Advertisement

அத்தியாயம் – 19
நாட்கள் அதன் பாட்டில் செல்ல, சுபாஷிணியின் கல்யாணம் முடிந்திருந்தது. அடுத்து நகுலன் வளர்மதியின் கல்யாணத்திற்காய் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கல்யாணத்திற்கு பத்து நாட்களே இருக்க வீட்டினர் கல்யாண வேலைகளில் பிசியாக அலைந்து கொண்டிருந்தனர்.
தீவிரவாதி சிவாவின் வழக்கு பல கட்ட விசாரணைகள் முடிந்து அன்று தீர்ப்பு வழங்கப் படுவதாக இருந்தது. கோர்ட்டுக்குள் நுழைந்த வசீகரனும் ஹாஸினியும் நீதிபதியின் தீர்ப்பிற்காக பதட்டத்தோடு காத்திருந்தனர். ஏட்டு ஏகாம்பரமும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
நீதிமன்றம் பலத்த அமைதியோடு இருக்க மூக்குக் கண்ணாடியை சரியாக்கிக் கொண்டு நிதானமாய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி குமாரசாமி.
“நடந்து முடிந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாதி சிவாவே அப்ரூவராக மாறி தனது வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ளவர்களை சாட்சியத்தோடு காட்டிக் கொடுத்து தன் குற்றத்தையும் ஒத்துக் கொண்டதால் அவருக்கும் இந்த நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது…..”
“மேலும் இந்த வழக்கின் பின்னணியில் இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான சாரங்கபாணியை போதை மருந்து கடத்தல், காட்டின் வளத்தை சுரண்டுதல், ஏட்டு அரவிந்தன் கொலை வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, கள்ளக் கடத்தல் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்டிருப்பதால் அவரது கணக்கிலில்லாத சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், அவரது குற்றங்கள் நிரூபணம் ஆனதால் ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கிறேன்….”
“சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பதவியில் இருந்து கொண்டு இவர்களுக்குத் துணைபோன இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அவரே அநியாயத்துக்குக் துணை சென்றதால் நிரந்தரப் பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடுகிறேன்….”
“இந்த வழக்கில் மிகவும் சிறப்பாக புலன் விசாரணை செய்து சாதுர்யமாக குற்றங்களை ஆவணங்களுடன் விரைவில் நிரூபித்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் வசீகரன், ஹாஸினி மற்றும் சக அலுவலர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது….”
“இத்துடன் கோர்ட் கலைகிறது….” என்று அவர் சாசனத்தில் கையெழுத்திட்டு எழுந்து செல்ல குற்றவாளிகளை போலீஸ் அழைத்துச் சென்றது. அவர்களைக் கடந்து செல்கையில் நின்ற சிவா, வசீகரனிடம் வந்தான்.
“சார்…. பத்து வருஷமா அந்த ஆளுக்கு வேண்டி எத்தனையோ தப்பு பண்ணி இருக்கேன்…. கடைசில அவன் அரசியல் புத்தியைக் காட்டிட்டான்….. தகுந்த நேரத்துல நீங்க சொன்ன மாதிரி அப்ரூவரா மாறினதால என் தண்டனைக் காலம் குறைஞ்சிருச்சு…. இனி வெளியே வந்ததும் என் பேர்ல வெறும் சிவா மட்டும் தான்…. தீவிரவாதி, கடத்தல்காரன் சிவா செத்துட்டான்… ரொம்ப நன்றி சார்…” என்றான்.
“வாழ்க்கையை எல்லாருக்கும் பயனுள்ள மாதிரி வாழணும்… கத்தி எடுத்த எவனும் மனநிம்மதியோட வாழவே முடியாது… இனியாவது நீ திருந்தி நல்லபடியா இருந்தா சந்தோசம் தான்…..” என்ற வசீகரனைப் பெருமையுடன் பார்த்தார் ஏகாம்பரம்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற சாரங்கபாணி, “திட்டம் போட்டு என்னைக் கேஸ்ல மாட்டிவிட்டு… என் ஆளையே எனக்கெதிரா அப்ரூவரா மாற வச்சு…. என் சொத்தை எல்லாம் அபகரிச்சு…. என்னை செல்லாக் காசாக்கிட்டே இல்லே…. உன்னை நான் சும்மா விட மாட்டேன்…. உன் அப்பன் போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வைக்கறேன்….” என்று கத்தியவர்,
அங்கே பக்கத்தில் நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து வசீகரனை சுட்டார்…. அது அவனது இடது தோள் பட்டையை துளைத்து சென்றது.
மறுபடியும் அவன் சுடுவதற்குள் ஹாஸினியின் துப்பாக்கி அவன் கையைக் குறிவைத்து துப்பாக்கியை கீழே வீழ்த்தியிருந்தது.   
வசீகரனின் தோளில் இருந்து வேகத்தோடு வெளியேறிக் கொண்டிருந்த ரத்தத்தைக் கண்டு பதறிய ஹாஸினி, “வசீ…..” என அலறிக் கொண்டு அவனைத் தாங்கிக் கொண்டாள். அதற்குள் அங்கே ஆட்கள் கூடிவிட இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அந்த சாரங்கபாணியை ஓங்கி அறைந்திருந்தார்.
“என்ன தைரியம் இருந்தா போலீஸ்காரன் மேல… போலீஸ் துப்பாக்கியவே நீட்டுவே…. இவ்ளோ தண்டனை கிடைச்சும் உனக்குப் பத்தலையா…. ரெட்டை ஆயுள் தண்டனையா மாத்தணுமா….” என்று கத்தியவர், “கான்ஸ்டபிள்ஸ்… இந்தாளைக் கொண்டு போயி வண்டில ஏத்துங்க…” என்றுவிட்டு பரபரவென அங்கிருந்த சூழலை அவர் சரியாக்க முயல அதற்குள் ஏகாம்பரம் ஆம்புலன்சை அழைத்திருந்தார்.
ஆம்புலன்ஸில் வசீகரனை ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடலை நோக்கி வேகமாய் சென்று கொண்டிருந்தது வண்டி. அவனது வேதனையான முகத்தைக் கண்டு கதறி அழுது கொண்டிருந்தாள் ஹாஸினி. அவளது மடியில் தன் தலையை வைத்து அவனுக்காய் அவள் பதறி, கதறி அழுவதைக் கண்டு அவனது மனம் அந்த நிலையிலும் நெகிழ்ந்தது.
“பேபி…. பேபிம்மா….. பயப்..படாதே….. கையில தானே அடி…பட்டிருக்கு…. இதுக்குப் போயி இப்படி அழுதிட்டு இருக்கே…. தைரியமா இரும்மா….” வலியிலும் அவளை சமாதானப் படுத்தியவன், கண்களில் முதன் முதல் அவளைக் கண்டது நினைவில் வந்தது. “எதற்கும் பயப்படாமல் ஆண்களை விட தைரியத்துடன் இருக்கும் ஹாஸினியா இப்படி அழுகிறாள்….” அவனுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது.
“ஆமாம்மா…. எத்தனை தைரியமான பொண்ணு நீங்க…. இதுக்குப் போயி இப்படி அழுதிட்டு இருக்கீங்க…. கையில தானே குண்டு துளைச்சிருக்கு… வெளியே எடுத்திடலாம்… பயப்படாதீங்க….” என்றார் ஏகாம்பரம்.
“அங்கிள்…. சும்மாவே ரத்தத்தைப் பார்த்தா இவர் பயப்படுவார்… இவரை இந்த நிலைமையில் பார்க்க என் மனசு பொறுக்க மாட்டேங்குதே….” என்று மீண்டும் அவனது காயத்தில் சுத்தியிருந்த துணியைத் தாண்டி வழியும் ரத்தத்தைக் கண்டு கண்ணீர் விடத் தொடங்கியவளை அதிசயமாய்ப் பார்த்தார் அவர்.
“ஜான்சி ராணி மாதிரி தைரியமா, ஆம்பளைங்களை மதிக்காம, அலட்சியமா இருந்த பொண்ணா இது…. எப்படி மாறிப் போயிருச்சு…. கல்யாணம், குடும்பம்னு வந்தா எல்லாப் பெண்களும் இப்படி மாறிடுவாங்களோ…” அவர் மனது பலவிதமாய் யோசிக்கும் போதே ஹாஸ்பிடல் வந்திருக்க அவனை அட்மிட் செய்து உள்ளே அழைத்து சென்றனர்.
மருத்துவர்கள் அவசரமாய் அவனை ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவர்களின் கடமையைத் தொடங்கினர். கையிலிருந்த தோட்டாவை நீக்கி ஆப்பரேஷன் முடிந்து அவனை தனி அறைக்கு மாற்றும் போது சமயம் மாலையாகி இருந்தது.
மருந்தின் மயக்கத்தில் வசீகரன் கண் மூடிப் படுத்திருக்க அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் ஹாஸினி. வெகுநேரம் மயக்கத்திலிருந்த கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் கைகள் அவளை அறியாமலே அவன் முகத்தை அன்போடு வருடி விட்டது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் அவளை அறியாமலே அவனை ரசித்துக் கொண்டிருந்தது. “ஆண்மையான அழகான காந்தக் கண்கள்…. கூர்த்த மூக்கு… நல்ல நிறம்…. அழகான உதடுகள்…. அவனுக்கு அழகாய்ப் பொருந்தும் ஹேர் ஸ்டைல்….. என் வசீ எத்தனை அழகாய் இருக்கிறான்…. இவனை விட்டுப் பிரியவதற்கா அன்று நான் நினைத்தேன்… அது இப்போது என்னால் முடியுமா…..”
“ஆண்கள் என்றாலே பெண்களை அடிமைப் படுத்தி, அவர்களை ஆள நினைப்பவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன்… அந்த ஆளுமையில் அன்பும் கலந்திருப்பது தான் இல்லறம் என்பதை நான் உணராமல் போய் விட்டேன்…. சில ஆண்களைப் போல எல்லா ஆண்களும் இருப்பார்கள் என எண்ணியது எத்தனை பெரிய மூடத்தனம்…. கல்யாணம் ஆனதால் என் சுதந்திரம் பறிபோய்விடும் என்று தப்புக் கணக்கு போட்டல்லவா வைத்திருந்தேன்….”
“என் வசீ, எத்தனை அன்பானவன்…. அவனது அன்னை, தங்கை, என் அன்னை மேல் கூட எத்தனை அன்பு வைத்திருக்கிறான்…. அவர்களை நேசிப்பவன் அவன் மனைவியை எத்தனை நேசிப்பான்…. இத்தனை நாளில் என்னை எதற்கும் கட்டுப் படுத்தியதே கிடையாதே…. எனது அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தவனை எத்தனை உதாசீனம் செய்திருப்பேன்… என் மேல் அவன் வைத்த அன்பை புரிந்து கொள்ளாமல் அழகான நாட்களை வெறுமனே தொலைத்திருக்கிறேனே….”
“இவனது கண்ணீர் எனக்கு எந்த அளவுக்கு வேதனையைக் கொடுத்தது…. இப்போது அவனுக்கு கையில் குண்டு துளைத்த போது எனக்குத் துளைத்தது போலல்லவா வலித்தது…. இதெல்லாம் எதனால்….” பலவாறு யோசித்துக் கொண்டிருந்தவளின் மனது அவளிடம் கேள்வி கேட்டது.
“அப்படி என்றால் இது தான் காதலா… காதலுக்கு இத்தனை சக்தி இருக்கிறதா…. நான் என் வசீயை முழுமையாய் ஏற்றுக் கொண்டு காதலிக்கத் தொடங்கி விட்டேனா….” அவளது மனதை அலசி ஆராய்ந்ததில் கிடைத்த பதில் அவள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
“என் வசீ….. என்னைக் காதலிக்கும் வசீ…. என் கணவன் வசீ…. அவனது பார்வையில் எத்தனை காதல் இருந்தது…. அதைப் புரிந்து கொள்ளாமல் நோகடித்து தவிக்க விட்டேனே…” அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் பரந்த நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அதை அவன் உணர்ந்தானோ… என்னவோ அவனிடம் மெல்ல அசைவு தோன்றியது.
“வசீ…. வசீ… என்னைப் பாருங்க வசீ…” அவனது முகத்தைத் தடவி அவள் அழைக்க, அவன் மெதுவாய் கண்ணைத் திறந்தான்.
“பேபி….” சோர்வுடன் வந்தது அவனது குரல்.
“இருங்க…. டாக்டரைக் கூப்பிடறேன்…” என்றவள் வெளியே பாய்ந்தாள். அங்கே இருந்த ஏகாம்பரத்திடம் விஷயத்தைக் கூறிவிட்டு மீண்டும் உள்ளே வந்தாள். டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு பிரச்சனை ஒன்றும் இல்லை… கையை சிறிது நாட்கள் அசைக்கக் கூடாதென்று சொல்லி பெல்ட் மாட்டி விட்டு அவனுக்கு பழச்சாறு ஏதும் கொடுக்குமாறு கூறிச் சென்றார்.
வசீகரனிடம் கூறிவிட்டு ஏகாம்பரம் பழச்சாறு வாங்கி வரச் சென்றார்.
“வசீ…..” அவனது வலது கையைப் பிடித்துக் கொண்டவள், “ரொம்ப வலிக்குதா…..” என்றாள்.
“ம்ம்….” என்று அவன் முனங்கியதும் கவலையுடன் அவன் நெற்றியில் முத்தமிட்டவளை புன்னகையுடன் நோக்கியவன்,
“இப்போ வலிக்கலை பேபி….” என்றான். அவன் கூறியதன் அர்த்தம் புரிய, “இனி எப்பவும் உங்களுக்கு வலிக்க விட மாட்டேன் வசீ….” என்றவளை நோக்கி, “நிஜமாவா…..” என்றான் வசீகரன்.
“ம்ம்… சத்தியமா….” என்றவளின் முகத்தில் இருந்த தெளிவு அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது.
“வசீ… நான் பண்ணின எல்லா தப்புக்கும் உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன்…. உங்களை நான் ரொம்ப வேதனைப் படுத்திட்டேன்…. உங்ககிட்டே மனசு விட்டுப் பேசணும்னு கொஞ்ச நாளாவே நினைப்பேன்…. ஆனாலும் ஏதோ ஒண்ணு தடுத்திட்டே இருந்துச்சு…. இன்னைக்கு தான் என் மனசை நானே புரிஞ்சுகிட்டேன்… சாரி வசீ….” என்று மீண்டும் மீண்டும் சாரி சொல்லிக் கொண்டிருந்தவளைத் தடுத்தவன்,
“சாரி போதும் பேபிம்மா….. நீ புரியாமல் சில விஷயங்களை செய்தாலும் உனக்குள்ளே நான் எப்போதோ வந்துட்டேன்னு எனக்கு புரிஞ்சு தான் இருந்துச்சு…. அதை நீயும் உணரனும்னு தான் நான் காத்திருந்தேன்…. இனி சாரி சொல்லத் தேவையில்லை…. வேறொன்னு தான் சொல்லணும்…” என்றான்.
“வேறயா…. என்ன வசீ…………” அப்பாவியாய்க் கேட்டவளை அருகில் இழுத்தவன், “ஐ லவ் யூ பேபி…. என்றான். அந்த வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணர்ந்தவள் செந்தூரமாய் சிவந்தாள்.
“மீ டூ லவ் யூ வசீ….” வெட்கத்துடன் வந்த அவளது வார்த்தைகள் அவனது மனதில் சொல்லவொணா நிம்மதியைக் கொடுக்க, “தேங்க் யூ பேபி…. இந்த நிமிஷத்தில் நான் செத்தாலும் பரவாயில்லை… அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்…..” என்றவனின் வாயைப் பொத்தியவள்,
“வசீ…. பேச்சுக்குக் கூட இப்படில்லாம் சொல்லாதீங்க…. உங்களுக்கு உடம்பில் தோட்டா பாஞ்சதுமே நான் செத்துட்ட மாதிரி உணர்ந்தேன்…. அப்படி ஒரு வேதனையை நான் என் வாழ்க்கையில் அனுபவிச்சதே இல்லை……. இனி வரும் நாட்கள் நமக்கானது…. அதை கொஞ்சம் கூட மிஸ் பண்ணாம மாமா, அத்தை மாதிரி, என் அப்பா அம்மா மாதிரி அன்னியோன்யமா, சந்தோஷமா வாழ்வோம்…” என்றவளின் வார்த்தையில் அவன் மீது இருந்த காதல் தெரிய அவன் மேலும் மகிழ்ந்தான்.
அதற்குள் விஷயம் தெரிந்து ஹாஸ்பிடலுக்கு வந்தனர் ராஜேஸ்வரியும், சபர்மதியும்.
“வசீ… கண்ணா….” கலக்கத்துடன் சபர்மதி முன்னில் வர, “மாப்பிள்ளை…” என்று பதறிக் கொண்டே அவர் பின்னால் வந்தார் ராஜேஸ்வரி.
“கண்ணா…. உன் அப்பாவைக் கொன்னவங்களை கண்டுபிடிச்சு நீ தண்டனையும்  வாங்கிக் கொடுக்கப் போறேன்னு ரொம்ப சந்தோஷமா, பெருமையா  இருந்தேன்…. ஆனா…. அதனால, உனக்கு ஏதாவது ஆகியிருந்தா…. அய்யோ…. நினைக்கக் கூட முடியலை….” என்றவர், “படுபாவி…. அவன் செய்த தப்புக்கு தானே தண்டனை கிடைச்சது…. என்னமோ… நீ வேணும்னே தேடித் புடிச்சு சும்மா தண்டனை வாங்கிக் கொடுத்த போல உன்னைக் கொல்லப் பார்த்திருக்கான்…. உனக்கு ஏதாவது ஆகியிருந்துச்சுன்னா நாங்க என்னடா பண்ணுவோம்….”
கதறிய அன்னையின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்ட வசீகரன், “அம்மா…. அதான்… எனக்கு ஒண்ணும் ஆகலையே…. பயப்படாதீங்கம்மா… உண்மை ரொம்ப நாள் ஒளிஞ்சு கிடக்கலாம்…. ஆனா, ஒருநாள் வெளிச்சத்துக்கு வராம இருக்காது…. எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா…”
“அப்பா என் கூடவே இருந்து என்னை வாழ்த்துற மாதிரி இருக்கு…. அவர் எனக்கு எதுவும் ஆகாம என்னைப் பார்த்துக்குவார்…. நீங்க தைரியமா இருங்கம்மா…..” என்றான்.
“இப்பதான் நம்ம குடும்பம் ஒண்ணு சேர்ந்தது…. வளர்மதியின் கல்யாணத்தை சந்தோஷமா எதிர்பார்த்திட்டு இருக்கும்போது உங்களுக்கு இப்படி ஆயிருச்சே மாப்பிள்ளை…. தோள் பட்டைல பட்ட தோட்டா கொஞ்சம் கீழே நெஞ்சுல  பட்டிருந்தா…. அய்யய்யோ… நினைச்சுப் பார்க்கவே முடியலை….” என்று தலையை குலுக்கிக் கொண்ட ராஜேஸ்வரி,
“உங்களுக்கு ஏதாவது ஆனா நாங்க யாருமே இல்லை…. நம்ம குடும்பத்தோட ஒரே ஆண்துணை, சந்தோசம் எல்லாம் நீங்க தான்…. உங்களையும் இழக்க நாங்க விரும்பலை…. பேசாம அந்த ஆபத்தான போலீஸ் அதிகாரி பதவியை ரெண்டு பேரும் ராஜினாமா பண்ணிட்டு நம்ம தொழிலை எடுத்து நடந்துங்களேன்….” என்று வருத்ததோடு தொடங்கி வேண்டுதலாய் முடித்தார்.
அவர்களின் மனதில் உள்ள அன்புதான் வார்த்தையாய் வெளிப்படுகிறது என்பதை உணர்ந்த வசீகரன் மென்மையாய் சிரித்தான். ஹாஸினியோ அத்தையும், அன்னையும் தன் கணவன் மேல் வைத்திருக்கும் அன்பைக் கண்டு பிரமிப்புடன் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அத்தை… நீங்க சொல்லுற போல ஒவ்வொரு போலீஸ்காரரும் நினைத்தால் நம்ம நாட்டோட நிலைமை என்ன…. எல்லாரோட உயிரும் அவுங்க வீட்டு ஆளுகளுக்குப் பெருசு தானே…. விருப்பம் இல்லாம தான் இந்தத் துறைல நான் அடியெடுத்து வச்சேன்…. ஆனா இப்போ மனசுல ரொம்ப நிறைவா உணர்றேன்…. நியாயம் கிடைக்காம இருக்குற நம்ம பொது மக்களுக்கு என்னால முடிஞ்சதை செய்யணும்னு நினைக்கறேன்…. ஐ லைக் மை புரொபஷன்…. நீங்களும் நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கறேன்…” என்று உணர்ச்சிகரமாய் பேசி முடித்தான்.
அவன் கூறியதில் இருந்த உண்மையும் அவன் கண்களில் தெரிந்த உறுதியும் அவர்கள் மூவருக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்க ஹாஸினி, கை தட்டிவிட்டு வசீகரனிடம் கையை நீட்டினாள்.
“ஒரு சக அதிகாரியா உங்க எண்ணத்தை ரொம்பப் பாராட்டுறேன்… வசீ…. ஆபத்து எல்லா இடத்துலயும் தான் இருக்கு… அதுக்கு பயந்து ஒளிஞ்சுகிட்டு இருக்காம துணிஞ்சு இறங்கணும்….. என் அபிப்ராயமும் இது தான்…. ஒரு சாதாரண போலீஸ்காரரா உங்களை நான் பார்த்தபோது இருந்த வசீகரனுக்கும், இப்போ இப்படிப் பேசுற போலீஸ் அதிகாரி வசீகரனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு… உங்க மனைவியா…. உங்களை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப் படறேன்…” என்று அவனது கையைக் குலுக்கியவளின் குரல் நெகிழ்ந்திருந்தது.
வசீகரனின் வார்த்தைகளும், அவனுக்குப் பெரிய காயம் ஒன்றும் இல்லை… என்று டாக்டர்கள் கூறியது அறிந்ததும் இருவரும் முழுதும் சமாதானமாகி விட்டனர்.

Advertisement