Advertisement

அன்புடன் விசாரித்த அண்ணனைக் கண்டு அவளது கண்கள் கலங்கியது.
“அண்ணா…. வந்துட்டியா…..” என்றவள், “அண்ணி…. நல்லாருக்கீங்களா….” என்று ஹாஸினியை விசாரித்தாள். அவளது உடல்நிலையைத் தான் விசாரிக்கும் முன்பு தன்னை விசாரித்த அவள் மீது ஒரு மதிப்பு தோன்றியது ஹாஸினிக்கு.
இப்போது சற்று முகம் தெளிந்திருந்தாள். மொட்டை மண்டையில் கறுப்பாய் துளிர் விடத் தொடங்கிய முடிகளை ஒரு துப்பட்டாவால் மூடி இருந்தாள். 
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது காப்பியும் ஒரு தட்டில் கை முறுக்கும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார் சபர்மதி.
“இந்தாப்பா…. இன்னைக்கு நீ வருவேன்னு தான் காலையில் கை முறுக்கு சுத்தினேன்…. சாப்பிடு…” என்றவர், “சம்மந்திம்மா சுகமா இருக்காங்களா…” என்றார்.
“ம்ம்… அத்தை நல்லாருக்காங்கமா… இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு… இன்னொரு நாள் வரேன்னு சொன்னாங்க…. முறுக்கு சூப்பரா இருக்கு…. பேபி… எடுத்துக்கோ….” என்று அவள் கையில் ஒரு முறுக்கை எடுத்து நீட்ட அவள் தவிர்க்க முடியாமல் வாங்கிக் கொண்டாள்.
“நேத்து வளரை செக் அப் கூட்டிப் போனீங்களா…. டாக்டர் என்ன சொன்னார் மா….”
“ம்ம்…. காயம் நல்லா காய்ஞ்சிருக்குன்னு சொன்னார்பா…. இனி எந்தப் பிரச்னையும் இல்லேன்னு சொல்லிட்டார்…. அடுத்த மாசம் ஒரு செக்அப் முடிச்சுட்டா அப்புறம் வர வேண்டியதில்லைன்னு சொல்லிட்டார்….”
“ம்ம்… இப்பதான் மா… எனக்கு நிம்மதியா இருக்கு….”
“ம்ம்… எல்லாம் என் மருமகள் செய்த புண்ணியம் தான்….. இல்லேன்னா நாம இப்போ இப்படி நிம்மதியா இருக்க முடியுமா…. என்ன ஆயிருக்குமோன்னு நினைக்கவே பயமா இருக்கு….” என்று கலங்கியவரைக் கண்டு ஹாஸினிக்கே கஷ்டமாக இருந்தது.
“என்ன அத்தை…. நான் என் கடமையைத் தானே… செய்தேன்…. அதைப் போயி பெரிசா சொல்லறீங்க….” என்றாள் அவள் சங்கடத்துடன். வசீகரனை அவள் நோக்க அவன் ஹாஸினியை வெறித்துக் கொண்டிருந்தான்.
“அண்ணி…. என் வாழ்க்கையே முடிஞ்சதுன்னு நினைச்சேன்…. உங்க முன்னாடி இப்படி நடமாடுறேன்னா அது நீங்க போட்ட பிச்சைன்னு தான் சொல்லணும்…. எந்தக் காலத்துலயும் இதை நான் மறக்க மாட்டேன்…” என்றாள் வளர்மதி.
“அச்சோ… என்னம்மா இது…. நீயும் அத்தை போல பேசிட்டு…. இதெல்லாம் என் கடமை தான்…. இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேண்டாம்….” என்று விட்டாள்.
“சரி… ஹாஸினி…. நைட் டிபனுக்கு என்ன பண்ணட்டும்…. உனக்கு என்ன வேணும்னு சொல்லு…. அதையே பண்ணிடறேன்……” என்று சந்தோஷத்தில் பேசிக் கொண்டே போன சபர்மதியின் பாசம் அவளுக்குப் புதியதாய் இருந்தது.
“நீங்க எது செய்தாலும் பரவாயில்லை அத்தை….” என்றாள் அவள்.
“ம்ம்… அம்மா…. மருமக வந்ததும் மகனை மறந்துட்டீங்க பார்த்தீங்களா….” என்று சபர்மதியின் பின்னில் இருந்து வசீகரன் அன்னையைக் கட்டிக் கொள்ள கழுத்தை சுற்றியிருந்த அவன் கரத்தை மாற்றி விட்டவர்,
“இத்தனை நாள் என் மகன், மகளுக்குன்னு தானே நான் வாழ்ந்திட்டிருக்கேன்… இனி என் மருமகள், மருமகனும் சேர்ந்துட்டாங்க…. அதுனால இனி அவுங்களுக்கு தான் முதல் மரியாதை….” என்று சிரித்தார்.
“அண்ணா…. பாத்தியா… இதே போல தான் அவர் வரும்போதும் அவரை தான் கவனிக்குறாங்க…. என்னைக் கண்டுக்கறதே இல்லை….” என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள் வளர்மதி.
கலகலவென்று அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பதை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
அதற்குள் வெளியே இருந்து “வளர்….” என்ற குரல் கேட்டதும் வெளியே எட்டிப் பார்த்த சபர்மதி, “அட…. சுபாவா… உள்ளே வாம்மா…” என்றார்.
அங்கே அருகருகே சோபாவில் அமர்ந்திருந்த வசீகரன் ஹாஸினியின் மீது ஒரு ஏக்கப் பார்வையை ஓட விட்டவள் சட்டென்று தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சிநேகமாய் புன்னகைத்தாள்.
“நல்லாருக்கியா சுபா…. அம்மா நல்லாருக்காங்களா…. அப்பா வீட்டுக்கு வந்துட்டாரா….” என்று அடுக்கிக் கொண்டே போனான் வசீகரன்.
அவன் எதார்த்தமாய் அவளை விசாரித்தாலும் ஹாஸினிக்கு மனதுக்குள் அனல் அடித்தது. “ஆஹா… என்னவொரு கரிசனம்… வயசுப் பொண்ணுங்களை நல்லா பேசி மயக்கத் தெரியுது….” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
“எல்லாரும் நல்லாருக்கோம்…. அப்பா இப்போ தான் ஸ்டேஷன்ல இருந்து வந்தார்…. அம்மா எனக்கு மருதாணி அரைச்சாங்க…. அதான் வளர்க்கு கொஞ்சம் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்றாள் அவள்.
“அப்படியா….. என்னம்மா விசேஷம்….” என்றார் சபர்மதி அவள் கையிலிருந்த மருதாணி கிண்ணத்தை வாங்கிக் கொண்டே
“அது… வந்து….” என்று தயங்கியவளின் பார்வை ஒரு நொடி வசீகரனைத் தழுவி மீண்டது.
“நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வராங்க…. எனக்கு மெகந்தி வைக்கப் பிடிக்காது…. அதான் அம்மா மருதாணி அரைச்சாங்க….” என்றாள் சற்று வெட்கத்துடன்.
“ஓ…. ரொம்ப சந்தோசம் மா…. உன் அம்மா சொல்லிட்டு இருந்தாங்க…. ஒரு வரனோட ஜாதகம் சரியாகுற போல இருக்குன்னு…. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்….” என்ற சபர்மதி,
“இந்தா… முறுக்கு எடுத்துக்கோ…. இரு…. ஒரு பாத்திரத்தில் போட்டு தரேன்…. அம்மாகிட்டே கொடு…’ என்று ஒரு பாத்திரத்தில் முறுக்கோடு வந்தார்.
அவள் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றதும் வளர்மதி மருதாணியை எடுத்து நுகர்ந்து பார்த்தாள். அவளுக்கு அந்த மணம் மிகவும் பிடிக்கும்.
“அம்மா… எனக்கு வைச்சு விடறீங்களா…..”
“மருதாணி குளிர்ச்சி தானேம்மா… உனக்கு வைக்கலாமான்னு தெரியலையே….” என்றார் அன்னை.
“மா…. ப்ளீஸ்…. எனக்கு ரொம்ப பிடிக்கும்…. நான் ரொம்ப வைக்காம சீக்கிரம் எடுத்திடறேன்….” என்று ஆசையோடு கெஞ்சியவளிடம் மறுத்துப் பேச அவருக்கு மனம் வரவில்லை.
“சரி சரி…. சாப்பிட்டு வச்சு விடறேன்….” என்று சம்மதித்தார்.
“அம்மா… மகளுக்கு மட்டும் தான் மருதாணியா…. மருமகளுக்கு இல்லியா…. மருதாணி நல்லா சிவந்தா புருஷன் மேல ரொம்ப ஆசை இருக்குறதா அர்த்தம்னு சொல்லுவாங்க…. என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்ளோ ஆசை இருக்குன்னு எனக்குத் தெரியனும்…. அவளுக்கும் வைத்து விடுங்க….” என்றான்.
அதுவரை அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹாஸினி வசீகரனின் பேச்சில் திகைத்தாள்.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை…. நாளைக்கு டியூட்டிக்குப் போகணும்…. மருதாணி எல்லாம் வைச்சுட்டுப் போனா சரியா இருக்காது…” என மறுத்தாள்.
“என்னதான் பெரிய போலீசா இருந்தாலும் பொண்ணு எப்பவும் பொண்ணு தான்னு சொல்லுங்கம்மா…. மருதாணியை ஆசைப்படாத பொண்ணுங்க இருப்பாங்களா…. உங்க மருமக என் மேல வச்சிருக்குற ஆசையும் அன்பும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு வெக்கப் படறா…” என்று எடுத்துக் கொடுத்தான்.
அதைக் கேட்டு அவனை அவள் முறைக்க அவளை நோக்கி கண்ணை சிமிட்டி ஒரு புன்சிரிப்பை உதிர்த்தான் அந்த வசீகரன்.
“உன் புருஷன் தான் இவ்ளோ ஆசைப் பாடறானே வச்சுக்கோம்மா….” என்று சபர்மதியும் சிரித்துக் கொண்டே சொல்ல வளர்மதியும் தலையாட்டினாள்.
வேறு வழியில்லாமல் அவளும் சம்மதித்தாள்.
சபர்மதி மகள் மருமகள் இருவருக்கும் கையில் மருதாணி வைத்துவிட, வசீகரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்தார் ஏகாம்பரம்.
“வாங்க சார்…. நானே அங்கே வரணும்னு நினைச்சேன்…” வரவேற்றான் வசீகரன்.
“வாங்கண்ணா…. இப்பதான் சுபா வந்துட்டு போனா…. நாளைக்கு வீட்ல விஷேசம்னு சொன்னா…. காப்பி எடுக்கறேன்… உக்காருங்க…….. என்று மருதாணி வைப்பதை நிறுத்தி சபர்மதி விசாரிக்க,
“ம்ம்… அதுக்கு கூப்பிடத்தான் வந்தேன் மா…. இப்போ தான் காப்பி குடிச்சேன்…” என்றவர், ஹாஸினியைக் கண்டதும் விரைப்புடன் சல்யூட் அடிக்க… அதைக் கண்டு சிரித்தான் வசீகரன்.
“சார்…. ஸ்டேஷன்ல தான் அவுங்க உங்க ஹையர் ஆபீசர்….. இங்கே நம்ம வீட்டுப் பொண்ணு போல தான்… எதுக்கு சார் இதெல்லாம்…” என்றவனைக் கண்டு ஹாஸினி முறைக்க, ஏகாம்பரம் சிரித்தார்.
“அது அப்படியே பழகிருச்சுப்பா…. என்ன பண்ணறது…. சரி நாம முன்னாடி உக்கார்ந்து பேசலாம்…. அவுங்க மருதாணி போடட்டும்…. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்…” என்று வெளியே நடந்தார்.
முன்னாடி இருந்த சோபாவில் புன்னகையுடன் அமர்ந்தவர், “என்ன… வசீகரன்… கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போயிட்டிருக்கு….” என்று விசாரித்தார்.
“ம்ம்… சந்தோஷமா போகுது சார்…. சுபாவோட மாப்பிள்ளை என்ன பண்ணுறார்… எந்த ஊரு….” என்று அவன் விசாரிக்க அவனுக்கு அதற்கான பதிலைக் கூறிக் கொண்டிருந்தவர்,
“அப்புறம் வசீகரன்…. அடுத்த வாரம் எஸ்ஐ டெஸ்டுக்கு நீ ரெடியாகலையா…. வளர்மதியோட ஆபரேஷன், உன் கல்யாணம்னு பிஸியா இருந்துட்டே…. பாடி பிட் ஆக பண்ணின எக்சர்சைஸ் எல்லாம் நிறுத்திட்டே…. டெஸ்டுக்குப் போக வேண்டாம்னு நினைக்கறியா…” என்றார் வருத்தத்துடன்.
“அப்படில்லாம் இல்லை சார்…. இப்போ எல்லா பிஸியும் முடிஞ்சிருச்சு… நாளைல இருந்து மறுபடியும் அதெல்லாம் பாலோ பண்ண வேண்டியது தான்…. பிக் அப் பண்ணிடுவேன்…. பயப்படாதீங்க சார்….” என்றான் மென்மையான சிரிப்புடன்.
“ம்ம்… எப்படியும் உனக்கு செலக்சன் வந்தே ஆகணும்….” என்றவர் சட்டென்று ஏதோ யோசனைக்குப் போனார்.
“ம்ம்… சரி சார்… நீங்க எதையோ சொல்ல முடியாம மனசுக்குள்ளே வச்சிட்டு தவிக்குற போல இருக்கு…. என்கிட்டே சொல்லுங்களேன் சார்…” என்றான்.
“ம்ம்… இல்லேன்னு நான் சொல்ல மாட்டேன்… ஆனா அதை சொல்ல இப்போ சமயம் ஆகலை…. நீ டெஸ்ட்ல எப்படியும் பாஸ் ஆகு… அப்புறம் சொல்லறேன்…” என்றவர் அவர்களிடம் கூறிவிட்டு விடை பெற்றார்.
அவன் மனதுக்குள் அந்த விஷயம் சுற்றிக் கொண்டே இருந்தது. எழுந்து அவன் உள்ளே வரவும் மருதாணி போட்டு முடிக்கும் தருவாயில் இருந்தனர் பெண்கள்.
“அம்மா… பசிக்குது… மதியம் என்ன சமையல்…” என்றவன் அன்னையிடம் அமர்ந்து அவர் மடியில் படுத்துக் கொண்டான்.
“டேய்… என்னடா கண்ணா இது… மருதாணி போடும் போது இப்படியா மடியிலே படுப்பே… எந்திரு….” என்றார் சபர்மதி.
“போங்கம்மா… உங்க மடியில படுத்து எவ்ளோ நாள் ஆச்சு…. சரி சீக்கிரம் முடிச்சுட்டு எனக்கு சாப்பிடத் தாங்க….” என்றான்.
“மதியம் வெங்காயப் புளிக்குழம்பும் அவரைப் பொரியலும் மட்டும் தான் பண்ணேன்…. உனக்கு தோசை ஊத்தித் தரவா….” என்றார்.
“வாவ்…. புளிக் குழம்பா…. எனக்கு அதுவே போதும்மா…. தோசை எல்லாம் வேண்டாம்… சீக்கிரம் குடுங்க….” என்றான்.
“காணாததைக் கண்ட போல பறக்கறதைப் பாரு….” என்று அதற்கும் ஹாஸினி அவனை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா… அப்படியே எனக்கும்….” என்றாள் வளர்மதி. ஹாஸினி தயக்கத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, “உனக்கு மா ஹாஸினி…..” என்றார்.
“நா… நான் அப்புறம் சாப்பிடறேன் அத்தை….” என்றாள் அவள்.
“சரிம்மா…..” என்று எழுந்து சென்றவர் ஒரு குழிவான கிண்ணத்தில் சாதம் போட்டு அதனுடன் புளிக்குழம்பை ஊற்றி ஒரு தட்டில் அரிசி வடகம் பொரித்ததும் பொரியலும் எடுத்துக் கொண்டு வந்தார்.
நன்றாகப் பிசைந்து உருளையாக்கி மகனின் கையில் வைக்க அவன் அதை வாய்க்குக் கொண்டு போவதற்குள் அவனது கையைப் பிடித்து தன் வாய்க்கு கொண்டு சென்றிருந்தாள் வளர்மதி.
அண்ணனைக் கண்டு கண்ணீருடன் அவள் புன்னகைக்க வசீகரன், சபர்மதியின் கண்களும் கலங்கின. வளர்மதியின் செயலை ஹாஸினி திகைப்பாய் பார்த்திருக்க அவர்கள் கண்கலங்கியதும் ஒன்றும் புரியாமல் திகைத்தாள்.
“அண்ணா….. நான் மறுபடியும் உன் கையில இப்படி சாப்பிட முடியும்னு நினைக்கவே இல்லைண்ணா…. அண்ணிக்கு தான் நன்றி சொல்லணும்….” என்றவளின் தோளில் அவன் ஆதரவாய்க் கை வைக்க அவன் தோளில் சாய்ந்து மெல்லக் குலுங்கினாள் அவள்.
“வளர்… நீ அழுதது போதும்டா… இனி எப்பவும் சந்தோஷமா சிரிச்சுட்டே இருக்கணும்….” என்றவன், “அம்மா… சாப்பாடு கொடுங்க….” என்று அடுத்த உருளையையும் வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவர்களைத் திகைப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்த ஹாஸினிக்கு ஒன்றும் புரியா விட்டாலும் இது போல நெகிழ்ச்சியான சூழல் இதுவரை தன் வாழ்க்கையில் அவள் கண்டதில்லை….
“ஹாஸினி….. என்னம்மா… திகைச்சுப் போயி பார்த்திட்டு இருக்கே… இவுங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான்…. தங்கைக்காக எதையுமே விட்டுக் குடுக்க தயங்க மாட்டான் என் புள்ள…. அது அவன் உயிரா நினைக்குற லட்சியமா இருந்தாலும்….” என்றவரின் குரலில் பெருமை நிறைந்திருந்தது.
அவர்களுடன் சேராமால் தனிமைப் பட்டுப் போனது போல் தோன்ற அவளது முகம் வாடிப்போனது. தன்னையும் அந்த சூழலில் சேர்த்துக் கொள்ள மாட்டானா… என்று அவள் மனதில் அவளையும் அறியாமல் ஒரு ஏக்கம் எழுந்தது….
அவள் வாடிய முகத்தை நோக்கிய வசீகரன், “ஹஸீ….. நீயும் சாப்பிட வா….” என்றதும் அவள் மறுபேச்சுப் பேசாமல் கை கழுகி அங்கே வந்து அமர அவளது கையிலும் உருளையை வைத்தார் சபர்மதி.
நினைவு தெரிந்து அவள் சாப்பிட்ட எந்த உணவிலும் அத்தனை சுவையை உணர்ந்ததில்லை அவள்.
என் பிரியமான பிரியமே….
என்னுள் பிரிவில்லா இதயமே….
என் இதயத் துடிப்பின் ஓசையாய்
என் அனைத்துமான ஆத்மாவே….
உயிரென்றால் பிரிவுண்டு….
உணர்வென்றால் மாற்றமுண்டு….
உலகமென்றால் அழிவுண்டு….
அதனால் என் ஆத்மாவாய்
நீ நிறைந்திருப்பாய்….. என்றும்
நீங்காமல் நிறைந்திருப்பாய்….
உனக்குள் ஒளிந்திருக்கும்
என்னை உனக்கு உணர்த்துவேன்…
உண்மை புரியாத கலக்கம்
உன்னில் மாற்றிக் காட்டுவேன்….
கண்ணுக்குத் தெரியாத
சுவாசமாய் கலந்திருக்கிறேன்
உன் மூச்சுக் காற்றில்….
அதை நீ உணர்ந்து கொள்ளும்
நாள் வரும் பெண்ணே….
எனை அறிந்து எந்தன்
தோள் சேர்வாய் கண்ணே….

Advertisement