Advertisement

அதிகாலையில் கண் விழித்த ஹாஸினி, அறைக்குள் கண்ணை ஓட்ட வசீகரனைக் காணவில்லை.
மெல்ல எழுந்தவள், “என்ன இது… வசீ இன்னும் வரவில்லையா….” என்று யோசித்துவிட்டு, தான் அணைத்துப் படுத்திருந்த அவனது சட்டையை படுக்கையின் அடியில் பத்திரப் படுத்தினாள். தன் அலைபேசியை எடுத்து அவனது எண்ணிற்கு அழைக்க அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ஹாய் பேபி…. குட் மார்னிங்…. எனக்கு தான் கூப்பிடறியா……”
“ம்ம்… என்ன வசீ… நைட் லேட் ஆகும்னு சொன்னீங்க…. இப்போதான் வரீங்களா….”
“இல்லையே பேபி… நான் வரும்போது நைட் ஒரு மணி ஆகிருச்சு…. டயர்ட்ல ஹால்லயே படுத்து தூங்கிட்டேன்…. என்னைத் தேடுனியா….” என்றவனின் குரலில் இருந்த மாற்றம் அவளுக்குள் அப்போதே அவள் காதலை சொல்லிவிடத் தோன்ற தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவள், நிமிர்ந்தாள்.
“என்ன வசீ… விளையாடறீங்களா… இன்னைக்கு உங்க பிறந்த நாள்…. நைட்டே விஷ் பண்ணனும்னு நினைச்சு காத்திருந்தேன்…. நீங்க வராததாலே அப்படியே தூங்கிட்டேன்…. வேற ஒண்ணும் இல்லை…” என்றவள் மனது,
“ஆஹா….. ஒருவேளை நேரமே வந்திருந்தால் இவன் சட்டையைக் கட்டிப் பிடித்து நான் உறங்குவதைக் கண்டிருப்பானே… நல்ல வேளை… ஹாலிலேயே படுத்து தூங்கியிருக்கிறான்….” என சமாதானப் பட்டுக் கொண்டாள்.
“இவ்ளோதானா…. பிறந்த நாள் எல்லா வருஷமும் தானே வருது… இன்னைக்கு என்ன புதுசாவா இருக்கு…” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
அதில் முகம் வாடிப் போனவள், “என்ன வசீ… இப்படி சொல்லறீங்க… உங்க பிறந்த நாளை ஸ்பெஷலா கொண்டாடனும்னு என் அம்மா எல்லாம் பார்த்துப் பார்த்து  ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க… நம்ம கல்யாணத்துக்கு வராத அப்பாவின் சொந்தகளை கூட வர சொல்லி இருக்காங்க… நீங்க இன்னைக்கு டியூட்டிக்கு போக வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க…” என்றாள்.
“ம்ம்ம்… இதெல்லாம் அவுங்களுக்கு சந்தோஷமா இருக்கலாம்…. எனக்கு என்ன சந்தோசம்….” என்றவனின் ஏக்கம் அவளுக்குப் புரியாமல் இல்லை…. அவனைக் கட்டிக் கொண்டு,
“இந்தப் பிறந்த நாள் நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியமான, சந்தோஷமான நாள்டா….” என்று சொல்லத் துடித்த மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் ஹாஸினி.
“சரி… என்னோட பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வசீ….” என்று வாழ்த்துக் கூறி கை நீட்டியவளை வியப்புடன் நோக்கியவன்,
“இந்த வாழ்த்தை எந்த முறையில் எடுத்துக்கறது பேபி…..”
“புரியலையே….”
“ஒரு சக பணியாளனா வாழ்த்தினா, நானும் தேங்க்ஸ்னு சொல்லி கை குலுக்கிட்டுப் போயிடுவேன்…. ஒரு தோழியா சொன்னேன்னா…. ரொம்ப சந்தோஷம்னு சொல்லி கை குலுக்கிட்டுப் போயிடுவேன்…. ஒரு மனைவியா சொன்னா….” என்று நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க,
அவள் முகத்தில் அவன் என்ன சொல்லப் போகிறான்… என்ற எதிர்பார்ப்பு இருந்ததே தவிர, அந்த வார்த்தையில் விருப்பக் கேடு தோணவில்லை….
“மனைவியா சொன்னா….. சொல்ல வந்ததை சொல்லுங்க….” என்றவளின் சிவந்த முகத்தை அவள் கஷ்டப் பட்டு சரியாக்கிக் கொண்டிருந்தாள்.
“மனைவியா இருந்தா அய்யாவோட ரியாக்ஷனே வேற பேபி…. நீ எதுவா இப்போ வாழ்த்தினே…..” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“கை குலுக்கினா தானே இந்தப் பிரச்சனை….. என்னோட வாழ்த்துக்களை மட்டும் ஏத்துக்கோங்க….” என்று கையை இழுத்துக் கொள்ளப் போனாள்.
“சரி… பரவாயில்லை….. வாழ்த்தினதை மறுக்க எனக்கு மனசு வரலை…” என்றவனின் கரத்துள் அவளது கை அடைக்கலமாகி இருந்தது.
“நீ சரியான எமகாதகி டி…. இன்னும் எவ்ளோ நாள் தான் உன்னை மறைச்சு வச்சிருப்பேன்னு பாக்கறேன்…” என்று மனதுள் நினைத்துக் கொண்டவன்,
“தேங்க்ஸ் பேபி…” என்று அவள் கரத்தைப் பற்றி குலுக்கிவிட்டு மனசில்லாமல் விடுவித்தான்.
“சரி… நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…” என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்.
“என்கிட்டயே நடிக்கறியா பேபி… இன்னும் எவ்ளோ தூரம் போவேன்னு நானும் பாக்கறேன்….” என்றவன், இரவில் அறைக்குள் நுழைகையில் தன் சட்டையைக் கட்டிப் பிடித்து, இதழ்களில் மறையாத புன்னகையுடன் காலைக் குறுக்கிப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஹாஸினியை நினைத்து சிரித்துக் கொண்டான்.
“உன் மனசுக்குள் நான் இருக்குறதை நீ உணர்ந்துட்டேன்னா…… இந்த பிறந்த நாள் எனக்கு உண்மைலேயே ரொம்ப ஸ்பெஷல் தான் பேபி…” என்றவனின் இதழ்கள் சந்தோஷத்தில் மலர்ந்தன.
“வாங்க அத்தை…. வாங்க சித்தி…. வாங்கண்ணி…. வா பாஸ்கர்….” என்று ஊரில் இருந்து வந்திறங்கிய சொந்தங்களை முகம் மலர வரவேற்றுக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
“வாம்மா… வா தம்பி… நல்லாருக்கீங்களா…. எல்லாரும் வாங்க… உக்காருங்க……..” என்று ஹாலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.
“ராமு.. எல்லாருக்கும் ஜூஸ் எடுத்திட்டு வாங்க….” என்று பரபரத்தவரை,
“ராஜி…. இரும்மா… நாங்க இங்கேதானே இருக்கப் போறோம்…. மெதுவா ஒவ்வொண்ணா சொல்லு… ஒரு அவசரமுமில்லை….” என்று சிரித்தார் ராஜேஸ்வரியின் சின்ன மாமியார் மரகதம்.
“அதுக்கில்லை அத்தை…. உங்களை எல்லாம் பார்த்த சந்தோஷத்தில் என்ன பண்ணறதுன்னே தெரியலை… உங்க காலுக்கு இப்போ எப்படி இருக்கு அத்தை…. ஹாஸினி கல்யாணத்துக்கு வர முடியாமப் போனதில் எனக்கு எத்தனை வருத்தம் தெரியுமா…” என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனவரை,
“ராஜி… இப்படி நீயும் வந்து உக்காரும்மா…” என்று அருகில் அமர்த்தினார் மரகதம்.
“சித்தி… நீங்க எப்படி இருக்கீங்க… நம்ம வாசு, சரவணன் எல்லாம் எப்படி இருக்காங்க….” என்று அவரது குடும்பத்தையும் விசாரித்தார்.
“எல்லாரும் நல்லாருக்காங்க தாயி… நம்ம வாசு தான் இருக்குற தோப்பு துரவெல்லாம் பார்த்துக்கறான்…. இது அவன் சம்சாரமும், புள்ளையும்…. சரவணன் சென்னையில செட்டில் ஆயிட்டானே… எப்போதாவது ஊருக்கு வந்து பார்த்திட்டுப் போவான்…. சரி… எங்கே உன் மகளும், மருமகனும்….. அவுங்களைக் காணவே இல்ல…..” என்று பார்வையை வீட்டைச் சுற்றி ஓடவிட்டார்.
அதற்குள், “ராஜி… இப்போ எப்படி இருக்காங்க…… உன் மாப்பிள்ளையும் பொண்ணும்…. ராசியாகிட்டாங்களா….” என்று குசலம் விசாரித்த தனபாக்கியத்தை ஒரு பார்வை பார்த்தவர், “அவுங்க இப்போ வந்திருவாங்க அண்ணி… பக்கத்துல கோவிலுக்குப் போயிருக்காங்க…..” என்றார் அமைதியாக.
“ம்ம்… அத்தை… வசீகரன் இப்போ எஸ்ஐ ஆகிட்டாராமே…. ஏதோ தீவிரவாதியைப் பிடிக்க அவர்தான் முக்கிய காரணம்னு எல்லாம் பேப்பர்ல படிச்சேன்… கொஞ்சம் பார்த்து இருந்துக்க சொல்லுங்க…. அவனுங்க ஏதாவது பழி வாங்கறோம்னு கிளம்பிட்டா அப்புறம் வம்பு தான்…” என்ற பாஸ்கரை முறைத்தார் ராஜேஸ்வரி.
“என்ன பேசறே பாஸ்கர்…. அதும் மாப்பிள்ளையோட பிறந்த நாளும் அதுவுமா….”
அவனிடம் சற்று கோபமாகக் கேட்டாலும் அவன் கூறியதில் இருந்த விஷயத்தை யோசிக்கையில் அவர் மனதில் ஒரு பய விதை விழுந்தது.
அவரது யோசனை படிந்த முகத்தைக் கண்ட மரகதம், “அவன் கிடக்கறான் லூசுப் பய…. எப்போ எதைப் பேசணும்னு தெரியாத பய…. சரி… ராஜி… எங்கே உன் சம்மந்தி வீட்டு ஆளுங்களை எல்லாம் காணோம்….” என்று விசாரித்தார்.
“இப்போ வந்திருவாங்க அத்தை…. வந்திட்டிருக்கேன்னு போன் பண்ணாங்க…. இதோ மாப்பிள்ளையும் ஹாஸினியும் வந்திட்டாங்களே…” என்றார் முகம் மலர.
வசீகரனிடம் வந்தவர், “மாப்பிள்ளை… இவுங்க உங்க மாமாவோட சித்தி…. இவுங்க…. அவரோட அத்தை…. இவுங்க அவுங்க பசங்களும் மருமகளும்….” என்று எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“ஓ…..” என்றவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “பேபி… வா…..” என்று அவளையும் சேர்த்துப் பிடித்து அவர்கள் காலில் விழுந்தான்.
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டிம்மா….” என்றான். அவனைத் தன் சுருங்கிய கைகளால் தொட்டு ஆசீர்வதித்தனர் அந்த முதியவர்கள்.
“நல்லா தீர்க்காயுசோட ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்…. கண்ணுகளா… எழுந்திருங்க….” என்றவர், வசீகரனின் கையைப் பிடித்துக் கொண்டார்.
“உன்னோட இந்த ஒரு செயலே போதும் தம்பி… உன் குணத்தைச் சொல்ல… ராஜி… அருமையான மாப்பிள்ளையைத் தான் தேடித் புடிச்சு உன் மருமகனாக்கி இருக்கே…” என்று சந்தோஷித்தார். ஹாஸினி கணவனைப் பெருமையுடன் நோக்க அவன் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
சிறிது அவர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க முதியவர்களுடன் இயல்பாய்ப் பொருந்திக் கொண்ட வசீகரனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் ஹாஸினி.
அவளிடம் வந்த தனபாக்கியம், “என்ன ஹாஸினி… கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆச்சே…. ஏதாவது விசேஷம் இருக்கா…” என்று விசாரித்தார்.
“ம்ம்… வீட்ல விசேஷம்னு தானே வந்திருக்கீங்க…. இன்னும் அப்புறம் இப்படிக் கேக்கறீங்களே அத்தை…” என்று அறியாதவள் போல் அவள் நக்கலடிக்க வாயை மூடிக் கொண்டு அமைதியாகிவிட்டார்.
பாஸ்கருக்கு உள்ளே புகைந்தாலும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை.
அப்போது வாசலில் கார் வந்து நிற்க கற்பகமும் வளர்மதியும் இறங்கி உள்ளே நுழைந்தனர். வர்கள் வசீகரனிடம் வாழ்த்துக் கூறிக் கொண்டிருக்க சபர்மதியும் நகுலனும் காரிலிருந்து பைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்டதும் ராஜேஸ்வரியும் ஹாஸினியும் வாசலுக்கு வந்தனர்.
“ஹாய்… வளர்… வாங்கம்மா…” என்று அவர்களை வரவேற்று விட்டு ஹாஸினி அத்தையிடம் ஓடினாள்.
“ஹாய் பிரதர்…. வாங்க… பியூட்டி…. என்ன… இவ்ளோ திங்ஸ்… நான் சொன்ன சீடையும், மைசூர் பாக்கும் செய்திட்டு வந்திங்களா…..” என்றாள் சபர்மதியிடம்.
“என் செல்லத்துக்கு பிடிச்சதை செய்யாம இருப்பேனா…” என்று மருமகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்ட சபர்மதியை, ராஜேஸ்வரி கண் நிறையப் பார்த்திருந்தார். அதைக் கண்ட பாஸ்கருக்கும் தனபாக்கியதுக்கும் எரிந்தது.
“ம்ம்ம்… நல்லாத்தான் சொக்குப் பொடி போட்டு வளைச்சு வச்சிருக்காங்க மருமகளை…. இவ்ளோ சொத்திருக்குன்னு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா…” அவர்கள் மனது அவர்கள் பாணியில் யோசித்துக் கொண்டிருந்தது.
“வாங்க சம்மந்தி…. வாங்க நகுலன்…. சங்கர்… அந்த திங்க்ஸ் எல்லாம் உள்ளே கொண்டு போயி வச்சிருங்க…” என்றார் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டே படியேறிய சபர்மதி முன்னில் கம்பீரமாய் நின்ற மகனைக் கண்டதும் புன்னகைத்தார். “அம்மா….” என்று அவரது காலில் விழுந்தவனை ஆசீர்வதித்தவர்,
“நீ எப்பவும் நல்ல ஆரோக்கியத்தோட நிரஞ்ச சந்தோசத்தோட இருக்கணும் கண்ணா….” என்று மகனை அணைத்து நெகிழ்ச்சியுடன்  நெற்றியில் முத்தமிட்டார்.
“வாங்க சம்மந்தி….” என்று அவரை ராஜேஸ்வரி உள்ளே அழைக்க வீட்டுக்குள் நுழைந்தார்.
ஹாலில் நுழைந்ததும் எதிர் சுவரில் ஒரு ஜீரோ வாட்ஸ் விளக்கு விட்டுவிட்டு எரிந்து கொண்டிருக்க அதன் மேலிருந்த புகைப்படத்தைக் கண்டதும் அவர் கண்கள் அதிர்ச்சியில் நிலை குத்தின. பார்வை அதிலேயே நிலைக்க அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார் சபர்மதி.
“சம்மந்தி… என்னாச்சு….” என்று ராஜேஸ்வரி அவரை உலுக்க, “அம்மா… என்னாச்சும்மா…” என்று வசீகரனும் புரியாமல் பதற, அவர் அந்த போட்டோவைக் கை காட்டி, “அ… அண்ணா…. அண்ணா…” என்று சொல்ல வார்த்தை வராமல்  திணறினார்.
அதுவரை அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மரகதம் பாட்டி, “நீ…. நீ… சபர்மதி தானே….” என்றார் கண்ணைச் சுருக்கிக் கொண்டு. இருவரும் ஒரே நேரத்தில் சொன்னதைக் கேட்டு அனைவரும் திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் அவர்களைத் திரும்பிப் பார்த்த சபர்மதி, “சித்தி….. அத்தை…..” என்று அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார். அதைக் கண்டு மற்றவர்கள் புரியாமல் நிற்க ராஜேஸ்வரி, “அப்படின்னா…. என் நாத்தனார்  வீட்டுக்கு தான் என் பொண்ணைக் கொடுத்திருக்கேனா…” என்றார் சந்தோஷத்துடன்.
“எத்தனை வருஷமாச்சு தாயி… நீ ஊரை விட்டுப் போயி…. எப்படி இருக்கே கண்ணு…” சித்தியும், அத்தையும் அவரை விசாரித்துக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்த சந்தோஷத்தில் அழுது கொண்டே விவரங்களைக் கூறிக் கொண்டிருந்தார்.
“அண்ணி….. அண்ணன்… எப்போ….. இப்படி…” என்று அழுது கொண்டே கேட்ட சபர்மதியிடம், ராஜேஸ்வரி கணவரின் மறைவைப் பற்றிக் கூறி,
“இனி நீ அழக் கூடாதும்மா…. உன்னைப் பற்றி என் கணவர் எவ்வளவு பெருமையா சொல்லிருக்கார் தெரியுமா…. அவரும் நீ எங்கிருக்கேன்னு தெரிஞ்சுக்க ரொம்ப முயற்சி பண்ணினார்…. உன்னைப் பார்க்க முடியலைங்கற வருத்தத்தோடவே போய் சேர்ந்துட்டார்…..”
சின்னவர்களும், கற்பகம், தனபாக்கியமும் அவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
“பியூட்டி…. நீங்க என் அப்பாவோட தங்கையா…. உங்களை முதலில் நான் பார்த்தபோது எனக்கு மனசுக்குள்ளே என்னவோ அப்பாவோட முகம் தோணுச்சு…. அப்புறம் அதை நான் அப்படியே விட்டுட்டேன்…. நீங்க என் அத்தையா…. வளர் எனக்கு அத்தை மகளா…” என்று சந்தோஷித்தாள் ஹாஸினி.
“அண்ணி…. என்ன அண்ணாவை மட்டும் சொல்லாம விட்டுட்டீங்க…. அவர் உங்களுக்கு இப்ப மட்டும் இல்லை… அப்பவுமே அத்தான் தான்….” என்று சிரிக்க, அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஹாஸினியின் பார்வை ஆவலோடு கணவனை நோக்க அவன் முகமோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தது.
மதிய விருந்துக்கு குடும்பத்தினர் மட்டுமே இருந்ததால் அந்த வீடே பழைய உறவுகளின் புதுப்பித்தலில் சந்தோஷமாய் இருந்தது. தனபாக்கியமும் பாஸ்கரும், உண்மை அறிந்ததில் மௌனமாகிப் போயினர்.
கண்ணுக்குள் காட்சியாய்
நுழைந்தவனே…. உன்னால்
கள்ளம் புகுந்திட்ட என் விழிகளில்
காதல் எப்போது நுழைந்ததடா….
ரகசியமாய்ப் பூத்திடும்
உன் புன்னகை இதழ்களில்
சிக்குண்ட என் விழிகள்
நிலம் பார்த்து நிற்குதடா…
ஒற்றை வார்த்தை நான் சொன்னால்
ஓராயிரம் முறை உனக்குள் வாசிக்கிறாய்…
அன்பின் மணமறியா என்னிடம் – உன்
மனதை ஏனடா வைத்தாய்….
காதலுக்கு உருவமில்லை என்றேன்…
எனக்குள் உணர்வாய் நுழைந்து
உயிரில் கலந்து
உணர வைத்தாய் காதலை….
கனவிலும் நீ செய்யும்
இம்சையால் என்னுள்
அவசரமாய் ஒரு
நாணக் கவிதை பூக்குதடா…
கடவுளைப் போல் காதலுக்கும்
உருவமில்லை… ஆனாலும்
கடவுளும் காதலும் இல்லாமல் இல்லை…
உருவமில்லாமல் உணர்வாய்
என்னில் கலந்திருக்கிறாய் நீ….

Advertisement