Advertisement

அத்தியாயம் – 9
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ….”
மருதமலை சுவாமி சந்நிதானத்தில் கணபதியின் முன்பு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் பொண்ணை அழைத்து வரும்படி கூறியதும் சற்று மறைவாக அமர்ந்திருந்த ஹாஸினியை அழைத்துக் கொண்டு வந்தனர்.
மயிலின் கழுத்தில் உள்ள நிறங்கள் எல்லாம் கலந்தது போல ஒரு நீலமும் பச்சையும் கலந்த அழகான பட்டுப் புடவையில் எளிமையான அலங்காரத்தில் இருந்தவள் மணமேடை நோக்கி நடந்தாள்.
மணப்பெண்ணுக்கான அலங்காரம் எதுவும் இல்லாவிட்டாலும் அதுவே அவளைப் பேரழகியாய்க் காட்டியது. ராஜேஸ்வரி நிறைய நகைகளை அணிந்து கொள்ளுமாறு கூறியும் அவள் கேட்கவில்லை….
அவளுக்கு பொதுவே அதிக நகைகள் அணிவது பிடிக்காது என்பதாலும் மாப்பிள்ளையின் சகோதரிக்கு ஆப்பரேஷனை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் காட்டுவது தவறு என்று தோன்றியதாலும் ராஜேஸ்வரியும் அதிகம் நிர்பந்திக்காமல் விட்டு விட்டார். கல்யாணத்திற்கும் அதிகம் யாரையும் அழைக்கவில்லை… கல்யாணம் முடிந்து ஒரு பெரிய ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சந்தனக் கலர் சில்க் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து கழுத்தில் ஒரு சால்வையுடன் அழகாய் அமர்ந்திருந்த வசீகரனின் மீது ஒரு ஆவலோடு பதிந்தது ஹாஸினியின் கண்கள்.
“வசீகரன்…. ம்ம்ம்… வசீகரிக்கிறான் தான்…. அதுக்காக அவன் அழகில் நான் மயங்கிடுவேனா….” என்று அவளது ஒரு மனது அவளைச் சாடியதில் கண்ணை மாற்றிக் கொண்டவளின் இன்னொரு மனதோ,
“அவனை ரசித்தால் என்ன தவறு…. அவனைத் தான் நான் விலை கொடுத்து வாங்கிவிட்டேனே….  இவன் என்னுடைய உடமை தானே…” என்று வாதாடியது.
அந்த எண்ணம் வந்ததும் ஹாஸினியின் நடையில் ஒரு நிமிர்வு வந்தது. உதடுகள் ஒரு அலட்சியப் புன்னகையை உதிர்க்க வண்ண மயிலாய் நடந்து வந்தவளைப் பார்த்து பெருமூச்சு விட்ட பாஸ்கர், அன்னையின் காதில் புலம்பினான்.
“அம்மா…. இவ்வளவு எளிமையா புறப்பட்டும்கூட தேவதை போல இருக்கா பாரும்மா….” என்று அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனை மெல்ல விலாவில் குத்திய தனபாக்கியம்,
“டேய்…. போதும் பார்த்தது…. அவதான் உனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சே… எதுக்கும் ஒரு குடுப்பினை வேணும்…. சாதாரண கான்ஸ்டபிள்…. குடும்பமோ தரித்திரம் பிடிச்ச குடும்பம்…. அவனுக்கு இத்தனை சொத்தோட அழகா ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு….. நமக்கு யோகம் இல்லை….” என்று அவரும் வசீகரனைப் பொறாமையுடன் நோக்கிக் கொண்டே அவன் காதுக்குள் புலம்பினார்.
“டேய்… பாஸ்கரு…. இவுங்க என்னமோ காதலிச்சு கல்யாணம் பண்ணுறதா சொன்னாங்க…. அந்தப் போலீஸ்காரன் மூஞ்சி என்னமோ கடுகடுன்னு வச்சிருக்கான்….. நம்ம ஹாஸினியை ஏறெடுத்துக் கூடப் பார்க்கலை…. எனக்கு என்னமோ ஏதோ சரியில்லாத போல இருக்கே….” என்றவர் வசீகரனையே கவனித்துக் கொண்டிருந்தார்.
“ம்ம்ம்… போம்மா… இனி எதுவா இருந்தா நமக்கென்ன… கல்யாணம் முடிஞ்சு சாப்பிட்டு கிளம்பற வழியப் பாப்போம்…” என்றான் ஏமாற்றத்துடன் பாஸ்கர்.
ஆனாலும் தனபாக்கியத்தின் மனது தெளியவில்லை.
“என்னவோ இருக்கும் போலிருக்கே…. ஏதோ சரியில்லையே…. ம்ம்ம்… விசாரிச்சு கண்டு பிடிப்போம்….” என யோசித்துக் கொண்டிருந்தவர்,
மற்றவர்கள் தூவிய அட்சதை தன் மேலே விழுவதில் சுதாரித்து ஹாஸினியின் கழுத்தில் வசீகரன் தாலி கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் மீது அட்சதையை தூவினார்.
முகத்தை கடுப்போடு வைத்திருந்த வசீகரனின் காதில், “கண்ணா… முகத்தை ஏன் இப்படி உர்ருன்னு வச்சிருக்கே…. எல்லாரும் கவனிக்குறாங்க பாரு…. கொஞ்சம் சிரிச்ச போல இரு….” என்றார் சபர்மதி.
ரெடிமேடாக ஒரு புன்னகையை உதட்டுக்குக் கொடுத்தவன் ஹாஸினியை ஏறிட அவள் அவனை நோக்கி யாருக்கும் தெரியாமல் புருவத்தைத் தூக்கி, “எப்படி…” என்பது போல் திமிராய் ஒரு சிரிப்பைக் கொடுத்தாள்.  அவனுக்கு ஏனோ அவளை ஓங்கி அறைய வேண்டும் போல ஆத்திரம் வந்தது. அழகான நாகம் படமெடுத்து நிற்பது போல் அவளைத் தோன்றியது.
“என்னை விலைக்கு வாங்கிட்டோம்னு திமிர்ல சிரிக்குறியா…. உன் திமிரை நான் அடக்குவேண்டி….” மனது அவளுடன் யுத்தம் செய்யத் தயாரானது.
புகைப்படத்துக்காகவும் சுற்றி இருந்தவர்களுக்காகவும் அவன் உதட்டில் சிரிப்பை மறையாமல் பார்த்துக் கொண்டான். தெய்வ சாட்சியாய் தாலி கட்டி மாலை மாற்றி அவளை மனைவியாய் ஏற்றுக் கொண்டாலும் அவன் மனதும் முகமும் ஏதோ ஒருவித கலக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு அனிச்சையாக கல்யாண சடங்குகளை செய்து முடித்து ராஜேஸ்வரியின் காலில் இருவரும் விழுந்து வணங்கினர்.
“நல்ல தீர்க்காயுசோட எப்பவும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்….” என கண் கலங்கியவர் மகளை அணைத்து முத்தமிட்டார்.
வசீகரனின் கரத்தை அன்போடு பற்றிக் கொண்டவர்,
“மாப்பிள்ளை…. நீங்க தான் இனி என் மகளுக்கு எல்லாமா இருந்து அவளைப் பார்த்துக்கணும்….” என்றவரின் உண்மையான அன்பில் சற்று நெகிழ்ந்தவன், “நான் பார்த்துக்கறேன்மா….” என்றான்.
அத்தை என்று கூறாமல் மருமகன் அம்மா என்று அழைத்ததுமே அவர் குளிர்ந்து போனார் ராஜேஸ்வரி. அடுத்து சபர்மதியிடமும் ஆசி வாங்கிக் கொண்டனர். அவன் பார்த்துக் கொள்கிறேன்… என்று சொன்னதைக் கேட்டு ஹாஸினி ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்க்க அவனது டென்ஷன் தாறுமாறாகக் கூடியது.
ஏகாம்பரமும் ஜானகியும் மட்டுமே கல்யாணத்துக்கு வந்திருந்தனர். சுபாஷிணியை அழைத்து வரவில்லை. அவர்களும் மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினர்.
வசீகரனின் அருகில் வந்து கை குலுக்கி வாழ்த்திய நகுலன் ஒரு வெல்வெட் பெட்டியைத் திறந்து அதில் இருந்த மணமக்களின் பெயர் பதித்திருந்த மோதிரத்தை வெளியே எடுத்தான். மணமக்களின் கையில் கொடுத்து மற்றவருக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டான்.
வசீகரன் சாதாரணமாய் ஹாஸினியின் கையை எடுத்து அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தாலும் அவள் ஏனோ அவனது முதல் தொடலின் புதிய அனுபவத்தில் சற்று தவித்துப் போனாள்.
ஒருவித புதிய அவஸ்தை அவள் உடலெங்கும் பாய அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தவள் அவனது கரத்தைப் பிடிக்காமலே அவன் நீட்டிய விரலில் மோதிரத்தை அணிவித்தாள். அது அவனது கடுப்பை மேலும் அதிகமாக்கியது.
“என் கையைப் பிடிச்சு மோதிரத்தைப் போட கூட முடியாதோ… என்னைத் தொடக்கூட தகுதி இல்லாதவனாகிப் போய் விட்டேனோ… திமிர் பிடித்தவள்…. பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அகம்பாவம்…. உன் அகம்பாவத்தை நான் அடக்கறேன்டி….” என்று மனதுக்குள் சூளுரைத்தது.
அவளது காதலை வேண்டி ஒரு கடைக்கண் பார்வைக்காய் காத்து நின்ற மனது இப்போது அவள் மீதிருந்த வெறுப்பில் அவளை எதிரியாய் பாவித்து சபதம் போடச் செய்தது.
ஒரு ஓரத்தில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கல்யாணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வளர்மதி. அவளை மணமக்களிடம் அழைத்து வந்தார் கற்பகம்.
மருந்தின் காரணமாய் சோர்ந்திருந்த தங்கையின் நிலையில் ஒரு நிமிடம் மனம் வருந்திய வசீகரன், நீ உக்காரும்மா…. எதுக்கு எழுந்து வந்தே…..” என்றான்.
“இல்ல அண்ணா… இத்தன நேரமும் உக்கார்ந்து தானே இருந்தேன்….” என்றவள்,
“அண்ணி…. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பொருத்தமா அழகா இருக்கீங்க…. எப்பவும் இணைபிரியாம சந்தோஷமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்…..” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்ட ஹாஸினி,
“நீ நல்லபடியா நாளைக்கு ஆப்பரேஷன் முடிஞ்சு வந்தா தான் எங்களுக்கு உண்மையான சந்தோசம்… நீ போயி ரெஸ்ட் எடும்மா….” என்றாள்.
அவள் அக்கறையோடு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த வசீகரன் ஹாஸினியை நோக்க அவளது முகத்தில் உள்ள உணர்ச்சியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு உறவினர்கள் ஒவ்வொருத்தராய் வந்து வாழ்த்திக் கொண்டிருந்ததில் அவர்கள் பிஸியாகி விட்டனர்.
ராஜேஸ்வரியின் அருகில் வந்த தனபாக்கியம், “ஏன்… ராஜேஸ்வரி…. எங்க உன் வீட்டுக்காரர் ஊருல இருந்து சொந்தக்காரங்க யாரையும் காணோம்… யாரையும் கூப்பிடலையா….” என்றார்.
“கூப்பிட்டேன் அண்ணி…. அவுங்க சின்னம்மா பாட்டி நேத்து பாத்ரூமுல வழுக்கி விழுந்து கால் எலும்பு உடஞ்சிருச்சாம்… அவுங்க தான் வரேன்னு சொல்லிட்டு இருந்தாங்க… அவுங்க இப்போ ஆஸ்பத்திரியில இருக்காங்கன்னு அவுங்க பேரனையும் சம்சாரத்தையும் அனுப்பி வச்சிருக்காங்க….”
“அதோ அங்கே நிக்கறாங்க பாருங்க…. நீங்க பார்க்கலையா….” என்றவர்,
“என் வீட்டுக்காரரோட அத்தையும் சின்னம்மா பாட்டிக்கு சுகமாகி இங்கே வரும்போது வீட்டுக்கு வந்து பாக்கறேன்னு சொல்லிடுச்சு…. வயசானவங்க இல்லியா….  கல்யாணத்தை  கோவில்ல அவசரமா வச்சுகிட்டதால அவுங்களுக்கு இங்கே வர்ரதுக்கு ஏற்பாடு ஒண்ணும் பண்ண முடியாம போயிருச்சு….” என்று வருந்தினார்.
“ம்ம்… எப்படியோ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு…. எங்களுக்கு தான் உன் மகளை மருமகளாக்கிக்க கொடுப்பனை இல்லாம போயிருச்சு…. ம்ம்… அவுங்களாவது சந்தோஷமா இருந்தா சரி….” என்றார்.
“ம்ம்… எல்லாம் கடவுள் எழுதி வைச்ச போல தானே நடக்கும் அண்ணி….” என்றவர் வேறு யாரோ அவரிடம் பேச வரவே அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டுப் போர்வையை விலக்கிக் கொண்டு பொன் மஞ்சள் நிறத்தில் கிழக்கில் பிரகாசமாய் முளைக்கத் தொடங்கி இருந்தான் கதிரவன். அதிகாலைக்கே உரிய குளிரும் பனியும் குளிராய் நாசியைத் தடவ வெளியில் கேட்ட பறவைகளின் கூக்குரலும் விடியல் வந்து விட்டதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன.
பால்காரரும் பேப்பர் போடும் நபரும் அந்நேரத்திலேயே தங்கள் கடமையைத் தொடங்கியிருக்க நடைபயிற்சி செல்பவர்கள் நடக்கத் தொடங்கியிருந்தனர்.
வசீகரனின் வீட்டில் ஹாஸ்பிடல் செல்ல அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். ஹாஸினியும் ராஜேஸ்வரி சொன்னதற்காக வசீகரனின் வீட்டில் அன்று தங்கி இருந்தாள்.
வளர்மதிக்குத் தேவையான பொருட்களை மீண்டும் ஒரு முறை பரிசோதித்து, ஹாஸ்பிடல் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை ஹாலில் கொண்டு போய் வைத்தார் சபர்மதி.
வளர்மதி வரவும் சாமிக்கு விளக்கு வைத்தவர் அவளைப் பிரார்த்திக்குமாறு கூறினார். கடவுளின் முன்பு என்ன கேட்பதென்று தெரியாமல் அமைதியாய் நின்றிருந்தாள் அவள்.
“எனக்கு என்ன வேண்டுமென்று உனக்குத் தெரியும் கடவுளே… இதற்கு மேல் நான் உன்னிடம் என்ன கேட்டு விடப் போகிறேன்…. இனி எல்லாம் உன் கையில்….” என நினைத்துக் கொண்டவள் மனதில் குடும்பத்தினரின் முகம் நினைவில் வர அவளது கண்கள் கலங்கியது.
அவள் அருகில் வந்து நின்ற ஹாஸினி, “வளர்…. எல்லாம் நல்லபடியா நடக்கும்…. தைரியமா இரு…. நம்பிக்கை தான் பாதி பிரச்சனைக்கு தீர்வு….” என்றாள்.
அதற்குள் வாசலில் கார் வந்து நிற்க வசீகரனும் நகுலனும் உள்ளே நுழைந்தனர்.
கலக்கத்தோடு தன் மீது படிந்த வளர்மதியின் விழிகளைக் கண்டு வருந்திய நகுலன் அவனது வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவள் அருகில் வந்தான்.
“என்ன வளர் இது…. இப்படி கலக்கமா இருக்கே…. மனதைரியம் தான் பெரிய மருந்து…. கடவுள் நம்ம கூட இருக்கார்… பார்த்துப்பார்….” என்ற நகுலன் அங்கிருந்த விபூதியை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டான்.
கண்ணில் வழிகின்ற நீருடன் அதைக் கண்மூடி வாங்கிக் கொண்டவள் அவன் மார்பில் சாய்ந்து கதறத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவளது தலையில் ஆதரவாய்த் தடவி விட்டான் நகுலன்.
“வளர்….” என்ற வசீகரனின் குரலைக் கேட்டதும்,
“அண்ணா…….” என்று விம்மியவள் கண்ணீருடன் வசீகரனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ஹாஸினி. ஆனால் அவள் பக்கம் திரும்பவே இல்லை வசீகரன்.

Advertisement