Advertisement

“ம்ம்ம்…. நம்ம நினைச்ச அளவுக்கு இவ ஒண்ணும் மோசமில்லை… அவள் மனசும் அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்கிட்டு தான் இருக்கும் போலிருக்கு…. ம்ம்… இதை வச்சே உன்னைப் பிடிக்கறேன்…..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் மென்மையாய் சிரித்துக் கொண்டு மாடியேறினான்.
“ஏன் பேபி…. லேட்…. போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா….” என்றவனை அவள் முறைக்க, அதைக் கண்டு கொள்ளாமல் டீலில் விட்டுவிட்டு,
“சரி… குளிச்சிட்டு வா மா…. பசியா இருப்பே…. சாப்பிடலாம்…..” என்று மெல்லிய குரலில் அவன் கனிவுடன் கூற அதை மறுக்க முடியாமல் அவள் குளியலறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.
அவளுக்காய் அறையில் காத்திருந்தவன் பால்கனியின் கதவைத் திறக்க மழைக் காற்று குளிர்மையாய் உள்ளே நுழைந்து அவன் தேகத்தை சிலிர்க்க வைத்தது. மனதும் உடலும் குளிர உற்சாகத்துடன் மழையை ரசித்துக் கொண்டிருந்தான்.
குளித்து முடித்து ஒரு நைட்டியை அணிந்து கொண்டு குளியலறையில் இருந்து வந்தாள் ஹாஸினி. கண்ணாடியின் முன் நின்றவளை பின்னிருந்து கண்ணாடி வழியாய் நோக்கி ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் மௌனமாய் தலையை துவட்டிக் கொண்டிருக்க, “நான் வேணும்னா துவட்டி விடவா பேபி…” என்றான் அவள் அருகில் வந்து. அவனை எரித்து விடுவது போல் அவள் முறைத்துக் கொண்டிருக்க அவன் வாயின் மீது கைவைத்து அப்படியே கட்டிலில் மௌனமாய் அமர்ந்துவிட்டான்.
“பக்கத்தில் இருக்கும்போது பெருசா காதல் மன்னன் மாதிரி இந்த கொஞ்சலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….. அதுக்கப்புறம் கண்டுக்கறதே இல்லை….” என்று அவள் மனது அதற்கும் அவனை வறுத்துக் கொண்டிருந்தது.
மூவரும் உணவருந்த செல்ல, சூடாய் ராமு பரிமாறிய அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத இட்லியை அவள் உள்ளே தள்ளிய வேகத்திலேயே அவளது பசி புரிந்தது. மதியம் ஹோட்டல் உணவு பிடிக்காமல் அப்படியே வைத்து விட்டிருந்தாள். மழையும் சேர்ந்து கொள்ள இட்லியின் ருசி இன்றுதான் அவளுக்குப் புரிந்தது.
அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து வசீகரனும் ராஜேஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ராஜேஸ்வரி கமுக்கமாய் மருமகனிடம் கண்ணைக் காட்டி கண்டு கொள்ள வேண்டாம் என்று கூற அவனும் அமைதியாய் அவள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு சட்டென்று புரையேற வேகமாய் எழுந்து அவள் தலையில் தட்டிய வசீகரன் அவளது கிளாஸில் தண்ணி தீர்ந்திருக்க அவனது கிளாசை அவளிடம் நீட்டினான். அதை உணராமல் அவசரமாய் அதை வாங்கிக் குடித்தாள் அவள். மற்ற நேரமாய் இருந்தால் அதை கவனிப்பவள், இன்று ஏனோ ஒன்றுமே சொல்லவில்லை…
“மெதுவா சாப்பிடும்மா…. வயிறு காலியா இருக்கும் போது அவசரமா சாப்பிட்டா இப்படிதான் ஆகும்…..” என்று மகளை சமாதானப் படுத்தினார் ராஜேஸ்வரி.
சற்று நேரத்தில் அது சரியாகிவிட கண்ணும் மூக்கும் சிவந்து… கண்ணில் நீர் நிறைந்திருந்தவளைக் கனிவுடன் நோக்கி தன் தோளில் இருந்த டவலை நீட்டினான் வசீகரன். மௌனமாய் அதை வாங்கி முகத்தைத் துடைத்துவிட்டு அவனிடம் கொடுத்தவள் கை கழுக எழுந்தாள்.
“ராமு…. எல்லாருக்கும் பால் கொண்டு வாங்க….” என்று ராஜேஸ்வரி கூற, இளம் சூடோடு மூவருக்கும் கண்ணாடி கிளாஸில் பாலை கொண்டு வந்து வைத்தார் அவர். எப்போதும் பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவள் மௌனமாய் எடுத்துக் குடிக்கவும் ராஜேஸ்வரி அதிசயித்துப் போனார்.
“என்னவாயிற்று இவளுக்கு…. ம்ம்… நல்ல மாற்றம் தான்…” என்று நினைத்துக் கொண்டாலும் அதைப் பற்றி அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. 
“ஹாஸினி…. நான் என் அறைக்குப் போறேன் மா…. மழைல ரொம்பக் குளிருது…. நீங்களும் களைச்சுப் போயிருப்பீங்க…. சீக்கிரம் போயிப் படுங்க….” என்றார் ராஜேஸ்வரி.
வசீகரன் எழுந்து கை கழுக செல்ல அன்னையின் அருகில் சென்ற ஹாஸினி, “மம்மி…. நான் இன்னைக்கு உங்க கூட படுத்துக்கட்டுமா… ப்ளீஸ்…” என்றாள் அன்னை என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்துடன்.
“அதெப்படிம்மா… மாப்பிள்ளை என்ன நினைப்பார்… அது தப்புமா…. நீ உன் அறையிலேயே படுத்துக்கோ…..” என்றவர் வசீகரன் கைகழுகி வரவும், “என்ன இன்னைக்கு இப்படி மழை பெய்யுது….” என்றார் சற்று நடுங்கிக் கொண்டே.
“கடல்ல புயல்… தமிழ் நாடு பூரா மழை இருக்கும்னு நியூஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க அத்தை…. ரெண்டு நாளைக்கு மழை இருக்கும்னு சொன்னாங்க…… குளிர்ல நிக்க வேண்டாம்… நீங்க போயிப் படுங்க….” என்றான் வசீகரன்.
“ஓ…. அப்படியா… சரி மாப்பிள்ளை…. ஹாஸினி… அலுப்பா இருப்பே… நீயும் போயி படு டா…..” என்று மகளிடம் அவளது அறைக்கு செல்லுமாறு சொல்லாமல் சொல்லிவிட்டு தன் அறைக்குள் தஞ்சமானார்.
ஜன்னல் கதவெல்லாம் அடைத்திருக்கும் போதும் ஊசியாய் உடம்பைத் துளைத்தது குளிர் காற்று. உறக்கம் வருவது போல் இருக்கவே எழுந்து மாடிக்கு நடந்தாள் ஹாஸினி.
தொலைகாட்சியை உயிர்ப்பித்த வசீகரன் சற்று நேரம் அதில் பார்வையைப் பதித்திருந்தான். சலிப்பாக இருக்கவே அதை அணைத்துவிட்டு அவனும் தங்கள் அறைக்கு நடந்தான்.
அறைக்குள் நுழைந்தவனின் கண்களில் அழகான மலர்க்குவியல் போல கால்களைக் குறுக்கிக் கொண்டு படுக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஹாஸினி கண்ணில் பட்டாள்.
படுக்கைக்கு நடுவில் இரண்டு தலையணைகளைத் தடையாய் வைத்திருந்தாள். அதைக் கண்டு இதழ்களில் புன்னகை விரிய பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிக் கொண்டே கட்டிலில் வந்து படுத்தான் அவன்.
“காட்டாறாய் பெருகும் காதலைத் தடுத்து நிறுத்த இந்தத் தலையணையின் அணை தாங்குமா பேதைப் பெண்ணே….” என்று சிரித்துக் கொண்டவன் மனது ஹாஸினியைப் பற்றி அசை போடத் தொடங்கியது.
அவள் கூறிய உடன்படிக்கைக்கு தான் சம்மதிக்காததால் கல்யாணத்துக்கு தன்னை சம்மதிக்க வைக்க அவள் தன் அன்னையைத் தூதாக்கியதும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளும் அவள் அடி மனதில் அவன் இருப்பது நிச்சயம் என்று உணர்த்தியது. சிறு புன்னகையுடன் குழந்தையாய் உறங்குபவளின் முகத்தை சற்று நேரம் கண் சிமிட்டாமல் ஆராய்ந்தான்.
“பளிங்கு போன்ற பால் வடியும் முகம்….. அழகான பெரிய கரிய கண்கள்…. செதுக்கி வைத்தாற் போன்ற அளவான மூக்கு….. அது கோபத்தில் சிவக்கும் போது இன்னும் அழகு…. சிறிய அழகான சிவந்த உதடுகள்…..” அதில் சற்று நேரம் ஏக்கமாய் நிலைத்தது அவனது பார்வை…. அவனது கண்ணுக்கு தேவதையாகத் தெரிந்தாள் ஹாஸினி.
அவளது அழகை ரசித்துக் கொண்ருந்தவனிடம் நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. வலுக்கட்டாயமாய் கண்ணை மூடிப் படுத்தவன் அசதியில் உறங்கத் தொடங்கினான்.
சிறிது நேரத்திலேயே மழை வலுக்கத் தொடங்கியது. வானமே இடிந்து விழுவதைப் போல பெரும் சத்தத்துடன் இடி முழங்கியது. அதோடு பளிச்சென்று கண்ணைப் பறித்துக் கொண்டு வெட்டியது  மின்னல்.
“கிறிச்….” சென்ற குரலுடன் தலையணையைத் தாண்டி அவன் அருகில் வந்து படுத்துக் கொண்டாள் ஹாஸினி. மீண்டும் இடி இடிக்கவே, நடுக்கத்துடன் அவனை இறுக அணைத்து கட்டிக் கொண்டாள்.
உறக்கத்தில் உடம்பில் ஏதோ உறுத்தலாய்ப் பட கண்ணைத் திறந்தவனின் விழிகள் வியப்பால் விரிந்தது. தன்னருகில் பூங்குவியலாய் சிறு கோழிக் குஞ்சைப் போல் நடுக்கத்துடன் படுத்திருந்தவளை கனிவுடன் நோக்கியவன் ஆதரவாய் அவள் முதுகில் வருடி விட்டான்.
தாய்ப் பறவை போல் அவளை தன்னோடு சேர்த்து மென்மையாய் அணைத்துக் கொண்டான். அவனது பரந்த மார்பில் கைகளையும், கால்களையும் குறுக்கிக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் படுத்திருந்தவள் அவனை அணைத்துக் கொண்டே உறங்கி விட்டாள்.
அமைதியான அந்த உறக்கத்தில் அழகான ஒரு கனவு வர அதில் வசீகரனுடன் ஆடிப் பாடுவது போல் எல்லாம் அவளுக்குத் தோன்றியது.
விடியற்காலையில்  அவளது அலைபேசியில் வைத்திருந்த அலாரம் ஒலி எழுப்பி மணி ஐந்தாகி விட்டதை உணர்த்தியது. அதைக் கேட்டதும் பரபரப்பாய் எழுந்தாள் ஹாஸினி. தன்னை அணைத்தபடி படுத்திருந்த அவனது கரங்களை மெல்ல விடுவித்தவாறே எழுந்து சென்று குளியல் அறைக்குள் நுழைந்து காலைக் கடன்களை முடித்தாள்.
ஏனோ அவளால் அதிக நேரம் உறங்க முடியவில்லை… இல்லையென்றால் மழையின் குளிரில் இத்தனை சீக்கிரத்தில் எழுந்திருக்க மாட்டாள். அவளது அலாரம் பலமுறை அடித்த பின்னரே எப்போதும் எழுந்திருப்பாள். நேற்றைய செய்கை நினைவு வர, அவள் மீதே அவளுக்குக் கோபமாய் வந்தது.
“ச்சே…. இந்த இடி இப்படியா முழங்கித் தொலைக்க வேண்டும்….”
சிறு வயதிலிருந்தே அவளுக்கு இடி, மின்னல் எண்டால் மிகவும் அலர்ஜி. தன் தாயைக் கட்டிக் கொண்டு தான் உறங்குவாள் மழைக்காலத்தில் மட்டும்…. அவளை நினைத்து அவளுக்கே அவமானமாய் இருந்தது.
“ஒருவேளை அவன் இதையே சாக்காக வைத்து அவளை அடைய நினைத்திருந்தால்….” நினைத்தாலே நெஞ்சம் பயத்தில் பதறியது.
“இனி எந்தச் சூழலிலும் இப்படி நடந்து கொள்ளக் கூடாது… அச்சோ… அவன் இதை எப்படி எடுத்துக் கொள்வானோ…. பெரிய போலீஸ் ஆபீசர்…. ஒரு இடிக்கு பயந்துவிட்டேன்…. என்று மட்டமாய் நினைத்து கிண்டல் செய்வானா…. அவளே நம்மை நாடி வந்துவிட்டாள் என்று கேவலமாய் என்னை நினைத்துக் கொள்வானோ… அதும் கோவாவில் அவனுடன் டூயட் பாடுவது போல் கனவு வேறு…..” தலையைக் குலுக்கிக் கொண்டாள்.
“எனக்கு என்னதான் ஆயிற்று… இவன் என் கனவில் வரும் அளவுக்கு என்னை பாதிக்கத் தொடங்கிவிட்டானா….” மனது பலவாறு ஆலோசித்து அவளையே குற்றப்படுத்தி குழப்பிக் கொண்டிருக்க அவனை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையுடன் உடற்பயிற்சி செய்யும் அறைக்குள் நுழைந்தாள். அப்போதும் மழை லேசாய் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தவள் ஆறு மணிக்குக் கீழே வந்தாள்.
அடுக்களையில் காபியின் டிகாஷன் மணம் நாசியை நிறைக்க “ராமுண்ணா….” என்று குரல் கொடுத்தாள். அவளது அமைதியான அழைப்பில் வேகமாய் வெளியே வந்தவர், “காப்பி தரட்டுமா சின்னம்மா….” என்றார்.
“என்னண்ணே… என்னைப் போயி சின்னம்மான்னு மரியாதையா எல்லாம் சொல்லிட்டு…. நீங்க பார்க்க வளர்ந்த பொண்ணு நான்…. என்னை பேர் சொல்லியே நீங்க கூப்பிடலாம்….” என்றவளின் வார்த்தைகள் அவருக்கு அதிசயமாய் இருந்தது.
சந்தோஷத்துடன் முகம் மலர்ந்தவர், “காப்பி எடுத்து வரேன் மா….” என்று உள்ளே சென்றார்.
அவர் சூடாய் மணக்க மணக்கத் தந்த காப்பியை ருசித்துவிட்டு தினசரியைப் புரட்டினாள். படித்து முடிக்கவும், மாமியாரும் மருமகனும் ஒருவர் பின் ஒருவராய் எழுந்து வந்தனர். இவளுக்கு வசீகரனின் முகத்தை ஏறிடவே வெட்கமாய் இருந்தது. அவன் வருவதை உணர்ந்ததுமே அவளது முகம் குங்குமமாய் சிவந்து விட்டிருந்தது.
வசீகரனின் கழுகுப் பார்வையில் அவளது முகச் சிவப்பும் தப்பவில்லை…. அதைக் கண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டான்.
ராமு கொடுத்த காபியை ருசித்துவிட்டு, “பேபி… பேப்பரைக் குடு….” என்று அவளிடம் ஒன்றும் அறியாத போல் கையை நீட்ட அவள் தான் அவன் முகத்தைப் பார்க்கத் தவித்துப் போனாள்.
சிறு நடுக்கத்துடன் அவனது கையில் அவள் பேப்பரைக் கொடுக்க ராஜேஸ்வரியும் அங்கே வந்தார். “மாப்பிள்ளை…. உங்களுக்கும் பைக் வாங்கிடலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்… நேத்து நீங்க மழைல ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க…. என்ன ஹாஸினி… புது வண்டி புக் பண்ணிடலாமா…” என்றார் மகளின் சம்மதம் அறிய.
பேப்பரில் உள்ள எழுத்துக்கள் கண்ணில் பதியாமலே வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவள், “அவருக்கு எந்த மாதிரி வண்டி வேணும்னு கேட்டு புக் பண்ணிடுங்க மம்மி….” என்றாள்.
“பேபி… என்ன வண்டி வாங்கலாம்னு நீயே டிசைட் பண்ணிடுமா…. உன் விருப்பம் தான் என் விருப்பம்….” என்ற வசீகரனை அவள் ஏறிட அவன் ஒரு கண்ணை சிமிட்டினான் குறும்புப் புன்னகையுடன்.
அதைக் கண்டதும் அவளது முகச் சிவப்பு மேலும் அதிகமாக பார்வையை  மாற்றிக் கொண்டவள், “சரி… நானே மேனேஜர் கிட்டே விசாரிச்சிட்டு சொல்லிடறேன்….” என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து மாடிக்கு சென்று விட்டாள்.
மின்னல் எனும் தேரில்
மேக வானில் மிதப்பவளே….
பெய்தால் தீர்ந்துவிடும்
மழையல்ல என் காதல்….
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த காளானாய்
முளைத்ததல்ல இந்தக் காதல்….
ஓட்டுக்குள் ஒளிந்திருக்கும்
நத்தையாய் உன் மனதுக்குள் 
ஒளித்து வைத்தாயா காதலை….
உன் விழி எனும் அம்பு தீண்ட
திறந்து கொண்டது – என்
இதயமெனும் வாசல்…..
உன் விழிகளை சந்தித்த கணத்தில்
நுழைந்து விட்டாய் எந்தன் மனதில்….
எந்த விழிகளும் இதுவரை
என்னை சிறைபிடித்ததில்லை…..
உன் விழி என்னும்
காதல் சிறையில்
ஆயுள் கைதியாய் இருந்திடவே
என் வாழ்நாள் விருப்பம்….
நிறைவேற்றுவாயா பெண்ணே…

Advertisement