Advertisement

வானம் தொடும் பனி மூடிய மலைகளும் புகையாய் சூழ்ந்த மேக மூட்டமும் அந்த இடத்தை மிகவும் அழகாக்க அதன் நடுவே ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி. வால்பாறையில் சில நாட்களாய் பெய்து வந்த மழையால் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்திருந்தது.
அருவியாய்க் கீழிறங்கி அழகான நீரோடையாய் பச்சைத் தாவணி அணிந்த தேயிலைக் குன்றுகளுக்கு நடுவே சலசலத்து சிணுங்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் தங்கமாய் ஜொலிக்க அதைக் காணக் காணத் தெவிட்டவில்லை….
மனம் முழுதும் உற்சாகத்தில் நிறைந்திருக்க அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று கார் மேகம் இருளாய் அந்த இடத்தைச் சூழ சட சடவென்று மழைத் துளிகள் விழத் தொடங்கியது.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் அனைவரும் காரை நோக்கி நடக்க ஹாஸினி அங்கிருந்து நகர விருப்பம் இல்லாமல் மழைத் துளியைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். அனைவரும் முன்னில் நடக்க அவள் வராமல் இருப்பதைக் கண்ட வசீகரன்,
“வா….” என்று அவளது கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.
அதில் அவளுக்குக் கோபம் வர, “கையை விடுங்க… வசீகரன்….” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.
“முதல்ல காரில் ஏறுங்க… இங்கே மழை தொடங்கினா அப்புறம் வண்டில போறதும் ரொம்பப் பாடு… மழை வலுக்கறதுகுள்ளே நாம ரிசார்ட்டுக்குப் போயாகணும்…. இல்லேன்னா கஷ்டம்…” என்றான் மென்மையான குரலில்.
அதற்குள், “சீக்கிரம் வாங்க….” என்று பாஸ்கரும் தனபாக்கியமும் குரல் கொடுக்கவே வேகமாய் காருக்கு சென்று அமர்ந்தனர்.
பாஸ்கரும் தனபாக்கியமும் வந்த காரில் ஏறிக் கொண்ட ராஜேஸ்வரி இவர்களை சங்கருடன் அவர்களின் காரில் ஏறிக் கொள்ளுமாறு கூறி விட்டார்.
மழையும் வலுக்கத் தொடங்கவே ஒன்றும் பேசாமல் உள்ளே அமர்ந்தாள் ஹாஸினி. அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான் வசீகரன்.
முழுவதுமாய் ஏற்றி விடப்பட்ட கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அருகில் அமர்ந்து அவ்வப்போது அவள் மீது பார்வையை ஓட விட்ட வசீகரனின் செயல் அவளுக்குள் ஒரு தவிப்பை உருவாகியது. டிரைவரின் முன்னால் அவனை ஒன்றும் சொல்ல விரும்பாமல் அமைதி காத்தாள் ஹாஸினி.
அருகே மனம் விரும்பிய பெண்ணே மனைவியாய் அவனது தாலியை சுமந்து கொண்டு அமர்ந்திருக்க அவனது மனம் அவளது அருகாமையில் கட்டுப்பாடின்றித் தவித்து அவளுக்குள் தொலைந்து போகத் துடித்தது.
கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்த அலைபேசியை எடுக்க ஹாஸினி குனியவும் அவளது சேலை சற்று விலகி அவளது இடுப்பின் வளைவு அழகாய்த் தெரிய அதில் அவனது உணர்வுகள் சுர்ரென்று மூளையைத் தாக்கியது.
அவளது பார்வை வெளியே இருந்ததால் அவள் கவனிக்கவில்லை என்று நினைத்தவனின் பார்வை அவனையும் அறியாமல் அவள் மீது ரசனையோடு படிந்து கொண்டிருந்தது. அவளது சேலை கீழிறங்கி பளீரென்று வெண்மையாய்த் தெரிந்த இடுப்பைக் கிள்ளுவதற்காய் கைகள் பரபரக்க தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள மிகவும் சிரமப் பட்டான். பெருமூச்சுடன் கண்ணெடுக்க முடியாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹாஸினிக்கு சட்டென்று ஏதோ தோன்றவும் அவனிடம் திரும்பியவள், அவனது பார்வை சென்ற இடத்தைக் கவனித்து விட்டாள். சுர்ரென்று கோபம் தலைக்கேற முகம் சிவந்தவள் அவனை நோக்கி முறைக்க அவன் ஒன்றும் தெரியாத போல் திரும்பி அமர்ந்து கொண்டான்.
அவளுக்கு கண்ணிலும் காதிலும் இருந்தெல்லாம் கோபத்தில் புகை வர அவன் மீது இருந்த கடுப்பைக் காட்ட முடியாமல் சங்கரிடம் வள்ளென்று விழுந்தாள்.
“கொஞ்சம் ஸ்பீடா வண்டியை  ரிசார்ட்டுக்குப் விடுங்க… சும்மா உருட்டிகிட்டு இருக்கீங்க….” என்று கத்தியவளின் குரலில் வண்டி சற்று வேகமெடுத்தது.
இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்களுக்காய் அலங்கரிப்பட்ட முதலிரவு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் வசீகரன். எளிமையாக அலங்கரித்திருந்தாலும் அறையில் நிரம்பி இருந்த பூக்களின் வாசம் மனதை மயக்கியது.
“ஹாஸினி வந்ததும் எப்படி நடந்து கொள்வாளோ…. என் மீது கொலை வெறியில் இருப்பாளோ… காருக்குள் நான் அவள் இடுப்பைப் பார்ப்பது தெரிந்ததில் இருந்து எப்போது பார்த்தாலும் என்னை முறைத்துக் கொண்டே இருக்கிறாள்….. மனசுக்குள் நிறைந்திருப்பவளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ரசிக்க கூடாதென்றால் எப்படி… என் நிலை யாருக்கும் வரக் கூடாது கடவுளே…”
“அன்பாய் ஒரு வார்த்தை பேசி ஆசையாய் ஒரு பார்வை பார்த்திருந்தாலே அதில் நான் மயங்கிப் போயிருப்பேன்… மனதுக்குப் பிடிச்சவளோடு சில காலம் வாழ்ந்திருந்தாலும் மனசார வாழ்ந்திருப்பேன்….. அதைவிட்டு பணத்துக்காக எதையும் செய்து விடுபவன் போல அல்லவா எனை நினைக்கிறாள்….”
“ம்ம்…. ஆனாலும் ஹாஸினி… நீ ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை… அது உன் கண்களில் நீ உணராமல் ஒளித்து வைத்திருக்கும் என் மீதான காதல்…. நான் அதை வெளிக் கொணர்வேன் பெண்ணே…. இது என்னுடைய தேவை மட்டும் அல்ல… பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என நினைத்து மனதுக்குள் இருக்கும் காதலைக் கூட உணராமல் இருக்கும் உனக்கும் தேவை தான்….” அவன் மனது பலவாறு எண்ணிக் கொண்டிருக்க அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஹாஸினி.
அழகாய் சின்னக் கரை வைத்த மெரூன் வண்ணப் பட்டு சேலையில் தலை நிறையப் பூ வைத்து தேவதையாய் உள்ளே நுழைந்தவளின் முகமோ அதற்கு சம்மந்தமே இல்லாமல் கோபத்தைப் பிரதிபலித்தது.
“முதலிரவாம்…. முதலிரவு… இவுங்ககிட்டே யாரு கேட்டா…. ச்ச்சே…. படுத்துறாங்க….” என்று முனங்கிக் கொண்டே வந்தவள், கையில் கொண்டு வந்திருந்த பால் சொம்பைக் கொண்டு போய் அங்கிருந்த டீபாயின் மீது நங்கென்று வைத்தாள். அவளது கோப முகம் கண்ட வசீகரன் மனது பதறியது….
“ஆஹா… இன்னைக்கு என்னைக் கைமா போட்டுருவா போலிருக்கே…. முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது…” என்று நினைத்துக் கொண்டே கட்டிலில் படுத்துக் கொண்டு அவளைக் காணாதது போல தன் மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.
அதைக் கண்டவளுக்கு மேலும் கோபம் ஏறியது.
“கொஞ்சம் எந்திரிக்கறீங்களா….” என்ற அவளது குரலைக் கேட்டதும், “அட… என்ன இருந்தாலும் நம்ம தமிழ்ப் பெண்ணாச்சே…. நம்ம கலாசாரத்தை மறக்கலை போலிருக்கு…. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கப் போறாளோ….” என சற்று திகைத்துக் கொண்டே அவன் எழுந்து நின்றான்.
கட்டிலில் விரித்திருந்த மேல் விரியை இழுத்தவள் அங்கிருந்த சோபாவின் மீது எறிந்துவிட்டு,
“அங்கே போயி படுத்துட்டு மொபைல் நோண்டுங்க…. எனக்குத் தூக்கம் வருது….” என்றாள்.
அவள் காலில் விழப் போகிறாளோ என்ற அவனது எதிர்பார்ப்பு தவிடு பொடியாக அவனுக்கும் அவளை சீண்ட வேண்டும் போலத் தோன்றியது.
“எனக்கு பெட்ல படுத்தா தான் தூக்கம் வரும்…. நீங்க போயி சோபால படுங்க…” என்றவன் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு முன்னால் சென்று கட்டிலில் கை காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.
இதை அவனிடம் இருந்து எதிர்பார்க்காதவள், ஒரு நிமிடம் திகைத்தாள்.
“வசீகரன்…. எழுந்திருங்க…. நமக்குள்ளே பேசினதை மறந்துட்டீங்களா…. அப்பவும் அப்படிதான் கார்ல வரும்போது தாறுமாறா கண்ணை ஓட விடறீங்க… இப்போ என்னடான்னா என்கிட்டே வம்பு பண்ணிட்டு இருக்கீங்க…. எனக்கு சோபாவில் எல்லாம் படுக்க முடியாது… நீங்க போயி படுங்க….” என்றாள்.
“நமக்குள் பேசினதை நான் மறக்கவும் இல்லை….. அதை மறந்து எதையும் பண்ணவும் இல்லை… நீங்க சொன்ன போல புருஷன் வேஷம் போட்டாச்சு… அதை சரியா பண்ணனும் இல்லையா… நீங்க ஒரு பக்கம்… நான் ஒரு பக்கம் முகத்தை திருப்பிட்டு இருந்தா பாக்குறவங்க எப்படி நம்மை புருஷன் பொண்டாட்டின்னு நினைப்பாங்க…..” என்று நிறுத்தியவன் அவள் அமைதியாய் யோசிப்பதைப் பார்த்துவிட்டு தொடர்ந்தான்.
“அந்த பாஸ்கரும் உங்க அத்தையும் நம்மையே கவனிச்சுட்டு இருக்காங்க… நீங்க என்னடான்னா என்னை ஏதோ ஒருத்தனைப் போல பாக்கறீங்க…. மத்தவங்க முன்னாடியாவது என்னைப் புருஷனைப் போல நடத்தணுமா…. வேண்டாமா….” என்று அவளுக்கு சரியாகக் கொக்கி போட்டது அவனது டைரக்டர் மூளை.
“மவளே…. என்னையே புருஷனா நடிக்க அக்ரிமெண்ட் போடறியா…. நான் மத்தவங்களை நடிக்க வைக்க நினைச்சவன்…. நீ என்னையே நடிகனா மாத்தி என் வாழ்க்கைலயே நடிக்க வச்சுட்டே….. ஒரு இயக்குனரா இருந்து நம்ம வாழ்க்கைய எப்படி நான் மாத்தப் போறேன்னு மட்டும் பாரு…..” என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டவன் தொடர்ந்தான்.
“இப்ப உங்க அத்தையும், பாஸ்கரும் நம்மை கவனிக்குற மாதிரி நம்ம வீட்டுப் பெரியவங்க கவனிக்க ஆரம்பிச்சா அப்புறம் என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…. அதனால ஒரு பொண்டாட்டி பக்கத்துல இருந்தா புருஷன் என்ன பண்ணுவானோ அதை தான் நான் பண்ணினேன்…. நடிப்புன்னு வந்துட்டா அது இயல்பா இருக்கணும்ல….”
“இந்த ரூமுக்குள்ள கண்டிப்பா உங்களை நான் தொந்தரவு பண்ண மாட்டேன்… ஆனா வெளிய நீங்களும் கொஞ்சம் பொண்டாட்டிங்குற வார்த்தைக்கு தகுந்த போல நடந்துகிட்டா தான் மத்தவங்களுக்கு எந்த சந்தேகமும் வராம இருக்கும்….” என்று அவளது வழியிலேயே சென்று அவளை யோசிக்க வைத்தான்.
அவளுக்கும் அவன் சொல்லுவதன் காரணம் புரிய அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம்…. நீங்க சொல்லுறதும் சரிதான்…. என் அம்மாவுக்கோ உங்க அம்மாவுக்கோ நம்மளோட விஷயம் தெரிந்தால் ரொம்ப வருத்தப் படுவாங்க…. அவுங்களால இதையெல்லாம் ஏத்துக்கவும் முடியாது…. தாங்கிக்கவும் முடியாது….. அதனால நீங்க சொல்லுறதுக்கு நானும் ஒத்துக்கறேன்…. ஆனா அதுக்காக என்கிட்டே எல்லை மீறப் பார்த்தீங்க…. அப்புறம் நான் பொல்லாதவளாயிடுவேன்….” என்று மிரட்டுவது போல் கூறினாள்.
கண்ணை உருட்டி விரலை நீட்டி சிறு பிள்ளை போல் அவள் சொன்ன அழகில் மயங்கிப் போன வசீகரன் அந்தப் பிஞ்சு விரலைப் பிடித்து முத்தமிடத் துடித்த மனதை அடக்கி மறுபுறம் திரும்பிக் கொண்டான்.
“நான் எந்த எல்லையும் மீற மாட்டேன்…. உங்களைத் தொடக் கூட மாட்டேன்…. ஆனால் என்னோட பார்வைகள் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்… அப்பத் தானே எதார்த்தமா இருக்கும்….” என்றவன்,
“அப்புறம் பேபி….” என்று கூறியதும் அவள் முறைக்க… “அட… இனி எல்லார் முன்னாடியும் உங்களை நான் பேபின்னு தான் செல்லமா கூப்பிடப் போறேன்…”
“செல்லப் பேரெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… பேபியாம் பேபி….” என்று அவள் சண்டித்தனம் செய்ய அவளை நிதானமாய்ப் பார்த்தவன்,
“காதலிச்சு கல்யாணம் பண்ணினதா எல்லாருக்கும் சொல்லி இருக்கோம்…. செல்லப் பேரு கூட வைச்சுக் கூப்பிடலேன்னா எப்படிங்க…. கொஞ்சம் பொறுத்துக்கோங்க…. சரி…குட் நைட்…. நீங்க சோபாவில் படுத்துக்கோங்க…” என்று கட்டிலில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டான்.
வேறு வழியில்லாமல் அவளும் சோபாவில் சென்று காலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். உறக்கம் தான் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.
வசீகரன் பேசியதை நினைத்துக் கொண்டே படுத்திருந்தவள் தூங்க முடியாமல் எழுந்து குளிருக்கு இதமாய் கையை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு  நடக்கத் தொடங்கினாள்.
அறைக்குள் இருந்த ஜீரோ வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் எந்த சலனமுமில்லாமல் மார்புக்குக் குறுக்கே ஒரு கையை வைத்து மறு கையை நெற்றியில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த வசீகரனைக் கண்டதும் அவள் மனம் இளகியது.
சிறிது நேரம் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவள், “ம்ம்… எப்படி இப்படி எதையும் யோசிக்காமல் குழந்தை போல உறங்குகிறான்…. எத்தனை நாளாய் ஹாஸ்பிடலில் உறங்காமல் கழித்தானோ… இன்றாவது  நிம்மதியாய் உறங்கட்டும்…” என நினைத்துக் கொண்டாள்.
அவனைக் காணும்போது தீயாய் எரிந்தவள் இப்போது அவனை நினைத்து மெழுகாய் உருகி நின்றாள். அதை யோசிக்கும் நிலையில் தான் அவள் இல்லை…. மறுபடியும் சோபாவில் சென்று படுத்தவள் உறங்க முடியாமல் தவித்தாள்.
“சரி…. அவன் தான் நல்ல உறக்கத்தில் இருக்கிறானே…. கட்டிலில் படுத்தே உறங்கலாம்…. ஆபத்துக்குப் பாவமில்லை….” என நினைத்தவள், ஒரு தலையணையை எடுத்து படுக்கையின் நடுவில் இருவருக்கும் தடையாய் வைத்துவிட்டு கட்டிலின் மறுபுறத்தில் படுத்தாள்.
ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்தவள் வசீகரனின் முகத்தையே ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, “இவனை நம்பி அருகில் படுக்கலாமா….” என யோசித்தாள்.
“ம்ம்… அவன் நல்ல தூக்கத்தில் இருக்கிறான்…. நாமும் தூங்குவோம்….” என நினைத்து திரும்பிப் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்திற்குப் பிறகு அவள் உறங்கி விட்டது தெரிந்து கண்ணைத் திறந்த வசீகரன் அவளது முதுகையே சிறிது நேரம் வெறித்துக் கொண்டு இருந்தான். பிறகு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு அவனும் உறங்கத் தொடங்கினான்.
பெண்ணே நீ என்ன
பாறையா….. பனியா…
பல நேரம் பாறையென
இறுகிப் போகிறாய்….
சில நேரம் பனியென
உருகிப் போகிறாய்….
பெண்ணே நீ என்ன
நெருப்பா…. மெழுகா….
பல நேரம் நெருப்பென
கண்களால் எரிக்கிறாய்…..
சில நேரம் மெழுகென
காணாமல் உருகுகிறாய்….
எத்தனை முறை நீ
இறுகிப் போனாலும் உனை
பனியென உருக்கிடுவேன் நான்…
எத்தனை முறை நெருப்பாய்
சுட்டு மெழுகாய் உருகினாலும்
மீண்டும் வெளிச்சமாய் வருவேன் நான்….
என் கடைசித் துளியும் தீர்ந்து
கங்காக நான் மாறினாலும்
அத்துளியும் உனை நினைத்தே
உருகி இருக்கும்….
சுடுவதும் பின் உருகுவதும்
காதலில் மட்டும் தான் சாத்தியமோ…
சொல்லிவிடு பெண்ணே….

Advertisement