Advertisement

“ஹாஸினி வீட்லயே வசீகரன் தங்கை ஆப்பரேஷனுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிடறேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு…. சீக்கிரமே கல்யாணம்….. அது முடிஞ்சதும் ஆப்பரேஷன்னு முடிவு பண்ணி இருக்காங்க….” என்றவர் சாப்பிடத் தொடங்கினார்.
“என்னங்க சொல்லறீங்க…. அந்தப் பொண்ணா… அது சரியான திமிர் புடிச்ச பொண்ணாச்சே…. ஆம்பளைங்களை மதிக்கக் கூடத் தெரியாத அந்தப் பொண்ணையா அந்தத் தம்பிக்கு முடிவு பண்ணி இருக்காங்க….”
“அதும் அதுக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் புடிக்காதுன்னு சொல்லுவீங்க… இப்போ எப்படிங்க….” என்றார் அதிர்ச்சியுடன் ஜானகி.
“ம்ம்… எல்லாம் விதி…. வசீகரன் தலையில அந்தப் பொண்ணு பேரு தான் எழுதி இருக்கும் போலிருக்கு…. கல்யாணமே வேண்டாம்னு சொன்ன பொண்ணு இப்போ வசீகரனைக் கல்யாணம் பண்ண ஒத்துகிச்சு…. எப்படியோ நல்லா இருந்தா சரி……” என்று நிறுத்தியவர்,
“நாளைக்கு நம்ம ஜோசியரைப் போயி பார்த்திட்டு, தரகர் கிட்டே நம்ம சுபா ஜாதகத்தைக் கொடுத்துடலாம்…. இனித் தள்ளிப் போட வேண்டாம்….” என்றுவிட்டு அமைதியாய் சாப்பிடத் தொடங்கினார்.
மகள் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருப்பது புரிந்ததால் ஜானகியும் வேறு எதையும் பேசவில்லை…. அவரது மனது நல்ல ஒரு மாப்பிள்ளையை இழந்ததில் சற்று வருந்திக் கொண்டிருந்தது.
உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுபாஷிணியின் நிலையோ மிகவும் பரிதாபமாய் இருந்தது. 
அவள் மனதுக்குள் வசீகரன் மீது விருப்பம் இருந்தாலும் பெரிதாய் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளவில்லை…. இருந்தாலும் வசீகரனைப் போல நல்ல சுபாவமும் அழகும் உள்ள ஒரு ஆண் கணவனாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவள் மனதிலும் இருந்தது.
ஹாஸினியை மணக்க வசீகரன் சம்மதித்து கல்யாணம் வரை பேசியதில் இருந்தே அவனுக்கு இவள் மீது விருப்பம் இல்லை என்பது புரிய ஒரு வித ஏமாற்றம் புகையென மனதெங்கும் பரவியது.
கலங்கத் தொடங்கிய கண்களை அழுந்த மூடி அழுகையை உள்ளுக்குள்ளே ஒதுக்கியவள், தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள். மனதை வெளியே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் நிக்காமல் ஓடிக் கொண்டிருக்க அதற்குப் பிறகு வந்த நாட்களில் மளமளவென்று காரியங்கள் நடந்தேறின.
வளர்மதிக்கு கோவை மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர்கள் வசீகரன் தங்கியிருந்த வீட்டுக்கே வந்துவிட்டனர். வசீகரனுடன் தங்கியிருந்த ஸ்டீபன் அவனது நண்பனின் மேன்ஷனில் சில மாதம் தங்கிக் கொள்வதாகக் கூறி அங்கிருந்து மாறி இருந்தான்.
அடுத்த ஆறாவது நாளே நல்ல முகூர்த்தம் இருந்ததால் வசீகரன் ஹாஸினி இருவருக்கும் மருதமலையில் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. கல்யாணத்துக்கு மிகவும் முக்கியமானவர்களை மட்டும் அழைத்தால் போதும் என்று ஹாஸினி அடம் பிடித்ததால் ராஜேஸ்வரியும் சம்மதித்து விட்டார்.
ஹாஸினி கல்யாணத்துக்கு சம்மதித்ததே பெரிய விஷயமாகத் தோன்ற அவள் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளும்படி கூறி விட்டார் ராஜேஸ்வரி. அதில் ஆப்பரேஷனுக்கு பணம் கொடுப்பதும் ஒன்று.
கல்யாணத்திற்கு அடுத்த நாளே வளர்மதிக்கு ஆப்பரேஷனுக்கு நாள் குறிக்கப்பட்டது. ராஜேஸ்வரியே கல்யாண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். பத்திரிகை அடிக்காமல் முக்கியமானவர்களுக்கு அலைபேசியிலேயே அழைத்து விட்டனர்.
ராஜேஸ்வரி வசீகரனின் வீட்டுக்கு நேரில் வந்து வளர்மதியைப் பார்த்துவிட்டு சபர்மதியிடம் கல்யாண விவரங்களையும் பேசிவிட்டு சென்றார்.
கல்யாணத்துக்கு உடுக்க வேண்டிய ஆடைகள் எல்லாவற்றையும் ராஜேஸ்வரி அவர்களின் துணிக்கடையில் இருந்தே வசீகரன் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
வசீகரன் அன்று போனில் அழைத்துப் பேசிய பிறகு ஹாஸினியிடம் நேரில் பேசவே இல்லை…. அவளும் இரண்டு நாளாய் ஸ்டேஷனுக்கு வரவில்லை…. ஏதோ கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தாள். பிறகு கல்யாணத்துக்கு விடுமுறை எழுதிக் கொடுத்து சென்று விட்டாள்.
விடிந்தால் கல்யாணம்….
சபர்மதி அவர்கள் கொண்டு போக வேண்டிய எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் மனது ஏனோ குழப்பமாகவே இருந்தது. மாப்பிள்ளை வீட்டு சார்பாக தாலியும் இரண்டு பட்டுப் புடவையும் மட்டும் வாங்கியிருந்தார் சபர்மதி. யோசனையுடன் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவர் வாசலில் இருந்து கேட்ட “சம்மந்தி….” என்ற குரலைக் கேட்டதும் வாசலுக்கு விரைந்தார்.
நகுலனும் அவன் அன்னையும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க சம்மந்தி…. வாங்க மாப்பிள்ளை…..” இருவரையும் வரவேற்றார் சபர்மதி.
“ம்ம்… கலயாணத்துக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சா…. இன்னைக்கு வளரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனீங்களா….” விசாரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தார் கற்பகம். அவர்களுக்கு பதிலைக் கூறிக் கொண்டே தண்ணீரை எடுத்துக் கொடுத்தார் சபர்மதி. அவர்களின் குரலைக் கேட்டு வளர்மதி சோர்வுடன் வெளியே வந்தாள்.
இப்போது அடிக்கடி தலைவலி வரத் தொடங்கி இருந்ததால் சோர்ந்து போயிருந்தாள். டாக்டரின் மருந்தும் மாத்திரையுமே அவளது வலியை சற்றுக் குறைக்க உதவியது. நகுலனின் பார்வை வேதனையுடன் அவள் மீது படிய மெல்ல சிரித்தாள்.
அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கற்பகம், “வளர்…. இப்போ எப்படி இருக்கும்மா… தலை வலிக்குதா…. நீ எதுக்கு எழுந்து வந்தே…. போயி படுத்துக்கோ…. நகுலா…. வளரை உள்ளே கூட்டிட்டுப் போப்பா…. கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க….” என்றார்.
“மாப்பிள்ளை….. நீங்க தான் அவளுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லணும்…. எப்பவும் எதையோ யோசிச்சுகிட்டே இருக்கா…. ஒண்ணுமே பேச மாட்டேங்குறா….” என்றார் சபர்மதி.
“ம்ம்… நான் பேசிக்குறேன் அத்தை…. வசீகரன் எங்கே….” என்றான் நகுலன்.
“அவன் ஒரு வேலையா வெளியே போயிருக்கான்….. இப்போ வந்திருவான்…. நீங்க போயி பேசிட்டு இருங்க….” என்றார்.
“ம்ம்….” என்றவன், “வா… வளர்….” என்று அவளது கை பிடித்து எழுப்பி அவள் படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.
“என்ன சம்மந்தி… யாரையுமே காணோம்… கல்யாணத்துக்கு யாருக்கும் சொல்லலையா….” என்றார் கற்பகம்.
“ம்ம்ம்…. எங்களுக்குன்னு யாரு இருக்கா…. வளர்மதியோட நிலைமை இப்படி இருக்கும் போது என் மகனுக்கு கல்யாணம்னு சந்தோஷமா கொண்டாட முடியலை…. உங்களை மட்டும் தான் அழைச்சிருக்கோம்…..” என்றார் சபர்மதி.
“ம்ம்ம்…. அதும் சரிதான்….. எல்லாம் நல்லபடியா முடியட்டும்….. அப்புறம் நம்ம வளர்மதி, நகுலன் கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டு சிறப்பா பண்ணிடலாம்…” என்றார்.
அவர் கூறிய வார்த்தைகளில் தெரிந்த நம்பிக்கை சபர்மதியின் மனதை நெகிழ்த்த, கற்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டார்.
“உங்களோட மனசு யாருக்குமே வராதும்மா….. உடம்புக்கு முடியாத ஒரு பொண்ணுன்னு தெரிஞ்சும் ஆப்பரேஷனுக்குப் பிறகு உங்க பையனுக்கு தைரியமா கட்டி வைக்கணும்னு நினைக்கறீங்களே….” என்றவரின் கண்கள் கலங்கியிருக்க, அவரை அதட்டினார் கற்பகம்.
“என்ன சம்மந்தி இது… சின்னப் புள்ளையாட்டம்….. இதையே கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சுப் பாருங்க….. உங்க மகளா இருக்குறதால தான் இது உங்களுக்கு பெருசா தோணியிருக்கு…. அதுவே என் மருமகளா வந்த பிறகு இப்படி ஒரு நிலைமைன்னா நாங்க விட்டுட்டு போயிடுவோமா என்ன….”
“மனுஷங்களுக்கு எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்…. ஆனா எப்பவும் மனசாட்சிப் படிதான் நாம நடக்கணும்…. அதை தான் நான் என் மகனுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கேன்….”
“உங்க நல்ல மனசுக்கும் என் மருமகளோட தங்கமான குணத்துக்கும் எல்லாம் நல்லதே நடக்கும்…. அந்த நம்பிக்கைல தான் நான் இப்படிப் பேசறேன்….” என்றார் அவர்.
அவரது நிதர்சன வார்த்தைகள் ஒவ்வொன்றும் குழப்பத்தில் இருந்த சபர்மதியின் மனதை தெளிவாக்கியது. அவர்களுக்கு காப்பி எடுக்க அடுக்களைக்கு செல்ல அவருடன் கற்பகமும் சேர்ந்து கொண்டார். கட்டிலில் தலையணையை சாய்வாய் வைத்து வளர்மதியை அமர வைத்தான் நகுலன்.
“வளர்…. என்னம்மா இது… இந்த சில நாளிலே இப்படி இளைச்சுப் போயிட்டியே…. ஒழுங்கா சாப்பிடறதில்லையா….” என்றவனின் அன்பான குரலில் நெகிழ்ந்து போனாள் வளர்மதி.
அமைதியாய் அவள் அமர்ந்திருக்க அவள் கட்டிலில் அவள் அருகில் அமர்ந்தான் நகுலன். அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும்மா… தைரியம் தான் முக்கியம்… நீ இப்படி எதுவும் பேசாம கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே…. பாரு…. அத்தையும் வேதனைப் படறாங்க….”
“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டியோட ரொம்ப வருஷம் நல்லாருப்போம்…. அதுனால தான் கடவுள் இப்படி ஒரு விபத்து மூலமா உனக்கு இருக்குற பிரச்சனையை நமக்கு தெரியப்படுத்தி இருக்கார்…. இல்லேன்னா இது தெரியாமலே போயிருக்கலாம்ல….”
“நாம நம்பிக்கையோட இருக்கணும்…. அதான் முக்கியம்…. எல்லாம் சரியாகும்…. உன் அண்ணி உனக்கு ஆபரேஷனுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிட்டேன்னு சொன்னாங்க…. நாளை மறுநாள் விடியற்காலைல அட்மிட் ஆகுறோம்…. காலைல ஆப்பரேஷன்னு சொன்னாங்க….”
“ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ வளர்…. நான் உணர்வோட நடமாடிட்டு இருக்குற வரைக்கும் என் உயிருக்கு ஒண்ணும் ஆகாதும்மா…. ஏன்னா… என் உயிர் உனக்குள் தான் துடிச்சுகிட்டு இருக்கு…. இந்த ரெண்டு வருஷத்துல உன்னையே நினைச்சு நினைச்சு எனக்குள் நீ உணர்வாய் கலந்து போயிட்டே….”
“நீ என் உணர்வுடா…. என் உயிர் நீ… என் எல்லாமும் நீதான்…. நீயில்லாத இந்த உலகத்தை என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியலை….. என்னோட இதயம் உன்னை நினைச்சு தான் துடிச்சிட்டிருக்கு… .என்னோட ஒவ்வொரு செல்லிலும் உன் நினைவுகள் தான் கலந்திருக்கு…..” என்று அவன் கமறிய தொண்டையை சரி செய்ய நிறுத்தவும் கண்ணீருடன் அவன் வார்த்தைகளைக் கேட்டிருந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளது தோளை தன் கையால் சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் நகுலன். அவளது நெற்றியில் மென்மையாய் அவன் முத்தமிட கண்ணை மூடி அந்த நிமிடத்தை மனதுக்குள் சேகரித்துக் கொண்டாள் வளர்மதி.
அவளது கண்கள் கரகரவென கண்ணீரைப் பொழிய அவளது விழிகளில் மெல்ல முத்தமிட்டான் அவளது மனம் நிறைந்தவன்.
அவனது மார்பில் சாய்ந்து கொண்டவளை மென்மையாய் அணைத்து தலையில் தடவிக் கொண்டிருந்தான் நகுலன். அந்த அன்பான அணைப்பும் நான் இருக்கிறேன்…. என்று உணர்த்தும் மென்மையான முத்தமும் அவளுக்குள் வாழ வேண்டும் என்ற ஆசையையும் நம்பிக்கையும் ஆழமாய் விதைத்தது.
சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள், வெறுமனே சாத்தியிருந்த கதவிற்குப் பின்னால் இருந்து கேட்ட பெரியவர்களின் குரலில் விலகி அமர்ந்தனர். நகுலன் வெளியே செல்ல அவனுக்கு காப்பியைக் கொடுத்தார் சபர்மதி.
அழகாய் அந்த நாள் முடிய அடுத்த நாள் விடியலில் உதித்தெழுந்தான் கதிரவன். 
என் நினைவில் நிறைந்தவனே…
உனது விழிகளைத் தழுவும் 
ஒவ்வொரு முறையும் புதிதாய்
உயிர்த்தெழுகிறேன் நான்….
எனக்குள் நிறைந்திருப்பது 
வெறும் மரண பயம் அல்ல….
உனைப் பிரிய நேருமோ  
என்ற மரண வலி தான்…. 
மனதை உன்னிடம் கொடுத்துவிட்டு
மரணத்தை தழுவிடுமோ  என்னுடல்….
மதம் பிடித்த யானைபோல்
தறிகெட்டுப் பாய்கிறது எண்ணங்கள்….
மரத்தின் சுமை  எல்லாம்
நிமிடத்தில் சுகமாகி விடும்….. 
புது மொட்டுக்கள் 
இதழ் விரிந்துவிட்டால்….
என் மனதின் சுமை எல்லாம் 
ஒரு கணத்தில் அகன்றுவிடும் ….
எனைக் கண்டதும் சிரித்திடும்
உன் இதழ் மலர்ந்து விட்டால்….. 
ஏகாந்த வானில் 
ஏமாற்றங்களை சுமந்து கொண்டு 
சிறகடிக்கும் எண்ணங்களுக்கு 
சொந்தக்காரி நான்….
என்னைக் கைபிடித்து 
கரை சேர்க்குமோ 
உன்னுள் உறைந்து கிடக்கும் 
உண்மையான நேசம்….

Advertisement