Advertisement

அத்தியாயம் – 11
காலை உணவை முடித்துவிட்டு வசீகரனும் ஹாசினியும் அவர்கள் அறையில் இருக்க ராஜேஸ்வரியின் அறைக்கு ஒரு தயக்கத்துடன் வந்தார் தனபாக்கியம்
“வாங்கண்ணி….. உக்காருங்க…..” என்ற ராஜேஸ்வரி அவர் அமர்ந்ததும் பேசத் தொடங்கினார்.
“அண்ணி…. ஹாஸினிக்கு செய்ய வேண்டிய பெரிய கடமையை முடிச்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு…. அவளா இஷ்டப்பட்டு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் அவளோட கோபத்தையும் குணத்தையும் புரிஞ்சு நடந்துக்குற ஒருத்தரை தான் விரும்பி இருக்கா….”
“மாப்பிள்ளைக்கு ரொம்ப பொறுமையான குணம்…. ஹாஸினியோட குணத்துக்கு எப்படி ஒத்துப் போவாரோன்னு பயமா இருந்துச்சு… அவரோட பழகினதும் தான் எனக்கு நம்பிக்கை வந்துச்சு…. ம்ம்ம்…. இப்ப எனக்கு சந்தோஷமா இருக்கு…. நாமளா தேடி இருந்தாலும் கூட இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்குறது கஷ்டம் தான் இல்லையா….” என்றார் சந்தோஷத்துடன்.
“ம்ம்… ராஜி… அதைப் பத்தி பேசலாம்னு தான் நானும் வந்தேன்…. இப்படி சொல்லறேனேன்னு என்னை தப்பா நினைச்சுக்க கூடாது…. கவனிச்சு பார்த்தா உனக்கே புரியும்….” என்று பீடிகையுடன் அவர் நிறுத்த,
“என்ன அண்ணி…. என்ன சொல்லப் போறீங்க…. எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுங்க….” என்றார் ராஜேஸ்வரி.
“அது வந்து…. நீ பிரஷர் மாத்திரையைப் போட்டியா….” என்று சம்மந்தமில்லாமல் கேட்க, “ம்ம்…. குடிச்சுட்டேன் அண்ணி…. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க…” என்றார் ராஜேஸ்வரி அவர் முகத்தையே நோக்கிக் கொண்டு.
“ம்ம்… நம்ம ஹாஸினிக்கு… கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆகியும் அவுங்க ரெண்டு பேரும் சரியா பேசறது கூட இல்ல…. புதுசா கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டி…. அதுவும் ஒருத்தர ஒருத்தர் விருப்பப்பட்டு கல்யாணம் கட்டிகிட்டா இப்படியா இருப்பாங்க….” என்று நிறுத்தியவர் தொடர்ந்தார்.
“எப்பப் பார்த்தாலும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுக்குறதும்…. ஆளுக்கு ஒரு பக்கமா சம்மந்தம் இல்லாதவங்க போல இருக்குறதும்….. ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு அன்னியோன்யமே இல்லாத போல தோணுது….” என்றவர் ராஜேஸ்வரியின் கலவரமான முகத்தைக் கண்டு நிறுத்தினார்.
“அண்ணி….. அப்படில்லாம் சொல்லாதீங்க…. என் பொண்ணு சந்தோஷமா வாழறதைப் பார்க்கணும்னு தான் என் உடம்பில் உயிரே ஒட்டிகிட்டு இருக்கு…. நீங்க கேட்டு உங்க பையனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலேங்கறதுக்காக இப்படியெல்லாம் அபாண்டமா சொல்லாதீங்க…. எனக்கு அப்படியெல்லாம் தோணலையே…” என்றார் ராஜேஸ்வரி சற்று கோபத்துடன்.
“அச்சச்சோ…. அப்படில்லாம் நினைக்காதே ராஜி…. உன் பொண்ணு எனக்கு மருமகளா வரலேங்கறது எனக்கு வருத்தம் தான்…. இருந்தாலும் அவ நம்ம வீட்டுப் பொண்ணு…. அவளோட வாழ்க்கை நல்லாருக்கணும்னு தான் நானும் ஆசைப் படறேன்….”
“சின்னஞ்சிறுசுங்க…. விவரம் இல்லாம இப்படி நடந்துக்குறாங்களா…. இல்ல… அவுங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையான்னு பெரியவுங்க நாம தானே பார்த்து சரி பண்ணனும்…. அதுக்கு தான் உன்கிட்டே சொன்னேன்…..” என்றவரின் கண்ணில் பொய் தெரியவில்லை.
“காலையில் கூட அவுங்க அறைக்குப் போன போது ஆளுக்கு ஒரு பக்கமா ஏதோ பண்ணிட்டு இருக்காங்க…. இந்த சந்தேகம் எனக்கு மட்டும் இல்ல… என் மகனுக்கும் இருக்கு… கல்யாணம் ஆனதில் இருந்து நாங்களும் பார்த்திட்டு தானே இருக்கோம்…. உனக்கு சந்தேகமா இருந்தா நீயும் அவுங்களை கவனிச்சுப் பாரு… உனக்கே புரியும்…” என்றார் தனபாக்கியம்.
அவர் சொல்வதைக் கேட்டவுடன் ராஜேஸ்வரி யோசிக்கத் தொடங்க அவருக்கும் அதெல்லாம் சரியோ என்ற சந்தேகம் முளைவிடத் தொடங்கியது.
“இங்க பாரு ராஜி… நீ எங்களை நம்ப வேண்டாம்… அவுங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது எப்படி நடந்துக்கறாங்கன்னு மட்டும் கவனி… நேத்து முதலிரவு ரூமுக்குள்ள போகும்போது ஹாஸினியோட முகம் பார்க்கணுமே… அவ்ளோ கோபமா இருந்துச்சு…”
“நான் அவ கையில பால் சொம்பைக் கொடுத்ததுக்கு கோபமா வாங்கிட்டு போனா…. நான் என்னடா இதுன்னு பார்த்துட்டு நிக்கும் போது சொம்பை உள்ளே நங்குன்னு வைச்ச சத்தம் வெளியே நிக்குற எனக்குக் கேட்டுச்சு….”
“நான் என்னடா இது அதிசயமம்னு நின்னு பார்த்திட்டிருந்தேன்… அப்புறமும் உள்ளே ஏதோ கோபமா பேசிக்குற குரல் கேட்டுச்சு…… காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க முதலிரவு அறைக்குள்ள இப்படிதான் பேசிக்குவாங்களா….” என்று ராஜேஸ்வரியின் பிரஷரை ஏற்றிக் கொண்டிருந்தார்.
தனபாக்கியம் பேசத் தொடங்கும் போதே அந்தப் பக்கமாய் வந்த வசீகரன் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க ஹாஸினியை அழைத்து வந்து அவளையும் கேட்க வைத்தான்.
அதைக் கேட்டதும் அவளுக்கு தனபாக்கியத்தின் மீது கோபம் தாறு மாறாய் எகிற அன்னை என்ன நினைக்கப் போகிறாரோ என்ற யோசனையுடன் அவர்களின் அறைக்கு சென்று விட்டாள். அவளுக்குப் பின்னால் வந்த வசீகரன்,
“அவுங்க பேசுறதைக் கேட்டீங்களா… அத்தையும் இப்போ யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க… அவுங்களுக்கும் இந்த சந்தேகம் வந்துச்சுன்னா அவுங்க தாங்குவாங்களா… அவுங்க ஒரு பிரஷர் பேஷண்ட் வேற…” என்று நிறுத்தினான்.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “வசீகரன்…. அவுங்களுக்கு அந்த சந்தேகம் வராம நாம தான் பார்த்துக்கணும்….. வாங்க…. நாம மம்மிகிட்டே சொல்லிட்டு வெளியே கிளம்பலாம்….” என்றாள்.
அதைக் கேட்டதும் அவன் மனதுக்குள் சட்டென்று சாரல் அடிக்க அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ம்ம்… உன்னோட கதையை நான் எப்படி திரைக்கதை அமைச்சு… இயக்கி… நடிச்சு காட்டறேன்னு மட்டும் பாரு…. அப்படியே அசந்திருவே….” என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
“ஓகே… பேபி… நான் ரெடி…” என்றான்.
அந்த அழைப்பைக் கேட்டு அவள் கண்களால் அவனை எரிக்க, “அதுவந்து…. இப்பவே அப்படி கூப்பிட்டு டிரையல் பார்த்தேன்…. நீங்க வாங்க….” என்று கதவைத் திறந்தான். அதே நேரத்தில் ராஜேஸ்வரியின் அறையில் இருந்து ஹாலுக்கு வந்து கொண்டிருந்தனர் ராஜேஸ்வரியும் தனபாக்கியமும்.
அதைக் கண்ட வசீகரன் சட்டென்று ஹாஸினியின் கையைப் பிடித்து உள்ளே இழுத்து கண்ணைக் காட்டினான். அவன் ஏதோ செய்யப் போகிறான் என்பது புரிந்தவள் அவன் செய்த செயலில் அப்படியே சிலையாகி நின்றாள்.
அவளது இடுப்பின் இரு வசத்தும் கை வைத்து சுவரோடு சேர்த்து நிறுத்தியவன்,  அவளது மேனியில் பட்டும் படாதவாறு மெல்ல அணைத்து அவளது காதின் அருகில் உள்ள கூந்தலை ஒதுக்கி விட்டான்.
“பேபி… ப்ளீஸ் பேபி… ஒரே ஒரு கிஸ்…” என்றவன் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அப்போது தான் பெரியவர்கள் வருவதை கவனித்தது போல் விலகி நிற்க அவன் மூச்சுக் காற்றும் முத்தமும் தந்த புதிய சுகத்தில் பிரம்மை பிடித்து அதிர்ந்து நின்றிருந்தாள் ஹாஸினி.
கதவு திறந்திருந்ததால் அதைக் கண்டுவிட்ட ராஜேஸ்வரி வெட்கத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட தனபாக்கியமோ குழப்பத்துடன் மீண்டும் அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்.
அவர் சென்றதும் ஹாஸினியை திரும்பிப் பாரத்த வசீகரன் திடுக்கிட்டான். கோபத்தில் முகமெல்லாம் சிவந்திருக்க அவர்களின் முன்னால் அவனைத் திட்ட முடியாத அவஸ்தையில் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
அவளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை…. நெருக்கமாக நிற்பதை அவர்கள் பார்க்கட்டும் என்று நினைத்துதான் அப்படி செய்தான்.
அத்தனை நெருக்கத்தில் அவளது மேனியில் இருந்து வீசிய பிரத்யேகமான அவளது வாசனையும் வளவளவென்றிருந்த அவளது இடுப்பில் கை வைத்ததும் அவளது உடலின் சிலிர்ப்பு அவனது கரங்களுக்குப் புரிய… அவனுக்குள்ளும் ஆசைகள் குதியாட்டம் போட்டது….
இரவு முழுதும் அவளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே ஒன்றும் செய்ய முடியாமல் ஏங்கியதும் எல்லாம் சேர்ந்து அவனையறியாமல் அவள் பளிங்குக் கன்னத்தில் முத்தமிட்டு விட்டான். அவளது கண்ணில் கண்ணீரைக் கண்டு அதிர்ந்தவனின் மனது உண்மையிலேயே பதறியது.
“பேபி… சா…. சாரிமா… நா… நான்… சும்மா அவுங்க பார்க்கட்டும்னு தான்….” என்று வார்த்தைகள் வராமல் தந்தியடிக்க திணறினான்.
அவள் ஒன்றும் பேசாமல் அவனை வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றவள் பாத்ரூமிற்கு சென்று முகம் கழுகி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு உடை மாற்றி வந்தாள்.
நீல நிற டெனிம் ஜீன்ஸும் ஒரு டீஷர்ட்டும் அணிந்து கழுத்திற்கு ஒரு  சால்வையை கொடுத்திருந்தாள்.
வசீகரன் ராஜேஸ்வரியின் எதிரில் சோபாவில் அமர்ந்திருக்க அவனை ஓரக் கண்ணால் நோக்கியவள், “மம்மி…. நாங்க கொஞ்சம் வெளியே நடந்துட்டு வரோம்… வசீகரன்…. நீங்க டிரெஸ் சேஞ்ச் பண்ணனும்னா பண்ணிட்டு வாங்க….” என்றாள்.
வசீகரன் ராஜேஸ்வரியை நோக்க, “போயிட்டு வாங்க மாப்பிள்ளை… நீங்க போட்டிருக்குற டிரஸ்சே நல்லாதான இருக்கு… இதுவே போதுமே….” என்றார்.
“அவன் மஞ்சள் வண்ண டீஷர்ட்டும் ஜீன்சும் அணிந்திருந்தான். ராஜேஸ்வரி சொன்னதும் அப்படியே புறப்படத் தயாரானவன் அவர்கள் அறைக்கு சென்று அலைபேசியை மட்டும் எடுத்து வந்தான்.
“நான் ரெடி…. கிளம்பலாமா பேபி….” என்று புன்னகையுடன் ஹாஸினியை நோக்க அந்த அழைப்பைக் கேட்ட ராஜேஸ்வரியும் தனபாக்கியமும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அதை ஹாஸினியும் கவனிக்கத் தவறவில்லை.
அவளது கையை எதார்த்தமாய்ப் பிடிப்பது போல் அவனது கையோடு கோர்த்துக் கொண்ட வசீகரன் அவளிடம் ஏதோ சிரித்துக் கொண்டே பேசுவது போல் காதருகில் கிசுகிசுத்து நடக்க அதற்கு சத்தமாய் சிரித்தாள் ஹாஸினி.
அதைக் கண்டதும் மனதில் இருந்த சஞ்சலம் நீங்க சந்தோஷமாய்ப் புன்னகைத்தார் ராஜேஸ்வரி. அவரது சிரிப்பைக் கண்ட தனபாக்கியம், “ரெண்டு பேரும் நம்ம முன்னால அப்படி நெருக்கமா காட்டிக்குறாங்களோ…. எதுக்கும் பாஸ்கர் கிட்டே சொல்லி அவுங்க வெளியே எப்படி நடந்துகுறாங்கன்னு பார்க்க சொல்லுவோம்….” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…. சின்னஞ்சிறுசுக…. கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க…. இதை எல்லாம் வேவு பார்க்குறது அசிங்கம்….” என்றார் ராஜேஸ்வரி.
“இல்லை ராஜி…. வெளியே தானே போறாங்க…. அப்படி என்ன நெருக்கமா இருக்க போறாங்க… அவுங்க எப்படி நடந்துக்குறாங்கன்னு நம்ம பாஸ்கரை கவனிக்க சொல்லலாம்… நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லாருக்கனும்ல… அதுக்காக கொஞ்சம் வேவு பார்த்தாலும் தப்பில்லை….” என்றார் அவர்.
மீண்டும் மனதில் ஒரு குழப்பம் நிறைய ராஜேஸ்வரியும் சம்மதமாய் தலையாட்டினார்.
உடனே பக்கத்தில் கடைக்குப் போயிருந்த பாஸ்கரை அலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறினார் தனபாக்கியம். அவனும் அவர்களைப் பின்தொடர்வதாய் ஒத்துக் கொண்டான்.
அவர்களின் ரிசார்ட்டுக்கு அருகிலேயே அந்தக் கடை இருந்ததால் அதைத் தாண்டி தான் இருவரும் செல்ல வேண்டும்… குளிருக்கு இதமாய் ஒரு சிகரட்டை எடுத்துப் பத்த வைத்துக் கொண்ட பாஸ்கர், அதை ஊதிக் கொண்டே அவர்களுக்காய் காத்திருந்தான். அது முடியும் தருவாயில் அவர்கள் இருவரும் நடந்து வருவது தெரிய மறைவாய் திரும்பி நின்று கொண்டான்.
வசீகரன் ஒரு கையை பேண்ட் பக்கெட்டில் வைத்து மறு கையால் அலைபேசியை காதுக்குக் கொடுத்து யாரோடோ சிரித்துப் பேசிக் கொண்டே நடக்க ஹாஸினி மார்புக்குக் குறுக்கே கையைக் கொடுத்து இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்தாள்.
சிறிது நேரத்தில் அவளது போலீஸ் மூளைக்கு யாரோ அவர்களை கவனிப்பது போலத் தோன்ற சுற்றியும் பார்வையை ஓட்டினாள். யாரையும் காணாமல் அவள் பாட்டில் நடக்கத் தொடங்க அலைபேசியை அணைத்துவிட்டு வசீகரன் அவளிடம் ஏதோ பேசுவதற்கு வந்தான்.
அவள் அவனை முறைத்துவிட்டு, “இங்கே பாருங்க வசீகரன்…. இனிமேல வீட்ல நடந்த போல ஏதாவது பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன்…. பாத்து நடந்துக்குங்க…” என்று மிரட்டி விட்டு நடக்க அதை பாஸ்கர் பார்த்து விட்டான்.
அமைதியாய் மனதுக்குள் சிரித்துக் கொண்டே வசீகரன் அவளைத் தொடர அவனுக்கும் யாரோ பின் தொடர்வது போலத் தோன்றியது. ஒரு இடத்தில் சாதாரணமாய் நின்று பார்வையை ஓட விட்டவன் சட்டென்று மரத்துக்குப் பின்னால் மறைந்த பாஸ்கரைக் கண்டு விட்டான்.
“பேபி….” அவனது அழைப்பைக் கேட்ட ஹாஸினி முறைக்க, “சா… சாரி…. அந்த மரத்துக்குப் பின்னால மெல்லத் திரும்பிப் பாருங்க…. அந்த பாஸ்கர் நம்மை வேவு பார்க்க வந்திருக்கான்….” என்றான் மெல்லிய குரலில்.
அதைக் கேட்ட ஹாஸினி சாதாரணமாய் பார்ப்பது போல் மெல்லத் திரும்பிப் பார்க்க மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த பாஸ்கரின் கழுத்தில் இருந்த சால்வை காற்றில் ஆடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“வசீகரன்…. அந்த பாஸ்கர் தான் நம்ம பின்னாடி வருவான் போலிருக்கு…. இப்போ என்ன பண்ணுறது…” என்றாள்.
“நாம கை கோர்த்து ஜாலியா பேசிட்டே நடந்தா அவனுக்கு டவுட் வராது…. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க….” என்றவன் அவள் கையைக் கோர்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
அவனது கைகளில் இருந்த கதகதப்பு குளிருக்கு இதமாய் அவள் உடம்பில் பாய அவள் ஒருவித அவஸ்தையை உணர்ந்தாள். அவளது உடல் நரம்புகள் அந்த ஸ்பரிசத்தில் சிலிர்க்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனிடம் கையை உருவ முயன்றாள்.
“என்ன பேபி… இதெல்லாம் நடிப்பு தானே… இதுக்குப் போயி இப்படி கூச்சப் படறீங்க…” என்றவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டே அவளது முழங்கையை தன் முழங்கையுடன் கோர்த்துக் கொண்டு, “அங்கே ஒரு பூங்கா இருக்கு… அங்கே போகலாம்…” என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.
அவள் கூச்சத்தில் நெளிவதைக் கண்டு அவன் மனம் அதை ரசித்துக் கொண்டிருந்தது. பூங்காவில் நுழைந்தவர்கள் மெல்லத் திரும்பிப் பார்க்க பாஸ்கர் ஒரு ஓரத்தில் ஒளிந்து நிற்பது தெரிந்தது.

Advertisement