Advertisement

அதற்குள் சபர்மதி எல்லாருக்கும் காப்பி கொடுக்க குடித்துவிட்டுக் கிளம்பினர். கற்பகம் அவர்களது ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் ஆப்பரேஷன் முடிந்து வருகிறேன்… என்று விட்டார்.
பெண்கள் மூவரும் பின்னில் அமர்ந்து கொள்ள வசீகரனும் நகுலனும் முன்னில் அமர்ந்து கொண்டனர். வழியில் ஹாஸினி ஹாஸ்பிடலில் யாருக்கோ அலைபேசியில் அழைத்து ஏதேதோ விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஹாஸ்பிடலை அடைந்து அட்மிட் என்ட்ரி போட்டுவிட்டு பரிசோதனைகளை முடித்து வந்தனர். எல்லாம் நார்மலாகவே இருந்தது. இரண்டு நாட்கள் கழிந்து ஆப்பரேஷன் வைத்துக் கொள்ளலாம் என டாக்டர் கூறி இருந்தார்.
அடுத்த இரண்டு நாட்களும் வளர்மதிக்கு ஸ்கேனிங், எக்ஸ்ரே, ரத்த அழுத்தம் வேறு சில பரிசோதனைகள் என்று கழிய மூன்றாவது நாள் ஆப்பரேஷனுக்கு அவளை அழைத்து செல்ல வந்தனர்.
பச்சை உடுப்பும் ஆப்பரேஷனுக்காய் தலையில் அடித்திருந்த மொட்டையும் அவளது கோலத்தையே மாற்றி இருக்க காணும்போதே அவர்களுக்கு மனது பதறிப் போனது. அனைவரும் பதட்டத்தோடு இருக்க வளர்மதியை ஆப்பரேஷன் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அறை வாசலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பது உள்ளே ஆப்பரேஷன் நடப்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. சபர்மதி முன்னில் இருந்த கோவிலில் பிரார்த்தித்து வருவதாகக் கூறி சென்று விட்டார்.
நகுலன் அமைதியாய் அமர்ந்து நிமிடங்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான்.
அவன் மனதுக்குள் வளர்மதி முதன் முதலில் காதலை சொல்லி அவன் மறுத்த போது அவள் பேசிய வார்த்தைகளும், இரண்டு வருடத்திற்குப் பிறகு தன் காதலை அவளிடம் சொன்னபோது குங்குமமாய் சிவந்த அவள் முகமும் மாறி மாறி வந்தது.
வசீகரனும் வளர்மதியின் குறும்புத் தனத்தையும் அவன் மீது அவளுக்கு உள்ள அன்பையும் நினைத்துக் கொண்டிருந்தான். அவனது வேதனையான முகம் அவன் வளர்மதியைப் பற்றிய பழைய நினைவுகளில் இருக்கிறான் என்பதைக் கூறியது.
ஹாஸினி அன்னையை அலைபேசியில் அழைத்து விவரம் கூறினாள். அவர் ஆப்பரேஷன் முடிந்ததும் வந்து பார்ப்பதாகக் கூறினார். சற்று நேரம் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவள் வசீகரனின் கலக்கமான முகம் கண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“வசீகரன்…. என்ன இது… இவ்ளோ நேரம் தைரியமா இருந்துட்டு இப்போ இப்படிக் கலங்கிப் போய் உக்கார்ந்திருக்கீங்க… கலங்காம தைரியமா இருங்க….” என்றாள்.
ஆனால் அவனோ அப்படி ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதோ….. அவனோடு பேசிக் கொண்டிருப்பதோ… எதுவுமே நடக்காதது போல அப்படியே அமர்ந்திருந்தான்.
அதைக் கண்டு கடுப்பானவள் அங்கிருந்து எழுந்தாள்.
“ஹூம்… இவன்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் பாரு…. என்னை சொல்லணும்… இவன் குடும்பத்துக்கு நான் இத்தனை ஹெல்ப் பண்ணியும் அந்த நன்றியே இல்லாம இருக்குறதைப் பாரு…. திமிர் பிடிச்சவன்…. என்னமோ இவன் அழகுல மயங்கி நாம பின்னாடி அலையற போல நினைப்பு… திமிரு… ஆம்பளைத் திமிரு… கேட்டா பதில் சொல்லாம உக்கார்ந்திருக்கான்….” அவள் மனதுக்குள் அவனைப் படபடவென வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் மீது உள்ள கடுப்பினால் தான் அவன் கண்டுகொள்ளவில்லை… என்பதை யோசிக்காமல் அவனுக்கு நன்றி இல்லை… என்று மனதுக்குள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள். கோபத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளுக்கு ஒரு காப்பி குடித்தால் தேவலாம் போல இருந்தது.
கண் மூடி அமர்ந்திருந்த நகுலனிடம் சென்றவள், “நகுலன்…. நான் காப்பி குடிக்கப் போறேன்… நீங்களும் வரீங்களா….” என்றாள் வசீகரனை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே.
அவளைத் தனியே அனுப்ப மனமின்றி தானும் வருவதாகக் கூறினான் நகுலன். இருவரும் கேண்டீனுக்கு சென்றதும் வசீகரனின் மனது பொருமியது.
“இங்கே என் தங்கச்சிக்கு முக்கியமான ஆப்பரேஷன் நடந்துட்டு இருக்கு…. இவளுக்கு காப்பி ரொம்ப முக்கியம்…. அதெப்படி மனுஷங்களோட மனுஷியா பழகினா தானே மனுஷத்தன்மை இருக்கும்…. இவ தான் பணமும் அதிகாரமும் கையில் இருக்குன்னு சண்டி ராணியா அலையுறாளே….” அவன் மனதில் அவள் மீதிருந்த கோபம் அதிகமானது.
மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் செய்யும் சிறு உதாசீனமே பல நேரங்களில்  பெரிய கோபத்தை உருவாக்கும்… அதை ஏனோ அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளவில்லை…
அவர்கள் திரும்பி வரவும் சபர்மதியும் வந்தார். ஹாஸினி மட்டுமே காபி குடித்தாள். நகுலன் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டான். அவனது மனநிலை தெரிந்ததால் ஹாஸினியும் நிர்பந்திக்கவில்லை.
மேலும் சிறிது நேரம் கழிய அவர்களுடைய பொறுமையை நான்கு மணி நேரம் சோதித்து விட்டு ஆப்பரேஷன் அறையின் முன்னே ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. அதைக் கண்டதும் அனைவரும் கதவின் அருகே செல்ல கதவைத் திறந்து கொண்டு டாக்டர் வெளியே வந்தார்.
அவரது புன்னகையான முகமே அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க அவர்களுக்கு சாதகமான மாதிரியே அவரும் பேசினார்.
“ஆப்பரேஷன் சக்ஸஸ்…. உங்கள் பிரார்த்தனையை கடவுள் கேட்டுட்டார்….” என்றார்.
“ரொம்ப நன்றி டாக்டர்….” கை கூப்பிய சபர்மதியைக் கண்டு புன்னகைத்தவர்,
“நன்றியை எனக்கு சொல்ல வேண்டாம்… உங்க மருமகளுக்கு சொல்லுங்கம்மா…. ஆப்பரேஷனுக்கு வேண்டிய முக்கியமான மருந்து இங்கே ஸ்டாக் இல்லை…. அதை டெல்லியில் இருந்து விமானம் மூலமா வரவழைச்சு சரியான நேரத்தில் கிடைக்குற மாதிரி செய்திருக்காங்க….”
“அது மட்டும் இல்லாம இந்த மாதிரி ஆப்பரேஷன்ல ரொம்ப பிரபலமான ஒரு டாக்டர் கிட்டே உங்க பொண்ணோட ரிப்போர்ட் எல்லாம் அனுப்பி அவரோட அபிப்ராயத்தையும் கேட்டுட்டு தான் நாங்க ஆப்பரேஷன் செய்யவே   தொடங்கினோம்…. அதுக்கும் இவுங்க தான் ஹெல்ப் பண்ணாங்க….” என்று பாராட்டினார்.
“யாருக்கும் தெரியாமல் இவள் இத்தனை செய்திருக்கிறாளா…..” என அவளை ஆச்சர்யத்துடன் அனைவரும் பார்க்க அவள் சங்கோஜமாய் உணர்ந்தாள்.
“இதில் என்ன இருக்கு டாக்டர்…. எங்க வீட்டுப் பொண்ணுக்கு ஒண்ணுன்னா நாங்க தானே எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணணும்….. இதுல நான் ஒண்ணும் பெருசா பண்ணிடலை…. நல்லபடியா ஆப்பரேஷன் முடிஞ்சதில ரொம்ப சந்தோசம்… ரொம்ப நன்றி டாக்டர்….. நாங்க வளர்மதியைப் பார்க்கலாமா….” என்று அவள் சாதாரணமாய் கேட்டாள்.
“பேஷண்ட் இப்பவும் மயக்கத்துல இருக்காங்க…. வலி தெரியாம இருக்க ஊசி போட்டிருக்கோம்…. இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சு தான் கண் விழிப்பாங்க….. அவுங்களை ICU க்கு மாத்தினதும் நீங்க ஒவ்வொருத்தரா போயி தொந்தரவு செய்யாம பாருங்க….” என்று விட்டு அவர் சென்று விட்டார்.
ஹாஸினியைப் பற்றி சற்று முன் தான் மனதுக்குள் எண்ணியதை நினைத்து வசீகரனுக்கு சற்று வெட்கமாகவே இருந்தது. எல்லாவற்றையும் கச்சிதமாக யோசித்து செய்திருக்கிறாள். அந்த தைரியம் தான் அவளை சாதாரணமாய் இருக்க வைத்திருக்கிறது எனப் புரிந்து கொண்டான்.
ஹாஸினியின் கையைப் பிடித்துக் கொண்ட சபர்மதி, “நீ எங்களை வாழ வைக்க வந்த குலதெய்வம்மா…. பணமும் கொடுத்து, என் மகளுக்காக ஒவ்வொண்ணும் யோசிச்சு செய்திருக்கே…. உன் நல்ல மனசுக்கு நீ நல்லாருப்பே….” என்றார்.
“என்ன அத்தை… இது… உங்க மகள்னு பிரிச்சுப் பேசிட்டு…. அவளை நான் அப்படியெல்லாம் வேறயா நினைக்கலை…. அவ நம்ம வீட்டுப் பொண்ணு…. அவளுக்கு எந்தக் குறையும் இல்லாம நல்லா இருக்கணும்…. எத்தனை பணம் இருந்தாலும் அதனால உபயோகம் இல்லைன்னா அது வெறும் காகிதம் தானே….” என்று ஆத்மார்த்தமாய் சொன்னவளைக் கண்டு வசீகரனே பிரம்மித்துப் போய் விட்டான்.
இவளையா அகம்பாவம் பிடித்தவள்…. என்று நினைத்தேன்… மீண்டும் அவன் மனது கேள்வி கேட்டு அவனைக் கூச வைத்தது.
கணவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு கூச்சமாய் இருக்க மெல்ல அவனை ஏறிட்டவளின் முகம் அவனது பார்வையில் அவளை அறியாமலே சிவந்து போனது.
ஒரு நொடியில் அவள் முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டாலும் வசீகரனின் கண்னுக்கு அந்த முகமாற்றம் சிக்கி விட்டது.
நகுலனும் அவளுக்கு நன்றி சொல்ல வசீகரன் மட்டும் ஒன்றும் பேசவில்லை.
கற்பகத்துக்கும் ராஜேஸ்வரிக்கும் அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறினர். வசீகரன் ஏகாம்பரத்துக்கு அழைத்து கூறினான். வளர்மதியை நினைத்து வருந்திக் கொண்டிருந்த எல்லாவருக்கும் அவளுக்கு குணமான செய்தி  கேட்டதும் நிம்மதியானது. 
நான்கைந்து நாட்கள் கடந்திருக்க வளர்மதியைக் காண ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார் ராஜேஸ்வரி. அவரது டிரைவர் சங்கர் அவருக்குப் பின்னாலேயே ஒரு கேரியரை எடுத்து வந்து டேபிளின் மீது வைத்துவிட்டு வெளியேறினான். ஹாஸ்பிடலில் தங்கி இருந்தவர்களுக்கு மூன்று நேரமும் ஹாஸினியின் வீட்டில் இருந்து தான் உணவு வந்து கொண்டிருந்தது.
ராஜேஸ்வரியைக் கண்டதும் வளர்மதியின் அருகில் அமர்ந்திருந்த கற்பகம் எழுந்து நின்றார். வளர்மதியை நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தனர்.
“வாங்க….” என்றவரை நோக்கிப் புன்னகைத்தவர்,
“உக்காருங்க…. நீங்க எதுக்கு எழுந்து நிக்கறீங்க…. எப்படி இருக்கா உங்க மருமக…. சம்மந்தி எங்கே….” என்று கேள்வியாய் கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“மொதல்ல கொஞ்சம் பேச சிரமமா இருந்துச்சு… அப்புறம் சரியாகிடுச்சு…. இப்பதான் மாத்திரை போட்டு தூங்கிட்டு இருக்கா….. சம்மந்திம்மா வீட்டுக்குக் குளிக்கப் போயிருக்காங்க…. இப்போ வந்திருவாங்க…. உங்க மருமகன் இன்னைக்கு தான் டியூட்டிக்கு ஜாயின் பண்ணனும்னு கிளம்பிப் போனார்….” என்று அவர் கேட்காத விவரங்களையும் கொடுத்தார்.
“ம்ம்ம்…. அப்படியா… கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா முடிஞ்சது…. அன்னைக்கு நான் வந்தப்போ பார்த்ததுக்கு இப்போ வளர்மதி முகத்துல ஒரு தெளிவு இருக்கு…” என்றவர், “உங்க பையன் எங்கே….” என்றார்.
“அவன் காலேஜுக்குப் போயிருக்கான்…. கிளாஸ் முடிஞ்சு தான் இங்கே வருவான்….” என்றவர், “அதோ சம்மந்திம்மாவே வந்துட்டாங்க….” என்றார் அறைக்குள் நுழைந்த சபர்மதியைக் கண்டு.
ராஜேஸ்வரியைக் கண்டதும் சபர்மதியின் முகம் புன்னகையை சூடிக் கொண்டது.
“வாங்க சம்மந்தி….” என்றவர் கையில் இருந்த விபூதியை மகளின் நெற்றியில் வைத்து விட்டு அவர்களுக்கும் நீட்டினார்.
“வர்ற வழியில் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு வந்தேன்…..” என்றார்.
அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட ராஜேஸ்வரி, “ம்ம்… நல்லது சம்மந்தி…. டிபன் கொண்டு வந்தேன்… ஆறுறதுக்குள்ளே சாப்பிட்டுருங்க…..” என்றார்.
“உங்களுக்கு தான் சிரமம்… சம்மந்திம்மா… மூணு நேரமும் வீட்டுல இருந்து சாப்பிட கொடுத்து விடறீங்க…. நாங்க சமைச்சு எடுத்திட்டு வந்திடறோம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க…. நீங்க சாப்பிட்டீங்களா….” என்றார்.
“ம்ம்… சாப்பிட்டேன்… உங்களுக்கு நானா சமைக்கப் போறேன்…. வீட்ல ஆளுங்க இருக்காங்க…. சமைத்து தரப் போறாங்க….. இதுல என்ன சிரமம்…. என் சம்மந்தி வீட்டுக்கு இதை கூட நான் செய்ய மாட்டேனா…. சரி… எப்போ டிஸ்சார்ஜ்னு ஏதாவது டாக்டர் சொன்னாரா….” என்று விசாரித்தார்.
“ம்ம்… இன்னும் ரெண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொல்லிருக்கார் சம்மந்தி… இன்னைக்கு செக் பண்ணிட்டு கன்பர்ம் பண்ணி சொல்லுவாங்க….” என்றார்.
“ம்ம்…. சரிம்மா… உங்ககிட்டே ஒரு விஷயம் பேசணும்…. இப்போ இதைப் பத்தி பேசுறது சரியில்லை… இருந்தாலும் பேசாம இருக்க முடியலை…. என்று தயங்கியபடி நிறுத்தினார்.
“சொல்லுங்க சம்மந்தி… எதுக்கு தயங்கறீங்க…” என்றார் சபர்மதி.
நம்ம பசங்களுக்குக் கல்யாணம் ஆகி விளையாட்டுப் போல பத்து நாளைக்கு மேல ஆயிருச்சு… இவ்ளோ நாளும் மாப்பிள்ளை இங்கேயே இருந்ததால நடக்க வேண்டிய விசேஷத்தைப் பத்தி எதுவும் பேசலை…. இப்போ வளர்மதிக்கும் எல்லாம் சரியாகிருச்சு…. அதனால….. என்று நிறுத்தினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிய சபர்மதி கற்பகத்தின் முகத்தைப் பார்த்தார்.
“நானும் இதைப் பத்தி உங்ககிட்டே பேசணும்னு நினைச்சேன் சம்மந்தி…. அவுங்களுக்குள்ள நடக்க வேண்டிய விசேஷத்தை இன்னும் தள்ளிப் போடறது சரியில்லை…. உங்க மருமக அங்கேயும் பிள்ளை இங்கேயுமா இருக்குறது நல்லாவா இருக்கு…. அதனால வளர்மதி டிஸ்சார்ஜ் ஆனதும் நல்ல நாளா பார்த்து விசேஷத்தை வைக்குறது தானே சரி…..” என்றார்.
“ம்ம்ம்… சரி தான் சம்மந்தி… வளர்மதி டிஸ்சார்ஜ் ஆனதும் உடனே வச்சுடலாம்….” என்றார் சபர்மதி.
மனதில் உள்ள ஒரு குறை நீங்கிய சந்தோஷத்தில் “சரி… சம்மந்திம்மா… இதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னு எனக்கு ஒரு தயக்கமா இருந்துச்சு… நீங்க சரியா புரிஞ்சுகிட்டதில் ரொம்ப சந்தோசம்…. அப்போ நான் அதுக்கான ஏற்பாடெல்லாம் பார்த்துடட்டுமா…” என்றார்.
“சரி… சம்மந்திம்மா… நீங்க ஜோசியரைப் பார்த்து நல்ல நாளா முடிவு பண்ணுங்க…. கல்யாணம் முடிஞ்சும் இப்படி ரெண்டு பேரும் தனித்தனியா இருக்குறது சரியில்லை தான்…..” என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.
“ம்ம்… சரி… நான் கிளம்பறேன்… ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சிட்டு உங்களுக்கு சொல்லறேன்…” என்ற ராஜேஸ்வரி கிளம்பினார்.
அடுத்த நாளே அவரது குடும்ப ஜோசியரை வரவழைத்து நாள் குறித்து விட்டார்.
மேகப் போர்வைக்குள் நாணி
ஒளிந்து கொண்டது
அழகான வெண்ணிலவு…
கதிரவனின் காதல் வீச்சு
விட்டுவிடுமா என்ன….
வானத்தை துளைத்து
வானவில்லை வளைத்து
மின்னல் கொண்டு அம்பெய்து
இடியாய் முழங்கிடும் காதலில்
மழையாய் மாறிப் பெய்துவிடாதா….
முள் கொண்ட போர்வைக்குள்
ஒளிந்திருக்கும் ரோஜாப் பூவே…
பாலைவனமாய் வறண்டு கிடக்கும்
உன் மனதுக்குள் சாரல் மழையாய்
நான் வருவேன்….
முன் அந்திச் சாரலின் இனிமையை
உன் கைகோர்த்து அனுபவிப்பேன்….
உனக்குள் ஒளிந்து கிடக்கும்
அன்பென்னும் ரோஜாப் பூவை…
உனக்கே அறிமுகம் செய்வேன்….
அகம்பாவப் போர்வை நீக்கி
அன்பென்னும் உலகைக் காட்டுவேன்….
உன்னை உனக்கே அறிமுகம் செய்வேன்
பெண்ணே… காத்திரு… எனக்காய்….

Advertisement