Advertisement

“ஆமாம் மச்சான்… இந்த நாள் நம்ம எல்லாருக்கும் மறக்க முடியாத நாளா மாறிடுச்சு… இதை கொண்டாடியே ஆகணும்…” என்றான் நகுலன்.
“ம்ம்… கொண்டாடறது எல்லாம் இருக்கட்டும்… அண்ணாக்கு நீங்க என்ன கிப்ட் குடுக்கப் போறீங்க… அதை முதல்ல சொல்லுங்க….” என்றாள் ஆர்வத்துடன்.
“ஹஹா… என்னம்மா இது… நான் என்ன சின்னக் குழந்தையா… பர்த்டேக்கு கிப்ட் எல்லாம் கொடுக்கறதுக்கு….” என்று சிரித்தான் வசீகரன்.
“அதென்ன மச்சான்… கிப்ட் குடுக்கறதுக்கு குழந்தை, பெரியவன்னு கணக்கிருக்கா என்ன… எவ்ளோ வயசானாலும் பரிசு குடுக்குறதும், வாங்குறதும் ஒரு சந்தோஷமான விஷயம் தான்…” என்றவன், “மதி… என் மச்சானுக்கு நான் சூப்பரா ஒரு பரிசு வாங்கியிருக்கேன்… காலைல இருந்த சூழ்நிலைல வந்ததும் கொடுக்க முடியலை…. கேக் வெட்டும் போது கொடுக்கறேன்…” என்றான்.
“ம்ம்… சூப்பர்…” என்ற வளர்மதி, அண்ணி… நீங்க என்ன கிப்ட் கொடுக்கப் போறீங்க…” என்றாள் ஹாஸினியிடம்.
அதைக் கேட்டதும் வசீகரன் அவள் முகத்தையே நோக்கிக் கொண்டிருக்க, சட்டென்று பதில் சொல்ல முடியாமல் திணறினாள் ஹாஸினி.
“அது வந்து….” என்று அவள் திணறிக் கொண்டிருக்க, “உன் அண்ணியே எனக்கு கிடைச்ச மிகப் பெரிய பரிசு தானே…. இதுக்கு மேல அவ என்ன பரிசு கொடுக்கப் போறா… இல்லியா பேபி…” என்றான் வசீகரன், அவள் முகத்திலிருந்து கண்ணை எடுக்காமல்.
அதைக் கேட்டதும் அவளது முகம் குங்குமமாய் சிவக்க, அதை சிரிப்புடன்  ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தோளில் கைவைத்த நகுலன், “மச்சான்… போதும்… உன் பொண்டாட்டியைப் பார்த்து நீ விடுற ஜொள்ளுல நாங்கல்லாம் மூழ்கிடுவோம் போலிருக்கு…” என்றான்.
அதைக் கேட்டு வளர்மதி சிரிக்க, வசீகரனின் முகத்தில் சிறு நாணப் பூ மலர்ந்தது.
அவர்களின் கிண்டலில் மேலும் சிவந்த ஹாஸினி, வசீகரனின் குறுகுறுவென்ற பார்வையில் தவித்துப் போனாள்.
“அருகில் உன் முகம்
பார்க்கும் போதெல்லாம்
தொலைவில் எங்கோ
தொலைந்திட்ட புள்ளியாகிறேன்…”
அவள் மனதில் வார்த்தைகள் கவிதையாக மலர அவனது பார்வையோ அவளுக்கு பதில் கவிதை சொன்னது.
“தொலைவது உன்னிடமென்றால்
தேடுவதும் தவம் தான் எனக்கு….”
அவனது பார்வை தாளாமல் அவள் வெட்கத்தில் தலை குனிய அதைக் கண்டு உற்சாகமான வசீகரன், “சரி.. சரி… ரொம்ப தான் எங்களை ஓட்டாதீங்க மச்சான்…. பாருங்க… என் மாமன் பொண்ணு எப்படி வெக்கப்படறான்னு…” என்று எடுத்துக் கொடுத்தான்.
“அய்யே… அப்படில்லாம் ஒண்ணும் இல்லை… நான் போறேன்….” என்ற ஹாஸினி எழுந்து ஓடிச் சென்று சற்றுத் தள்ளி அமர்ந்து பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சபர்மதியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“இவ்ளோ நேரம் கண்டுக்காம இருந்துட்டு இப்போ மட்டும் என்ன… அய்யா ரொம்பத்தான் ரொமான்ஸ் பண்ணுறார்..” அவள் மனது அதையும் இடித்துரைத்தது.
அப்போது கேக் டெலிவரி கொடுக்க ஆள் வர, “ஹாஸினி…. அதை சரி பார்த்து வாங்கி வைம்மா….” என்றார் ராஜேஸ்வரி. அதை வாங்கி பணம் கொடுத்துவிட்டு அவள் வரவும், “மாப்பிள்ளை கிட்டே பிரெஷ் ஆக சொல்லும்மா… பார்ட்டிக்கு எல்லாரும் வரத் தொடங்கிருவாங்க… டைம் ஆச்சுல்ல…” என்றார்.
“ம்ம்… சரிம்மா…” என்றவள், மீண்டும் வசீகரனிடம் சென்று கூறினாள். அனைவரும் புறப்படத் தொடங்கினர். குளித்து முடித்து புதிய ஷர்வாணியில் கம்பீரமாய் மாடியிலிருந்து இறங்கி வந்தவனை கண் நிறையப் பார்த்திருந்தார் சபர்மதி.
“மாப்பிள்ளைக்கு இந்த டிரெஸ் ரொம்ப அழகா இருக்குல்ல சபர்மதி… ஹாஸினி தான் இந்த மாடல் வேணும்னு ஆர்டர் குடுத்து வரவழைச்சா” என்றார்.
“ம்ம்…. ராஜாவாட்டம் இருக்கான்… என் கண்ணே பட்டிரும் போலிருக்கு…” என்றார்.
நகுலனுடன் பேசிக் கொண்டே வந்தவன் கீழே வந்ததும் அன்னையிடமும், அத்தையிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
“நல்லா இருக்கணும் பா…. இது அம்மாவோட சின்னப் பரிசு…” என்று அவன் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தார் சபர்மதி.
“மாப்பிள்ளை… இது அத்தையோட பரிசு….” என்ற ராஜேஸ்வரி ஒரு சாவியைக் கொடுக்க, “என்ன சாவி அத்தை…” என்றான் புரியாமல்.
“வெளியே வந்து பாருங்க மாப்பிள்ளை…” என்றவர், அவனை அழைத்துச் சென்று காண்பிக்க வாசலில் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி, சில்வர் கலரில் பளபளப்பாய் நின்று கொண்டிருந்தது.
“அத்தை… இப்போதானே பைக் வாங்கி கொடுத்தீங்க… அதுக்குள்ளே எதுக்கு காரெல்லாம்…” என்று அவன் தயக்கத்துடன் கேட்க,
“நம்ம வீட்டுல இருக்குற காரை நான் எங்காவது வெளியே போகும் போது எடுத்திட்டுப் போயிடுவேன்… நீங்களும் ஹாஸினியும் எங்காவது வெளியே போகணும்னா இன்னொரு கார் வேணும்ல… அதான்… உங்களுக்கு கலரெல்லாம் பிடிச்சிருக்கா… உங்க பொண்டாட்டியோட செலக்ஷன் தான்…” என்று சிரித்தார்.
“அட… இது நம்மாளு வேலை தானா… கள்ளி… சொல்லவே இல்லையே…” என்று நினைத்தவன், “பிடிச்சிருக்கு அத்தை…” என்றான் சந்தோஷத்துடன்.
“சரி… வாங்க… கேக் வெட்ட டைம் ஆச்சு….” என்றவர், “இந்தப் புள்ளைகளை எங்கே காணோம்…. என்னவோ பிறந்த நாள் அவுங்களுக்கு தான் போல இன்னுமா புறப்படறாங்க….” என்றவர், “சபர்மதி… எங்கே உன் மகளும், மருமகளும்… இன்னும் புறப்பட்டு முடியலையா….” என்றார்.
“ம்ம்… முடிச்சுட்டாங்க அண்ணி… பூ குடுத்தேன்…  வச்சிட்டு இருக்காங்க… இப்போ வந்திருவாங்க….” என்றார்.
அப்போது அறையில் இருந்து புறப்பட்டு வெளியே வந்த ஹாஸினியையும் வளர்மதியையும் கண்டு வசீகரன், நகுலன் மட்டுமல்ல… அனைவரின் கண்களும் அவர்களையே அதிசயமாய்ப் பார்த்தன. இருவரும் ஒரே நிற பட்டுப் புடவையில் தேவதை போல் ஜொலித்தனர்.
வசீகரனின் கண்கள் ஹாஸினியை விழுங்கி விடுவது போல் பார்க்க நகுலனின் கண்களோ வளர்மதியின் அழகைப் பருகிக் கொண்டிருந்தன. அவர்களின் ஊடுருவும் பார்வையில் சிவந்தவர்கள் புன்னகையுடன் வந்தனர்.
அதற்குப் பிறகு ஆரவாரத்துடன் கேக் வெட்டி அனைவரும் சந்தோசத்துடன் அந்தப் பொழுதைக் கழித்தனர். நகுலன் வசீகரனுக்கு அழகான ஒரு வாட்ச்சைப் பரிசாகக் கொடுத்திருந்தான். ஏகாம்பரம் மனைவி, மகளையும் அழைத்து வந்திருந்தார். அவரைக் கண்ட ராஜேஸ்வரியும், சபர்மதியும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
“பொண்ணுக்கு கல்யாணம் முடிவாகி இருக்குறதா ஹாஸினி சொன்னா… நீங்க எல்லாரும் வந்ததுல ரொம்ப சந்தோசம்…” என்றார் ராஜேஸ்வரி.
“என்னம்மா இப்படி சொல்லறீங்க….. நம்ம வீட்டு விசேஷத்துக்கு வராம இருப்போமா… இதேபோல கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வந்திருந்து நல்லபடியா முடிச்சுக் குடுக்கணும்….” என்று அவர்களை அழைக்கவும் செய்து விட்டார் ஏகாம்பரம்.
“கண்டிப்பா அண்ணா… நாங்க இல்லாமலா…” என்ற சபர்மதி, அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றார். இரவு எட்டு மணி வரை சந்தோஷமாய்க் கழிய, அதற்குப் பிறகு மெல்ல ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பத் தொடங்கினர். சபர்மதியும் வளர்மதியும் அங்கே இருக்க நகுலனுக்கு அடுத்த நாள் கல்லூரியில் முக்கிய வேலை இருப்பதாய்க் கூறி அவர்கள் கிளம்பினர்.
நகுலனின் கண்கள் வளர்மதியை ஆசையுடன் மனதில் நிறைத்துக் கொள்ள அவளும் பிரிய மனமின்றி விடை கொடுத்தாள். குடும்பத்தினர் மட்டுமே இருக்க மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். அனைவரும் பழைய கதைகளை சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருக்க மேசையின் மீதிருந்த வசீகரனின் அலைபேசி அலறியது.
அதை எடுத்து காதுக்குக் கொடுத்து ஹலோவியவன், “சொல்லுங்க ராகவன்…” என்றான் யோசனையோடு. எதிர்ப்புறம் இருந்து வந்த பதில் அவன் முகத்தை சுருங்க வைக்க,
“ஓ… சரி… நீங்க அவனை பார்த்துக்குங்க… ஹாஸ்பிடல்லயும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க…. நான் இப்போதே கிளம்பி வரேன்…” என்று அலைபேசியை அணைத்து விட்டான்.
“என்ன வசீ… ஏதாவது பிரச்சனையா….” சக காவல் துறை அதிகாரியாய் ஹாஸினி விசாரிக்க, அவன் தலையாட்டினான்.
“ம்ம்…. ஆமாம்… பேபி…. நம்ம கோர்ட்டுல ஆஜர்படுத்தி பதினஞ்சு நாள் ரிமான்ட்ல போலீஸ் கஸ்டடியில் வச்சிருந்தோமே சிவா…. அவனை யாரோ விஷம் கலந்த சாப்பாட்டைக் கொடுத்து கொல்லப் பார்த்திருக்காங்க…..”
“அய்யய்யோ… அவன்தானே நமக்கு கிடைச்சிருக்குற ஒரே ஆதாரம்… அவனை வச்சு தான் பல கேஸை முடிக்கணும்…. அவனுக்கு ஒண்ணும் ஆகலையே…. அப்போ நமக்குள்ள யாரோ கருப்பு ஆடு இருக்காங்களா…..” பதறினாள் ஹாஸினி.
“அவனுக்கு ஒண்ணும் ஆகலை… மயக்கம் வர்ற மாதிரி இருக்குன்னு சொன்னதும் உடனே ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டாங்க… ரெண்டு நாள்ள அவன் கேஸ் கோர்ட்டுக்கு வருதுல்ல…. அதான்…. அவன் வாயைத் திறந்தா பிரச்சனை வரும்னு அவனைப் போட்டுத் தள்ள முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு…. நல்ல வேளை… நம்ம ஆளுங்க கவனிச்சுட்டாங்க…..” என்றவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.
“ம்ம்……. அவனை வச்சு தான் பல கேஸ்ல பின்னாடி ஒளிஞ்சு கிட்டிருக்குற பெரிய தலைகளை எல்லாம் வெளிய கொண்டு வரணும்….”
“ம்ம்…. சரி பேபி… நான் ஹாஸ்பிடலுக்கு கிளம்பறேன்…” என்றான் வசீகரன்.
“நானும் உங்க கூட வரேன் வசீ….” என்று ஹாஸினி கூற அவர்கள் பேசுவதை சற்று பயத்துடன் கேட்டிருந்தனர் மற்றவர்கள்.
“என்னது….. இந்நேரத்துல கிளம்பறீங்களா…. நல்ல நாளும் அதுவுமா… வேண்டாம் மாப்பிள்ளை…. காலையில் பார்த்துக்கலாம்…” என்று ராஜேஸ்வரி கூற,
“ஆமாப்பா…. இப்போ போயி, அவுங்க உங்களை ஏதாவது பண்ணிட்டாங்கன்னா… வேண்டாம் கண்ணா…” என்று கெஞ்சுதலாய்ப் பார்த்தார் சபர்மதி.
“அம்மா…. அத்தை…. என்னைத் தடுக்காதீங்க…. ஒரு நல்ல போலீஸ்காரனுக்கு நேரம், காலம், சாப்பாடு, தூக்கம், விருப்பு, வெறுப்பு எதுவுமே நேரம் கிடைக்கும் போது தான்… நல்ல நாள், விசேஷம்னு எதுவும் தனியா கிடையாது… எந்த நேரமா இருந்தாலும் கடமையைச் செய்ய போயித்தான் ஆகணும்…. பயப்படாதீங்க…. இப்ப நான் வெறும் கான்ஸ்டபிள் இல்லை… என்கிட்டே துணிச்சல், தைரியத்தோட போலீஸ் துப்பாக்கியும் இருக்கு….” என்றவன்,
“பேபி…. நீ என்னோட வர வேண்டாம்…. காலைல உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நீ அதை மட்டும் செய்தா போதும்…” என்றவன் அவர்களது அறைக்கு சென்று நிமிடத்தில் காக்கி யூனிபார்மில் இறங்கி வந்தான். அவனை அவள் பெருமையும் காதலுமாய் கண்கள் மின்ன நோக்கிக் கொண்டிருக்க மற்றவர்கள் பயத்துடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.
“ஹாஸினி… நீயாவது அவனைப் போக வேண்டாம்னு சொல்லும்மா….” என்றார் சபர்மதி.
“இல்லை அத்தை…. ஒரு உண்மையான போலீஸ்காரன் கடமையை செய்ய நேரம் காலம் பார்க்கக் கூடாது…. அவர் மேல நம்பிக்கை வச்சு அனுப்புங்க… அவருக்கு ஒண்ணும் ஆகாது…. அவரோட கடமையை முடிச்சிட்டு நல்லபடியா திரும்பி வருவார்….” என்றவள் கணவனிடம் திரும்பி, “வசி…. டேக் கேர்….” என்றாள் அழுத்தத்துடன்.
“உன்னுடன் நான் இல்லை… அதனால் நீ கவனமாய் இரு…. உன்னைப் பாதுகாக்க நான் உடனில்லை…. அதனால் நீயே உன்னைப் பார்த்துக் கொள்….” அந்த ஒரு அற்புதமான வார்த்தை ஒளித்து வைத்திருந்த அன்பின் அர்த்தம் அவனுக்குத் தெரிந்ததால் அவனது இதழ்கள் அதைக் கேட்டதும் மெல்ல புன்னகையை சிந்தின.
அவன் சென்றதும் அவனையே நோக்கி நின்றவள் மனதில் காதல் இன்னும் கூடியது. “என் காதலையும் பரிசையும் சொல்லறதுக்குள்ளே கிளம்பிப் போயிட்டியேடா காந்தக் கண்ணா…. உன்னோட கடமையை வெற்றியோட முடிச்சிட்டு வா…. நான் காத்திருப்பேன்….” அவனை மனதுக்குள் செல்லமாய் கொஞ்சிக் கொண்டவள் மனது தனிமையை வேண்ட, ஏதோ வேலை இருப்பதாய்க் கூறி அவளது அறைக்கு சென்றாள்.
ஆயிரம் வார்த்தைகள் 
அறிவித்திடாத காதலை
அன்னமவள் ஒரு வார்த்தை
அவனுக்கு உணர்த்திவிட்டது…
அது புரிந்திடாமல்
ஆசையோடு வார்த்தைகளை
அலைந்து தேடி சேகரிக்கிறாள்
அவள் மனதை உணர்த்திட…..

Advertisement