Advertisement

அத்தியாயம் – 14
“வசீகரன்… வந்துட்டியா…. என்ன ஆச்சுப்பா… டெஸ்ட் எல்லாம் முடிஞ்சுதா….” அப்போது தான் உள்ளே நுழைந்த வசீகரனைக் கண்டு  அருகில் வந்த ஏகாம்பரத்தை புன்னகையுடன் நோக்கினான் அவன்.
“என்னப்பா… ஒண்ணும் சொல்லாம சிரிக்குறே… நம்ம சுப்பு தானே செலக்ஷன் குரூப்ல இருந்தாரு…. ஏதும் பிரச்சனை இல்லையே” ஆர்வமாய் கேட்டவரின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன், “இப்படி நில்லுங்க சார்….” என்று நிறுத்திவிட்டு அவரது காலில் விழுந்தான்.
“என்னப்பா இது…. எழுந்திரு….” என்று பதறினார் அவர்.
“நான் எஸ்ஐ டெஸ்ட்ல பாசாகணும்னு என்னைவிட அதிகமா நீங்க தான் ஆசைப்பட்டீங்க…. உங்க ஆசையை நான் நிறைவேத்திட்டேன் சார்….. என் அப்பா ஸ்தானத்துல இருந்து என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க….” என்றவனை வாரி அணைத்துக் கொண்டார் ஏகாம்பரம்.
“வசீகரன்… ரொம்ப சந்தோசம் பா… என் வார்த்தையை மதிச்சு… அதுக்கு வேண்டி மெனக்கெட்டு நீ சாதிச்சு காட்டிட்டே… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு….”
“நம்ம ஏட்டு அரவிந்தன் சார் பையன் எஸ்ஐ ஆகிட்டான்…. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… இதோட உன் வளர்ச்சி நிக்கக் கூடாதுப்பா…. நீ மேல மேல வளர்ந்து பெரிய நிலைக்கு வரணும்….” வாழ்த்தினார் அவர்.
“ம்ம்… உங்க வாக்கு பலிக்கட்டும் சார்…. நான் கண்டிப்பா அதுக்கான முயற்சியை எடுப்பேன்…. ஹாஸினி இல்லியா சார்….”
“மேடம் இன்னும் வரலையேப்பா…. நான் கூப்பிட்டுப் பார்த்தேன்…. எடுக்கலையே…. சரி… நீ டெஸ்ட்ல பாஸ் ஆகி செலக்ஷன் ஆன விஷயத்தை அம்மாகிட்டே சொல்லிட்டியா…”
“இன்னும் இல்ல சார்… முதல்ல உங்ககிட்டே சொல்லிட்டு தான் அம்மா, ஹாஸினி கிட்டே கூட சொல்லனும்னு நினைச்சேன்….”
அவனது பதிலில் மனம் நெகிழ்ந்தவர், “உன் மனசுக்கு நீ ரொம்ப நல்லா வருவேப்பா…. சரி… கூப்பிட்டு அம்மாகிட்டே சொல்லு…” என்றார் சந்தோஷத்துடன்.
“ஓகே சார்…” என்றவன் அன்னையின் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே வெளியே நடந்தான்.
“ஹலோ… சொல்லுடா கண்ணா…. டெஸ்ட்ல எல்லாம் ஜெயிச்சுட்டியா….” எடுத்ததும் அன்னை கேட்ட கேள்வியில் திகைத்துப் போனான் அவன்.
“எப்படிம்மா…. நான் சொல்லுறதுக்கு முன்னாடியே ஜெயிச்சுட்டேன்னு சொல்லுறீங்க….”
“ம்ம்ம்… என் பையனைப் பத்தி எனக்குத் தெரியாதா…. எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அதுக்காக சரியா தயார் ஆகிட்டு தானே செய்வே…. அப்புறம் எப்படி ஜெயிக்காம இருப்பே…. சரி…. எப்போ உனக்கு போஸ்டிங் வரும்…. மருமககிட்டே சொல்லிட்டியா….” என்று சந்தோசத்துடன் அவர் கேட்டார்.
“அம்மா…. போஸ்டிங் எப்போ வேணும்னாலும் வரும் மா…. அதுவரை இப்போ இருக்குற ஸ்டேஷன்லயே இருக்கலாம்…. அதுக்கப்புறம் வேற எங்காவது  எஸ்ஐயா போஸ்டிங் போடுவாங்க…..”
“ஓ… அப்படியா…. சந்தோசம் பா… கண்ணா… வளர் பேசறாளாம்… கொடுக்கறேன்…”
“ம்ம்… குடுங்கம்மா…” என்றான் மகன்.
“ஹலோ.. டுபுக்கு போலீசு… இந்த ஓடுறது… தாண்டுறது.. ஏறுறது.. குதிக்குறது ன்னு.. குரங்கு வேலை எல்லாம் பண்ணி எஸ்ஐஆ செலக்ட் ஆகிட்டிங்களா….”
“அடிப்பாவி…. உன்னை…. இதெல்லாம் உனக்கு குரங்கு வேலையா தெரியுதா….”
“ஆமாம்…. இதெல்லாம் குரங்கு செய்யுற வேலை தானே… இதுக்குப் போயி நீங்க செலெக்ட் ஆகி இருக்கீங்க…. சரி… போகட்டும்…. ஒழுங்கு மரியாதையா எனக்கு ட்ரீட் கொடுக்க வந்திருங்க போலீஸ்காரரே….” என்றாள் வளர்மதி.
“ம்ம்… இவ்ளோ நாள் தான் நான் போலீசு… இனி என்னை எஸ்ஐனு சார்னு சொல்லும்மா…. அப்பத்தான் அய்யா ட்ரீட் குடுப்பேன்….” என்று அவன் வம்பு வளர்க்க,
“சரி… எஸ் ஐ சார்…. சீக்கிரமே ட்ரீட் குடுங்க….” என்றாள் வளர்மதி.
“ம்ம்…. சரிம்மா… உனக்கு குடுக்காமளா… வளர்…. காலைல ஹாஸ்பிடல் போனியே… டாக்டர் என்ன சொன்னாங்க…..”
“அண்ணா…. இனிமே என்னை செக்கப்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்களே…. காயமெல்லாம் சரியாகிடுச்சு…. ஸ்கேனிங்லயும் எந்தப் பிரச்சனையும் இல்லை… இனி நீ இஷ்டம் போல சந்தோஷமா இருக்கலாம்னு சொல்லிட்டாங்கண்ணா….”
“ஹப்பா…. இது தான் மா எனக்கு ரொம்பப் பெரிய சந்தோசம்…. இதுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுத்துடலாம்….” என்று சிரித்தான் வசீகரன்.
“அண்ணா… நீ எஸ்ஐ டெஸ்ட்கு போயிருந்ததால அண்ணி கிட்டே சொல்லலாம்னு அவுங்க நம்பருக்கு ஹாஸ்பிடல்ல இருந்து டிரை பண்ணேன்…. ஆனா அண்ணி போனை எடுக்கவே இல்லை…. பக்கத்துல இருந்தா சொல்லிருங்க அண்ணா…. அவுங்களும் சந்தோஷப் படுவாங்க…. சரி… நான் வச்சிடறேன்…” என்றாள்.
“சரிம்மா… நான் சொல்லிடறேன்….” என்றவன் யோசனையாய் அலைபேசியை அணைத்தான். ஹாஸினியை அழைக்க அது முழுவதும் சிணுங்கிவிட்டு நின்று போனது. தனது இருக்கையில் வந்து அமர்ந்தவனுக்கு மனது ஏனோ சந்தோஷமாய் இல்லை.
அப்போது அங்கிருந்த தொலைபேசி அலற, வேகமாய் சென்று அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ… நான்… சங்கர் பேசறேன்….” பதட்டமாய் வந்தது டிரைவரின் குரல்.
“சொ… சொல்லுங்க… சங்கர்… என்ன ஆச்சு… எங்கிருந்து பேசறீங்க…”
“நான் இங்க… நளினி ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்குற ஒரு இரும்பு குடவுன் கிட்டே இருக்கேன்…. அந்த சிவாவோட ஆளு ஒருத்தனைப் பின் தொடர்ந்து போயிட்டு இருந்தோம்… அவன் அந்த கோடவுனுக்குள்ளே நுழைஞ்சான்…. அவன் பின்னாடி நாங்க போனப்போ…”
“போனப்போ…..” அவசரப் படுத்தினான் வசீகரன்.
“அங்கே இன்னும் நாலஞ்சு ரவுடிங்க எங்களை சுத்தி வளைச்சுட்டாங்க…. மேடம் அவுங்களை பிடிச்சு வச்சிருக்காங்க… அவுங்க கூட கணேஷ் இருக்கார்…. கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி இன்னும் நாலஞ்சு பேரை உடனே கிளம்பி ஸ்பாட்டுக்கு வர சொல்லுங்க…” என்றார். 
“ஓகே… இதோ சொல்லிடறேன்…” என்ற வசீகரன் பரபரப்பாகினான். கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டு, அருகில் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஏகாம்பரத்திடம், “சார்… நான் ஸ்பாட்டுக்குக் கிளம்பறேன்…” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் தன் புது பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தான்.
“ம்ம்… எங்காவது பிரச்சனைன்னா போறதுக்கு யோசிக்கற ஆளு, பொண்டாட்டிக்கு பிரச்சனைன்னதும் பறக்கறதைப் பாரு….” என்று நினைத்தவர், “கடவுளே… யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது…” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்.
சங்கர் சொன்ன ஸ்பாட்டுக்கு சென்ற வசீகரன் போலீஸ் ஜீப் நிறுத்தியிருந்ததை வைத்து குடவுனைக் கண்டு பிடித்துவிட்டான். மெல்ல அவன் பதுங்கிப் பதுங்கி ஒளிந்து கொண்டு மறைவாய் நின்று உள்ளே பார்த்ததும் பதறிப் போனான்.
ஹாஸினியின் கைகள் ரெண்டும் கட்டப்பட்டு இருக்க, அவளது கன்னங்களில் அறைந்ததற்கான விரல் அடையாளங்கள். உதடுகளில் பல் குத்தி ரத்தம் வழிந்திருந்தது. அவளை அந்த நிலையில் கண்டதும் அவனது மனம் துடித்தது. கண்கள் சிவக்க கைகள் முறுக்கேற அந்த சூழ்நிலையை ஆழ்ந்து கவனித்தான்.
அந்த கணேஷ் கீழே விழுந்து கிடக்க சங்கரும் கைகள் கட்டப்பட்டு ரத்தம் ஒழுக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். ஹாஸினியின் துப்பாக்கி அந்த தாடிக்கார ரவுடியின் கையில் இருந்தது.
தாடியை சொரிந்து கொண்டே அவள் அருகில் வந்தவன், “என்னம்மா போலீசம்மா… ரொம்ப தான் விறைச்சுகிட்டு நின்னே…. இப்ப என்னாச்சு பார்த்தியா…. எவ்ளோ பெரிய போலீசா இருந்தாலும் நீ ஒரு பொம்பள… அதை மறந்துட்டியே….” என்றவன் அந்த துப்பாக்கியால் அவள் முகத்தில் கோடு வரைய ஹாஸினி முறைத்துக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“அட…. இன்னும் விறைப்பு போகல போலருக்கே…..”
அதற்குள் உள்ளிருந்து வந்த ஒருவன், அந்த ரவுடியின் காதில் ஏதோ சொல்ல அவன் வேகமாய் அந்த கோடவுனின் பின் பக்கம் சென்றான்.
துப்பாக்கியை வைத்திருந்த தாடிக்காரன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் மெல்ல உள்ளே நுழைந்தான் வசீகரன். அவனுக்கு எதிரில் நின்று கொண்டிருந்த ஹாஸினி அவனைக் கண்டு முகம் மலர அவளிடம் வாயில் விரலை வைத்து அமைதியாய் இருக்கும்படி கூறினான்.
மெதுவாய் உள்ளே நுழைந்தவன் வரும் வழியில் வாங்கி பாக்கெட்டில் வைத்திருந்த மிளகாய்த் தூளை நின்று கொண்டிருந்தவனின் பின் பக்கமாய் வந்து சட்டென்று முகத்தில் தூவினான். அவன் “ஆ….” வென்று அலறியதில் மற்றொருவன் ஓடி வர அவன் கண்ணிலும் தூவினான்.
அவர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டு அலற அதைக் கேட்டு உள்ளிருந்து இருவர் ஓடி வந்தனர். அதற்குள் கையில் இருந்த கத்தியால் ஹாஸினியின் கையில் இருந்த கட்டை வசீகரன் அவிழ்த்து விட்டான். கீழிருந்த கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டவள் ஓடி வந்தவனின் காலில் அடிக்க அவன் தடுமாறி தலை குப்புற விழுந்தான்.
அதற்குள் சங்கர், கணேஷ் இருவரின் கட்டுகளையும் வசீகரன் அவிழ்த்து விட்டான். அவனைக் அடிக்கப் பாய்ந்த ஒருத்தனை ஹாஸினியின் கராட்டே அடி பதம் பார்க்க மற்றவர்களை கணேஷும் சங்கரும் பார்த்துக் கொண்டனர்.
ஹாஸினியை பின்னிலிருந்து ஒருவன் தாக்குவதற்குள் வசீகரன் அவனை கட்டையால் அடித்தான்…
“கட்டைல போறவனே… உன்னை இந்த கட்டைலயே போடறேன்….” எல்லாரும் அடித்துக் கொள்ள கீழே விழுந்த துப்பாக்கி மீண்டும் தாடிக்காரனின் கையில் கிடைத்தது. அவனிடமிருந்து அதைத் தட்டிப் பறிக்க ஹாஸினி முயல அவளது கையைப் பிடித்து வளைத்து முறுக்கினான். வலி தாங்க முடியாமல் துடித்தவள் முயற்சியைக் தளர்த்தினாள். அந்த இடைவெளியில் துப்பாக்கி அவன் கைக்குள்ளேயே சரணடைந்தது.
ஹாஸினியின் கையை அவன் முறுக்குவது கண்டு வசீகரன் அடிக்க வருவதற்குள் தாடிக்காரன் கையில் இருந்த துப்பாக்கியால் அவன் தலையில் ஓங்கி அடித்து விட்டான்…. களக்… என்ற சத்தத்துடன் மண்டை உடைந்து ரத்தம் வருவதைக் கண்டதும் அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது.
“வசீ….” பதட்டத்துடன் ஓடி வந்தாள் ஹாஸினி.
அந்த சூழலிலும் அவளது பதறிய குரல் அவன் காதில் இன்பமாய்ப் பாய அவன் அரைகுறை மயக்கத்தில் கீழே விழுந்தான்.
அவளைப் பிடித்து நிறுத்திய தாடிக்காரன், “என்னடி…. ரொம்ப தான் பதறுரே…. இங்க அடிச்சா அங்க வலிக்குமோ….” என்று கேட்டு மீண்டும் வசீகரனை எட்டி உதைத்தான். அவன் வலியில் முனங்க ஹாஸினி துடித்தாள்.
“அவரை விடு… ஒண்ணும் பண்ணாதே….” கதறினாள்.
அவளது கழுத்தில் கையை வைத்து அமர்த்திய அந்த ரவுடி, “ஒரு பொட்டச்சி…. எங்க கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டலாம்னு நினைச்சியா…. நாங்கள்ளாம் என்ன பொட்டப் பசங்கன்னு நினைச்சியா… என் தம்பியை அன்னைக்கு ஸ்டேஷன்ல வச்சு அந்த அடி அடிச்சிருக்கே…. எங்கே… இப்போ என் மேல கை வை பாக்கலாம்….” என்றவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அதில் அவள் துள்ளிப் போய் விழுந்தாள். கடைவாய்ப் பல் குத்தியதால் புதியதாய் ஒரு கோடு சூடான ரத்தத்துடன் கீழிறங்கியது. எழுந்து சுற்றிலும் பார்க்க அவளது ஆட்கள் அனைவரும் அடி வாங்கி விழுந்து கிடந்தனர்.
“என்னடி பாக்கறே…. யாராவது ஹெல்ப் பண்ணுவாங்களான்னா…. யாரும் வர மாட்டாங்க… உங்களைக் காப்பாத்த வந்த போலீஸ் வண்டியும் எங்க ஆளுங்க தடுத்து பிடிச்சு வச்சுட்டாங்க…. என்ன ஆட்டம் போட்டே…. ம்ம்ம்…” என்றவன் அவளை ஒரு கையால் அள்ளி எடுத்தான்.
“உனக்கெல்லாம் மறக்க முடியாத மாதிரி தண்டனை கொடுக்கணும்… அப்போ தான் நீயெல்லாம் பொம்பளைங்கற நினைப்போட அடங்கி இருப்பே…” என்றவன், அவளது மேனியை தலை முதல் கால் வரை ரசித்துப் பார்க்க அவள் அருவருப்பாய் முகம் சுளித்தாள்.
“ம்ம்… சும்மா தளதளன்னு அம்சமா தான் இருக்கே…. காக்கிக்குள்ளேயும் நெளிவு சுளிவெல்லாம் கச்சிதமா வச்சிருக்கே…. உன் உடுப்பைப்போல உடம்பும் விறைப்பா தான் இருக்கா….” என்று கூறிக் கொண்டே அவளை சுற்றி வந்தவன்,
“சரி… நீ சொல்ல மாட்டே…. நானே பார்த்துக்கறேன்….” என்று அவளை நெருங்கினான்.
“டேய்…. வேண்டாம்… என்னை விட்டுரு… என்னைப் பத்தி தெரியாம என்கிட்டே விளையாடாதே….” என்று அவள் கண்ணீருடன் பின்னால் செல்ல, அவன் இளித்துக் கொண்டே முன்னால் வந்தான். சுவரோடு சேர்த்து நிறுத்தி அவளின் இரு பக்கமும் கையை வைத்தவன்,
“அட…. நீ இப்படி விரைச்சுகிட்டு நிக்கும் போது தான் உன்கிட்டே விளையாடி பாக்கணும்னு எனக்கு இன்னும் ஆசையா இருக்கு செல்லம்…. கொஞ்ச நேரம் விளையாடுவோமா….” அவளது முகத்துக்கு அருகில் அவன் முகத்தைக் கொண்டு வர அவள் கத்தினாள்.

Advertisement