Advertisement

“அம்மா…. நான் வேலையே செய்யறதில்லைன்னு புலம்புவீங்க… இப்போ செய்யலாம்னு வந்தா கிண்டலடிக்குறீங்களா….” என்று அன்னையை முறைத்தாள் வளர்மதி.
“ம்ம்… நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சொல்லுறது உண்மைதான் போலிருக்கு…. உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன் பாருங்க…. என்னைச் சொல்லணும்….” என்று அவளும் சலித்துக் கொண்டாள்.
அதைக் கண்டு சிரித்த சபர்மதி, “ம்ம்… சரி… நீ பாத்திரம் தேய்ச்சிடு… நான் காப்பி போட்டுட்டு இட்லி ஊத்திடறேன்….” என்று அவர் நகர்ந்தார்.
“அம்மா… நான் காலையில் டிபன் முடிச்சிட்டு லைப்ரரிக்கு போகணும்…. கொஞ்சம் வேலையிருக்கு….” என்றாள் அன்னையின் அனுமதி வேண்டி.
“நேத்து தானே பரீட்சை முடிஞ்சுது…. இன்னைக்கு என்ன லைப்ரரி….”
“நான் கொஞ்சம் புக்ஸ் எல்லாம் பரீட்சைக்கு ரெபர் பண்ணக் கொண்டு வந்திருந்தேன்…. அதை எல்லாம் கொண்டு போயி திரும்பக் கொடுக்கணும்…. போனதும் சீக்கிரமே திரும்பி வந்துடறேன் மா…. ப்ளீஸ்… போயிட்டு வரேன்…. என் பிரெண்ட்சும் வருவாங்க…” என்று கெஞ்சினாள்.
“ம்ம்… சரி போயிட்டு சீக்கிரம் வந்திடணும்…” என்றவர் நுரை ததும்பும் காபியை அவள் கையில் கொடுத்தார்.
“ம்ம்… ஓகே ம்மா…” என்றவள் காப்பியை வாங்கி குடித்துவிட்டு உற்சாகத்துடன் வேலையைத் தொடர்ந்தாள். மகளது முகத்தில் வழிந்த சந்தோஷத்தைக் கண்டு பரீட்சை முடிந்த குஷி போலிருக்கிறது…. பாவம்… கொஞ்ச நாள் ஜாலியாக இருக்கட்டும்… என்று நினைத்துக் கொண்டார் சபர்மதி. வேலையை முடித்து குளித்து ஆலிவ் கிரீன் சுரிதாரில் அழகாய் வந்து நின்ற மகளைக் கண்டு அவர் கண்கள் நிறைந்தது.
“இந்த சுரிதார் நீ எப்போ போட்டாலும் உன் அழகு கூடுதலா தோணுதும்மா…. சரி…. வெளியே கிளம்பினது தான் கிளம்பினே…. பக்கத்துல விநாயகர் கோவில்ல கும்பாபிஷேகம்னு சொன்னாங்க…. சாமி கும்பிட்டுட்டு போயிடு…” என்றார்.
“ம்ம்… சரிம்மா… நானும் கோவிலுக்குப் போகணும்னு நினைச்சேன்… சரி…. எனக்கு சாப்பிட வைங்க…” என்றவள் உணவு மேசையில் அமர்ந்தாள்.
அவளது தட்டில் இட்லியை வைத்து தக்காளிச் சட்னியை ஊற்றினார் சபர்மதி. இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவள், “ஆஹா…. அம்மா… உங்க சட்னி மட்டும் இவ்ளோ ருசியா இருக்கே… இதிலே என்னம்மா எக்ஸ்ட்ராவா போடறீங்க….” என்றாள்.
அதைக் கேட்டு சிரித்தவர், “வளர்… எப்பவும் தக்காளிச் சட்னி வைக்குற போல செய்து கொஞ்சம் பொட்டுகடலை கூட லேசா சோம்பு சேர்த்து பொடிச்சு சட்னியில் தூவி விட்டேன்… அதான் இந்த மணமும்… ருசியும்…” என்றார்.
“ம்ம்… ரொம்ப நல்லாருக்கும்மா…. எல்லாம் ஒரு ஜெனரல் நாலட்ஜுக்கு வேண்டி தான் கேட்டுகிட்டேன்… சரி, போதும்மா…” என்று எழுந்து கொள்ளப் போனவளைத் தடுத்தவர்,
“ம்ம்… இந்தா… இன்னொரு இட்லி சாப்பிடு… காலேஜ் இருக்கும் போது தான் சாப்பிட நேரமில்லாம ஓடுவே… இப்பவும் அப்படியா… சாப்பிடும்மா…” என்றார்.
அன்னையின் வாக்கைத் தட்ட முடியாமல் மேலும் இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு எழுந்தவள் கையைக் கழுகி விட்டு வீட்டிலிருந்து இறங்கினாள்.
அவளது மனம் நகுலனைக் காணப் போகும் நொடியை ஆவலோடு எதிர்பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தது.
பூங்காவின் மரத்தடி நிழலில் இருந்த கல்பெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தான் நகுலன். அவனது விழிகள் நொடிக்கொரு தடவை வாசலையே நோக்கிக் கொண்டிருந்தது. காலை நேரமாதலால் பூங்கா வெறிச்சோடிக் கிடந்தது. அங்கும் இங்குமாய் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.
அவன் மனது வளர்மதியின் தரிசனதுக்காய் காத்திருந்தது.
அவளை முதன் முதலில் தன்னிடம் காதலை சொன்னதை யோசித்துப் பார்த்தான்.
வளர்மதி கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டு நடைபெற்ற கலை நிகழ்சிகள் மிக்கவாரும் நகுலன் தான் வடிவமைத்திருந்தான். பாட்டு, டான்ஸ், நாடகம் என்று எல்லா நிகழ்சிகளும் அவனது வழிகாட்டலிலேயே நடந்தது. அவனது திறமைகளைக் கூடவே இருந்து கவனித்து வந்தாள் வளர்மதி.
நகுலனை ஒரு ஹீரோ போல அந்தக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடினாலும் அவன் அமைதியாய் சிரித்துக் கொண்டு போய் விடுவான். குருவாக மாறி நின்று உபதேசிக்காமல் தங்களுடன் சேர்ந்து நண்பனைப் போல் வழிநடத்தும் அவனை மாணவர்களுக்கும் பிடித்திருந்தது.
கலை நிகழ்ச்சிகளில் சேர்ந்திருந்த வளர்மதி பயிற்சி செய்வதற்காய் அவளது தோழியருடன் கலையரங்கத்துக்கு வருவாள். அங்கு நகுலனை கவனிக்கத் தொடங்கியவள் அவனது தோழமையான அன்பில் மெல்ல மெல்ல மனதைத் தொலைத்து விட்டாள்.
வெகு நாட்களாய் அவனை மனதில் கொண்டு நடந்தவள் தோழியரின் வற்புறுத்தலில் ஒரு நாள் அவனிடமே தன் காதலை சொல்லிவிட்டாள்.
அன்று அவர்கள் கல்லூரி ஆண்டு விழா. ஒவ்வொரு கலை நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்க வளர்மதி அழகாக நடனமாடி அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து இறங்கினாள்.
நிகழ்சிகள் முடிந்து அவளுக்கு முதல் பரிசு என்று அறிவிப்பு வந்ததும் மேடைக்கு அழைத்தனர். மேடையேறியவள் நகுலனின் கையால் அந்தப் பரிசைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே அவனை அழைத்து கொடுக்குமாறு கூறினர்.
அவனது கையால் பரிசை வாங்கியவள் சந்தோஷத்துடன் இறங்கி வந்தாள்.
நிகழ்சிகள் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நகுலனிடம் வந்தாள் வளர்மதி.
“சா… சார்… உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்….” தயக்கத்துடன் வந்தது வார்த்தைகள்.
“என்னம்மா…. சொல்லு…” என்றான் நகுலன் புரியாமல்.
“இ… இதுல எழுதி இருக்கேன்…. ப்ளீஸ்…. முழுசா படிச்சிட்டு சொல்லுங்க…” என்றவள் ஒரு கவரை அவன் கையில் திணித்துவிட்டு சட்டென்று வெளியேறி விட்டாள். ஒன்றும் புரியாமல் அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கியவன் மனதுள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
அவளது அன்பை…. அவன் மீதான அவளது காதலை….. அத்தனை உருக்கமாய் எழுதியிருந்தாள் வளர்மதி. அவன் மீதிருந்த மரியாதையே பிறகு காதலாய் மாறிப் போனதோ எனத் தோன்றியது அவனுக்கு.
ஒரு சின்னப் பெண்ணாய் அவன் நினைத்திருந்த பெண்ணின் மனதுக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது… என்று அவன் தவித்துப் போனான்.
அவனைக் காணும் போதெல்லாம் அவளது கண்களில் ஒரு அலைப்புறுதல் தோன்றியதன் காரணம் இதுதானோ…. இந்த வயதில் காதல் என்றெல்லாம் சொல்லுவது புரிந்து தான் சொல்கிறாளா…. நாளை இதைப் பற்றி அவளிடம் பேச வேண்டும்… என எண்ணிக் கொண்டான். அவளைப் பற்றி யோசித்துப் பார்த்தான்.
அழகான… அமைதியான… அடக்கமான பெண்… நன்றாகப் படிப்பவள்… எந்தக் குற்றமும் சொல்ல முடியாது… இருந்தாலும் படிக்கும் வயதில் காதல் என்பதை அவனால் ஏனோ ஒத்துக் கொள்ள முடியவில்லை.
படிக்கும் வயசில் என்ன காதல்… அவளுக்கு என் மீது ஒரு மரியாதை இருக்கலாம்… அதனால் அன்பும் இருக்கலாம்…. அதைதான் காதல் என்று எண்ணி விட்டாளோ… அவளுக்கு இதைப் பற்றி சொல்லிப் புரிய வைக்க வேண்டும்… என நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் வகுப்பு முடிந்து ஓய்வாக இருந்தவன் அவளைத் தன்னைக் காண ஓய்வு அறைக்கு வருமாறு அழைத்தான். தோழிகளிடம் சொல்லிக் கொண்டு படபடப்புடன் அவனைக் காணச் சென்றாள் வளர்மதி.
அவன் என்ன சொல்லப் போகிறானோ எனத் தவிப்புடன் அறைக்குள் நுழைந்தவளை நிதானமாய் நோக்கியவன் அவளை ஏறிட்டான்.
“வளர்மதி… சுத்தி வளைச்சுப் பேசி உன் நேரத்தை நான் வீணடிக்க விரும்பலை…. ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை நிதானமா யோசிச்சுப் பாரு… நீ செய்தது சரியா… தப்பா… அதெல்லாம் யோசிக்க வேண்டாம்….”
“படிக்குற வயசில் உனக்கு இப்படி ஒரு எண்ணம் வரலாமா… உன்னை நம்பிக்கையோட படிக்க அனுப்பிச்சிருக்காங்களே உன் வீட்டுல… அவுங்களுக்கு நீ இப்படி பண்ணினது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க….” என்றான்.
“அ… அது வந்து… என்று அவள் தயங்க…” அவன் தொடர்ந்தான்.
“நான் ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்லை…. இந்த வயசில் உனக்கு தோணினது காதலே கிடையாது… ஒரு இனக்கவர்ச்சி… உனக்கு பிடிச்ச விஷயங்கள்… பிடித்த மாதிரி நான் இருக்குறது இதெல்லாம் உனக்கு என் மேல ஒரு ஈர்ப்பைக் கொடுத்திருக்கலாம்… அதை நீ காதல்னு தப்பா நினைச்சுக்காதே…..” என்றவனை ஏறிட்டவளது விழிகள் ஒரு தீவிரத்தைக் காட்டின.
“சார்… உங்களுக்கு என்னைப் பிடிக்கறதும் பிடிக்காததும் ரெண்டாவது விஷயம்… ஆனால் என் மனசில் தோணினது காதல் தான்…. உங்களைப் பார்த்ததும் எனக்குள் காதல் வரலை….”
“உங்களோட குணம்…. நீங்க நடந்துக்குறது…. இது மட்டும் இல்ல… ஒவ்வொரு பொண்ணுக்கும் மனசுக்குள்ளே வரப் போகுற கணவன் இப்படி இருக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கும்… என் எண்ணத்தோட வடிவமா நான் உங்களைப் பார்க்கறேன்….”
“என்னடா… இப்படி ஓபனா பேசுறாளேன்னு நினைக்காதீங்க… என் மனசுக்குள்ளே இருக்குறதை… என் காதலை… என் அன்பை… என்னை விட அதிகமா வேற யாராலும் வெளிப் படுத்த முடியாது… அதனால்தான் இப்படி பேசறேன்…”
“என் காதல் உண்மையானது… வெறும் இனக் கவர்ச்சியால வந்தது இல்லை…. இதை நீங்க நம்பனும்னா நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க…..” என்றாள் நிமிர்வுடன்.
அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதில் ஆணித்தரமாய் பதிந்தது. அதுவரை அவளை ஒரு சாதாரண மாணவியாய் கண்டிருந்தவன் மனதில் அவள் மீது ஒரு மரியாதை தோன்றியது. அவள் காதலின் மீது ஒரு மதிப்பு தோன்றியது.
அவளை ஆழ்ந்து ஒரு நிமிடம் நோக்கியவனின் பார்வையைத் தாங்க முடியாமல் அவள் குனிந்து கொண்டாள்.
அவளது கண்களில் வழிந்த காதல் பொய்யென்று அவனுக்குத் தோன்றவில்லை….. ஆனாலும் இந்த வயதில் வரும் காதல் எத்தனை நிலையானதாய் இருக்குமோ…. எனத் தோன்றியது.
ஒரு நிமிடம் யோசித்தவன் தொடர்ந்தான்.
“வளர்… உன் காதல் மீது உனக்கு அத்தனை நம்பிக்கை இருந்தால் நீ இந்தக் கல்லூரிப் படிப்பு முடிந்து போகும் வரை என்னோடு இதைப் பற்றிப் பேசக் கூடாது…. இன்னும் இரண்டு வருடங்கள்…”
“நீ இதில் உறுதியாக இருந்தால் உன் காதலை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த விரோதமும் இல்லை…. என்னை நேசிக்கும் ஒருத்தியை ஏற்றுக் கொண்டால் என் வாழ்க்கையும் சிறப்பாய் இருக்கும்…. உன்னால் முடியுமா…” என்றான்.
அவனது வார்த்தைகள் அவள் மனதில் பூஞ்சாரலாய் வீச சந்தோஷத்துடன் நிமிர்ந்தாள்.
“என் காதலில் நான் ஜெயிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது…. உங்களுக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறேன்….” என்றவள்,
“நான் போகட்டுமா…” என்றாள்.
அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது நம்பிக்கையைக் காட்ட அவன் பிரமித்து நின்றான்.  
அவள் சென்றதும் அந்தக் கடிதத்தை எடுத்தவன் மீண்டும் வாசிக்கத் தொடங்கினான். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் அவன் மனதை நெகிழ வைத்தன.
அவளுக்குக் காதலை நிருபிக்க அவகாசம் கொடுத்தவன் அவனை அறியாமலே அந்த கடிதத்தில் படபடத்த காதல் வார்த்தைகளில் சுகமாய் மூழ்கத் தொடங்கினான்.
காதல் சுகமானது….. காதல் சுவையானது…. சுகமாய் அதன் சுவையை ரசிக்கத் தொடங்கினான் நகுலன்.
கற்றுக் கொடுக்க வந்தவனே
கள்ளனாய் மாறிப் போனாயோ…
களவாடியது பொருள் என்றால்
கலங்காமல் இருந்திருப்பேன்…
என் இதயத்தையல்லவா…
களவாடிச் சென்றாய்….
இதயமில்லா நான்… 
எப்படி உயிர் வாழ்வேன்…
பண்டமாற்று முறையில்  
உன் இதயத்தைத் தந்து விடு…. 
தந்தி அடிக்கும் என் துடிப்பு 
சுகமான ராகமாய் மாறட்டும்….
தருவாயோ… தாராயோ….
தந்தால் மகிழ்வேன் நான்..
தராது போனாலும்
மரியேன் நான்…..
உனைப் பிரிந்தால் நான் 
மணத்தை தொலைத்திட்ட மலரே….
உயிரால் மரியாமல் 
உணர்வுகளால் மரித்திருப்பேன்….
மரிக்காத உன் நினைவுகளுடன்
நித்தமும் வாழ்ந்திருப்பேன் ….
மாறாத என் காதலுடன்
இதயம் தான் துடித்திருப்பேன்…

Advertisement