Advertisement

“ம்ம்… சரி… அந்த ஆளு என்ன பேசிட்டு இருந்தான்…” என்று நேரடியாய் அவள் காரியத்துக்குத் தாவினாள்.
“அவன் மறைவா நின்னு பேசினாலும் இவருக்கு புரியுற போல தான் இருந்திருக்கு…. குண்டடம்னு தாராபுரம் பக்கத்துல இருக்குற ஒரு சின்ன ஒதுக்கமான கிராமத்துல வயலில் பயிர்களோட கஞ்சாவும் சேர்த்து வளர்த்தி இருப்பாங்க போலிருக்கு… இதெல்லாம் அங்கிருக்குற போலீஸ் அதிகாரி சிலரோட உதவி இல்லாம நடந்திருக்காது…. என் அப்பா அங்கே புதுசுங்குறதாலே அவருக்கு அதைப் பத்தித் தெரியலை….”
“அவர் டியூட்டில இருக்கும் போது ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்திருக்கு….” என்றவன் ஏகாம்பரம் சொன்னதை சொல்லத் தொடங்கினான்.
“ஹலோ தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன்…..”
“சார்… நான் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ஏகாம்பரம் பேசறேன்…. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா…”
“ஓ… நல்லது சார்…. நான் ஏட்டு அரவிந்தன் பேசறேன்… இன்னைக்கு ஒரு வேலையா நீங்க கோர்ட்டுக்கு வருவீங்க…. ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்து குடுங்கன்னு எங்க சப் இன்ஸ்பெக்டர் சொல்லிட்டு தான் போனார்… ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க சார்….” என்றார்.
“அரவிந்தன் சார்… நீங்களா…. நீங்க ரொம்ப நேர்மையானவர்னு நம்ம டிபார்ட்மென்ட்ல எல்லாரும் சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்…. உங்களை மாதிரி இப்பவும் ஒரு சிலர் டிபார்ட்மென்ட்ல இருக்குறதால தான் ஏதோ மக்களுக்கு கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையாவது நம்ம மேல இருக்கு….” நிறுத்தியவர்,
“எனக்கு இப்போதைக்கு எந்த உதவியும் வேண்டாம் சார்… ஒரு முக்கியமான விஷயம் என் காதுக்கு வந்துச்சு…. அதை ஸ்டேஷனுக்கு சொல்லி உடனே ஆக்சன் எடுக்க சொல்லத்தான் கூப்பிட்டேன்….”
“என்ன விஷயம் சார்…. சொல்லுங்க….” என்று பரபரப்பானார் அரவிந்தன்.
“சார்…. குண்டடம்ல இருந்து ஒரு லாரில கஞ்சா செடிகளை மூலிகைச் செடிகளோட கலந்து SK ஆயுர்வேத மருந்தாலைக்கு கொண்டு போயிட்டு இருக்காங்க…. அது முன்னாள் அமைச்சர் சாரங்கபாணிக்கு சொந்தமானது…. அங்கிருந்து கஞ்சா செடிகளைப் பிரிச்சு வேற உருவத்தில் மருந்துங்கிற பேர்ல மாத்தி அனுப்புவாங்களாம்….”
“ஓ… அப்படியா… விஷயம்… இது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது சார்…” பரபரப்புடன் கேட்டார் அரவிந்தன்.
“இதைப்பத்தி ரவுடி சிவாவோட அல்லக்கை ஒருத்தன் அவன்கிட்டே போன்ல பேசிட்டு இருந்தான்….. அவனும் ஏதோ கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு வந்திருப்பான் போலிருக்கு…. நீங்க சீக்கிரமே பக்கத்துல உள்ள செக்போஸ்ட் எதுலயாவது லாரியை மடக்கிப் பிடிக்க ஏற்பாடு பண்ணுங்க சார்…” என்றார்.
“இதோ சீக்கிரமே பண்ணறோம்… உங்க நம்பர் கொஞ்சம் கொடுங்க சார்…” அவர் சொல்ல சொல்ல அலைபேசியில் எண்ணை அழுத்தியவர், தொலைபேசியை கட் பண்ணிவிட்டு ஸ்டேஷன் SI க்கு அழைப்பதற்காய் அவரது அலைபேசிக்கு நம்பரை டயல் செய்யும் போது உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர் சக்திவேல்.
அவரைக் கண்டதும் ரிசீவரை கீழே வைத்துவிட்டு அவசரமாய் ஒரு சல்யூட்டை அடித்தார் அரவிந்தன்.
“என்னய்யா… ஏதோ பரபரப்பா இருக்கே…. SI, மத்தவங்கல்லாம் எங்கே….”
“SI சார், மத்தவங்கல்லாம் மத்திய அமைச்சர் வர்றதாலே பந்தோபஸ்துக்கு வேண்டி பல்லடம் போயிருக்காங்க சார்…. நானும் ரைட்டரும் மட்டும் தான் இருக்கோம்… நல்லவேளை நீங்க வந்திங்க சார்….. குண்டடத்தில் இருந்து ஏதோ ஒரு லாரியில் கஞ்சா கடத்தறதா இன்பர்மேஷன் வந்திருக்கு சார்….” என்றார்.
அதைக் கேட்டதும் அவர் முகம் சட்டென்று மாறி பிறகு சாதாரணமானது.
“அப்படியா…. யார் சொன்னாங்க…” என்றவரின் முகமாற்றம் அவருக்கு வித்தியாசமாய்த் தோன்ற சட்டென்று மாற்றி சொன்னார்.
“யாருன்னு தெரியலை…. யாரோ போன்ல விஷயத்தை சொல்லிட்டு வச்சுட்டாங்க சார்….”
அவரை நம்பாத பார்வை பார்த்தவர், “அது எவனாவது புரளியைக் கிளப்பி விட்டிருப்பான்….” என்றார்.
“இல்லை சார்…. ரொம்ப டீடைலா சொன்னாங்க…. குண்டடம் கிராமத்து வயல்ல பயிர்களோட கஞ்சாவையும் விவசாயம் செய்து முன்னால் அமைச்சர் சாரங்கபாணியோட SK ஆயுர்வேத சாலைக்கு கொண்டு போயி…. அங்கே அந்தச் செடிகளைத் தனித்தனியாப் பிரிச்சு மருந்துங்குற ரூபத்துல வேற மாதிரி வெளியே கொண்டு வர்றாங்கன்னு சொன்னாங்க சார்…. பொய்யா இருக்க வழி இல்லை….” என்றார் உறுதியாக.
அவர் ஒவ்வொன்றும் சொல்லுவதைக் கேட்டதும் சக்திவேலின் முகம் இறுகிக் கொண்டே போக, “நீங்க ஜீப்புல ஏறுங்க…….” என்றவர், “ரைட்டர்…. ஸ்டேஷனை பார்த்துக்கோங்க…. நாங்க வந்திடறோம்….” என்றுவிட்டு ஜீப்பை எடுத்தார்.
செக் போஸ்ட்டை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். எப்போதும் டியூட்டியில் இருக்கும் காவல் அலுவலர்களும் அமைச்சரின் பந்தோபஸ்திற்கு சென்றிருக்க பரிசோதனைச் சாவடி பரிசோதிப்பார் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. சின்ன வண்டிகளை விசாரித்து அனுப்பிவைத்து லாரிக்காய் காத்திருந்தனர்.
அந்த இடைவெளியில் அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தன், அதில் பதிந்துவிட்டு சேவ் பண்ணாமல் விட்டிருந்த ஏகாம்பரத்தின் எண்ணை கான்டாக்ட் லிஸ்டில் சேர்த்தப் போகும் போது லாரி ஒன்று ஹாரன் அடித்துக் கொண்டு அதைக் கடக்க வர அலைபேசியை அப்படியே பாக்கெட்டில் போட்டுவிட்டு லாரியின் குறுக்கே போஸ்டைப் போட்டு நிறுத்தி வைத்தார்.
அவர் அவசரத்தில் அமர்த்தியதால் அந்த எண்ணுக்கு அழைப்பு போய் ஏகாம்பரம் எடுத்து ஹலோவிக் கொண்டிருந்தார். அவருக்கு இங்கே பேசுவது தெளிவாய்க் கேட்கவே லைனில் காத்திருந்தார்.
“வண்டியோட பேப்பர் எல்லாம் குடுங்க…. வண்டில என்ன இருக்கு….” என்று இன்ஸ்பெக்டர் சக்திவேல் டிரைவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அரவிந்தனும் நின்று கொண்டிருந்தார்.
“சார்… மூலிகை செடி தான் இருக்கு… வேறொண்ணும் இல்லை சார்…. எல்லாம் SK ஆயுர்வேத சாலைக்குக் கொண்டு போயிட்டு இருக்கோம்…” என்றான் டிரைவர்.
“அப்படியா….” என்று மேலோட்டமாய் அந்த செடிகளைப் பார்த்தவர்,  “சரி… சரி… நீ போகலாம்… யோவ் ஏட்டு… அந்தப் போஸ்டை எடுத்துட்டு வண்டியை விட்டுடு…” என்று அவர் ஆணையிட, அரவிந்தன் அதிர்ச்சியோடு பார்த்தார்.
“சார்… இந்த செடி கஞ்சா தான் சார்…. பார்த்திட்டும் வண்டியை அனுப்ப சொல்லறீங்க… இது தப்பு சார்….” என்று அவர் பொறுமையுடன் கூற, “யோவ்…. எது தப்பு… எது சரின்னு… எங்களுக்கு நல்லா தெரியும்…. நீ பொத்திகிட்டு இரு…. பெரிய சத்தியவான்… நியாயத்தை பேச வந்துட்டாரு….”
“சார்… என்ன சார்… இப்படில்லாம் பேசறீங்க…. அப்படின்னா.. உங்களுக்கு இந்த வண்டியில் கஞ்சாவைக் கடத்துற விஷயம் முன்னமே தெரியுமா…” அதிர்ச்சியுடன் அவர் கேட்க அந்த டிரைவரும் சக்திவேலும் சிரித்தனர்.
“யோவ்…. பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியேய்யா…. எனக்குத் தெரியாமலா வண்டியை விடச் சொல்லி சொல்லுவேன்…. நீயும் கண்டுக்காம இரு…. உனக்கும் சேர வேண்டியதைக் கொடுக்க சொல்லிடறேன்….” என்று பேரம் பேசினார்.
“சார்… ஒரு உயரதிகாரியா உயர்ந்த பொறுப்பில் இருந்துட்டு இப்படில்லாம் பேசறது ரொம்பத் தப்பு சார்…. இந்த சமூகக் குற்றத்துக்கு ஒருபோதும் நான் துணை போக மாட்டேன்….” என்றவரை அலட்சியமான ஒரு பார்வையோடு நோக்கிக் கொண்டே சுற்றி வந்தார் சக்திவேல்.
“யோவ்…. என்ன நீ ரொம்பத்தான் துள்ளற…. இந்த வண்டி யாருக்கு சொந்தமானது தெரியுமா…. அந்த ஆயுர்வேத சாலை யாரோடது தெரியுமா…. முன்னாள் அமைச்சர் சாரங்கபாணிக்கு சொந்தமானது…. அவரைப் பகைச்சுகிட்டு நம்ம சர்வீஸ்ல இருந்துட முடியுமா…. இதையெல்லாம் கண்டும் காணாம போயிட்டா நமக்கும் அவுங்க நல்லா கனமா செய்வாங்க…. அதை விட்டு நியாயம், தர்மம்னு பேசிட்டு இருந்தா மண்ணுக்குள்ளே தான் போயி சேரணும்…” என்றார்.
“அடப் பாவிகளா… மக்களுக்கு காவலா இருக்க வேண்டிய நீங்களும், மக்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய அவரும் சேர்ந்து தான் இப்படி அநியாயம் பண்ணுறீங்களா…. முடியாது சார்… நீங்க எவ்ளோ சொன்னாலும் நான் இந்த வண்டியைப் போக விட மாட்டேன்….” என்று அவர் கத்தினார்.
“யோவ்… நீ ஒத்துக்கலைன்னா…. நாங்க அப்படியே விட்டிருவோமா….” என்ற சக்திவேல், சட்டென்று அவரைப் பின்னிலிருந்து பிடித்துக் கொண்டு,
“டிரைவர்… அந்த போஸ்ட்டை ஓபன் பண்ணி நீ வண்டியை எடுத்துட்டு கிளம்பு… சிவா வண்டில பின்னாடி வந்துட்டு தானே இருக்கான்…. இவனை நான் பார்த்துக்கறேன்…” என்றார். அடுத்த நிமிடத்தில் வண்டி அவர்களின் பார்வையில் இருந்து கிளம்பிச் சென்றிருந்தது.
திமிறிக் கொண்டு நின்றிருந்த அரவிந்தனை வெறுமனே விட்டவர், “இங்க பாருய்யா…. இந்த விஷயத்தை இதோட விட்டுட்டா, உன் உடம்புல உயிர் இருக்கும்… இல்லேன்னா நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை… எப்படி வசதி…” என்றவர் வில்லத்தனமாய் சிரித்தார்.
“நீங்க என்ன சொன்னாலும் இந்த விஷயத்தை நான் இப்படியே விடப் போறதில்லை… இப்போதே கமிஷனர் ஆபீஸ்ல போயி உங்க எல்லாரைப் பத்தியும் சொல்லத்தான் போறேன்….” என்றவர் அவருக்கு செல்ல வண்டி இல்லாததால் வேகமாய் நடக்கத் தொடங்கினார்.
அப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டே எதிரில் வந்து கொண்டிருந்த சுமோ ஒன்று சக்திவேலிடம் வந்து நிற்க, “என்ன சார்…. ஏதாவது மக்கர் கேசா…. தூக்கிடலாமா….” என்றான் காவிப் பல்லைக் காட்டிக் கொண்டே.
“ஆமாம் சிவா…. நானும் சொல்லிப் பார்த்துட்டேன்… மசியுற மாதிரி தெரியலை… கமிஷனர் கிட்டே சொல்லக் கிளம்பிட்டாராம்… நீ எதார்த்தமா தட்டுற போல தட்டிட்டுப் போயிடு….” என்றார் இன்ஸ்பெக்டர் சக்திவேல்.
அதைக் கேட்டதும் சிவா அருகில் டிரைவர் சீட்டில் இருந்தவனிடம் திரும்பி, “சார் சொன்னபோல கச்சிதமா யாருக்கும் சந்தேகம் வராம முடிச்சிரு…. நான் உன் கூட வரலை….” என்றவன் இறங்கிக் கொண்டான்.
அந்த வண்டி ரிவர்ஸ் எடுத்து அரவிந்தனைப் பின் தொடர்ந்தது. அவர்கள் கூட்டமாய்ப் பேசியதையும் வண்டி பின் தொடர்வதையும் கண்ட அரவிந்தன் வேகமாய் ஓடத் தொடங்கினார். ஒரு வளைவில் பிரதான சாலையை அவர் தொடும் வரை மெதுவாக வந்து கொண்டிருந்த வண்டி சட்டென்று வேகமெடுத்து அவரைத் தட்டி எறிந்து விட்டு நிறுத்தாமல் சென்று விட்டது. 
தெறித்து விழுந்ததில் தலை டிவைடரில் சென்று இடிக்க ரத்தவெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் அரவிந்தன். அவரது பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஏகாம்பரம் பதறிப் போனார்.
நடந்த விஷயங்களை ஹாஸினியிடம் கூறிக் கொண்டிருந்த வசீகரனின் கண்கள் கலங்கி இருக்க, அவளது மனமோ கேட்ட விஷயங்களின் பாரத்தில் கனத்துப் போயிருந்தது. கண்ணை மூடி அமர்ந்திருந்தவனுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது எனத் தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“பேபி…. என் அப்பா எவ்ளோ நல்லவர் தெரியுமா…. எங்களை இத்தனை வருஷமா கோபமா ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை…. அம்மா மேல உயிரையே வச்சிருந்தார்….. அவுங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சின்னதா ஒரு மனஸ்தாபம் கூட வந்ததில்லை…. அப்பா இறந்ததும் அம்மா ரொம்ப நாள் நார்மலா பேசவே இல்லை தெரியுமா…. புருஷன் பொண்டாட்டின்னா இப்படி தான் இருக்கணும்னு எத்தனை பேர் அவுங்களைப் பார்த்து பெருமையா சொல்லுவாங்க…. உங்க அப்பா மாதிரி இருக்கணும்னு என் நண்பர்கள் கூட சொல்லுவாங்க….”
“அந்த மாதிரி இருந்த ஒரு மனுஷனை இப்படி அநியாயமாக் கொன்னுட்டாங்க….” என்றவன், இத்தனை நாள் மனதில் சுமந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் தந்தையின் நினைவில் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினான்.
அதைக் கண்டதும் அவளது கண்களும் கலங்குவதன் காரணம் அவளுக்குப் புரியவில்லை…. அவனது தோளில் ஆதரவாய் கை வைத்து அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் அன்பும் ஆதரவும் மட்டுமே இருந்தது…. அவனது கண்ணீர் அவளது காக்கி உடையைக் கடந்து அவள் இதயத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
கண்ணீரின் வலியின்று
கண்டு கொண்டேன்
கண்ணாளா…. உன்
கண்கள் சிந்திய
கண்ணீரில் கரைந்தது
என் மனமன்றோ…
அடுத்தவரின் வலிதன்னை
அனுபவிக்க முடிந்திடுமோ….
அவருடைய கண்ணீரில் – உயிர் வலியை
அறிந்திடதான் முடியுமோ….
அறிந்து கொண்டேன் உன்னில்
அது அறுக்கிறது நெஞ்சை….
உனது கண்கள் சிந்திட்ட
கண்ணீரில் கரைந்திருப்பேன்
உப்பாக…. உன் இதயத்துடிப்பின்
வலியில் என்றும்
உறைந்திருப்பேன் உயிராக….
என் இதயம் உனக்காக
ரணமாகி வலிப்பது ஏன்….
என் நெஞ்சம் நேசிக்கும்
உயிர் நீதான் என்பதாலா….

Advertisement