Advertisement

அத்தியாயம் – 17
“என்ன பசங்களா… எல்லாம் அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்கீங்க… இத்தனை நாளா இல்லாத சொந்தம் திடீர்னு எப்படி வந்துச்சுன்னு புரியாம யோசிக்கறீங்களா…” என்றார் மரகதம் பாட்டி.
“ம்ம்… ஆமாம் பாட்டி… எங்க அம்மா இதுவரைக்கும் அவுங்க குடும்பத்தைப் பத்தி சொன்னதே இல்லை… அப்பாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணினதால குடும்பத்தை விட்டு விலகி இருக்காங்கன்னு தெரியும்…. அதுக்கு மேல ஏதும் தெரியாது…” என்றாள் வளர்மதி.
ராஜேஸ்வரியும் சபர்மதியும் கற்பகத்துடன் பேசிக் கொண்டிருக்க பேரப் பிள்ளைகளிடம் பழைய கதையை விளக்கிக் கொண்டிருந்தார் மரகதம் பாட்டி.
“ம்ம்… உங்க அம்மாவும், இவ அப்பாவும் சின்ன வயசுல உசுரா இருப்பாங்க…. அண்ணன், தங்கச்சின்னா இப்படி தான் இருக்கணும்னு உதாரணம் சொல்லுற அளவுக்கு ஒத்துமையா இருப்பாங்க…. தங்கச்சி தரையில் நடந்தா கால் வலிக்கும்னு தூக்கிக் கிட்டே நடப்பான் இவளோட அப்பா மகேஸ்வரன்… அண்ணன் ஊட்டி விட்டா தான் சாப்பிடுவா உங்கம்மா….” என்று நிறுத்தினார்.
“ஓ…. பாசமலர் சிவாஜி, சாவித்திரி போலவா பாட்டி…” என்று கிண்டலாய் கேட்ட  ஹாஸினி, வசீகரனின் பார்வையில் அமைதியானாள். அவனும், வளர்மதியும் கொஞ்சிக் கொள்வது மனதில் நினைவு வந்தது.
“ம்ம்… இவுங்களுக்கு இது ரத்தத்துல வந்த பழக்கம் போலிருக்கு…” என நினைத்தவள், “மேல சொல்லுங்க பாட்டி…” என்று ஊக்கினாள்.
“எங்க ஊருல பத்தாங்கிளாஸ் வரைக்கும் தான் அப்ப ஸ்கூல் இருந்துச்சு…. தங்கச்சிய படிக்க வைக்கணும்னு டவுனுக்கு அனுப்பிப் படிக்க வச்சான் மகேஸ்வரன்….. அங்கே யார் கூடயோ இந்தப் புள்ளைக்கு சிநேகம் ஆயிருச்சு…. வீட்ல சொன்னா ஒத்துக்க மாட்டங்கன்னு நினைச்சு சொல்லவே இல்லை….”
“ம்ம்… அப்புறம் பாட்டி….”
“அவ பன்னெண்டாவது முடிச்சதும் வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினாங்க…. அப்ப ஒரு நாள், “என்னைத் தேடாதீங்க… எனக்குப் பிடிச்சவனோட என் வாழ்க்கையை நான் முடிவு பண்ணிட்டேன்னு ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு சபர்மதி ஊரை விட்டே போயிட்டா….”
“பொண்ணு யாரு கூடப் பழகினா…. எங்கே போனான்னு தெரியாம கவலைப் பட்டே அவுங்க அப்பாக்கு கொஞ்ச நாள்ல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு…”
“அச்சச்சோ….” என்றாள் வளர்மதி.
“தங்கச்சியை நினைச்சு கவலை ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டுல சொல்லாம அவளே அவ வாழ்க்கைய முடிவு பண்ணிக்கிட்டு அப்பாவோட உயிருக்கே பிரச்சனையை கொண்டு வந்துட்டாளேன்னு அவ அண்ணனுக்கு அவ மேல ரொம்ப கோபம்….”
“அந்தக் கோவத்துல எனக்கு இனி தங்கச்சியே இல்லைன்னு தலை முழுகிட்டான்….. புருஷன் போன துக்கத்துல அவுங்க அம்மாவும் ரெண்டு வருஷத்துல இறந்துட்டா… அதுக்கப்புறம் அந்த ஊருல இருக்கப் புடிக்காம சொத்தை எல்லாம் வித்துட்டு இங்கே வந்து வியாபாரத்தை தொடங்கி கல்யாணமும் பண்ணி செட்டில் ஆயிட்டான்….”
“ம்ம்… அப்போ அத்தை எங்க அம்மாவைப் பார்த்ததில்லையா…”
“அவன் இங்கே வந்த பின்னால தானே கல்யாணம் பண்ணினான்… அதனால ராஜிக்கும் சபர்மதியைப் பத்தி கேட்ட அறிவு மட்டும் தான்…. எப்பவாவது எங்களை எல்லாம் பார்க்க ஊருக்கு வந்து போயிட்டு இருப்பாங்க…”
“ம்ம்… அப்புறம் என்ன ஆச்சு பாட்டி….” ஆர்வமாய் கேட்டாள் வளர்மதி.
“ஹாஸினி பொறந்து சில வருஷத்துலயே மகேஷ்வரனுக்கும் உடம்புக்கு முடியாம போயிருச்சு…. அப்போ தனக்கு ஏதாவது ஆகறதுக்குள்ளே தங்கையைப் பார்க்கணும்னு ஒரு ஏக்கம் வந்திருச்சு…. அவளுக்கும் சொத்தில் பாதியை எழுதிக் கொடுத்துடணும்னு நினைச்சு மறுபடியும் தேடத் தொடங்கினான்….. ஆனா ஒரு விவரமும் கிடைக்கல…. இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் இவளைப் பாக்குறோம்…” என்று முடித்தார்.
அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் கனத்த மனதுடன் அமைதியாய் இருக்க அங்கே வந்த ராஜேஸ்வரி மேலே சொல்லத் தொடங்கினார். “என் கணவருக்கு தங்கை மேல கோபம் ஒருபக்கம் இருந்தாலும் எப்பவும் அவளை நினைக்காம இருந்ததில்லை… ஏதாவது சாப்பிடும் போது கூட இது என் தங்கைக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டே சாப்பிடுவார்….” பெருமூச்சு விட்டுவிட்டு தொடர்ந்தார்..
“அவர் இறக்கறதுக்கு முன்னாடி என்கிட்டே ஒரு சத்யம் வாங்கி இருந்தார்…. நான் எப்படியாவது அவளைத் தேடிக் கண்டு பிடிச்சு இந்த சொத்தில் அவளோட பங்கைக் கொடுக்கணும்னு…. நானும் எத்தனையோ இடத்தில் தேடித் பார்த்தேன்….. அவ வீட்டை விட்டுப் போனதும் கோபத்துல, வீட்டில் இருந்த அவளோட பொருள் எல்லாத்தையும் எரிச்சுட்டாங்க….. ஒரு போட்டோ கூட இல்லாம எப்படி நான்  கண்டு பிடிக்கறது…”
“அப்புறம் என் கணவர் ஆசையை நிறைவேத்த கடவுள் தான் மனசு வைக்கனும்னு கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டேன்…. என் பிரார்த்தனை வீண் போகலை….” என்றவர், அண்ணனை நினைத்து மௌனமாய் அழுது கொண்டிருந்த சபர்மதியின் தோளில் ஆதரவாய்க் கை வைத்தார்.
“சபர்மதி… ஏன்மா இப்படிப் பண்ணினே…. உன் அண்ணனுக்கு சொல்லியிருந்தா அப்பாகிட்டே பேசி எப்படியும் உன் கல்யாணத்தை முடிச்சுக் குடுத்திருப்பான்…..” என்றார் மரகதம்.
“சித்தி… என்னை மன்னிச்சிருங்க… எனக்கு அண்ணன், அப்பா கிட்டே எங்க காதலை சொல்லி ஒத்துக்கலேன்னா என்ன பண்ணுறதுன்னு ஒரு பயம்… அவுங்க மறுத்துட்டா கண்டிப்பா நான் அவுங்க பேச்சை மீற மாட்டேன்…. அதுனால சொல்லாமலே அவரோட கிளம்பிப் போயிட்டேன்….”
“அப்பத்தான் அவருக்கு போலீஸ்ல செலக்சன் கிடைச்சு ட்ரெயினிங் போயிட்டிருந்தார்…. யார்கூடப் போறேன்னு தெரிஞ்சா என்னைத் தேடி வந்திருவீங்களோன்னு தான் அதைக் கூடத் தெரியப் படுத்தலை…. என் அப்பா சாவுக்கு நானே காரணமா இருந்திருக்கேன்… அண்ணன் எனக்காக எத்தனை வேதனைப் பட்டிருப்பார்… சில வருஷத்துக்கு அப்புறம் நாங்க அண்ணனைப் பத்தி விசாரிச்சுப் பார்த்தப்போ அவுங்க ஊரைவிட்டுப் போயிட்டாங்கன்னு மட்டும் தான் தெரிஞ்சது… அப்புறம் அப்படியே விட்டுட்டோம்….” என்று கரகரவென்று கன்னத்தில் இறங்கிய கண்ணீரை அழுத்தமாய்த் துடைத்துக் கொண்டவர்,
“அவரோட மனசுல என் மேல வச்சிருந்த பாசம் தான் அவர் மகளை என் பையனுக்கு சம்மந்தம் பண்ண வச்சிருக்கும்னு நினைக்கறேன்… எப்படியோ… மறுபடியும் நம்ம குடும்பம் அண்ணன் மனசு போலவே ஒண்ணாயிருச்சு…” என்று கண்ணீரோடு சிரித்தார்.
பிள்ளைகள் எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள வசீகரனின் அமைதி ஏனோ ஹாஸினியின் மனதில் ஒரு அச்சத்தைத் தோற்றுவித்தது.
“இவன் ஏன் இப்படி இருக்கான்…. என் முறைமாப்பிள்ளைனு தெரிஞ்சா மூஞ்சில பல்ப் எரியும்னு பார்த்தா, முகத்தை சீரியஸா வச்சுக்கிட்டு எனக்கு பல்ப் குடுக்கறான்….” புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
சபர்மதி கூறியதும் “ம்ம்… எனக்கும் அதை நினைச்சா ரொம்ப நிம்மதியா இருக்கு மா… எனக்கு மகனாய் ஒரு மருமகன் கிடைச்சிருக்கார்…. ஏன் சபர்மதி… இந்த சொத்து… வீடு எல்லாத்துலயும் உனக்கும் பங்கிருக்கு… இனி நீ எதுக்கு ஊருக்குப் போகணும்… இங்கேயே என்னோட இருந்திடக் கூடாதா…” என்றார் ராஜேஸ்வரி.
“அண்ணி…. எனக்கு என்னவோ எங்க வீட்டை விட்டு விலகி நின்னா அவர் நினைவாவே இருக்கு… இதோ இங்கே பக்கத்து ஊரு தானே…. நினைச்சா கிளம்பி வந்து பார்த்துட்டுப் போறேன்…. நான் ஊருக்கே போறேன் அண்ணி…. என்னப்பா வசீ… நான் சொல்லுறது சரிதானே…”
“ம்ம்… நீங்க எது செய்தாலும் சரிம்மா….. உங்களுக்கு சந்தோஷமா இருந்தா போதும்…..” என்றான் வசீகரன்.
அவர்கள் பேசிக் கொண்டே இருக்க, “மம்மி…. சாப்பிட்டு பேசலாமே…. வயிறு சாப்பாடு குடுன்னு… கூப்பாடு போடுது…. சாப்பிட்டு வந்து பேசலாம்…” என்றாள் ஹாஸினி.
அவள் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரிக்க வசீகரன் முகம் மட்டும் அமைதியாகவே இருந்தது. அதை கவனித்த ஹாஸினி, “என் அயித்த பெத்த ரத்தினம் மட்டும் ஏன் இப்படி உர்ருன்னு இருக்காரு… சொத்துல அவனுக்கும் பாதி இருக்குன்னு தெரிஞ்சதும் ஏதாவது வில்லங்கமா யோசிக்க ஆரம்பிச்சுட்டானோ….” ஹாஸினியின் மனதில் ஒரு குழப்ப பந்து சுழலத் தொடங்கியது.
“சரி…. வாங்க சாப்பிடலாம்…” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார் ராஜேஸ்வரி.
கலகலப்பாய் பேசிக் கொண்டே மதிய உணவை முடித்தவர்கள், அதற்குப் பிறகு சந்தோஷமாய் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். நகுலன், வளர்மதி கல்யாணத்தைப் பற்றி பேச்சு வந்தது.
“என்ன கற்பகம்…. எப்போ பசங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்…” என்றார் ராஜேஸ்வரி.
“இப்போதே வேணும்னாலும் நானும், என் பையனும் ரெடி தான்… ஒரு தாலியைக் கட்டி அப்படியே என் மருமகளைக் கூட்டிட்டு போயிருவேன்…. நீங்க சொன்னா சரி…” என்றார் கற்பகம்.
“ஹஹா…. அவ்வளவு அவசரமா… சரி…. அடுத்த மாசமே நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை வச்சுக்கலாம்… தை மாசம் கல்யாணத்தை வச்சுக்கலாம்… நீ என்ன சொல்லறே சபர்மதி…” என்றார்.
“தாராளமா பண்ணிடலாம் அண்ணி….. அண்ணன் இடத்துல இருந்து நீங்கதான் இனி எல்லாத்தையும் பார்த்துக்கணும்….” என்று சிரித்தார் சபர்மதி.
“அட… அதுக்கென்ன…. பார்த்துடலாம்… நீங்க என்ன சொல்லறீங்க கற்பகம்…..”
“எனக்கும் சந்தோசம் தான்…. இன்னும் எதுக்கு நாளைக் கடத்தணும்… சீக்கிரமே என் வீட்டு மருமகளை நான் கூட்டிட்டுப் போயிடறேன்…” என்று அவர் சிரித்தார்.
“அண்ணி… நம்ம பாஸ்கருக்கு ஏதாவது பொண்ணு சரியாகி இருக்கா… என்ன முடிவு பண்ணி இருக்கீங்க…. அக்கறையாய் ராஜேஸ்வரி விசாரிக்கவும் தனபாக்கியத்தால் பேசாமல் ஒதுங்கி இருக்க முடியவில்லை.
“பார்த்திட்டு தான் இருக்கோம் ராஜிம்மா…. ஒண்ணும் சரியாகலை….” என்றார்.
“ஏன் சித்தி… நம்ம குடும்பத்துல ஏதாவது பொண்ணுங்க இருக்கா…. நம்ம பாஸ்கருக்குப் பாக்குற மாதிரி….”
“நம்ம குடும்பத்துல…” என்று யோசித்தவர், “என் அண்ணனோட பேத்தி ஒருத்தி இருக்கா…. அவளுக்கு வேணும்னா பேசிப் பார்க்கலாமா…” என்றார்.
“அவுங்க குடும்பமெல்லாம் எப்படி சித்தி….”
“ஒரு பொண்ணு… ஒரு பையன்… பையன் துபாய்ல இருக்கான்…. அம்மா நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டா…. அப்பா மட்டும் தான்…. இந்த பொண்ணு பன்னெண்டாவது படிச்சிருக்கு…. வீடு, தோட்டம்னு எல்லா வேலையும் தெரியும்… நிறைய சொத்திருக்கு…. ரொம்ப நல்ல அடக்கமான பொண்ணு… லட்சணமா இருப்பா…. அவுங்களும் இப்போ மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க…” என்றார்.
“என்ன அண்ணி… பாஸ்கருக்குப் பார்க்கலாமா… நீங்க என்ன நினைக்கறீங்க….”
“பார்க்கலாம் தான்… நீ என்னப்பா பாஸ்கர் சொல்லறே…” என்றார் மகனிடம். பாட்டி சொல்லுவதைக் கேட்ட போதே அவன் மனதில் அந்த சம்மந்தம் மீது ஒரு பிடிப்பு வந்திருக்க அவனும் சம்மதமாய் தலையாட்டினான்.
“அப்புறம் என்ன…. பையனும் சம்மதிச்சாச்சு… இனி ஜாதகம் பார்த்து பேசிட வேண்டியது தான்…” என்று ராஜேஸ்வரி கூறியதும் அதுவரை சற்றுப் பொறாமையோடு ஒட்டாமல் இருந்த பாஸ்கர், தனபாக்கியத்தின் மனதும் அந்த அக்கறையான பேச்சில் நெகிழ்ந்து போனது.
                                                  
சிறியவர்கள் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தனர். “அண்ணா…. பர்த்டேக்கு கேக் வெட்ட நேரம் ஆச்சே… நீங்க பிரெஷ் ஆயிட்டு வாங்க…” என்றாள் வளர்மதி.

Advertisement