Advertisement

அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல….. மவளே…. ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ…..” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவன்,
ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
அவனுக்கு சற்று தள்ளி ஹாஸினியும் அமர்ந்தாள்.
“என்ன பேபி… இவ்வளவு தள்ளிப் போய் உக்கார்ந்திருக்கீங்க….. அந்த பாஸ்கர் வேற நாம என்ன பண்ணறோம்னு பார்த்துட்டே இருக்கான்…. கொஞ்சம் பக்கமா நெருங்கி உக்காருங்க….” என்றான்.
“அதெல்லாம் என்னால முடியாது… இந்த நெருக்கம் போதும்….” என்றாள் அவள் எரிச்சலுடன்.
“என்னங்க… ஒரு விஷயம் பண்ணினா சரியா பண்ணணு… ப்ளீஸ் பேபி… எனக்கு கொடுத்த வேலையை என்னை சரியா செய்ய விடுங்க….” என்றவன், “சரி… நீங்க அப்படியே உக்காருங்க…. நான் உங்க மடியில் படுத்துக்கறேன்…” என்று கூறிக் கொண்டே அவள் மடியில் படுத்துவிட்டான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத ஹாஸினி தவித்துப் போனாள்.
“வசீகரன்… என்ன இது… மரியாதையா எழுந்திருங்க… உங்களுக்கு சான்ஸ் கிடைச்சதுன்னு அட்வான்டேஜ் எடுத்துக்கப் பார்க்கறீங்களா… இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை….” என்று அவள் சிரித்துக் கொண்டே வார்த்தையைக் கடித்துத் துப்ப, அதற்கெல்லாம் அசருவானா நமது இயக்குனர் நாயகன்.
“என்ன நீங்க…. என்னை புருஷனா நடிக்கணும்னு சொன்னீங்க…. இப்போ புருஷனா நடிக்க வேண்டாம்னு தடுக்கறீங்க… வாங்கின காசுக்கு என்னை வேலை செய்ய விடுங்க…. ஒரு புருஷன் இப்படில்லாம் தானே பண்ணுவான்…. அந்த பாஸ்கர் போயி நம்மளைப் பத்தி உங்க அம்மாகிட்டே சொன்னா அவுங்களுக்கு பீபி தான் அதிகம் ஆகும்… உங்களுக்கு அது ஓகேன்னா நான் எழுந்துக்கறேன்….” என்றான்.
அதைக் கேட்டதும் சற்று சமாதானம் ஆனவள், “படுத்துத் தொலைங்க…..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு. அவளது மடியில் சுகமாய் படுத்துக் கொண்டு கண்ணை மூடி அந்த நிமிடத்தை அனுபவித்தவன் மனதுக்குள் அந்தப் பாடல் வரிகள் ஓடிக் கொண்டிருந்தது.
“இந்த நிமிடம் இந்த நிமிடம்… இப்படியே உறையாதா…
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்… இப்படியே தொடராதா…”
சுற்றிலும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பூச்செடிகளும் பசுமையாய் கண்ணை நிறைத்த மரங்களும் தராத நிம்மதியை… சந்தோஷத்தை…. எப்போதும் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு அவனைக் கேலி செய்து பரிகசித்துக் கொண்டிருக்கும் அவளது மடியில் அவன் உணர்ந்தான்.
அந்த நிமிடத்தில் சுவர்க்கம் எதுவென்று புரிந்து கொண்டான்.
“இந்த மடி என் ஆயுள் முழுவதும் கிடைக்க நிச்சயம் நான் போராடுவேன்….” என நினைத்துக் கொண்டவன்,
எங்கோ பார்த்துக் கொண்டு கை கட்டி தேமே என்று அமர்ந்திருந்தவளைக் கண்டு சிரிப்பு வர, “என்ன பேபி… இப்படி கை கட்டிட்டு உக்கார்ந்திருக்கீங்க…. எத்தனை படம் பார்த்திருப்பீங்க… புருஷனை மடியில படுக்க வைச்சுட்டு இப்படி தான் உக்கார்ந்திருப்பாங்களா….” என்றவன், அவளது ஒரு கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
அவளது கையின் மேல் அவனது கையை வைத்துப் பிடித்திருக்க அதை உருவிக் கொள்ள முயன்றாள் அவள்.
வெகு நெருக்கமான அவனது ஆண்மை நிறைந்த முகமும், அவன் முகத்தில் இருந்து வந்த ஆப்டர் ஷேவிங் லோஷன் மணமும் அவளைக் கிறங்கடிக்க அந்த புதுவிதமான உணர்வில் திக்கு முக்காடிப் போனவளின் விரலைப் பிரித்து விளையாடிக் கொண்டிருந்தான் வசீகரன்.
“ஹையோ…. என்ன அவஸ்தை இது… இங்கே வந்திருக்கவே கூடாதோ… இவன் இப்படிப் படுத்துகிறானே…. ஒரு வருடம் எப்படி இவனிடம் நான் சமாளிக்கப் போகிறேன்… அம்மாவுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ…. கடவுளே…. எனக்கு ஒன்றும் புரியவில்லையே….” என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளது புலம்பல் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ கேட்டுக்கு வெளியே திரும்பிச் சென்ற பாஸ்கரைக் கண்டதும் மனதுக்குள் ஒரு விடுதலை உணர்வு தோன்ற வசீகரனின் தலையைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள்.
அவள் செயலில் திகைத்தவன், “என்ன பேபி… பாஸ்கர் பார்த்தா…..” என்று பேசிக் கொண்டே எழுந்தவனை நோக்கி கையால் வாயைப் பொத்திக் காண்பித்தவள், “அவன் போயிட்டான்…. போதும் நடிச்சது….” என்றாள் எரிச்சலுடன்.
அவன் மனதில் சட்டென்று ஒரு ஏமாற்றம் தோன்ற, “ம்ம்… சரி… போகலாமா…..” என்று எழுந்தான்.
அதைக் கேட்க அவள் அங்கே இருந்தால் தானே….
அவளது மனம் அவனது நெருக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தப் புதுவித உணர்வில் தவிக்க அதை மாற்ற எண்ணியவள் நடந்து கொண்டிருந்தாள். அவளது மனதுக்குள் லேசாய் ஒரு குற்றவுணர்வு வந்திருக்க யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
கல்யாணம் என்பது இருவர் சம்மந்தப் பட்ட விஷயமாய் தான் அவள் நினைத்திருந்தாள். அதில் சம்மந்தப் பட்ட இருவரின் குடும்பம், உற்றம் சுற்றம் என பல சங்கிலிகள் தொடர்ந்திருக்கும் என்பதை அவள் யோசிக்கவில்லை….
“ஒரு வருடம் முடிந்து அவனை வேண்டாம் என்று சொன்னாலும் அம்மா என்ன சொல்வார்கள்…. அதற்கு சம்மதிப்பார்களா…. அது வரை இப்படி நடிக்க முடியுமா…. அவசரப் பட்டு இப்படி செய்தது தவறோ….” என சிந்தித்துக் கொண்டிருந்தவள்,
அங்கே ஒரு அழகான குழந்தை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே பூக்களின் அருகில் தனியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதன் அருகில் சென்றாள். 
“ஹாய் பேபி…. யார் கூட வந்தீங்க…. இங்கே தனியா என்ன பண்ணறீங்க….” என்று அதன் தலையில் மெல்லக் கலைத்து விட்டாள். அது சட்டென்று திரும்பவும் அதன் கையில் இருந்த ஐஸ்க்ரீம் கீழே விழுந்து விட அது அழுகத் தொடங்கியது.
“அச்சச்சோ…. ஐஸ்க்ரீம் கீழே விழுந்திடுச்சா…. அழாதீங்க…. வேற வாங்கிக்கலாம்… உங்க அப்பா அம்மா எங்கே….” என்று பார்வையை ஓட விட்டாள். சற்று மறைவாக அமர்ந்திருந்த குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் அழுகைக் குரல் கேட்டு எழுந்து ஓடி வந்தனர்.
“என்னாச்சு….. என்னாச்சு செல்லம்…..” என்று பதறிக் கொண்டு வந்தவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அழகாய் செழுமையாய் இருந்தாள்.
“குழந்தை கையில் இருந்த ஐஸ்க்ரீம் கீழே விழுந்திருச்சு… அதான்…” என்று காரணம் சொன்ன ஹாஸினி, அதன் தந்தையின் கன்னத்தில் பளிச்சென்று தெரிந்த லிப்ஸ்டிக்கின் அடையாளம் கண்டு கூசினாள்.
குழந்தை அருகில் இல்லாத தைரியத்தில் இருவரும் நெருக்கமாய் இருந்திருப்பார்கள் என்று தோன்றியது. அதற்குள் வசீகரன் அங்கே வந்திருந்தான்.
“சார்….” என்றவன் அந்தப் புதியவனின் கன்னத்தைக் காட்ட அவன் புரிந்து கொண்டு அவசரமாய் டவலை எடுத்து துடைத்துக் கொண்டான்.
அதைக் கண்ட அந்தப் பெண்ணும் நெளிந்தாள்.
“இவளை என் தங்கை தான் வைத்திருந்தாள்…. தனியாக விட்டுவிட்டு எங்கே சென்றாள்…” என்று கேட்டுக் கொண்டே,
“அழாதேடா செல்லம்… மம்மி உனக்கு வேற ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்…” என்றவள் இரு கையிலும் ஐஸ்கிரீமுடன் வந்து கொண்டிருந்த அவள் தங்கையைக் கண்டதும் முறைத்தாள்.
“திவ்யா… குழந்தையைத் தனியா விட்டுட்டு எங்கே போனே…. நீ பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு விட்டுட்டுப் போயிட்டே…. ஐஸ்க்ரீம் கீழே விழுந்ததும் அவள் அழுதிட்டு நிக்குறா பாரு….” என்று கடிந்து கொண்டாள்.
“அக்கா… இரு… இரு… அவளுக்கு நான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து இங்கே உக்கார வச்சிட்டு எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கப் போனேன்…. அதுக்குள்ள அழுகத் தொடங்கிட்டாளா….” என்றவள் குழந்தையிடம் ஒரு ஐஸ்க்ரீமைக் கொடுத்துக் கொண்டே பக்கத்தில் நின்ற புதியவர்களைக் கவனித்தாள்.
“அட…. வசீ…. மை டியர் ட்ரீம் பாய்…. நீங்களா…. ஹவ் ஆர் யூ மேன்…..” என்றவள் உற்சாகத்துடன் அவனிடம் கை குலுக்குவதற்காய் கை நீட்டினாள்.
அவன் யோசனையுடன் அவளிடம் கை குலுக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாஸினியின் கண் காது மூக்கில் எல்லாம் புகை பறந்தது. அவள் யாரென்று நினைவு வந்த வசீகரன், “ஹல்லோ திவ்யா… அப்பா நல்லாருக்காரா… நீங்க என்ன இங்கே…..” என்று கடலை போடத் தொடங்க,
“ரிலாக்ஸ்….. ரிலாக்ஸ்… சொல்லறேன்… அக்கா…. உன் பேபியை நீயே பார்த்துக்கோ…. இந்தா… இந்த ஐஸ்க்ரீமையும் வைச்சுக்கோ…. எனக்கு கடலை போட ஆளு கிடைச்சாச்சு…. நான் போறேன்…” என்றவள்,
“வாங்க அந்த ஐஸ்க்ரீம் பார்லர்ல உக்கார்ந்து சாப்பிட்டே பேசுவோம்….” என்று வசீகரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள். 
அங்கேயே நின்று கொண்டிருந்த ஹாஸினியின் முகத்தைத் திரும்பிப் பார்த்த வசீகரன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். மனதில் உள்ளதை அப்படியே அப்பட்டமாகக் பிரதிபலித்தது முகம்…. அவளது பொருளை யாரோ தட்டிப் பறித்துக் கொண்டு போவது போல் ஒரு ஏமாற்ற உணர்வைக் காட்டியது.
அவன் ஏதோ ஒரு பெண்ணிடம் பேசினால் அவளுக்கு ஏன் அப்படித் தோன்ற வேண்டும் என்று அவள் யோசிக்கவில்லை… ஆனால் வசீகரன் யோசித்தான். அவளை மேலும் சீண்டிப் பார்க்க நினைத்தவன், “பேபி… வாங்க…” என்று அவளையும் இழுத்துக் கொண்டு ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தான்.
வசீகரன் முதலில் அமர்ந்ததும் அவன் அருகில் வேகம் சென்று திவ்யா அமர்ந்து கொள்ள ஹாஸினியின் முகத்தில் அப்பட்டமாய் ஏமாற்றம் தெரிந்தது.
அதைக் கண்டு மனதுக்குள் ரசித்துக் கொண்ட வசீகரன் அவளை இன்னும் சீண்டி விட முடிவு செய்தான். வேறு வழி இல்லாமல் ஹாஸினி அவர்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“வசீ…. இவுங்க யாரு… சொல்லவே இல்லை…” என்றாள் திவ்யா அவன் தோளில் கை வைத்துக் கொண்டே.
“இவுங்க… இவுங்கதான் என் மனைவி ஹாஸினி….” என்று அவளை திவ்யாவுக்கு அறிமுகப் படுத்த ஹாஸினி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“ஓ… உனக்கு மேரேஜ் ஆயிருச்சா மேன்… நான் ஒரு அன்லக்கி… உன்னைப் போல மில்கி பாய் ஒருத்தனை மிஸ் பண்ணிட்டேனே….” என்று நெஞ்சில் கை வைத்து பீல் பண்ணினாள் அவள். அதைக் கண்டு ஹாஸினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
“பேபி…. இவுங்க டைரக்டர் முத்து ராமோட பொண்ணு…. அவரை எனக்கு ரொம்பப் பழக்கம்….. ஒரு சினிமாவுல என்னை ஹீரோவா நடிக்க கேட்டிருந்தார்…. நான் இயக்குனர் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்… அதுனால அதைப் பண்ண முடியாம போயிருச்சு… அப்புறம் அப்பா இறந்ததும் அந்த பீல்டுக்கு நான் முயற்சி பண்ணாம அப்படியே நின்னுருச்சு…” என்றான் அவன்.
“ஓ…” என்று மட்டும் கேட்டுக் கொண்டவளின் கண்கள் திவ்யாவை அளவிட்டுக் கொண்டிருந்தது. டைட்டாய் ஒரு ஜீன்ஸ் அணிந்து லூசாய் ஒரு குர்தி அணிந்திருந்தாள். அது முன் கழுத்துப் பகுதியில் அபாரபான பள்ளமாய் வெட்டப்பட்டிருக்க அவளது செழுமையான உடல் பகுதிகள் சற்று தாராளமாகவே தெரிந்தன.
“வசீ… இங்கேதான் கொஞ்ச நாளா அப்பா படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு… அப்பாவோட பிலிம் யூனிட் கூட நாங்களும் கிளம்பி வந்து டேரா போட்டிருக்கோம்…. எப்பவும் பாக்குற ஷூட்டிங் தானே… இன்னைக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டும்னு இங்கே பார்க்குக்கு வந்தோம்…. வந்த இடத்துல உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு…. இதென்ன மேன் உன் ஹேர் ஸ்டைல் எல்லாம் ரொம்ப மாறியிருக்கு….” என்றாள் அவன் தலையைக் கலைத்துக் கொண்டே.
“ம்ம்… நான் இப்போ போலீஸ்ல ஜாயின் பண்ணிட்டேன்….” என்று அவன் கூறியதும், “ஹோ… போலீஸ் மேன்… சிங்கம் சூரியா போல கலக்கப் போறியா…” என்று அவள் சிரித்ததும் ஹாஸினியின் மனதுக்குள் அவளைக் கிழித்துப் போடும் அளவுக்குக் கோபம் வந்தது.
“ம்ம்… இவனே ஒரு தொடை நடுங்கிப் போலீசு… இவன் சிங்கம் சூரியா போல கலக்கப் போறானாம்….” என்று அவனை கேலியாய்ப் பார்க்க அவள் ஏதும் கூறி விடுவாளோ என்று யோசித்த வசீகரன், அவர்களுக்கு ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்வதற்காய் பேரரை அழைத்தான்.
“எனக்கு வேண்டாம்… இந்தக் குளிர்ல ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடியாம ஆயிரப் போகுது… நீங்களும் சாப்பிட வேண்டாம்…” எனப் பொரிந்தாள். அவனை சாப்பிடக் கூடாதென்று தடுக்கும் உரிமை தனக்கு எப்படி வந்தது என்று ஹாஸினி யோசிக்கவில்லை…. ஆனால் அவள் சொன்னதில் இருந்த அக்கறையை நினைத்து மனதுக்குள் ரசித்துக் கொண்டான் வசீகரன்.
“வசீ… பரவால்லையே… உங்க ஒயிப் உங்க மேல ரொம்ப கேர் எடுத்துக்குறாங்க…. நீங்களும் லக்கி தான்… உங்க ரெண்டு பேருக்கும் செம பொருத்தமா இருக்கு…. மேட் பார் ஈச் அதர் மேன்…. வாழ்த்துக்கள்….” என்றவள், “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடாம வேடிக்கை பாருங்க… நான் சாப்பிடறேன் பா…” என்று அவளுக்குப் பிடித்த பிளேவரைக் கொண்டு வரப் பணித்தாள் பேரரிடம்.
அதுவரை திவ்யாவின் மேல் புகைந்து கொண்டிருந்த கோபம் அவள் சொன்ன வார்த்தையில் தணிந்து போக தன்னையறியாமல் அந்த வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி. வசீகரன் மனையாளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவனை ஏறிட்டவளின் விழிகள் ஒரு நொடி அவன் கண்களில் கலந்து வேறு புறம் நோக்கியது.
உனது விழிகள் என் விழிகளை
உரசிச் சென்றதில் பூத்துவிட்டது காதல் பூ….
எத்தனைதான் நீ ஒளித்து வைத்தாலும்
அதன் மணத்தை மறைக்க முடியாது பெண்ணே….
ஒரு முறை எனை நீ பார்த்தால்
ஓராயிரம் முறை மலர்கிறேன் நான்….
உன் நிழலின் உருவமாய்
நான் மாறத் துடிக்கிறேன்….
கண்ணிமையில் குடியிருந்து
காட்சியாய் மாற விழைகிறேன்…..
காற்றாய் நான் மாறி- உந்தன்
மூச்சுக் காற்றில் மிதக்கிறேன்….
வானவில்லுக்கே வண்ணம் தீட்ட நினைப்பவளே…
மழைக்கே நீ தாகம் தணிக்க போகிறாயா…
உன் நினைவுகளின் அதிர்வலையில்
நீந்த முடியாமல் தவிக்கிறேன் நான்….

Advertisement