Advertisement

“உங்களுக்குத் தேவையான பணத்தை தர நான் தயார்…. எனக்கு ஒரு வாடகைப் புருஷனா நீங்க வரணும்…. என்னைத் தவிர எல்லார் முன்னாடியும் எனக்குப் புருஷன்கிற போர்வையில் இருக்கணும்…. ஒரு வேளை…. நீங்க அதை மீற முயற்சி பண்ணினாளோ… இந்த நாடகம் போதும்னு எனக்குத் தோணினாலோ…. தாலியை கழற்றி வாங்கிட்டு நீங்க என் வாழ்க்கையை விட்டு விலகிடனும்….”
“இதுக்கு சம்மதம்னா… நமக்கு உடனே கல்யாணம்… அடுத்த நாளே உங்க தங்கைக்கு ஆப்பரேஷன்…. என்ன சொல்லறீங்க….” என்றவளை எரித்து விடுவது போலப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் மனது உலைக் களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
“என்ன வார்த்தை சொல்லி விட்டாள்…. திருமணம் என்பது என்ன… பண்டமாற்று போல இதற்கு பதில் அது…. என்று முடிவு செய்யக் கூடிய விஷயமா…. அகம்பாவம் பிடித்தவள்…. பணமும், அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறாளா…. அவளது சிறு பார்வைக்காய் நான் காத்திருந்தேன்… அவளோ அதைப் புரிந்து கொள்ளாமல் என் தலையில் பாவக் கணக்கை சுமக்க சொல்கிறாளே….”
“ஒரு நாள்… ஒரு நிமிடம்… அவளோடு காதலோடு வாழ்ந்தாலும் போதும்…. என்று நான் நினைக்க, மனமில்லாத ஒரு கல் நெஞ்சம் படைத்தவள் போலல்லவா பேசி விட்டாள்…. அகங்காரி….” அவன் மனது அவளை குற்ற மேடையில் நிறுத்தி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தது.
“பாவம்…. அவள் அன்னை…. எத்தனை கனவுகளோடு மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரோ…. இவள் என்னவென்றால் வாழ்க்கையை வியாபாரமாக்கப் பார்க்கிறாளே…. இரு மனம் இணைந்தால் தான் திருமணம்…. என்பது புரியாமல்  தாலியை சாதாரண கயிறைப் போல எண்ணுகின்ற இவளும் ஒரு பெண்ணா….” கோபத்தோடு வீட்டுக்கு வந்தவன் அன்று ஸ்டேஷனுக்குப் போகவில்லை.
வசீகரன் ஒன்றும் சொல்லாமல் கோபத்தோடு போனதால் அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்பது தெரிந்துவிட ஹாஸினி சபர்மதியிடம் வேறு விதமாய் திரித்துக் கூறி விட்டாள். ஹாஸினிக்கு வசீகரனைப் பிடித்திருக்க, வளர்மதியின் ஆப்பரேசனுக்கு பணம் கொடுப்பதாய் சொன்னதை வரதட்சணை வாங்க மாட்டேன்… என்று அவன் மறுத்து கூறியதாகக் கூறி அவரைத் தூண்டிவிட்டு வசீகரனிடம் பேச வைத்தாள்.
நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தவள், “தான் சொன்னதும் வசீகரனுக்கு ஏன் அத்தனை கோபம் வந்தது….” என்று யோசித்தாள்.
“நான் பேசத் தொடங்கும் வரை அவன் கண்கள் எதற்கோ ஆவலுடன் ஆசையாய்க் காத்திருந்தது….. நான் சொல்லி முடித்ததும் அது கோபமாய் மாறி விட்டது…”
“அப்படியென்றால்…. அதற்கு என்ன அர்த்தம்…. என் காதலுக்காய் காத்திருந்தவன்… நான் பணக் கணக்கு பேசுவதைக் கண்டு தான் கோபப் பட்டானோ…. என் பேச்சில் அவன் மனது துடித்ததன் வலி அவன் முகத்தில் தெரிந்ததே….. அது எதனால்….” என யோசித்தவளுக்கு அதன் காரணம் என்னவென்று புரிந்ததும் மனதில் சில்லென்று ஒரு சாரல் வீசியது.
குப்பென்று ஒரு சந்தோஷ அலை அவள் உடலெங்கும் பரவ அவளது மனம் அவளுக்கு தெளிவாய்ப் புரிந்தது. அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவனை எதற்கு அழைக்கத் தோன்றியது, என்ற வினாவிற்கு விடை கிடைத்தது…..
அவனுக்கு ஒரு ஆபத்து, என்றதும் அவளது மனதில் எதற்கு பயம் வந்தது என்பது தெளிந்தது…. எல்லாமே அவளுக்கு சந்தோஷமாய் இருக்க மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.
வசீகரனை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, “வசீ…. ஐ லவ் யூ டா….” என்று கண்ணாடி முன் நின்று உச்சரித்துப் பார்த்தவள் சிரித்துக் கொண்டாள்.
அவனுக்கு “என் மனதை… என் காதலை…. உடனே சொல்லிவிடக் கூடாது… ஏதாவது பரிசுடன் அவனே எதிர்பார்க்காத சூழ்நிலையில் வித்தியாசமாய் தான் வெளிப்படுத்த வேண்டும்….” என்று நினைத்துக் கொண்டவள் சந்தோஷத்துடன் கீழே வந்தாள்.
கீழே ராஜேஸ்வரி சோபாவில் அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க அவரிடம் வந்து அமர்ந்தவள் அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். மகளின் சந்தோஷ முகத்தைக் கண்ட ராஜேஸ்வரி புன்னகையுடன் அவள் தலையில் கை வைத்து முடியைத் தடவிக் கொண்டிருந்தார்.
“நான் சொன்னது சரிதானே…. சம்மந்தி…. சின்னஞ்சிறுசுக…. அவுங்க கல்யாணத்தை எதுக்கு தள்ளிப் போடணும்…. அதும் இல்லாம நம்ம வளர் கல்யாணத்தையாவது எல்லாரையும் கூப்பிட்டு விமரிசையா பண்ணிடுவோம்….”
“ம்ம்… நீங்க சொல்லறதும் சரிதான்… அப்படியே பண்ணிடலாம் சம்மந்தி….”
“ம்ம்… அப்போ சீக்கிரமே நம்ம வீட்டு விருந்தில் சந்திக்கலாம்…. அந்த நகுலன் தம்பி நம்பரைக் கொடுங்க…. அவுங்களுக்கும் கூப்பிடணும்….” 
“ம்ம்… சரி சம்மந்தி….” என்றவர் நகுலனின் நம்பரைக் கொடுக்க ராஜேஸ்வரி அருகில் இருந்த புத்தகத்தில் குறித்துக் கொண்டார்.
“சரி சம்மந்தி…. என் மருமக டியூட்டிக்கு கிளம்பிட்டாளா….”
“இல்லை சம்மந்தி…. இதோ… என் பக்கத்தில் தான் இருக்கா…. அவளுக்கு மெதுவா போனா போதும்னு சொன்னா…. பேசறீங்களா….” என்றவர் மகளிடம் கொடுத்தார்.
“ஹாய் பியூட்டி…. எப்படி இருக்கீங்க…..” என்று மாமியாரிடம் சிரிப்புடன் கேட்டவளை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
“சூப்பரா இருக்கேன்… மருமகளே…. வளர் உன்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா…. உனக்கு வேலை இல்லேன்னா நீயும் வசீ கூட வந்திருக்கலாம்ல மா….” அன்புடன் சபர்மதி விசாரிக்க சிரித்தாள் ஹாஸினி.
“அத்தை…. எனக்கு கேப் கிடைச்சா உங்க கையால சாப்பிட ஓடி வந்திட மாட்டேனா…. கொஞ்சம் வெளியே வேலை இருக்கு…. இதோ…. இப்போ கிளம்பிடுவேன்… வளர் கிட்டே நான் வந்து பாக்கறேன்னு சொல்லுங்க…” என்றாள்.
“ம்ம்… சரிம்மா…. இங்கே இருக்குற வரை தானே நினைச்ச நேரம் பார்த்துக்க முடியும்….. தாராபுரம் போயிட்டா எப்போதாவது தானே வருவீங்க….”
“நீங்க இங்கேயே இருங்க அத்தை… எதுக்கு தாராபுரம் போகணும்….”
“ம்ம்… என்ன இருந்தாலும் உன் மாமா வாழ்ந்த வீடில்லையா…. லோன்ல இருந்தாலும் அவர் நமக்குன்னு சேர்த்த ஒரே சொத்து…. என்னமோ கொஞ்ச நாளா அவர் நினைப்பாவே இருக்கு… அதான்… நம்ம வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்…. இப்போதான் வளர்க்கு செக் அப்பும் முடிஞ்சிருசுல்ல…. அந்த ஆண்டனித் தம்பியும் நமக்கு வேண்டி எவ்ளோ நாள் தான் வெளியவே தங்கியிருக்கும்… அதான்மா… அங்கே போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்….” என்றார்.
அவரது செண்டிமென்டலான பேச்சிற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தவள், “சரி… அத்தை…. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்… நான் சாயந்திரம் வீட்டுக்கு வரேன்….” என்றாள்.
“ம்ம்… சரிம்மா… அப்போ நான் போனை வச்சிடறேன்…” என்ற சபர்மதி அதை அணைத்துவிட்டார்.
அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, “என்னம்மா… சம்மந்திம்மாவை மரியாதை இல்லாம பியூட்டின்னு எல்லாம் கூப்பிடறே…. ரொம்ப சந்தோஷமா இருக்குற போல இருக்கு… என்ன விஷயம்…” என்றார் சிரித்துக் கொண்டே.
“அது இருக்கட்டும்… நீங்க எதோ விருந்தைப் பத்தி அத்தைகிட்டே சொல்லிட்டு இருந்தீங்களே… என்ன மம்மி….” என்றாள் அவர் தோளில் சாய்ந்து கொண்டே.
“சம்மந்திம்மா தாராபுரத்துக்கே போகறேன்னு சொன்னாங்க…. இத்தனை நாளா அவுங்களை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு விருந்து கூடக் கொடுக்கலை…. அப்புறம் நம்ம மாப்பிள்ளைக்கு இப்போ SI போஸ்டிங்கும் வந்திருக்கு…  அதான் அடுத்த வாரம் மாப்பிள்ளையோட பிறந்த நாள்க்கு நம்ம முக்கியமான உறவுக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு சின்னதா ஒரு விருந்து வைச்சுக்கலாம்னு சொன்னேன்…. சரிதானே…”
“ஒ… நம்ம ஆளோட பிறந்த நாள் வருதா…. அப்போ அந்த அன்னைக்கு நம்ம மனசைத் திறந்திட வேண்டியது தான்….” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், “ம்ம்… விருந்து கொடுத்து கலக்கிடலாம் மா…. உங்க மாப்பிள்ளை பிறந்த நாள்னா சும்மாவா…. அசத்திடுவோம்…. சரிம்மா… நான் கிளம்பறேன்…. எனக்கு ஆகாஷ் ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கு…” என்று புறப்பட்டாள்.
“வாங்க எஸ்ஐ சார்….” சட்டென்று விரைப்புக்குப் போய் சல்யூட் அடித்துவிட்டு கையைத் தாழ்த்திய ஏகாம்பரத்தை திகைப்புடன் பார்த்த வசீகரன், “என்ன சார் இது….” என்றான்.
“நீங்க ஹையர் ஆபீசர்… வரும்போது சல்யூட் அடிக்கறது தானே முறை…” என்று சிரித்த ஏகாம்பரம், “வசீகரன்…. இவ்ளோ சீக்கிரம் உனக்கு போஸ்டிங் வந்து நம்ம ஊருலயே சார்ஜ் எடுத்துகிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா… எல்லாம் அந்தக் கடவுளோட கருணை….” என்றார் நெஞ்சார்ந்த சந்தோஷத்துடன். 
“ம்ம்… நானுமே எதிர்பார்க்கலை சார்… இப்போதான் சர்வீஸ்க்கு வந்து ஆறு மாசம் ஆகுது… அதுக்குள்ளயே போஸ்டிங் கிடைச்சது சந்தோசம் தான்…. எல்லாம் அந்த சிவா கேஸ்ல இன்வால்வ் ஆனதால கிடைச்சது தான்…. சார்… SI ஆனதும் ஏதோ விஷயத்தை சொல்லறேன்னு சொல்லி இருந்தீங்களே…. அதைக் கேட்கனும்னு தான் வந்தேன்…” என்றவன், காலையில் ஹாஸினியின் அலைபேசிக்கு வந்த அழைப்பைப் பற்றிக் கூறினான்.
“ஓ…. போன்ல கூப்பிட்டு மிரட்டற அளவுக்கு வந்துட்டாங்களா… அப்படின்னா இந்த விஷயத்தில் நீ இறங்காம இருக்க மாட்டேன்னு அவுங்க எதிர்பார்க்கறாங்க…. அந்த சிவாவை மட்டும் பிடிச்சா போதாது வசீகரன்….” என்றவர், சுற்று முற்றும் பார்த்துவிட்டு, “நீ சந்தேகப்படற போல உன் அப்பா விபத்துல சாகலை…. அநியாயமா அவரை நாடகமாடி கொன்னுட்டாங்க…” என்றார்.
“என்ன சொல்லறீங்க சார்….” அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான் வசீகரன்.
“ம்ம்… ஆமாம் பா… ஒரு கான்ஸ்டபிளா உன்னால ஏதும் பண்ண முடியாதுன்னு தான் நான் சொல்லாம இருந்தேன்….”
“யார் சார்…. எதுக்கு என் அப்பாவைக் கொன்னாங்க…” கண்கள் சிவக்க கோபத்துடன் கேட்டவனின் தோளில் கைவைத்து சமாதானப் படுத்தியவர்,
“ம்ம்… சொல்லறேன்… வசீகரன்…. இந்த சிவா கேஸ் கோர்ட்டுக்கு வரதுக்கு முன்னாடி நீ சில வேலை எல்லாம் பண்ணனும்…..”
“என் அப்பாக்கு என்ன ஆச்சு சார்… அதை முதல்ல சொல்லுங்க….” என்றவனின் கண்கள் கலங்கியிருக்க அந்த நான் நினைவுகளை அவனிடம் சொல்லத் தொடங்கினார் ஏகாம்பரம். அதைக் கண்கள் சிவக்க நெற்றி நரம்புகள் துடிக்க கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டிருந்தவன், அவர் சொல்லி முடித்ததும் எழுந்தான்.
“அவனுங்களை நான் சும்மா விட மாட்டேன் சார்… என் அப்பாவோட சாவுக்குக் காரணமா இருந்தவுங்க பதில் சொல்லியே ஆகணும்…. நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க….” என்றான் கோபத்துடன்.
“ம்ம்… உன்னோட இந்த கோபம் நியாயமானது தான் வசீகரன்…. ஆனா நீ அவசரப் படாம நிதானமா இதை செய்யணும்….” என்றவர் அவனிடம் என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தார். அதைக் கேட்டுக் கொண்டவனின் விழிகள் தந்தையின் நினைவில் கலங்கின.
சுமையாக நினைக்காமல் 
சுகமாக நினைத்து என்னை
தோளிலும் நெஞ்சிலும் சுமந்தாயே….. 
தவழும் வயதிலே 
தரை மீது பூக்கள் விரித்து
எனைப் பூப் போலத் தாங்கினாயே…
அடியடியாய் நான் வளர
அணுஅணுவாய் நீ ரசித்து
தோள் தொட்ட தோழனாய் பாவித்தாயே….
உன்னிடம் கற்றது ஒன்றா ரெண்டா…
உறவுகளை அரவணைக்க…..  
உணர்வுகளை கட்டுப் படுத்த…
தவறுகளை திருத்திக் கொள்ள….
ஆசைகளை நிறைவேற்ற….
நெஞ்சங்களை நேசிக்க….
அடுக்குவேன்… அளவில்லாமல்….
உடலால் உலகை நீ பிரிந்தாலும்
உன் நினைவெனும் உணர்வால் எங்கள் 
உயிரில் என்றும் கலந்திருக்கிறாயே அப்பா….

Advertisement