வண்டியை அங்கிருந்த பெட்டிக்கடையின் முன்பு ஓரமாய் நிறுத்தி அவரிடம் ஜாடை காட்டிவிட்டு சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.
காலை நேரமாதலால் ஒவ்வொருவரும் பலவித அவசரத்தில் இருக்க பணிக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிக்கு செல்லுபவர்களுமாய் அந்தப் பேருந்து நிறுத்தம் நிறைந்திருந்தது.
புத்தம் புது ரோஜாக்களாய் இளம் பெண்கள் மலர்ச்சியுடன் இருக்க ரோஜாவைத் தாலாட்டும் தென்றலாய் தழுவிச் சென்றது காளையரின் கண்கள்.
ஒரு பேருந்து வந்து நிற்க அதில் முண்டியடித்து திக்கிக் கொண்டு ஏறினர். அவர்களுடன் ஹாஸினியும் ஏறினாள். பேருந்தின் நடுவில் பெண்களை உரசிக் கொண்டு சில இளைஞர்கள் நின்றிருக்க அவர்களை நோக்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.
பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும் போதும் வளைவில் திரும்பும் போதும் அவர்கள் ஒன்றும் அறியாத போல பெண்களை உரசிக் கொண்டிருக்க பெண்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருத்தன் வேண்டுமென்றே ஒரு வளைவில் ஒரு பெண்ணின் மீது விழ அவனது கைகள் அவள் தேகத்தில் தொடக் கூடாத இடங்களைத் தொட்டுச் சென்றது.
அதில் அந்தப் பெண் முகம் சிவக்க கூனிக் குறுகி அவனைத் தள்ளிவிட்டாள். அவன் தடுமாறி விழப் போனவன் அவளிடம் சண்டைக்கு வந்தான்.
“என்னம்மா… இது என்ன உன் அப்பன் வூட்டு வண்டின்னு நினைச்சியா… பஸ்சுல வந்தா அப்படித்தான் தெரியாம மேல படும்… உன் மேல படக் கூடாதுன்னா எதுக்கு பஸ்சுல வரே… தனியா வண்டி வச்சு வர வேண்டியது தானே… என்னமோ பெரிய பத்தினியாட்டம் தள்ளி விடறே….” என்று கத்தினான்.
அவனது குரலையும் கோபத்தையும் கண்டு அந்தப் பெண் நடுங்கிப் போனாலும் அவனை எதிர்க்கத் தயங்கவில்லை.
அதைக் கண்டதும் அவர்கள் அருகில் வந்த ஹாஸினி, “என்ன ஆச்சு….” என்றாள்.
அந்தப் பெண் நடந்ததைக் கூற அவனை முறைத்தவளை நோக்கி இளித்தான் அவன்.
“நீ என்ன பெரிய நாட்டாமையா…. பஞ்சாயத்து பண்ண வந்து நிக்கறே… உனக்கும் ஆசையா இருந்தா சொல்லு… உன்னையும் கொஞ்ச நேரம் உரசிட்டு நிக்கறேன்… அதை விட்டுட்டு தேவையில்லாம பஞ்சாயத்து பண்ண வந்தா நடக்குறதே வேற….” என்றான்.
அதைக் கேட்டதும் ஹாஸினியின் கண்கள் சிவக்க முகம் கடினமாய் மாற அவனை ஓங்கி ஒரு அறை விட்டாள்.
“என்னடா… என்கிட்டயே உன் வீரத்தைக் காட்டுறியா… நாயே… நடடா… போலீஸ் ஸ்டேஷனுக்கு…. டிரைவர் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க….” என்றாள் கம்பீரமான குரலில்.
அதற்குள் அவன் அருகில் நின்றிருந்த மற்றொருவன், “டேய்… அது எஸ் ஐ ஆமாண்டா… தேவையில்லாம எதுக்கு வாய விட்டே… இறங்கி ஓடிரு…” என்று காதில் கிசுகிசுக்க… ஹாஸினி டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருந்த கேப்பில் சுதாரித்தவன் டிரைவர் பேருந்தை ஓரமாய் நிறுத்தவும் சட்டென்று திரும்பி நின்று கொண்டிருந்த ஆண்களை நீக்கிவிட்டு இறங்கி ஓடினான்.
ஒரு நொடி திகைத்தவள் அவளும் பெண்கள் பக்கம் இறங்கி அவனைத் துரத்திக் கொண்டு ஓட அவர்களுக்குப் பின்னாலேயே வந்திருந்த போலீஸ் ஜீப்பும் சேர்ந்து கொண்டது.
சிக்னலில் ரோட்டைக் கிராஸ் செய்து மறுபக்கம் ஓடியவனை ஜீப் தொடர முடியாமல் நிற்க பின்னால் வேகமாய் அவனைப் பிடிக்க ஓடினாள் ஹாஸினி. வண்டிகள் சிக்னலில் நின்றிருக்க நிறுத்தப்பட்ட வண்டிகளில் இருந்து அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த வசீகரனும் இருந்தான்.
ஒரு பெண் ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவதைக் கண்டு திகைத்தவன், “ம்ம்.. பரவால்லியே… ரொம்ப தைரியமான பொண்ணுதான்… அவன் ஏதோ பண்ணிட்டான் போல… ம்ம்… பொண்ணுங்க இப்படி தான் தைரியமா இருக்கணும்…” என்று மனதுக்குள் மெச்சிக் கொண்டான்.
சிக்னல் மாறியதும் அவனது பேருந்து நகர ஹாஸினியும் அந்த ரவுடியும் அவன் பார்வை வட்டத்தில் இருந்து மறைந்திருந்தனர்.
சரவணம்பட்டி காவல் நிலையம்.
அழகான கட்டிடத்தின் முகப்பில் பசுமையாய் சில மரங்கள் கம்பீரமாய் நின்றிருக்க அதன் நிழலில் பரபரப்பாய் சில மனித முகங்கள் பிரச்சனைகளைத் தாங்கிக் கொண்டு கவலை அப்பிய முகத்துடன் யாருக்கோ காத்துக் கொண்டு நின்றிருந்தது.
காவல் நிலையத்தில் அதிகாரிகள் அவரவர் வேலையில் மும்முரமாய் இருந்தனர்.
ஏட்டு ஏகாம்பரம் எப்போதும் போல கடவுள் படத்தின் முன்பு நின்று விளக்கேற்றிவிட்டு ஊதுபத்தியை மணக்க வைத்துக் கொண்டிருந்தார்.
“கடவுளே… இன்னைக்காவது கொலை, கொள்ளை, கற்பழிப்புனு பெரிய பெரிய கேசா வராம…. சின்னதா… ஒரு திருட்டு… பிக்பாக்கெட், பெட்டி கேசுன்னு வர்ற மாதிரி பாத்துக்கோ… அதெல்லாம் கேட்டு கேட்டு மனசே மரத்துப் போச்சு…”
“ம்ம்ம்… இருக்குற கேஸையே இன்னும் தீர்க்க முடியல… புதுசா எந்தப் பெரிய பிரச்னையும் வர வேண்டாம்… அதுக்கு நீ தான் அருள் புரியணும்… கடவுளே…” என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டிருந்தார்.
அப்போது தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான் வசீகரன். அழகாய் நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு வண்ணப் பேண்ட்டும் அணிந்து டக் இன் செய்திருந்த வசீகரன் தோளில் ஒரு பேகுடன் உள்ளே நுழைந்தான்.
முன்னில் அப்போது தான் மேசையைத் துடைத்து பைல்களை சரியாய் அடுக்கிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளிடம் சென்றவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
“சார்…” அவனது குரலைக் கேட்டும் தன் பணியிலேயே கண்ணாக இருந்தவர் துடைப்பதை முடித்துவிட்டே நிமிர்ந்தார். “ம்ம்…..” என்று நிமிர்ந்தவர்,
அவனது தலை முடியின் போலீஸ் கிராப்பும் அழகாய் திருத்தமாய் வெட்டப்பட்டு இருந்த மீசையும் மொழு மொழுவென்று சவரம் செய்யப்பட்ட முகமும் ஏதோ உணர்த்த, “எஸ் சார்….” என்று சட்டென்று மரியாதைக்கு மாறினார்.
அதைக் கண்டு வியந்த வசீகரன், “சார்… என் பேரு வசீகரன்…. இங்கே கான்ஸ்டபிளா ஜாயின் பண்ண வந்திருக்கேன்…” என்று கூறியதும் விறைப்பாய் நின்றிருந்தவர் இயல்புக்கு வந்தார்.
“ஓ…..” என்று அவனை ஏற இறங்கப் பார்த்தவர்,
“அதோ ஏட்டையா இருக்கார்… அவர்கிட்டே போ தம்பி…” என்று அனுப்பி வைத்தார்.
ஊதுபத்தியைக் காட்டிவிட்டு திரும்பிய ஏட்டு ஏகாம்பரம், “ம்ம்…. இப்போதான் சொன்னேன்… அதுக்குள்ளே ஒருத்தனை அனுப்பிட்டியே…” என்றபடி திரும்பினார்.
“சொல்லு தம்பி… என்ன பிரச்சனை….” என்றார்.
“சார் நான் வசீகரன்…” என்றவன் ஒரு கவரை நீட்டினான்.
அதை வாங்கியவர், “ஓ…. சொல்ல வேண்டியதை பேப்பர்ல எழுதியே கொண்டு வந்திட்டியா… ஹ்ம்ம்… விவரமான பையன் தான்….” என்றார்.
“சார்… நான் ஏட்டு அரவிந்தன் பையன்… இங்கே கான்ஸ்டபிளா ஜாயின் பண்ண வந்திருக்கேன்… அதுக்கான ஆர்டர் தான் இது…” என்றான் வசீகரன்.
“ஓ… அப்படியா…” என்றவரின் முகம் ஒரு நிமிடம் சிந்தனைக்குப் போய் மீண்டது.
“அரவிந்தன் சார் பையனா… ம்ம்…” என்று அந்த கவரை வாங்கிப் பார்த்தார்.
அவனது வேலைக்கான அரசு ஆர்டரைப் பார்த்துவிட்டு “உன் அப்பா கூட ஒண்ணா வேலை செய்யலைன்னாலும் அவரைப் பத்தி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன்ப்பா… கொஞ்ச நாள் பழகியும் இருக்கேன்…”
“ரொம்ப நல்ல மனுஷன்… அவருக்கு இப்படி ஒரு மரணம் வந்திருக்க கூடாது… விதி யாரை விட்டது…” என்று அவரைப் பற்றி யோசித்து வருத்தத்தோடு கூறியவர்,
“வீட்ல அம்மா, தங்கை எல்லாம் நல்லாருக்காங்களா….” என்று விசாரித்தார்.
“ம்ம்… நல்லாருக்காங்க சார்…”
“சரி…” என்றவர் அங்கே இருந்த மற்ற சக அலுவலர்களை அழைத்தார்.
அவனிடம் சிநேகமாய் கை குலுக்கியவர்கள் அவர்களும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
“என் பேரு பழனிச்சாமி… காந்திபுரத்தில் தான் வீடு… உங்க வீடு எங்கே….” என்றார் ரைட்டர் ஒருவர்.
“என் வீடு தாராபுரம் பக்கத்துல…” என்றான்.
“அப்படியா… என் கொழுந்தியாவை கூட அங்கே தான் கொடுத்திருக்கோம்…” என்றவர் அவளது தெருவின் பெயரைக் கூறி தெரியுமா…” என விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டேஷன் வாசலில் ஜீப் வந்து நிற்கும் ஓசை கேட்டதும் அவர்கள் அலர்ட் ஆயினர்.
“சார்… அந்த ஜான்சி ராணி வந்திருச்சு போலிருக்கு…” என்று அவசரமாய் அவரவர் மேசைக்கு சென்றனர். காக்கி உடையில் புயலாய் நுழைந்தாள் அந்தப் பெண். பின்னாலேயே ஜீப் டிரைவர் சேகர் அங்கங்கே காயத்துடன் இருந்த ஒருத்தனை இழுத்துக் கொண்டு வந்தார்.
அனைவரும் விறைப்பாய் அவளுக்கு ஒரு சல்யூட்டைப் பதிக்க அதைத் தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டே நடந்தாள். அவளது நெஞ்சத்தில் குத்தப்பட்டிருந்த பேட்ஜ் அவளது பெயர் M. ஹாஸினி, சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்… என்பதைக் கூறியது.
“சேகர்… அவனை இழுத்துட்டு வாங்க…” என்றவளின் குரலில் இருந்த கம்பீரமும் முகத்தில் இருந்த கடினமும் அந்த அழகான முகத்தின் மென்மையைக் குறைப்பதாய்த் தோன்ற அவளை அதிசயம் போல நோக்கிக் கொண்டிருந்தான் வசீகரன்.
முன்னமே அடி வாங்கி அங்கங்கே ரத்தம் கண்ணிப் போயிருந்த அவனை இழுத்துக் கொண்டு போய் லாக் அப்பில் தள்ளியவள்,
“பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா…. என்ன தைரியம் இருந்தா தண்ணி போட்டுட்டு கட்டின பொண்டாட்டியை ரோட்டுல வச்சுடு இப்படி அடிப்பே… அவ மட்டும் ஒரு கேசு குடுக்கட்டும்… மவனே… உன்னத் தொவைச்சு காயப் போட்டுடறேன்….” என்றவளின் சிவந்த முகம் அவளது கோபத்தை வெளிப்படுத்தியது.
அவளது ஆவேசமும் கோபமும் அவனுக்கு திகைப்பைக் கொடுக்க பிரமிப்பாய் நோக்கிக் கொண்டிருந்தவனின் தோளில் கை வைத்த ஏகாம்பரம்,
“இந்தப் பொண்ணு தான் நம்ம ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர்… பொதுவாவே ஆம்பளைங்கன்னா அதுக்கு வேப்பங்காய் மாதிரி… அதும் பொம்பளைங்களை ஏதாவது துன்புறுத்திட்டு கையில மாட்டினா அவ்வளவு தான்… சாமியாடிரும்….” என்று அவளைப் பற்றி காதில் கிசுகிசுத்தார்.
லாக் அப்பை சாத்திவிட்டு திரும்பியவள் அங்கே நின்ற புதியவனைக் கண்டதும் பார்வையை அவன் மீது பதித்தாள்.
அவன் கண்களைக் கண்டதும் கண்ணுக்குள் ஒரு மின்னல் ஓடியது. அவனிடம் இருந்து பார்வையை விலக்கி ஏகாம்பரத்தை நோக்கினாள்.
“ம்ம்ம்…. யாரு…” என்பது போல் ஒரு பார்வையை அவரை நோக்கி வீச,
“நம்ம ஸ்டேஷன்ல கான்ஸ்டபிளா ஜாயின் பண்ண வந்திருக்கார் மேடம்… நம்ம ஏட்டு அரவிந்தன் சார் பையன்…” என்று அறிமுகப் படுத்தினார் அவர்.
“ம்ம்ம்… ஆளைப் பார்த்தா கான்ஸ்டபிள் வேலைக்கு வந்த மாதிரி தெரியலியே… எதோ ஐ டி கம்பெனியில ஜாயின் பண்ணப்போற போல டிப் டாப்பா வந்த மாதிரி இருக்கு….”
அவளது கேலியான குரலைக் கேட்டதும் வசீகரனின் முகம் வாடி விட்டது…. ஏன் கான்ஸ்டபிள் நல்ல டிரெஸ் போடக் கூடாதோ… என்று மனது முரண்டு பிடித்தது.
“சரி… எல்லாம் செக் பண்ணி தேவையான டீடெயில் எல்லாம் வாங்கிக்கோங்க…. தொப்பியும் பெல்ட்டும் இஸ்யூ பண்ணிருங்க…. நாளைக்கு ஜாயின் பண்ணட்டும்…” என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
“ம்ம்… கனவுல கண்ட மாதிரியே எல்லாம் நடக்குதே…” என யோசனையுடன் போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வசீகரனின் தோளில் மெல்லத் தட்டினார் ஏகாம்பரம்.
“என்ன தம்பி… அந்த ஜான்சி ராணியவே அதிசயமா பார்த்திட்டு இருக்கீங்க… அந்தப் பொண்ணு கொஞ்சம் முரட்டு தனமா இருந்தாலும் சுபாவம் நல்லது தான்…. சுதந்திரமா இருக்க ஆண்கள் தான் தடைன்னு அதுக்கு ஒரு எண்ணம்…..”
“நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு… போலீஸ் துறைக்கு விரும்பி வந்திருக்கு…. பெண்களுக்கு துரோகம் பண்ணுறவங்க யாரா இருந்தாலும் விட்டு வைக்காது… யாருக்காவது ஏதாவது கஷ்டம்னாலும் நல்லா உதவி செய்யும்…. ஆனா சாதாரணமா யாருகிட்டேயும் பேசவோ சிரிக்கவோ செய்யாது…” என்று அவளைப் பற்றிக் கூறினார்.
“ம்ம்… நான் நேத்து டவுனுக்கு ஒரு வேலையா வந்திருந்தேன்…. அப்போ இந்தப் பொண்ணு பஸ்ஸில் வம்பு பண்ணின எதோ ஆளை அடிச்சு ரோடுல ஓட விட்டு துரத்திட்டு இருந்துச்சு…. பாக்க சின்ன பொண்ணா இருக்கே… ரொம்ப துணிச்சல் தான் போலன்னு நினைச்சேன்… சப் இன்ஸ்பெக்டர்னு தெரியாது…” என்றான் வசீகரன்.