Advertisement

அத்தியாயம் – 20
அந்தக் கல்யாண மண்டபமே திருவிழாக் கோலம் பூண்டிருக்க ராஜேஸ்வரி, சபர்மதி, கற்பகம் மூவரும் அவர்களின் சொந்தங்களை வரவேற்பதிலும் கல்யாண வேலைகளை கவனிப்பதிலும் பிசியாக இருந்தனர். ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க புகைக்கு நடுவில் தன் தேவதை எப்போது வருவாள் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் நகுலன்.
“கல்யாணப் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ….” என்று ஐயர் கூறியதும், தோழியர் சூழ அழகு தேவதையாய் நடந்து வந்து நகுலனின் அருகில் அமர்ந்தாள் வளர்மதி.
தன் மனத்தைக் கொள்ளை கொண்டவனை கடைக்கண்ணால் நோக்க அவன் அவளை நோக்கி புன்னகையுடன் புருவத்தைத் தூக்கினான். அதில் வெட்கி அவள்  தலை குனிய அதைக் கண்டவனின் மனமோ பரவசமானது.
மணமேடையில் அமர்ந்துகொண்டு அவன் செய்த சில்மிஷங்களையும், குறும்புகளையும் மனதில் சந்தோஷமாய் சேகரித்துக் கொண்டு அதே மயக்கத்தோடு அவன் கையில் மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டாள். அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த இனிதே கல்யாணம் நடந்தேறியது.
உற்றாரும், உறவினரும் சொந்தங்களும், பந்தங்களும் மனமார தம்பதிகளை வாழ்த்தினர். அவளுக்கு அருகில் குனிந்து நின்று அவன் ஒவ்வொருத்தரையும் அறிமுகப் படுத்தும் போதும் அவனது அருகாமையில் அவள் முகம் சிவந்து போனாள்.
வசீகரனும் ஹாசினியும் அங்கே பொறுப்பாய் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவர்களுக்குள் சீண்டிக் கொள்ளவும், கொஞ்சிக் கொள்ளவும் மறக்கவில்லை. எல்லாம் நல்லபடியாய் முடிய இரவும் வந்தது. நகுலன், வளர்மதிக்கான முதலிரவு அறையைத் தயார் செய்யும் பொறுப்பு அவர்களுக்கானது.
“பேபி….” பூக்களைத் தோரணமாய் தொங்கவிட்டுக் கொண்டே மனைவியை காதலோடு அழைத்தான் வசீகரன்.
“என்ன வசீ….”
“இதே போல நமக்கும் முதலிரவுக்கு பூ, பால், பழம், ஸ்வீட் னு எல்லாம் பண்ணியும் நாம அந்த நாளை வேஸ்ட் பண்ணிட்டோமே….”
“ம்ம்… என்ன பண்ணுறது…. அது முடிஞ்சு போயிருச்சே….”
“இல்ல… அன்னைக்கு தான் ஒண்ணும் நடக்கலை…. இன்னைக்கு நீ மனசு வச்சா…” என்று இழுத்தவனை முறைத்தவள்,
“டேய்…. திருடா…. அப்போ நேத்து நடந்ததுக்கு பேரு என்ன டா….”
“என்ன பேபிம்மா…. நீ நிஜமாலுமே பேபி மாதிரி பேசறே…. அது நேத்து காலைல தானே நடந்துச்சு…. அது எப்படி முதல் இரவாகும்…. அது முதல் காலை….. நீ ஓகேன்னு சொன்னா இன்னைக்கு நமக்கும் முதல், இரவு வச்சுக்கலாம்… என்ன சொல்லறே….” என்று குறும்புடன் சிரித்தவனை தலையில் செல்லமாய் கொட்டியவள்,
“டேய்…. என் அரைலூசு அத்தானே….. எப்போ பார்த்தாலும் பர்மிஷன் வாங்கிட்டே தான் எல்லாம் செய்வியா…. உனக்குன்னு சொந்த புத்தியே கிடையாதா….. இதெல்லாம் கேட்டுகிட்டு இருக்கக் கூடாது…. தானா எடுத்துக்கணும்….” என்றவளின் இடுப்பை வளைத்து அருகில் இழுத்து இறுக்கமாய் அணைத்தான்.
மூச்சு முட்டினாலும் சிறு வேதனையோடு கூடிய அந்த இறுக்கமான அணைப்பில் சுகமாய் கண் மூடி நின்றவளின் காது மடலில் மெல்ல முத்தமிட்டான்.
“என்னடி சொன்னே…. என் மாமன் மகளே…. என் செல்லக் குட்டி…. வெல்லக்கட்டி…. புஜ்ஜு குட்டி…. நீ சொல்லிட்டேல்ல…. இனிப் பாரு…. இந்த அத்தானோட கைவரிசையை….” என்று மீசையை தடவிக் கொண்டான்.
“ஹூக்கும்… ரொம்பத்தான்…..”
வெட்கத்தோடு அவள் சிணுங்கினாலும் அவனது ஆண்மையின் கம்பீரத்தில் சொக்கிப் போனவள் அவனையே நோக்கிக் கொண்டு நின்றிருக்க, அவளது கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டு மௌனமாய் கதை பேசிக் கொண்டிருந்தது வசீகரனின் கண்கள்.
சட்டென்று யாரோ அறைக்கு வெளியே கனைக்கும் குரல் கேட்கவே இருவரும் விலகிக் கொண்டனர். பட்டு வேஷ்டி சட்டையுடன் இருவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் நகுலன்.
“என்னப்பா நடக்குது இங்கே….. இல்ல… என்ன நடக்குது இங்கே…. என்னை ரூமுக்குப் போக சொல்லி பெரியவுங்க அனுப்பி விட்டு ரொம்ப நேரமாச்சு…. சரி…. நீங்க உள்ளே இருக்கீங்களே…. வரட்டும்னு வெளியே காத்திருந்தா… என்னவோ உங்களுக்கு, இன்னைக்கு தான் கல்யாணம் ஆன போல கொஞ்சிகிட்டு இருக்கீங்க…. அலங்காரமெல்லாம் செய்த வரைக்கும் போதும்…. நீங்க கிளம்புங்க…. மனுஷனோட அவஸ்தை புரியாம…..” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டு வசீகரன் சிரிக்க, ஹாஸினியின் முகமோ செந்தூரத்தைப் பூசிக் கொண்டது.
“சாரி… பிரதர்…. இதோ இப்போ மதியைக் கூட்டிட்டு வந்திடறேன்…” என்றவள் அவளை அழைத்து வரச் சென்றாள்.
“அத்தை….. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க…..” காலில் விழுந்த மருமகளை வாழ்த்தினார் கற்பகம்.
“சீக்கிரமே நம்ம வம்சம் தழைக்கட்டும்….. ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்க்கைல இணைஞ்சிருக்கணும்….” என்று மனதார்ந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்டு வெட்கமும், ஆசையும், எதிர்பார்ப்பும், சிறு பயமுமாய் ஒரு கலவையான உணர்வுடன் ஹாஸினியுடன் தங்கள் அறையை நோக்கி நடந்தாள் வளர்மதி.
தங்க ஜரிகை வைத்த சந்தன நிற மைசூர் சில்க் புடவையில் தலை நிறையப் பூவுடன் அளவான நகை, அலங்காரமும் கையில் பால் சொம்புடனும் வெட்கத்தில் குனிந்த தலையுடன் உள்ளே நுழைந்த வளர்மதி கதவைத் தாளிட்டு விட்டு கட்டிலை நோக்கிக் காலெடுத்து வைத்தாள். நிலத்தோடு ஒட்டிக் கொண்டது போல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அவளது தேகமெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடிக் கொண்டிருந்தது.
“எத்தனை நாள்…. எத்தனை வருஷம்…. என் மனம் கவர்ந்தவனை மணம் கொள்ளக் காத்திருந்தேன்….. இன்று அவன் எனக்கே சொந்தம்….” கணவனை நினைத்துக் கொண்டு மெல்ல கட்டிலை ஏறிட்டவள் அவனைக் காணாமல் திகைத்தாள். அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட விட்டவள் அங்கே நகுலனைக் காணாமல் அதிர்ந்தாள்.
“நகுல்….. எங்கிருக்கீங்க….. நகுல்….” குளியலறைக் கதவைத் திறந்து பார்க்க அங்கேயும் இல்லை…. மனதுக்குள் சின்னதாய் ஒரு குழப்பத்துடன் கூடிய பயம் எட்டிப் பார்க்க,
“ந..நகுல்….” என்றவளின் குரல் சற்று நடுங்கியது.
சட்டென்று அவளைப் பின்புறமிருந்து யாரோ அணைக்க கத்தப் போனவளின் வாயைக் கையால் மூடி தன்னிடம் திருப்பியது அந்த உருவம்.
“ஹஹா….. வளர்….. நான்தான்…. என்ன பயந்துட்டியா….”
கர்ட்டனின் பின்புறம் இருந்து வந்தவனை முறைத்தவள், “எதுக்கு இப்படி ஒளிஞ்சு நின்னு பயமுறுத்துனீங்க நகுல்….” என்றாள் கோபத்துடன்.
“சும்மா ஒரு விளையாட்டுக்குமா… பயந்துட்டியா…. முதல் ராத்திரிக்கு இந்த மாதிரி எதாவது பண்ணினா தானே இன்னொரு நாள் யோசிக்கும்போது மறக்க முடியாதபடி உற்சாகமா இருக்கும்…” என்றான் நகுலன்.
“ஓ… அப்படியா…. அதைவிட இன்னொன்னு செய்தா இன்னும் மறக்க முடியாத மாதிரி இருக்கும்….” என்றவள், தலையணையையும் போர்வையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் அமர்ந்தாள்.
அதைக் கண்டு அதிர்ந்த நகுலன், “என்ன வளர்… எதுக்கு அதையெல்லாம் எடுத்திட்டு அங்கே போறே….” என்றான்
“பர்ஸ்ட் நைட்டுக்கு, சண்டை போட்டு இப்படி தனியா படுத்தோம்னு பின்னாடி நினைச்சா மறக்க முடியாதுல்ல…. அதான்…” என்று வம்பு பேசியவளை முறைத்தவன்,
“அம்மா… தாயே…. நான் சும்மா விளையாட்டுக்கு அப்படி செய்தா நீ என்னைப் பட்டினி போட்டுடாதேம்மா….. நானும் எத்தனை வருஷமா உன்னைப் பக்கத்துல பார்த்துகிட்டு, மனசுக்குள்ளே ஜொள்ளு விட்டுகிட்டு நல்லவனாவே நடிக்குறது…. முடிலம்மா…. வாம்மா…. நான் பாவம் இல்லியா….” என்று கெஞ்சினான்.  
“முடியாது….. ஆசையா உங்களை எதிர்பார்த்துத் தேடினா, கண்ணாமூச்சி விளையாடி என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டு, இப்போ கதையா பேசறீங்க….”
“சரி…. நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும்…. நீ அதுக்கு வேணும்னா ஏதாவது தண்டனை கொடுத்திடு…. இப்படி தனியா மட்டும் படுக்காதே… செல்லம்…” கொஞ்சியவனைக் கண்டு கலகலவென்று சிரித்தாள் வளர்மதி.
“ஹஹா… என்ன வாத்தியாரே… இப்படி சரண்டர் ஆயிட்டீங்க…..” சந்தோஷமாய் சிரித்தவளைக் காதலுடன் நோக்கி நின்றான் நகுலன்.
“ராத்திரி நேரத்தில் சிரிக்குறதைப் பாரு…. மோகினி பிசாசு…. அப்படியே என்னை மயக்குறடீ செல்லம்….” என்றான்.
“என்னது…. மோகினியா…. என்னைப் பார்த்தா உங்களுக்கு பிசாசு மாதிரியா இருக்கு…..” தலையை ஆட்டிக் கொண்டு கோபமாய் கேட்டவளின் காதிலிருந்த ஜிமிக்கி ஆடுவதை ரசித்துக் கொண்டே உரசிக் கொண்டு அமர்ந்தான் நகுலன்.
“நீ பிசாசு இல்லடா… காதல் பிசாசு… நீ வெறும் மோகினி இல்லை…. என்னை மயக்கின மயக்கு மோகினி….. இந்தப் பெரிய கண் இருக்கே…. அப்படியே அதுக்குள்ளே போயி குடித்தனம் பண்ணலாம் போலத் தோணும்…. இந்த அழகான மூக்கு இருக்கே… அதிலே அப்படியே சறுக்கல் விடலாம் போலத் தோணும்… இந்த சிவந்த இதழ் இருக்கே… இந்த இதழ் மென்மையா….. பூவின் இதழ் மென்மையான்னு பட்டிமன்றம் நடத்தத் தோணும்….” என்று ஒவ்வொரு உறுப்புகளையும் விரலால் வருடிக் கொண்டு வர்ணித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு கூச்சத்தில் சிரித்தவள்,
“ஹஹா…. போதும் நகுல்…. முடில… இதெல்லாம் எந்த புக்குல படிச்சீங்க…..”
“அடிப் பாவி… இங்கே ஒருத்தன் உன்னையே நினைச்சு உருகி, உருகிக் காதலிச்சு கற்பனை பண்ணி வர்ணிச்சா இப்படில்லாம் கேப்பியா…. உன்னை…” என்றவன் அவளை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு கட்டிலில் கொண்டு போய் கிடத்தினான். மல்லாந்து கிடந்தவளின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், அவளுக்கருகில் படுத்துக் கொண்டான்.
“வளர்…. இந்த நாள்… இதுக்காக நாம எத்தனை காத்திருந்தோம்…. எத்தனை தவிப்பு…. எத்தனை வேதனை…. எத்தனை சோதனை….. இன்னைக்கு நீ எனக்கு சொந்தமா… என் வாழ்க்கைத் துணையா கிடைச்சிருக்கே… உன்னை மனைவியா தந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்…” என்றவன் அவள் அமைதியாய் இருப்பதைப் பார்த்து, “சரி… உனக்கு டயர்டா இருக்கும்…. நீ தூங்குமா….” என்றான்.

Advertisement