Advertisement

அத்தியாயம் – 13
“சங்கர்…. நாம உடனே சேலம் புறப்படணும்…. வண்டியை செக் பண்ணி வையுங்க….” என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் அறைக்கு நடந்தாள் ஹாஸினி. இன்றுதான் தம்பதிகள் இருவரும் பணிக்கு வந்திருந்தனர். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விட்டு ஸ்டேஷனுக்கு வந்தவள் அவசரமாய் சேலம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“ஏகாம்பரம் சார்…” மிடுக்காய் அழைத்தது அவளது குரல்.
“சொல்லுங்க மேடம்….” அறைக்குள் ஓடி வந்தார் அவர்.
“அந்த சிவாவோட தம்பி சேலத்துல மாட்டிகிட்டான்… இன்ஸ்பெக்டர் என்னை உடனே கிளம்பி வர சொல்லுறாரு…. சிவா கேஸ் பைலை எடுத்து சங்கர் கிட்டே கொடுத்திருங்க…. அடுத்தது அந்த சிவாவையும் எப்படியாவது பிடிக்கணும்… அப்பத்தான் எனக்கு நிம்மதி….” என்றாள்.
“ஓ… சரி மேடம்…. சிவாகிட்டே இருந்து கிடைத்த போட்டோவை டெவலப் பண்ணி பிரின்ட் போட்டது நமக்கு ரொம்ப உபயோபகமா இருந்திருக்கு…. அதை வச்சு தானே இந்த வாசுவை மடக்க முடிஞ்சது…. சிவாவைப் பிடிக்கவும் ஒரு கண்ணி கிடைக்காமலா போயிடும்…” என்று அவளை ஆமோதித்தார் அவர்.
“சரி… நீங்க அந்த வனஜா கேஸ் என்னாச்சு…. விசாரிச்சிங்களா….” 
“ஆமாம் மேடம்… அவ மகளிர் மேம்பாட்டுக் குழுங்குற பேர்ல ஒரு அமைப்பைத் தொடங்கி நிறைய பெண்களை மெம்பராக்கி வச்சிருக்கா…. வெளிப் பார்வைக்கு பெண்களுக்கு ஆதரவு கொடுக்குற மாதிரி தோணினாலும் உள்ளே நடக்குறது எல்லாம் ரொம்ப மோசமான விஷயம்…. அரசியல் வாதிகளுக்கு பெண்களை அனுப்பி காசு பாக்குற கூட்டம்…..”
“ம்ம்… சரி… அந்த கேசு இன்னைக்கு கோர்ட்டுக்கு வருது…. நீங்களும் வசீகரனும் போயி நம்ம அரசு வக்கீலைப் பாருங்க…”
“சரி மேடம்….”
“நான் சேலம் போயிட்டு திரும்ப சாயந்திரம் ஆயிடும்…. பார்த்துக்குங்க…” என்றவள், குளிர் கண்ணாடியை எடுத்து கண்ணுக்குக் கொடுத்து தொப்பியை தலைக்கு வைத்து கம்பீரமாய் வெளியே வந்தாள். நிமிர்வுடன் கம்பீரமாய் நடந்து வரும் மனையாளை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
அவன் நோட்டம் விட்டதைப் புரிந்து கொண்டவள் அவன் அருகில் வந்தாள்.
“ஏட்டையா கூட கோர்ட்டுக்குப் போயிட்டு வந்திடுங்க…. நான் வரதுக்கு சாயந்திரம் ஆகிடும்… எனக்கு வெயிட் பண்ண வேண்டாம்… அம்மாகிட்டே சொல்லிடுங்க….” என்றுவிட்டு சங்கர் ஸ்டார்ட் பண்ணியிருந்த வண்டியில் ஏறிக் கொண்டாள்.
அவளையும் அறியாமல் அவளது பார்வை வசீகரனைத் தழுவ, “போய் வருகிறேன்…..” என்பது போல் அவள் கண்கள் சொன்ன சேதியில் சிறு புன்னகையுடன் சம்மதமாய்த் தலையசைத்தான் வசீகரன்.
அதைப் பார்த்துக் கொண்டே வந்த ஏகாம்பரம், “அட… நம்ம ஜான்சி ராணி கிட்டே நிறைய மாற்றம் தெரியுதே…. ம்ம்….” என்று அவன் தோளில் தட்டினார்.
அதைக் கேட்டு அவன் மனதுக்குள் மத்தாப்பு பூத்தது. ஹாஸினியை எப்படியும் அன்பால் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வர சந்தோசத்துடன் அவருடன் கோர்ட்டுக்குக் கிளம்பினான்.
“சொல்லுடா…. உன் அண்ணன் இப்போ எங்கிருக்கான்…. சொல்லப் போறியா இல்லையா….” அவனை விசாரித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிளின் லத்தி அவன் முதுகில் வேகமாய்ப் பதிய அதன் சுரீரென்ற வலியில் அவன் துள்ளினான்.
அடி வாங்கியதில் அவன் உடல் முழுதும் அங்கங்கு ரத்தம் கண்ணிப்போயிருக்க உதடு கிழிந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வ பாண்டியனுடன் ஹாஸினியும் இருந்தாள். இருவரும் செல்லைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.
“என்ன… வாயத் தொறந்து ஏதாவது சொன்னானா….”
“இல்ல சார்… எத்தன அடிச்சாலும் எரும மாதிரி வாங்கிட்டு நிக்குறானே ஒழிய வாயைத் திறக்க மாட்டேங்குறான்….” என்றார் அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் செழியன்.
“ம்ம்….” என்று அவனிடம் வந்த செல்வ பாண்டியன், “என்னடா…. இந்த ட்ரீட்மென்ட் பத்தலையா….. உன் அண்ணனைப் பத்தின விவரத்த சொல்லப் போறியா…. இல்ல…. எங்க குண்டூசி ட்ரீட்மெண்டை ஸ்டார்ட் பண்ணவா….” என்றார்.
அதைக் கேட்டும் முறைப்புடன் மண்டி இட்டிருந்தான் அந்த சிவா. குண்டூசி ட்ரீட்மென்ட் என்பது விரல் நகத்தின் வழியாய் குண்டூசியைக் குத்துவது. எத்தனை நேரம் வாய் திறக்காதவனும் அந்த ட்ரீட்மென்டில் வாயைத் திறக்காமல் இருக்க மாட்டான்.
அவனது முறைப்பைக் கண்ட ஹாஸினிக்கு கோபம் தலைக்கேற, “என்னடா…. இவ்ளோ கேட்டும் சொல்லாம முறைச்சிட்டு இருக்கே…. குண்டூசியை ஏத்தினா தான் அடங்குவியா….” என்று ஓங்கி அவன் முகத்தில் ஒரு அறை விட்டாள்.
பெண்ணின் கையால் அடி வாங்கிய அவமானத்தில் அவன் சீறுகின்ற வேங்கையைப் போல் ஆக்ரோஷத்துடன் முறைக்க மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“களக்…. என்ற சத்தத்துடன் கழண்டு கொண்டது அவனது கடவாய்ப் பல் ஒன்று. ரத்தத்துடன் எச்சில் வடிய நின்று கொண்டிருந்தவன் வலி தாங்காமல் கத்தினான்.
“ஹாஸினி….. நீங்க வாங்க…. அவுங்க பார்த்துக்குவாங்க…..” என்ற செல்வ பாண்டியன், செழியனிடம் திரும்பினார்.
“செழியன்…. அவன் வாயில இருந்து விஷயம் வர்ற வரைக்கும் விடாதீங்க… உடம்பில் உயிர் மட்டும் மிச்சம் வைச்சா போதும்… வாயத் திறந்து சொல்லற வரைக்கும் பச்சத் தண்ணி கூடக் கொடுக்காதீங்க…. அவன் சொல்லலைன்னா அடுத்து குண்டூசி ட்ரீட்மென்ட் கொடுத்திருவோம்…” என்றார்.
“சரி சார்….. நாங்க பார்த்துக்குறோம்…. நீங்க கிளம்புங்க…” என்ற செழியனும் மற்ற போலீசாரும் அந்த வாசுவைத் துவைத்து எடுக்கத் தொடங்கினர்.
தனது அறிகு வந்த செல்வபாண்டியன், அவர்களுக்குக் கிடைத்த சிவா பற்றிய தகவல்களை ஹாஸினியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.
“உங்களுக்கு எப்படி அந்த போட்டோவைப் பார்ததும் இந்த ஐடியா தோணுச்சு…. ஹாஸினி….”
“அது… என் பிரென்ட் எப்பவும் இந்த மாதிரி சின்ன வயசு பசங்க போட்டோ வச்சு பெருசானா நீ இப்படி இருப்பே… அப்படி இருப்பேன்னு விளையாடிட்டு கம்ப்யூட்டர்ல டிஸைன் பண்ணி காட்டிட்டே இருப்பான்… அதான் சட்டுன்னு அந்த போட்டோ பார்த்ததும் அப்படி முயற்சி பண்ணிப் பார்த்தேன்….” என்று புன்னகைத்தாள் அவள். அவரது பாராட்டில் அவளது மனம் குளிர்ந்திருந்தது.
“வெரி குட்…. நம்ம டிப்பார்ட்மென்ட்ல இந்த மாதிரி ஷார்ப்னெஸ்தான் ரொம்ப முக்கியம்…. என்றவர் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். போகும் வழியில் மதிய உணவை ஒரு ஹோட்டலில் முடித்துக் கொண்டனர்.
கமிஷனர் அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்துவிட்டு கிளம்பும் போது மணி மாலை ஆறு ஆகிவிட்டது. வானம் மழை வருவதற்கான அறிகுறியுடன் மப்பும் மந்தாரமுமாய் இருக்க மேகம் நிறை மாத கர்ப்பிணியாய் மழையைப் பிரசவிக்கக் காத்திருந்தது. அதற்கு மேல் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினாள்.
பாதி வழியிலேயே மழை மெல்ல சாரலிடத் தொடங்கி, தன் மடியின் கனத்தைக் குறைத்துக் கொள்ளும் ஆசையில் ஹோவென்று வேகத்தைக் கூட்டியது. வண்டியை வேகமாய் விட முடியாமல் சங்கர் சற்று மெதுவாகவே ஓட்டினார். வழியில் ஒரு மரம் மழை காரணமாக சாலையில் விழுந்து கிடக்க அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஆகிவிட்டது. அங்கிருந்து மாற்றுப் பாதை வழியாக வண்டிகளைத் திருப்பி விட்டிருந்தனர்.
அப்போது சங்கரின் அலைபேசி அழைக்க அவர் எடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அதைக் கண்ட ஹாஸினியும் அலைபேசியில் அன்னையை அழைத்து விவரத்தை சொல்ல முயல அது முழுவதும் அடித்து ஓய்ந்தது. அடுத்து வசீகரனின் அலைபேசிக்கு அழைக்க அதும் எடுக்கப் படவில்லை….
“ச்சே…. எல்லாரும் எங்கே போயித் தொலைந்தாங்க…. யாருக்காவது என்னைப் பத்தின அக்கறை இருக்கா…. கிளம்பிப் போனாளே…. என்ன ஆனாளோ…. வேலையை முடிச்சாளான்னு தெரிஞ்சுக்கணும்னு எண்ணம் இருக்கா…. அவுங்கவுங்க வேலையைப் பார்த்துட்டு கமுக்கமா இருக்காங்க….” என்று மனதுக்குள் அவர்களைக் கருவிக் கொண்டிருந்தாள்.
அன்னை தன் மீது அக்கறை கொண்டு விசாரிக்கவில்லை என்பது சரி… வசீகரன் எதற்கு தன்னை விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு நினைக்கத் தோன்றவில்லை…. அவன் அழைக்க வேண்டும் என்பது அவள் மனதின் எதிர்பார்ப்பு என்பதை உணரும் நிலையிலும் அவள் இல்லை…
“தங்கை, அன்னையின் மீது மட்டும் அக்கறையில் உருகுறான்…. நான் எல்லாம் அவனுக்கு பொருட்டில்லையோ…” என்று அவன் மீது கோபமாய் வந்தது.
ஒருவழியாய் ஹாஸினி வீட்டை அடையும் போது இரவாகி இருந்தது. அவளை வீட்டில் இறக்கிவிட்டு சங்கர் ஜீப்புடன் ஸ்டேஷனுக்கு சென்று விட்டார். மழை பயங்கர சத்தத்தோடு இன்றே பெய்து தீர்த்து விடும் முடிவுடன் கொட்டிக் கொண்டிருந்தது.
தகதவென்று கோபத்தில் சிவந்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த அன்னை அவளை அழைத்ததற்கு முறைப்பு ஒன்றை பதிலாக்கிவிட்டு  கோபமாய் அவர் எதிரில் சென்று அமர்ந்தாள்.
“ஹாஸினி…. என்னாச்சு டா… ஏன் கோபமா இருக்கே…. போன வேலைல ஏதும் சிக்கலா….” என்று அக்கறையாய் அவர் விசாரிக்க மௌனமாய் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தாள்.
அவர் மீண்டும், “என்னம்மா… என்னாச்சு….” என்றதும், கோபத்துடன் திரும்பினாள்.
“ம்ம்… இப்போ நல்லா விசாரிங்க…. காலைல போனவ… என்ன ஆனா… இன்னும் வரலியேன்னு எனக்காகக் கவலைப் படத் தோணுச்சா…. கால் பண்ணா எடுக்கக் கூட உங்களுக்கு நேரம் இல்லாம அப்படி என்ன வேலை….”
வெளியில் பெய்யும் மழையை விட வேகத்துடன் அவளது வார்த்தைகள் சடசடவென்று உஷ்ணமாய் வந்து விழுந்தது.
“என்னம்மா…. எப்பவுமே நீ டியூட்டி விஷயமா வெளியே போனா கூப்பிட்டு தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொல்லுவியே… இப்போ உனக்கு என்ன ஆச்சு…. என் மொபைல்ல சார்ஜ் இல்லை… கரண்டும் போயிருச்சு… மேலே யூபிஎஸ் லைன்ல சார்ஜ் போட வச்சிருக்கேன்….” என்று விளக்கினார்.
“நான் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருந்தா கூப்பிட மாட்டிங்களா… எங்கே உங்க மாப்பிள்ளை…. நான் கூப்பிடும்போது போனை எடுக்காம என்ன பண்ணிட்டிருக்கார்…. ஒருத்தி இருக்காளா…. செத்தாளான்னு கூடத் தெரிஞ்சுக்காம நல்லா சாப்பிட்டு படுத்துத் தூங்கிட்டு இருக்காரா….” பட்டாசாய் பொரிந்தாள்.
அவளது ஆத்திரத்தில் அவள் எதையும் யோசிக்காமல் கத்திக் கொண்டிருக்க ராஜேஸ்வரிக்கு அவளது மனது புரிந்தது. மாப்பிள்ளையை அழைத்து அவர் எடுக்காததால் தான் இத்தனை கோபம் போலிருக்கிறது…. என்று நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 
அதைக் கேட்டுக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தான் வசீகரன். அவன் மனதுக்குள் ஹாஸினியின் கோபம் சிரிப்பை வரவழைத்தது. அப்போது தான் குளித்ததற்கு அடையாளமாய் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தான்.
“ஹாஸினி…. மாப்பிள்ளையும் மழைல நனைஞ்சுட்டே இப்போ தான் வந்து குளிச்சிட்டு வரார்…. சும்மா கோபப் படாம சீக்கிரம் குளிச்சிட்டு வாம்மா…. சாப்பிடுவோம்…. நான் இன்னும் சாப்பிடாம உனக்காக தானே காத்திட்டிருக்கேன்….” என்றார்.
அவர் கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவள் மனதில் சற்று கோபம் தணிந்தது.
“என்ன மம்மி… இவ்ளோ நேரம் மாத்திரை போடாம இருக்கீங்க…. சாப்பிட்டு போட்டிருக்கலாம்ல….” என்று கடிந்து கொண்டவள், “நீங்க மழைல எதுக்கு நனைஞ்சிட்டு வந்தீங்க…. காய்ச்சல் வந்தா எப்படி எஸ்ஐ டெஸ்ட்டுக்குப் போவீங்க…. ஒரு ஆட்டோல வர வேண்டியது தானே….” என்று அவனையும் சாடிவிட்டு மாடியேறி சென்றாள்.
“ஹஹா… சின்னப் புள்ள மாதிரியே இருக்கா மாப்பிள்ள… நீங்க போயி அவளை சமாதானப் படுத்துங்க…. பசியில தான் இப்படி கத்துறா போல…. நான் இப்போ வந்திடறேன்…” என்று ராஜேஸ்வரி தன் அறைக்கு சென்று விட்டார்.
அவள் பேசுவது முழுவதையும் மாடியில் நின்று கேட்டுக் கொண்டு தானிருந்தான் வசீகரன். அவளது பேச்சும் அவன் நனைந்து வந்ததற்கு அவள் காட்டிய அக்கறையும் சாரல் மழையாய் மனதை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
“டேய் வசீ…. இந்த கதையை டைரக்ட் பண்ணுறது ஒண்ணும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை போலிருக்கு…. அவளை அக்கறையா நான் கூப்பிட்டு விசாரிக்கலைன்னு தான் இங்கே சாமியாடிட்டு போறாளா…… ஹஹா… இவளைக் கூப்பிட்டா எங்கே கத்துவாளோன்னு நினைச்சுதானே நாம சங்கரைக் கூப்பிட்டோம்… பேசாம இவளையே கூப்பிட்டு இருக்கலாமோ….”

Advertisement