Advertisement

அத்தியாயம் – 10
மூன்று நாட்களுக்குப் பிறகு.
ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க அதைக் கண்டு உற்சாகமான ஹாஸினி தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவுகளில் காரை நிதானமாய் செலுத்தத் தொடங்கினார் டிரைவர் சங்கர். மொத்தம் நாப்பது கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டி இருந்தது.
வெளியே காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தவள் கார் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பத் தொடங்கியதும் திணறினாள். ஹாஸினிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. சில வளைவுகள் வரை பொறுத்தவள் அருகில் அமர்ந்திருந்த அன்னை ராஜேஸ்வரியிடம் சலித்துக் கொண்டாள்.
“ஏன் மம்மி…. நம்ம குலதெய்வம் கோவிலை பக்கத்துல எங்காவது மாத்திக்கக் கூடாதா… இப்படி மலையில கொண்டு போயி தான் வைக்கணுமா…. எனக்கு வயித்தைப் புரட்டிட்டு வருது…. காலைல பொள்ளாச்சியில் சாப்பிட்ட டிபனெல்லாம் வெளியே வந்திரும் போலிருக்கு….” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு முன்னில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்த வசீகரன் திரும்பிப் பார்த்தான். “அட….. நீ இவ்வளவு தானா….” என்பது போல் ஏளனமாய் அவளை நோக்கி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.
அதைக் கண்டு அவள் கடுப்புடன் அன்னையை நோக்க அவரோ, “அச்சோ… அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா…. தெய்வக் குத்தமாப் போயிடும்…. நம்ம குல தெய்வம் கோவிலுக்கு செய்ய வேண்டியதை செய்து தான் ஆகணும்… செய்யாம விட்டா அது நமக்கு தான் தோஷம்…. ஜோசியர் சொன்னதை மறந்துட்டியா…”
“ம்ம்…. உங்கப்பா இருக்கும் போது வருஷம் தவறாம கோவில் திருவிழாவுக்கு உன்னையும் கூட்டிட்டு வருவோம்…. இப்ப எல்லாம் நின்னுருச்சு….” என்று பெருமூச்சு விட்டார் ராஜேஸ்வரி.
“போங்க மம்மி… அந்த ஜோசியரை முதல்ல சொல்லணும்…. எங்களுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே…. மறுபடியும் எதுக்கு குலதெய்வம் கோவில்ல மாலை மாத்தணும்…. என்ன சாங்கியமோ…. கடுப்பா இருக்கு….” என்றவள் அடுத்த வளைவில் கார் திரும்பத் தொடங்கவும் மீண்டும் வயிற்றைப் பிசைவது போல் இருக்க கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.
ராஜேஸ்வரியைத் திரும்பிப் பார்த்த வசீகரனிடம், “பாருங்க மாப்பிள்ளை… இவ புரிஞ்சுக்காம பேசுறதை… நம்ம ஜோசியர் சொன்னதை செய்யாம இருக்க முடியுமா…..”
“உங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பார்த்தப்போ குல தெய்வத்தை திருப்திப் படுத்திட்டு தான் உங்க வாழ்க்கையை தொடங்கணும்னு சொல்லிட்டார்…. நம்ம கோவில்ல ரெண்டு பேரும் மாலை மாத்திட்டு அய்யர் சொல்லுற போல செய்துட்டா போதும்…. நமக்கும் நிம்மதி…” என்று நிறுத்தினார்.
“அதுக்கென்ன… உங்களுக்கு எது திருப்தியோ அது போல செய்துடலாம் அத்தை….” என்றான் வசீகரன்.
அவனது குரலைக் கேட்டு நிமிர்ந்தவள், “ம்ம்… இவரு செஞ்சு கிழிச்சாரு… பெருசா மாமியாருக்கு குடை பிடிக்க வந்தாச்சு… சரியான ஜால்ரா…..” என்று மனதுக்குள் பொருமிக் கொண்டே அவனை முறைத்தாள்.
“ம்ம்… அப்படி சொல்லுங்க மாப்பிள்ளை…. ரெண்டு பெரும் கல்யாணம் ஆன நாளில் இருந்து தனித்தனியாவே இருந்துட்டிங்க… தங்கையைப் பத்தின வருத்தத்தில் கல்யாணம் ஆன சந்தோசத்தைக் கூட முழுசா நீங்க அனுபவிக்க முடியலை……” அவர் பாட்டில் பேசிக் கொண்டிருக்க ஹாஸினியை முறைத்துக் கொண்டிருந்தான் வசீகரன். அவள் வெளியே பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள்.
அதைக் கவனிக்காமல் ராஜேஸ்வரி தொடர்ந்து கொண்டிருந்தார். “இப்பதான் எல்லாம் சரியாகி வளர்மதி வீட்டுக்கு வந்துட்டாளே… இனியாவது நீங்க சந்தோஷமா உங்க வாழ்க்கையைத் தொடங்குங்க…. நம்ம ரிசார்ட்டுல ரெண்டு நாள் தங்கி இருந்து ஊரை எல்லாம் சுத்திப் பார்த்துட்டு உற்சாகமா இருங்க…” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் வசீகரனின் முகம் ஒருவித எதிர்பார்ப்பில் ஹாஸினியை நோக்க அவன் மீது எதார்த்தமாய்ப் படிந்த தன் பார்வையை சட்டென்று மாற்றிக் கொண்டாள் ஹாஸினி.
அவள் மனதுக்குள் இனம் புரியாத ஒரு கலவரம் சூழத் தொடங்கியது. அது சந்தோஷமா… குழப்பமா… கோபமா…. என்று புரியாமல் வெளியே பார்வையைப் பதித்திருந்தாள். பச்சைக் கம்பளத்தை மலையெங்கும் விரித்தாற்போல் சரிவுகளில் இருந்த தேயிலைத் தோட்டங்கள் கண்ணை நிறைத்தன.
கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கார் சமதளத்தில் சென்று கொண்டிருக்க காரிலிருந்து கீழே பார்த்ததும் சின்ன சின்னதாய் தீப்பெட்டி போலத் தெரிந்த வீடுகளைக் கண்டதும் அவள் மனதில் அதுவரை இருந்த வெறுப்பு மாறி ஒரு உற்சாகம் வந்தது.
விடியற்காலையில் கோவையில் இருந்து புறப்பட்டவர்கள் பொள்ளாச்சியில் காலை உணவை முடித்துக் கொண்டு ஆழியார் வழியாக வால்பாறை வந்து சேர்ந்திருந்தனர். அங்கே இருக்கும் அவர்களின் குலதெய்வமான பாலாஜி கோவிலில் ஒரு சடங்கை முடிக்குமாறு அவர்களின் ஜோசியர் கூறி இருந்தார்.
வால்பாறையில் ராஜேஸ்வரியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் ரிசார்ட் இருந்ததால் அங்கேயே தங்கிக் கொள்ள முடிவு செய்தனர். தனபாக்கியத்திடம் விஷயத்தைக் கூறி முதல் நாளே அங்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தார் ராஜேஸ்வரி. அதனால் அவரும் பாஸ்கரும் முந்தின நாளே கிளம்பிப் போயிருந்தனர்.
சாலையின் சரிவில் அங்கங்கே தென்பட்ட வரையாடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி. அந்த இதமான வெயிலில் குளிர்மையாய் தழுவிச் சென்றது காற்று.
மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள்… அந்த மேகத்தை துளைத்து வெளியே வரத் துடிக்கும் சூரியக் கதிர்கள்… அழகான ரம்மியமான அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டே சென்றனர்.
சரிவாய் பச்சைப் போர்வைகளை அடுக்கினார் போல தென்படும் தேயிலைத் தோட்டங்களில் இருந்து புறப்பட்ட தேயிலை மணம் நாசியைத் துளைத்தது. எங்கெல்லாம் அழகான காட்சி தென்பட்டதோ அங்கெல்லாம் வண்டியை மெதுவாக ஓட்டச் சொல்லி படம் எடுத்துக் கொண்டாள் ஹாஸினி.
வால்பாறையில் உள்ள ரிசார்ட்டுக்கு வழி கேட்டு வண்டியை விட்டார் சங்கர். அவர்கள் அந்த ரிசார்ட்டை அடையும்போது மணி பத்தாகி இருந்தது. லேசாய் மழை தூறல் போட்டுக் கொண்டிருக்க அவர்களுக்காய் முன்னில் காத்திருந்த தனபாக்கியம் ஓடி வந்தார்.
“வாங்க…. பயணம் எல்லாம் சுகமாய் இருந்துச்சா….” என்றவர் அங்கிருந்த பணியாளிடம் எல்லாருக்கும் டீ போட்டுத் தருமாறு கூறினார். இயற்கையான தேயிலையில் தயாரித்த டீயைக் குடித்ததும் உற்சாகமாய் இருந்தது.  ஹாஸினி, வசீகரன் இருவரிடமும் குளித்து உடை மாற்றி வருமாறு கூறினார் ராஜேஸ்வரி.
அங்கிருந்த இரு அறைகளில் நுழைந்து கொண்டவர்கள் ஹீட்டர் போட்டிருந்த இதமான வெந்நீரில் குளித்து உடை மாற்றி வந்தனர். ராஜேஸ்வரியும் தனபாக்கியமும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க, வேஷ்டி சட்டையுடன் முதலில் வெளியே வந்த வசீகரன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து அன்னைக்கு அலைபேசியில் அழைத்தான்.
வளர்மதியைப் பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் வால்பாறைக்கு நல்லபடியாக வந்து சேர்ந்தனர் என்பதையும் கூறிவிட்டு வைத்தான். சற்று நேரத்தில் ஹாஸினியும் புறப்பட்டு வெளியே வர அவளைக் கண்ட வசீகரன் திகைத்தான்.
ரோஜா வண்ணப் பட்டுப் புடவையில் கூந்தலை அப்படியே விரித்து விட்டு எளிய அலங்காரத்தில் அப்போது தான் மலர்ந்த புத்தம் புதிய ரோஜாவைப் போல் பிரெஷாக இருந்தவளை தன்னை மறந்து விழுங்கி விடுபவன் போல பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
“அழகான ராட்சசி… என்னை இம்சை செய்யவே இப்படி புறப்பட்டு வந்து நிக்குறாளே…” மனதுக்குள் அவளை செல்லமாய் திட்டிக் கொண்டிருந்தவன், அவளது “வசீகரன்…..” என்ற அதட்டலான குரலில் நிமிர்ந்தான்.
“என்ன…. பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு…. நமக்குள் இருக்குற டீலை மறந்திட்டு பொண்டாட்டின்னு எங்காவது உரிமை எடுத்துக்க நினைச்சிங்க… நடக்குறதே வேற… வாங்க போகலாம்…” என்றாள்.
அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதில் சாட்டையால் அடித்தது போல் வலிக்க முகம் சிறுத்துப் போனான். ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே நடந்தவனை வெறித்துக் கொண்டு நின்றாள் ஹாஸினி.
அவனை நோகடிக்க வேண்டும் என்று ஹாஸினி அப்படிக் கூறி விட்டாலும் ரசனையான அவனது முகம் சட்டென்று வாடி விட்டதில் அவள் மனதுக்குள் சிறு வலி எழுந்தது. அவனை சந்தோஷிக்கவும் விடாமல் அவன் சங்கடப் படுவதைக் கண்டு ரசிக்கவும் முடியாமல் குழம்பியவளின் மனது என்ன எதிர்பார்க்கிறது என்பது அவளுக்கே புரியவில்லை.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“மம்மி…. நான் ரெடி… கிளம்பலாமா…” என்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த ராஜேஸ்வரியும் தனபாக்கியமும் அவளைக் கண்டு நிறைவாய் சிரித்தனர்.
“ம்ம்…. அப்படியே தங்க சிலையாட்டம் இருக்கா…. என் மருமக….” என்ற தனபாக்கியத்தை நோக்கி அவள் முறைக்கவே,
“உறவு முறையை மாத்த முடியுமா… நீ என் மருமக தானே கண்ணு…..” என்று வழிந்தார் அவர்.
“ம்ம்… அழகா இருக்கேடா…. என் கண்ணே பட்டிரும் போலிருக்கு…. சரி கிளம்பலாம்…” என்ற ராஜேஸ்வரி, “சங்கர்…. வண்டிய எடு….” என்றார்.
வால்பாறையில் இருந்து கருமலை வரை காரில் சென்றவர்கள் அங்கிருந்து அரைக் கிலோ மீட்டர் வரை கோவிலுக்கு நடக்க வேண்டி இருந்தது. இரு மருங்கும் பூத்துக் குலுங்கிய பூக்களைக் கண்டு ரசித்துக் கொண்டே இதமாய் வீசிய குளிர் காற்றில் சந்தோஷமாய் நடந்தனர்.
வசீகரன் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நடந்து கொண்டிருந்தான். அவனது மௌனம் ஏனோ ஹாஸினிக்கு சங்கடமாய் இருந்தது.
இனி இப்படி அவனை வேதனைப்படுத்திப் பேசக் கூடாது என நினைத்துக் கொண்டவள் அவனை சமாதானம் செய்ய அவனிடம் பேச்சு கொடுத்தாள்.
“வசீகரன்…. என்னை ஒரு போட்டோ எடுங்க….” என்று பூக்களின் அருகில் நின்று அவள் போஸ் கொடுக்க அவள் காமிராவை வாங்கி மௌனமாய் கிளிக்கினான் அவன்.
மெல்ல நடந்து அவர்கள் கோவிலை அடையும் போது நேரம் பதினொன்றை நெருங்கி இருந்தது. திருப்பதி போலவே மலையில் அமைந்திருந்த பாலாஜி கோவிலைச் சுற்றிலும் அழகான பூச்செடிகள் நிறைந்த பூங்காவும் இருந்தது.
அங்கிருந்த பசுமையும் பூச்செடிகளுக்கு நடுவில் இருந்த பாலாஜி கோவிலும் அனைவரின் கண்களிலும் ரசனையை வரவழைத்தது.
கோவிலுக்கு முன்னே இவர்களுக்காய் காத்திருந்தான் பாஸ்கர்.
“வாங்க… கோவில் வேற பன்னெண்டு மணிக்கு நடை சாத்திருவாங்க… உங்களை இன்னும் காணோமேன்னு பார்த்திட்டு இருந்தேன்….” என்றவன் கோவிலில் இருந்த அய்யரிடம் சென்று பூஜையைத் தொடங்குமாறு கூறினான்.
லேசான மழை தூறல் போட்டுக் கொண்டிருந்ததால் கோவிலில் ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அவர் ஏதேதோ மந்திரம் சொல்லி முடித்து ஒரு தட்டில் இரண்டு மாலையை வைத்து இவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
“இதை கையில வச்சுண்டு ரெண்டு பேரும் பெருமாளை நன்னா… நம்பிக்கையோட சேவிச்சுக்கோங்கோ…. நினைச்சபடி வாழ்க்கை அமையும்….” என்று இருவரிடமும் ஒவ்வொரு மாலையைக் கொடுத்தார்.
அந்த மாலையை கையில் பிடித்துக் கொண்டே இருவரும் பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டனர்.
ஹாஸினியின் மனது என்ன பிரார்த்திப்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருக்க, வசீகரனின் மனதோ பெருமாளை நம்பிக்கையோடு பிரார்த்தித்துக் கொண்டது.
“கடவுளே… உனக்கு முன்னால மாலையை மாத்திக்கிற இந்த பந்தம் என்றும் நிலைக்கணும்னு நான் ஆசைப்படறேன்… என் வாழ்க்கைல கல்யாணம்ங்கிறது ஒரு முறை தான்… அது ஹாஸினியோடதான்னு முடிவாயிருச்சு…..”
“அந்த பந்தம் என்றும் நிலைக்கணும்னு என்னைப் போல என் கழுத்தில் மாலை போடப் போறவளும் நினைக்கணும்….. அதுக்காக நான் எடுக்குற முயற்சிகளுக்கு நீதான் துணையா இருந்து நடத்தித் தரணும்….”
“அப்படி அவள் என்னைப் புரிஞ்சுகிட்டு மனசு மாறி மனசார என்னை ஏத்துகிட்டா அவ கையால உனக்குப் பொங்கல் வைச்சு உனக்கு என் முடியைக் காணிக்கையாக்குறேன்….” என்று வேண்டிக் கொண்டவன் கண்ணைத் திறந்தான்.
அவனது மூடிய கண்களுக்குள் உருண்டு கொண்டிருந்த கிருஷ்ணமணிகளையே பாத்திருந்த ஹாஸினி அவன் கண் திறக்கவும் பார்வையை மாற்றிக் கொண்டாள். அவளது மனதுக்குள், “இவன் என்ன பிராத்தித்து இருப்பான்….” என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
“ம்ம்… என்ன வேண்டிக்க போறான்… என்னை எப்படி அவன் வலைக்குள் விழுக வச்சு இந்த சொத்தெல்லாம் அடையறதுன்னு யோசிப்பான்… வேறென்ன யோசிக்கப் போறான்…. இவனும் சராசரி ஆம்பளை தானே….” என்று நினைத்துக் கொண்டவள் அலட்சியமாய் ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
“நீங்க முதல்ல ஆம்படையான் கழுத்திலே மாலையைப் போடுங்கோ….” என்று அய்யர் சொன்னதும் வசீகரன் கழுத்தில் வேகமாய் மாலையைப் போட்டு அவளது கடமையை முடித்துக் கொண்டாள் ஹாஸினி.
ராஜேஸ்வரி அதைப் பார்த்துக் கொண்டே மனதுக்குள் பிராத்தித்துக் கொண்டிருக்க ஹாஸினியை கவனித்துக் கொண்டிருந்தனர் தனபாக்கியமும் பாஸ்கரும்…. அவர்கள் மனது அன்று போலவே இன்றும் அவர்களை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அடுத்து வசீகரனை மாலையிடுமாறு கூறினார் அய்யர்.
சிறு புன்னகையை உதட்டுக்குக் கொடுத்தவன், மாலையை அவள் கழுத்தில் போட்டு அவளை மெல்ல அவனிடம் இழுத்தான். அதில் சற்று தடுமாறியவள் முகம் சிவந்து அவனை முறைத்தாள்.
அதைக் கண்ட ராஜேஸ்வரியின் முகத்தில் சிறு புன்னகை தோன்ற பாஸ்கரும் தனபாக்கியமும் குழம்பினர். அடுத்து அய்யர் தந்த குங்குமத்தை அவர் நெற்றியில் வைத்து வகிட்டில் வைத்து விட்டான். அப்போது ஹாஸினி தன்னையும் அறியாமல் கண்ணை மூட அவளது தேகம் சிலிர்ப்பது வசீகரனுக்குத் தெரிந்தது.
அடுத்து அவன் நெற்றியில் அவள் சுவாமி குங்குமத்தை வைக்க அவளையே நோக்கிக் கொண்டிருந்தவனின் மென்மையான புன்னகை அவளது மனதுக்கும் ஒரு இதத்தைக் கொடுத்தது.
“ரெண்டு பேரும் கை பிடிச்சிண்டு கோவிலை சுத்தி வாங்கோ….” என்றார் அய்யர். வசீகரன், ஹாஸினியின் கைக்காய் அவனது கையை நீட்ட சிறு தயக்கத்துடன் அவளது கரத்தை அவன் கையில் வைத்தாள் ஹாஸினி.
அந்த நிமிடம் வசீகரனின் மனதுக்குள், “இந்தக் கரத்தை என் வாழ்நாள் இருக்கும் வரை நான் விட மாட்டேன்…..” என்ற உறுதி தோன்றியது. மெத்தென்ற பூவைப் போன்ற அவளது கையைப் பிடித்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி நடந்து வந்தான்.
அவனது உறுதியான கரத்தின் இதமான சூடு அவளது குளிர்ந்த கைக்கு சுகமாய் இருக்க அவள் மனதுக்குள் ஏதேதோ உணர்வுகளைத் தூண்டியது. நடப்பது எல்லாம் ஏதோ கனவு போலத் தோன்றியது.
சடங்குகளை எல்லாம் திருப்தியாய் முடித்துவிட்டு திரும்பினர். போகும் போது மௌனமாய் இருந்த வசீகரன் திரும்பும் போது ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டே நடக்க இப்போது மௌனிப்பது ஹாஸினியின் முறையாயிற்று.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தனபாக்கியமும் பாஸ்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கண்டிப்பாய் ஏதோ சரியில்லை என்று முடிவு செய்து கொண்டனர். அதை எப்படியும் கண்டு பிடித்தே தீருவது என்று நினைத்தனர்.
கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் கருமலையில் இருந்த இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

Advertisement