Advertisement

அத்தியாயம் – 5
கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வசீகரன். அவனுடன் வேலை செய்யும் சக காவலர் சேகரின் திருமணம் இன்று. காலையில் நேரமே கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் முன்தினம் மாலையே தங்கை வளர்மதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு கோவை வந்திருந்தான் வசீகரன். அழகாய் இளம் நீல நிற முழுக்கை சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். அடர்ந்த மீசையை சீப்பால் சீவியவன் திருப்தியாய் புன்னகைத்தான்.
“உண்மைலேயே நம்ம அப்பா, அம்மா நமக்கு பொருத்தமான பேரா தான் வச்சிருக்காங்க… வசீகரிக்குற அழகு தான் எனக்கு….” என கர்வத்துடன் நினைத்துக் கொண்டவன் இதழ்களில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
“ம்ம்….. அழகா இருந்து என்ன… தலை எழுத்து சரியில்லையே…”. என நினைத்துக் கொண்டவன் கண்ணாடியின் முன் அப்படியும் இப்படியும் நின்று உடையை சரி செய்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான். அவனுடன் தங்கி இருக்கும் ஸ்டீபன் அப்போது தான் காலை ஓட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்தான். முன்னில் நிற்கும் வசீகரனைக் கண்டு வியப்புடன் நோக்கியவன், அவன் அருகில் வந்தான்.
“சார்…. இந்த டிரெஸ்ல மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க…. கல்யாணத்துக்கு கிளம்பிட்டீங்களா…. பார்த்துக்கோங்க சார்… உங்களை மாப்பிள்ளைன்னு நினைச்சு உங்க கையில் தாலியைக் கொடுத்து பொண்ணு கழுத்துல கட்டச் சொல்லப் போறாங்க…. பாவம்….. அந்த மாப்பிள்ளைப் பையன்… ஆண் பாவம் பொல்லாதது… சொல்லிட்டேன்…” என்று கிண்டல் அடித்தான்.
அதைக் கேட்டு வசீகரனுக்கும் சிரிப்பு வர, “அப்படில்லாம் நடக்காது ஸ்டீபன்… சரி நான் கிளம்பறேன்… உன் பைக் சாவி குடு….” என்று கை நீட்டினான். முன்தினமே அவனது பைக் வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தான்.
“ம்ம்… நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா… உங்களை அப்படியே….” என்று ஒரு பெருமூச்சோடு நிறுத்தியவன் சாவியை அவன் கையில் கொடுத்தான்.
அதைக் கேட்டு சிரித்த வசீகரன் சாவியை விரலில் மாட்டி சுழற்றிக் கொண்டே வாசலுக்கு நடந்தான். பைக்கை எடுத்துக் கொண்டு ஏகாம்பரத்தின் வீட்டு வாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தினான்.
வாசலில் நின்ற பைக் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த சுபாஷிணி திகைத்துப் போனாள். அழகனாய் கம்பீரத்துடன் பைக்கில் அமர்ந்திருந்த வசீகரனின் தோற்றம் அவள் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. சிறு புன்னகையுடன் அவனையே தன்னை மறந்து நோக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தவளை அவனது குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
“சுபா…. அப்பா ரெடி ஆகிட்டாரா…..”
அவனது குரல் இனிய பாடலாய் அவளது காதில் ஒலித்தது.
“வா… வாங்க… அப்பா ரெடி ஆகிட்டார்…. இப்போ வந்திடுவார்… உள்ளே வந்து உக்காருங்க….” என்றாள் படபடப்புடன்.
அவன் வண்டியை லாக் செய்து ஸ்டைலாய் இறங்கி நடந்து வரவும் அவன் அழகில் அவள் மயங்கித்தான் போனாள்.
அதற்குள் வாசலுக்கு வந்த ஏகாம்பரம், “வாப்பா…. வசீ….. இந்த டிரெஸ்ல உன்னைப் பார்க்க ரொம்ப அழகா இருக்கு…” என்று மகளின் மனதில் உள்ளதையே வார்த்தையாக சொன்னார்.
ஜானகியும் அவனைக் கண்டு மெச்சுதலாய் புன்னகைத்தார்.
அவர்களிடம் புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டு இருவரும் பைக்கில் கிளம்பினர். மகளின் முகத்தில் தெரிந்த பாவ மாற்றங்கள் ஜானகியின் மனதுக்குள் ஏதேதோ கணக்குகளைப் போடச் செய்தது.
அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் உறவினர்களால் நிறைந்திருக்க அங்கங்கே காவல்துறையை சேர்ந்தவர்களும் காணப்பட்டனர். வசீகரனுக்கு பரிச்சயம் இல்லாதவர்களை ஏகாம்பரம் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார்.
மேடைக்கு பக்கத்தில் நின்று கொண்டு கல்யாணத்தைக் காண்பதற்காய் காத்திருந்தனர் வசீகரனும் ஏகாம்பரமும். அர்ச்சகர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க சேகர் அதை திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். மண்டபத்திற்குள் வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
அப்போது நீல வண்ணப் பட்டுப் புடவையில் கையில் பரிசுப் பொருளுடன் தேவதையாய் உள்ளே நுழைந்தாள் ஹாஸினி. அவளை முதன் முதலில் புடவையில் கண்ட வசீகரன் அசந்து போனான். அவளது நிறத்திற்குப் பொருத்தமாய் பாந்தமாய் உடலைத் தழுவி இருந்தது அந்தப் பட்டு சேலை….
“அந்தப் பட்டுப் பூச்சிகள்
செய்திட்ட புண்ணியம்….
அவள் உடலில் சேலையாய்
தழுவ முடிந்ததோ…..”
அவன் மனதில் சட்டென்று கவிதை வரிகள் ஓடியது.
ஒற்றையில் முந்தானையை விரித்து விட்டு அலைபாயும் கூந்தலை ஸ்டைலாய் ஒரு கையில் ஒதுக்கி விட்டுக் கொண்டு அழகு மயிலாய் நடந்து வந்தாள்.
பரிச்சயம் உள்ளவர்களிடம் சிரித்து தலையசைத்துக் கொண்டே வந்தவள் அவர்களைக் கண்டதும் அருகில் வந்தாள். அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த வசீகரனைக் கண்டதும் அவள் முகத்தில் மெல்ல ஒரு நாணம் எட்டிப் பார்த்தது.
அதை மறைத்துவிட்டு அலட்சியமாய் நிமிர்ந்தவள், “நீங்க வந்து நேரமாச்சா….” என்றாள் ஏகாம்பரத்திடம். அவர் அருகில் அழகாய் கம்பீரமாய் நின்றிருந்த வசீகரன் அவள் கண்ணை நிறைத்தாலும் அதைக் கண்டு கொள்ளாதவள் போல் அவனிடம் ஓடிய தன் விழிகளைக் கட்டிப் போட்டு பார்வையை கட்டுக்குள் வைத்திருந்தாள்.
பொண்ணை அழைத்துக் கொண்டு வந்து மனையில் அமர்த்தவும் அர்ச்சகர் மாங்கல்ய தாரணம் செய்வதற்கான மந்திரத்தைக் கூறி சேகரின் கையில் தாலியை எடுத்துக் கொடுத்தார்.
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்று ஒலித்த குரலைத் தொடர்ந்து மேளச் சத்தம் முழங்க மணப்பெண்ணின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான் சேகர்.
அனைவரும் அட்சதை தூவி வாழ்த்திக் கொண்டிருக்க வசீகரன் ஹாஸினியின் விழிகள் அவர்களை அறியாமலே ஒருவரையொருவர் சந்தித்து மீண்டது.
ஒவ்வொருத்தராய் மேடை ஏறி பரிசு வழங்கி மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினர்.
சற்று கூட்டம் குறைந்ததும் காவல் துறையை சேர்ந்தவர்கள் மேடையேறி வாழ்த்துக் கூற ஹாஸினியும் பரிசுப் பொருளுடன் நடந்தாள். அவளுடன் ஏகாம்பரமும் வசீகரனும் நடந்தனர்.
சேகருக்கு வாழ்த்துக் கூறி பரிசைக் கொடுத்துவிட்டு அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக நிற்கவும் புகைப்படக்காரர் அவர்களை வரிசைப்படுத்தினார். அனைவரும் ஆண்களாய் இருக்க மணப்பெண்ணின் அருகில் ஹாஸினியை நிற்குமாறு கூறியவர், வசீகரனை அவள் அருகில் நிற்குமாறு கூறினார்.
அதை எதிர்பார்க்காத ஹாஸினி ஒரு படபடப்புடன் அவன் அருகில் நின்றாள். எவ்வளவு தான் உணர்சிகளை வெளிப்படுத்தாமல் அவன் அருகில் நின்றாலும் அவன் அருகாமையில் அவள் மனம் தவிப்பது போலத் தோன்றியது. அந்த உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அவன் மீது கோபம் கொண்டாள்.
“பெரிய அழகன்னு நினைப்பு… இவன் பக்கத்துல நின்னா நான் அப்படியே மயங்கணுமா என்ன…. ஆனா இவனைப் பார்த்தாலே என் கண்ட்ரோல் என்னை விட்டுப் போயிருதே…. இவனும் மோசமான ஆண் வர்க்கத்தை சேர்ந்தவன் தானே… அழகா இருந்து என்னை மயக்கி என்னை ஆள நினைப்பானோ… முடியாது…. அதுக்கு நான் சிக்க மாட்டேன்…” என அவளுக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தவளின் முகம் சட்டென்று இறுகியது.
ஹாஸினியின் அருகில் நின்று கொண்டிருந்த வசீகரனின் நிலையோ சொல்ல முடியாது. அவளது பட்டு சேலை அங்கிருந்த ஏர் கூலரின் காற்றில் படபடத்து அவன் மீது உரசிச் சென்றது.
அலை மோதும் கூந்தலில் இருந்து வந்த நறுமணம் மனதை நிறைக்க அவள் மீதிருந்த வந்த பர்ப்யூமின் மணம் ஒரு கிறக்கத்தைக் கொடுத்தது. ஒருவித மயக்கத்தோடு அவளையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் வசீகரன். தன் அருகில் நிற்கும் போது அவளது முகத்தில் கலவையாய் வந்து போன மாற்றம் அவள் தவிப்பை அவனுக்கு உணர்த்தியது. சட்டென்று அவள் முகம் இறுகிப் போனதன் காரணம் அறியாமல் திகைத்தான் அவன்.
அதற்குள் போட்டோவும் வீடியோவும் அவர்களின் நிழலை உள்வாங்கி இருக்க அங்கிருந்து நகர வேண்டியதாய் போனது. தன் அருகில் நின்றிருந்த பூக்குவியல் தனை விட்டு நீங்கிப் போவதை ஒரு இயலாமையோடு பார்த்திருந்தான் வசீகரன். அவர்களிடம் விடைபெற்ற ஹாஸினி உணவருந்த நிற்காமலே கிளம்பி விட்டாள்.
அவனுக்குள் தோன்றிய அந்தப் புது விதமான உணர்வு அலையாய் அவன் மனதில் அடித்துக் கொண்டிருந்தது.
“என் மனது ஏன் அவள் அருகாமையில் தொலைந்து போகிறது…. அவள் ஒரு திமிர் பிடித்தவள் என்று தெரிந்திருந்தும் அவளைக் கண்டதும் மனம் பூனைக் குட்டியாய் சுற்றி வருகிறதே… அவள் அருகிலேயே இருந்துவிட மனம் துடிக்கிறதே….”
“ஒரு வேளை அவளுக்கும் என்மீது இப்படி ஒரு ஈர்ப்பு தோன்றி இருக்குமோ…. எனக்கு அவளைப் பிடித்ததில் பெரிய அதிசயமில்லை… அவளுக்கு என்னைப் பிடிக்குமா…. என்னிடம் என்ன தகுதி இருக்கிறது….” என்று நினைத்தவன் மனது சோர்ந்து போனது. அவளது அழகான உருவம் அவன் மனதில் பச்சை குத்தியது போல் பதிந்து இம்சை செய்யத் தொடங்கியது.
தன் அருகில் அமைதியாய் அமர்ந்து இலையில் இருக்கும் உணவை உண்ணாமல் கையால் அலைந்து கொண்டிருந்த வசீகரனை வியப்புடன் பார்த்தார் ஏகாம்பரம்.
“வசீ…. சாப்பிடுப்பா…. இலையில வச்சதெல்லாம் அப்படியே இருக்கு…. சாப்பிடும்போது என்ன யோசனை….” என்றார் ஏகாம்பரம்.
அதைக் கேட்டதும் இலக்கில்லாமல் பறந்து கொண்டிருந்த தன் நினைவுகளுக்கு கடிவாளம் இட்டு கட்டுப்படுத்திய வசீகரன் உண்ணத் தொடங்கினான்.
“வசீ…. அடுத்த மாசம் எஸ் ஐ டெஸ்டுக்கு தயார் ஆகிட்டே தானே…. நம்ம ஆளுங்க தான் செலக்ஷன் பண்ணறதுக்கு இருப்பாங்க…. பார்த்துக்கலாம்… நீ பிசிகல் டெஸ்ட்டுக்கு மட்டும் உடம்பை சரியா பார்த்துக்கோ…..” என்றார்.
“ம்ம்… சரி சார்…. நான் அதுக்கு தயார் ஆகிட்டு தான் இருக்கேன்… பார்த்துக்கறேன்….” என்று அவன் கூறியதும் அவரும் உண்ணத் தொடங்கினார்.
அடுக்களையில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அன்னை சபர்மதியின் அருகே வந்த வளர்மதி அவரை செல்லமாய் பின்னில் இருந்து அணைத்துக் கொண்டாள். அதைக் கண்டு சிரித்தார் சபர்மதி.
“என்ன வளர்…. பரீட்சை எல்லாம் முடிஞ்ச குஷியா… ஒரே உற்சாகமா இருக்கே….. இல்லேன்னா… இன்னும் கொஞ்சம் தூங்கறேன்னு எழுந்திருக்கவே மாட்டே… இன்னைக்கு நான் சொல்லாமலே எழுந்து வந்து நிக்கறே….” என்றார் வியப்புடன்.
“ம்ம்… தூக்கம் வரலைம்மா…. அதான்… எந்திருச்சுட்டேன்… சரி…. உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு வந்தேன்… நீங்க தள்ளுங்க… நான் பாத்திரம் தேய்க்கறேன்….” என்றதும் சிரித்தார்.
“அட… நீயா இப்படி சொன்னே…. ம்ம்…. ஒரு நிமிஷம் இரு…. இன்னைக்கு காக்கா மல்லாக்க பறக்குதான்னு பார்த்திட்டு வரேன்…” என்று கிண்டலடித்தார்.

Advertisement