Advertisement

அத்தியாயம் – 15
புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன்.
அவனுக்காய் கீழே காத்திருந்த ஹாஸினியின் முகம் அவன்மீது ஆர்வமாய்ப் படிந்து பிரகாசமானது. சாதாரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது கண்கள் அவனைப் பார்ப்பதில் காட்டிய ஆர்வத்தை வசீகரனின் கண்கள் கண்டு கொண்டன. புன்னகையுடன் அவளிடம் வந்தவன்,
“என்ன பேபி…. எல்லாம் சரியாருக்கு தானே….” என்றான் கிசுகிசுப்பாய். அதை அவனிடம் எதிர்பார்க்காதவள் சட்டென்று முகம் சிவந்தாள். அதை ரசித்துக் கொண்டே மாமியாரிடம் சென்றவன் அவரின் காலில் விழுந்து ஆசி வாங்கினான்.
“அத்தை…. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க…..”
“இன்னும் பல வெற்றிப் படிகள் ஏறி… தீர்க்காயுசோட சந்தோஷமா இருக்கணும் மாப்பிள்ளை…. அம்மாகிட்டயும் போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு புது ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணுங்க….”
“சரி அத்தை…. அடுத்து அம்மாகிட்டே ஆசி வாங்கிட்டு தான் சார்ஜ் எடுக்கப் போறேன்….”
“ம்ம்… சந்தோசம் மாப்பிள்ளை…. ஹாஸினி…. மாப்பிள்ளை இந்த டிரெஸ்ல சினிமா ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார் பார்த்தியா…. என் கண்ணே பட்டுடும் போலிருக்கு… சாயந்திரம் சுத்திப் போடணும்….” என்றதைக் கேட்டதும் ஹாஸினியின் முகம் மேலும் சிவந்து அவன் கண்களை சந்தித்து மீண்டது.
“அட… இவளுக்கு என்னாச்சு மாப்பிள்ள…. வாயைத் திறந்து பேச மாட்டேங்குறா…” என்று அவர் மகளை கேலி செய்ய வசீகரன் அவளையே குறும்புடன் நோக்கிக் கொண்டிருந்தவன் வாயைத் திறந்தான்.
“அத்தை…. அது வேற ஒண்ணும் இல்லை…. இதுக்குப் பேர் தான் அழகுல மயங்கிப் போறது போலிருக்கு… உங்க பொண்ணு… அய்யாவோட அழகுல மயங்கி சொக்கிப் போயி நிக்குறாங்க… அப்படிதானே பேபி….” என்று சிரிக்க அவள் காதில் புகை போகாத குறை தான்.
“ஹஹா…. அப்படி சொல்லுங்க மாப்பிள்ள….” என்று சந்தோஷமாய் சிரித்த ராஜேஸ்வரி, “சரி மாப்பிள்ள… உங்களுக்கு பதவி உயர்வு கிடைச்ச போல எனக்கும் சீக்கிரமா ஒரு பதவி உயர்வு கொடுத்தா நல்லாருக்கும்ல….” புரியாமல் நெற்றியை சுருக்கிய ஹாஸினி, “என்ன மம்மி சொல்லறீங்க…. உங்களுக்கு என்ன பதவி உயர்வு கொடுப்பாங்க….” என்றாள் கடுப்புடன்.
“என்னம்மா… இப்படி சொல்லிட்டே… நீங்க மனசு வச்சா… எனக்கும் பாட்டின்னு பெரிய பிரமோஷன் கிடைக்கும்ல….” என்று சிரித்தார். அதைக் கேட்டதும் ஹாஸினியின் முகம் மீண்டும் சிவக்க வசீகரனின் இதழ்களில் குறும்பாய் ஒரு புன்னகை ஓடியது.
“அதுக்கென்ன அத்தை…. சீக்கிரமே உங்களுக்கு பிரமோஷன் கொடுத்துடலாம்…” என்று அவன் சிரித்துக் கொண்டே கூற அடுத்த நிமிடம் ஹாஸினி அங்கிருந்து காணாமல் போயிருந்தாள்.
“அட…. என் பெண் சிங்கத்துக்கு வெக்கமெல்லாம் கூட வருது மாப்பிள்ள… பாருங்களேன்…. புள்ள தலைதெறிக்க ஓடிட்டா…” என்று கலகலத்தார் ராஜேஸ்வரி. அவர்கள் சிரிப்பதை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜு.
“என்ன ராஜூ… வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க… மாப்பிள்ளைக்கு சூடா தோசை ஊத்தி எடுத்துட்டு வாங்க….” என்றார்.
“ம்ம்… சரிம்மா…. நீங்க இப்படி கலகலன்னு சிரிக்குறதைப் பார்க்க மனசுக்கு நிறைவா இருக்கு…. அய்யா போனதுக்கு அப்புறம் இப்போதான் இந்த வீட்ல இப்படி சிரிப்பு சத்தம் கேட்குது….” என்றார் அந்த விசுவாசமான வேலைக்காரர். அதைக் கேட்டதும் அவரைப் புன்னகையுடன் நோக்கிய ராஜேஸ்வரி, “இந்த வீட்டுக்கு சந்தோஷத்தைத் திருப்பிக் கொண்டு வரத்தான் கடவுள் என் மருமகனை அனுப்பி இருக்காருன்னு நினைக்கறேன்….” என்று நெகிழ்ச்சியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
“என்ன அத்தை… இது… சந்தோஷமான நேரத்துல கண் கலங்கிட்டு….. இனி எப்பவும் நம்ம வீட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கத் தான் போகுது….” என்றான் வசீகரன்.
மேலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாஸினியின் மனமும் அவர்கள் பேச்சில் நெகிழ்ந்து போனது. அவளது அலைபேசி அறைக்குள் இருந்து ஒலிக்க உள்ளே சென்றவள் அதை யோசனையாய் எடுத்தாள். அதில் பிரைவேட் நம்பர் என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது. குழப்பத்துடன் அதை எடுத்து ஹலோவினாள். எதிர்ப்புறம் இருந்து கேட்ட கரகரப்பான ஆண் குரல் கூறிய செய்தி அவளுக்கு உவப்பானதாக இல்லை. அதிர்ச்சியுடன் அவள் கேட்டுக் கொண்டிருக்க விஷயத்தைக் கூறி முடித்து எதிர்ப்புறம் அமைதியாகிவிட்டது. அதற்குப் பிறகும் ஹாஸினி அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்க, அவளை சாப்பிட அழைக்க வந்தான் வசீகரன்.
“பேபி… பேபி…. என்ன இது…. ஏன் இப்படி உக்கார்ந்திருக்கே…. யார் கூப்பிட்டது… என்ன சொன்னாங்க… சொல்லு மா….” என்றான் மென்மையான குரலில்.
அவனைக் கண்டதும் அவளது விழிகள் கலங்கியிருக்க, “வசீ…. யா…. யாரோ ஒருத்தன் பிரைவேட் நம்பர்ல கூப்பிட்டு….” என்று சொல்லத் திணறியவள்,
“சொல்லு பேபி… கூப்பிட்டு என்ன சொன்னான்…..” என்று கேட்டுக் கொண்டே வசீகரன் அவளது கையைப் பிடித்து கட்டிலில் அமர்த்தினான். அவள் திணறிக் கொண்டே சொல்லி முடித்தாள்.
“உன் புருஷனை ஒழுங்கா புது ஸ்டேஷனுக்குப் போனோமா… வந்தோமான்னு இருக்க சொல்லு… எங்காவது பழைய கேசை எல்லாம் கிளற நினைச்சான்…. அவன் அப்பன் போன இடத்துக்கே மகனையும் அனுப்பி வச்சிருவோம்…. புருஷனும், பொண்டாட்டியும் பார்த்து நடந்துக்குங்க…. சொல்லிட்டேன்…. அப்படின்னு சொல்லிட்டு வச்சிட்டான்….. எ… எனக்கு… ரொம்ப பயமாருக்கு வசீ….” என்றாள்.
“என்னது…. அப்பன் போன இடத்துக்கா…. அப்படின்னா….” என்றவனின் உதடுகள் யோசனையுடன் துடிக்க கண்கள் கோபத்தைக் காட்டியது.
“வசீ…. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு….. இன்னைக்கு தான் நீங்க துடியலூர் ஸ்டேஷன்ல சார்ஜ் எடுத்துக்கப் போறீங்க…. அதுக்குள்ளே அவுங்களுக்கு விஷயம் தெரிஞ்சு போன் பண்ணறாங்கன்னா….. மாமாவை அவுங்க தான் விபத்து போல செய்து கொன்னிருப்பாங்களோ….. நம்பர் தெரியக் கூடாதுன்னு பிரைவேட் நம்பர்ல இருந்து பண்ணி இருக்காங்க….” என்று நிறுத்தியவள்,
“எ… எனக்கு ரொம்ப பயமா இருக்கு வசீ….” என்றாள் ஒருவித பதட்டத்துடன். தந்தையைப் பற்றிய தன் நினைவுகளை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தவன்,
“என்னது… உனக்கு பயமா…. சப் இன்ஸ்பெக்டர் ஹாஸினிக்கு பயமா…. என்ன சொல்லறே பேபி… எதுக்கு பயம்….” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.
“வந்து… அவுங்க உங்களை ஏதாவது பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்களே…. நீங்க கொஞ்சம் கவனமா இருங்க…. அம்மாக்கும் அத்தைக்கும் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க….” என்றாள்.
“ம்ம்… நீ வருத்தப்பட மாட்டியா பேபி…..” அவளது கண்களையே நோக்கிக் கொண்டு அவள் முகத்தின் அருகில் முகம் வைத்து அவன் கேட்க, அந்தக் கேள்வியில் நிறைந்து நின்ற ஏக்கத்தில், ஒளிந்து நின்ற உண்மையில்… அவள் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள்.
“என்ன அமைதியா இருக்கே…. அப்போ… எனக்கு ஏதாவது ஆனாலும் உனக்கு ஒரு வருத்தமும்… இல்லை…. அப்படித்தானே……” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னால் அவன் வாயை கையால் மூடியவள், கண்களில் இருந்து உருண்டு விழுந்த கண்ணீர் அவள் மனதை சொல்லாமல் சொல்லியது. அதைக் கண்டதும் மனம் நெகிழ்ந்தவன், எப்படியும் அவள் மனதை அவளுக்கு உணர்த்திவிட எண்ணினான்.
“நீ எதுக்கு இப்போ பதறிப் போய் என் வாயைப் பொத்தினே… சொல்லு பேபி….” அவள் எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்கவே, “எதைக் கேட்டாலும் இப்படி மௌனமாவே இருந்தா என்ன அர்த்தம்…. உனக்குள் நான் இல்லவே இல்லியா…. உன் மனசாட்சியைக் கேட்டு யோசித்து சொல்லு…. நான் வரேன்…..” என்று கிளம்பி விட்டான். செல்லுகின்ற அவனது முதுகையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஹாஸினி. அவன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலிக்க அவளது மனதை அவளே அலசத் தொடங்கினாள்.
அவனுக்கு என்ன ஆனால் என்னவென்று இருக்க அவளால் முடியவில்லை தான்…. அவனுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாதென்று அவள் மனது துடிப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது….
“அப்படியானால்…. நான் அவனை நேசிக்கிறேனா….. என் மனது அவனை ஏற்றுக் கொண்டு விட்டதா…. அவனது அருகாமையும், அன்பும் எப்போதும் எனக்கும் வேண்டும் என்று என் மனம் எதிர்பார்ப்பதன் காரணம் என்ன…”
“அவனும் என்னை நேசிப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறான்…. கல்யாணத்திற்கு முன்பு நான் சொன்னவை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லையா… என்னை உண்மையாக நேசித்து தான் ஏற்றுக் கொண்டானா….. அதனால் தான் நான் அப்படி சொன்னதற்கு கோபப் பட்டானா…. அவனுக்கு முதலிலேயே என்னைப் பிடித்திருக்கிறதா…..” ஏதேதோ யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவனைப் பற்றி நினைப்பதே சுகமாய் இருந்தது.
அவளது மனது வசீகரனை கல்யாணத்திற்கு முன்பு சந்தித்த நாளுக்கு சென்றது.
அன்னையின் பேச்சில் ஒரு முடிவுக்கு வந்த ஹாஸினி, அடுத்த நாள் காலையில் வசீகரனை சந்திக்க முடிவு செய்தாள்.
அவனது அலைபேசிக்கு, “உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்… காலை எட்டு மணிக்கு காந்தி பார்க் வரவும்…. அர்ஜன்ட்….” என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டு நிம்மதியுடன் படுத்தாள்.
அடுத்த சில நிமிடத்திலேயே “ஓகே…” என்று பதில் செய்தி வந்திருக்க அவளது முகம் ஒரு வெற்றிப் புன்னகையை சிந்தியது. 
அவளது குறுஞ்செய்தியைக் கண்டு வியந்த வசீகரன், மீண்டும் மீண்டும் அதைப் படித்துப் பார்த்தான். அவனது இதழ்கள் புன்னகையை சொந்தமாக்க மனம் உற்சாகத்தில் குதித்தது.
“அவள் எதற்கு என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறாள்… ஒரு வேளை அவளும் என்னைக் காதலிக்கிறாளோ…. அதை நேரில் என்னிடம் சொல்லத்தான் அழைத்திருப்பாளோ…..” எனப் பல நினைவுகளில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த வசீகரனின் மனதை அவள் அறிந்திருக்கவில்லை.
அடுத்த நாள் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து ஹாஸினியை காணும் ஆர்வத்துடன் குளித்து புறப்பட்டு அவள் சொன்ன பார்க்கிற்கு நேரமே வந்து விட்டான் வசீகரன். மனம் நிறைந்த காதலுடன் கண்கள் அவள் தரிசனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவன் அவளது வரவிற்காகக் காத்திருக்கத் தொடங்கினான். பைக்கை நிறுத்திவிட்டு ஜீன்ஸ் டீஷர்ட்டில் கூலாய் உள்ளே நுழைந்தவள், டிப்டாப்பாய் உடையணிந்து முன்னமே வந்து அவளுக்காய் காத்திருக்கும் வசீகரனைக் கண்டதும் ஒரு கேலிப் புன்னகையை தன் உதட்டில் நெளிய விட்டாள்.
“இவன் எதற்கு, என்னவோ பொண்ணு பார்க்கப் போகிறவன் போல டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கான்….. சரியான லூசு… ம்ம்… என்னமோ பண்ணட்டும்… நமக்கு காரியம் ஆனால் சரி…. என்று நினைத்தவள் சிறு புன்னகையுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள். தேவியின் தரிசனம் கிடைத்த பக்தனைப் போல் அவள் வருவதைப் பரவசத்துடன் நோக்கி நின்றான் வசீகரன்.
“வாங்க….” என்றவன், “மேடம் சொல்வதா…. வேண்டாமா….” என்ற போராட்டத்தில்  உள்ளுக்குள்ளேயே முழுங்கினான்.
“ம்ம்… ரொம்ப நேரமா வெயிட் பண்ணறீங்களா வசீகரன்…” குழைவில்லாமல் தெளிவாய் வந்தது அவளது குரல்.
“இல்ல….. கொஞ்ச நேரம் தான்….” என்றவனுக்கு ஏனோ தொண்டை வறண்டு வார்த்தைப் பஞ்சமாகவே இருந்தது.
“வாங்க…. வசீகரன்…. அப்படி ஓரமா உக்கார்ந்து பேசலாம்…” என்றவள் ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு கல் மேடையில் சாய்ந்து அமர்ந்தாள். அவளுக்கு அருகில் தயக்கத்துடன் அமர்ந்த வசீகரனை சிறு வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
“என்ன வசீகரன்…. கொஞ்சம் படபடப்பா இருக்குற போல இருக்கு…. ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”
“அ….. அதெல்லாம் இல்லை…. நீங்க சொல்லுங்க….” என்றவனின் வார்த்தைகளில் காணாமல் போயிருந்த மேடம் அவளுக்குப் புரிந்தது.
“நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வர சொன்னேன்…. உங்க தங்கைக்கு ஆப்பரேஷன் விஷயமா நீங்க பணத்துக்கு அலைஞ்சிட்டு இருக்கீங்கன்னு தெரியும்….”
“ம்ம்… ஆமாம்…. நானும் நிறைய இடத்தில் அலைஞ்சிட்டு இருக்கேன்… ஒண்ணும் சரியாகலை….” என்றவனின் முகம் தங்கையின் நிலை நினைவுக்கு வந்ததும் வேதனையில் சோர்ந்து போனது.
“ம்ம்… அந்த ஆப்பரேஷனுக்கு வேண்டிய எல்லா உதவியையும் நான் பண்ணறேன்…..” என்று அவள் கூறியதும் ஒரு நிமிடம் மனம் மகிழ்ந்தவன்,
“நிஜமாவா சொல்லறீங்க…. ரொம்ப சந்தோசம்…” என்றான் உற்சாகத்துடன்.
“ம்ம்… நிஜமாதான் சொல்லறேன்…. அதுக்கு நீங்க எனக்கு ஒரு பதிலுதவி பண்ணனுமே….” என்றாள்.
அவள் காதலை சொல்லப் போவதாய் நினைத்து காத்திருந்தவன், அவளது பேச்சு புரியாமல் குழப்பத்துடன் நோக்கினான்.
“என்ன உதவி பண்ணனும்….”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்…..”
அதைக் கேட்டதும் சந்தோஷ சாரல் அவன் மனதுக்குள் அடிக்க, “ஆஹா…. கரும்பு தின்னக் கூலியா…. இப்போவே வேணும்னாலும் நான் ரெடி தானே…. ஆனா எதுக்கு இப்படி கேக்குறா…” என்று சிறு குழப்பம் தோன்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசினான்.
“என்னது கல்யாணம் பண்ணணுமா….” என்று புரியாதவன் போல அவன் கேட்க,
“ம்ம்… என் அம்மா கொஞ்ச நாளா என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்திட்டே இருக்காங்க…. நான் முடியாதுன்னு சொன்னா எங்க சொந்தத்துல ஒரு பட்டிக்காடு மாக்கானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும் முடிவு பண்ணிட்டாங்க…. அவுங்களுக்கு ஹெல்த் கொஞ்சம் பிராப்ளமா வேற இருக்கு….” என்று நிறுத்தியவள்,
“இதெல்லாம் எதுக்கு உங்ககிட்டே சொல்லறேன்னு நினைக்கறீங்களா…. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்…. எனக்கு இந்த காதல்…. கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு….. ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டி தாலி வாங்கிட்டு ஆயுள் முழுக்க அடிமையா இருக்கறது எல்லாம் எனக்கு சரியா வராது…. என் வாழ்க்கையை சுதந்திரமா…. என் ஆசைப்படி நான் வாழணும்னு நினைக்கறேன்….” அவள் சொன்னதைக் கேட்டு மனசுக்குள் ஏமாற்றம் நிறைவதை அவனால் தடுக்க முடியவில்லை… ஒரு இயலாமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் வசீகரன்.
“நான் கல்யாணத்துக்கு முடியாதுன்னு சொன்னா… அம்மா, உடம்புக்கு மாத்திரை எடுத்துக்க மாட்டேன்னு பிளேக்மெயில் பண்ணறாங்க….. அதான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்….” என்றவள் நிறுத்திவிட்டு அவனை நோக்க அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு, தங்கை ஆப்பரேஷனுக்குப் பணம் வேணும்…. எனக்கு என் அம்மா முன்னாடி காட்ட ஒரு மாப்பிள்ளை வேணும்…. நம்ம ஏன் ஒரு மியூச்சுவல் அக்ரிமெண்ட் போட்டுக்கக் கூடாது….” நிறுத்திவிட்டுக் கேட்டவளைக் கொன்று போடும் வெறியுடன் நோக்கிக் கொண்டிருந்தான் வசீகரன்.
அவனது கண்கள் கக்கும் அனலைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்துப் போனவள், “இருங்க… வசீகரன்… நான் சொல்லிடறேன்… நீங்க கோபப் படாதீங்க….” என்றாள். அவன் மௌனமாய் எங்கேயோ பார்த்துக் கொண்டு நிற்க அவள் தொடர்ந்தாள்.

Advertisement