Advertisement

அத்தியாயம் – 18
இன்னும் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் இருந்த இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இருட்டைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த போலீஸ் ஜீப் பார்கிங்கில் இயக்கத்தை நிறுத்தி, மவுனமாகி நிற்க, அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசேகர்.
அவரை எதிர்பார்த்து ரிசப்சனில் காத்திருந்த வசீகரன் அவரைக் கண்டதும் விறைப்பாகி அவசரமாய் நெற்றியில் ஒரு சல்யூட்டைப் பதித்தான். அதைத் தலையசைத்து சிறுபுன்னகையுடன் ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சிவாவை அட்மிட் செய்திருந்த அறையை நோக்கி கம்பீரமாய் முன்னில் நடக்க அவருடன் பின்னாலேயே வந்தான் வசீகரன்.
“என்ன வசீகரன்…. அந்த சிவா ஏதாவது சொல்லறானா….”
“இல்லை சார்…. நானும் அவன்கிட்டே பேசிப் பார்த்துட்டேன்…. அவனை விஷம் வச்சு கொல்லத் துணிஞ்சுட்டவங்களுக்கு வேண்டி எதுக்கு இப்படி அடி, உதை வாங்கி காட்டிக் கொடுக்காம இருக்கணும்…. அப்ரூவரா மாறினா, அவனோட தண்டனைக் காலத்தை குறைக்கவும் ஏற்பாடு செய்யறோம்னு சொன்னேன் சார்…. அவன் எதுக்குமே அசராம அமைதியாவே இருக்கான்….”
“ம்ம்… இவனுங்களுக்கு மத்தவங்க உயிரோட மதிப்பு தான் தெரியாதுன்னா…. அவனுங்க உயிர் மதிப்பும் தெரியாது போலிருக்கு…. சரி… நைட் வேற எந்தப் பிரச்சனையும் இல்லையே….”
“இல்லை சார்…. அவன் தூங்கிட்டு இருக்கான்….”
“ம்ம்…. நாளன்னிக்கு அவன் கேஸ் கோர்ட்டுக்கு வருது…. ஹாஜர் படுத்துறதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே… டாக்டர் என்ன சொல்லுறார்….”
“ரெஸ்ட் எடுத்தா போதும்… வேற பிரச்சனை ஒண்ணும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார் சார்…. நாளன்னிக்கு இங்கேர்ந்து அப்படியே கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்….”
“ம்ம்… சரி… அதுக்கு முன்னாடி அவன் வாயைத் திறந்து ஏதாவது சொன்னா கொஞ்சம் நல்லாருக்கும்….” இன்ஸ்பெக்டர் கூறியதும் அவரைத் தயக்கத்துடன் ஏறிட்ட வசீகரன்,
“சார்…. எனக்கு ஒரு யோசனை…. ஒரு முயற்சி செய்து பார்க்கலாமா….” தயங்கினான்.
“என்ன யோசனை…. வசீகரன்…. உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா தாராளமா சொல்லுங்க…. இந்தக் கேசை நீங்க தான் ரொம்ப இன்வால்வ்மெண்டோட இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கீங்க… என்னன்னு தயங்காம சொல்லுங்க…” என்றார்.
அவன் தனது எண்ணத்தைக் கூற, அதைக் கேட்டதும் அவரது முகம் யோசனைக்கு சென்று பின்னர் மெல்ல மலர்ந்தது.
“நல்ல யோசனை தான்… சிவாவுக்கு அவன் தம்பி தான் வீக்னஸ்ஸா… ம்ம்… முயற்சி பண்ணலாம்… தப்பில்லை… பட் ஒன் திங்…. ரொம்ப கேர்புல்லா இருக்கணும்…. இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாது……..”
“தேங்க் யூ சார்…. கண்டிப்பா தெரியாமப் பார்த்துக்கறேன் சார்….” என்றவன், “சிவா ரூம் அதான் சார்….” வளைவில் திரும்பியதும் இருந்த அறையைக் காட்டினான்.
முன்னில் இரண்டு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்க ராஜசேகரைக் கண்டதும் அவர்கள் அறைக் கதவைத் திறந்து விட்டனர். சுவரில் இருந்த ஸ்விட்சைத் தட்டியதும் அறை முழுதும் வெளிச்சம் பரவியது. உள்ளே சிவா உறக்கத்தில் இருந்தான்.
ஒளியின் வெளிச்சத்தில் கண்ணைத் திறந்தவன், முன்னில் இன்ஸ்பெக்டர் நிற்பதைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“என்ன சிவா…. அத்தனை அடி வாங்கியும் நீ வாயைத் திறக்கவே இல்லை…. ஆனா உன் ஆளுங்க என்னடான்னா உன்னைப் போட்டுத் தள்ள ரொம்பத் தீவிரமா திட்டம் போட்டுக்கிட்டு இருப்பாங்க போலிருக்கு….”
அதைக் கேட்டதும் அவன் யோசனைக்கு சென்றாலும் ஏதும் கூறாமல் மீண்டும் மௌனமாகி விட்டான்.
“உன் பேர்ல தமிழ் நாட்டுல மட்டும் மொத்தம் பத்தொன்பது கேஸ் இருக்கு…. இது எல்லாம் கோர்ட்டுக்கு வந்து தீர்ப்பானதுன்னா உன் ஆயுளுக்கும் நீ வெளியே வர முடியாது… உன்னோட உனக்கு உதவியா இருந்த உன் தம்பி, உன் ஆளுங்க எல்லாரும் உள்ளேயே கிடக்க வேண்டியது தான்….”
அவன் அதைக் கேட்டும் அமைதியாகவே இருக்க அவர் தொடர்ந்தார்.
“அப்புறம்… வசீகரன்… இவன் ஆசையாசையா ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சானே இவன் தம்பிக்கு… அவன் பொண்டாட்டி வேற இப்போ மாசமா இருக்கான்னு சொன்னீங்கள்ள….”
“ம்ம்… ஆமாம் சார்….. இன்னும் ரெண்டு மாசத்துல டெலிவரி ஆகிடும் போலிருக்கு…”
“ஓ… அந்தக் குழந்தை உலகத்தைப் பார்க்க வரும் போது அதோட அப்பன் உயிரோட இருப்பானோ…. இல்லை ஜெயிலுக்குள்ளே இருப்பானோ…. அந்தப் பொண்ணையும் குழந்தையும் வேற அநாதை ஆக்கிட்டியே சிவா….”
“போதும்…. நிறுத்துங்க இன்ஸ்பெக்டர்… நீங்க சொன்ன எதுவும் நடக்கப் போறதில்லை…. நீங்க போட்ட கேசை எல்லாம் உடைச்சு என்னைக் கண்டிப்பா வெளியே கொண்டு வரத்தான் போறாங்க…. என் மேல கை வச்சதுக்கு நீங்கல்லாம் அனுபவிக்கத் தான் போறீங்க….” என்றான் கோபத்துடன்.
“என்னடா….. இவ்ளோ சொல்லியும் துள்ளிட்டு இருக்கே…. உன்னோட ஆளுங்க தான் உன்னை இங்கேயே போட்டுத் தள்ள பார்த்திட்டு இருக்காங்களே…. என்ன புரியலையா…. உன் சாப்பாட்டுல விஷம் வச்சது போதாதுன்னு நீ மயக்கமா இருக்கும்போது உன்னைக் கொல்லவும் ஒருத்தன் வந்திருக்கான்…. நல்லவேளை… எங்க ஆளுங்க பார்த்துட்டாங்க…..”
“சும்மா பொய் சொல்லாதீங்க…. அப்படில்லாம் நடக்க வாய்ப்பே இல்லை….”
“என்னது சும்மா சொல்லறேனா…. முன்னாடி உன் காவலுக்கு நிக்குறாங்களே… ரெண்டு போலீஸ்காரங்க…. அவுங்ககிட்டே வேணும்னா நீ விசாரிச்சுப் பாரு….” என்றதும் அவன் முகம் சட்டென்று யோசனைக்கு மாறியது.
“இங்க பாரு சிவா…. இப்பவும் உனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் தரேன்….” நிறுத்தியவர்,
“செய்த தப்பை எல்லாம் ஒத்துகிட்டு அப்ரூவரா மாறிடு…. உனக்கும் உன் ஆளுங்களுக்கும் தண்டனைக் காலத்தை குறைச்சு குறைவான தண்டனை வாங்கிக் கொடுத்துடறோம்….. உன் தம்பி, குழந்தையோட சந்தோஷமா இருப்பான்…. நீயும் வெளியே வந்து நல்லபடியா வாழலாம்….”
அதைக் கேட்டதும் அவன் முகம் சற்று ஆர்வமானாலும் மீண்டும் பழையபடி மௌனமாகிவிட்டான்.
“வசீகரன்…. இவன் எதுக்கும் ஒத்து வராம வாயைத் திறக்கவும் மாட்டேங்குறான்… இவன் தம்பியை இன்னும் கொஞ்சம் நல்லா, கவனிக்குற விதத்துல கவனி…. அவனுக்கு கண்டிப்பா இதுக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரியாம இருக்காது….” என்றார் ராஜசேகர்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்ட சிவா, “இல்லை… அவனை ஒண்ணும் பண்ணாதீங்க…. அவனுக்கு எதுவும் தெரியாது….” என்று பதறினான்…..
“அப்படின்னா… நீ உண்மைய சொல்லு….” என்றார் ராஜசேகர்.
“முடியாது… உயிரே போனாலும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்…. நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க….” என்றான் அவன்.
“சரி… இனி உன்கிட்டே பேசிப் பிரயோசனம் இல்லை…. நீ அப்படியும் இப்படியும் மாத்தி மாத்திப் பேசறே…. வசீகரன்…. இவன் தம்பி பொண்டாட்டி பேரென்ன….. வசந்தாவா….. அது கூட நிறைமாசமா இருந்துச்சே…. அவளையும் இவன் அக்கா செண்பகத்தையும் சந்தேகத்தின் பேர்ல அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு வாங்க…. நாம அவங்ககிட்டே விசாரிச்சுக்குவோம்….” என்றார் ராஜசேகர்.
சிவா அவர்களையே சற்று அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருக்க,
“சரி சார்…. இப்பவே அந்தப் பெண்களை அரெஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணறேன்….” என்ற வசீகரன், அலைபேசியை எடுத்து ஹாஸினியை அழைத்தான்.
“ஹாஸினி…. சிவா தம்பி ஒய்பையும், அவன் அக்காவையும் விசாரணைக்கு அழைச்சிட்டு வர ஏற்பாடு பண்ணிடு…. அரஸ்ட் பண்ண நீயும் கூடப் போ….” என்று விவரத்தைக் கூறிவிட்டு அதை அணைத்துவிட சிவாவின் முகம் இப்போது பீதியைக் காட்டியது.
“சார்…. பொம்பளைகளை எதுக்கு சார் விசாரிக்கணும்…. அவுங்களுக்கு எதுவும் தெரியாது…. அவுங்களை விட்டுருங்க சார்….” அவனது குரலில் ஒரு வேண்டுதல் இருந்தது.
“அதெப்படி சிவா…. உனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சாலும் நீ சொல்ல மாட்டேங்கற… உன் தம்பிக்கு ஏதும் தெரியாதுன்னும் நீயே சொல்லறே…. தம்பி பொண்டாட்டிக்கும், அக்காவுக்கும் ஒரு வேளை தெரிஞ்சிருந்தா…. அதுனால அவுங்களை விசாரிச்சுப் பார்த்திருவோம்….” என்றார் அசால்ட்டாக.
“சார்…. வேண்டாம் சார்…. புள்ளத்தாச்சிப் பொண்ணு சார்…. அதை கஷ்ட்டப் படுத்தாம விட்டிருங்க சார்….” என்று அவன் கெஞ்சத் தொடங்க,
“அப்போ… நீ அப்ரூவரா மாறிடுறியா….” சரியாகக் கொக்கியை வீசினான் வசீகரன்.
அவனை யோசனையுடன் நோக்கிய சிவா, சற்று நேரத்திற்குப் பிறகு சம்மதமாய் தலையசைத்தான்.
“ம்ம்… ஓகே… நீ யார் கூட சேர்ந்துட்டு, என்னவெல்லாம் அட்டூழியம் பண்ணினேன்னு விவரமா சொல்லு…. நாங்க அந்தப் பொண்ணை ஒரு உபத்திரமும் பண்ண மாட்டோம்….” என்றான் வசீகரன்.
“ம்ம்… சரி… சார்… சொல்லிடறேன்… அவுங்களை கூட்டிட்டு வரவேண்டாம் சார்….” என்று அவன் மீண்டும் கேட்க,
“என்ன சார்…. சிவாவே வாக்கு மூலம் தர சம்மதிச்சுட்டான்… வாங்கிட்டு அந்தப் பொண்ணை விட்டுடலாம் சார்….” என்றான் இன்ஸ்பெக்டரிடம் தன் எண்ணம் நிறைவேறிய சந்தோஷத்தில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே .
அதைக் கண்டு கொண்டவர், சிறு புன்னகையுடன், “முதல்ல இவன்கிட்டே எல்லாத்தையும் கேட்டுக்கோ… நமக்கு எந்தத் தொல்லையும் வைக்காம உண்மைய சொல்லிட்டா விட்டுரு…. இல்லேன்னா…. அந்தப் பொண்ணையும் விசாரிச்சுடுவோம்….” என்று கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர, வசீகரன் அவனிடம் ஒவ்வொன்றாய்க் கேட்கத் தொடங்கினான்.
சிவா வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்து கோர்ட்டிலிருந்து புன்னகையுடன் வெளியே வந்த ஹாஸினி தன்னுடன் அமைதியாய் நடந்து வந்த வசீகரனிடம் ஆச்சர்யமாய்க் கேட்டாள்.
“வசீ…. என்னதான் நடக்குது இங்கே…. சிவா எப்படி அப்ரூவரா மாறினான்…. அதும் அவன்கிட்டே உள்ள எல்லா ஆதாரத்தையும் சப்மிட் பண்ணி இருக்கான்….”
“பேபி… இங்கே எதையும் பேச வேண்டாம்…. நம்ம வண்டிக்கு போயிட்டு பேசிக்கலாம்…. அமைதியா வா….” என்றவன், அவர்கள் வந்த ஜீப்பை நோக்கி நடக்க அதன் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவள் மீண்டும் அவனிடம் திரும்பினாள்.
“வசீ… சொல்லுங்க…. சிவா எப்படி அப்ரூவர் ஆனான்…. அந்த சாரங்கபாணி எவ்ளோ பெரிய அரசியல்வாதி…. அவன் தான் எல்லாத்தையும் பண்ணி இருக்கானா…. அப்படின்னா மாமா விபத்துக்குக் காரணம் கூட அவன் தானா….” கேள்வியாய் வசீகரனின் முகத்தை நோக்க அது வேதனையில் சுருங்கி இருந்தது.
“சாரி வசீ… உங்களுக்கு பழசை எல்லாம் நினைவு படுத்திட்டேனா….” தவிப்புடன் கூறியவளின் முகத்தை நோக்கியவன்,
“பேபி… அதெல்லாம் மறந்தா தானே நினைவு படுத்தறதுக்கு…. என் அப்பாவை அநியாயமா கொன்னதே அந்த சாரங்கபாணி தான்….” என்றவனின் கண்கள் கலங்கி இருந்தது.
அவனது கலக்கம் அவள் மனதை வருத்த ஆதரவாய் அவன் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.
“பீல் பண்ணாதீங்க வசீ…. மாமாவைக் கொன்ன விஷயத்துல சிவா இருக்கான்னு எனக்குத் தெரியும்…. ஆனா அவன் எதுக்கு இப்படி பண்ணினான்னு எனக்குத் தெரியலை….. அதான்… கொன்னவங்களை ஆதாரத்தோட நிரூபிக்க வழி கிடைச்சிருச்சே….. நீங்க வருத்தப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க….” என்றாள்.
“என் அப்பாவைத் தேவையே இல்லாம கொன்னுட்டாங்க பேபி…. பாவம்… அவர் எப்படி துடிதுடிச்சு இறந்திருப்பார்….” அவனது வேதனை கண்ணில் தெரிந்தது.
“ம்ம்.. உங்க பீலிங் புரியுது வசீ…. அவுங்களுக்கு கண்டிப்பா நாம தண்டனை வாங்கிக் கொடுப்போம்….” என்ற ஹாஸினி, அவனது கரத்தில் அழுத்தினாள்.
“சரி… உங்களுக்கு எப்படி அந்த சாரங்கபாணி தான் இதுக்குப் பின்னாடி இருக்கான்னு தெரிஞ்சுது…. சொல்லுங்க வசீ….” என்று அவனது கைகளை விடுவிக்க பட்டென்று அவள் கரத்தைப் பற்றிக் கொண்டவன்,
“இப்படியே இருக்கட்டும்… ப்ளீஸ் பேபி…” என்றான் கண்ணில் கெஞ்சலுடன்.
அதைக் கேட்டதும் அவள் முகத்தில் சிறு நாணப் புன்னகை தோன்ற, விஷயத்தை அறிய வேண்டிய ஆவலில் அதிகம் அதைப் பற்றி யோசிக்கவில்லை.
“ம்ம்… சரி… சொல்லுங்க வசீ….” என்றவளின் குரலில் ஒரு குழைவு வந்திருந்தது.
“பேபி…. அந்த சாரங்கபாணி தான் இந்த சிவாக்குப் பின்னாடி இருக்கான்னு எனக்கு முதல்லயே தெரியும்…. இந்தக் கேஸ்ல அவனுக்கு எதிரா ஆதாரத்தோட, சாட்சியையும் கொண்டு வரத்தான் இவ்ளோ நாள் போராடிட்டு இருந்தேன்…. அதுக்கான ஆதாரம் எல்லாம் இப்போ என்கிட்டே இருக்கு…. சிவாவும் எதிர்சாட்சியா மாறிட்டான்…. இனி சாரங்கபாணிக்கு தண்டனை கிடைக்குறது நிச்சயம்…” என்றான்.
“ம்ம்… அந்த ஆள் எவ்ளோ பெரிய அரசியல்வாதி…. சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருந்துட்டு இத்தனை வேலையைப் பண்ணி இருக்கானே… சரி…. உங்களுக்கு எப்படி அவன்தான்னு தெரியும்… என்கிட்டே சொல்ல மாட்டீங்களா வசீ….” என்றவளின் குரலில், “என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா….” என்ற கேள்வி இருந்தது.
அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன், “நம்ம ஏகாம்பரம் சார் தான் சொன்னார்…. என் அப்பா விபத்துல இறந்த போதே அவருக்கு எல்லாம் தெரியும்….” என்றான்.
“ஹையோ…. அப்புறம் ஏன் இவ்ளோ நாளா இதப் பத்தி சொல்லாம இருந்தார்…” என்றாள் ஹாஸினி.
“பயம்…. நடந்ததைச் சொன்னா எங்கே தன்னோட குடும்பமும் தன்னை இழந்து அனாதையா நிக்க வேண்டி வருமோன்னு, பொதுவா ஒரு மனுஷனுக்குத் தோணுற சாதாரண பயம்….. அதிகாரமும், பணமும் இருக்குற இடத்துல அனாதையா நின்னு கத்துறது யார் காதிலயும் விழுகாமப் போயிடும்னு தான் அவர் ஏதும் சொல்லலை…. அதுக்கு தான் என்னோட பிரமோஷனை அவர் ரொம்பவே எதிர்பார்த்திட்டு இருந்தார்….” என்றான்.
அதை சற்று திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவள், “மாமாக்கு என்ன நடந்துச்சு… ஏகாம்பரம் சார் என்ன சொன்னார்… விவரமா சொல்லுங்க வசீ…” என்றாள்.
“அப்பா, பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து அப்பத்தான் மாற்றல் ஆகி தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்….. அப்போ ஒரு நாள் நம்ம ஏகாம்பரம் சார் ஏதோ கேஸ் விஷயமா தாராபுரம் கோர்ட்ல சில டாகுமென்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ண வந்திருக்கார்….”
“ம்ம்…. சரி…”
“கோர்ட்ல அவர் பார்க்க வேண்டியவர் வந்து சேராததாலே பக்கத்துல இருக்குற டீ கடைக்குப் போயிருக்கார்…. ஒரு இடத்துல போலீஸ்காரன் நின்னா சுத்தி இருக்குற எல்லாத்தையும் கவனிப்போம் இல்லையா…. அதானே போலீஸ் புத்தி…. அதுபோல இவரும் டீ குடிச்சிட்டு இருந்தாலும் கவனத்தை சுத்திலும் வச்சிட்டு நின்னுட்டு இருந்திருக்கார்…. மப்டில இருந்ததாலே இவரை போலீஸ்னு யாருக்கும் அடையாளம் தெரியலை….. அங்கே சிவாவோட ஆள் ஒருத்தன் மொபைல்ல மறைவா நின்னு பேசிகிட்டு இருந்திருக்கான்….”

Advertisement