Advertisement

முகவரி 11:

 

தவறு செய்த குழந்தையைப் போல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் சூர்யா. ” அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ ஆத்திரத்தில் .., சென்று குடித்தது..தன்னை இந்த நிலைக்கு தள்ளும் என்று கனவா..? கண்டான். அவனால் ..சில உன்மைகளை ஜீரணிக்க முடியாமல்அதை மறப்பதற்காக குடித்தான். ஆனால் தன்னையே மறந்து விட்டான் …”.

 

இதை உன்கிட்ட இருந்து நான் சுத்தமா எதிர்பார்க்கலை சூர்யா….! என்றார் மகேஷ்வரி.

 

அம்மா…அது வந்து ..என்று சூர்யா…இழுக்க….

 

மகேஷ்வரி..” நீ எந்த காரணமும் சொல்லத் தேவை இல்லை சூர்யா. எந்த ஒரு சூழ் நிலையிலும் பாதை மாறும்படி நான் உன்ன வளர்க்கலை. அப்படி என்ன உனக்கு விரக்தி…கண்மண் தெரியாம  குடிக்கிற அளவுக்கு…?” என்றார்.

 

என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாதா..? என்பதைப் போல் சூர்யா.., தன் அன்னையைப் பார்க்க…அவனின் பார்வை கேட்ட கேள்வியைத்… தாங்காதவராய் மகேஷ்வரி மௌனமானார்.

 

மகேஷ்வரி..”இதெல்லாம் உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும் சூர்யா. ஆனா எனக்கே ஒன்னும் புரியல. சில விஷயங்களில் எனக்கே தெளிவு தேவைப்படுது. அதான் அமைதியா இருக்கேன்..” என்றார்.

 

இருந்தாலும் நீ செய்தது தப்பு சூர்யா..நல்லவேளை அந்த பொண்ணு பார்த்து ….உன்ன கூட்டிட்டு வந்தா,…இல்லைன்னா..என்ன நடந்து இருக்கும்…? “  என்றார் ஆதங்கம் குறையாதவராய்.

 

சூர்யாவிற்கு இது புது தகவல்..” என்னம்மா சொல்றிங்க…? ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்தாளா..? என்னையவா..?” என்றான் நம்ப முடியாத பாவனையில்.

 

அவனை மேலும் கீழும் பார்த்த மகேஷ்வரி….”ஏன் உனக்கு எதுவும் நியாபகம் இல்லையா..?” என்றார்…கிண்டல் குரலில். பிறகு நடந்தவற்றை சொன்னார்.

 

அம்மா…அந்த பொண்ணுக்கு எப்படி நம்ம வீடு தெரியும்..? என்றான் சூர்யா.

 

மகேஷ்வரி..” நானும் கேட்டேன் சூர்யா….அதுக்கு அந்த பொண்ணு உன்ன தெரியும்ன்னு சொன்னா….வீடு கூட பக்கத்து தெரு…தான்னு சொன்னா..” என்றார்.

 

பக்கத்து தெருவா…என்று யோசனையில் ஆழ்ந்தான் சூர்யா.

 

ஆனா பாவம்டா அந்த பொண்ணு..நீ வாமிட் பண்ணது எல்லாம் பாதி அவ மேலதான்….அந்த பொண்ணுங்க போய் உன்ன சும்மா விட்டா…” என்றார்.

 

அசடு வழிந்தான் சூர்யா….” ச்ச இப்படி சொதப்பிட்டியே சூர்யா..” என்று தன்னைத் தானே கேட்ட சூர்யாவைப் பார்த்து…”ஆனா…நீ வாமிட் பண்ணும் போது…, ம்ம்ம்..என்ன அது.. ஙாம் உன்ன…. கருவாப்பயன்னு சொன்னா பாரு…எனக்கு அப்ப இருந்த மன நிலையில் சிரிப்பு வந்ததுன்னா…பார்த்துக்கோ..” என்றார் மகேஷ்வரி.

 

இனிமையாய் அதிர்ந்தான் சூர்யா..” அம்மா…என்ன சொன்னிங்க..? கருவாப்பயன்னு சொன்னாளா..?” என்றான் பரபரப்பாய்.

 

மகேஷ்வரி ஆமாம் என்பதைப் போல் தலையை ஆட்ட….” போச்சு சூர்யா….அவதான் ..அந்த ராங்கி தான் உன்ன கூட்டிட்டு வந்துருக்கா…கடவுளே….என்ன  பத்தி எல்லாம் நினச்சாளோ…” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் சூர்யா.

 

வேகமாய் தன் அறைக்கு சென்றவன்…தன் மொபைலை எடுத்து…அதில் இருந்த நிலாவினைப் பார்த்தான்.ஸ்கூட்டியின் அருகில் பரிதவிப்புடன் நின்றிருந்த அவளது முகம் அவனை பார்த்து சிரித்தது.

 

அவளைப் பார்த்தவுடன் அவனுக்குள்…,, ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.  ஏதோ அவளே நேரில் இருப்பது போல்…. மொபைலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். ஏண்டி இப்படி என்ன படுத்தி எடுக்குற….ஏற்கனவே…என்னக் கண்டாலே….நெருப்புல போட்ட உப்பா பொறிவா…..இப்ப நான் குடிச்சு மட்டையாகி…அதை அவ பார்த்து…நடக்குறது எல்லாம் உனக்கு எதிராவே நடக்குது சூர்யா..” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

 

இங்கு சூர்யா…தன் போட்டோவுடன் பேசிக்கொண்டிருப்பது தெரியாமல்..,,அங்கு நிலா..சூர்யாவை..தன் அப்பாவிடம் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

மனுஷனாப்பா அவன் எல்லாம்…? குடிகாரன்..குடிகாரன்….என்னமா குடுச்சு இருக்கான். கருவாப்பைய…என்று பொரிந்து கொண்டிருந்தாள் நிலா..பிரபுவிடம்.

 

அவனுக்கு போய் உதவி செய்ய நினச்சேன் பாரு…என் புத்திய நானே அடுச்சுக்கனும் …என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள்….நிலா.

 

அப்பா..இங்க ஒருத்தி இந்த புலம்பு புலம்புறேனே…என்ன ஏதுன்னு கேட்குறிங்களா..? பிடுச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கிங்க…! என்றாள் கோபமாய்.

 

பிரபு..” என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான தெரியும் நிலா…அதை விட்டுட்டு நீ பேசாம புலம்பிட்டு இருந்தா…நாங்க என்னன்னு நினைக்கிறது…” என்றார்.

 

நிலா..அதே பொருமலுடன் அன்று நடந்ததை சொல்ல….” என்னம்மா சொல்ற..யாரை சொல்ற நீ..” என்றார் நம்பாமல்.

 

ம்ம்ம்ம்…. அதான் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டு போனானே அவன் தான்…என்ன காத்த மகராசன்..” என்றாள் ஏற்ற இறக்கத்துடன் நிலா.

 

பிரபு..” அந்த தம்பியா…!” என்றார்.

 

அந்த தொம்பி  தான்…” என்றாள்  நிலா.

 

பரபரப்புடன் எழுந்த பிரபு…” நிலா நீ என்ன சொல்ற…அவங்க வீடு பக்கத்துலையா..” இருக்கு என்றார்.

 

பக்கத்துல இல்லப்பா..பக்கத்து தெருவுல….என்றாள் நிலா.

 

ஹோ…என்று மனதில் உள்வாங்கிய பிரபு….”நிலாம்மா..எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு..அம்மாகிட்ட சொல்லிடு குட்டி..” என்றவாரு வேகமாய் கிளம்பி சென்றார்.

 

நிலா..அவரை புரியாத பாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

என்னதான் நிலா..அவனை வாய் வார்த்தையாகத் திட்டிக் கொண்டிருந்தாலும்.. “அவளின் உள் மனது அவளைக் கேள்வி கேட்டது…அவன் எப்படி இருந்தால் உனக்கென்ன என்று..? இருந்தாலும் அவன் எதற்கு அப்படி குடித்திருந்தான்…நிறைய உளறிகிட்டு இருந்தானே..ஒரு  வேளை காதல் தோல்வியா இருக்குமோ…என்று நினைக்க..,, நிலாவின் மனம் அதை உடனடியாக மறுத்தது. ச்ச்சச இருக்காது அவனை எல்லாம் ஒரு பொண்ணு லவ் பண்ணுவாளா…திமிர் பிடிச்சவன்….அப்படியே  இவன் கதலிச்சு…காதல் பார்வை பாருடான்னா…கனல் பார்வைதான் பார்க்க வரும்…..அவனும் அவன் மூஞ்சியும்..” என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

சூர்யாவைப் பற்றிய நினைவுகள் மனதில் வட்டமிடும் பொழுதே…ரம்யா நியாபகத்திற்கு வர….நிலாவின் முகம் வேதனையில் சுருண்டது.இதுவரை இருந்த மென்மையான அவளின் முகம்.., சோதனைகள் சங்கமித்த கடலாய் காட்சியளித்தது.

 

அருளின் வீட்டில்…சுனாமி வந்து ஓய்ந்தது போல் இருந்தது.சுதா வழக்கம் போல் அழுது கொண்டிருக்க….தீபாவும்., அருளும் அதிர்ச்சியுடன்  நின்றிருக்க….உயிரற்ற வெற்று உடலாய் அமர்ந்து இருந்தார் முரளி.

 

“என் மகிக்கு நான் உயிருடன் இருப்பதே தெரியாதா…? நான் இல்லை என்று நினைத்து…என் பிள்ளையை பெற்று வளர்த்து ஆளாக்கிய அவள் எங்கே…? தாய் சொல்லை  நம்பி…அவளை வெறுத்து…இன்னொரு கல்யாணம் பண்ணி..பிள்ளைகளைப் பெற்ற…நான் எங்கே..ஐயோ..!  மகி…உனக்கு நடந்தது எவ்வளவு பெரிய கொடுமை…துரோகம்…!  என்னை.., சுதாவுடன் பார்த்ததும் நீ அதிர்ச்சி அடைந்ததற்கு இதுதான் காரணமா…? சூர்யா..என் பிள்ளையா…? என் ரத்தமா..? என் மகனா…இத்தனை நாள்…சொந்த அப்பன் இருந்தும் தந்தையில்லாப் பிள்ளையாய் இருந்தானா…?…என்று கேள்விகள்…ஒன்றன் பின் ஒன்றாய் படை எடுத்தது. அவரின் மனசாட்சி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத முரளியின் கோபம்…சுதாவின் பக்கம் திரும்பியது.

 

சுதாவின்  பக்கம் கோபமாய் திரும்பியவர்…” சொல்லு…எப்படி உன்னால் இப்படி செய்ய முடிந்தது. மகேஷ்வரி உனக்கு அப்படி என்ன பண்ணுனா….? எதுக்காக என் வாழ்க்கையில் இத்தனை வருஷமா விளையாடி இருக்க..? சொல்லு சுதா…என்னை  இத்தனை வருஷம் முட்டாளாக்கியிருக்க…..இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட உனக்கு மனசு உருத்தல….? ஐயோ..இன்னொரு பொண்ணை விரட்டி..அவ வாழ்க்கைய நாம வாழுறோம்ன்னு உன் மனசு குற்ற உணர்ச்சியில தவிக்கலை…? சொல்லு என்று சுதாவின் குரல்வலையை முரளி நெறிக்க…சுதா தடுக்காமல் அழுது கொண்டிருந்தார்.

 

ஏய்…! முதல்ல இந்த அழுகைய நிறுத்து…! இப்படி அழுது அழுதே…காரியம் சாதிக்கிற…? என்றார் முரளி வெருப்புடன்.

 

விடுங்க..என்று உதறிய சுதா…” நான் தப்பு பன்னினேன் தான் இல்லைன்னு சொல்லலை…ஆனா ஏன் பன்னேன்…அத்தை சொல்லி தான் செஞ்சேன்..அம்மா..,அப்பா..இல்லாத எனக்கு..அவங்கதான் எல்லாமே…! அவங்க.., சுதா நீ இதை செய்துதான் ஆகனும்ன்னு சொல்லும்போது., நான் எப்படி மறுத்து பேச முடியும். நான் அப்படியும் மறுத்தேன்…ஆனா அத்தை…என்ன கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சு, சத்யம் வேற வாங்கிகிட்டாங்க…நான் என்ன பன்ன முடியும்..” என்றார் அழுதுகொண்டே…

 

தீபாவிற்கு நடப்பதை எல்லாம் பார்த்து தலையை சுற்றிக் கொண்டு வந்தது. தன் அம்மாவா இப்படி என்று அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. சுதாவை….. தீபா பார்த்த பார்வையில் அப்பட்டமான வெறுப்பு இருந்தது.அவளும் ஒரு பெண் தானே..!

 

ஆனால் அருளால் அவ்வளவு சீக்கிரம் தன் தாயை விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஒரு வேளை அவன் ஆணாக பிறந்து விட்டதனால் ஒரு பெண்ணின் வலிகள் அவனுக்கு தெரியவில்லையோ என்னவோ..!

 

அப்பா…போதும் நிறுத்துங்க…! எதுக்கு அம்மாவை மட்டும் குறை சொல்றிங்க..? பார்க்கப் போனா பாதி தப்பு உங்கமேல தான். பாதி தப்பு என்ன..முழு தப்பும் உங்க மேலதான். காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டிங்க சரி…ஆனா..அவங்களை ஒழுங்கா வச்சு குடும்பம் நடத்துனிங்களா…? “.

 

எல்லாரும் சொன்னாங்களாம்…அவங்க போய்ட்டாங்கன்னு…இவரும் அதை நம்பி….அவங்களை வெறுத்துட்டு…எங்கம்மா..கழுத்துல தாலி கட்டுவாராம்…அப்பறம் என்னன்னு பார்த்தா…25 வருஷம் கழித்து..அவங்க ஒரு வளர்ந்த பையனோட காட்சி தருவாங்களாம்..அதைப் பார்த்த நீங்களும்…தய்யா..தக்கான்னு குதிச்சுகிட்டு.. எங்கம்மாவ கேள்வி மேல கேள்வி கேட்பிங்களாம்..எந்த ஊர் நியாயம் இது…? இது உங்களுக்கே வேடிக்கையா தெரியலை.

 

சின்ன வயசுல இருந்தே….உங்க மேல ஆசைய வளர்த்தது..உங்க அம்மா..அதாவது என் பாட்டி…! “.

 

நீங்க இறந்துட்டிங்கன்னு கேள்விப் பட்ட உடனே..விசாரிக்காம…உங்க வாழ்க்கைய விட்டு போன அவங்க நல்லவங்க….! “அவங்க ..உங்க கூட வாழப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க..” அப்படின்னு மத்தவங்க சொன்னத வச்சு…அவங்களை  வெறுத்துட்டு சாரி…சாரி…மறந்துட்டு…   எங்கம்மாவை கல்யாணம் பண்ணின  நீங்க   நல்லவர்…இதுல பழிகாரி பட்டம் மட்டும் எங்கம்மாவுக்கா..? நல்லா இருக்கே கூத்து..என்றான் நக்கலாய் அருள்.

 

அதுக்காக உங்கம்மா..செய்தது சரின்னு ஆகிடுமா.. அருள்…? என்றார் முரளி கோபம் குறையாமல்.

 

அருள்..” அம்மா செய்தது சரின்னு நான் சொல்ல வரலை..ஆனா அதுக்காக அவங்களை மட்டும் குற்றவாளிக் கூண்டுல நிறுத்துறத…என்னால் அனுமதிக்க  முடியாதுன்னு சொல்ல வரேன்..” என்றான் அவனும் கோபமாய்.

 

அருளின் இந்த பரிணாமம் முரளிக்கு புதிது. அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர் செத்துப் பிழைத்தார். ஒரு வெற்றுப் பார்வை சுதாவையும்., அருளையும் பார்த்தவர் அமைதியாய் தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

 

தீபாவிற்கு அருள் பேசியது சுத்தமாய் பிடிக்கவில்லை..என்றாலும் அவனையும் அங்கு விட்டுக் கொடுக்க முடியாமல்…தன் தந்தையிடமும் பேச முடியாமல் தவித்து நின்றாள்.

 

கல்யாணம் தான் சொர்க்கத்திலே

நிச்சயிக்கப்படுதா….

பத்திரிக்கை மட்டும் இங்கே…

அச்சடிக்கப்படுதா….

மனங்களைப் பார்க்காமலே…

திருமணங்களை செய்கிறார்கள்….

பொல்லாத விதியே….

செய்யாத சதியே….!

 

 

 

வீட்டு வாயில் நிழலாட நிமிர்ந்து பார்த்தார் மகேஷ்வரி. அங்கு நின்றிருந்தவரை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

 

உள்ளே..வரலாமா..? என்றார் பிரபு.

 

மகேஷ்வரி..” வாங்க…! நீங்க..என்று இழுத்தவர் அப்படியே நிறுத்த…”

 

பிரபு …” என்ன உனக்கு சரியா நியாபகம் இருக்காதும்மா..ஆனா உன்ன எனக்கு நல்லாத் தெரியும்..” என்றார் பிரபு.

 

உட்காருங்க..என்றார் மகேஷ்வரி.

 

மகேஷ்வரிக்கு நேராக எழுந்து நின்றவர்…” முதல்ல என்ன மன்னிச்சுடுமா..” என்றார்.

 

மகேஷ்வரி புரியாமல் விழிக்க…” என்னை  யார்ன்னு தெரியலையாம்மா… ” என்றார்.

 

தெரியவில்லை என்பதைப் போல் …மகேஷ்வரி தலையை ஆட்டினார்.

 

பிரபு..” என்னை உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைம்மா…ஏன்னா…நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. உன் வீட்டுக்காரர் இருக்காரே…அவருக்கு சொந்த மாமன் மகன் தான் நான். அதாவது சுதாவோட சொந்த அண்ணன்..” என்றார்.

 

பிரபுவின் பதிலில்…மகேஷ்வரி அமைதியாக இருக்க…பிரபு தொடர்ந்தார். ” நீ பொள்ளாச்சியில் வாழ்ந்த இருபது நாள்ல ..எங்களை எல்லாம் அவ்வளவா  உனக்கு தெரியாதுமா…இதுக்கும் நாம ஒரே வீட்ல தான் இருந்தோம். ஆனா நான் அதிகம் வீட்ல இருக்க மாட்டேன். தோப்பு துரவுன்னு அங்கையே என் பொழுது போய்டும். உன்ன அத்தை அப்படி அடிச்சு விரட்டும் போது…தடுக்க முடியாத என் இயலாமைக்கு…..இப்ப மன்னிப்புக் கேட்டு வந்துருக்கேன்ம்மா…” என்றார் அமைதியாய்.

 

அவரது பதிலில் விரக்தியாய் சிரித்த மகேஷ்வரி..” வச்சுக் காப்பாத்த வேண்டிய புருஷனே…என் பக்கத்துல இல்ல எனும் போது மத்தவங்களால என்ன அண்ணா செய்ய முடியும்..” என்றார்.

 

இருந்தாலும் ..எனக்கு மனசு உறுத்திக்கிட்டே இருந்ததுமா… அந்த தப்புக்கு நாமளும் துணை போன மாதிரி ஆகிட்டதோ..! அப்படின்னு நினச்சு நான் வருத்தப் படாத நாள் இல்லை. எப்பவாவது உன்னப் பார்த்தா மன்னிப்புக் கேட்கனும்ன்னு  நிச்சேன்மா…ஏற்கனவே தம்பிய நான் பார்த்து இருக்கேன். அப்பவே முரளி ஜாடையப் பார்த்து கொஞ்சம் சந்தேகம் வந்தது. கேக்குறதுக்குள்ள தம்பி கிளம்பிடுச்சு..இன்னைக்குத்தான் தெரிந்தது நீங்க இங்க இருக்கிங்கன்னு…” என்றார் பிரபு.

 

மகேஷ்வரி அமைதியாக இருக்கவும்…” நான் அத்தை கிட்ட எவ்வளவோ எடுத்து சொன்னேன்மா…ஆனா அவங்க.., நீயே ஒரு அனாதைப் பயல். நான் சொல்றத கேட்டு இங்க இருந்தா இரு..இல்ல போய்கிட்டே இரு..அப்படி இப்படின்னு என் தன்மானத்தை தூண்டி விடுற மாதிரி நிறைய பேசிட்டாங்க…அந்த கோபத்துல..நானும் வெளியேறி வந்துட்டேன்மா…” என்றவர்…,, மகேஷ்வரியை துரத்திய பிறகு…முரளி உயிருடன் இருப்பதாய் வந்த தகவல் முதற் கொண்டு அனைத்தையும் சொல்லி முடித்தார் “.

 

பிரபு சொல்ல சொல்ல…தனக்குள் பொங்கி எழுந்த அழுகையை அடக்கியவராய் அமர்ந்திருந்தார் மகேஷ்வரி.

 

சுதாகிட்ட நான் எவ்வளவோ சொன்னேன்மா…ஆனா..என் தங்கச்சி என் பேச்சை கேட்குற நிலையில் இல்லை. அவளுக்கு அத்தை சொல்லே வேதம். முரளிய அவளுக்கு  கட்டி  வைக்கிறேன்ன்னு அத்தை சொல்லி வளர்த்ததும் ஒரு காரணமா இருக்கலாம்..என்றார் பிரபும் கவலையாய்.

 

தன் காதல்., தன் கணவனால் சந்தேகப்படப் பட்டிருக்கிறது.. என்று பிரபுவின் வாய்மொழியாக அறிந்த மகேஷ்வரியின் மனமொரு நிமிடம் நின்று துடித்தது. தான் சந்தேகப்படப் பட்டிருக்கிறோம் என்பதை அவரால் இன்னமும் நம்ப முடியவில்லை. தன்னை சந்தேகப் பட்டு…தன் தாய் சொல்லை நம்பியவரையா…இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்தேன்..? என்று எண்ணும் போதே…இந்த நிமிடமே செத்து விட்டால் என்ன என்று தோன்றியது.

 

பிரபு கிளம்பிசென்ற பிறகும் கூட மகேஷ்வரி அதே நிலையில் அமர்ந்து இருந்தார்.

 

பிரபு உள்ளே வந்ததில் இருந்து…, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்ட மற்றொரு ஜீவன் சூர்யா.

 

அனல் கக்கும் பார்வையுடனும்….நெஞ்சில் தீராத கோபத்துடனும்..பிரபுவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான். தன் அம்மாவிற்கு இத்தனை கொடுமைகள் நடந்துள்ளதா..? என்று அவன் மனம் வெகுண்டது.அனைவரின் மேலும் அவனுக்கு பலி உணர்ச்சியே மேலோங்கி நின்றது.பிரபு உட்பட. பிரபு நினைத்து இருந்தால் கண்டிப்பாய் தன் அம்மாவின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கலாம் என்று அவன் உறுதியாய் நம்பினான் சூர்யா”.

 

இதுவரை தன் அப்பா இறந்து விட்டார் என்று அம்மா சொன்னது.., இன்று தன் அப்பா உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது…அதிலும் தன் தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமை என்று அனைத்தும் சேர்ந்து அவனை மிருகத்தனமாய் யோசிக்க வைத்தது.மிகவும் முக்கியமாய் அவனை வெறியேத்தியது ஜக்கம்மாவின் நடவடிக்கைகள். முதலில் அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா..என்று தெரியனும் என்று தான் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் மனதினுள் பட்டியலிட்டான் சூர்யா.

 

மேகங்கள் அது போல….

சோகங்கள் கலைந்தோடும்…

நீ போகும் பாதை எல்லாம் …

நியாயங்கள் சபையேறும்…..

 

 

சூர்யா …உறுதி மொழி எடுத்த அதே வேளையில் அருளும் அங்கு மனதில் ஒரு உறுதி  எடுத்துக் கொண்டிருந்தான்.

 

தன் அம்மா செய்தது தவறு என்று அவன் மூளை சொன்னாலும் அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அப்பா தான் அனைத்திற்கும்  காரணம் என்று நினைத்தான். என்ன செய்வது..ஏது செய்வதென்றே அவனுக்குப்  புரியவில்லை. ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இனி வாழ்க்கை எப்பொழுதும் போல் அமைதியாகவும்..சந்தோஷமாகவும் செல்லாது என்று..”

 

அருளுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..பிரச்சனைகளால் மனம் துவண்டது. மனம் அமைதிக்கு ஏங்கியது. உடனே அவனுக்கு நினைவுக்கு வந்தது நிலா தான். அவள் முகம் நியாபகத்திற்கு வந்த உடன்..அனைத்து பிரச்சனைகளும் சூரியனைக் கண்ட பனித்துளி போல் மறைவதாய் உணர்ந்தான் அருள்.  இதை இப்படியே விடக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..அவ்வளவு சீக்கிரம்..நிலாவிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தான்” .

 

அவன் முடிவு செய்தால் மட்டும் போதுமா..?

 

மங்கள வாத்தியங்கள்…முழங்க….அந்த திருமண மண்டபமே…. களைகட்டியிருந்தது. அங்கு மணமேடையில் வெண்ணிற வேஷ்ட்டி சட்டையில்..மணமகனுக்கே உரிய…மந்தகாசத்துடன் அமர்ந்து இருந்தான் அருள்.தன் காதல் கை கூடிய மகிழ்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

 

பச்சை நிற பட்டு சேலையில்…நிலவென ஜொலித்த முகமாய்…முகமெங்கும் பூரிப்புடன்…நாணத்தில் தலை குனிந்தவளாய் அடிமேல் அடி வைத்து வந்தாள் நிலா.

 

ஜோடிப் பொருத்தம் ரொம்ப..நன்னா இருக்கு…பேஷா இருங்கோ..என்று ஐயர் அவர்களைப் பார்த்து வாழ்த்த..அருள் நிலாவைப் பார்த்து  கண் சிமிட்டினான். நிலா வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டாள்.அவளது செயலில் கவரப் பட்டவனாய்..அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.

 

ஐயர்  கெட்டி மேளம்..! கெட்டி மேளம்…!  என்று  என்று முழங்க….நிலாவின் கழுத்தில் தாலி ஏறியது. முகம் முழுதும் மகிழ்ச்சியுடன்  நிமிர்ந்து பார்த்த நிலா …அதிர்ந்தாள். ஏனென்றால் அவள் கழுத்தில் தாலியைக் கட்டியது….அருள் என்று அவள் நினைத்திருக்க…கட்டியவனோ…சூர்யா…!

 

விதிர் விதித்து எழுந்தாள் நிலா. உடல் முழுதும் வியர்த்திருக்க…ச்ச்ச…கனவா..! ஸ்ஸ்..! என்று பெருமூச்சு விட்டாள்  நிலா. மனம் ஏதோ உறுத்த கடிகாரத்தைப் பார்க்க..அது அதிகாலை 4 மணியைக் காட்டியது.

 

எண்ணம் போல வாழ்க்கையே…

எவருக்கும் வாய்ப்பதில்லை…

வாழ்க்கை போல் எண்ணம் கொள்..

வாழ்வது துயரமில்லை….

கண்ணோடு பொறுமை காத்தால்…

காலம் பதில் சொல்லும்…

 

முகவரி  12:

 

நிலாவிற்கு உடல் முழுதும் வியர்த்து அந்த அதிகாலை வேளையிலும்…  என்ன மதிரியான கனவு இது..? என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக நம்ம கனவுல இவனுங்க ரெண்டு பேரும் வந்தானுங்க…? என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்…” நிலா.

 

நிலாவிற்கு கனவு வந்தது கூட பிரச்சனையாய்த் தோணவில்லை….ஆனால் கனவில் சூர்யா…தாலி கட்டுவது போல் வந்தது தான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. “கனவுலையும் இந்த கருவாப்பய தொல்லை தாங்க முடியலை…என்ன பாடாபடுத்துறதுக்கே பிறவி எடுத்துருப்பான் போல….குடிகாரன் ” என்று காலை 4 மணிக்கு சூர்யாவிற்கு மங்களம் பாடிக்கொண்டிருந்தாள்.

 

“ஏம்மா…நிலா…உன் கனவுல அருளும் தான வந்தான்..அது பெரிய விஷயமா தெரியலையா உனக்கு…? என்று மற்றொரு மனம் கேள்வி கேட்க…அதை பொருட்படுத்தாமல் ஒதுக்கித் தள்ளினாள்.

 

சரி அப்படியே…சூர்யா உண்மையாலுமே உன் கழுத்தில் தாலி கட்டுனா என்ன செய்வ…?”  என்று அவளது மனசாட்சி கேள்வி எழுப்பியது.

 

ச்சை அவனையா…அவனை கல்யாணம் பன்றதுக்கு…  நான் கல்யாணம் பண்ணாமயே இருந்துடுவேன்…” என்று மனசாட்சிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அதே நேரம் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவிற்கு விக்கல் எடுத்தது.

 

மெதுவாய் எழுந்து..,அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து…தண்ணீரைக் குடித்தான்…ஆனால் விக்கல் நின்ற பாடில்லை.

 

யாருடா..இது..? இந்த நேரத்துல நம்மை நினைக்குறது….” என்று சூர்யா தூக்கம் கலைந்த கடுப்பில் இருந்தான்.

 

சரி …இனி தூங்கி என்ன ஆகப் போகுது….என்று நினைத்தவன்….அருகில் இருந்த ஜீவாவை எழுப்ப…, அவனோ  கடுப்புடன் எழுந்தான்.

 

என்னடா   சூர்யா…, விடுஞ்சுடுச்சா…? ”என்றான் கொட்டாவி விட்டுக் கொண்டே.

 

இல்லை மச்சான்…எனக்கு தூக்கம் வரலை…அதாண்டா..  உன்னையும் எழுப்புனேன்..” என்றான் சூர்யா..அப்பாவியாய்.

 

அவனை கொலைவெறியாய்ப் பார்த்தான் ஜீவா.”டேய் வேண்டாம்….என்ன கொலைகாரனா ஆக்காத….பேசாம படு..என்றபடி கடிகாரத்தைப் பார்த்தான் ஜீவா…அது  4 மணியைக் காட்ட..இன்னும் அதிகமாய் கடுப்பானான் ஜீவா” .

 

சூர்யா..படுக்காமல் அப்படியே அமர்ந்து இருக்க….”டேய் இதெல்லாம் எனக்கு மிட்னைட்டுடா….” என்று ஜீவா  புலம்ப…அப்பொழுதும் சூர்யா அமைதியாய்   இருக்க…

 

நீயெல்லாம் நல்லா வருவடா….. படு இல்ல…பாலாப் போ..ஆனா என் உசுர வாங்காத..உனக்கு புண்ணியமாப் போகும்.. அம்மா சொன்னாங்கன்னு…இன்னைக்கு உன்கூட படுத்தேன் பாரு..எனக்கு இதுவும் வேணும்…இன்னமும் வேணும்…” என்றபடி.., தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டான்  ஜீவா.

 

ஆனால் சூர்யாவிற்கு போன தூக்கம் வருவேனா..என்று அடம்பிடித்தது.தனது மொபைலை எடுத்து அதிலிருந்த நிலாவின் போட்டோவைப் பார்த்தான். 

 

பார்த்தான்…பார்த்தான் ..பார்த்துக் கொண்டே இருந்தான். என்ன நினைத்தானோ…வேகமாய் அதை அழித்து விட்டான். ஆனால் அதற்கு பிறகும் அவன் மனம் அமைதியடையவில்லை. நிலாவின் நினைவுகள் முன்பைக் காட்டிலும் அதிகமாய் அவன் மனதை ஆக்கிரமித்தது. முன்பைக் காட்டிலும் இப்பொழுதுதான் அவன் மனதில் ஆத்திரமும் பொங்கியது.

 

 

சோகம் என்றும் முடியாது…

கவலை என்றும் அழியாது….

இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்….

வாழ்க்கை என்றும் தோற்காது…..

 

தீபாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நேற்றுவரை நந்தவனமாய் இருந்த வீடு…ஒரே நாளில் இப்படி மாறக் கூடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.முரளி உள்ளே சென்று கதவை அடைத்தவர் சாப்பிடக் கூட வெளியே வரவில்லை. அருளோ….தாயை சாமாதானப் படுத்தினானே தவிர தன் அப்பாவை கண்டு கொள்ளவே இல்லை. இதை இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணியவள்….முரளியின் அறைக்கு சென்றாள்.

 

அப்பா…! அப்பா…! கதவைத் திறங்க…ப்ளீஸ் என்று தீபா கூப்பிட… சற்று நேரம் கழித்து…முரளி அமைதியாய் கதவைத் திறந்தார்.நேராக அறைக்குள் சென்றவள்…அப்பா…! ப்ளீஸ்..வந்து சாப்பிடுங்க…” என்றாள்.

 

மனதில் உள்ள வேதனை அவரது முகத்தில் முழுமையாய் படர்ந்திருக்க…அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தார். தன் அப்பாவை இப்படிப் பார்க்கவே அவளால் முடியவில்லை.

 

குட்டிமா…! அப்பாக்கு பசிக்கலைடா…நீ போய் சாப்பிடுமா..” என்றார் அமைதியாய்.

 

அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவள்…., அவரது மடியில் தலை வைத்துக் கொண்டாள். “அப்பா..உங்க வேதனை எனக்குப் புரியுது. நேத்து அண்ணா அப்படி பேசியிருக்க கூடாதுதான்….. விடுங்கப்பா..அவன் ஏதோ தெரியாம பேசிட்டான்….” என்றாள்.

 

அருள் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை தீபா…அவன் கேட்டது என்னமோ சரிதான்….காதலிச்சு கட்டிகிட்டு வந்தவளை…வச்சு காப்பாத்த எனக்கு துப்பில்லாம போனது என்னவோ உண்மைதான்…..” என்றார் விரக்தியாய் முரளி.

 

அப்பா…! என்று தீபா ..அழைக்க…” நீ போடா..தீபு….எனக்கு நிறைய யோசிக்கனும்…” என்றார் முரளி.

 

இதற்கு மேல் தொந்தரவு  செய்யக் கூடாது என்று எண்ணிய தீபாவும்., அமைதியாக வெளியே சென்றாள்.

 

வெளியே சுதா அமைதியாக நின்றிருக்க…அவரை கவனியாது போல் சென்றாள்…தீபா. மகளின் புறக்கணிப்பு…ஈட்டியாய் நெஞ்சில் குத்த…”தீபா..என்றார் சுதா…

 

“.நேராக சுதாவின் முன்பு வந்தவள்..” இதோ பாருங்க….அப்பாவே உங்களை மன்னித்தாலும்…, என்னால் கண்டிப்பா அது முடியாது. அண்ணா உங்கமேல இருக்குற பாசத்துல கண்மூடித்தனமா   பேசறான். ஆனா நான் அப்படி இல்லை. உங்களை என் அம்மான்னு சொல்லவே..எனக்கு வெட்கமா..இருக்கு…” என்று வெறுப்புடன் மொழிந்தாள் தீபா.

 

தீபாஆஅ…! என்று அதட்டினான் அங்கு வந்த அருள். ஆபீஸ் செல்வதற்கு தயாராகி வந்தவனின் காதுகளில் தீபாவின் வார்த்தைகள் விழவே..அவளை அதட்டினான்.

 

“அம்மாகிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியாது…இதென்ன புதுப் பழக்கம்.. ” என்றான்.

 

சாரி…”ஒரு காதலை கொன்னு புதச்சுட்டு…இன்னொருத்தவங்க..தாலிய தட்டிப் பறிச்சு…இத்தனை வருஷம் குடும்பம் நடத்துனவங்களை அம்மான்னு சொல்ல நான் விருப்பப் படலை. அதே சமயம் என் அம்மா…நேத்தே செத்துட்டாங்க…” என்று கோபமாய் சொன்னவள்…அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

 

தீபாவின் வார்த்தைகளைக் கேட்ட..சுதா…அப்படியே சிலையென… நின்றிருந்தார்.

 

அருள்..” அம்மா..அவ சின்ன பொண்ணு..என்று ஏதோ சொல்ல வர..கையமர்த்தினார் சுதா..நீ ஆபீஸ்க்கு போ என்று  சொல்ல….” அருள் சற்று தயங்கியவன்..பின் வேகமாக வெளியேறினான்.

 

                                         ————————

 

நிலாவின் வீட்டிற்கு போகும் வழியில் சற்று தள்ளி நின்றிருந்தான் அருள். இந்த வழியாகதான் அவள் வந்தாக வேண்டும்….இன்று எப்படியாவது அவளை சந்திச்சு பேசிடனும் என்ற முடிவோடு நின்றிருந்தான் அருள்.

 

அவனது வேண்டுதலைப் பொய்யாக்காமல்…தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் நிலா. அவளை காணவும்…அருளிற்கு உயிரே வந்தது போல் இருந்தது. அருள் கையை ஆட்ட….நிலா..அருகில் வந்து அவனைப் பார்த்த பின் தான் நிறுத்தினாள்.

 

என்ன ஜெண்டில்மேன்..இங்க நிக்குறிங்க…?” என்றாள் நிலா.

 

முதலில் சற்று தயங்கியவன்…பின் தைரியம் வரப் பெற்றவனாக..” நிலா…நான் உங்ககிட்ட ..ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசனும்…..இன்னைக்கு ஈவ்னிங் காபி ஷாப்ல மீட் பண்ணலாமா?” என்றான் அருள்.

 

என்ன விஷயமா இருக்கும்…என்று நிலா யோசிக்க…” ப்ளீஸ்..நிலா….ரொம்ப முக்கியமான விஷயம்…முடியாதுன்னு சொல்லிடாதிங்க….” என்றான்.

 

சரி போய்தான் பார்ப்போம்..என்று நினைத்தவள்…, சரி என்று தலையை ஆட்டினாள். அருளுக்கு ஸ்ஸ்ப்பாடா என்று இருந்தது. சரி அப்ப நீங்க கிளம்புங்க….ஈவ்னிங்….காபி ஷாப்..மறந்துடாதிங்க..என்றாவாறு சென்றான் அருள்.

 

அருளின்….செய்கைகள் அனைத்தும் நிலாவிற்கு வினோதமாய்ப் பட்டது…என்னவா இருக்கும்….?  என்ற ஆராய்ச்சியுடனே சென்றாள்.

 

இவை அனைத்தும் ஆபீஸ் செல்ல அவ்வழியாக வந்த சூர்யாவின் கண்களில் தெளிவாகப் பட்டது. நெருப்புத் துண்டங்களாய் மாறியது அவன் முகம்.

 

நிலாவிற்கு செல்லும் வழியெல்லாம் ஒரே யோசனையாகவே இருந்தது.” காலையில் அவள் கண்ட கனவும்.., சற்று முன்பு அருள் வந்து தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னதும்…ஏதோ இருப்பதாக அவள் உள்மனம் அறிவுருத்தியது”. இப்படி யோசனைகளின் சிகரமாய் சென்றவள்..ஆபீஸில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு…அதே யோசனையுடன் நடந்து சென்றாள்.

 

திடிரென்று யார்…மீதோ மோத….அப்பொழுதும் அவள் தன்னிலைக்கு வராமல்…சாரி ..என்ற சொல்லி மட்டும் உதிர்த்துவிட்டு தன் போக்கில் சென்றாள். ஆனால் அவள் இடித்த ..சூர்யாவோ…கடுப்புடன் நின்றிருந்தான்”.

 

இவ எப்படி நம்ம ஆபீஸ்ல..என்று சூர்யா யோசித்துக் கொண்டிருக்கும் போதே….முன்னால் சென்ற நிலா…ஏதோ தோன்ற…திரும்பிப் பார்த்தாள். ஆனால் சூர்யா அதற்குள் மறுபுறம் திரும்பி நின்றிருந்தான். பிரம்மையா இருக்கும் என்று மனதில் நினைத்த நிலா..தோள்களைக் குலுக்கியவாறு..சென்று விட்டாள்”.

 

சூர்யாவிற்கு..அவள் தன் மீது மோதியது பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. தனக்குத் தானே போட்ட கட்டுப் பாடுகள் எல்லாம் நொடியில் சிதறி தூள்..தூள் ஆனது போல் உணர்ந்தான். பல்லைக் கடித்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்…அடுத்து செய்ய வேண்டிய செயலில் இறங்கினான்.

 

தனது கேபினுக்கு வந்த சூர்யாவிற்கு …மனம் அமைதி இல்லாமல் தவித்தது. ஒரு தெளிவைத் தேடி அவன் மனம் பயணித்தது.என்னதான் மகேஷ்வரியின் முன்னிலையில் திடமாக காட்டிக் கொண்டாலும்…சூர்யாவாலும் அடுத்தடுத்த உண்மைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை.இத்தனை காலமும் அப்பா இல்லை என்ற மனப்பான்மையில் இருந்தவனுக்கு….முரளி உயிருடன்..அதுவும் இன்னொரு குடும்பத்துடன் இருப்பதைப் பார்க்க முடியவில்லை.

 

தன் தாய் இத்தனை வருடமும் பட்ட கஷ்ட்டத்திற்கு…ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. இப்படியான மன நிலையில் தான் அருளையும்…நிலாவையும் ஒன்றாகப் பார்க்க…அவன் ஆத்திரமும் கூடியது.ஒரு முடிவுக்கு வந்தவனாய்…..சுதாகரனை அழைத்தான் சூர்யா.

 

அங்கில்…எனக்கு அந்த நியூ ஜாயினி பத்தின..டீட்டெய்ல்ஸ்…அப்பறம் அவங்க அட்டென் பண்ண இண்டெர்வியூ ரெக்கார்ட்ஸ் எல்லாம் வேணும்…”  என்றான்.

 

சுதாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை..இருந்தாலும் சூர்யா கேட்டால்..செய்ய வேண்டியது தான் அவர் வேலை.அவரும் அனைத்து விபரங்களையும் கொண்டுவந்து கொடுத்தார்.

 

அவரை அனுப்பிவிட்டு….நிலாவின் பைலைத் திறந்தான் சூர்யா. இதுவரை அவனுக்கு அவள் பெயர் நிலா என்று தெரியாது. ஆனால் இன்று அறிந்து கொண்டான்.  “நிலா…நிலா..என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தான் அந்த பெயரை..இத்தனை நாள் நம்ம ஆபீஸ்ல தான் இருந்துருக்கா..ஆனா நமக்கு தெரியாம போய்ட்டதே…என்று நினைத்தான் சூர்யா”.

 

காதலா…, பாசமா  என்ற   போராட்டத்தில் சிக்கித் தவித்தான் சூர்யா. முதலில் பாசத்தை கவனி என்று தன் மனம் கட்டளை இட…அந்த பைலை மூடியவன்….தன் மனக் கதவுகளையும் மூடினான்”.

 

மூடிய கதவுகளை நிலா..திறப்பாளா….?

 

மகேஷ்வரி கோபமாய் நின்றிருந்தார்.எதிரில் முரளி அமர்ந்து இருந்தது தான் காரணம். மகேஷ்வரியின் மன்னிப்பை நாடி வந்து இருந்தார். குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு….தீபா  தான் இந்த யோசனையை சொல்லி அனுப்பி வைத்தாள்.

 

அப்பா.. இது சரியா ..தப்பான்னு தெரியலை. இத்தனை நாள் எப்படியோ..! ஆனா…இப்ப உண்மை தெரிஞ்சும் நீங்க போய் மகி அம்மாகிட்ட பேசாம இருக்குறது எனக்கு சரியாப் படலை. நீங்க ரூம்குள்ளயே அடஞ்சு கிடக்குறதால எந்த பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துடாது. நடந்த தப்புக்கு அம்மா தான் காரணம் என்றாலும்…உங்க தப்பும் அதுல இருக்கு.அதனால் இனி என்ன செய்யனும்ன்னு நீங்க தான் யோசிக்கனும்..போய் மகி அம்மாகிட்ட மன்னிப்பு கேளுங்க…..அவங்கஉடனே மன்னிப்பாங்கன்னு எனக்கு தோணலை..ஆனா…வேற வழியும் இல்லை..”என்றாள் தீபா.

 

தீபா சொன்னதும் சரியாகப் படவே கிளம்பி வந்திருந்தார் முரளி. சுதாவோ அவரைத் தடுக்கவும் இல்லை…என்ன என்று கேட்கவும் இல்லை.

 

ஆனால் மகேஷ்வரியோ….கண்ணகியைப் போல் நின்றிருந்தார்.

 

மகி… என்ன மன்னிச்சுடு….நடந்த எல்லாத் தப்புக்கும் நான் தான் காரணம்.எல்லாம் என்னுடைய முட்டாள் தனத்தால் நடந்தது…” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே…மகேஷ்வரி இடைமறித்தார்.

 

மகேஷ்வரி..” நீங்க யாரு….எதுக்காக இங்க வந்து தேவை இல்லாம பெசிட்டு இருக்கிங்க..? ” என்றார்.

 

மகி…ப்ளீஸ்…  இப்படி எல்லாம் பேசாத. நான் உன்ன தேடாத இடம் இல்லை. நீ போய்ட்டன்னு சொன்ன உடனே நான் நம்பவே இல்லை…” என்றார் முரளி.

 

ஹோ…  சொன்ன உடனே நம்பலை. ஆனா..சொல்ல.,சொல்ல நம்பிட்டிங்க அப்படித்தான..? “என்றார்  மகேஷ்வரி.

 

அப்படி இல்லை  மகி.  நான் சென்னை வந்து   தேடுனேன்..உங்க வீடும் பூட்டி இருந்தது. பக்கத்துல கேட்டதுக்கு நீங்க காலி பண்ணி போய்ட்டதா சொன்னாங்க…! அப்படியும் சென்னையில கோவில்..குளம்ன்னு நான் தேடாத இடம் கிடையாது. என்னல் ஒரு முடிவுக்கும் வர முடியலை. நான் சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி..நீ வேற…பொள்ளாச்சியில் இருக்கவே பிடிக்கலைன்னு சொன்னியா…அதை எல்லாம் நினச்சு.., குழம்பி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாம கிட்ட தட்ட பைத்தியம் போல இருந்தேன்..” என்றார் முரளி.. விளக்கம் கொடுக்கும் பாணியில்.

 

மகேஷ்வரியின் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது..” நான் சொன்னதை வச்சு…நான் ஓடிப் போயிருப்பேன்னு முடிவு பண்ணி…இன்னொரு கல்யாணம் வேற பண்ணிகிட்டிங்க இல்லையா…? எனக்கு ஒன்னும் மட்டும் புரியலை..நான் சொன்னப்ப…”இதுதான் என் மண்ணு..நான் இங்கதான் இருப்பேன்னு சொன்னவரு  இப்ப சென்னையில் ஏன் தொழில் செய்கிறார்ன்னு தான் புரியலை..? என்றார் இடக்காக.

 

முரளி பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார்.  மகி… என்று இழுக்க…”

 

போதும்..,.  யாரும் எந்த விளக்கமும் சொல்லத்தேவை இல்லை. இத்தனை நாள்..., என் புருஷன் செத்துட்டார்ன்னு நினச்சுகிட்டு இருந்தேன். இனியும் அப்படியே நினச்சுக்கறேன்…என் காதலை அசிங்கப் படுத்திய.., சந்தேகப் பட்ட உங்களை…,,  நான் ஒரு காலத்துல காதலிச்சேன்ன்னு நினைக்கவே… எனக்கு அசிங்கமா இருக்கு….. 

 

எந்த முகத்தை வச்சுகிட்டு இங்க வந்திங்க…உங்க நல்ல காலம் …என் பிள்ளை..இப்ப இங்க இல்லை..இருந்திருந்தான்…அவ்வளவுதான். ஏன்னா என் பிள்ளை என்ன மாதிரி கோழை கிடையாது..அவன் சிங்கம்..அதனால் அவன் வரதுக்கு முன்னாடி நீங்க கிளம்பினா..அது உங்களுக்கு நல்லது..” என்றபடி வாயிலைப் பார்த்தார் மகேஷ்வரி.

 

அடிபட்டவராய்ப் பார்த்தார் முரளி. ஆனால் மகேஷ்வரி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. வெளியில் சொல்ல முடியாத ரணங்களும் .., காயங்களும் அவரது மனதில் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தது.இத்தனை வருட வாழ்க்கை ஒரு நொடியில் அர்த்தமற்று போய்விட்டதாய் உணர்ந்தார் மகேஷ்வரி.

 

 

உனது விழிகள் அழும் போது….

எந்த விரலும் துடைக்காது…

விரலை நம்பி நீயும் நின்றால்….

வந்த பாரம் தீராது.

 

 

அந்த மாலை வேளையில் அந்த பிரபலமான காபி ஷாப்…கூட்டத்தில் நிறைந்து வழிந்தது. அருள் நிலாவிற்காக் காத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் படபடப்பாய் இருந்தது. “ஏற்கனவே இருக்கிற பிரச்சனையில் இது இப்ப ரொம்ப முக்கியமா..என்று அவன் உள் மனம் அவனைப் பார்த்து கேட்க…முக்கியம் தான் என்று பதில் அளித்தான் அருள் “.

நிலாவை..,இன்னும் காணவில்லை. வருவாளா…மாட்டாளா..? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் அருள்.ஆனால் நீ பட்டி மன்றம் நடத்தத் தேவை இல்லை என்பதைப் போல் அங்கு வந்து சேர்ந்தாள் நிலா”.

 

ஹாய் ஜெண்டில் மேன்…! என்று கை அசைத்தவாறே வந்தாள் நிலா.

 

அருளுக்கு முகம் முழுதும் பிரகாசமானது. நிலா வந்துவிட்டாள் என்ற நிம்மதி அவனுக்கு.

 

ஹப்பா…! வருவிங்களோ…மாட்டிங்களோன்னு நினச்சேன்…பட் வந்துட்டிங்க…தேங்க் காட்..என்றான் அருள்.

 

நிலா..பொய்யாய் முறைத்தாள் அருளை..”என்ன உங்க நம்பிக்கை…புல்லரிக்குது..” என்றவள்…”ஜெண்டில்மேன் இப்பவே சொல்லிட்டேன்…பில் நான் தான் குடுப்பேன்னு சொல்ல மாட்டேன்…கண்டிப்பா நீங்க தான் குடுக்கனும்..” என்றாள் சிரிப்புடன்.

 

ஐயோ..! நிலா..இதெல்லாம் ஒரு விஷயமா…கண்டிப்பா நான் தான் பில் குடுப்பேன்…அதனால் நீங்க..கவலைப் படாமல் காபி குடிக்கலாம் சரியா என்றான் அருளும் சிரிப்புடன்…

 

இது ஓகே..என்றவள்…காபியை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தாள். அருளும் அமைதியாக இருக்கவே…நிலாவே ஆரம்பித்தாள்.

 

என்ன ஜெண்ட்டில்மேன்…ஏதோ..பேசனும்ன்னு சொல்லிட்டு…இப்படி இப்படி அமைதியா இருக்கிங்க…சீக்கிரம் சொல்லுங்க…நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்…” என்றாள் நிலா.

 

நிலா…நான் சொல்லிடுவேன்…ஆனா நீங்க என்ன தப்பா நினைக்கக் கூடாது சரியா…என்றான் அருள் பீடிகையாய்.

 

அது நீங்க சொல்றதை பொறுத்தது,.. என்றாள் நிலா.

 

போதும் நிலா…நாம ரெண்டு பேரும் நடிச்சது…என்னைக்கு நீங்க..” என் ஹஸ்பெண்ட் பில் தருவார்ன்னு என்ன காட்டி சொல்லிட்டுப் போனிங்களோ…” அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன்…கல்யாணம் பண்ணா உங்களைத்தான் பண்ணனும்ன்னு..என்று போட்டு உடைத்தான் அருள்.

 

என்ன சொல்றிங்க…! என்று  அதிர்ந்தாள் நிலா.

 

நிலாவிற்கு மேல் அதிர்ந்தான்..அருளிற்கு  பின்னால் அமர்ந்து இருந்த சூர்யா.ஆனால்.., அவனால் நிலா..அதிர்ந்ததைப் பார்க்க முடியவில்லை.ஒருவேளை பார்த்திருந்தால் பின்னால் வரக் கூடிய பிரச்சனைகளைத் தவிர்த்து இருக்கலாமோ…என்னமோ..!

 

சூர்யாவின் ஆத்திரம் தலைகேறியது..” அப்போ..இவளும் அவனைக் காதலிக்கிறாளா..? இந்த அளவுக்கு போய்ட்டதா….என்று மனதிற்குள் வெகுண்டான்..” சூர்யா.

 

ஆத்திரம் தாங்காமல் …வெளியில் செல்வதற்காக சூர்யா  எழுந்திருக்க….அங்கு காபி கொண்டு வந்திருந்த பேரர் மேல் தெரியாமல் இடித்துவிட்டான் சூர்யா. அவன் இடித்ததில் பேரரின் கைகளில் இருந்த காபி அருளின் மேல் கொட்டியது.

 

காபி சூடாக இருந்ததினால் …காபியின் சூடு அருளுக்கும் சூடேற்றியது. பேரரை திட்டுவத்ற்காக நிமிர…அங்கு நின்றிருந்த சூர்யாவை  பார்த்தவனது கோபம் பன்மடங்கு பெருகியது. நிலாவும் சூர்யாவைப் பார்த்து அதிர்ந்தாள்.

 

இவனா…இவன் எங்கே இங்கே…? ” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…அருள் சூர்யாவின் சட்டயைப் பிடித்தான்.

 

ஏற்கனவே…நிலா..அருளைக் காதலிக்கிறாள்  என்ற கோபத்தில் இருந்த சூர்யாவும்…அருளின் சட்டயைப் பிடிக்க…இருவரும் உச்சகட்ட கோபத்தில் எதிரும் புதிருமாய் நின்றிருந்தனர்.

 

நிலா என்ன செய்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

 

உனது தந்தையும்…

எனது தந்தையும்…

நம் தந்தையாக…

நீயும் நானும் வேறானோம்…

காட்டில் போரிடும் புலி ஆனோம்….

Advertisement