Advertisement

அத்தியாயம் – 8
காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்…..” என்ற குழப்பத்துடனே அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான்.
“அம்மா…. சொல்லுங்கம்மா…. என்ன இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க….” அவனது குரலில் சிறு பதட்டம் இருந்தது.
“வசீ…. இங்கே நீ தங்கியிருக்குற வீட்டுக்கு முன்னாடி தான் நான் இருக்கேன்…. நீ கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போ….” என்றார்.
“என்னம்மா….. தங்கச்சியை அங்கே தனியா விட்டுட்டு இங்கே எதுக்கு வந்தீங்க…. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் நம்ம வீட்டுக்கே வந்திருப்பேனே….” என்றான் ஆதங்கத்துடன்.
“ம்ம்… வளர் கூட சம்மந்திம்மா இருக்காங்க…. உன்னைத் தேடி இங்கே வரணும்னு விதி இருந்தா வந்து தானே ஆகணும்…. நீ சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா….” என்றவரது குரலில் இருந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“இதோ பத்து நிமிஷத்தில் வந்திடறேன்மா….” என்ற வசீகரன்,
ஏகாம்பரத்திடம் விஷயத்தைக் கூறிவிட்டு ஸ்டேஷனில் இருந்த ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். அவரும் ஒன்றும் புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.
“வசீகரன் அம்மா எதுக்கு இங்கே வரணும்…. ஒரு வேளை ஜானு நமக்கு தெரியாம ஏதாவது சொல்லி இருப்பாளோ….” என்று நினைத்தவர், “ம்ம்… வசீகரன் வந்ததும் கேட்டுக்கலாம்….” என நினைத்து வேலையைத் தொடர்ந்தார்.
வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே சென்றான் வசீகரன். முன்னில் சிட் அவுட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் சபர்மதி. அவரது கலங்கிய விழிகளும் கோபமான முகமும் விஷயம் ஏதோ விபரீதம் என்பதை உணர்த்த தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் வசீகரன்.
“அம்மா…..” காக்கி உடையில் நுழைந்தவனைக் கண்டதும் எழுந்தவர் எதுவும் பேசவில்லை.
சாவியை எடுத்து கதவைத் திறந்தவன், “உள்ள வாங்கம்மா…..” என்றான்.
உள்ளே நுழைந்தார் சபர்மதி.
அங்கே மேசையின் மீது இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றியவன், “தண்ணி குடிங்கம்மா….” என்று நீட்டினான்.
கோபமாய் அவனை ஏறிட்டாலும் அந்தத் தண்ணீரை வாங்கிக் குடிக்க மறுக்கவில்லை… கடகடவென்று குடித்து முடித்தவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“அம்மா…. எதுக்கு கோபமா இருக்கீங்க…. ஏன் நீங்களே இங்கே கிளம்பி வந்திருக்கீங்க….” என்றான் வசீகரன்.
அவனை தீர்க்கமாய் உறுத்துப் பார்த்தவர்,
“உனக்குத் தெரியாதா…. சொல்லு…. உனக்குத் தெரியாதா…. அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை…. இந்தக் கல்யாணத்தால உன் தங்கை ஆப்பரேஷன் நல்லபடியா நடக்கும்னு இருக்கும் போது உனக்கு உன் வறட்டுப் பிடிவாதம் தான் முக்கியமா….” என்று படபடவென்று பொரிந்தார்.
“அம்மா…. அது வந்து….” என்று பேசத் தொடங்கியவனை, “நீ எதுவும் பேசாதே….. நான் சொல்ல வேண்டியதை முதலில் சொல்லி முடிச்சுடறேன்…..” என்று அவர் கூறவே அவரிடம் ஹாஸினி பேசி இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
“வரதட்சணை வாங்கி கல்யாணம் பண்ண மாட்டேன்னு நீ நினைக்குறது நல்ல விஷயம் தான்… நான் இல்லேன்னு சொல்லலை….”
“ஆனா இப்போ உன் தங்கச்சி வாழ்வா…. சாவான்னு இருக்குற நிலைமைல அதை எல்லாம் பார்த்திட்டு இருக்கலாமா…. நம்ம வளரை பிடிச்சிருக்குங்கிற ஒரே காரணத்துக்காக அந்த நகுலன் தம்பி அவுங்க குடியிருக்குற சொந்த வீட்டையே வித்து ஆப்பரேஷனுக்குப் பணத்தைத் தரேன்னு சொல்லுச்சு….”
“ஆனா வீட்டை வாங்க தான் சரியான ஆளு அமையலை…. எல்லாரும் நல்ல விலை உள்ள வீட்டை குறைச்சு கேக்குறாங்க…. சரி இப்போதைக்கு வீட்டு பேர்ல லோன் ஆவது போட்டு முடிஞ்ச வரைக்கும் பணம் வாங்கித் தரேன்னு அந்தத் தம்பியோட அம்மாவும் சொல்லுறாங்க….” என்று நிறுத்திவிட்டு மகனது முகத்தைப் பார்த்தார்.
அவனது முகம் இயலாமையில் சிவந்திருக்க குற்றவுணர்ச்சியில் தலை நிலம் நோக்கிக் குனிந்திருந்தது.
“அந்த நகுலனும், கற்பகம் அம்மாவும் யாரு…. இன்னும் சொந்தம்னு கூட ஆகலை…. நம்ம வீட்டுப் பொண்ணுக்காக இவ்ளோ யோசிக்குறாங்க…. அப்படி இருக்கும் போது கூடப் பிறந்த நீ என்ன பண்ணனும்…. அவ உயிரைக் காப்பாத்த எது செய்யவும் தயாரா இருக்க வேண்டாமா…. அந்த ஹாஸினி பொண்ணுக்கு என்ன…. வேற எங்கும் மாப்பிள்ளை கிடைக்காமலா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுறா….” என்று அவர் நிறுத்தவும்,
“அதில்லைம்மா…. அது வந்து…..” என்று மீண்டும் ஏதோ சொல்ல வந்தவனை கை காட்டி நிறுத்தியவர்,
“இரு… நான் பேசிடறேன்….”
“நல்லா அழகா இருக்கா… படிச்சிருக்கா… உன்னை விட நல்ல பதவியில் இருக்கா… பணக்காரியா இருக்குறது அவளோட குத்தம் இல்லையே…. கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா ஆப்பரேஷன் செலவு முழுசும் அவுங்க ஏத்துக்கறேன்னு சொல்லும் போது வளர்மதியைப் பத்தி யோசிக்காம நீ உன் இலட்சியம், குறிக்கோள்னு பேசிட்டு இருந்தியாமே…. அந்தப் பொண்ணுகிட்டே….”
“உன் தங்கச்சி உயிரை விடப் பெருசாப்பா… உனக்கு இதெல்லாம்….” என்றவரது விழிகள் கண்ணீரைப் பொழிய அவனது மனது கலங்கியது.
“அம்மா…. அப்படில்லாம் இல்லைம்மா…. நான் ஏன் அவங்ககிட்டே முடியாதுன்னு சொன்னேன்னா…..” என்று மீண்டும் தொடங்கியவனை,
“வேண்டாம்பா…. நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்…. இப்போ உன் தங்கை உசிரு தான் நமக்கு முக்கியம்…. அப்படியொண்ணும் அந்தப் பொண்ணு தப்பானவளா தெரியலை…. உன் தங்கச்சிக்காக நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு தான் ஆகணும்… ப்ளீஸ் பா…. எங்களுக்காக ஒத்துக்கோ…..” என்றவர் கண்ணீருடன் கையெடுத்து கும்பிட அதைக் கண்டு பதறிப் போனான் வசீகரன்.
“ஹையோ…. அம்மா…. என்ன இது…. எங்கிட்ட போயி….” என்று அவரது கையைப் பிடித்துத் தாழ்த்தியவன்,
“நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்மா…. உங்களுக்காக…. நம்ம வளர்மதிக்காக… நான் இதைக் கண்டிப்பா செய்யறேன்…..” என்றவனது விழிகள் ஒரு தீர்மானத்தைக் காட்ட முகம் இறுகிப் போயிருந்தது. அவன் சம்மதித்ததும், அவனது கையைப் பிடித்துக் கொண்டு கதறிய சபர்மதி,
“கண்ணா…. இந்த அம்மாவை மன்னிச்சிடுடா…. நம்மைப் போல இல்லாதப் பட்டவங்களுக்கு இலட்சியம், குறிக்கோள்னு பேசிட்டு இருந்தா எதுவுமே நடக்காது…… வளர் ஆப்பரேஷனுக்கு கடவுள் காட்டின ஒரு வழியையும் நீ மறுத்திட்டியேங்குற ஆதங்கத்துல உன்னை என்னெல்லாமோ சொல்லிட்டேன்…. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிடுப்பா….” என்றார்.
“ம்ம்ம்… சரிம்மா…. இப்போதே சொல்லிடறேன்….” என்றவன், உடனே ஹாஸினியின் அலைபேசிக்கு அழைத்தான். ஒரே ரிங்கில் அவள் அலைபேசியை எடுத்தாள்.
“என்ன வசீகரன்….. கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லக் கூப்பிட்டீங்களா….” என்றவளது குரலில் ஒரு திமிர் இருந்தது. சுர்ரென்று தலைக்கு ஏறிய கோபத்தை கண்ணை மூடித் திறந்து கட்டுப்படுத்தினான் வசீகரன்.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன், “ம்ம்ம்….. இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்….. மேற்கொண்டு என்ன செய்யணுமோ பண்ணுங்க…..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான். அவனது குரலில் இருந்த கடினத் தன்மை கண்டு சபர்மதிக்கு சற்று அச்சமாக இருந்தது.
“ஒரு வேளை… இவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லையோ…. இல்லையே… அன்று ஹாஸ்பிடலில் கண்டபோது அவனது பார்வையில் அவள் மீது ஒரு ஆர்வம் இருந்ததே… ம்ம்… கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகி விடும்…. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்… இப்போது ஆப்பரேஷன் தான் முக்கியம்…” என்று நினைத்துக் கொண்டவர் அமைதியானார்.
வீட்டுக்கு சென்ற வசீகரன் மதிய உணவு வரை ஸ்டேஷனுக்கு திரும்பி வராததால் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த ஏகாம்பரம் வசீகரனைத் தேடி அவனது வீட்டுக்கே வந்து விட்டார்.
“வசீகரன்…..” வாசலில் கேட்ட அவரது குரலைக் கேட்டதும் வெளியே வந்தார் சபர்மதி.
“வாங்க அண்ணா…. வசீகரன் கடைக்குப் போயிருக்கான்….. உள்ளே வாங்க….” என்றார்.
“பரவாயில்லைம்மா…. என்ன திடீர்னு நீங்க இங்க கிளம்பி வந்திருக்கீங்க…. பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு…. பரவாயில்லையா…. நானே உங்களைப் பார்த்து பேசணும்னு இருந்தேன்…. நீங்களே வந்திருக்கீங்க….” என்றவர் முன்னில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“ம்ம்… உங்களை மாதிரி நல்லவங்க எல்லாம் எங்க கூட இருக்கும் போது… என்ன கவலை…. வசீகரனுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு…. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம்… வளர்மதிக்கு பொண்ணு வீட்டுலயே ஆப்பரேஷன்க்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க…. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே ஆப்பரேஷன் பண்ணுற போல இருக்கும்…. பொண்ணு யாரு தெரியுமா… உங்க எஸ் ஐ அம்மா தான்….” என்று நிம்மதியாய் புன்னகைத்தார்.
மகளது ஆப்பரேஷன் இனி நல்லபடியாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கை அவர் முகத்தில் சிரிப்பை வரவைத்திருந்தது. ஆனால் அவர் சொன்னதைக் கேட்டதும் ஏகாம்பரத்தின் முகம் அதிர்ச்சியைப் பூசிக் கொண்டது.
“என்னது…. ஹாஸினி மேடம்க்கு வசீகரனை சம்மந்தம் பேசிட்டீங்களா….. எப்படி… அந்தப் பொண்ணு கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்துச்சே…. இப்போ எப்படி…” என்று அவர் அதிர்ச்சியாய் கேட்டார்.
“ம்ம்… இன்னாருக்கு இன்னாருன்னு தெய்வம் ஒரு முடிச்சு போட்டு வச்சிருக்கும் இல்லையா…. அதான்…. இந்த சம்மந்தம் நடக்கணும்னு இருக்கும் போலிருக்கு…..” என்றவர் அவர் ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,
“அண்ணா…. அந்தப் பொண்ணுக்கு வசீகரனைப் பிடிச்சிருக்கும் போலிருக்கு…. கல்யாணத்துக்கு சம்மதம்னா வளர்மதி ஆப்பரேஷன் உட்பட அவுங்களே எல்லா விஷயத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க…. அந்தப் பொண்ணை வேண்டாம்னு குறை சொல்லுற போல ஒண்ணும் தோணலை…. அதான்…. சம்மதிச்சுட்டோம்….” என்று விளக்கினார் சபர்மதி.
“ஓ…..” என்றவரது மனதில் சிறு ஏமாற்றம் தோன்றினாலும், வளர்மதியின் ஆப்பரேஷன் இனி எந்தத் தடங்கலும் இல்லாமல் நடக்கும்…. என்பதில் நிம்மதி தோன்றியது.
“சரி… நீங்க என்னமோ என்கிட்டே பேசணும்னு இருந்தேன்னு சொன்னீங்க….. என்ன விஷயம்…. சொல்லுங்கண்ணா…..” என்றார் சபர்மதி.
“அதொண்ணும் இல்லைம்மா…. நம்ம வளரோட ஆப்பரேஷன் பத்தி தான் பேச நினைச்சேன்…. அதான்… இப்போ சரியாகிடுச்சே…. சரி… நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க… சாப்பிடலாம்….” என்று அழைத்தார்.
“இல்லைண்ணா… இங்கே வந்தது வந்தாச்சுன்னு நானே சமைச்சுட்டேன்…. வசீ அப்பளமும் தயிரும் வாங்க போயிருக்கான்…. நீங்களும் இன்னைக்கு இங்கே சாப்பிடுங்களேன்…” என்றார் சபர்மதி.
“அச்சோ…. வேண்டாம்மா… அப்புறம் என் வீட்டம்மா சாப்பாடு பாக்கி ஆயிருச்சுன்னு சாமி ஆடிடுவா…. நைட்டுக்கும் அதையே குடுத்து சாப்பிட சொல்லிருவா…. நான் வீட்டுலயே சாப்பிட்டுக்கறேன்…. சரி நான் வரேன்…. வசீகரன் கிட்டே சொல்லிடும்மா….” என்றவர் அவரது வீட்டுக்கு கிளம்பினார்.
வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தவரைக் கண்ட ஜானகி, “என்னங்க…. நீங்க மட்டும் வந்திருக்கீங்க…. வசீகரன் எங்கே….” என்று விசாரித்தார்.
மேசையின் மீது சாப்பிட எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுபாஷினியின் பார்வையும் வசீகரன் வருகிறானா என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது.
மகளின் மனதில் ஆசையை வளர விடக் கூடாது என்று எண்ணிய ஏகாம்பரம் வசீகரனின் கல்யாண விஷயத்தை சொல்லிவிட முடிவு செய்தார்.
“ஜானு…. வசீகரன் அம்மா இங்கே வந்திருக்காங்க….. வசீகரனுக்கு கல்யாணம் பேசிட்டாங்க போலிருக்கு…. நம்ம எஸ்ஐ ஹாஸினி தான் பொண்ணு…..” என்று அவர் கூறியதும் சட்டென்று அவரைத் திரும்பிப் பார்த்த சுபாஷிணியின் அதிர்ந்த முகம் அவரை வருத்தினாலும் அவர் தொடர்ந்தார்.
சுபாஷிணி அடுக்களைக்கு எதையோ எடுக்க செல்வது போல சென்று அங்கிருந்து கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் இருந்ததால் ஒன்றும் பேசாமல் இருந்தார் ஜானகி.

Advertisement