Advertisement

அத்தியாயம் – 12
“மம்மி… நாங்க கிளம்பறோம்…..” கட்ஷூ சப்திக்க மாடிப்படியில் துள்ளிக் குதித்து இறங்கி வந்தாள் ஹாஸினி.
விடியற்காலையில் வால்பாறையில் இருந்து கிளம்பி மதியம் அவர்களின்  வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மதிய உணவை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்தவர்கள் வளர்மதியைக் காண்பதற்காய் வசீகரனின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
“கிளம்பிட்டியா ஹாஸினி….” என்றவர், அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “என்னம்மா இது… இன்னைக்கும் ஜீன்ஸ் தானா… அழகா ஒரு புடவை கட்டிட்டு மாமியாரைப் பார்க்கப் போகக் கூடாதா…” அலுத்துக் கொண்டார்.
“போங்க மம்மி… இந்த சேலைன்னாலே எனக்கு அலர்ஜி… அங்க தெரியுதா…. இங்க தெரியுதான்னு பார்த்துகிட்டே இருக்கணும்…. அதும் இல்லாம சேலையைப் போல ஒரு செக்ஸியான டிரெஸ் வேற இல்லை… நான் போட்டிருக்குற டிரெஸ்சுக்கு என்ன மம்மி குறைச்சல்…. பாருங்க… எங்கெல்லாம் கவர் ஆகணுமோ… அங்கெல்லாம் கவர் ஆயிருக்கு… போட்டுக்குறதுக்கும் கம்பர்டபிளா இருக்கு…” என்றாள் மகள்.
வெள்ளை நிற ஷர்ட்டை ஜீன்ஸுக்குள் நுழைத்து ஒரு கூலரை ஷர்ட்டில் சொருகி வைத்திருந்தது பார்ப்பதற்கு அழகாய் நன்றாக தான் இருந்தது.
“ம்ம்… நீ சொல்லுறதெல்லாம் சரிதான்… இருந்தாலும் சம்மந்தி என்ன நினைப்பாங்களோ…” என்றார் ராஜேஸ்வரி.
“அதெல்லாம் அவுங்க ஒண்ணும் நினைக்க மாட்டாங்க… அதைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க மம்மி… அவுங்களுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும்…” என்றாள்.
“ம்ம்… சரி… உன் இஷ்டம்…. மாப்பிள்ளை எங்கேம்மா…”
“உன் மாப்பிள்ளை அவர் அம்மாகிட்டே போன்ல பேசிட்டு இருக்கார்மா… இப்ப வந்திடுவார்…” என்றாள்.
“அதென்ன என் மாப்பிள்ளை….. அவர் அம்மான்னு சம்மந்தம் இல்லாத போல சொல்லிட்டு… அழகா மாப்பிள்ளையோட அம்மாவை அத்தைன்னு சொல்லு….” என்றார்.
அதைக் கேட்டு ஹாஸினி மனதுக்குள் ஏதோ முணங்கிக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்க அதற்குள் வசீகரன் அங்கு வந்தான்.
“மாப்பிள்ளை… நானும் வளர்மதியைப் பார்க்க வரணும்னு நினைச்சேன்… பயணம் முடிஞ்சு வந்ததால உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது…. அசதியா இருக்கு….” என்றார் ராஜேஸ்வரி.
“அதுனால என்ன அத்தை…. நீங்க ரெஸ்ட் எடுங்க…. நாங்க பார்த்திட்டு இன்னைக்கு அங்கே தங்கிட்டு நாளைக்கு வந்திடறோம்…” என்றான் அவன்.
“என்னது நைட் அங்கே தங்குறதா…. அதெல்லாம் முடியாது…. அன்னைக்கு ஒரு நாள் ஏசி இல்லாம தங்கினதே என்னால முடியலை….” என்று முரண்டு பிடித்தாள் ஹாஸினி. மனதுக்குள் வீட்டில் தங்க வேண்டும் என்பதை இதுவரை தன்னிடம் கூறாமல் அன்னையிடம் கூறிய வசீகரனைக் குதறும் வெறி இருந்தது.
அவள் கூறியதைக் கேட்டதும் வசீகரனின் முகம் வாடிப் போக அதைக் கண்ட ராஜேஸ்வரிக்கு அவனது மனநிலை புரிந்தது. 
“என்னம்மா… இப்படி சொல்லறே…. மாப்பிள்ளை ஆசைப்பட்டு சொல்லுறார்ல…. அவுங்க வீடு இப்படிதான்னு தெரிஞ்சு தானே இஷ்டப்பட்டே… இப்போ இப்படி சொல்லலாமா… ஒரு நாள் தானே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…. இல்லேன்னா அவுங்களையும் இங்கே நம்ம வீட்லயே வந்து தங்க சொல்லட்டுமா….” என்றார் ராஜேஸ்வரி.
அன்னையின் முன்னில் நடிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது….. வசீகரனின் குடும்பத்தையும் இங்கே கொண்டு வந்து வைத்தால் அவர்களின் முன்பும் நடித்துக் கொண்டு தன் நேரம் முழுவதும் மற்றவர் முன் நடிப்பதிலேயே போய் விடுமோ…. என யோசித்த ஹாஸினி, அவசரமாய் அன்னையிடம் மறுத்துக் கூறினாள்.
“அதெல்லாம் வேண்டாம் மம்மி…. அத்தை அதையெல்லாம் விரும்ப மாட்டாங்க….” என்று இல்லாத சபர்மதியின் மீது பழியைப் போட்டுவிட்டு…. “அப்படித்தானே வசீகரன்….” என்றாள் அவனிடம் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.
அன்னையும், தங்கையும் இங்கே வந்தால் அவனது பாடும் திண்டாட்டம் தான் என நினைத்த வசீகரனும், “ஆமாம் அத்தை… அம்மா அதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க….” என்றான்.
“ம்ம்… அப்படின்னா நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும் ஹாஸினி… இன்னைக்கு நீங்க அங்கே நின்னா சம்மந்திக்கும் சந்தோஷமா இருக்கும்ல…” என்றவர், “சங்கர்கிட்டே சொல்லி காரை வெளியே நிறுத்த சொல்லிடுங்க மாப்பிள்ளை…” என்றார்.
“காரெல்லாம் வேண்டாம் மம்மி… என்னோட பைக்லயே போயிக்கறோம்…. கொஞ்ச நாளா பைக் எடுக்காம எப்படியோ இருக்கு….” என்ற ஹாஸினியின் மனது காருக்குள்ள உக்கார்ந்துட்டு இவன் எப்படி பார்ப்பான்னு எனக்குத் தானே தெரியும்… என்று வாதாடிக் கொண்டிருந்தது.
அவள் மனதுக்குள் என்ன நினைக்கிறாள் என்பதை அவளது யோசனை படிந்த முகத்திலேயேயே கண்டு கொண்டான் வசீகரன்.
“சரி… பைக்ல பார்த்துப் போயிட்டு வாங்க…. அப்புறம் மாப்பிள்ளை… உங்களுக்கு ஒரு பைக் புக் பண்ணனும்… எந்த கம்பெனி… என்ன கலர்ல வேணும்னு சொன்னா… நம்ம மேனேஜர் கிட்டே போயி புக் பண்ண சொல்லிடறேன்…” என்றார் ராஜேஸ்வரி.
அதைக் கேட்டதும் “யார் வீட்டுக் காசுல யாருக்கு பைக் வாங்குறது….” என நினைத்த ஹாஸினி, “அதெல்லாம் வேண்டாம் மம்மி… என் பைக் இருக்குல்ல… ரெண்டு பேரும் ஒண்ணா தானே ஸ்டேஷனுக்குப் போகப் போறோம்… இவருக்கு தனியா எதுக்கு…. இல்லையா வசீகரன்…. நான் சொல்லுறது சரிதானே….” என்றாள் அவனிடம் கண்களால் அதற்கு சம்மதிக்குமாறு மிரட்டியவாறே.
“ம்ம்… என்கிட்டயே உன் வேலையைக் காட்டறியா….” என நினைத்துக் கொண்ட வசீகரன், “ஆமாம் அத்தை…. அவுங்க சொன்ன போல எனக்கு தனியா எதுக்கு பைக்… இவுங்க வண்டியே போதும்….” என்றான்.
“அதென்ன மாப்பிள்ளை…. கட்டின பொண்டாட்டிய வாங்க போங்கன்னு பேசறது…. வால்பாறை போனப்போ பேபின்னு உரிமையா கூப்பிட்டீங்களே… அதைக் கேட்க எவ்வளவு நல்லா இருந்துச்சு… அதை விட்டுட்டு இப்போ வாங்க போங்கன்னு சொல்லறீங்க….” என்றார் ராஜேஸ்வரி.
“அச்சோ…. இந்த மம்மி… சும்மா இருக்கவனைத் தூண்டி விடறாங்களே….” என பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
“ம்ம்… அதென்னமோ இங்கே வந்தாலே மேடம்னு ஒரு மரியாதை வந்திருது அத்தை…. அதான்….” என்று சிரித்தவன்,
“கிளம்பலாமா பேபி….” என்று கையில் சின்ன பேக் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
“ம்ம்… கிளம்பலாம்… ஓகே… பை மம்மி…. நீங்க ராத்திரி பீபி டேப்லட் போட மறந்துடாதிங்க…. டேக் கேர் மம்மி…..” என்றவள் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே நடக்க அவளைத் தொடர்ந்தனர் வசீகரனும் ராஜேஸ்வரியும்.
அவள் பைக்கில் அமர்ந்து சாவியைக் கொடுத்து ஆன் பண்ண, “மாப்பிள்ளை ஒட்டட்டும்… நீ பின்னாடி உக்காரு ஹாஸினி…..” என்றார் ராஜேஸ்வரி.
“நோ மம்மி… இதுவரைக்கும் யார் பின்னாடியும் நான் வண்டியில் உக்கார்ந்ததில்லை…. இன்னைக்கும் அப்படியே தான்…. நீங்க உக்காருங்க… வசீகரன்….” என்று கூலரைக் கண்ணுக்குக் கொடுத்து வசீகரனை, அலட்சியமாய் பார்த்தாள்.
அவளது பிடிவாதம் தெரியும் ஆதலால் அதற்கு மேல் ராஜேஸ்வரி எதுவும் பேசவில்லை.
ஹாஸினி கூறியதைக் கேட்ட வசீகரன், “மவளே…. நீயே எனக்குத்தான்னு தீர்மானிச்சுட்டேன்…. உன் வண்டி மட்டும் என்னோடதில்லாம  போயிடுமா…… நீயே என்னை ஓட்டச் சொல்லி வண்டியைக் கொடுக்கறியா…. இல்லியான்னு பாரு….” என்று மனதுக்குள் கருவிக் கொண்டே அவள் பின்னாடி அமர்ந்து பாக்கெட்டில் இருந்த கூலரை எடுத்துக் கண்ணுக்குக் கொடுத்தான்.
இருவரின் ஜோடிப் பொருத்தம் கண்டு எப்போதும் போல இன்றும் மனம் நிறைந்தார் அந்த அன்னை. பட்டு சேலை, வேஷ்டி ஆனாலும், மாடர்ன் உடைகள் ஆனாலும் இருவருக்கும் நல்ல பொருத்தம் என்று நினைத்து சந்தோஷித்தார்.
“சரி… பார்த்துப் போம்மா….. மாப்பிள்ளை… ஹாஸினியை நல்லா கெட்டியா பிடிச்சு உக்கார்ந்துக்கோங்க…. அவளுக்கு மெதுவா போகவே தெரியாது….” என்றார்.
“சரி அத்தை….” என்றவன் அவள் தோளில் அழுத்தமாய் கை வைத்துப் பிடித்துக் கொள்ள அடுத்த நொடியே அவளது இறுக்கமும் அவளுக்குள் இருந்த அலட்சிய பாவமும் விலகி ஒரு கூச்சம் வந்து விட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு வண்டியை எடுத்தாள்.
அவர்கள் செல்வதைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
இளம் மனைவியுடன் அவளுக்குப் பின்னால் பைக்கில் அமர்ந்து மிதமான வேகத்தில் செல்வது தான் என்னவொரு சுகம்…. அதை அனுபவித்து கற்பனையில் சிறகு முளைத்துப் பறந்து கொண்டிருந்தான் வசீகரன்.
அவள் வண்டியை சற்று வேகமாய் விட மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் போது அவள் மீது வேண்டுமென்றே தாராளமாய் சாய்ந்து கொண்டான் வசீகரன். அவளுக்கு தாறுமாறாய் நரம்புகள் கொதிக்க அவஸ்தையாய் நெளிந்தாள்.
“வசீகரன்… என்ன இது…. விட்டா மேல படுத்துக்குவீங்க போலிருக்கு… கொஞ்சம் தள்ளி உக்காருங்க….” என்றாள் சிடுசிடுவென்று.
அது அவனுக்கு கேட்காதது போல் அவள் காதருகில் நெருங்கி வந்தவன், “என்ன சொன்னே பேபி…..” என்று கிசுகிசுத்தான்.
அவனது உதடுகள் அவள் காதை உரசியதில் மேலெங்கும் சிலிர்க்க தவியாய்த் தவித்துப் போனவளின் கைகளில் வண்டியின் ஹேண்டில் பார் பாலன்ஸ் இல்லாமல் ஆடியது. அதில் ஒரு குழியில் அவள் வண்டியை இறக்க வேண்டுமென்றே அவள் இடுப்பில் கைவைத்து அவளை இறுக்கிக் கொண்டான் வசீகரன்.
அவனது விரல்களின் ஸ்பரிசத்தில் அவள் நரம்புகள் எங்கும் புதுவித உணர்வுகள் பாய அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டாள் அவள்.
“வசீகரன்…. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க…. ரொம்ப ஓவரா போறீங்க… இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை…” உணர்ச்சி வேகத்தில் முகம் சிவந்து கத்திக் கொண்டிருந்தவளை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே,
“ச… சாரி… பேபி…. நான் வேணும்னே செய்யலை…. எனக்கு வண்டியில் பின்னாடி உக்கார்ந்து பழக்கம் இல்லை…. நீங்க வேற வேகமா ஓட்டுறீங்களா…. அதான் பாலன்ஸ் இல்லாம உங்களை இறுக்கிப் பிடிச்சுகிட்டேன்… குழியில் வண்டி இறங்கினதும் எங்கே விழுந்திருவோமோன்னு தான் இடுப்புல புடிச்சிட்டேன்…. மத்தபடி நான் எதுவுமே பண்ணலையே…” என்றான் குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டு.
அவன் முகபாவத்தைக் கண்டு அவளே ஒரு கணம் திகைத்துப் போனாள். “அவன் சொல்லுவது சரியாக இருக்குமோ….” என யோசித்தவள் அமைதியானாள்.
“சரி…. நீங்களே வண்டிய ஓட்டுங்க…. நான் பின்னாடி உக்கார்ந்துக்கறேன்….” என்றாள் வேறு வழியில்லாமல்.
அதைக் கேட்டதும் அவனுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போலத் தோன்றியது. அவன் நினைத்தது போல் கிடைக்கும் சின்ன வெற்றியல்லவா…
“ஓகே….” என்றவன், “நானும் கொஞ்சம் வேகமா தான் போவேன்…. பயமா இருந்துச்சுன்னா என்னை இறுக்கமா பிடிச்சுக்கோங்க….. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…. ஆபத்துக்குப் பாவமில்லை…” என்று பெருந்தன்மையாய் சொல்லியவனைக் கண்டு அவளுக்கு ஆத்திரமாய் வந்தது.
“அன்னை சொன்னது போல் காரையே எடுத்து வந்திருக்கலாமோ… இத்தனை அவஸ்தை இருந்திருக்காதோ….” என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. “ம்ம்ம்…. இவன் என்னை ரொம்பவே சீண்டுகிறான்… இவனை ஏதாவது பண்ணி கொஞ்சம் அடக்கணுமே….” என நினைத்துக் கொண்டாள். 
வசீகரன் வண்டியை எடுத்ததும் அவனுக்குப் பின்னால் இரு புறமும் காலைப் போட்டு உக்கார்ந்து கொண்டாள் ஹாஸினி. அவன் வேகமாய் வண்டியை ஓட்டினாலும் முடிந்தவரை விலகியே இருந்தவள் ஒரு வளைவில் அவன் வண்டியை சரித்துக் கொண்டே திரும்பவும் அவளையறியாமல் அவன் தோளில் தன் கரத்தைப் பதித்து அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டாள்.
அவளது கால்கள் அவனது காலை உரசிக் கொண்டிருக்க அவளது உடல் அவன் முதுகின் மீது அழுத்தமாய் உரசி விலகியது. இது வரை உணராத அந்தப் புது அனுபவத்தில் நிலைகுலைந்து தவித்துப் போனாள் ஹாஸினி.
அவனது அருகாமையும் அவனது முறுக்கேறிய திரண்ட தோள்களின் ஸ்பரிசமும் அவள் மதியை மயக்க அதற்குப் பிறகு அவன் தோளின் மீது வைத்த கையை அவள் எடுக்கவில்லை…. அவனது முதுகில் மெல்ல உரசிக் கொண்டு அமர்ந்திருப்பது அவள் மனதிலும் ஓராயிரம் பட்டாம் பூச்சிகளைப் பறக்க வைத்தது. ஒரு வித மோன நிலையில் தன்னை மறந்து அந்தப் பயணத்தை ரசித்திருந்தாள் அவள்.
அவனை அப்படியே கட்டிக் கொள்ளவேண்டும் போலத் தோன்றிய மனத்தைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளுக்கு வீடு வந்து சேர்ந்ததும் கூடத் தெரியவில்லை….
வண்டியை வீட்டின் முன்பு நிறுத்திய வசீகரன் அவளது நிலையைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டே “இறங்கலையா பேபி… இன்னொரு ரவுண்டு போயி வருவோமா…” என்றான் அவள் பக்கம் சாய்ந்து.
அதில் திடுக்கிட்டு தலையைக் குலுக்கிக் கொண்டவள், ஏதோ செய்யக் கூடாததை செய்துவிட்டது போல் சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் வண்டியில் இருந்து இறங்கினாள்.
“ச்சே…. என்ன இது… இவன் அருகாமையில் நான் இப்படி சுயம் மறந்து போகிறேன்… வசியக்காரன்…. பெண்களை எப்படி வசீகரிக்க வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறான்…” என்று அதற்கும் அவனையே குற்றக் காரன் ஆக்கினாள்.
“அவன் மீது இப்படி ஒட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறேனே… அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்….” என்று அவள் மீதும் கோபம் வந்தது. “அவன் நினைப்பதைப் பற்றி நமக்கென்ன… என்று அவளால் இருக்க முடியவில்லை….” ஒருவித தவிப்பாய் இருந்தது.
அதற்குள் வாசலுக்கு வந்த சபர்மதி, “வாம்மா…. ஹாஸினி…. வாடா கண்ணா…” என்றார் அன்புடன். அன்பான அவரது வரவேற்பில் சற்று முகம் தெளிந்தவள்,
“வளர் எப்படி இருக்கா அத்தை….” என்று விசாரித்தாள்.
“ம்ம்… இப்போ கொஞ்சம் எழுந்து வீட்டுக்குள்ளே நடக்குறாம்மா…. நீங்க உக்காருங்க… நான் காபி எடுக்கறேன்…” என்றவர், “வளர்…. அண்ணனும் அண்ணியும் வந்திருக்காங்க பாரு…” என்று அவளது அறைக்குள் குரல் கொடுத்தார்.
அதற்குள் தங்கையைத் தேடி அவளது அறைக்கு செல்லப் போன வசீகரன் அவளே வருவதைக் கண்டதும், “வளர்…. எப்படிடா இருக்கே….” என்றான்.

Advertisement