Advertisement

அத்தியாயம் – 16
அடுத்து வந்த நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதன் பாட்டில் செல்ல ஹாஸினியின் வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர்.
வசீகரன் அவனது அலுவலில் பிசியாக இருக்க, ஹாஸினி அவளது கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதந்து கொண்டிருந்தாள். அவளை கவனிக்கும் சூழ்நிலையில் வசீகரன் இல்லை… காலையில் ஸ்டேஷனுக்கு சென்றால் உறங்குவதற்கே வீட்டுக்கு வந்தான்.
ராஜேஸ்வரியோ விருந்துக்கு ஏற்பாடு செய்வது… சொந்தங்களை அழைப்பது…. என்று பிசியாக இருந்தார். ஊருக்கு நேரில் சென்று கணவரின் சொந்தங்களை அழைத்து விட்டு வந்திருந்தார். அவர்களை பிறந்த நாள் அன்று வீட்டுக்கு அழைத்து வர காருக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
மாலையில் வீட்டுக்கு முன்னால் சின்னதாய் ஒரு ஷாமியானா போட்டுக் கொண்டிருக்க அதைப் பார்த்துக் கொண்டே பரபரப்பாய் ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்த அன்னையைக் கண்டு சிரித்தாள் ஹாஸினி.
“மம்மி…. உங்களுக்கு சட்டுன்னு வயசு கம்மியான போலத் தோணுது…. ரொம்ப சுறுசுறுப்பா ஆயிட்டீங்க…. மாப்பிள்ளை பிறந்த நாளை திருவிழா போலக் கொண்டாடறீங்க…. ம்ம்…. என் பிறந்த நாளுக்கு இப்படில்லாம் பண்ணதே இல்லை…” ஆதங்கத்துடன் கூறிய மகளைக் கண்டு சிரித்தார் ராஜேஸ்வரி.
“வீட்ல இப்படி சந்தோசமும் உற்சாகமும் நிறைஞ்சிருந்தா வயசு தானா குறையும்மா…. இப்போ என் மனசு எவ்ளோ சந்தோஷமா, நிம்மதியா இருக்கு தெரியுமா…. இதுக்கெல்லாம் காரணம் மாப்பிள்ளை தானே… அவர் பிறந்தநாள்…. எனக்கு நிச்சயமா திருவிழா போலத்தான்…. நம்ம ரெண்டு பேர் மட்டும் கொண்டாடினா அதில் என்ன சந்தோசம் இருக்கு… இப்போ நமக்குன்னு எத்தனை உறவுகள்…..” சந்தோஷத்துடன் அவர் கூறியதும் அவள் சிரித்தாள்.
“மம்மி… நான் சும்மா உங்களை வம்பிழுத்தேன்…. உங்க மாப்பிள்ளைக்கு என்ன பண்ண நினைக்கறீங்களோ தாராளமா பண்ணுங்க….” என்றாள் ஹாஸினி.
“ம்ம்… சரி… உங்க கல்யாணம் ஆனதும் வர்ற முதல் விஷேசம் மாப்பிள்ளையோட பிறந்த நாள் தான்…. நீ அவருக்கு ஏதாவது பரிசு வாங்கிக் கொடும்மா…. ரொம்ப சந்தோஷப் படுவார்…..”
“ம்ம்… சரிம்மா…. என் கிப்ட் பார்த்து நிச்சயமா உங்க மாப்பிள்ளை சந்தோஷப் படுவார்…. அப்படி ஒரு கிப்ட் தான் கொடுக்கப் போறேன்…” என்றவளின் வெட்கம் கலந்த புன்னகை அவருக்கு என்ன உணர்த்தியதோ அதற்கு மேல் அதைப் பற்றி  பேசாமல்,
“சரிம்மா…. நாளைக்கும் இப்படி டியூட்டியே கதின்னு இருக்கப் போறாரு…. நீ கொஞ்சம் இன்னைக்கு சொல்லி வச்சிரு….” என்றார்.
“ம்ம்… சரி… நான் ரூம்ல இருக்கேன் மா…” என்றவள் அவளது அறைக்கு சென்றாள்.
வசீகரனுக்கு கொடுப்பதற்காய் அவள் வாங்கி வந்திருந்த அந்த அழகான பிரேஸ்லெட்டை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அத்துடன் அவள் கைப்பட எழுதிய அந்த லெட்டரையும் சேர்த்து வைத்து பேக் பண்ணினாள்.
“இதைக் கொடுத்துவிட்டு எப்படி பேச்சைத் தொடங்குவது…. நான் முதலில்  கொடுப்பதா… எல்லாரும் போன பிறகு நிதானமாக இதைக் கொடுப்பதா….” என யோசித்தவள், “அவனைக் காக்கவைத்து கடைசியாகக் கொடுப்போம்… அப்போது தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்…” என சிரித்துக் கொண்டாள்.
சிரிப்பதற்கு கஞ்சத்தனமாய் இருந்தவள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள். கண்ணாடியின் முன் நின்றவளுக்கு அவள் முகத்தைக் காண சந்தோஷமாய் இருந்தது. “என் முகமா இப்படி மென்மையாய் மாறிவிட்டது… காதல் வந்தால் அழகும் கூடுமா…. என்ன….” அதற்கும் சிரித்துக் கொண்டாள்.
“இரவு உணவிற்கு வர முடியாது….” என வசீகரன் அழைத்துக் கூறிவிடவே அன்னையுடன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கு வந்து படுத்தாள். உறக்கம் தான் வருவேனா…. என்று சண்டித்தனம் செய்தது. வசீகரனை முதன் முதலில் சந்தித்த போது தான் கூறியது நினைவுக்கு வர அவளுக்கே சிரிப்பு வந்தது.
அவனது அலமாரியைத் திறந்து மடக்கி வைத்திருந்த அந்த நீல நிற ஷர்ட்டை வெளியே எடுத்தாள். அதற்கு வலிக்குமோ என்பது போல மென்மையாய்ப் பிடித்தவள் சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பெரிய ஹீரோன்னு நினைப்பு…. முதல் நாள் பார்க்கும் போதே அப்படியே ஆளை முழுங்குற மாதிரி லுக் வேற… ஹப்பா…. என்ன பார்வைடா உன்னோடது… அப்படியே இரும்பை சுண்டி இழுக்குற காந்தம் போல….” அன்று குற்றமாய் தோன்றியதெல்லாம் இப்போது அவளுக்கு ரசிக்கத் தோன்றியது.
அந்த சட்டையையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் அவளை நோக்கி கண் சிமிட்டுவது போலத் தோன்ற அதில் முகம் சிவந்தவள் மனது உற்சாகத்தில் திளைத்தது.
“கள்ளம் கொண்ட
உன் விழிகளுக்கும்
காதல் கொண்ட என்
நெஞ்சத்திற்கும் இடையில்
சிக்கித் தவிக்குதடா
எந்தன் நாணம்….”
“ஹஹா… எனக்குக் கவிதை கூட வருதே…. என்று சிரித்தவள் அந்த ஷர்ட்டை மெல்ல முகர்ந்தாள். வசீகரனின் அருகாமையில் அவள் உணர்கின்ற நறுமணம் அவளுக்குத் தோன்ற, மென்மையாய் அதை முத்தமிட்டு நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். வெகு நேரம் சுகமான நினைவுகளுடன் உறங்காமல் படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
“அத்தை…. வளர்….”
அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் நகுலன். உடன் அவனது அன்னை கற்பகமும் இருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை…. வாங்க சம்மந்தி… உங்களுக்கு தான் காத்திருக்கோம்… ஒரே நிமிஷம்… உக்காருங்க…. நான் காப்பி எடுக்கறேன்….” என்ற சபர்மதி,
“வளர்…. மாப்பிள்ளையும் சம்மந்தியும் வந்திட்டாங்க பாரு…” என்று அறைக்குள் குரல் கொடுக்க அவள் ஆவலோடு வெளியே வந்தாள்.
“வளர்… நல்லாருக்கியாம்மா….” அன்புடன் அவளது கையைப் பற்றிக் கொண்டார் கற்பகம். அவளது விழிகள் நகுலனிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க தலை மட்டும் அத்தையின் கேள்விக்கு பதிலாய் ஆடியது.
வெகு நாளைக்குப் பிறகு அழகாய் புறப்பட்டு நின்றவளைக் கண்ட நகுலனின் கண்கள் அவளை விட்டு விலகுவேனா… என்று சண்டித்தனம் செய்தது.
இருவரின் நிலை கண்டு புன்னகைத்த கற்பகம், “சரி… நீங்க பேசிட்டு இருங்க மா… நான் இப்ப வந்திடறேன்…” என்று அடுக்களையில் இருந்த சபர்மதியிடம் சென்றார்.
“என்ன சம்மந்தி…. இங்கே வந்துட்டீங்க….”
“ஹஹா… சின்னஞ்சிறுசுக… ரொம்ப நாள் கழிச்சு பாக்குறாங்க… ஏதாவது பேசணும்னா பேசட்டும்னு தான் எழுந்து வந்துட்டேன் சம்மந்தி….”
“ம்ம்… உங்களை மாதிரி மனசைப் புரிஞ்சு நடந்துக்குற மாமியார் எல்லாருக்கும் கிடைக்காது…. என் பொண்ணு அதிர்ஷ்டக் காரிதான்….” என்று சிரித்தார் சபர்மதி.
“ஹஹா…. நாமளும் அந்த வயசைக் கடந்து தானே சம்மந்தி வந்திருக்கோம்…. நம்ம புள்ளைகளைப் பத்தி நமக்கு தெரியாதா… சந்தோஷமா பேசிட்டு இருக்கட்டும்…” என்று அவரும் சிரித்தார்.
“ம்ம்… ஹாஸினி அம்மா கூட அதான் சொன்னாங்க… எதுக்கு இனி காத்திருக்கணும்… ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிடலாமேன்னு….”
“ஓ… அப்படியா…. நீங்க எப்போ சொன்னாலும் எங்களுக்கு ஓகே தான் சம்மந்தி…. நீங்களும் தாராபுரம் வரப் போறதா சொன்னீங்களாம்…. நகுலன் சொன்னான்….”
“ஆமாம் சம்மந்தி…. என்னவோ கொஞ்ச நாளா அவர் நினைவாவே இருக்கு…. சின்னதா இருந்தாலும், கடன்ல இருந்தாலும் அவர் எங்களுக்குன்னு சம்பாதிச்ச ஒரே சொத்து…. அந்த வீட்டுக்குள்ளே அவரோட ஆசையும் நினைவுகளும் நிறைஞ்சு இருக்குற போல இருக்கும்…. எதை செய்தாலும் அவர் பக்கத்துல இருந்து பார்த்துட்டு இருக்கற போலிருக்கும்…. இங்கே என்னவோ எனக்கு ஒட்ட முடியலை…. சம்மந்தி… அதான் அங்கேயே போயிடலாம்னு…” என்றார்.
“ம்ம்.. நீங்க சொல்லுறதும் சரி தான்…. புருஷன் கூட வாழ்ந்த வீட்டில் இருந்தால் என்னவோ அவுங்க நம்மை விட்டுப் போயிட்டாலும் நம்ம கூடயே இருந்து எல்லாத்தையும் பார்த்திட்டு இருக்குற போல ஒரு உணர்வு இருக்கும்… ஹூம்… எனக்கும் அது தெரியுமே…” என்றவர் வருத்தத்துடன் அவர் கொடுத்த காப்பியை வாங்கி அங்கேயே குடிக்கத் தொடங்கினார்.
அவர்கள் இல்லாத நேரத்தில் இங்கே நகுலனும் வளர்மதியும் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்…
இருவரும் கண்களாலேயே நலம் விசாரித்துக் கொண்டதும் நகுலன் தான் பேச்சைத் தொடங்கினான்.
“வளர்… உன்னை இப்படிப் பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா…. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கே….”
அடர் பச்சையில் சின்னதாய் கரை வைத்த மைசூர் சில்க் சேலையில் அழகாய் இருந்தாள் வளர்மதி. ஹாஸினி அவளை பார்லருக்கு அழைத்துச் சென்று கழுத்தைத் தொட்டிருந்த தலை முடியை அழகாய் சீராக்கி விட்டிருந்தாள். அது அவளது முகத்துக்கு மிகவும் பொருத்தமாய் இருந்தது.
நகுலனின் பாராட்டில் உற்சாகமானவள், “நிஜமாவா நகுல் சொல்லறீங்க…. நான் சுடிதார் போடறேன்னு தான் சொன்னேன்… அம்மாதான் சேலை கட்ட சொன்னாங்க….. எனக்கு நல்லாருக்கா…..”
“ம்ம்… நீ சேலை கட்டி நான் பார்த்ததே இல்லை வளர்…. இந்தச் சேலைல அப்படியே தேவதை மாதிரி இருக்கே…. அய்யய்யோ…. என் கையைக் கட்டுப் படுத்த முடியலையே….  பரபரன்னு இருக்கே…” என்று புலம்பினான்.
அதைக் கண்டு சிரித்தவள், “ஓ… அப்படியா…. யாரு உங்களை கட்டுப் படுத்த சொன்னது….” என்றவள் நாணத்துடன் குனிந்து கொள்ள, அதைக் கேட்டவன் விழிகள் வியப்பில் விரிந்தன.
“ஹேய்… என்ன சொன்னே…. நான் தொடங்கிருவேன்…. அப்புறம் நீ தாங்க மாட்டே… நல்லா யோசிச்சு சொல்லு….” என்று சிரிக்க,
“எல்லாம் தாங்குவோம்…. அதைப் பத்தி நீங்க ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்….” என்றாள் குறும்புடன்.
அதைக் கேட்டபின்பும் சும்மாயிருக்க அவன் என்ன முட்டாளா…. சட்டென்று அருகில் இருந்தவளை இழுத்து உடை கசங்காமல் மெல்ல அணைத்தவன்,
அவள் ரோஜா இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டு விலகினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது காதலோடு கூடிய தீண்டலில் மெய் சிலிர்த்து நின்றாள் வளர்மதி. அதில் குங்குமமாய் சிவந்து போனவள் அழகு இன்னும் அதிகமாய்த் தோன்றியது. அவளைக் காதலோடு நோக்கிய நகுலன்,
“மதி…. இப்போ உன் முகம் எப்படி இருக்கு தெரியுமா….” என்றான்.
“ம்ம்… எப்படி இருக்கு….”
“மாலை நேர சூரியன் செங்கதிர்ல தேஜசோட ஜொலிக்குமே…. அது போல அழகா சிவந்திருக்கு….”
“ஓ… அழகான கற்பனை நகுல்…. இருந்தாலும் கொஞ்சம் அதிகம் தான்…” என்றவள், “அம்மா வரப் போறாங்க… கொஞ்சம் தள்ளி உக்காருங்க….” என்றாள்.
மென்மையாய் ஒரு புன்னகையை உதிர்த்தவன், சற்றுத் தள்ளி அமர்ந்தான்.
அவள் சொன்னது போலவே காப்பிக் கோப்பையுடன், “வளர்….” என அழைத்துக் கொண்டே அவர்களிடம் வந்தார் சபர்மதி.
“இந்தாங்க மாப்பிள்ளை… காப்பி எடுத்துக்கோங்க…. வளர்… கொண்டு போக வேண்டியதெல்லாம் எடுத்துகிட்டியா மா…”
“ம்ம்…. எடுத்து வச்சிட்டேன் மா… முன்னாடி கொண்டு போயி வைக்கவா…”
“ம்ம்… சரிம்மா… எதுவும் விட்டுப் போயிடாம பார்த்து எடுத்து வை…” என்றவரை அதிசயமாய்ப் பார்த்த கற்பகம்,
“என்ன சம்மந்தி… மகன் பிறந்த நாளுக்கு நிறையப் பரிசு கொண்டு போற மாதிரி இருக்கு….”
“ஹஹா… இன்னைக்கு தான் என் மருமக வீட்டுக்கு முதன் முறையா போறோம்…. சும்மா போக முடியுமா…. சம்பிரதாயமெல்லாம் அன்னைக்கு தான் பார்க்க முடியல…. அதான்… என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் பலகாரம் செய்தேன்… அப்புறம் மகன், மருமகளுக்கு புதுத் துணியும் வாங்கினேன்…. வேறொண்ணும் இல்லை…. சம்மந்தி…. சரி… நாம கிளம்புவோமா….” என்றார்.
“ம்ம்… சரி…” என்றவர் மகனிடம் திரும்பி, “நகுலா… கிளம்புவோமா…” என்றார். அவன், “சரி….” என்றதும் அனைவரும் டாக்ஸியில் ஏறிக் கொள்ள கார் ஹாஸினியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.

Advertisement