Advertisement

“வசீ…. எழுந்திருங்க…. வசீ….” அவள் கத்த அந்த மிருகம் சிரித்தது.
“எவண்டி அவன் வசீ…. புசின்னு… எவனும்… இனி வர மாட்டான்…. டேய்… இவனுங்களை எல்லாம் எடுத்து ஓரமா போடுங்கடா… நான் பாப்பா கூட கொஞ்சம் விளையாடிட்டு வரேன்…. ரொம்ப நாளா பொண்ணு வாடையே இல்லாம காட்டுக்குள்ள சுத்திட்டு இருந்து உடம்பெல்லாம் நமநமங்குது…” என்றவன்,
“சரி…. வாடி செல்லம்…. இங்கிருந்தா நீ கூச்சப் படறே… நாம ரூமுக்குள்ள போயி விளையாடுவோம்….” என்று அவளது கையைப் பிடித்து இழுத்து உள்ளே செல்லப் போனான்.
“என்னை விடுடா…. ப்ளீஸ்…. என்ன ஒண்ணும் பண்ணிடாதே… விடு….” என்று கரகரவென்று கண்ணில் நீர் வழிய அவள் கத்திக் கொண்டே இருக்க அவன் காவிப் பல்லைக் காட்டி இளித்துக் கொண்டே நகர்ந்தான்.
கீழே படிக்கட்டின் அருகே கிடந்த வசீகரனின் அருகில் அவன் வந்ததும் “ஆ…” என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான் அவன். அவனது காலில் இருந்து ரத்தம் வழிய ஹாஸினி ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நொடியில் அங்கிருந்த சூழ்நிலையே மாறி இருந்தது.
வசீகரனின் கைக்குக் கிடைத்த இரும்புக் கம்பி ஒன்று தாடிக்காரனின் காலைக் கிழித்திருக்க அவன் கையில் இருந்த துப்பாக்கி வசீகரனின் கைக்கு வந்திருந்தது. மெல்ல எழுந்தவன் கீழே கிடந்த தாடிக்காரனின் தலையில் குறி வைத்தான்.
“என்னடா சொன்னே…. அவளைக் காப்பாத்த யாரும் வரமாட்டாங்களா…. நான் வருவேண்டா…. அவ புருஷன் நான் வருவேன்…. அவ என்னோட சொத்து…. கண்டவனும் வச்சு விளையாடறதுக்கு அவ ஒண்ணும் பொம்மை இல்லை… என் பொண்டாட்டி….” என்றவன் அவளைத் தன் கை வளைவில் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“பேபி…. ஆர் யூ ஓகே… பயப்படாதே…. நானிருக்கேன்….”
ஒரு நிமிடம் என்ன நடந்ததென்று புரியாமல் அவள் திகைத்து அவனையே நோக்கிக் கொண்டிருக்க,
“ம்ம்… டேக் இட்… பேபி….” என்று அவள் துப்பாக்கியைக் கொடுத்தான்.
பெண்ணுக்கே உரிய பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த ஹாஸினி துப்பாக்கியை ரவுடிகளை நோக்கிப் பிடித்திருந்தாலும் வசீகரனின் வார்த்தைகளில் பிரம்மித்து அவனையே கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சங்கர்…. கணேஷ்…. சீக்கிரம்… அந்தக் கயிரை எடுத்து இவங்க கையைக் கட்டுங்க….” என்று வசீகரன் கூறியதும் அவர்கள் சுறுசுறுப்பாய் அதை செய்து முடிக்க அனைவரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு சங்கரும் கணேஷும் ஜீப்பில் ஏறிக் கொள்ள வண்டி வேகமாய்ப் பறந்தது.
வசீகரனின் கைப்பிடிக்குள்ளேயே இப்போதும் இருந்தாள் ஹாஸினி.
“பேபி…. போலாமா….” என்றவன் வண்டியை உயிர்ப்பிக்க அதில் ஏறி அமர்ந்தவள் அவன் தோளோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
அவளது கைகள் இப்போதும் நடுங்குவதை உணர்ந்த வசீகரன், “பேபி மா… இன்னும் உன் டென்ஷன் போகலயா…. வேணும்னா என் இடுப்புல கைகோர்த்து முதுகுல சேர்ந்து உக்கார்ந்துக்கோ….. உன் பயம் போயிடும்….” என்றான்.
அவன் சொல்லுவதன் காரணம் மெல்லத் தலைக்கேற அவன் சொன்னதும் உடனே இடுப்போடு சேர்ந்து அமர்ந்திருந்தவள் அவன் முதுகில் செல்லமாய் குத்தினாள். ஆனாலும் அந்தக் குத்தலில் காதலே நிறைந்திருப்பதாய் வசீகரனுக்குத் தோன்றியது.
அவனுக்கு ஒன்று என்றதும் அவள் துடித்ததும்… அவளுக்கு ஒன்று என்றதும் அவனை அழைத்ததும்… எல்லாம் அவள் காதலையே வெளிப்படுத்தியது.
அவன் தலையில் மெல்ல அவள் அடிக்க அவன் “ஆ…..” என்று வேதனையில் முகத்தை சுளித்தான்.
“சா… சாரி… வசீ…. தலை ரொம்ப வலிக்குதா… ஏதாவது ஹாஸ்பிடல்ல நிறுத்துங்க… காயத்துக்கு மருந்து போட்டுட்டுப் போயிடலாம்….” என்றாள் அவள் பதறிக் கொண்டே.
அவளது பதட்டமும் அக்கறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“பேபி…. தலை வலிச்சதுதான்…. ஆனா….. நீ இப்படி என்னோட ஓட்டிக்கிட்டு உக்காரும்போது எந்த வலியும் எனக்குத் தெரியலை…. ரொம்ப சுகமாருக்கு….” என்றான் குறும்புச் சிரிப்புடன்.
“உங்களுக்கு ரொம்ப தான் கொழுப்பு வசீ…….” என்று செல்லமாய் சிணுங்கியவள் அவனை விட்டு விலகாமலே அமர்ந்திருந்தாள். அவளது மனதின் வெளிப்பாடு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க அந்த நிமிடங்கள் மிகவும் அழகாய் அவன் மனதில் பதிந்தது.
வழியில் ஒரு ஹாஸ்பிடலில் வண்டியை நிறுத்தியவர்கள் வசீகரனின் காயத்துக்கு தலையில் மருந்துவைத்து கட்டுப் போட்டு ஹாஸினிக்கும் காயத்துக்கு மருந்திட்டுக் கொண்டு கிளம்பினர். வழியில் ஒரு பழமுதிர் நிலையம்  முன்பு வண்டியின் வேகத்தைக் குறைத்தான் வசீகரன்.
“பேபி…. ஜூஸ் ஏதாவது குடிக்கறியா…”
“ம்ம்…” என்று தலையாட்டியவள் இறங்கினாள். அவளுக்கு இப்போது அவனது பேபி என்ற அழைப்பு பழகி இருந்ததால் அது வித்தியாசமாய்த் தெரியவில்லை.
அவள் எதோ யோசித்துக் கொண்டே அமர்ந்திருப்பதைப் பார்த்த வசீகரன், “என்ன பேபி மா…. என்ன யோசிக்கறே….” என்றான்.
“அது… வந்து…” என்று சற்று தயங்கியவள், “நீங்க எப்படி கரெக்டா அந்த நேரத்துக்கு அங்கே வந்தீங்க…. அதும் மிளகாத் தூள் எல்லாம் எடுத்துகிட்டு…. தனியா வந்து ஏதாவது ஆகி இருந்தா… ரொம்ப தான் குருட்டு தைரியம் உங்களுக்கு…” என்றாள்.
“பேபி…. உண்மைய சொல்லணுமா…. பொய்ய சொல்லணுமா….” என்றான் அவள் கண்களையே பார்த்துக் கொண்டு. அவன் கண்களின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பார்வையை மாற்றிக் கொண்டவள், “உண்மையவே சொல்லுங்க….” என்றாள்.
“விஷயத்தைக் கேள்விப் பட்டதும் அந்த ரவுடிங்களால உனக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னு என் மனசுக்குள்ளே ஒரு பயம் வந்திருச்சு…. என்னால சும்மா இருக்க முடியல…. நீ என்னை எப்படி நினைச்சாலும், நான் உன்னை என்னோட உயிரா தான் நினைக்கறேன்… அதான் தனியாவே கிளம்பி வந்துட்டேன்….” என்று தன் மனதில் உள்ளதை நேரம் பார்த்து அவள் மனதில் பதித்தான்.
அதைக் கேட்டதும் அவள் முகம் நெகிழ்ந்திருப்பதைக் கண்டவன், “என்கிட்டே அவுங்களை சமாளிக்க எந்த ஆயுதமும் இல்லை… வர்ற வழியில் எதுக்கும் இருக்கட்டும்னு மிளகாய்த் தூள் வாங்கி வச்சுகிட்டேன்…. வல்லவனுக்கு புல் மட்டும் இல்ல…. தூள் கூட ஒரு ஆயுதம் தானே…. இத்தனை பேரை தனியா சமாளிக்க நான் என்ன சினிமா ஹீரோவா…. அதான்…” என்று சிரித்தான்.
“ம்ம்… உங்களுக்கு அடிதடி, சண்டைனாலே பயமாச்சே…. இன்னைக்கு என்ன… தைரியமா சண்டை போடறீங்க…..” அவள் தெரியாத போல கேள்வி கேட்டாள்.
“நம்ம ஆளுங்களுக்கு ஒரு ஆபத்துன்னா யாரோ போலப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா… பேபி மா…. தைரியம் இருந்தாலும் இல்லேன்னாலும் வேடிக்கை பார்த்திட்டு இருக்க முடியாதுல்ல… சரி… ஜூஸ் குடி…. கிளம்பலாம்….” என்று அவன் ஜூசைக் குடிக்கத் தொடங்கினான்.
“சரி… கடைசியா ஒரு கேள்வி…. நாம இப்போ பிடிச்சு கொடுத்தோமே ரவுடி…. அவன் யாருன்னு தெரியுமா…..”
“யாரு…. அந்த தீவிரவாதி சிவா ஆளுதானே….”
“சிவா ஆள் இல்லை…. தீவிரவாதி சிவாவே அவன் தான்…..” என்றவள் ஜூஸைக் குடிக்க அவனுக்கு லேசாய் உதறியது.
“என்னது சிவாவா…. அதான் அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சா….. நம்ம ஸ்டேஷன் ரெகார்டுல தாடி மீசை எல்லாம் இல்லாம இருந்தான்….. நான் அவனை இதுவரை பார்த்ததில்லை…. அதான் தெரியலை….”
“ம்ம்…. அவன் பிடிபட நீங்க காரணமா இருந்திருக்கீங்க… இனி அவன் ஆளுங்க சும்மா இருக்க மாட்டாங்க… எதுக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க….” என்றாள் அவள்.
“என்ன பேபி… பீதியைக் கிளப்புறே…. சரி…. காக்கியைப் போட்டாச்சு… இனி எது வந்தாலும் பார்த்துக்கலாம்…. நானும் துணிஞ்சு தான் இருக்கேன்….” என்றான் அவன்.
“ம்ம்… கிளம்பலாமா….” என்று அலைபேசியை பாக்கெட்டில் இருந்து எடுத்தவள் அதில் இருந்த தவறிய அழைப்புகளைக் கண்டு வியந்தாள். அத்தனை அழைப்புகள் இருந்தன.
“ம்ம்… பேபி… வளர் உன்கிட்டே சொல்ல சொன்னா…. அவளுக்கு இனி செக்கப் தேவையில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்….”
“ஓ… ரொம்ப சந்தோசம்…. நான் அவகிட்டே அப்புறம் கால் பண்ணி பேசிக்கறேன்….”
“அப்புறம்… இன்னொரு விஷயம்…. எஸ்ஐ டெஸ்ட்ல எனக்கு செலக்சன் கிடைச்சிருக்கு…. என் வாழ்க்கைல நடக்குற ரொம்ப சந்தோஷமான விஷயம்…. பட்… உனக்கு எப்படின்னு தெரியலை…” என்றதும் அவள் முகம் வாடியது.
“சாரி…. நான் கேக்கணும்னு நினைச்சேன்… அந்த ரகளைல மறந்துட்டேன்…. வாழ்த்துக்கள் வசீ…..” என்று அவள் கையை நீட்ட, அதைப் பற்றிக் குலுக்கியவன் அவளது கையின் மென்மையில் விடாமலே பற்றிக் கொண்டிருந்தான்.
“போகலாமா…” அவள் கேட்டதும், கையைப் பற்றிக் கொண்டே வண்டியை நோக்கி நடந்தான். அதை உணர்ந்தாலும் ஏனோ ஹாஸினிக்கு அவனிடம் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது செவிக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. வண்டியை ஸ்டேஷனை நோக்கி விட்டான் வசீகரன்.
“அச்சோ… என்னாச்சு மாப்பிள்ளை…. தலையில் கட்டோட வர்றீங்க… உனக்கு என்னாச்சு ஹாஸினி….” என்று மகள், மருமகனைக் கண்டு பதறினார் ராஜேஸ்வரி.
நடந்ததை அவரிடம் கூறினான் வசீகரன்.
““என்ன மாப்பிளை… எதோ சினிமா மாதிரி சொல்லறீங்க… உங்களுக்கு ஏதாவது ஆயிருந்துச்சுன்னா என்ன பண்ணுறது…. தனியா எதுக்குப் போனீங்க… காயம் ரொம்ப அதிகமா….” அங்கலாய்த்தார்.
“இல்லை அத்தை… சின்னக் காயம் தான்… பொண்டாட்டிக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்சுட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும் அத்தை….” அவன் சொன்னதைக் கேட்டதும் ஹாஸினியின் மனம் நெகிழ அடுத்து அன்னை சொன்னதைக் கேட்டு கோபம் வந்தது.
“ம்ம்… இதுக்கு தான் இந்த மாதிரி ஆபத்தான வேலையெல்லாம் வேண்டாம்னு முதல்லையே சொன்னேன்…. என்னவோ இந்த உலகத்தையே இவ தான் சட்டத்தை வச்சு சரி பண்ணப் போற மாதிரி இந்த வேலைக்கே போகணும்னு அடம் பிடிச்சா…. பாருங்க… இப்போ அவளைக் காப்பாத்தப் போயி உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா…. பேசாம நீங்க இந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு நம்ம பிசினசைப் பார்த்துக்கோங்க மாப்பிள்ளை…. அதான் நல்லது…” என்றார்.
“மம்மி… என்ன சொல்லறீங்க…. எனக்கு ஒரு கஷ்டம்… ஆபத்துன்னு தெரிஞ்சாலும் அவர் வரக் கூடாதா…. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா அந்த ரவுடியால என் மானமே போயிருக்கும்…. அதை விட அவர் தலையில் பட்ட இந்த சின்ன காயம் தான் உங்களுக்குப் பெரிசா போயிருச்சா…. இதை வச்சு பிசினசை எங்க தலையில கட்டப் பாக்குறீங்க…. அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்…. அவர் காயத்தை மருந்து போட்டு நான் மாத்திக்கறேன்… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்….”
மகளின் பேச்சைக் கேட்ட ராஜேஸ்வரி திகைத்து நிற்க, வசீகரனின் மனது ஹாஸினியின் உரிமையான பேச்சில் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது.
“ஹாஸினி… உனக்கு ஏதாவது ஆச்சுன்னா மட்டும் இல்லை…. என் மாப்பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னாலும் என்னால தாங்க முடியாது…. அதான் அப்படி சொன்னேன்…. கவனமா இருந்துக்கோங்க…. மாப்பிள்ளை… நீங்க போயி ரெஸ்ட் எடுங்க….” என்றார்.
“ம்ம்… சரி அத்தை…. நீங்க பயப்படாதீங்க…. எங்களுக்கு ஒண்ணும் ஆகாது…” என்றவன் எழுந்து மாடிக்கு சென்றான்.
அவன் சென்றதும் ஹாஸினியிடம் வந்த ராஜேஸ்வரி, “நீயும், மாப்பிள்ளையும் எனக்கு வேற வேற இல்லைம்மா… அந்த அக்கறைல தான் அப்படி சொல்லிட்டேன்… சரி… அவருக்கு உடம்புல காயம் இருக்கான்னு பார்த்து வெந்நீர் ஒத்தடம் கொடு….” என்றுவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார். ஹாஸினிக்கு வசீகரன் மீது அன்னை வைத்திருக்கும் அன்பு புரிய மௌனமாய் சென்றாள்.
அறைக்குள் வந்த வசீகரன், அத்தனை நேரம் அவர்களின் முன்பு உடம்பு வலியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். உடையைக் கழற்றவும் உடம்பில் அங்கங்கே ரத்தம் கண்ணிப் போயிருந்தது. காலை மடக்க முடியாமல் பயங்கரமாய் வலித்தது.
வெந்நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு கட்டிலில் வந்து படுத்தான். முதுகு குத்திக் குத்தி வலிக்கவே கமழ்ந்து கிடந்தான். வலியில் அனத்திக் கொண்டு கிடந்தவன் அவனது முதுகில் படிந்த பூப்போன்ற கரத்தின் ஸ்பரிசத்தில் சட்டென்று திரும்பினான்.
“ரொம்ப வலிக்குதா வசீ…. நான் வேணும்னா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவா….”
“ஆமாம் பேபி… படுக்கவே முடியலை… காலும், முதுகும் ரொம்ப வலிக்குது…. உனக்கும் வலிக்குதா…” அவனது அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.
“என் கையை மட்டும் தான் அவன் முறுக்கினான்…. கன்னத்தில் தான் கொஞ்சம் வலிக்குது….. நீங்க படுங்க…. நான் வெந்நீர் எடுத்திட்டு வரேன்…” என்றவள் சிறிது நேரத்தில் ஆவி பறக்கும் வெந்நீருடன் திரும்பி வந்தாள்.
அவன் டீ-ஷர்ட்டுடன் இருக்கவே தயக்கத்துடன் வந்தவள் அவனிடம், “டி-ஷர்ட்டைக் கழற்றுங்க….” என்றாள். “அ… அது வந்து…. எப்படி பேபி…” என்று அவன் கூச்சத்துடன் தயங்க, “ஆபத்துக்குப் பாவம் இல்லை வசீ… பனியனைக் கழற்றுங்க….” என்றாள். அவன் டீஷர்ட்டைக் கழற்றிவிட்டு கூச்சத்துடன் கட்டிலில் அமர, இதுவரை அவனை அந்தக் கோலத்தில் காணாதவள் மனது ஏதேதோ உணர்ச்சிக் கலவையில் துடித்தது.
அவனது பரந்த மார்பில் தலை சாய்த்துக் கொள்ளத் துடித்த மனதை அடக்கி அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
“கவிழ்ந்து படுங்க வசீ….” என்றவள், அவன் படுத்ததும் துணியை வெந்நீரில் முக்கிப் பிழிந்து சூடாய் ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினாள்.
அவளது முக மாற்றத்தைக் கவனித்த வசீகரனின் இதழில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. சூடான வெந்நீர் ஒத்தடத்தில் முதலில் வலியில் புலம்பியவன், போகப்போக சுகமாய் கண்களை மூடிக் கொண்டான்.
சூரியன் மறைந்து சந்திரன் உதித்தாலும் 
எங்கும் எப்போதும் எல்லாமாய்
நிறைந்திருக்கும் காற்றாய்
என் மனத்துள் நிறைந்திருக்கிறாய் நீ…
சில நேரம் தென்றலாய்…..
சில நேரம் புயலாய் …..
சில நேரம் சூறாவளியாய்…. 
எத்தனை முகங்கள் உனக்கு…..
காதலும் காற்றைப் போலத்தான்…
கண்ணுக்குத் தெரியாது…. ஆனாலும்
கண்டு கொண்டேன்…. உன் 
கண்கள் சொல்லிய காதலை….
உன் விழிகளில் வழிந்த காதலின்
துளிகள் போதாதா… பெண்ணே…
உன் இதயம் உந்தன் 
காதலை உணர்ந்து கொள்ள….
கண்கள் வழியே காதல் சொன்னவளே…
என் கண்கள் சொல்லவில்லையா….
உனக்குள் ஒளி வெள்ளமாய்
என் காதல் ஒளிர்ந்து கொண்டிருப்பதை….

Advertisement