Advertisement

“ஏன்மா….. எங்களை உடனே அழைத்து சொல்லலை…. ஆப்பரேஷன் முடிஞ்சு வார்டுக்கு மாத்தின பின்னால கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லறே….” என்று மகளைக் கடிந்து கொண்டார் ராஜேஸ்வரி.
“அவருக்கு குண்டடிபட்ட அந்த நேரத்தில் என்ன பண்ணறதுன்னு எனக்கு எதுவுமே தோணலை மம்மி… ஆப்பரேஷன் முடிஞ்சு பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் தான் எனக்கு உணர்வே வந்துச்சு…. அப்புறம் முதல்லயே  உங்களைக் கூப்பிட்டு சொன்னா நீங்க ரெண்டு பேரும் ரொம்பப் பதறிப் போயிடுவீங்கன்னு தெரியும்… அதான் அப்பரேஷன் முடிஞ்சு மெதுவா சொன்னேன்…..” என்று கூறியவளை அன்போடு பார்த்திருந்தார் சபர்மதி.
அவளது பேச்சில் வசீகரனின் மீதும் அவர்கள் மீதும் அவள் வைத்திருந்த அன்பும் அக்கறையுமே வெளிப்பட்டது. அதற்குள் ஏகாம்பரம் ஜூஸ் வாங்கி வந்து கொடுக்கவும் வசீகரனின் வாயில் சிறிது சிறிதாகக் குடிக்கக் கொடுத்தாள் ஹாஸினி. அவளைக் காதலுடன் பருகிக் கொண்டே அதை குடித்துக் கொண்டிருந்தான் வசீகரன். அவனது பார்வையில் வெட்கினாலும் பெரியவர்கள் முன்னில் இயல்பாய் காட்டிக் கொண்டாள் ஹாஸினி.
கோர்ட்டில் நடந்த விஷயங்களைப் பற்றி சிறிது நேரம் பொதுவாய் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஏகாம்பரத்திடம் சுபாஷிணியைப் பற்றி விசாரித்தார் சபர்மதி.
“அண்ணா… சுபாஷிணி மறுவீட்டுக்கு எப்போ வர்றா……”
“இன்னைக்கு சாயந்திரம் வந்திருவாம்மா…. ரெண்டு நாள் இருந்துட்டு தான் போவாங்க…..”
“ஓ… அப்படியா…. வளர் கல்யாணத்துக்கு மாப்பிள்ளையோட  வந்திருவா தானே….”
“கண்டிப்பா வருவா…. மாப்பிள்ளை கிட்டே கண்டிப்பா அழைச்சிட்டு வரணும்னு நானும் சொல்லிடறேன்… போதுமா….” என்று சிரித்தவர், “சரிம்மா… நான்  வீட்டுக்குக் கிளம்பட்டுமா…. கொஞ்சம் சாமான்லாம் வாங்கப் போகணும்னு ஜானு சொல்லிட்டு இருந்தா…. சுபா வரதுக்குள்ளே போயிட்டு வரணும்…. இங்கே வேற ஏதாவது தேவை இருக்கா….” என்று வசீகரனைப் பார்த்தார்.
“இல்லை… நீங்க கிளம்புங்க சார்…. இவ்ளோ நேரம் எங்களுக்காக இங்கே இருந்ததே பெரிய விஷயம்…. அம்மா… அத்தை…. நீங்களும் வேணும்னா கிளம்புங்க…. ஹாஸினி இருக்காள்ள…. பார்த்துக்குவா….” என்றான் வசீகரன்.
“ம்ம்… சரிப்பா….” என்று ஏகாம்பரம் விடை பெறவும், “ஹாஸினி… நீ போயி குளிச்சு டிரெஸ் மாத்திட்டு வந்து சாப்பிடும்மா….. உன் காக்கி டிரஸ்ல அங்கங்கே ரத்தம் வேற ஆகியிருக்கு…. நீ சாப்பிட்டதும் நாங்க கிளம்பறோம்…..” என்றார் சபர்மதி.
“சரி அத்தை….” என்றவள் அந்த அறையில் இருந்த பாத்ரூமிற்கு சென்று பிரெஷ் ஆகி அவர்கள் கொண்டு வந்திருந்த சுரிதாரைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.
“நீங்களும் சாப்பிடறீங்களா… நான் ஊட்டறேன்” என்றவள், அவன் குறும்புப் புன்னகையோடு தலையசைக்கவும், அருகில் அமர்ந்து அவனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டாள். மகளின் செய்கையில் மனம் நிறைந்தார் ராஜேஸ்வரி.
“நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா,  ஒரே மாதிரி குணத்தோட இருக்குறதைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… உன் அப்பா இதைப் பார்த்திருந்தா ரொம்ப சந்தோசப் பட்டிருப்பார்மா…” கண்கலங்கிய ராஜேஸ்வரியின் தோளில் ஆறுதலாய்க் கை வைத்தார் சபர்மதி.
“அண்ணி…. அண்ணாவும், வசீ அப்பாவும் எங்காவது இருந்து இவுங்களைப் பார்த்து சந்தோஷப் பட்டுகிட்டு தான் இருப்பாங்க…. அவுங்களோட ஆசியும், ஆதரவும் எப்பவும் இவுங்களுக்கு துணை நிற்கும்… கலங்காதீங்க….” என்றார். அவர்களின் பேச்சைக் கேட்டு மனம் நிறைந்து சிரித்தனர் சிறியவர்கள்.
சாப்பிட்டு முடித்ததும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்பிச் சென்றனர். வசீகரனுக்கு கையில் சற்று வலி அதிகம் இருந்ததால் டாக்டர் வலிநிவாரணி மாத்திரை கொடுக்க அதைக் குடித்துவிட்டு உறங்கத் தொடங்கினான்.
அவனுக்கு அருகில் முகத்தையே பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்த ஹாஸினி அவனது வலது கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே தலையைக் கட்டிலில் வைத்து உறங்கிப் போனாள். அதிகாலையில் விழிப்பு வரவே கண்ணைத் திறந்த வசீகரன், அமர்ந்த நிலையில் கட்டிலில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த ஹாஸினியைக் கண்டு நெகிழ்ந்தான்.
“இளவரசி மாதிரி இருப்பவள்…. எனக்கு வேண்டி இப்படியே உறங்குகிறாளே…. என் மீது இத்தனை காதலா…. ம்ம்ம்… இப்போதாவது உணர்ந்து கொண்டாளே… கள்ளி…” என்று மெல்ல புன்னகைத்தவன், அவளது தலையைத் தடவிக் கொடுத்தான்.
பகல் முழுதும் இருந்த அலைச்சலும் அழுகையும் அவளுக்கு மிகுந்த சோர்வைக் கொடுத்திருக்க அவனோடு மனம் விட்டுப் பேசியதில் கிடைத்த நிம்மதியும் சேர்ந்து கொள்ள அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவனது கைகளின் ஸ்பரிசத்தில் குழந்தையைப் போல் புன்னகைத்தவளை காதலுடன் பார்த்திருந்தான் அவள் கணவன். அங்கிருந்த இரண்டு நாட்களில் ஒருவரை ஒருவர் மனதால் மிகவும் நெருங்கி இருந்தனர். சிறு சிறு சில்மிஷங்களோடு அவர்களின் காதலும் வளர்ந்து வந்தது. சிறிது நாட்கள்  கையை அசைக்கக் கூடாது என்று டாக்டர் கூறிவிட்டதால் வசீகரனைக் கண்ணாய் கவனித்துக் கொண்டாள் ஹாஸினி.
வளர்மதியின் கல்யாணத்திற்கு நாட்கள் நெருங்கி விட்டதால் ஹாஸ்பிடலில் இருந்து டாக்டரின் அனுமதியுடன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றனர்.
சந்திரனை தன் வெளிச்சக் கதிர்களால் மறைத்துக் கொண்டு கிழக்கில் உதயமாகத் தொடங்கி இருந்தான் சூரியன். அங்கங்கே பறவைகளின் கீச்…. கீச்சென்ற குரல் கேட்டுக் கொண்டிருக்க, அப்போதுதான் குளித்து முடித்து புத்தம் புதிய பூவாக பளிச்சென்று நைட்டியில் நின்று கொண்டிருந்தாள் ஹாஸினி. மனம் முழுவதும் கணவனின் நினைவில் மலர்ந்திருக்க, உதடுகள் ஏதோ ஒரு திரைப் பாடலை புன்னகையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
குளித்துவிட்டு வந்த வசீகரன், ஹாஸினி பால்கனியில் நிற்பதைக் கண்டு அவளிடம் சென்றான்.
அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டவள் அழகாய் புன்னகைத்தாள்.
“குட் மார்னிங் வசீ…..”
“குட் மார்னிங் பேபி…. என்ன காலைல வேடிக்கை பார்த்திட்டு நின்னுட்டு இருக்கே…. கோவிலுக்குக் கிளம்பணுமே…. புறப்படலியா…”
“கிளம்பணும் வசீ…. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்….” என்றவளின் குரல் அந்தக் குளிரான காலையில் அவன் அருகாமையில் குழைந்திருந்தது.
குளித்துவிட்டு வந்தவனின் மீதிருந்து வீசிய ஷேவிங் கிரீமும், சோப்பும் கலந்த வாசம் அவளைக் கிறங்கடித்தது. கணவனை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட பின்னர் அவனது ஒவ்வொரு விஷயங்களும் மனதில் ரசனையோடு பதிந்தது. அவனது சிறு தீண்டல்களையும் மனம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கத் தொடங்கியது.
“வசீ… கை வலிக்குதா…. எப்படி இருக்கு…. காட்டுங்க….” என்றவள் அவனது காயத்தை ஆராய்ந்தாள். முந்தின நாள் தான் அவனது தோள்பட்டையில் இருந்த கட்டைப் பிரித்துவிட்டு வந்திருந்தனர். தினமும் ராமு தான் அவனுக்கு குளிப்பதற்கு உதவி செய்து வந்தார்… கட்டைப் பிரித்து விட்டதால் அவனே குளித்துக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
காயத்தில் தண்ணீர் ஆகாமல் இருக்க சுத்தியிருந்த கவரை எடுத்துவிட்டு கையைப் பிடித்து காயத்தில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை பார்த்தாள். காயம் வெளியில் தெரியாவிட்டாலும் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு சிரித்தான்.
“ஹஹா… கையைப் பார்த்ததும் எப்படி இருக்குன்னு புரிய நீ என்ன டாக்டரா…. கையைத் தூக்கும்போது மட்டும் வலிக்குது பேபி…. மத்தபடி ஒண்ணும் இல்லை….” என்றவன், அவளது சிவந்திருந்த முகத்தையே ஆசையோடு பார்த்தான்.
அவனது நெருக்கமும் அவனிடமிருந்து வீசிய நறுமணமும், தேகத்தின் இருந்த குளிர்மையும் அவளிடம் ஒரு தவிப்பை உருவாக்கியது. அதை உணராமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் அவள் ஆசைக் கணவன்.
“பேபி… வளர் நிச்சயத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வரத் தொடங்கிருவாங்க…. நிறைய வேலை இருக்கும்…. நாம சீக்கிரம் கோவிலுக்குப் போயி பூஜை பண்ணிட்டு வந்திருவோம்….” என்று பொறுப்புள்ள அண்ணனாய் அவள் மனம் புரியாமல் அவன் கூற அவனையே கண்ணெடுக்காமல் நோக்கியவள் சிவந்த முகத்துடன் குறும்பாய் புன்னகைத்து திரும்பி நின்றாள். 
“ஆஹா…. சும்மாவே இங்கே முடியல…. இதுல சிரிக்க வேற செய்யுறாளே….” என்று மனதுக்குள் புலம்பிய வசீகரன், அவளது தோளை உரசிக் கொண்டு நின்றான். சிலு சிலுவென்ற குளிர்காற்றில் அவளது ஷாம்பிட்ட கூந்தல் படபடத்துக் கொண்டிருக்க அவனுக்கும் மனது அலைபாய்ந்தது.
“இப்போ எதுக்கு இப்படி சிரிச்சு மனுஷனை உசுப்பேத்துறே….”
“அதுசரி….. சிரிக்குறது ஒரு தப்பா…. அப்படியே உசுப்பேத்திட்டா மட்டும் நீங்க என்ன பெருசா செய்துடப் போறீங்க….” என்றவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவன்,
“ஏய்…. வேண்டாம்டீ….. இல்லேன்னாலே காலைல குளிருது….. சும்மா என்னை வெறுப்பேத்தாதே…. அப்புறம் ரணகளம் ஆயிடும்….”
“அட பார்ரா…. அய்யா டீ போட்டெல்லாம் பேசுறாரு…. என்ன…. மீறிப் போனா ஒரு கிஸ் அடிப்பீங்க…. வேற என்ன செய்துடப் போறீங்க… இதுல பெருசா பேச்சு வேற… தள்ளுங்க….” என்று அவனைத் தள்ளிவிட்டு அறைக்குள் நுழைந்தவளைப் பின்னில் வந்து அணைத்தவன், அவளை அப்படியே தள்ளிக் கொண்டு போய் கட்டிலில் தள்ளி அவள் இதழ்களை சிறை பிடித்தான்.
அவனது தீண்டலுக்காய் ஏங்கிக் கொண்டிருந்தவள், அந்த இதழ் தீண்டலில் கரைந்து உருகிப் போனாள். அவனது சிகையில் அவளது விரல்கள் விளையாடிக் கொண்டிருக்க சத்தமில்லாத அந்த முத்தத்தின் நேரம் நீண்டு கொண்டே போனது. கண்கள் விரிந்து படபடக்க…. முகம் சிவந்து… மூச்சிற்காக அவள் தவிப்பது தெரிந்து விடுவித்தவன் அவளது முகத்துக்கு நேரே முகம் வைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடி…. என் மாமன் மகளே…. முழியைப் பாரு…. முட்டைக் கண்ணி….. அப்படியே ஒரு ஆழாக்கு கண் இருக்கும்டி உனக்கு…. ஆளையே முழுங்குற போலப் பார்க்க வேண்டியது…. சரி…… கை இன்னும் கொஞ்சம் சரியாகட்டும்னு நானும் பொறுத்துப் போயிட்டிருந்தா ரொம்ப தான் என்னை சீண்டி விடறே….”
அவன் பேசிக் கொண்டிருக்க அவள் பதில் கூறாமல் அந்த உணர்வில் இருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த உதடு எத்தனை பேசுச்சு……. எங்கே… இப்போ பேசுடி…. பாக்கலாம்….” என்று குறும்புடன் கூற அவள் நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.
“அட…. உலக அதிசயமா என் பொண்டாட்டி வெக்கப் படறாளே….” என்றவன் அவளது நெற்றியில் தனது விரலால் கோடு வரைந்து மூக்கு, வாய், காது கழுத்து என்று பயணம் செய்ய அதில் கூசியவள் அவன் கைகளை மாற்றிவிட்டாள்.
“ஏய்… வேணாம்டா…. கூச்சமா இருக்கு….” என்று சிணுங்கினாள்.
“என்னது டாவா….. புருஷனை டான்னு சொல்லிக் கூப்பிடுவியா…..”
“ம்ம்… டா….. ஆமாம் டா…. எனக்குப் பிடிச்சிருக்கு டா… ப்ளீஸ்டா…. நம்ம ரூம்ல மட்டும் டா….” என்று விடாமல் அவள் டா போட,
அவளது கொஞ்சல் அவனுக்கும் பிடிக்கவே சிரித்தவன், “எனக்கு, டா… ஓகே தான்…. ஆனா அதுக்கு நீ ஒண்ணு பண்ண வேண்டிவரும்…. பரவாயில்லையா….”
“என்ன பண்ணனும் டா…. சொல்லு டா…. செய்யறேண்டா….”
“நீ ஒவ்வொரு தடவை டா போடும்போதும் எனக்கு முத்தம் கொடுக்கணும்…. இந்த டீலிங் ஓகேனா… உன் ஆசைப்படி நீ கூப்பிட்டுக்கலாம்….” என்றான் குறும்புடன்.
“டீலிங்… ஓகே டா….” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து சென்றாள். எதிர்பாராமல் மனையாள் முதன்முதலில் கொடுத்த முத்தத்தில் அவன் சிலிர்த்திருக்க, அலமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
“என்ன பேபி இது….” கட்டிலில் அமர்ந்து கேள்வி கேட்டவனின் அருகில் அமர்ந்தவள்,  சீரியசாய்ப் பேசத் தொடங்கினாள்.
“வசீ…. உங்க பிறந்தநாள் அன்னைக்கே என் மனசில் உள்ளதெல்லாம் சொல்லி இந்தப் பரிசைக் கொடுக்கணும்னு வாங்கி வைத்தேன்…. ஆனா அன்னைக்கு என்னால சொல்ல முடியாமல் போயிருச்சு…..” என்றவளை நோக்கி புன்னகைத்தான் வசீகரன்.
“நீ சொல்லலேன்னா என்ன பேபி… நீ என்மேல எவ்ளோ ஆசையும் காதலும் வச்சிருக்கேன்னு அன்னைக்கே நான் பார்த்தேனே….”
“என்ன சொல்லறீங்க வசீ… உங்களுக்கு எப்படித் தெரியும்….”
“நான் ராத்திரி வீட்டுக்கு லேட்டா வந்தப்போ, நீ என் புளூ சட்டையை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்திட்டு படுத்திருந்தியே…. அதைவிட அழகா நீ எப்படி உன் காதலை சொல்ல முடியும்….” என்றான் கள்ளச் சிரிப்புடன்.
“திருட்டுப் பையா… அன்னைக்கு பார்த்திட்டு தான் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி ஹாலில் போய் படுத்துகிட்டியா…. உன்னை…” என்று அவனை செல்லமாய்த் தலையில் தட்டியவள் பிரேஸ்லெட்டை எடுத்து அவன் கையில் கட்டி விட்டாள்.
“வசீ பிடிச்சிருக்காடா…” தவிப்பும் ஏக்கமும் கலந்து வந்தது அவளது வார்த்தைகள்.
“ரொம்பப் பிடிச்சிருக்கு பேபி…. இதை விட இதைக் கொடுத்தவங்க மனசை….” என்றவன் அவள் கையில் மென்மையாய் முத்தமிட்டான்.
அதில் நெகிழ்ந்தவள், “வசீ…. தெரிஞ்சே உன் மனசை நான் பலமுறை காயப்படுத்தி இருக்கேன்…. அதையெல்லாம் பொறுத்துகிட்டு காதலை மட்டுமே நீ எனக்குக் கொடுத்தே… உன்னோட காதல் அந்தி நேரத்துல வர்ற அழகான சாரல் மாதிரி என்னை சிலிர்க்க வைக்குது…. அந்த மழைச்சாரல் என் வாழ்நாள் முழுதும் வேணும்னு நான் ஆசைப்படறேன்….” சற்று நிறுத்தியவள்,
“என்னோட வாழ்க்கைல ஒரு கதாபாத்திரமா நீ வந்துட்டுப் போயிடுவேன்னு நினைச்சேன்…. இப்போ என் வாழ்க்கையே நீதான்னு புரிஞ்சுகிட்டேன்…. என்னோட எல்லாத் தப்பையும் மன்னிச்சு என்னை உன் மனைவியா முழுமனசோட ஏத்துக்குவியா வசீ….” கண் கலங்கக் கேட்டாள்.
“பேபி…. என்னடா இப்படில்லாம் பேசறே…. நீ எப்படி நினைச்சு என்னை உன் வாழ்க்கைல சேர்த்துகிட்டாலும் நான் உன்னை எப்பவும் என் காதலியா…. மனைவியா மட்டும் தான் நினைச்சேன்…. அன்போட அருமை தெரியாம அதிகாரத்தையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்தவ நீ… உன்னோட சில தீர்மானங்கள் தப்பா இருந்திருக்கலாம்… ஆனா நீ தப்பானவ இல்ல….”
“சிப்பிக்குள் விழுந்த மழைத்துளியா உன் மனசுலயும் என் மேல் காதல் இருக்கத்தான் செய்தது… அதை உன் பார்வையிலேயே நான் புரிஞ்சுகிட்டேன்…. நீயா அதைப் புரிஞ்சுக்கணும்னு தான் நானும் காத்திருந்தேன்….”
“என் முன் ஜென்மத் தேடலாய், இந்த ஜென்மத்தில் கிடைச்ச வரம் நீ…. இந்த சிப்பிக்குள் ஒளிஞ்சிருந்த காதல் முத்தை எனக்குக் கிடைச்ச பொக்கிஷமா தான் நான் நினைக்கிறேன்….. நீ என் வாழ்க்கையில் கிடைச்ச வரம்டா….” அவன் பேசுவதை கண்ணில் நீருடன் கேட்டிருந்தவள் அவன் நிறுத்தியதும்,
“வசீ….. ஐ லவ் யூ… வசீ….” என்று வேகமாய் கட்டிக் கொண்டாள். அவனது கன்னத்திலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தியவள் அவன் நெஞ்சில் மகிழ்ச்சியுடன் சாய்ந்து இறுகக் கட்டிக் கொண்டாள்.
அவளது அன்புச் சாரலில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தவன், அவளது தீண்டலில் கட்டுப் பாட்டை இழந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ஐ லவ் யூ பேபி… லவ் யூ சோ மச்…..” என்று மீண்டும் அவள் இதழை தன் இதழால் மூடியவன், அத்தோடு நிற்காமல் அவள் முகமெங்கும் முத்தமிட்டு மேலும் முன்னேறி சொர்கத்தின் நரம்புகளைத் தேடித் பிடித்து இசைத்தான். இன்பமான அந்த அவஸ்தையில் மெல்லத் தன்னை மறந்தவள் அவனது விரல்களின் ரசனையான மீட்டலில் தன்னையே இழந்து கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் தன் தேடலை நிறுத்திவிட்டு அவளது பளிங்கு முகம் நோக்கி சம்மதத்தைக் கேட்க, அந்த நாணமான தலையாட்டல் அவள் சம்மதத்தைக் கூறியது. அதற்குப் பிறகு சற்றும் தாமதியாமல் அவளில் வேகமாய் அவன் முன்னேற இருவருக்குள்ளும் இனிதாய் ஒரு சங்கமம் நடந்தேறியது.
தன்னைப் புரிந்து கொண்டு தன் மனமாற்றத்திற்காய்…. தன் காதலுக்காய்…. காதலோடு காத்து நின்ற கணவனின் நெஞ்சத்தில் ஆசையோடு முகம் பதித்தாள். அவளது நெஞ்சத்தில் அவன் முகம் பதிக்கையில் இருந்த கூச்சம் அவனது நெஞ்சத்தில் அவள் சாய்ந்தபோது முழுமையாய் போய் விட்டிருந்தது.

Advertisement