெண்ணிலவே…
அகம்பாவ மேகம் கொண்டு
அன்பை நீ தொலைத்தாயே…
இருள் என்றும் உண்மையில்லை
மேகம் என்றும் நிலையில்லை
காற்றடித்தால் விலகிவிடும்…
சாரலாகப் பொழிந்து விடும்…
நிலையான அன்பாய்
வானம் இருக்க
நிழலான இருளுக்குள்
முகம் மறைக்காதே….
விடிந்ததும் உதித்திடுவான்
வெளிச்சமாய் ஆதவன்…
தெளிவான வானமாய்
ஆக்கிடுவான் மனவானம்….
விடியல் வரும் பெண்ணே…
வெளிச்சத்திற்காய் காத்திரு….
அகம்பாவ இருளும் ஓடிவிடும்
அன்பென்னும் ஆதவன் முன்னால்…..