“என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே… காலேஜுக்குப் போகலையா…” என்று விசாரித்தவனை நோக்கி,
“அய்யோ… அண்ணா… எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு… நீ என்ன தான் கவனிக்கறியோ…” என்று அலுத்துக் கொண்டாள்.
“ஓ… ஸ்டடி லீவ்னா உக்கார்ந்து படிக்க வேண்டியது தானே… எதுக்கு என்கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கே…” என்றவன் இட்லியை சட்னியில் தோய்த்து வாய்க்குக் கொண்டு போக அவன் கையைப் பற்றி அந்தத் துண்டை தன் வாய்க்குக் கொண்டு சென்றவள்,
“ம்ம்… இதுக்குதான்…” என்று சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.
அவளது செய்கையில் மனம் நெகிழ அவளைப் பற்றிய நினைவில் மென்மையாய் சிரித்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான்.
சிறு வயது முதலே அது ஒரு பழக்கம் அவளுக்கு… அண்ணன் சாப்பிடப் போகும்போது அதைப் பறித்து தான் சாப்பிடுவாள்… அண்ணனை ஊட்டச் சொல்லி அடம் பிடிப்பாள்… இருவருக்கும் நான்கு வருட வித்தியாசம் இருந்ததால் பள்ளிப் பருவம் முதலே அது பழக்கமாகி இருந்தது.
அண்ணன் சாப்பிடும்போது அவள் இருந்தால் ஒரு வாயாவது அவளுக்குக் கொடுத்துவிட வேண்டும்… அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டே அடுக்களையில் இருந்து வந்த சபர்மதி, அவளைத் திட்டினார்.
“இந்தப் பெண்ணுக்கு எத்தனை சொன்னாலும் இன்னும் அந்தப் பழக்கம் போகவில்லையே…. ரெண்டு பேரும் வளர்ந்தாச்சு… பாக்குறவங்க என்ன நினைப்பாங்க… என்னதான் அண்ணன் தங்கச்சின்னாலும் ஒரு ஒதுக்கம் வேண்டாமா… இன்னும் சின்னப் புள்ளைங்கன்னே நினைப்பு அவளுக்கு…” என்றார்.
“அம்மா விடுங்கம்மா… எவ்ளோ வளர்ந்தாலும் அவ என் தங்கச்சி தானே…. நான் அவளுக்கு அண்ணன் தானே…… பாக்குறவங்க கண்ணுல குறையோட பார்த்தா அதுக்கு நாம பொறுப்பாக முடியாது… அவ எப்பவும் எனக்கு குழந்தை மாதிரி தான்… சரி நீங்க ரேஷன் கார்டும் பையும் எடுத்திட்டு வாங்க… நான் போயிட்டு வந்திடறேன்…” என்றவன் எழுந்து கை கழுக சென்றான்.
மகனின் பேச்சிலேயே மகள் மீது அவன் வைத்திருக்கும் பாசம் புரிய கண்கள் பனித்தது அந்த அன்னைக்கு…
“என் அண்ணனோட குணம் அப்படியே என் மகனுக்குக் கிடைச்சிருக்கு… என்னை என் அண்ணன் கிட்டே இருந்து பிரிச்ச போல இவுங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடாதே கடவுளே…” என்று வேண்டிக் கொண்டே கார்டை எடுக்க சென்றார்.
“சார்… போஸ்ட்….” வாசலில் தபால்காரரின் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்தான் வசீகரன்.
சபர்மதியும் வளர்மதியும் வெகுநாளாய்க் காத்திருந்த அந்தக் குரல் கேட்டதும் வெளியே ஓடி வந்தனர்.
“தம்பி… உங்களுக்கு தான் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு…. வேலைக்கான ஆர்டர் போலிருக்கு…..” என்று சந்தோஷமாய்க் கூறியவர் அந்தக் காக்கி நிற அரசுக் கவரை அவன் கையில் கொடுக்க அதை அன்னையிடம் கொடுத்துவிட்டு தபால்காரர் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
அதை சந்தோஷத்துடன் பார்த்திருந்தனர் சபர்மதியும் வளர்மதியும்.
“ஹாஸினி…..”
கீழே கேட்ட அன்னையின் குரலைக் கேட்டு கண்ணாடிக்கு முன்னே நின்றிருந்த ஹாஸினி திரும்பினாள்.
அப்போது தான் மலர்ந்திட்ட புதிய பூ போல புத்துணர்வோடு கூடிய அழகான முகம்… திருத்தப்பட்ட புருவமும் அளவான மூக்கும் சிறிய இதழ்கள் சிரிக்கையில் எட்டிப் பார்க்கும் சின்ன பல் வரிசையும் காதில் அசைந்தாடும் தங்க வளையமும் வயதுக்கே உரிய வனப்பான உடல்வாகும் பார்ப்பவர் கண்களை ஒரு நிமிடம் அவளை உற்று நோக்க வைத்தே நகரும்….
முன் நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையில் ஒரு அலட்சியம் தெரிய அழகாய் இரு பக்கமும் குதிரை வால் போட்டிருந்தாள். ஜீன்ஸூம் டாப்பும் அணிந்திருந்தவள் வாயில் பபிள் கம்மை மென்று கொண்டிருந்தாள்.
கட் ஷூவில் காலை நுழைத்தவள் கீழே வந்தாள்.
“டக்…. டக்….” என ஷூ சப்திக்க நடந்து வந்தவளை கீழே டைனிங் ஹாலில் காத்திருந்த ராஜேஸ்வரி பார்த்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் மாம்….” நாற்காலியை இழுத்துப் போட்டு அமரப் போனவளை முறைத்தவர்,
“முதல்ல வாயில் இருக்கிற அந்த பபிள் கம்மைத் துப்பிட்டு வா… எப்போ பார்த்தாலும் மாடு மாதிரி எதையாவது வாயில போட்டு மென்னுட்டு…” என்று அவர் கடிந்து கொள்ள, அவளது முகம் வாடியது.
“என் ஸ்வீட் மம்மி… நோ டென்ஷன்… இப்போவே துப்பிட்டு வரேன்….” என்றவள் அதைத் துப்பிவிட்டு வந்தாள்.
“ராமு…. சின்னம்மாவுக்கு சாப்பிட எடுத்து வை…..” என்றார் அங்கே நின்று கொண்டிருந்த நடுத்தர வயசுள்ள ஒரு பணியாளிடம். அவளது தட்டில் பஞ்சு போன்ற மெத்தென்ற இட்லியை வைத்து வேறு இரு கிண்ணத்தில் சாம்பாரும் சட்னியும் ஊற்றினார்.
“ஒவ்… இன்னைக்கும் இந்த இட்லி தானா… ஏன்… ராமு… கொஞ்சம் வித்தியாசமா ஏதும் டிரை பண்ண மாட்டியா… எப்போ பார்த்தாலும் இட்லி, தோசைன்னு… நான்சென்ஸ்…..” என்றவள் அன்னையின் பார்வையைக் கண்டதும் பேசாமல் இரண்டு இட்லியை உள்ளே தள்ளத் தொடங்கினாள்.
“நான் தான் இட்லி செய்ய சொன்னேன்…” என்ற ராஜேஸ்வரி,
“ராமு….. அவளுக்கு பால் எடுத்திட்டு வா….” என்றார்.
“மம்மி… ப்ளீஸ்… மம்மி… எனக்கு பால் பிடிக்கலை… வேண்டாம்… நான் வேணும்னா ஜூஸ் குடிச்சுக்கறேன்…” என்றவளை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவள் முன்னால் பால் கிளாசை நீட்டினார். ஒன்றும் பேசாமல் அதை வாங்கி மருந்தைக் குடிப்பது போலக் கண்ணை மூடிக் குடித்துவிட்டு எழுந்து கை கழுகப் போனாள் ஹாஸினி.
“ராமு… மதியம் சமையலுக்கு நான் சொன்ன மாதிரி எல்லாத்தையும் செய்திடு… இன்னைக்கு கொஞ்சம் புது ரோஜா செடி எல்லாம் நர்சரியில் இருந்து கொண்டு வர சொல்லி இருக்கேன்… நம்ம பாலுகிட்டே பார்த்து வாங்கி வைக்க சொல்லிடு… நான் கிளம்பறேன்….” என்றார்.
“சரிங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…” என்று அவர் தலையாட்டவும்,
“ம்ம்…. ஓகே… சங்கர்…. வண்டியை ரெடி பண்ணு… கிளம்பலாம்…” என்றார் அங்கே அவருக்காய் முன்னில் காத்துக் கொண்டிருந்த டிரைவரிடம்.
“ஓகே மேடம்…..” என்றவன் வாசலில் கம்பீரமாய் நின்றிருந்த வெள்ளை நிற ஆடி காரின் அருகே சென்றான்.
தன் அறைக்கு சென்ற ராஜேஸ்வரி அங்கிருந்த தன் பேகை சரி பார்த்து டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். சற்று தடித்த கம்பீரமான உருவம்… வட்டமான முகத்தில் வெறும் திருநீறு மட்டுமே இருந்தது. ஊடுருவும் தீட்சண்யமான கண்கள்…. அழகான முகத்தை அதிகாரம் என்னும் முகமூடியால் மறைத்திருந்தார்.
மகளின் சிறு வயதிலேயே கணவர் மகேஸ்வரன் மூளையில் கட்டி வந்து வெகுவாய் சிரமப்பட உடுமலைக்கு அருகில் இருந்த கயிறு பிரிக்கும் தொழிற்சாலைகளையும் ஜவுளிக் கடை மற்றும் நிலபுலன்களையும் விற்றுவிட்டு கோவையில் மருத்துவத்திற்காய் குடியேறினர்.
அங்கே பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இரண்டை கட்டி விட்டு ஒரு தளத்தில் மட்டும் தங்களுக்கு ஒரு துணிக் கடையைத் தொடங்கி இருந்தனர். அதன் மேற்பார்வை மட்டுமே ராஜேஸ்வரிக்கு இருந்தது. காம்ப்ளக்ஸில் கடையை வாடகைக்கு விட்டதில் கிடைத்த வருமானமும் அந்த துணிக்கடையின் வருமானமும் அவர்களை செல்வந்தர் வரிசையில் சேர்த்து விட்டிருந்தது.
வெகு காலம் மருத்துவ உதவியோடு படுக்கையில் கஷ்டப் பட்டாலும் தொழிலைப் பற்றி நுணுக்கங்களை எல்லாம் மனைவிக்கு சொல்லிக் கொடுத்தார். “யாரையும் நம்பாதே….. நீயே நம் தொழிலைப் பாத்துக் கொள்….. எல்லோரிடமும் சற்று எட்டி நின்று பழகு… போலி சொந்தங்களை அருகில் வர விடாதே…” என்று சொல்லி அவர் மனதில் உருவேற்றியிருந்தார்.
அவர் சொல்படியே ராஜேஸ்வரியும் அவர் மறைவுக்குப் பிறகு வீடு நிறைத்தும் இருந்த பணியாட்களிடமும் கடையில் இருந்த பணியாளர்களிடமும் எப்போதும் அதிகாரம் காட்டி… ஒட்டிக் கொள்ள வந்த உறவுகளையும் சற்று எட்டியே நிறுத்தியிருந்தார்.
தொழிலையும் புரிந்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். மகளை சுதந்திரமாய் வளர்த்திருந்தாலும் தன் கட்டுப் பாட்டிலேயே வைத்திருந்தார். கணவர் இறந்தபிறகு சொத்தைக் குறிவைத்து நெருங்கி வந்த சொந்தங்களை சிரிப்பை மறந்த முகத்தோடு விரட்டியடித்தார்.
சிறு வயதில் கணவனை இழந்து நின்றவளைத் தவறான எண்ணத்தோடு ஒவ்வொருத்தரும் நெருங்கி வர, கண்ணில் தீ கக்கும் பார்வையோடு கண்டிப்பும் கறாருமான முகத்தை கவசமாக்கியவர் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டார். கையில் பேகுடன் வெளியே வந்தவர், “சின்னம்மா எங்கே…” என்றார் ராமுவிடம்.
“பேக் எடுத்திட்டு வரேன்னு மேல போனாங்கம்மா…” என்றார் அவர். மேலே நோக்கி “ஹாஸினி….” என்று அவர் குரல் கொடுக்க கையில் சின்ன பேகுடன் வண்டி சாவியோடு இறங்கி வந்தாள் மகள்.
காற்றில் அசைந்தாடும் கூந்தலை ஸ்டைலாய் கையில் ஒதுக்கியவள், “மாம்… எனக்கு மதியம் சாப்பாட்டுக்கு வர முடியாது… கொண்டு வர சொல்லிடுங்க… நான் கிளம்பறேன்…” என்றாள்.
“ம்ம்… பார்த்து பத்திரமா போ….” என்றார் அக்கறையுள்ள அன்னையாய்.
“ஓகே மம்மி… டேக் கேர்… பை…” என்றவள் அன்னையின் கன்னத்தில் மெல்லத் தன் இதழைப் பதித்துவிட்டு வெளியே நடந்தாள். செல்லும் மகளையே பார்த்திருந்த ராஜேஸ்வரி ஏதோ யோசித்துக் கொண்டே வாசலுக்கு நடந்தார்.
அன்னையின் அதிகாரத்தையும் கண்டிப்பையும் மட்டுமே கண்டு வளர்ந்தவள் ஹாஸினி. அவரது முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் நேசத்தை அவளால் கண்டு கொள்ள முடிந்தது. பணத்திமிரும், ஆணவமும், தான் என்ற அகந்தையும் அவளுக்குள் நிறையவே இருந்தாலும் அவள் தோற்றுப் போவது அவள் அன்னையிடம் மட்டுமே….
ஏனோ அவள் அன்னையின் வார்த்தையை அவளால் மீறவே முடிந்ததில்லை… சிறு வயது முதலே தனக்குக் கீழே உள்ள அனைவரும் தனக்கு சேவகம் செய்பவர்கள் என்னும் எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்தது.
தன் கறுப்பு வண்ண யமஹா பைக்கை ஒரே உதையில் உயிர்ப்பித்த ஹாஸினி, ஹெல்மெட்டை தலைக்குக் கொடுத்து ஆக்சிலேட்டரை முறுக்கினாள். வண்டி சீறிக் கொண்டு கேட்டுக்கு வெளியே சென்று சாலையில் கலந்தது.