Advertisement

அத்தியாயம் – 1

 

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!!

 

“அம்மாஆஆஆஆ…” என்று கூச்சலிட்டாள் அவள்.

 

அவள் அன்னை அங்கு இல்லை வெளியே தண்ணீர் பிடிக்க சென்றிருந்தார்.

 

மீண்டும் அதே பாடல் ஒலிக்க இம்முறை அவளின் கோபம் சம்மந்தப்பட்டவனின் மேலே நேரடியாகவே பாய்ந்தது.

 

சமையலறையில் இருந்த பாத்திரம் ஒன்றிரண்டை தூக்கி அடித்திருந்தாள். இருமுறை லாவகமாய் அவளிடமிருந்து தப்பித்தவன் மேல் அது இம்முறை பதம் பார்த்திருந்தது.

 

அதில் ஆவென்று கத்திக்கொண்டு அவன் எழுந்திருந்தான். “எருமைமாடே!! எதுக்கு இப்படி அடிக்கிற??”

 

“யாருடா எருமை நீ தான்டா எருமை. எப்போ பார்த்தாலும் திண்ணுட்டு திண்ணுட்டு தூங்கிட்டே இருக்கியே நீ தான்டா எருமை…”

“இரு இரு அம்மா வரட்டும் உன்னை அவங்ககிட்ட சொல்றேன்” என்றவன் அபிஷேக் வயது பதினாறு, அருகில் உள்ள பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

 

“நானும் அம்மா வர்றதுக்கு தான்டா காத்திட்டு இருக்கேன். அவங்க வரட்டும் அப்புறம் வைச்சுக்கறேன் உனக்கு கச்சேரி” என்று முணுமுணுத்துக் கொண்டே சமையல் வேலையை கவனிக்க சென்றவள் வசந்த முல்லை.

 

தப்பு!! தப்பு!! அவளை அப்படிக் கூப்பிட்டால் அவளுக்கு பிடிக்காது. வசந்தி, வசந்தா, முல்லை என்று கூப்பிட்டால் கூட பரவாயில்லை.

 

யாராவது அவள் பெயரை நீட்டி முழக்கி கூப்பிட்டால் மட்டும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது.

 

அதனாலேயே அபிஷேக் வேண்டுமென்றே அப்படி தான் அவளை கூப்பிடுவான்.

 

கூப்பிடுவது மட்டுமல்லாது இதோ சற்று முன் போட்டானே அந்த பாட்டை வேறு போட்டுவிட்டால் நம் வசந்தமுல்லை தாளம் தப்பாமல் குதிப்பாள்.

 

அக்காவும் தம்பியும் இதற்கு தான் தினமும் அடித்துக் கொள்வார்கள். இங்கு மட்டும் அல்ல அவள் கல்லூரியில் கூட இதே கதை தான்!! இவளை வம்பிழுக்கவென்றே பாட்டு பாடி கிண்டல் செய்ய ஒரு கூட்டம் உண்டு.

அபிஷேக் சும்மாயில்லாமல் தமக்கையை மீண்டும் சீண்ட உள்ளே சென்றவள் வெளியில் வந்து அவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது.

 

அப்போது ராஜம் இடுப்பில் குடத்தை சுமந்தவாறே உள்ளே வந்தார்.

 

“அம்மா பாரும்மா…”

 

“அம்மா இவளை பாரும்மா…” என்று இருவருமே அவள் அன்னையை பஞ்சாயத்திற்கு அழைத்தனர்.

 

அவரோ இருவரையும் முறைத்துவிட்டு உள்ளே சென்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு வந்தார்.

 

“அறிவிருக்கா ரெண்டு பேருக்கும்… கையில குடத்தை தூக்கிட்டு வர்றனே அதை வந்து வாங்குவோம்ன்னு இல்லாம உள்ள நுழைஞ்சதும் உங்க பஞ்சாயத்தை ஆரம்பிக்கறீங்க”

 

“ஏன்டி பொம்பிளைப்பிள்ளை உனக்குமா விவரமில்லாம போகும். அவனோட எப்போ பார்த்தாலும் மல்லுக்கு நிக்கறே…” என்று மகளை முறைத்தார் அவர்.

 

“ம்மா நீ சும்மா எப்போ பார்த்தாலும் என்னையவே குறை சொல்லு. உம்புள்ள என்ன பண்ணான்னு கேட்காத!! போம்மா உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்றவள் கோபமாய் உள்ளே செல்லப் போனாள்.

 

“சரி என்ன பண்ணான்” என்று இறங்கி வந்தார் ராஜம்.

“ஹ்ம்ம் அப்படி கேளும்மா… எப்பவும் போல அந்த பாட்டை போட்டு என்னை வெறுப்பேத்துறான்ம்மா…”

 

“எனக்கு ஏம்மா அந்த பேரை வைச்சீங்க?? உங்களுக்கு அப்படி என்னம்மா ஓரவஞ்சனை என் மேல… உங்க புள்ளைக்கு மட்டும் நல்லா பேஷனா அபிஷேக்ன்னு பேரு வைச்சிருக்கீங்க…”

 

“எனக்கு மட்டும் பழைய பேரு வைச்சிட்டீங்க” என்று எப்போதும் பாடும் அதே பாட்டை படித்தாள் அவள்.

 

“உனக்கு நானா பேரு வைச்சேன். என்னை ஏன்டி தினமும் படுத்துற?? உங்கப்பாரு தான் உனக்கு ஆசையா அந்த பேரை வைச்சாரு நான் என்ன பண்ணுவேன்”

 

“அதுக்கு செத்த அந்த மனுஷனையா போய் கேட்க முடியும். நீ தான் சொல்லியிருக்கணும்” என்று அதற்கும் நொடித்தாள் மகள்.

 

“இப்படியே பேசிகிட்டு இருந்தா நீ காலேஜ் போன மாதிரி தான் போய் சட்டுன்னு கிளம்பு. உனக்கு சாப்பாடு கட்டுறேன்”

 

“அபி நீ என்ன வேடிக்கை பார்க்கறே… உனக்கு வேற தனியா சொல்லணுமா போ… போய் கிளம்புற வழியை பாரு”

 

“இனி உங்கக்காவோட சண்டைக்கு போனே உன்னை தொலைச்சுருவேன்” என்று மகனை எச்சரிக்க வசந்தமுல்லை அவனை பார்த்து ஒழுங்கு செய்துவிட்டு ஓடி மறைந்தாள்.

 

குளித்துவிட்டு சுடிதாரை அணிந்து கொண்டு வந்தவள் தலை சீவி பின்னலிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு அன்னையை தேடி வந்தாள்.

 

“கிளம்பிட்டியா… கொஞ்சம் உட்காரு இட்லி வெந்திட்டுது எடுத்திர்றேன்” என்றவர் அதை பார்க்க அவள் தனக்கு மதிய உணவை எடுத்து டப்பாவில் அடைத்தாள்.

 

அதற்குள் ராஜமும் இட்லி எடுத்து அவளுக்கு தட்டில் வைத்து சாம்பாரை ஊற்றி, குடிக்க தண்ணீரை எடுத்து வைத்தார்.

 

சாப்பிட்டு முடித்தவள் அன்னையிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.

 

வீட்டை விட்டு வெளியில் வர தோழி கோமதியும் இணைந்து கொண்டாள் அவளுடன்.

 

இருவருமாக பேசிக்கொண்டே பேருந்து நிலையத்தில் வந்து நின்றனர். அவர்கள் கல்லூரிக்கு செல்லும் பேருந்து அப்போது தான் உள்ளே நுழைய தோழிகள் இருவரும் வேகமாய் ஏறி இடத்தை பிடித்து அமர்ந்தனர்.

 

வசந்தமுல்லைக்கு எப்போதும் சன்னலோர இருக்கை தான். அதில் அமர்ந்து கொண்டு காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு தோழிகள் இருவரும் பாட்டு கேட்டுக்கொண்டே செல்வர் கல்லூரிக்கு.

பேருந்து கிளம்பிய பின்னே தான் அவர்கள் பாட்டு கேட்க ஆரம்பிப்பர். அது இன்னும் கிளம்பாமல் இருக்கவும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவள் வெளியில் வேடிக்கை பார்க்கலானாள்.

 

அப்போது எதிரில் இருந்த கடையில் வாலிபன் ஒருவன் இவளைப் பார்த்து(?) அங்கு ஓலித்துக்கொண்டிருந்த போக்கிரிப்பட பாடலை பாடினான்.

 

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா…

 

அவன் அப்படி இப்படி திரும்புவதும் அவளை பார்த்து பாடுவது போல் இருக்க காலையில் தம்பி மீது வேறு கோபத்தில் இருந்தவள் அவள் பையில் வைத்திருந்த கால்குலேட்டரை தூக்கி அவன் மீது எறிந்திருந்தாள்.

 

எதிர்பாரா இந்த தாக்குதலில் நின்றிருந்தவன் நிலைக்குலைந்து போனான். அவன் நெற்றியில் அது நன்றாக பட்டு ரத்தம் வரவே ஆரம்பித்துவிட்டது.

 

ரத்தத்தை கண்டதும் அவளுக்கு பயம் வந்துவிட்டது. செய்த தவறு உரைத்துவிட வெளிறிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

அங்கிருந்தவனுக்கு யாரோ தூக்கி எறிந்தது மட்டும் தான் தெரியும் யார் என்று தெரியாது. அவனை சுற்றி இரண்டு மூன்று பேர் கூடிவிட வசந்தமுல்லைக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

 

அவள் தவிப்பாய் பார்க்க கோமதி அவளை முறைத்திருந்தாள். ‘அச்சோ இவ வேற பார்த்திட்டாளே!! போட்டு கொடுத்திருவாளோ!! இன்னைக்கு செத்தோம்’ என்று எண்ணினாள்.

 

“ஏன்டி இப்படி செஞ்சே??”

 

“இல்லை கோம்ஸ் அது வந்து உனக்கு தான் தெரியும்ல என்னை யாரும் வசந்தமுல்லைன்னு கூப்பிட்டா பிடிக்காதுன்னு!! இன்னைக்கு காலையில அபி அந்த பழைய பாட்டை போட்டு வெறுப்பேத்தினான்”

 

“இங்க என்னடான்னா என்னைப்பத்தி தெரிஞ்ச நம்ம காலேஜ் பையன் ஒருத்தன் வேணும்மின்னே அதே பாட்டு போட்டு வெறுப்பேத்தினான். அந்த கோபத்துல தான் இப்படி…” என்று இழுத்தாள்.

 

“உனக்கு தெரியுமா அவர் நம்ம காலேஜ்ன்னு… ஆளை பார்த்தா தெரியலை கழுத்துல ஐடி கார்ட் போட்டு இருக்கார். பக்கத்துல பைக் முதுகுல லேப்டாப் பேக்”

 

“இவரு நம்ம காலேஜா எப்படிடி உனக்கு இப்படி எல்லாம் தோணுது. என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு போய் ஒரு சாரி கேளுடி” என்று முறைத்தாள் கோமதி.

 

‘அச்சோ நம்ம காலேஜ்ன்னு நினைச்சு அடிச்சிட்டமே!! அச்சோ முல்லை இப்படியா பண்ணுவே!!’ என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

“போய் சாரி கேட்கலாம்” என்று நலிந்த குரலில் தோழியிடம் சொல்லிவிட்டு எழ அதற்குள் ஓட்டுனர் பேருந்தை கிளம்பியிருந்தார்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் வந்திருந்தார் போலும். அவள் எழ முயற்சி செய்யவும் அவர் வண்டியை கிளப்பவும் சரியாய் போனது.

 

தோழியை மன்னிப்பாய் பார்த்தாள். “என்னைப் பார்த்து…” என்றவள் முறைத்தாள்.

 

“சாரி கோம்ஸ்… வேணுமின்னு செய்யலை!! கோவம் வந்திடுச்சு அதுனால தான் இப்படி”

 

“அப்படி என்னடி மாயக்கோபம் உனக்கு. ஏன் உன்னை அப்படி கூப்பிட்டா என்னவாம்” என்று இன்னமும் கடிந்து கொண்டுதானிருந்தாள் அவள் தோழியை.

 

கோமதிக்கு அவளின் இந்த போக்கு எப்போதும் பிடிப்பதில்லை. அவளுக்கு அப்படி கூப்பிட்டால் பிடிக்காதென்பதால் சரி என்று விட்டுவிட்டாள்.

 

இன்று அடுத்தவரை கோபத்தில் அடிப்பது என்பது தவறு தானே!! அது தான் உடனே சுட்டிக்காட்டினாள்.

 

இவள் இப்படி செய்ய செய்யத் தானே மற்றவர்கள் வேண்டுமென்றே கிண்டல் செய்கின்றனர். இவள் பாட்டுக்கு இருந்தால் மற்றவர்களின் கிண்டலிற்கு ஆளாக வேண்டாம் தானே!!

 

இதெல்லாம் எத்தனையோ முறை சொல்லியாயிற்று. வசந்தமுல்லை தான் அதை காது கொடுத்து கேட்டபாடில்லை.

 

இதோ இன்று இப்படி ஒரு விவகாரத்தில் வந்து நிற்கிறது. எங்கு போய் முடியுமோ இவள் செய்யும் அலும்பு என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அமைதியாய் இருந்தாள்.

 

“டி கோம்ஸ் எதும் பேசுடி… இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுக்காதடி”

 

“பின்னே நீ பண்ணுறதுக்கு வேற என்ன செய்வாங்களாம். உனக்கு எத்தனை முறை நான் படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன்”

 

“அதெல்லாம் உன் புத்தியில உறைச்சா தானே. நாளைப்பின்ன அந்தாளுக்கு எதுவும்ன்னா அதுக்கு நீ தான் பொறுப்பாவே தெரியுமா”

 

“ஏன்டி இப்படி எல்லாம் சொல்லுறே?? அதெல்லாம் அவருக்கு ஒண்ணும் ஆகாது. நான் லேசா தானே அடிச்சேன்” என்றவளை முறைத்தாள் மற்றவள்.

 

“ஏன் சொல்ல மாட்டே அவ்வளவு கொழுப்புடி உனக்கு. அவன் உன்னை அடையாளம் கண்டுப்பிடிச்சு நாளைக்கே உன்னை தேடி வந்து ஓருவழியாக்கப் போறான்”

 

“அப்போ அய்யோன்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது. அம்மானாலும் ஒண்ணும் பண்ண முடியாது. இன்னையோட உன் கோபத்தை ஏறக்கட்டி வை அது தான் உனக்கு நல்லது சொல்லிட்டேன்” என்று நீளமாய் முடித்தாள் அவள்.

 

தோழி சொன்னதில் சற்றே கலவரம் தான் வசந்தமுல்லைக்கு. அதனால் கொஞ்சம் அடக்கியே வாசித்தாள்.

 

கல்லூரில் கிண்டல் செய்தவர்களைகூட கண்டும் காணாமல் கடந்து போனாள். ஒரு சண்டை உருவாகும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு சப்பென்று ஆனது.

 

எப்போதும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிடும் கோழி அமைதியாய் செல்வது கண்டு கொஞ்சம் வியப்பு தான் அவர்களுக்கு.

 

கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வர ராஜம் அவளுக்காகவே காத்திருந்தார் போன்று “வா வா வசந்தி சீக்கிரம் கிளம்பு. நைட் ட்ரைன்க்கு நாம ஊருக்கு கிளம்பறோம்”

 

“என்னம்மா சொல்றே?? ஊருக்கா?? இப்போ எதுக்கும்மா?? எனக்கு எக்ஸாம் முடிய இன்னும் இரண்டு மாசம் தானே இருக்கும் அப்புறம் வேணா தாத்தா வீட்டுக்கு போகலாம்”

 

“அடியே தாத்தாக்கு திடிர்னு நெஞ்சுவலி வந்து கொஞ்சம் முன்னாடி தான் உயிர் போச்சாம்” என்றவரின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்துவிடுவேன் என்றிருந்தது ராஜத்திற்கு.

 

“என்ன?? என்னம்மா தாத்தாவா?? எப்படிம்மா நல்லா தாட்டியமா தானேம்மா இருந்தாங்க” என்று சொன்ன முல்லைக்கும் கூட கண்ணீர் வழிந்தது.

 

அவளுக்கு மிகவும் பிடித்தவர் அவர். சென்ற முறை கூட பேத்தியை கிண்டல் செய்து அவளுடன் சிறுபிள்ளை போல் கேலி பேசி சிரித்தவர்.

 

அவர் இப்போது இல்லையென்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

“இங்க பாரு அழறதுக்கு எல்லாம் இப்போ நேரமில்லை. போய் உனக்கு ஒரு வாரத்துக்கு தேவையான துணிமணி எடுத்து வை”

 

“என்னோடது எல்லாம் நான் எடுத்து வைச்சுட்டேன். அபிக்கு நம்மோட வர முடியாது”

 

“நான் தக்காளி தொக்கும் கொஞ்சம் கார சட்னியும் அரைச்சு அவனுக்கு பிரிட்ஜ்ல வைச்சுட்டா ரெண்டு நாளைக்கு தோசை சுட்டு அவனும் கொஞ்சம் சமாளிச்சுக்குவான்”

 

“மதியத்துக்கும் நைட்க்கும் அவனை அகிலா அத்தை வீட்டில சாப்பிட்டுக்க சொல்லிட்டேன்” என்றுவிட்டு அவர் சமையலறை புகுந்தார்.

 

வசந்தமுல்லைக்கு பெட்டி எடுத்து வைப்பதில் மனமே செல்லவில்லை. தாத்தாவை பற்றிய நினைவுகளே அதிகம் அவளை தாக்கிக் கொண்டிருந்தது.

 

அன்னை வந்து திட்டுவதற்குள் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவும் அவசரமாய் அடுக்க ஆரம்பித்தாள்.

 

கோமதிக்கு அழைத்து ஊருக்கு செல்லவிருப்பதை சொன்னாள்.

 

இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் தான் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்திருந்தது. ராஜத்திற்கு பஸ் பிரயாணம் ஒத்துக்கொள்வதில்லை என்பதால் எப்போதும் ரயில் பயணம் மட்டுமே.

 

முல்லையின் வீடு குமணன்சாவடியில் இருப்பதால் எக்மோர் செல்ல இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று அவர்கள் ஏழு முப்பதுக்கே வீட்டில் இருந்து கிளம்பிவிட்டனர்.

 

அபிஷேக்கிற்கு ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு அம்மாவும் பெண்ணும் கார் ஒன்றை புக் செய்து அதில் சென்றனர்.

 

வரும் வழியில் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அவள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர அப்போது தான் அவனைக் கண்டாள்.

 

காலையில் அவள் யாரை அடித்தாளோ அவனை. அவனும் இவர்களை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தான்.

 

வசந்தமுல்லைக்கு நெஞ்சில் குளிர் பிறந்தது. பயம் அடிவயிற்றை கவ்விப் பிடித்தது.

 

‘அச்சோ இந்த கோமதி சொன்ன மாதிரியே அவன் என்னை கண்டுப்பிடிச்சிட்டான் போலவே. துரத்திட்டு வேற வர்றான்’ என்றவள் அப்போது தான் அவன் நெற்றில் இருந்த கட்டை பார்த்தாள்.

 

‘அடி ரொம்ப பலமோ!!’ என்று நினைக்க ‘ஏன் சரியாப்படலைன்னா இன்னொரு தரம் அடிக்கலாம்ன்னு பிளானா’ என்று மனசாட்சி அவளை கேலி செய்தது.

 

அவனுக்கு தெரியாமல் தன்னை மறைத்துக்கொண்டு கார் கண்ணாடியை மேலேற்றினாள் அவள்.

 

எக்மோர் ஸ்டேஷனுக்குள் வண்டி நுழைய அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவர்களின் பிளாட்பாரத்தை நோக்கி செல்ல ஏதோ ஒரு எண்ணத்தில் பின்னே திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.

 

அவன் இங்கும் அவளை துரத்திக்கொண்டு வந்திருந்தான். இவளோ “அம்மா எவ்வளவு ஸ்லோவா நடப்பே கொஞ்சம் ஸ்பீடா நடம்மா” என்று சிடுசிடுத்தாள்.

 

“ஏன்டி அவசரப்படுத்தறே மணி ஒன்பது தானே ஆகுது. ஒன்பது நாப்பதுக்கு தானே வண்டி!! பொறுமையா நடப்போமே!! என்னால வேகமா எல்லாம் நடக்க முடியாது” என்றவர் மெதுவாக வந்தார்.

 

‘அச்சோ அம்மா நேரம் காலம் புரியாம படுத்தறியே!!’ என்று அவள் மனதிற்குள்ளாக புலம்பும் போதே அவன் அவளை சமீபித்திருந்தான்…

 

Advertisement