Advertisement

முகவரி 35:

சூர்யாவின் கார் கோர்ட் வாசலை நெருங்க….பத்திரிக்கையாளர்கள் மற்றும் டி.வி ரிப்போர்ட்டர்களும் காரை சூழ்ந்து கொண்டனர். காரை விட்டு இறங்கும் முன் நிலா,சூர்யாவைத் தயக்கமாகப் பார்க்க….அவளின் நிலை உணர்ந்தவனாய்…”எப்ப கேஸை எடுக்கனும்ன்னு முடிவு பண்ணினாயோ அப்பவே இந்த மாதிரியான எல்லா நிகழ்வுகளுக்கும் உன்னை நீ தயார் படுத்திக்கனும்.உன்னால் முடியும்” என்று அவளின் கைகளை தன் கைகளால் இறுக்கியபடி நிலாவின் கண்களைப் பார்த்து சொல்ல… “சூர்யாவின் அந்த வார்த்தைகள் அவளுக்கு தெம்பூட்டியது”.

மனதில் சூர்யா கொடுத்த தெம்புடனும்….நினைவில் ஜெய்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் காரை விட்டு இறங்கினாள் நிலா.அவளை சூழ்ந்து கொண்ட அனைவரும் அவளின் பதிலுக்காக காத்திருந்தனர். வினோத் பெரும் புள்ளியின் மகன் என்பதாலும்…..நிலா புகழ்பெற்ற லாயரின் மகள் என்பதாலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அனைவராலும் எதிர் பார்க்கப் படும் ஒன்றாக இருந்தது.

நிலாவை சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள்…”மேடம் இத்தனை வருஷம் கழித்து நீங்க எந்த கேஸை எடுக்க காரணம் என்ன..?”

நிலா:”குற்றவாளி தப்பிக்கவும் கூடாது,சட்டம் சாகவும் கூடாது.அதுக்காகத்தான்”

பத்திரிக்கையாளர்: இந்த கேஸ்ல சம்பந்த பட்ட வினோத் ஒரு பெரிய புள்ளியோட பையன்.அதைப் பத்தி உங்களுக்கு பயம் இல்லையா…?

நிலா: எந்த புள்ளியா இருந்தாலும் அது நேர் புள்ளியா இருந்தா பிரச்சனை இல்லை.அந்த வினோத் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவன் குற்றவாளி தான்.

 

பத்திரிக்கையாளர்: உங்களுக்கும் வினோத்க்கும் கல்யாணம் முடிவு பண்ணி நிச்சயம் எல்லாம் முடிந்திருந்தது.அப்படியிருந்த சூழல்ல உங்க அப்பா இறந்ததும்,நீங்க இடைப்பட்ட இந்த காலத்தில் காணாப் போனதும் தற்செயலா நடந்ததா…?இல்லை திட்டமிட்டு நடந்ததா..?

நிலா:”தகுந்த காலத்திற்காக காத்திருந்தேன் அவ்வளவு தான்”.

பத்திரிக்கையாளர்: உங்க தரப்புல வினோத்க்கு எதிரா பலமான சாட்சிகளும்,ஆதாரங்களும் இருப்பதாகவும்….கண்டிப்பா வினோத்க்கு தண்டைனை கிடைக்கும் என்றும் பரபரப்பா பேச்சு அடிபடுதே அதை பத்தி என்ன நினைக்கிறிங்க..?

நிலா:அதை ஜட்ஜ் தான் முடிவு பண்ண வேண்டும்.

பத்திரிக்கையாளர்:வினோத்க்கு ஆதரவா ஒரு வக்கீல் கூட ஆஜர் ஆகவில்லைன்னு சொல்றாங்களே..! அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..?

நிலா: “ஹிம்..எல்லாருக்கும் நல்லா தெரியும் அந்த வினோத் தான் குற்றவாளின்னு.குட்டி சுவர்ன்னு தெரிஞ்சே அதுல முட்டிக்க லாயர்ஸ் எல்லாம் முட்டாள் இல்லை.நான் ஒன்னும் எனக்காக நீதி கேட்டு வரலை.பாதிக்கப் பட்ட பொண்ணுங்களுக்காக வந்திருக்கேன்.இதில் சம்பந்தபட்டதால் தான் என் அப்பா கொல்லப்பட்டார்.

வினோத் மேல் ஒரு குற்றம் இல்லை……இது போல் பல குற்றங்களை அவன் செய்திருக்கிறான்.சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தால் எதையும் மூடி மறைத்து விடலாம் என்ற ஆணவம்,திமிர்.அவனுடய ஆணவத்துக்கும்,திமிர்க்கும் வாழ் நாள் இன்றோடு முடிவடைகிறது…” என்று நிலா படபடக்க…சூர்யா அவளின் கைகளை இறுக்கினான்.

பத்திரிக்கையாளர்கள்  நிலாவையும் சூர்யாவையும் வினோதமாய் பார்க்க….அதை உணர்ந்த சூர்யா…”ஷீ ஸ் மை ஒய்ப்” என்றான் தன் பேண்ட் பாக்கெட்டுகளில் கை விட்ட படியே.

ஆண் பத்திரிக்கையாளர்கள் அவனை பொறாமையுடன் பார்க்க,பெண்கள் அவனை ஆசையாய் பார்த்தனர்.அதைப் பார்த்து கடுப்பான நிலா…”ப்ரண்ட்ஸ் கொஞ்ச நேரத்துல ஜட்ஜ்மெண்ட் வந்துடும்….. சோ ப்ளீஸ்..” என்றவள் அவர்கள் விலகவும் அந்த இடத்திலிருந்து விடுபட்டாள்.

நிலாவின் அவசரத்தையும் அதற்கான காரணத்தையும் அறிந்த சூர்யா தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.அதே நேரத்தில் அங்கு நடந்த அனைத்தும்…… அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது.

சென்னையில் செய்தி சேனலில் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவின் கண்களில் கண்ணீர் வழிய…மாலாவோ நிலாவிற்கு எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தார்.பிரபுவிற்கு பெருமை தாங்க முடியவில்லை.என்ன தான் அவளின் துணிச்சல் பயத்தைக் கொடுத்தாலும்., “நிமிர்ந்த நடையும்,நேர் கொண்ட பார்வையுமாய் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் அவள் பதில் சொன்ன விதம் கண்டு பிரமித்து அமர்ந்திருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஜக்குவிற்கு உள்ளே உதறல் பயங்கரமாக எடுத்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.”என்னா போடு போடுறா…? பாய்ண்ட் பாய்ண்டா பேசுறா…?பொட்ட புள்ளைங்கள அதிகம் படிக்க வச்சாலே இப்படித்தான்…இது எங்க போய் முடிய போகுதோ…?” என்று ஜக்கு சொல்ல…

அவரை முறைத்த ரம்யா…”கவலைப் படாதிங்க பாட்டி….நிலா வந்த உடனே நீங்க சொன்னதை சொல்லி கூடவே ஒரு காபியும் போட்டு தர சொல்றேன் சரியா..?” என்று நக்கலடிக்க..அவளைப் பார்த்து பல்லைக் கடித்தார் ஜக்கு.

எத்தனை காரணங்கள் இருந்தாலும் சூர்யாவும்,நிலாவும் சேர்ந்து நின்றிருந்த விதமே மகேஷ்வரிக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.அவளின் பேட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி….,கடைசியாக நிலா முறைத்ததையும்,சூர்யாவை அழைத்துக் கொண்டு சென்றதையும் ஒளிபரப்ப மறக்கவில்லை.

வினோத்திற்கு ஆதரவாக வாதாட ஒரு வக்கீல் கூட ஒப்புக் கொள்ளாதது ருத்ரத்தை சற்று ஆட்டம் காண வைத்தது.எப்படியாவது ஜாமீனாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்த அவரின்  நினைப்பில் மண்ணைப் போட்டாள் நிலா.

மூன்று பெண்களை கடத்தி,கற்பழித்து,அவர்களை கொலையும் செய்த வினோத்தும் அவன் நண்பர்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட.. “இறந்த பெண்களின் உடலில் இருந்த கைரேகைப் பதிவுகள்,ரத்த பரிசோதனை” அனைத்தும் வினோத்தையும் அவரது நண்பர்களையும் குற்றவாளி என உறுதி செய்தது.

உதய குமார் இறந்த தினத்தில்…..உதய குமாரின் பாக்கெட்டில் இருந்த கேமரா பொருந்திய பென்டிரைவில் அங்கு நடந்த அனைத்தும் அப்படியே  பதிவாகியிருந்தது.மேலும் புகழ்பெற்ற வங்கியின் முன்னால் வைத்து வினோத்தின் காரில்,மூன்று பெண்களில் ஒரு பெண்ணை கடத்தியதை…. அந்த வங்கியின் வெளிப்புற கேமிராவின் பதிவுகளில் இருந்து ஏற்கனவே எடுத்து வைத்திருந்தார் உதய குமார்.

இப்படி அனைத்து ஆதாரங்களும் பக்காவாக இருந்த காரணத்தால் அங்கு வாதத்திற்கும் எதிர் வாதத்திற்கும் அவசியமின்றி போனது.நிலா ஒவ்வொரு ஆதாரங்களாய் ஜட்ஜின் முன் எடுத்து வைக்க வைக்க வினோத்தின் முகம் நெருப்பாய் மாறிக் கொண்டே போனது.

நிலாவின் ஆதாரங்களையும் சாட்சிகளையும் பார்த்த நீதிபதியே ஒரு நிமிடம் நிலாவைப் பார்த்து வியந்தார்.அனைத்தையும்  ஒரு பெண் செய்திருப்பது தான் அவரின் வியப்பிற்கு காரணமாய் அமைந்தது.

அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப் பட்ட நிலையில் வினோத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும்….., வினோத்தின் நண்பர்களுக்கு ஆயுள் தண்டனையும், 2லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் ருத்ரத்திற்கு, நீதிமன்றத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. எக்காரணம் கொண்டும் வினோத்தின் குடும்பத்தாரால்… நிலாவிற்கோ அல்லது நிலாவினை சார்ந்தவர்களுக்கோ  எந்த வித ஆபத்தும் வரக் கூடாது என்றும் அப்படி  வரும் பட்சத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.நிலாவிற்கு தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

தீர்ப்பைக் கேட்ட வினோத் எல்லை கடந்த கோபத்துடனும்,எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் ருத்ரத்தை முறைக்க….தன் ஒரே பையனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி ஆத்திரமடைந்த ருத்ரம் உக்கிரமாய் சூர்யாவை முறைக்க…உன் கோபம் என்னை ஒன்னும் கிழிக்க முடியாது என்பதைப் போல் பார்த்த சூர்யா..மேலும் கால் மேல் கால் போட்டு நன்றாக அமர்ந்தான்.

ருத்ரம்…”டேய் சூர்யா..! எனக்கு தெரியும் எல்லாம் உன் வேலை தான்னு. அவ டெல்லி வந்தப்பவே போட்டுருப்பேன்.ஆனா நீ வந்து தடுத்துட்ட இல்ல….விளைவுகள் பயங்கரமா இருக்கும்.அவளை விட்டாலும் இனி உன்ன விட மாட்டேண்டா…” என்றார்.

சும்மா சும்மா காமெடி பண்ணாம போய் அடுத்து சட்டத்துல எங்க எல்லாம் ஓட்டை இருக்கு, அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்ன்னு யோசிங்க…இப்பதிக்கு நீங்க பல்லு பிடுங்கின பாம்பு..ஆணியே புடுங்க முடியாது…” என்றான் சூர்யா கெத்தாய்.

தீர்ப்பு விவரங்களை தொலைக்காட்சி மூலம் அறிந்த ரம்யா…”ஹேய்….நிலா ஜெய்ச்சுட்டா…..நாம ஜெய்ச்சுட்டோம்….அந்த பாவி இனி ஜென்மத்துக்கும் வெளிய வர முடியாது” என்று கத்த,மாலாவிற்கு அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது. தீர்ப்பு விவரங்கள் அனைத்தும் நகரம் முழுவதும் தீயாய் பரவியது.

மூன்று பெண்களில் ஒரு பெண்ணைப் பெற்ற தந்தைக்கு தான் இது அதிர்ச்சியாக இருந்தது.அது சுதாகரன் தான்.”அவனுக்கு விசுவாசமாய் வேலை பார்த்த எனக்கு இப்படி ஒரு நிலையா…? என் மகளை கற்பழித்துக் கொன்றவன் இந்த காமுகனா..?” என்று நினைத்தவரால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

வினோத்திற்கு அருகில் சென்ற நிலா..”எதிர்பார்க்கலை இல்லையா….இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் தாண்டா….ஏண்டா கோமாவில் இருந்து எழுந்தோம்ன்னு நீ நினைச்சு நினைச்சு சாகனும்…என் அப்பாவை நினைச்சு நான் கதறிய மாதிரி….செத்த பொண்ணுங்களை நினைச்சு அவங்க பெத்தவங்க துடிச்ச மாதிரி இனி உன் அப்பனும் துடிப்பான்…ரெண்டு வருஷம் இதுக்காகத்தான் காத்திருந்தேன்.உங்கப்பன் ஒரு கேணப்பய… என்னவோ அவனுக்கு பயந்து தான் அமைதியா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுட்டான்…இப்ப போ மாமியார் வீட்டுக்கு….” என்று தன் ஆத்திரம் தீர பேசி முடிக்க…போலீஸ் அவனை அழைத்து சென்றனர்.

“நிலா இதை உன்கிட்ட நாங்க எதிர்பார்க்கவே இல்லை.உன்கிட்ட உங்க அப்பா திறமை அப்படியே இருக்குமா.கண்டிப்பா ஒரு நாள் உங்கப்பா மாதிரி பெரிய லாயர் ஆகிடுவமா…” என்று உதய குமார் வயதுள்ள மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் நிலாவைப் பாராட்ட….அதை ஏற்றுக் கொண்ட நிலாவின் கண்கள் சூர்யாவைத் தேடியது.

சூர்யா இருந்த இடத்தில் அவனைத் தேட அங்கு சூர்யா இல்லை.நாலா புறமும் கண்களை சுழற்றிய நிலா பின்னால் திரும்ப கைகளை கட்டியபடி நின்றிருந்தான் சூர்யா.

அவனைப் பார்த்த நிலாவின் முகம் பல பாவனைகளை பிரதிபலிக்க…. அதற்கும் மேலும் பொறுக்க முடியாத சூர்யா அவளை நோக்கி தன் கைகளை விரிக்க….இனியும் தாங்க முடியாது என்று நினைத்த நிலாவும் அவனின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தால்.நீதிமன்றம் என்பதையும் மறந்த சூர்யா அவளை இறுகக் கட்டிக் கொண்டான்.அந்த அணைப்பில் காமம் இல்லை.காதல் மட்டுமே இருந்தது.

சூர்யாவின் பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலிக்க அந்த சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவன்….”ஹலோ..” என்றான்.

டேய் மச்சான் போதும்,ரெண்டு பேரும் உங்க ரொமான்ஸ நிறுத்துங்கடா…. முடியலைடா.நீங்க இருக்குறது கோர்ட்.எல்லா சேனல்லையும் உங்க ஷோ தாண்டா ஓடுது…” என்று ஜீவா கதற…அப்பொழுதுதான் கவனித்தான் சூர்யா தங்களை சுற்றி மீடியா இருந்ததை.

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ என்று நினைத்த சூர்யா…”டேய்  விடு மச்சான் அரசியல்ல இதெல்லாம் சாதரணம்டா…நீ வாங்காத பல்ப்பயா நான் வாங்கிட்டேன்” என்று சூர்யா சிரிக்க..”ஹலோ..ஹலோ..கேக்கலை சூர்யா…நான் அப்பறமா கூப்பிடுறேண்டா..” என்றபடி ஜீவா போனை வைத்துவிட்டு தீபாவைப் ரொமான்ஸாய் பார்த்து வைக்க…அந்த புறம் ஜீவாவை முறைத்துக் கொண்டிருந்தாள் தீபா.

ஏன் ஜீவா இப்படி இருக்கிங்க…..உங்களுக்கு என்ன தான் பிரச்சனை….எப்ப பாரு உங்களுக்கு இதே நினைப்பு தானா…? வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியலை…” என்று தீபா சலித்துக் கொண்டாள்.

இதென்ன டார்லிங் வம்பா போய்டுச்சு….என் பொண்டாட்டியா தான் நான் பார்க்குறேன்.அடுத்தவன் பொண்டாட்டியவா பார்க்குறேன்…போ உனக்கு கொஞ்சம் கூட என் மேல காதலே இல்லை..” என்று அவன் சொல்லி முடிக்கவும் தீபா அவனை மொத்தி எடுத்தாள்.

காதல் இல்லாம தான் எல்லாத்தையும் மீறி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேனா…?சொல்லுடா கல்யாணம் பண்ணிகிட்டேனா..?” என்று சொல்லி சொல்லி அடித்தவள்….”போடா..” என்றபடி செல்ல..”ஐயோ…” என்று தலையில் கை வைத்தபடி  முழித்துக் கொண்டிருந்தான் ஜீவா.

நடந்த அனைத்தையும் டி.வியில் பார்த்த அருளுக்கு மனதில் சொல்ல முடியாத உணர்வு தோன்றியது.இத்தனை நாள் மனதை அழுத்திய பாரங்கள் பனித் துளியாய் விலகியதை போல் உணர்ந்தான் .நிலா தன்னை விரும்பவில்லை என்று தெரிந்திருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்த சின்ன உறுத்தலும் இன்று அவனுக்கு விலகியது. மனம் ஏதோ ஒரு அமைதியை உணர்ந்தது.அது நிலா வெற்றி பெற்றதாலா….இல்லை நிலாவும் சூர்யாவும் தங்களை மறந்து நின்றிருந்த அந்த காட்சியைப் பார்த்ததாலா என்று அவனுக்கு தெரியவில்லை.ஏதோ ஒன்று அவனுக்கு ஆழ்மன அமைதியைத் தந்தது.

வீடு வந்து சேரும் வரை நிலாவிற்கு சூர்யாவின் நினைவாகவே இருந்தது.தான் நினைத்தது அனைத்தும் நல்ல படியாக முடிந்தாலும் அடுத்தது ஒரு பெரும் குழப்பம் அவள் மனதை அரித்தது.”சூர்யாவிடம் எப்படி தன் காதலை சொல்லுவது..” என்ற தயக்கம் தான் அது.

காரை வீட்டின் முன் நிறுத்தி சில நிமிடங்கள் ஆன பிறகும் நிலா யோசனையிலேயே இருந்தாள்.”நிலா…நிலா” என்று சூர்யா இரண்டு முறை உலுக்கவும் நிஜத்திற்கு வந்த நிலா காரை விட்டு இறங்கினாள்.

இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் மற்ற குழப்பம் எல்லாம் மறந்து “வாங்க சூர்யா….” என்று வீட்டாளாய் மாறி அவனை வரவேற்க…சூர்யாவின் உதடுகள் புன்னகையில் விரிந்தது.”ஒரு வழியா உன் கனவு எல்லாம் முடிந்ததா?” என்றான்.

என்ன கனவு…?”என்றாள் நிலா.

இல்லை காரில் வரும் போது அவ்வளவு சீரியசா கனவு கண்டுகிட்டு வந்தியா….அதான் கேட்டேன்” என்று புருவத்தை உயர்த்தவும்…அதில் வெடவெடத்தவள்…”கனவா…அதெல்லாம் ஒன்னுமில்லை.நான் போய் டீ…இல்லை காபி போடுறேன்” என்ற படி தப்பித்தேன் பிழைத்தேன் என்று அவள் ஓட சூர்யாவின் சிரிப்பு அவளைத் தொடர்ந்தது.

சூர்யா ஹாலில் ஒவ்வொரு போட்டோவையாய் பார்த்துக் கொண்டிருக்க….. நிலா காபியுடன் வந்தாள்.”காபியை எடுத்துக் கொண்டவன் அதைக் குடித்துக் கொண்டே நிலாவை ஆழ்ந்து பார்த்தான்.”

இப்ப எதுக்கு இப்படி பார்க்குறான்…” என்று மனதில் நினைத்த நிலா…”அப்பாவைத் தெரியும்ன்னு சொன்னிங்க…ஆனா ஒரு முறை கூட நீங்க வீட்டுக்கு வந்ததில்லையே..” என்றாள் கேள்வியாய்.

உண்மைதான் நிலா…..உதய குமார் சார் என்னை நிறைய முறை வீட்டுக்கு அழைத்திருக்கார்.ஆனா எனக்கு தான் நேரம் கிடைக்காம வர முடியலை.அப்ப என்னோட முழு கவனமும் என் தொழில்ல தான் இருந்தது.கடைசியா நான் சென்னை கிளம்பும் போது கூட உன்னோட கல்யாணத்துக்கு வரணும்ன்னு கண்டிப்பா சொன்னார்…” என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிலா கண்கலங்க…”ச்சு என்ன நிலா எதுக்கெடுத்தாலும் கண் கலங்கிட்டு..கோர்ட்ல அந்த பேச்சு பேசுன….இப்ப எங்க போய்டுச்சு அந்த தைரியம் தன்னம்பிக்கை எல்லாம்..” என்று அதட்டியவன் அவள் கண்களைத் துடைத்து விட..அவனின் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் நிலா.

“நிலா..!நமக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல சென்னைக்கு பிளைட்.ஆபீஸ் வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். சென்னைல போய் வேலையெல்லாம் முடிச்சுட்டு அப்பறமா இங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகலாம் சரியா..?” என்றான் சூர்யா.

 

“சரி” என்று நிலா தலையாட்ட…”நிலா உன்னை இந்த சேலைல பார்த்ததுமே எப்படி இருந்தது தெரியுமா…?இது நிலா தானான்னு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துட்டது.இப்ப நீ ஒரு வக்கீலான்னு எனக்கு சந்தேகமே இல்லை.அதான் நேர்லயே பார்த்துட்டேனே என் பொண்டாட்டி பெர்பாமன்ஸ…ஹா,..ஹா…” என்று சொல்லி சிரிக்க…அவனைப் பார்த்து முறைத்தாள் நிலா.

“என்னோட லகேஜ் எல்லாம் எதிர்த்த வீட்ல இருக்கு…நான் போய் பேக் பன்ணிட்டு வந்துடுறேன்.நீயும் கிளம்பி ரெடியா இரு சரியா.அப்படியே வெளிய சாப்பிட்டு கிளம்பலாம் ஓ.கே…” என்றவன் அவள் தலையசைக்கவும் எதிர்த்த வீட்டை நோக்கி சென்றான்.

சற்று நேரம் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள்…..

சட்டென்று நினைவுக்கு திரும்பி தனது அறையய் நோக்கி சென்றாள்.”நிலா வர வர உனக்கு முத்திப் போய்டுச்சு…எப்ப பாரு இப்படியே கனவுக்கு போய்டுற..” என்று தனக்குத் தானே சொல்லியபடி தனது துணிகளை பேக் செய்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கிருந்த ஆல்பம் கண்ணில் பட…அது நிலா மற்றும் ரம்யாவின் சிறுவயது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம்.சற்று நிமிடம் அதை பார்த்தவள்….”இதை எடுத்துட்டு போய் சூர்யாகிட்ட,மகி அம்மாகிட்ட எல்லாம் காட்டனும்..” என்று நினைத்தபடியே எல்லா ஆல்பத்தையும் எடுத்தாள்.கபோர்டில் இருந்து எடுக்கும் போது ஒரு ஆல்பம் கை தவறி கீழே விழ…மற்ற அனைத்தையும் பெட்டியில் வைத்தவள்…..கீழே விழுந்த ஆல்பத்தை எடுப்பதற்காக குனிந்தாள்.

ஆல்பத்தை எடுத்து நிமிர்ந்தவளின் நினைவில் ஏதோ தோன்ற மீண்டும் அந்த இடத்தைப் பார்க்க… டேபிளின் அடியில் பாதி வெளியிலும் பாதி அடியிலுமாக ஒரு கவர் இருந்தது.”என்ன கவர் இது..?” என்று யோசித்த படி அதை எடுத்தவள்…”என்னவா இருக்கும்..?பிரிக்கலாமா..? வேண்டாமா…? என்று யோசித்தபடி கவரை திருப்பி திருப்பி பார்க்க…பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த கவரை பிரித்தாள்.

 உள்ளே ஏதோ போட்டோ போல் இருக்க….அதை பாதி எடுத்தவளுக்கு அப்பொழுதுதான் நியாபகம் வந்தது.அது தன் தந்தை கொடுத்த மாப்பிள்ளை போட்டோ என்று.”இதை நான் குப்பை கூடையில் தான போட்டேன்…!” என்று யோசித்தவள்,”சரி இப்ப எதுக்கு இது…?” என நினைத்தவள் பாதி வெளியில் எடுத்த போட்டோவை உள்ளே வைத்தாள்.

இருந்தாலும் உள் மனம் ஏதோ ஒரு உணர்வில் உந்த “சரி…பார்ப்போம்” என்று எண்ணியவள் அதை வெளியே எடுத்து வேண்டா வெறுப்பாய் பார்வையை ஓட்டியவள்….அதிலிருந்த போட்டோவைப் பார்த்தவளின் கண்கள் திகைப்பில் ஆழ்ந்தது.

கோட் சூட்டில் அமர்க்களமாய் சிரித்துக் கொண்டிருந்தான் சூர்யா.அந்த கவரில் சூர்யாவின் போட்டோவை நிலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்கள் நம்பமுடியாமல் அந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சூர்யா இது உங்க போட்டோவா…? உங்களைத்தான் மாப்பிள்ளைன்னு அப்பா சொன்னாரா…? தன் பெண்ணை கட்டிக் கொடுக்கும் அளவுக்கு என் அப்பா உங்களை நம்பினாரா…?” சூர்யா…சூர்யா…என்று ஒன்றும் புரியாமல் தவித்தவள்,துடித்தவள்… சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றாள்.

இதை நான் அப்பொழுதே பார்த்திருக்கலாமே…?இந்த பிரச்சணைகளை எல்லாம் தவிர்த்து இருக்கலாமே…? என்று அவளின் எண்ண அலைகள் அவளை தவிப்பு என்னும் கடலுக்குள் இழுத்து சென்றது.

போட்டோவை தன் நெஞ்சில் அணைத்தபடி வைத்து நின்றிருந்தவளுக்கு…. “அந்த பையன் போட்டோ பார்க்கலைன்னா விடுமா…! அவன் கிட்ட கேட்காம நான் தான் அந்த போட்டோவைக் கொடுத்தேன்.அவன் வேற பொண்ணை காதலிக்கிறதா சொல்லிட்டான் நிலா..!” என்று உதய குமார் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் எதிரொலிக்க….பொத்தென்று அமர்ந்தாள் நிலா.

சூர்யா வேற ஒரு பொண்ணை விரும்பினாரா…? என்று நினைத்தவளின் கைகள் அவன் போட்டோவை பிடிக்க முடியாமல் நடுங்கியது.”காதல்ன்னா என்னன்னு தெரியுமா..? அதோட வலி என்னன்னு தெரியுமா…?” என்று சூர்யா கேட்ட வார்த்தைகளும் அவள் காதில் எதிரொலிக்க…அவளது கைகள் பட்டென்று சூர்யாவின் போட்டோவை கீழே விட்டது.

சூர்யா தன் காதலை புரியவைப்பானா…?

முகவரி 36:

பிளைட்டில் ஜன்னல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த நிலாவின் மனதில் ஆயிரம் கேள்விகளும் சஞ்சலங்களும் நிறைந்திருந்தது.எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்று எண்ணி நிம்மதியடைந்த நேரத்தில் தனக்கு இப்படி ஒரு குழப்பம் தேவையா…? என்று  தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

அவன் காதலிச்சிருந்தா என்ன..?காதலிக்கலைன்னா என்ன..? எது எப்படி இருந்தாலும் இப்ப சூர்யா உன் கணவன்.இந்த நேரத்துல ஏன் தேவையில்லாத எண்ணங்கள் உனக்கு தோணுது…?” என்று உள் மனம் கேள்வி கேட்க…..அதற்கு பதில் சொல்ல முடியாமல் முழித்தாள் நிலா.

என்னாச்சு இவளுக்கு..? இப்ப எதுக்கு இப்படி அமைதியா வரா.எதுவும் பிரச்சனையா இருக்குமோ..? கோர்ட்ல இருந்து வந்ததுக்கு அப்பறம் நல்லா தான இருந்தா…? அதுக்குள்ள என்னாச்சு..”: என்று சூர்யா தன் தலையை போட்டு உருட்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் முகத்தை சமன்படுத்திக் கொண்டவள்….முகத்தில் லேசான சிரிப்புடன்…”சூர்யா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியிருக்கிங்களா…?” என்றாள் நிலா.

சூர்யா அவளின் முகத்தை குறும்புடன் பார்க்க…”இல்லைன்னு சொல்லுடா கருவாப்பயலே” என்று நிலா மனதிற்கு கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருக்க… “ம்ம்ம்…லவ் பண்ணியிருக்கேனே…” என்றபடி சூர்யா தன் பேச்சை முடித்துக் கொள்ள நிலாவிற்கு ஏண்டா இவனிடம் கேட்டோம் என்றாகிவிட்டது. “ரொம்ப டீப்பா லவ் பண்ணியிருப்பானோ…?”என்று நிலா நினைத்துக் கொண்டிருக்க…,”இப்ப எதுக்கு இதைக் கேட்குறா…?”என்று சூர்யாவும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

நிலாவும் சூர்யாவும் வீட்டில் நுழைந்த அடுத்தா வினாடி…ரம்யா ஒடி வந்து நிலாவை அணைத்திருந்தாள்.”சூப்பர்டி..சூப்பர்….எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை…இப்பதான் நிம்மதியா இருக்கு..” என்று ரம்யா கண்கலங்கி சொல்ல..பிரபுவும்,மாலாவும் அதே எண்ணத்தை பிரதிபலித்தனர்.

எல்லாரும் நிலாவிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள மகேஷ்வரி மட்டும் முகத்தை உம்மென்று வைத்திருந்தார்.ஏதோ வித்யாசத்தை உணர்ந்த நிலா திரும்பி மகேஷ்வரியை பார்க்க…”அம்மா என்னாச்சு நீங்க ஒன்னுமே சொல்லலை..” என்றாள் பரிதவிப்பாய்.

இவ்வளவு செய்த உனக்கு போகும் போது சொல்லிட்டு போகனும்ன்னு ஏன் தோணலை.உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க பட்ட பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.எங்க உயிர் எங்ககிட்ட இல்லை. எங்களை விடு சூர்யாவைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா…?” என்றார் மனம் தாங்கலுடன் மகேஷ்வரி.

நிலா..”சாரி மகிம்மா..!நான் சொல்லிட்டு போகனும்ன்னு தான் நினைச்சிருந்தேன்.ஆனா அப்படி போக வேண்டிய நிலை.நான் சொல்லிட்டு போயிருந்தா கண்டிப்பா என்னை தனியா அனுப்பியிருக்க மாட்டிங்க. என்னால ஏற்கனவே ரம்யா பிரச்சனையில மாட்டினது போதும்.இப்ப எல்லாருக்கும் ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்வதுன்னு தான் தனியா போனேன்..” என்றாள் தன் விளக்கமாய். 

உன்னை அங்க தனியா அனுப்பிட்டு நாங்க மட்டும் எப்படி இங்க நிம்மதியா இருப்போம்….ம்ம்ம்.இனி எங்க போனாலும் என் கிட்ட சொல்லாம போக கூடாது சரியா…” என்றார் மகி சமாதானமாய்.நிலாவும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட…அவளை ரசித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

சூர்யாவைப் பார்த்த ஜீவா பெருமூச்சுவிட்டான்.  இப்ப எதுக்குடா இப்படி ஒரு பெருமூச்சு….?”என்றான் சூர்யா.

ஒன்னுமில்லை மச்சான்.உனக்கு வந்த வாழ்வைப் பாரேன்.என் தங்கச்சி தானா வந்து உன்னை கட்டிபிடிக்குது,முத்தம் கொடுக்குது….அதை இந்த நாடே பார்க்குது.ஆனா இங்க உன் தங்கச்சி என்னடான்னா கட்டிபிடிச்சா கத்துறா…முத்தம் குடுத்தா முட்டுறா…என்ன ஒரு முரண்பாடு பார்த்தியா…?” என்று ஏற்ற இறக்கத்துடன் ஜீவா சொல்ல…சூர்யா அவனை முறைத்தான்.

அனைவரும் கலந்து பேசிக் கொண்டிருக்க அங்கு ஜக்கு மட்டும் ஏதோ தனியாய் இருப்பதைப் போல் உணர்ந்தார்.நிலாவின் முன் வாயைத் திறக்கவும் அவருக்கு சற்று பயமாக தான் இருந்தது.அதனால் எதையும் கண்டு கொள்ளாததைப் போல் அவர் இருந்து விட….அதைப் பார்த்த ரம்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.என்ன ரம்யா ஏன் சிரிக்கிற,…?” என்றாள் நிலா.

அதுவா  நிலா.., நீ வேற சொல்லாம கொள்ளாம ஊருக்கு கிளம்பி போய்ட்ட. நம்ம ஜக்கு பாட்டி தான் உன் நினைவாவே இருந்தாங்க.காபி குடிச்சா உன் கையால தான் குடிப்பேன்னு ஒரே அடம்.அப்பறம் நான் தான் சரி கட்டி வச்சேன்.நிலா வந்து கண்டிப்பா உங்களுக்கு காபி போட்டு குடுப்பான்னு நான் சொன்னதுக்கு அப்பறம் தான்  அவங்களும் சரின்னு பேசாம இருந்தாங்க…” என்று ரம்யா சொல்லவும் ஜக்கு திகில் பார்வை பார்க்க…ரம்யாவின் பேச்சில் இருந்த உள் குத்தை அறிந்த நிலாவும் சிரிக்க…”உங்களுக்கு இருக்குடி..” என்று மனதிற்குள் நினைத்தவராய் சென்றார் ஜக்கு.

நிலாவின் ஒவ்வொரு அசைவையும்,சூர்யா ரசித்துக் கொண்டிருந்தான். இன்று ஏதோ அவளிடம் புதிதாய் இருப்பதைப் போல் இருந்தது. டெல்லியில் இருந்து அவள் தன்னிடம் சுமுகமாய் பழக ஆரம்பித்தது போலும் இருந்தது .ஆனால் இப்பொழுது தன்னிடம் இருந்து விலகுவது போன்றும் இருந்தது.அதனை யோசித்தபடியே தோட்டத்து பக்கம் செல்ல அவனைப் பின் தொடர்ந்து ஜீவாவும் சென்றான்.

 

மனம் எல்லாம் வெறுத்துப் போய் அமர்ந்திருந்தார் சுதா. இப்பொழுதெல்லாம் சுதாவிற்கு வாழ்க்கையே சூனியமாய் தெரிவதாய் தோன்றுகிறது.”அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்..” “அத்தையை நம்பி தன் வாழ்க்கையை பறி கொடுத்துவிட்டதாய்..” அவருக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்தது.

அருளும் இப்பொழுது முன்ன மாதிரி வீட்டில் இருப்பதில்லை.எப்போதும் பிஸ்னெஸ் பிஸ்னெஸ் என்று அலைபவனால் சுதாவிடம் பேசவும் நேரமில்லை. முரளியோ  அடியோடு அங்கு செல்வதை நிறுத்தவில்லை என்றாலும் வந்து போகும் சில சமயங்களிலும் பிரச்சனைகளிலேயே முடிந்தது.

ஏற்கனவே சுதாவிற்கு மூச்சு திணறல் இருந்தது.மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடாததால் இப்பொழுது உடம்பிற்கும் அடிக்கடி ஏதாவது வர பரிதவித்து போனார் சுதா.ஒரு கஷ்ட்டம் என்று வரும் போது தான் நம்மை கவனிக்க…நம்முடன் ஆறுதலாய் இருக்க நாலு பேர் தேவைப் படுகிறார்கள் என்ற உண்மையை காலம் கடந்து அறிந்து கொண்டார்.தன்னுடைய செயல்களால் தன் சொந்த மகளே தன்னை வெறுத்து விட்டாள் என்பதும் அவருக்கு வேதனையைக் கொடுத்தது.

சொந்த அண்ணனின் உறவும் விட்டு போவதில் சுதாவிற்கு உடன் பாடு இல்லை.முரளியை உன்னிடம் சேர்க்கிறேன் என்று சொல்லி  சென்ற  ஜக்குவும் இதுவரை சாதகமாய் எதுவும் செய்யவில்லை.இனி அத்தையை நம்பி பிரையோஜனம் இல்லை என்று நினைத்த சுதா…அண்ணன் உறவை மீட்க எப்படியாவது அருளுக்கு ரம்யாவை பேசி திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

“இதற்கு அருள் சம்மதிப்பானா..?” என்று உள் மனம் நினைத்தாலும்…, எப்படியாவது அவனிடம் பேசி சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அவரின் உடல் நிலையும் அவரை அவ்வாறு யோசிக்க வைத்தது. எப்படியாவது அருளிற்கு ஒரு நல்லதை நடத்தி அதையாவது கண் குளிர பார்க்க வேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார் சுதா.

********************

“எங்க ஒன்னும் பிரச்சனையாகலையே..? அந்த ருத்ரம் ஏதும் தொந்தரவு பண்ணலையா சூர்யா..?” என்றான் ஜீவா.

“ருத்ரம் என்றாலே பிரச்சனை தான் ஜீவா.நான் மட்டும் டெல்லி போகாம இருந்திருந்தா நிலாவை கண்டிப்பா அவன் ஏதாவது பண்ணியிருப்பான்.நாம நினைச்ச மாதிரி தான் ருத்ரமும் ப்ளான் போட்டு இருந்தான்.ஆனா நம்ம நல்ல நேரம் அவனோட ஒவ்வொரு ப்ளானையும் முறிச்சாச்சு…அந்த வினோத் இவ்வளவு கொடூரமானவனா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை ஜீவா..” என்றான் சூர்யா.

“எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு யாருக்கு தெரியும் சூர்யா.எது எப்படியோ பிரச்சனை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சது.இனியாவது உன்னோட வாழ்க்கைல நிம்மதி மட்டும் தான் இருக்கனும்….ஆமா நிலா கிட்ட உன் லவ்வ எப்ப சொல்ல போற..?” என்றான் ஜீவா.

“எங்கடா…! கொஞ்சம் என்கிட்ட நெருங்கி வந்த மாதிரி இருந்தது.ஆனா இப்ப மனசுல ஏதையோ போட்டு குழப்பிக்கிறான்னு நினைக்கிறேன்.ஆனா அது என்னன்னு தான் தெரியலை.அவளை எப்படி நெருங்குறதுனே புரியலைடா…” என்றான் சூர்யா.

ஜீவா…”நீயா சூர்யா இப்படி பேசுற….உனக்கு சொல்லியா தரனும்.கண்டிப்பா நிலாகிட்ட உன்னோட காதலை எவ்வளவு சீக்கிரம் சொல்றயோ அவ்வளவு சீக்கிரம் சொல்வது நல்லது..” என்றான்.

“நிலா முன்ன மாதிரி இல்லைடா….அந்த வினோத் பிரச்சனையால எல்லா விஷயத்தையும் ஒரு சந்தேகத்தோடும்,தப்பாவே பார்க்குறா.ஒரு வேளை முன்னாடியே என் காதலை பற்றி அவளுக்கு தெரிந்திருந்தா எங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோ என்னவோ..?நான் பார்த்த பழைய நிலா இவ இல்லை…என் காதலி இவ இல்லை…இப்ப இருக்குற நிலா கண்டிப்பா எப்பவும் என் காதலியா இருக்க முடியாது…நான் பார்த்தவள் எதுக்கும் கவலைப் படாம துறு துறுன்னு என்னமா இருப்பா தெரியுமா..?” என்று சூர்யா உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தான்.

சூர்யாவின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை….அவனை கூப்பிட வந்த நிலாவின் காதுகளில் அவன் கடைசியாய் சொன்ன வாக்கியங்கள் விழ…..அவனது வார்த்தைகளில் அதிர்ந்தவள் வந்த சுவடு தெரியாமல் சென்றாள்.

கண்டிப்பாய் இவன் யாரையோ காதலித்திருக்கிறான்.இப்பொழுது அவளை நினைத்து கவலைப் படுகிறான். “சாரி சூர்யா உங்க காதல் நிறைவேறாம போனதுக்கு நான் தான் காரணமா..?என் மேல் பரிதாபப்பட்டுதான் தாலியைக் கட்டுனிங்களா..? அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரை நீங்க எனக்கு எல்லா விஷயத்திலும் நல்ல கணவனா தான் இருந்திருக்கிங்க. ஆனா நான் உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவ.என்கூட உங்க வாழ்க்கை அமையக் கூடாது.நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும்…” என்று மனதில் வெதும்பியவள் தன்னறையை நோக்கி ஓடினாள்.

நிலாவின் மன நிலையை அறியாத சூர்யா…எப்படியும் இன்று அவளிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்ற நினைப்பில் விசிலடித்தபடி சென்றான்.ஆனால் அங்கு நிலாவோ அழுது அழுது வீங்கிய கண்களுடன் இருந்தாள்.

நிலாவை அப்படி ஒரு கோலத்தில் பார்த்த சூர்யா திகைத்தான்.”என்னாச்சு நிலா..? எதுக்காக இப்படி அழுதிருக்க…?” என்று அவன் பதற…அவனின் பதட்டம் அவளுக்கு மேலும் அழுகையைத் தூண்டியது.”எனக்கு ஒன்னு என்றால் துடியாய் துடிக்கும் இப்படி ஒருவனை பெற நான் என்ன தவம் செய்தேன்..” என்று மனதிற்குள் கதறியவள் வெளியே சூர்யாவிடம் ஒன்றுமில்லை என்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

ஒன்னுமே இல்லாம எதுக்காக இப்படி அழனும்.நானும் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன்.ப்ளைட்ல ஏறியதில் இருந்து சென்னை வந்து சேர்ந்தது வரை உன் முகமே சரியில்லை.எதையோ மனசில் போட்டு குழம்பி தவிக்கிற….அது என்னன்னு சொன்னா தான தெரியும் நிலா.ப்ளீஸ் சொல்லுமா…அப்படி உன்னை போட்டு எது வாட்டுது..?” என்றான் சூர்யா தவிப்புடன்.

அவன் அப்படி கேட்டதுமே டெல்லியில் அந்த கவரில் பார்த்த போட்டோவும்,அவனுக்கு வினையாய் அமைந்த அவனது வார்த்தைகளும் நிலாவிற்கு நியாபகம் வந்தது.உதட்டோரம் வெறுமையாய் சிரித்தவள்..”நாம பிரிஞ்சிடலாம் சூர்யா..” என்றாள்.

அவளின் வார்த்தைகள் அவனது காதுகளை சரியாக சென்றடையவில்லை என்று நினைத்தான்.தன்னைத் தானே கிள்ளிக் கொண்டவன்..”என்ன சொன்ன திரும்ப சொல்லு…” என்றான்.

நாம பிரிஞ்சிடலாம் சூர்யா…” என்றாள் நிலா வார்த்தைகளை நிறுத்தி நிதானமாய்.ஆனால் அந்த வார்த்தைகளை கேட்ட சூர்யா தான் அடியோடு நொறுங்கிப் போனான்.என்ன வார்த்தை சொல்லி விட்டாள்….எப்படி முடிந்தது இவளால்.இப்படி ஒரு வார்த்தையை சொல்லும் அளவுக்கு இப்பொழுது என்ன நடந்து விட்டது… என்று நினைத்தவன் அதையே கேள்வியாக நிலாவிடம் கேட்கவும் மறக்கவில்லை.

போதும் சூர்யா…நீங்க என்னை கல்யாணம் செய்து பட்ட பாடு.நீங்க இதுக்கு முன்னாடி வேற பொண்ண காதலிச்சிருக்கிங்க.ஆனா அதையெல்லாம் விடுத்து என் மேல பரிதாபபட்டு தான அன்னைக்கு என் கழுத்தில் தாலி கட்டுனிங்க…இன்னைக்கு உங்க வாயால தான சொன்னிங்க..” நிலா என் காதலியா இருக்க முடியாதுன்னு..”” என்று நிலா சொல்லி முடிக்கும் முன்…பாய்ந்தான் சூர்யா.

என்ன சொன்ன பரிதாப பட்டு தாலி கட்டினேனா..? இது என்ன புது கதை.நான் ஜீவா கிட்ட அப்படி சொன்னது உண்மைதான்.ஆனா அதுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தோம்ன்னு தெரியுமா…?இப்படி அரைகுறையா கேட்டுட்டு வாய்க்கு வந்ததைப் பேசாத நிலா.நானும் மனுஷன் தான்.எனக்கும் கோபம் வரும்…ஆத்திரம் வரும்.எதுக்கும் ஒரு எல்லை இருக்கு..” என்றான் சூர்யா கோபமாய்.

நிலா…”எனக்காக நீங்க ஒன்னும் உங்க வாழ்க்கைய தியாகம் செய்ய வேண்டாம் சூர்யா.இதுக்கு முன்னாடி எங்கப்பா உங்க கிட்ட கேட்ட போது நீங்க வேற பொண்ணை காதலிக்கிறதா சொல்லி தான என்னை வேண்டாம்ன்னு சொன்னிங்க…சொல்லுங்க நீங்க அப்படி சொன்னது உண்மைதானே..!” என்றாள்.

ஒரு நிமிடம் திகைத்த சூர்யா..”நிலா அது வந்து…அது உனக்கெப்படி தெரியும்..?” என்றான் தவிப்புடன்.

நிலா..”அதை அப்பவே என் அப்பா என்கிட்ட சொல்லிட்டார்.ஆனா அப்ப எனக்கு தெரியாது நீங்க தான் மாப்பிள்ளைன்னு.அந்த கவர்ல இருந்த போட்டோவையே நான் இப்ப தான் பார்த்தேன்..” என்றாள் விரக்தியாய்.

“அப்படியெல்லாம் இல்லை நிலா…நானே உன்கிட்ட…” என்று சூர்யா சொல்லி முடிக்கும் முன்…”வேண்டாம் சூர்யா போதும் எனக்காக உங்க வாழ்க்கையை நீங்க ஏன் இழக்கனும்.நீங்க லவ் பண்ண பொண்ணு யாருன்னு சொல்லுங்க.நான் பேசுறேன் அவங்ககிட்ட…நான்,…நான் உங்க வாழ்க்கையில இருந்து விலகிக்கிறேன்…” என்றாள் அழுகையை அடக்க பல்லைக் கடித்தவாறு.

“அடக் கடவுளே…! எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது…இப்பன்னு பார்த்தா இவ அந்த போட்டோவை பார்க்கனும்…பார்த்ததோட விட்டாளா…நான் சொன்ன வார்த்தை முதற்கொண்டு நியாபகம் வச்சு இப்படி அவளை அவளே கஷ்ட்டப்படுத்திக்கிறா…” என்று மனதிற்குள் நொந்தான் சூர்யா.

இதை இப்படியே விட்டால் சரி படாது என்று  நினைத்தவன்..”நான் வேற எந்த பொண்னையும் காதலிக்கலை….உன்னைத்தான் காதலிச்சேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..”போதும் சூர்யா உங்க மேல எனக்கு இப்ப நிறைய மரியாதை இருக்கு….அதை நீங்க கெடுத்துடாதிங்க… பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்…” என்று வெடித்தாள் நிலா.

சூர்யாவின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.”நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்காம அவளா பேசினா என்ன அர்த்தம்..” என்ற கோபக் கனல் அவன் மனதில் மூண்டது.

நீங்க என்னை டிவேர்ஸ் பண்ணிட்டு…”என்று நிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….,அங்கு டமார் என்ற சத்தம் கேட்க அதிர்ந்து விழித்தாள் நிலா. அங்கு இருந்த பூ ஜாடி நொருங்கியிருந்தது .சூர்யாவின் முகமோ அதை விட நொருங்கியிருந்தது.கண்கள் ரெண்டும் கோவைப் பழமாய் சிவந்திருந்தது.

வேகமாய் அவளின் அருகில் சென்றவன் “நானும் போனா போகுது போனா போகுதுன்னு பார்த்தா வர வர உன்னோட முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு.நான் சொல்ல வர எதையாவது முழுசா சொல்ல விடுறியா…? நீயா ஒன்னு பேசுற…நீயா ஒன்னு கேட்குற…? என்ன நினைச்சுகிட்டு இருக்குற உன் மனசுல…இந்த சூர்யா என்ன சொன்னாலும் பேசாம இருப்பான்னா?…டிவேர்ஸாம் டிவேர்ஸ்…” என்று உறுமினான்.

சூர்யாவின் கோபம் நிலாவை வாயடைக்க செய்தது.இவனுக்கு இவ்வளவு கோபம் ஏன் வரனும்…? என்று யோசித்தாள்.

“நான் யாரை லவ் பண்ணேன்னு உனக்கு தெரியுமா….? அது எங்க  தெரிய போகுது…மத்தவங்க பீலிங்ஸ் எல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது.இங்க பார் நல்லா கேட்டுக்கோ நான் உன்னைத்தான் லவ் பண்ணேன்.லவ் பன்றேன்.லவ் பண்ணுவேன்.

என்னை பார்த்தா பரிதாப பட்டு தாலி கட்டுன மாதிரியா இருக்கு.அருளுடன் உனக்கு கல்யாணம் முடிவானதுல இருந்து எத்தனை நாள் நான் செத்து செத்து பிழைச்சேன்னு தெரியுமா…? அந்த ருத்ரம் வந்து கல்யாணத்தை நிறுத்துனப்ப நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன்னு தெரியுமா…இழந்த என் வாழ்க்கை திரும்பவும் எனக்கே கிடைச்ச மாதிரி உணர்ந்தேன்.அந்த உணர்வை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா..?

டெல்லியில் உன் முகமே தெரியாம உன் குரலை மட்டும் வைத்துக் கொண்டு உன்னைத் தேடி ஒரு பைத்தியக்காரனா அலஞ்சிருக்கேன்…அது உனக்கு தெரியுமா..? உதய குமார் சார் பொண்ணு நீதான்னு தெரியாம, உன்னையே வேண்டாம்ன்னு சொல்லிட்டு…நான் தேடுறது நீ தான்னு தெரியாம உன்னையே தேடியிருக்கேன்.என்னோட அந்த பைத்தியக்காரத்தனம் தான் உனக்கு தெரியுமா..?

ஒவ்வொரு முறையும் உன் குரல் கேட்டு ஓடி வர…அங்க இருந்து நீ கிளம்பியிருக்க…உன்னை பார்க்க முடியாம நான் தவிச்ச தவிப்பு தெரியுமா உனக்கு…?

இங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்பறமும் உன்னை மறக்க முடியாம நான் பட்ட பாடு….மறுபடியும் உன் குரலை கேட்க மாட்டோமா….? உன் முகத்தை பார்க்க மாட்டோமா..? என்று நான் தவித்துக் கொண்டிருக்க… முதன் முதலா என் கார் முன்னாடியே  விழ பார்த்தியே அப்ப கூட தெரியலை நீ தான் நான் தேடிய பொண்ணுன்னு.அந்த சிக்னல்ல அருளுக்கு வக்காலத்து வாங்கி நீ பேசுனப்ப உன் குரலைக் கேட்டு நான் அதிர்ந்து உன்னை பார்க்க…அந்த நொடி உணர்வை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா..?

குரலை மட்டும் கேட்டு உன்னை  சென்னையில் முதன் முதலா நான் பார்த்த போது எனக்கு கோபம் தான் வந்தது.அன்னைக்கு நீ வண்டி ஓட்டுன லட்சணத்துக்கு உனக்கு ஏதாவது அடி பட்டிருந்தா என்னாகியிருக்கும் என்று நினைத்துதான் நான் அன்னைக்கு உன்னை வார்த்தைகளால் சாடினேன்.ஆனால் அது தெரியாமல் நீ என்னை வெறுப்பாய் பார்த்த போது…அந்த நொடி நான் எப்படியொரு வலியை உணர்ந்தேன்னு உனக்கு தெரியுமா…?

பார்த்த ஒவ்வொரு சந்தர்ப்பத்துலையும் நீ என்னை வெறுக்க வெறுக்க உன் மேலான என் காதல் கூடிக் கொண்டே போனதே அந்த உணர்வை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா..? சொல்லு முடியுமா..?

நீ பிரபு மாமா பொண்ணுன்னு தப்பா நினைச்சுகிட்டு…என் அம்மாவுக்காக உன்னை மறந்துடனும்ன்னு நினைச்சேனே அந்த மரண உணர்வை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா…?

எல்லாத்துக்கும் கடைசியா அன்னைக்கு ஹோட்டல்ல வச்சு சொன்னியே ஒரு வார்த்தை..”ஆமா நான் அருளை காதலிக்கிறேன்..நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு..” அந்த வார்த்தைய கேட்ட நான் அன்னைக்கு செத்த பிணமாவே ஆகிட்டேன்…அந்த உணர்வை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா..?

“முடியாது உன்னால் எதையும் புரிந்து கொள்ள முடியாது…என் காதலை,என் பாசத்தை,என் நேசத்தை இப்படி எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியாது.இப்ப ஜீவா கிட்ட கூட நான் உன்னைப் பத்தி தான் பேசிட்டு இருதேன்.ஆனா அதையும் அரைகுறையா கேட்டுட்டு….ச்ச்ச போடி…” என்றவன்…”உன்னை பார்க்குறப்ப…உன்மேல எனக்கிருக்க காதல் என் கண்களில் தெரிவது எல்லார்க்கும் தெரியுது….விதி விலக்கா உன்னைத் தவிர..” என்றவன் பட்டென்று சென்றுவிட்டான்.

சூர்யா ஒவ்வொரு வார்த்தைகளாய் சொல்ல சொல்ல…நிலாவுக்கு இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது.தனக்குத் தெரியாமல் தன்னை ஒருவன் இந்த அளவுக்கு காதலித்திருக்கிறானா…? சூர்யா காதலித்தது என்னைத் தானா…? சூர்யாவின் மனதில் இருப்பது நானா…? என்று நினைத்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.

தன் உணர்வுகளை அடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வாய் விட்டே அழுதாள் நிலா.உள்ள உணர்வுகள் எல்லாம் கதறலாய் வெளிப்பட அவளின் அழுகைக் கூடிக் கொண்டே போனது.அவளின் சத்தம் கேட்டு ஓடி வந்த ரம்யா…திகைத்தாள்.

ஏய் நிலா..! என்னடி ஆச்சு…சூர்யா வேற கோபமா போறார்…என்னடி சொல்லிட்டு அழு..” என்று தவிக்க..”ரம்யா..ரம்யா..” என்று அவளைக் கட்டிக் கொண்டாள் நிலா.அழுதபடியே அனைத்தையும் சொல்ல…ரம்யா திகைத்தாள்.

தன்னில் இருந்து நிலாவை நிமிர்த்தியவள்…அவள் சரியாய் நிமிரும் முன் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.நிலா கன்னத்தில் கை வைத்தபடி திகைக்க…”ஒரு மனுஷனை இந்த அளவுக்கா நீ படுத்தி எடுப்ப..? இந்த அடிய சூர்யா குடுத்திருக்கனும்.அவர் குடுக்காததால நான் குடுத்தேன்..” என்றாள் ரம்யா.

ரம்யா..” என்று நிலா திகைக்க…

என்னடி ரம்யா…உன் மனசுல பெரிய பேரழகின்னு நினைப்பா…? அவர் உன்னைப் பார்க்குற பார்வையே சொல்லிடும் அவரோட காதலை.ஆனா அது கூட தெரியாம நீ எல்லாம்..” என்று இழுத்தவள்..”நீ சொல்லாம கொள்ளாம டெல்லிக்கு போனப்ப…சூர்யா பட்ட பாடு தெரியுமா…?கிட்ட தட்ட ஒரு பைத்தியம் போல் நடந்துகிட்டார்.

ஆனா எல்லாம் கொஞ்ச நேரம் தான்.அப்பறம் சுயத்துக்கு வந்து இருந்த இடத்துல இருந்தே உன்னோட பாதுகாப்புக்கு எல்லா ஏற்பாடையும் செய்தார்.நானே அந்த நிமிஷம் பிரமிச்சு போய்ட்டேன்.இப்படியும் ஒருவனால் ஒருத்தியை காதலிக்க முடியுமான்னு எனக்கு தெரியலை…,ஆனா சூர்யா முடியும்ன்னு காட்டிட்டார்.நீயா பார்த்து தேடியிருந்தாலும் இப்படி ஒருத்தரை உன்னால் கண்டுபிடித்திருக்க முடியாது…” என்றாள் ரம்யா.

நிலா யோசிக்கட்டும் என்று நினைத்த ரம்யா…”சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத நிலா…நீ வழக்குல ஜெயித்திருக்கலாம்….ஆனா வாழ்க்கையில தோத்துட்ட…” என்றபடி சென்று விட்டாள்.

நிலா மடங்கி அமர்ந்து அழ தொடங்கினாள். 

 

 

 

 

முகவரி 37:

ரம்யா கேட்ட அனைத்துக் கேள்விகளும் நிலாவின் மனதினை அம்புகளாய் துளைத்துக் கொண்டிருந்தது.அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் நிலாவின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.சூர்யாவின் வார்த்தைகள் அனைத்தும் வலி மிகுந்ததாகவும்,அவளுள் வலியை ஏற்படுத்துவனவாகவும் இருந்தன.

தன் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும்,ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை மீறி ஏதோ ஒன்று அவளை வழிப் படுத்துவதாய் உணர்ந்தாள் நிலா.இன்றும் அவளின் உள்மனம் சூர்யாவின் காதலை அவளிடம் எடுத்து சொல்லி அரற்றியது.தன் கணவன் காதலுடன் பார்க்கிறானா..? இல்லை கள்ளத் தனத்துடன் பார்க்கிறானா..? என்று கூட தெரியாத அளவுக்கு தான் முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று நினைத்த நிலா…தன்னை நினைத்து தானே சிரித்துக் கொண்டாள்.

சூர்யாவுடன் சண்டை கட்டவும்,அவனுடன் சரிக்கு சரி பேசுவதிலும் ஆர்வம் காட்டிய தன் மனம் ஏன் அவன் மனதை புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை..? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள் நிலா.

சூர்யா தன் கழுத்தில் மாங்கல்ய நாணை பூட்டும் போது…ஏன் என் கைகளை அதை விலக்கவில்லை…? நான் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்க முடியும் தானே..? இத்தனைக்கும் அந்த சமயத்தில் எல்லாம் எனக்கு சூர்யாவை பிடிக்கவே பிடிக்காதே..?பிறகு எப்படி நான் அவனை ஏற்றுக் கொண்டேன்..?

டெல்லியில் தனிமையை உணர்ந்த போதும்…என் மனம் சூர்யாவின் அருகாமையை மட்டும் நாடியது ஏன்..? எதிர்பாரா விதமாக அவன் அருகாமை கிட்டியதும் என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு என்ன பெயர்….? என்ற கேள்விகளுக்கு எல்லாம் இறுதியாக நிலாவிற்கு கிடைத்த பதில் காதல்….காதல் மட்டுமே.தன் மனதில் ஏதோ ஒரு மூளையில் சூர்யாவிற்கான இடம் இருந்திருக்கிறது.அதில் காதல் நிறைந்திருக்கிறது. ஆனால் அது தான் அறியாதவாறு மறைந்திருக்கிறது என்று எண்ணிய நிலாவின் மனதில் இப்பொழுது சூர்யாவின் நினைவுகளே முழுவதும் நிரம்பியிருந்தது.

“ஆமாம் சூர்யா..! நானும் உங்களைக் காதலிக்கிறேன்.உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன்.இனி என்னால் உங்களுக்கு எந்த விதமான மன காயமும் ஏற்படாது.நடந்த அத்தனைக்கும் இன்று தெளிவு பிறந்துவிட்டது. என் வாழ்வில் சூர்யா மட்டும் தான்.என் வாழ்வும் சூர்யாவுடன் மட்டும் தான்.

சூர்யா வீட்டிற்கு வந்தவுடன் அவனிடம் மன்னிப்புக் கேட்டு….”நானும் உங்களை காதலிக்கிறேன்…” என்று கத்தி சொல்ல வேண்டும்.சூர்யாவின் காதல் எனக்கு புரிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்..” என மனதில் கற்பனைகளுடன்  அவனின் வரவிற்காய் காத்திருந்தாள் நிலா.

நேரம் கடந்து சென்றதே தவிர சூர்யா வந்தபாடில்லை.”என்னாச்சு இன்னமும் சூர்யாவைக் காணோம்…?” என்று நினைத்த நிலா, சூர்யாவின் செல்போனிற்கு தொடர்பு கொள்ள…..அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.”ச்ச்ச” என்று செல்லை தூக்கிப் போட்டாள் நிலா.

அதே நேரம் வீட்டின் லேண்ட் லைன் போன் வெகு நேரமாக அடிக்க…..”இது வேற..” என்று சலித்தபடி சென்று அட்டென் செய்து காதில் வைத்தவள்……. போனில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்றாள்.

மாலை மங்கிய அந்த நேரத்தில் பெங்களூரின் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து அறையை காலி செய்து கொண்டிருந்தான் அருள்.பிஸ்னெஸ் மீட்டிங்க்காக வந்தவன் வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தான்.கிளம்பிக் கொண்டிருக்கும் தருவாயில் அன்று தீபா சொன்னது அருளின் நினைவுக்கு வந்தது.

அண்ணா நிலா அண்ணிய நீ விரும்பி இருந்தாலும் அவங்க உன்னை விரும்பவில்லை.அவங்களுக்கும் கல்யாணம் ஆகி சூர்யா அண்ணாவோட வாழ்க்கைய தொடங்கிட்டாங்க.நீ இன்னமும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்…? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு…அந்த வாழ்க்கைல ஒரு பொண்ணுக்கும் இடம் இருக்கு…நீ எப்ப கல்யாணம் பன்றதா உத்தேசம்..?” என்றாள் தீபா.

இப்போ அதுக்கு என்ன அவசரம் தீபு குட்டி……..முதலில் நீ ஒரு மருமகளையோ மருமகனையோ பெத்துக் கொடு.அவங்களோட கொஞ்ச நாள் விளையாடிட்டு அப்பறமா யோசிக்கிறேன் என்னோட கல்யாணத்தை பத்தி எல்லாம்..” என்றான் அருள் பட்டும் படாமல்.

அப்ப இன்னும் நீ நிலா அண்ணிய மறக்கலையா அண்ணா…?”என்றாள் தீபா கவலையாய்.

ஐயோ..தீபு..! அதெல்லாம் இல்லை.நிலா இப்போ அண்ணி ஸ்தானத்துல இருக்குறாங்க.அது மட்டுமில்லாம இன்னொருத்தர் மனைவிய மனதில் நினைக்கும் அளவுக்கு நான் தரங்கெட்டவனும் இல்லை. உண்மைய சொல்லனும்ன்னா இன்னொரு பெண்ணை என் மனம் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை..” என்றான் அருள்.

அருளின் பதிலைக் கேட்ட தீபாவின் முகம் சுணங்க…”ஆமா திடீர்ன்னு என்ன இந்த அண்ணன் மேல கரிசனம்..?” என்றான் அருள் கிண்டலாய் சிரித்தபடி.

திடிர்ன்னு எல்லாம் இல்லை.எனக்கு எப்பவுமே உன் மேல அக்கறை இருக்கு…” என்று தீபா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல.., “சரி..சரி..தெரியாம சொல்லிட்டேன் போதுமா….?” என்று அருள் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

அவனின் செய்கையில் சிரித்தவள்..”அண்ணா நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்.உனக்கு ஓகேன்னா பேசி முடிச்சுடலாம். பொண்ணுகிட்ட கூட பேசிட்டேன்.அவளுக்கும் சம்மதம் தான்.இனி நீதான் சம்மதிக்கனும். பொண்ணு… நம்ம குடும்பத்துக்கு ஏத்த குத்து விளக்கு..” என்றாள் தீபா.

அவளின் வார்த்தைகளில் ஆச்சர்யமடைந்த அருள்…”பரவாயில்லையே  என் தங்கை எனக்கு பொண்ணு பார்க்கிற அளவுக்கு பெரிய மனுசி ஆகிட்டாங்க…” என்று அவளின் கன்னத்தை கிள்ள..”ஸ்ஸ்ஸ் அண்ணா வலிக்குது..” என்ற தீபா..”நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது…உனக்கு ஒரு வாரம் டைம்…அதுக்குள்ள நீ முடிவு சொல்லனும்…இது என்னோட ஆர்டர்” என்று அன்புக் கட்டளையிட்டாள் தீபா.

அதை இன்று நினைத்த அருளின் முகத்தில் புன்னைகை அரும்பியது. “அப்படி எந்த பொண்ணைப் பார்த்து வைத்திருப்பாள்.போனை எடுத்தாலே அந்த பொண்ணு புராணமா பாடுறா…” என்று அந்த பெண்ணைப் பற்றிய யோசனைகளில் மூழ்கினான் அருள்.

தீபா சொல்வதைப் போல் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கான வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்க வேண்டும்.சூர்யாவுடன் போட்டி போடுவதற்காக….தான் நிலாவின் விசயத்தில் அவசரப் பட்டுவிட்டதை இப்பொழுது உணர்ந்தான் அருள்.

இனி எப்பொழுதும் எந்த நிலையிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தனக்குள் தீர்மானமான ஒரு முடிவை எடுத்த சமயம் அவனின் செல்போன் அலறியது. எடுத்து செய்தியைக் கேட்டவனின் கண்கள் அதிர்ச்சியைக் காட்டியது.மனம் அதிர்ந்தது. கேட்ட செய்தியை ஒரு நிமிடம் நம்ப முடியாமல் சிலையாய் நின்றான்.

சென்னையில் அந்த புகழ்பெற்ற மருத்துவமனை மிகவும் பரபரப்பாய் காணப்பட்டது.அமைதியினை பிரதிபலிக்கும் வெள்ளை சீருடை அணிந்த செவிலியர்களும்…மருத்துவர்களும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க…. அங்குள்ள பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நோயாளிகளும் கூட்டமாக இருக்க…..

சூசூர்ர்ர்ர்யா……………….”என்ற குரல்,அனைவரையும் தங்கள் பரபரப்பிலிருந்து திரும்பி பார்க்க வைத்தது.

நலுங்கிய சேலையும்,கலைந்த தலைமுடியும்,கண்களில் கண்ணீருடன் கத்தி கொண்டிருந்தாள் நிலா.மகேஷ்வரி,முரளி,ஜீவா,தீபா,ரம்யா என அணைவரும் கண்களில் கண்ணீருடன்..ஒருவர் பின் ஒருவர் வேகமாக வந்தனர்.

ஆனால் அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் கத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் நிலா.அங்கிருந்த நர்ஸ் ஒருவர் நிலாவைத் தடுக்க…நர்ஸை தட்டிவிட்டவள்….வேக வேகமாய் ஒவ்வொருஅறையாய் ஓடிக் கொண்டிருந்தாள்.

சிஸ்டர்…இங்க சூர்யான்னு…ஆக்சிடெண்ட் ஆகி அட்மிட் பண்ணியிருக்குறதா எங்களுக்கு போன் வந்தது…” என்று ஜீவா திக்கி திணறி கேட்க…..ஒரு நிமிடம் புரியாமல் பார்த்த நர்ஸ்…”ஆமா சார்…! இப்பதான் ரெண்டு பேரை அட்மிட் பண்ணாங்க….ஐ.சி.யு ல இருகாங்க…” என்று சொல்லி ரூம் நம்பரையும் சொல்ல அனைவரும் பதைபதைத்து ஓடினர்.

அனைவரும் உள்ளே செல்ல முயல….சிகிச்சையை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப் பட வெளியே நின்றிருந்தனர்.சூர்யாவிற்கு ஒரு அறையிலும்,சுதாவிற்கு ஒரு அறையிலும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

என்னால தான்…என்னால தான் சூர்யாவுக்கு இப்படி ஆச்சு….” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறத் துவங்கினாள்.சூர்யாவின் வரவுக்காய் காத்திருந்த நிலாவிற்கு கிடைத்ததோ அவனின் விபத்து பற்றிய செய்திதான்.

போனை எடுத்து பேசியவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.கேட்ட செய்தியை கிரகிக்க அவளுக்கு சில நிமிடங்கள்,சில யுகங்கள் தேவைப் பட்டது.அப்படி  எடுத்துக் கொண்ட சில நிமிடங்கள் நிலாவின் உயிரை உயிரோடு பறிப்பதாக இருந்தது.

விஷயம் இது தான் என்று தெளிந்தவள் கத்திய கத்தலில்….. அந்த வீட்டில் இருந்த அனைவரும் என்னமோ ஏதோ என்று ஓடிவந்தனர்.வந்தவர்கள் நிலாவிடன் என்னவென்று கேடக….அவர்களிடம் சொல்ல முடியாமல் துக்கமும்,அழுகையும் ஒரு பக்கம் போட்டி போட…ஒருவழியாக திக்கித் திணறி தான் கேட்ட செய்தியை சொல்லி முடித்தாள் நிலா.

மகேஷ்வரி இடிந்து போய் நிற்க….மாலா அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருக்க அனைவரும் கிளம்பி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.அங்கு வந்து பார்த்தால் சுதாவும் சேர்த்து அட்மிட் ஆகியிருந்தார்.என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமலும்,தெரியாமலும் தவித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

ரம்யா..,நிலாவை அமைதியாக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியாமல் போயிற்று.நிலா தன் போக்கில் கதறிக் கொண்டிருந்தாள்.பெற்ற மனமோ அவனை மறுபடியும் பார்க்க துடித்துக் கொண்டிருந்தது. தீபா நிலாவுடன் சேர்ந்து அழுது கொண்டிருக்க…அங்கு வந்து சேர்ந்தான் அருள்.

அங்கு வந்து விஷயத்தைக் கேள்விப் பட்ட அருளுக்கு ஒன்றும் புரியவில்லை.சூர்யாவிற்கு விபத்து என்று தான் முரளி போன் பண்ணினார். போகக் கூடாது என்று நினைத்தாலும் அவனின் உள் மனம் உந்த..,அங்கு வந்து சேர்ந்தான் அருள்.ஆனால் தன் அம்மா எப்படி சூர்யாவின் காரில்……அம்மா எப்பொழுது சூர்யாவை ஏற்றுக் கொண்டார்….,அம்மாவும் சூர்யாவும் ஒன்றாய் செல்ல வேண்டிய கட்டாயம் என்ன வந்தது…? என்ற கேள்விகள் அவன் மனதில் இருந்தாலும்….அப்பொழுது சுதாவின் உடல் நிலையும்,சூர்யாவின் உடல் நிலையும் சரியாகி வர வேண்டும் என்பதே அவனுடைய பிரார்த்தனையாக இருந்தது.

இரண்டு மணி நேரம் அனைவரையும் காக்க வைத்துவிட்டு சூர்யா இருந்த அறையில் இருந்து வெளியே வந்தனர் மருத்துவர்கள்.அவர்களைப் பார்த்து பதைபதைத்த நிலா…..வேகமாய் அவர்களின் அருகில் சென்று…

“டாக்டர்….டாக்டர் சூர்யாவுக்கு என்னாச்சு…? இப்போ அவர் எப்படி இருக்கார்…?” என்று கண்களில் கண்ணீருடனும்,தவிப்புடனும் கேட்க….

முதல்ல கொஞ்சம் நிதானமா இருங்க…? நீங்க மிஸ்டர் சூர்யாவுக்கு என்ன வேணும்..?” என்று டாக்டர் கேட்க..

நான்…நான்….அவரோட மனைவி.ஹி இஸ் மை ஹஸ்பண்ட்…”என்று கதற…,ரம்யா அவளைத் தாங்கிக் கொண்டாள்.

சாரி….இப்போ அவரோட நிலமை எப்படி இருக்குன்னு எங்களால எதுவும் சொல்ல முடியாது.அவருக்கு அடி பலமா பட்டிருக்கு.விபத்து நடந்த சமயத்துலையும் அவர் காரை லாவகமா திருப்பியிருக்கனும்.இல்லைன்னா அவரை உயிரோடவே பார்த்திருக்க முடியாது.கடவுளை நம்புங்க…” என்றபடி டாக்டர் செல்ல…இடிந்து போய் அமர்ந்தாள் நிலா.

அதுவரை தன் மகனுக்கு எதுவும் ஆகாது என்று திடமான நம்பிக்கையுடன் இருந்த மகேஷ்வரி உடைந்து அழ ஆரம்பித்தார்.நண்பன் இருக்கும் நிலை ஒரு பக்கம்…..அவனுடைய அம்மாவும்,மனைவியும் கதறும் கதறல் ஒரு பக்கம் என ஜீவா தான் படாத பாடு பட்டு போனான்.அவர்களை என்ன சொல்லி தேற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை.ஆனால் சூர்யாவிற்கு ஒன்றும் ஆகாது என்று அவனின் உள் மனம் உளமார நம்பியது.

சுதாவின் அறையில் இருந்த டாக்டர்கள் இன்னமும் வராமல் இருக்க… அருளின் உள்ளமும்,தீபாவின் உள்ளமும் தன் தாயின் நிலையை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தது.முரளியோ இடிந்து அமர்ந்து விட்டார்.இத்தனை நாள் கழித்து கிடைத்த பிள்ளைக்காக கலங்குவதா…? பிடிக்காமல் கட்டிய போதும்…இத்தனை வருடம் தன்னுடன் குடும்பம் நடத்திய சுதாவை எண்ணி வருந்துவதா…? என்று வேதனை படிந்த முகத்துடன் வெறித்த பார்வையுடன் இருந்தார்.

சுதாவின் அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் முகத்தில் கவலை அப்பிக் கிடக்க….அருளின் மனம் பதறியது.

“டாக்டர்…எங்கம்மாவுக்கு ஒன்னுமில்லை தானே…? அவங்க நல்லாயிருக்கங்க தானே…?” என்று அவசர அவசரமாக கேட்க…

சாரி…நாங்க எவ்வளோ முயற்சி செய்தும் பயனில்லை.அவங்களுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்திருக்கு.விபத்துலையும் காயம் அதிகம் ஏற்பட்டதால….அவங்களுக்கு ஸ்பாட்லயே நிறைய ரத்தம் வெளியேறியிருக்கு. எங்களால் முடிந்த அளவுக்கு அவங்களை காப்பத்த முயற்சி செய்தோம்…பட் முடியலை.அவங்க தன்னோட கடைசி நிமிஷத்துல இருக்காங்க…நீங்க ஏதாவது பேசனும்ன்னா பேசிக்கோங்க…” என்ற படி டாக்டர் சென்று விட…”அம்ம்மா…” என்று அழத்தொடங்கினாள் தீபா.

ஜீவா தன்னவளைத் தாங்க….அருளின் நிலை தான் அவ்விடத்தில் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.அருள் இடிந்து போய் நிற்க…..அவனைப் பார்த்த ரம்யாவிற்கு அவனை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.இருந்தாலும் இருக்கும் இடத்தை நினைவில் கொண்டு அமைதியாய் அவனுடைய வேதனையில் பங்களித்தாள்தன்னை சுற்றி இருந்தவர்களை சலனமற்ற பார்வையுடன் பார்த்தார் சுதா.தன்னுடை இறுதி நேரம் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.அன்று மாலை நடந்தது அவரின் நினைவுக்கு வந்தது.

“வழக்கம் போல் இன்றி…திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக…..நெஞ்சும் லேசாய் வலிப்பதைப் போல் இருந்தது.என்ன செய்வதென்று புரியால் ஒரு நிமிடம் திகைத்த சுதா….அருளின் செல்போனிற்கு கால் செய்ய…. பெங்களூரில் மீட்டிங்கில் இருந்த அருள் செல்லை ஆப் செய்து வைத்திருந்தான்.பல முறை அவனுக்கு முயற்சி செய்து சலித்த சுதா…..முரளியின் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

இரண்டு,மூன்று முறை முரளியில் செல் போனும் எடுக்கப் படாமல் இருக்க….சுதாவிற்கோ திணறல் அதிகமாகியது.வழக்கமாய்  உறிஞ்சும் மருந்தை எடுத்துக் கொண்டும் அது பயனளிக்காமல் போக….மறுபடியும் முரளிக்கு அழைப்பு விடுக்க…அந்த முறை அவரின் செல்போன் அட்டென் செய்யப் பட்டது.ஆனால் எடுத்தது முரளி அல்ல சூர்யா.

ஆபத்திற்கு பாவமில்லை என்று எண்ணிய சுதா…ஒரு நிமிடம் தயங்கி …திக்கி திணறி சொல்ல….அவர் சொல்லி முடிக்கும் முன் காரை எடுத்திருந்தான் சூர்யா.அசுர வேகத்தில் பறந்த சூர்யாவின் கார் சுதாவின் வீட்டிற்கு சென்று அவரை உடனடியாக காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மற்ற எல்லா பிரச்சனைகளும் மறந்து சுதாவை உரிய நேரத்தில் ஹாஸ்பிட்டலில் சேர்க்க வேண்டும் என்ற  எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு காரை ஓட்டிய சூர்யா…..பின்னால் தனக்கு எமனாய் தன்னைத் தொடர்ந்து வந்த டேங்கர் லாரியை கவனியாமல் விட்டு விட்டான்.

ஒரு திருப்பத்தில்  சூர்யாவின் கார் இடித்துத் தள்ளப் பட…முதலில் தடுமாறிய சூர்யா….லாவகமாய் காரை வளைக்க….கார் சூர்யாவின் கைகளுக்குள் அடங்காமல்….வேகமாய் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது மோதப் போக….சூர்யா வளைக்க…..இறுதியில் கார் தடம் புரண்டது.

தடம் புரண்ட காரில் இருந்து…..தனக்கு காயம் இருப்பதையும் பொருட்படுத்தாது….சூர்யா சுதாவை காப்பாற்ற முயல…ஒரு கட்டத்தில் முடியாமல் போக….,“நிலா…” என்று வாயில் முணங்கியபடி.அவனும் மயங்கி கீழே சரிந்தான்.

நடந்தவைகள் மனக் கண்ணில்  விரிய…சுதாவின் விழிகளின் இரு புறமும் கண்ணீர் கசிந்தது. மகேஷ்வரியை திரும்பிப் பார்த்த சுதா….அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்.தான் செய்த தவறுகளுக்கான வேண்டுதலாய் அது இருந்தது.சுதாவின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிய மகேஷ்வரி.. “உனக்கு ஒன்னும் ஆகாது சுதா…கூடிய சீக்கிரம் நீ குணமாகிடுவ..” என்று சொல்ல…சுதாவின் உதடுகளில் வெருமையாய் ஒரு புன்னகை தோன்றியது.

சுதாவை அந்த நிலையில் பார்க்க முடியாமல் தன் உணர்வுகளை அடக்க அருள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க…தன் பார்வையால் அருளையும், தீபாவையும் அருகில் அழைத்த சுதா…அவர்கள் இருவர் கைகளையும்… மகேஷ்வரியின் கைகளில் ஒப்படைத்தார்.

பிரபு…. ஜக்குவை அழைத்துக் கொண்டு அப்பொழுது அங்கு வர…ஜக்குவை அங்கு பார்த்த சுதாவின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.பிரபுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சுதா எதையோ சொல்ல துடிக்க… சுதா சொல்ல வருவது புரியாமல் பிரபுவும் கலங்கினார்.

ரம்யாவையும்,அருளையும்… சுதா மாறி மாறி பார்க்க….அவர் பார்வையின் பொருளை தீபா நொடியில் உணர்ந்து கொண்டாள். ஆனால் மற்றவர்களுக்கு புரியவில்லை.ரம்யாவோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில்  இல்லை.

அருளிற்கும் ரம்யாவிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சைகையால் சொல்ல….அனைவரின் கண்களும் கலங்கியது.அதை அருளிடமும் வேண்ட…..அருள் திகைத்து போனான்.இருந்தாலும் தன் தாயின் கடைசி ஆசைக்கு தலை அசைத்தான்.

அருகில் நின்றிருந்த முரளியின் கைகளைப் பிடித்து மன்னிப்பை வேண்டியபடி சுதாவின் உயிர் பிரிந்தது.சுதாவின் பிரிவை ஏற்க முடியாமல் அருள் திரும்பி நின்று சுவற்றில் கைகளை குத்தியபடி தனது அழுகையைக் கட்டுப்படுத்த முயல…அது முடியாமல் அவனிடம் இருந்து விம்மல் வெடித்தது.

தீபா வெடித்து அழ….ஜக்குவோ மருமகளை பிரிந்ததை நம்ப முடியாமல் சிலையாய் நின்றிருந்தார்.ஆனால் இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் சூர்யா இருந்த அறையின் வாயிலேயே தவம் கிடந்தாள் நிலா.

“சூர்யா..ப்ளீஸ்….உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது…நீங்க எனக்கு வேணும்…..இத்தனை நாள் நான் தான் உங்க காதலை புரிந்துகொள்ளவில்லை. இப்போ புரிந்து உணர்ந்து வந்திருக்கேன்…. வந்துடுங்க சூர்யா…நல்ல படியா வந்திடுங்க சூர்யா….” என்று மனதிற்குள்ளேயே வெம்பி வெதும்பிக் கொண்டிருந்தாள் நிலா.

முகவரி 38:

இரண்டு நாட்கள் கடந்த நிலையில்…..

சுதாவிற்கான அனைத்து இறுதி சடங்குகளையும் அருளே செய்து முடித்திருந்தான்.முரளியை எந்த விஷயத்திலும் அருள் அனுமதிக்கவில்லை. அது அவனுடைய கோபத்தைக் காட்டியதா..? இல்லை தன் தாய்க்கு தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வைக் காட்டியதா..? என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

எத்தனை பேர் ஆறுதல் சொன்னாலும் அருளின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.பெற்ற தாய் கொலைகாரியாய் இருந்தாலும் அந்த தாய் பாசத்தை அவரால் மட்டுமே தர முடியும் என்பதை உறுதியாய் நம்பினான் அருள்.அதனாலயே சுதா எப்படிப்பட்ட தப்பை செய்திருந்த போதும் அவனால் சுதாவை வெறுக்க முடியவில்லை.

இப்பொழுது தனக்கென்று இருந்த ஒரு உறவையும் கடவுள் பறித்துக் கொண்டது தன்னுடைய துரதிஷ்ட்டமே என்று நினைத்தான்.சில இடங்களில்,சில சமயங்களில் தான் தடுமாறி செய்த தவறுகளுக்காக…, கடவுள் தனக்கு இப்படியொரு தண்டனையை கொடுத்திருக்க வேண்டுமா…? என்று எண்ணி எண்ணி மனதிற்குள் மருகினான்.ஆனால் எதையும் வாய் விட்டு வெளியில் சொல்லவில்லை.

அருளின் ஒவ்வொரு முக மாறுதல்களும்,முகத்தில் தெரிந்த வேதனையும் ரம்யாவையும் வேதனை அடைய செய்தது.அருளின் இப்போதைய மன நிலை எப்படி இருக்கும் என்பதை ரம்யாவும் நன்கு அறிந்திருந்தாள்.ஆனால் நிலாவை சமாதானப் படுத்துவதா..? இல்லை அருளை சமாதானப் படுத்துவதா…? என்ற புரியாத ஒரு சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அங்கு நிலாவின் நிலை தான் அதோ பரிதாபமாய் இருந்தது.இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் சூர்யா கண் விழிக்கவில்லை.நிலாவோ ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஹாஸ்பிட்டலே கதி என்று கிடந்தாள். யாராலும் அவளை சமாதானப் படுத்த முடியவில்லை.

கையில் இருக்கும் போது தெரியாத ஒரு பொருளின் அருமை…..அது கையை விட்டு சென்ற பிறகுதான் புரியும் என்பது நிலாவின் விஷயத்தில் உண்மையாகிப் போனது. அவளை நெருங்கி நெருங்கி வந்த போதெல்லாம் தெரியாத சூர்யாவின் காதல்…..இப்பொழுது வாழ்வா?சாவா..? என்ற நிலையில்….. அவன் உயிர் ஊசல் ஆடிக் கொண்டிருக்கும் போது நிலாவிற்கு புரிகிறது.

தன்னை அணுஅணுவாய் காதலித்தவன்…..தன்னுள் காதல் என்னும் விதையை விதைத்தவன்,தான் அறியாமலே தன்னுடைய காதலனாய், வழிகாட்டியாய்,தோழனாய் என அனைத்துமாய் இருந்த சூர்யா…..தான் எவ்வளவு தான் அவனைக் எடுத்தெறிந்து பேசியிருந்தாலும் அதை எல்லாம் மறந்து தனக்காய் யோசித்த சூர்யா…இப்படி அனைத்துமாய் இருந்தவன்…. இன்று யாரோ போல் படுக்கையில் கிடந்தான்.

ஹாஸ்பிட்டல் சுவற்றில் நிலா சாய்ந்து அமர்ந்திருக்க….அவளுடைய கண்கள் தங்களின் கண்ணீர் சுரப்பை  மட்டும் நிறுத்தாமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தன.இப்பொழுது கண்விழித்து விடுவான்…. பிறகு கண் விழித்து விடுவான் என்ற கொஞ்ச நஞ்ச  நம்பிக்கையும் உடைந்து கொண்டே வந்தது.

நிலாவின் நம்பிக்கை உடைந்து போகும் இறுதி நேரத்தில்…..அங்கு வந்த நர்ஸின் வார்த்தைகள் அவளின் நம்பிக்கையை மீட்டெடுத்தது.”சூர்யா கண் விழித்து விட்டான்..” என்ற செய்திதான் அது.அந்த வார்த்தைகள் காதில் மறு நிமிடம்….தன்னுடைய சோர்வு எல்லாம் மறந்தவளாய் பரிதவித்து சூர்யா இருந்த அறையினுள் நுழைந்தாள் நிலா.

அவளின் பரிதவிப்பை உனர்ந்தவர்களாய் அனைவரும் பின்னால் சென்றனர்.அருள் உள்ளே செல்லலாமா…? இல்லை வேண்டாமா..? என்று யோசித்து…இறுதியில் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

கஷ்ட்டப் பட்டு கண் திறந்த சூர்யாவின் கண்களில் முதலில் விழுந்தது…நலுங்கிய சேலையும்,கலைந்த கூந்தலும்,கண்ணீருடன் தவித்த முகமாய் நின்றிந்த நிலாவும்,அவளின் அருகில் இருந்த மகேஷ்வரியும் தான்.இருவரையும் கண்களுக்குள் உள்வாங்கியவன்…எதையோ கேட்க நினைத்து வாயைத் திறக்க….முடியாமல் மீண்டும் மயக்கத்திற்கு சென்றான்.

சூர்யா கண்விழித்து விட்டான்.எதையோ பேச வருகிறான் என்று மனதில் கொஞ்சமாய் வந்த நப்பாசையும் நொடியில் மறைந்து போனது நிலாவிற்கு.

சூர்யா…சூர்யா…இங்க பாருங்க சூர்யா…!கண்ணைத் திறங்க சூர்யா…!” என்று அவனின் முகத்தைத் தட்டத் தொடங்கினாள் நிலா.”நான் சொல்றது உங்களுக்கு கேட்கலையா சூர்யா…..ப்ளீஸ் எழுந்திருங்க…நாம நம்ம வீட்டுக்கு போகலாம்…சொன்னா கேளுங்க சூர்யா…” என்று பிதற்றத் தொடங்கினாள்.

அதற்குள் அருள் சென்று டாக்டரை அழைத்து வர….உடனே வந்து பரிசோதித்த மருத்துவர்….”அவருக்கு பல்ஸ் எல்லாம் நார்மலாதான் இருந்தது.ஆனா இப்போ பல்ஸ் குறையுது.எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணிட்டோம்.அவர் திரும்பவும் மயக்கத்துப் போயிருக்கார்ன்னா… சாரி…கொஞ்சம் சிரமம் தான்.கடவுளை நம்புங்க…” என்றபடி டாக்டர் செல்ல…அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிலாவை உயிரோடு கொன்றது.

“சூர்யா இங்க பாருங்க ……என்னை பாருங்க.இங்க..இங்க அம்மாவைப் பாருங்க எப்படி அழறாங்கன்னு….எழுந்திடுங்க சூர்யா.எங்களுக்கு நீங்க வேணும் சூர்யா…..ப்ளீஸ் எனக்கு நீங்க வேணும்…எனக்கு நீங்க வேணும்….” என்று ஆவேசமாய் அவனைப் போட்டு குழுக்கியவள்….

“அப்பா…அப்பா மாதிரி நீங்களும் என்னை விட்டுட்டு போய்டாதிங்க… என்னை தனியா விட்டுட்டு போய்டாதிங்க சூர்யா….” என்று கதறியவள்…கண்ணீரை வேகமாய் துடைத்தவளாய்…”உங்களுக்கு ஒன்னு தெரியுமா….? நான் ஒரு முட்டாள்.நீங்க தான் எப்பவும் சொல்லுவிங்கல்ல……உனக்கு மூளையே இல்லைன்னு. அது உண்மைதான் சூர்யா….எனக்கு மூளையே இல்லை. இருந்திருந்தா…உங்க காதல் எனக்கு புரியாமலா இருந்திருக்கும்.

ஆனா இப்ப புரிஞ்சுகிட்டேன் சூர்யா.ஆமா இப்ப புரிஞ்சுகிட்டேன். எனக்கும்…எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்…ஆனா…ஆனா அது எனக்கே தெரியாத அளாவுக்கு இருந்திருக்கேன்.ப்ளீஸ்….கண்ணை திறங்க சூர்யா…”ஐ லவ் யு சூர்யா….ஐ லவ் யு….” என்று ஆவேசமாய் கத்தியவள் மயங்கி அப்படியே சரிந்தாள்.

அதுவரை அவளின் தவிப்பையும்,வார்த்தைகளையும் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்த அருள்…நிலா மயங்கி விழவும் திகைத்துப் போனான்.”நிலா…” என்று ரம்யா ஓடிப் போய் தாங்க…..அவளை பக்கத்து அறைக்கு சென்று படுக்க வைத்தனர்.இரண்டு நாட்கள் சாப்பிடாததும்,இப்பொழுது சூர்யா கண் முழிக்காததும் அவளின் மன அழுத்தத்தை அதிகமாக்கி மயக்கத்திற்கு ஆட்படுத்தியிருந்தது.

நிலாவின் மீது சூர்யா கொண்ட காதலும்,சூர்யாவின் மீது நிலா கொண்ட காதலையும் பார்த்த அருளுக்கு திகைப்பும்,வியப்பும் தான் அதிகமானது.தான் நிலாவை திருமணம் செய்ய நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று நினைத்தான்.காதலிப்பதும்,ஒருவரால் அளவுக்கு மீறி காதலிக்கப்படுவதும் எப்படிப்பட்ட ஒரு உறவை ஏற்படுத்தும் என்பதை அவர்களைப் பார்த்து தெரிந்து கொண்டான் அருள்.அவனை ஒருத்தி உயிராய் நினைப்பது தெரியாமல்.

நிலா கண் முழிக்கும் போது மாலை ஐந்து மணியாகியிருந்தது.”இவ்வளவு நேரமா என்ன நடந்தது..” என்று புரியாமல் முழித்தவள்….அப்பொழுதுதான் கடைசியாய் நடந்தது நினைவிற்கு வர…வேகமாய் எழுந்தாள்.தடுமாறி விழப் போனவள்…..தன்னை நிதானப் படுத்திக் கொண்டு  வெளியே வர…..அருள் நின்றிருந்தான்.

அவனின் அருகில் சென்ற நிலா…”அருள்….அவர்..அவர்….சூர்யா…” என்று திணற…,அருளின் விரல்கள் சூர்யாவின் அறையை நோக்கி கைகாட்ட….. அவனின் செய்கை புரியாமல் வேகமாய்  சூர்யாவின் அறைக்கு சென்றவள் திகைத்தாள்.ஏனென்றால் அங்கு சூர்யா நல்ல படியாக ஜீவாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.இருந்தாலும் குரல் ஓங்கி ஒலிக்காமல் சோர்வாய் கேட்டது.

வேகமாய் அவன் அருகில் சென்றவள்…அவனை தலை முதல் கால் வரை ஒரு நிமிடம் பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டாள்.”சூர்யா…” என்று அவளது உதடுகள் மட்டுமே உச்சரிக்க….சத்தம் வெளியே வரவில்லை.

நிலாவைப் பார்த்த மகேஷ்வரி…”நிலா….உனக்கு இப்ப எப்படி இருக்குமா…? இப்போ பரவாயில்லையா..?” என்று விசாரிக்க….அவளின் தலை மட்டுமே …”ஆம்” என்பதைப் போல ஆட…கண்கள் மட்டும் சூர்யாவிடம் மட்டுமே இருந்தது.அனைவரும் புரிந்து கொண்டவர்களாய்  வெளியே செல்ல…..சூர்யாவின் அருகில் சென்றாள் நிலா.

அதுவரைக் கொஞ்சம் கொஞ்சமாக வந்த அழுகை இப்பொழுது அதிகமாய் வர தொடங்க…..மீண்டும் கத்தி அழ ஆரம்பித்தவள்…..சூர்யாவின் வேதனையான முகத்தைப் பார்த்தவுடன் தன்னை அடக்கிக் கொண்டாள்.வேகமாய் அவனருகில் குனிந்தவள்…அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.”தேங்க்ஸ் சூர்யா..தேங்க் யு சோ மச்….நான் ரொம்ப பயந்துட்டேன்…” என்று கண்ணீருடன் சொல்ல…..சூர்யாவும் தவித்துப் போனான்.

மெதுவாக நிலாவின் கண்ணீரை மெதுவாக துடைத்தவன்….எதுவும் பேசாமல் நிலாவை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.”அதான் ஒன்னும் ஆகலையே நிலா…..அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேண்டா…” என்று மெதுவாய் சிரித்தபடி அவளின்  நெற்றியில் மெதுவாய் முட்ட….. நிலாவிற்கு அப்பொழுது தான் போன உயிர் திரும்பி வந்தது.

“சாரி சூர்யா….என்னால் தான் எல்லாம்.என்னை மன்னிச்சுடுங்க சூர்யா.நான் உங்களை ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்.தேவையில்லாம பேசி, தேவையில்லாம சண்டை போட்டு…உங்களையும் நிம்மதி இல்லாம செய்து,நானும் நிம்மதியில்லாம தவித்து…” என்று நிலா முடிக்கும் முன் அவளின் வாயை மூடினான் சூர்யா.

“எனக்கு தெரியும் நிலா….அது உன் வாயிலிருந்த வந்த வார்த்தைகள் தானே தவிர மனதில் இருந்து இல்லைன்னு.தப்பு என் மேல தான்.நான் உன்னை காதலிக்கிறதை சொல்லாமலே நீயா புரிஞ்சுக்கனும்ன்னு நினைச்சது என் தப்புதான நிலா.ஆனா உன் மனசிலையும் என் மேல் காதல் இருக்குன்னு எனக்கு தெரியும்.ஆனா அதை வெளிப்படுத்தவோ…. வெளிப்படுத்தக் கூடிய சூழ்நிலையிலோ இல்லைன்னும் எனக்கும் தெரியும்.நான் ஒவ்வொரு முறையும் பொறுமையா போனதுக்கு அதுவும் ஒரு காரணம் நிலா….” என்றான் அவள் கைகளை தன்னுள் அடக்கியபடி.

`”சூர்யா..” என்று அதிர்ந்தவள்….”என்மேல் உங்களுக்கு கோபமே இல்லையா..?” என்றாள்.

சூர்யா..”இப்ப கோபப்பட்டு என்ன ஆக  ஆகப் போகுது நிலா…? இது என்ன பந்தயமா…? நீ ஜெய்க்கிறியா..?இல்லை நான் ஜெய்க்கிறேனான்னு பார்க்க…! வாழ்க்கை. விட்டுக் குடுக்குறது தான் ஒரு நல்ல வாழ்க்கையோட தாரக மந்திரமே.எல்லாருமே நூறு சதவிகிதம் நல்லவங்களா இருக்க முடியாது. என்கிட்ட சில மைனஸ் பாய்ண்ட் இருக்குற மாதிரி….உன்கிட்டயும் இருக்கு.அவங்க அவங்க நிறை குறைகளோட வாழ்க்கை துணையா ஏத்துக்கனும்.

ஆனா ஆகிஸிடெண்ட் ஆன அந்த நிமிஷம் நான் பயந்துட்டேன்.எங்க கடைசியா உன் முகத்தை கூட பார்க்காம போய் சேர்ந்துடுவோமோன்னு….. அந்த நிமிஷம் எனக்கு வேற எதுவும் நியாபகத்துக்கு வரலை.இது தான் வாழ்க்கை.இந்த நிமிஷம் இருக்கவங்க அடுத்த நிமிஷம் இருக்குறது இல்லை. வாழ்ற காலத்துல ஏன்  பிரச்சனைய உண்டு பண்ணி…. வாழ்க்கைய நரகமா மாத்தனும்.அதுக்கு பதிலா சந்தோஷமா நிம்மதியா வாழ்ந்துட்டு போகலாமே…” என்றான் பேச முடியாமல்.

“சூர்யா ப்ளீஸ் நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதிங்க…..” என்று நிலா தவிப்புடன் சொல்ல…”நிலா இங்க வச்சு சொல்ல கூடாது தான்…இருந்தாலும் சொல்றேன்…ஐ லவ் யு….உன்னை தான் மனசார விரும்புறேன்…” என்று அவளது கைகளில் முத்தமிட்டான்.

அப்பொழுது உள்ளே நுழைந்த ஜீவா….”டேய் சூர்யா இது ஹாஸ்பிட்டல். இங்கயுமா உங்க ரொமான்ஸ் படத்தை ஓட்டுறிங்க.எங்களுக்குள்ள  சண்டை சண்டைன்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் தாண்டா ஓவர் ரொமான்ஸ் பன்றிங்க….எல்லாம் காலம் நேரம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றான்.

சூர்யாவின் முகத்தில் சிறிது புன்னகை தோன்ற….”ரொம்ப பயந்துட்டியா நிலா…நான் கண் முழித்து பார்த்தப்போ நீ இல்லைன்னதும் எனக்கு என்னனென்னமோ தோண….கடைசில ஜீவா தான் நடந்ததை சொன்னான்…..” என்றான் சூர்யா.

அந்த நேரத்தல் நர்ஸ் உள்ளே வர…..”சார் நீங்க ரொம்ப பேசாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க….இப்போ டாக்டர் செக் பண்ண வருவார்.மேடம் நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…” என்று அவளை அனுப்ப….நிலா செல்ல மனமின்றி சென்றாள்.

 

*****************

வீட்டிற்கும்,ஹாஸ்பிட்டலுக்கும் மாறி மாறி பதினைந்து நாட்கள் அலைந்த பிறகு சூர்யா டிஸ்ஜார்ஜ் செய்யப் பட்டான்.அதற்கு இடைப்பட்ட நாட்களில் அருள் சூர்யாவின் கண்களில் படவும் இல்லை.சூர்யாவின் வீட்டிற்கும் வரவும் இல்லை.தீபா எவ்வளோ எடுத்து சொல்லியும் வர மறுத்து விட்டான். அனைத்தும் தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாததைப் போல் காட்டிக் கொண்டான் சூர்யா.கை கால்களில் அடி பலமாய் படாததால் எழுந்து நடமாட ஆரம்பித்தான்.சூர்யா இல்லாத நாட்களில் ஜீவா தொழிலையும்,வீட்டையும் பார்த்துக் கொள்ள….எந்த வேறுபாடும் இன்றி நாட்கள் சென்றது.

ஒருவாறு தீபாவும் சுதாவின் இழப்பை தாங்கிக் கொள்ள பழகியிருந்தாள். அனைவரை விடவும் சுதாவின் இறப்பு ஜக்குவை தான் அதிகம் பாதித்தது. சுதாவை சின்ன வயதில் இருந்து வளர்த்து ஆளாக்கிய பாசம்….அவ்வளவு சீக்கிரம் ஜக்குவை விட்டு அகல மறுத்தது.ஒவ்வொருவரும் தங்கள் துயரத்தில் இருக்க…..பிரபு தான் அடுத்து நடக்க வேண்டியதை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார்.

அருளுக்கும்,ரம்யாவிற்கும் திருமணம் செய்து வைத்தால் சரியாக வருமா…? இதற்கு அருள் சரி சொல்லுவானா…? போன்ற கேள்விகள் பிரபுவின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.அவரின் முகத்தைப் பார்த்த சூர்யா…”என்னாச்சு அங்கிள்..? ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க..?” என்றான்.

பிரபு நடந்தவற்றை சொல்லி….சுதாவின் ஆசையையும் சொல்ல… யோசனையில் ஆழ்ந்தான் சூர்யா.”அங்கில் இதைப் பத்தி நீங்க கவலைப் படாதிங்க.இனி நடக்க வேண்டியதுக்கு நான் பொறுப்பு.நீங்க மனதில் எதையும் போட்டு குழப்பாம நிம்மதியா இருங்க…” என்றான் சூர்யா.

இவர்கள் பேசுவதைக் கேட்ட ரம்யா கடுப்பானாள்.”ஐயோ இவங்களுக்கெல்லாம்  ஒரு மனுஷியோட அவஸ்தை புரியுதா…?அதான் அத்தை சொல்லிட்டு போய்ட்டாங்கல்ல….சரி அதை சீக்கிரம் நடத்தி வைப்போம்ன்னு  யாருக்காவது தோணுதா….?அப்பனே கணேசா..! உனக்காவது என் புலம்பல் கேட்குதா…?” என்று கும்பிடு போட்டுக் கொண்டிருக்க…

கவலைப் படாதடி….!சீக்கிரம் அருளோட உன்னை சேர்த்து வச்சிடுறோம். அதுக்காக எல்லாரையும் உன் வாயில் போட்டு மெல்லாத..” என்று நிலா கன்னத்தில் இடிக்க…”ஆளை விடுடி சாமி..” என்ற படி ஓடினாள் ரம்யா.

காலையில் கண் விழித்த அருளுக்கு வீட்டின் காலிங் பெல் சத்தம் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது.வீட்டில் யாருமில்லாமல் அவன் மட்டும் இருந்ததால் வீடே அலங்கோலமாய் இருந்தது.”ச்ச…இந்த நேரத்துல யாரு…?” என்று மனதில் நினைத்த படி கண்ணைக் கசக்கியவாறு கதவைத்  திறக்க….வெளியில் இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள் ரம்யா.

எவ்வளவு நேரம் பெல் அடிக்கிறது…? கதவைத் திறக்க இவ்வளவு நேரமா…?” என்றாள் கோபமாய்.

ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியாமல் நின்றிருந்த அருள்… மறுபடியும் கண்ணைக் கசக்கி விட்டு பார்க்க….அது உண்மைதான் என புரிந்தது.”ஏய் இந்த நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை..?” என்று எரிந்து விழுந்தான் அருள்.

அவனை முறைத்த ரம்யா…”சும்மா பேசாம விலகுங்க….” என்று அவனை  தோளோடு இடித்துத் தள்ளியவள்…பழகிய வீடு போல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.அருள் முகத்தில் ஈயாடாமல் நிற்க…அவனைப் பார்த்த  ரம்யா மனதிற்கு சிரித்துக் கொண்டாள்.”மவனே உனக்கு எல்லாம் என் வழிதான் சரிப்பட்டு வரும்..” என்று நினைத்தவள் அனைத்து வேலைகளையும் சீக்கிரமாக செய்து முடித்து விட்டு….சமைக்க ஆரம்பித்தாள்.

அருள் எதுவும் செய்யாமல் ஹாலிலேயே அமர்ந்து வேடிக்கை பார்க்க…ரம்யா சமைத்துக் கொண்டிருந்தாள்.”இப்ப எதுக்கு இவ்வளவு சமைக்கிறா…?” என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க….மறுபடியும் வாசலில் “அருள்..” என்ற முரளியின் குரல் கேட்க  திரும்பிப் பார்த்தான்.பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

சூர்யா,நிலா,மகேஷ்வரி என குடும்பமே அருள் வீட்டு வாசலில் நின்றிருந்தது.சூர்யா எந்த தயக்கமும் இல்லாமல் இருந்தான்.தீபாவோ கண் கலங்கியவளாய் அருளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

முகவரி 39:

அத்தனை பேரையும் அவ்வளவு அதிகாலையில் தன் வீட்டு வாசலில் பார்த்த அருளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.ஏற்கனவே ரம்யா வந்த அதிர்ச்சியிலிருந்தே அவன் மீளவில்லை.அதற்குள் குடும்பமே வந்து நிற்கவும் திகைத்தான்.அதிலும் சூர்யாவும் வந்திருந்தது  கொஞ்சமும் நம்ப முடியாமல் இருந்தது.

என்ன அருள்..? வந்தவங்களை வான்னு கூப்பிட மாட்டியா….?” என்றார் பிரபு.

அருளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.இருந்தாலும் எதுவும் சொல்லாமல் வழி விட்டு நின்றான்.அதுவே அவன் சம்மதத்தைக் கூற…. அனைவரும் உள்ளே நுழைந்தனர்.அவர்கள் உள்ளே வரவும் ரம்யா காபியோடு வரவும் சரியாக இருந்தது.

 

என்ன மருமகளே…! அதுக்குள்ள உன் கடமைய தொடங்கியாச்சா…?” என்றார் முரளி.

அப்பா…அதெல்லாம் உங்க மருமகளுக்கு சொல்லியா தரனும்….,சும்மா தீயா வேலை செய்வாங்க இல்லையா சின்ன அண்ணி…”என்று இழுத்தாள் தீபா.

தீபாவின் சின்ன அண்ணி என்ற வார்த்தை ரம்யாவிற்கு மகிழ்ச்சியையும், அருளுக்கு திகைப்பையும் ஏற்படுத்தியது.”என்ன நடக்குது இங்க…?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான் அருள்.

ஜக்கு அந்த வீட்டின் உரிமையாளர் போல் சட்டமாய் அமர்ந்து கொண்டிருந்தார்.எவ்வளவு நடந்திருந்த போதும் அவரின் செய்கையிலோ… பேச்சிலோ எந்தவித மாற்றமும் தெரியவில்லை .”நான் இப்படித்தான்… எப்பொழுதும் இப்படித்தான் இருப்பேன்….எக்காரணம் கொண்டும் என் குணாதிசயம் மாறாது..” என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

அருள் அமைதியாய் அமர்ந்திருந்தான்.அவர்களைப் போல் அவனால் சட்டென்று அவர்களுடன் ஒன்ற முடியவிலை.ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.தயக்கத்துடன் அமர்ந்திருந்த அருளைப் பார்த்த மகேஷ்வரிக்கு அவனின் மனம் புரிந்தது.

அருள்…” என்ற மகேஷ்வரியின் அழைப்பில் சட்டென்று நிமிர்ந்தான். “என்னடா இவ்வளவு காலையில் எல்லாரும் இங்க வந்திருக்காங்களே…. என்ன விஷயமா இருக்கும்..?எதுக்கு வந்திருக்காங்க..?” இப்படி பல கேள்விகள் உன் மனசில் ஓடுது இல்லையா…? என்றார் மகேஷ்வரி.

அருள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் அவரைப் பார்க்க…” எங்களுக்கு தெரியும்…உன்னால் அவ்வளவு சீக்கிரம் எங்களை ஏற்றுக்கவோ,இல்லை எங்களோட வந்து இருக்கவோ முடியாது என்று.அதுக்காக இத்தனை பேர் இருந்தும் நீ மட்டும் தனியா இந்த வீட்டில் இருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை.அதனால் எங்க அனைவரையும் உன் மனம் ஏற்றுக் கொள்ளும் வரை நாங்க எல்லாரும் உன் கூடவே தங்கிடலாம்ன்னு முடிவு பண்ணி கிளம்பி வந்துட்டோம் .உன் மனம் ஒரு நாள்  மாறும்…அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு….” என்றார் மகேஷ்வரி.

மகேஷ்வரியின் வார்த்தைகளில் வியப்படைந்த அருள்  சூர்யாவைப் பார்க்க….அவனின் பார்வை புரிந்தவராய்…”இதையெல்லாம் எடுத்து சொல்லி எங்களை இங்க அழைச்சுட்டு வந்ததே சூர்யா தான்..அவனுக்கும் இதில் சம்மதம் தான்” என்றார் மகேஷ்வரி.

ஒரு நிமிடம் யோசித்த அருள்….”தன் தாயின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார்கள்…” என்று மனதில் நினைத்தவனாய்…”நீங்க இங்க இருப்பதில் எனக்கு ஒன்னுமில்லை.ஆனால் நீங்க சொன்ன மாதிரி என்னால் அவ்வளவு சீக்கிரம் மாற முடியுமான்னு தெரியலை.இருந்தாலும் முயற்சி செய்றேன்..” என்றவன்…”ஏதோ கோபத்துல சில சமயம் நான் உங்களை மனம் வருந்தும் படி பேசியிருக்கேன்….அதுக்காக நீங்கதான் என்னை மன்னிக்கனும்…” என்றான் மகேஷ்வரியிடம்.

நடந்து முடிந்த எதைப்பத்தியும் இனி பேச வேண்டாம் அருள்…நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுப்போம்…..நான் எதையும் மனசில் வச்சுக்கலை.சூர்யா எப்படியோ அதே மாதிரி தான் நீயும்….போய் குளிச்சுட்டு வாப்பா….” எனவும்,அதை மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இரண்டு மனதுடன் சென்றான் அருள்.

முரளி அனைவருக்கும் அறையை ஒதுக்க….தங்களுக்கான அறையில் நுழைந்தான் சூர்யா நிலாவுடன்.அறையில் நுழைந்த சூர்யா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து யோசிக்க துவங்க…..நொந்து போனாள் நிலா.

மரமண்டை….மரமண்டை….ஹாஸ்பிட்டல்ல வச்சு லவ்வ சொன்னான் அதோட சரி.அதுக்கப்பறம் என்னைக் கண்டுக்கவே இல்லை.டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம்ன்னு பார்த்தா….சுத்தம்.  அப்பவும் ப்ஸ்னெஸ்…அது இதுன்னு காலத்தை கடத்துறான்.ஒருவேளை இன்னும் என் மேல் கோபம் மிச்சம் மீதி இருக்குமோ..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள் நிலா. 

நிலா மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருக்க….நிலாவின் இடையினை சூர்யாவின் கரங்கள் இறுக்கி வளைத்தன…”யாரு நான் மரமண்டையா…ஏன் சொல்ல மாட்ட… எல்லாம் என் நேரம்” என்று நிலாவின் கழுத்தருகில் கிசுகிசுத்தான் சூர்யா.

 

அதுவரை இருந்த தைரியம் மாறி நிலாவின் மனம் தந்தியடிக்க ஆரம்பித்தது. தனது கழுத்தருகில் இருந்த சூர்யாவின் முகம் அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்தியது.ஏதோ ஒரு புதிய உணர்வு அவளை ஆக்கிரமிப்பு செய்ய…அந்த தருணத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் நிலா.

நிலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக….அவளை தன் புறமாக திருப்பினான் சூர்யா.”சொல்லு நிலா நான் மரமண்டையா…?” என்று சூர்யா முடிக்கும் முன் அவனின் முகம் வியப்பில் ஆழ்ந்தது.அதற்கு காரணம் நிலாவின் முகம் அந்தி வானமாய் சிவந்திருந்தது தான்.தான் பேச வந்தது எல்லாம் மாறி அவளின் முகச்சிவப்பை ரசித்தவன்….தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்…அவளின் முகத்தை தன் கைகளால் தாங்கியவன்…அவளின் முகம் நோக்கி குனிய….நிலாவோ கண்களில் காதலுடனும்,முகத்தில் தவிப்புடனும் நின்றிருந்தாள்.

சூர்யா தன் முத்தத்தை நிலாவின் இதழ்களில் பதிக்க நெருங்கிய நேரம்…..”நிலா….” என்றபடி நுழைந்தாள் ரம்யா.ரம்யாவின் சத்தத்தில் விதிர்விதிர்த்து இருவரும் விலக….ரம்யாவோ பிரேக் போட்டது போல் நின்றாள்.

“ஹி..ஹி…” என்று  ரம்யா அசடு வழிய…நிலாவோ தன்  சுடிதாரின் துப்பட்டாவை கைகளால் முறுக்கியபடி இருந்தாள். “ச்ச்ச…மிஸ்ஸாகிடுச்சே…” என்று சூர்யா நொந்து போனான்.

என்ன மாமா….?மறுபடியும் நான் தான் பூஜைவேளைக் கரடியா….?” என்று சொல்லி ரம்யா சிரிக்க….நிலா அவளை முறைத்தாள்.

இப்பதான் பூஜைக்கு அஸ்திவாரம் போடலாம்ன்னு நினைச்சேன்., கரெக்ட்டா நீ வந்துட்ட…. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுமே….. எனக்கென்னமோ நீ யதார்த்தமா வந்த மாதிரி தெரியலையே…..” என்று ரம்யாவை மேலும் கீழும் பார்த்தான் சூர்யா.

ஐயோ மாமா….என்னை ஆளைவிடுங்க சாமி.நான் யதார்த்தமாதான் வந்தேன்.மத்தபடி எந்த உள்நோக்கமும்,உள்குத்தும் கிடையாது” என்று ஜகா வாங்கி சென்றாள் ரம்யா.

“ஐயோ ஏன் இப்படி என் மானத்தை வாங்குறிங்க…?”என்று சொல்லி முறைத்தாள் நிலா.

சூர்யாவோ நிலாவிற்கு பதில் ஏதும் சொல்லாமல் அவளின் கைகளை பட்டென்று இழுத்து தன் கை வளைவில் கொண்டு வந்தான்.அவனின் கைகளுக்குள் நெளிய துவங்கினாள் நிலா.”விடுங்க சூர்யா…நான் கேட்டதென்ன…நீங்க பன்றதென்ன…” என்று சிணுங்க….அவளது முகத்தை உற்றுப் பார்த்த சூர்யா…கடகடவென சிரிக்கத் துவங்கினான்.

“சரி..சரி…இங்க வந்து உட்கார்…..இப்ப உனக்கு என்ன பிரச்சனை…?” என்றான் கனிவாய் சூர்யா.

“ம்ம்ம்…அதெல்லாம் ஒன்னும் இல்லை.எனக்கென்ன பிரச்சனை இருக்க போகுது…?” என்று நிலா பிகு பண்ண…,சூர்யா அமைதியாய் எழுந்து அந்த அறையை நோட்டம் விட்டான்.”எனக்கு தெரியும் நிலா… உன்னோட மனதில் இருப்பது…” என்றான்.

நிலா கேள்வியாய் அவனைப் பார்க்க…..”உன்கிட்ட நிறைய விஷயம் பேசனும்….பேசிக்கிட்டே இருக்கனும்…உன் பக்கத்துலையே இருக்கனும்….என்னோட காதலை திகட்ட திகட்ட உனக்கு புரியவைக்கனும்…..உன் மடியில் தலை வைத்து தூங்கனும்…சின்ன சின்ன சண்டை….செல்ல கோபம்…இப்படி நிறைய…நிறைய இருக்கு என்னோட மனதிலும்.ஆனா அதுக்கு முன்னாடி இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சனை கொஞ்சம் இருக்கு….அதை எல்லாம் முடிச்சுட்டா மனதில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சஞ்சலங்களும் நீங்கிடும்…” என்றான் பெருமூச்சு விட்டவனாய்.

சூர்யாவின் அருகில் சென்ற நிலா…அவனின் தோளில் இரண்டு கைகளையும் கோர்த்து…அவனின் முகத்தை தனக்கருகில் இழுத்தவள்….”சூர்யா…என்னமோ ஏதோவென்று  மனதில் நப்பாசையுடன் இருக்க….” அவனின் தலையில் நங்கென்று கொட்டினாள்.

ச்ச்சு….விடுடி பிசாசே…” என்று சூர்யா தலையை தேய்க்க…. “என்னன்னு சொன்னாதான் புரியும்…அதை விட்டுட்டு ஏதோ மணிரத்னம் படத்துல வர மாதிரி பேசுனா…எனக்கு ஒன்னுமே புரியலை…” என்று உதட்டைப் பிதுக்கினாள் நிலா.

இல்லை நிலா…..நான் இது வரைக்கும் என்னோட கோணத்துல இருந்துதான் ஒவ்வொரு பிரச்சனையையும் யோசிச்சேனே தவிர….அந்த இடத்தில் அருளோட மனநிலயை கவனிக்க தவறிட்டேன்னு நினைக்கிறேன்.பொதுவா அடிப்படையில் அவன் ரொம்ப நல்லவன். அவன் தன்னோட குணத்தை மாத்திகிட்டதுக்கு நானும் ஒரு காரணமோன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு.

முதல்ல அப்பா விஷயம் தெரிஞ்சப்போ….நான் ஆத்திரப்பட்டது, ஆவேசப்பட்டது என்னவோ உண்மைதான்.ஆனா நான் அப்படியே இருந்திருந்தா கூட…அருள் எப்பவும் போல இருந்திருப்பான்.நான் என்னோட உரிமைக்காக நடத்திய  போராட்டத்துல…அவனோட சில உணர்வுகளை கொன்னுட்டேன்.அப்படித்தான் இருந்திருக்கனும்.அது தான் அவனின் மாற்றத்துக்கான காரணம்.

உன்னோட விஷயத்திலும் அருள் என்னை ஒவ்வொரு முறையும் தூண்டி விடுற மாதிரி பேசினான்.அதானால் தான் நானும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கிட்டேன். என்னோட கணிப்பு  சரின்னா…. அன்னைக்கு கல்யாண மேடைல ருத்ரம் வந்து சொன்னதுக்காக மட்டும் அருள் உன்னை வேணாம்ன்னு சொல்லியிருக்க மாட்டான்.ஏன்னா..அவன் பிடிவாதக்காரனே தவிர கெட்டவன் கிடையாது.வேற காரணம் ஏதோ ஒன்னு இருந்திருக்கு. அதனால் தான் நான்  தாலி கட்டும் போது கூட அருள் என்னைத் தடுக்கலை.அந்த இடத்தை விட்டு போய்ட்டான்.

இப்பவும்….சுதா அம்மா இறந்ததைப் பத்தி அவன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை.அதுவே எனக்கு குற்ற உணர்வைத் தருது….தீபாவோட விஷயத்தில் கூட….அவன் பிடிவாதமா இருந்தது எனக்கு பெரிசா தெரியலை.இன்னும் பக்குவம் பத்தலைன்னு தான் நினைச்சேனே தவிர அவனை ஜெய்க்கனும்ன்னு எதையும் செய்யலை.

ஆரம்பத்துல பிடித்ததோ பிடிக்கலையோ….தீபா எப்படி எனக்கு தங்கையா தெரிந்தாளோ…அது மாதிரி தான் அருளும் எனக்கு தம்பி மாதிரி தெரிந்தான்.என்ன கொஞ்சம் பிடிவாதமான தம்பி. அவன் வழியிலேயே போய் அவனுக்கு புரிய வைக்கனும்ன்னு நினைச்சேனே தவிர….அவனோட இடத்தை அப்படியே பறிக்க நினைக்கலை.ஆனா அதை அவன் புரிஞ்சுக்கலை.

தெரிந்தோ தெரியாமலோ சுதா அம்மாவோட இறப்புக்கும் நான் காரணமாகிட்டேன்.அருளுக்கு ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி தராம நான் மட்டும் என் வாழ்க்கையை தொடங்கினா….அது என்னோட குற்ற உணர்ச்சியை இன்னமும் அதிகமாக்கிடும்…..என்று கைகளை முறுக்கியபடி ஜன்னலோரத்தில் நின்று வெளிச்சத்தை வெறிக்கத் துவங்கினான் சூர்யா.

சூர்யா…” என்று அழைத்த நிலா….அவனிடன் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். “சாரி சூர்யா…இதுக்கு இடையில் நானும் என் பங்குக்கு உங்களை படுத்தி எடுத்துட்டேன்.உங்களை…உங்க மனசைப் புரிஞ்சுக்காம என்னஎன்னமோ பேசி…சண்டை போட்டு….சாரி சூர்யா….” என்றாள் கண் கலங்க.

அவளின் கண்ணத்தைப் பிடித்து இருபுறமும் இழுத்தவன்….”எதுக்கு சாரி….எனக்கு எவ்வளவு பிரச்சனை வந்த போதும்…..உன்னோட குரல் என் காதில் கேட்டா எல்லா வருத்தங்களும் அப்படியே  மறைந்து விடும்.நீ ஒவ்வொரு முறை சண்டை போடும் போது உனக்கு புரிய வைக்கனும்ன்னு நினைச்சேனே தவிர…ஒரு நாளும் உன் மேல் எனக்கு வெறுப்பு வந்ததில்லை.மாறா உன்மேல் எனக்கிருக்க காதல் அதிகமாகியிருக்கே தவிர கொஞ்சம் கூட குறைந்ததில்லை டியர்…” என்று அவளின் தலையில் முட்டினான் சூர்யா.

நிலா…”நான் தான் சூர்யா அதையெல்லாம் புரிந்து கொள்ளாத முட்டாளா இருந்திருக்கேன்..” என்றாள்.

எது எப்படியோ நிலா…நீ கடைசியா சொன்னியே அது மட்டும் உண்மை….நீ முட்டாள் என்பது…” என்று சூர்யா காலை வார….,இடுப்பில் கைகளை வைத்தவாறு சூர்யாவை முறைத்தாள் நிலா.

நிலாவின் முறைப்பைப் பார்த்து அவளின் தோள்பட்டையில் கைபோட்டு ஒய்யாரமாய் நின்ற சூர்யா…”முறைச்சா கூட அழகாதாண்டி இருக்க…” என்று காதில் கிசுகிசுக்க…முகம் சிவந்தாள் நிலா.

டேய் மச்சான்…” என்றபடி வந்தான் ஜீவா.அவனின் குரலில் சட்டென்று நிலாவை விலக்கியவன்…”வந்து சேருதுங்க பார் நமக்குன்னு…..முதல்ல ரம்யா இப்ப இவன் ” என்று முணங்கியவன்…”ஹி..ஹி..வாடா ஜீவா…. சரியா நேரம் தான் நீ வந்ததும்…” என்று இடக்காய் கூறினான் சூர்யா.

ஜீவா உள்ளே வரும் போதே அவர்களை கவனித்துவிட்டான். இருந்தாலும் சூர்யா பார்த்துவிட்ட பிறகு அவனால் வெளியே செல்லவும் முடியவில்லை.”இல்லை சூர்யா..அருள்கிட்ட பேசனும்ன்னு சொன்ன….ஆபீஸ்க்கு வேற போகனும்…அதான் உன்னை காணமேன்னு வந்தேன்…” என்றான்.

இதோ வந்துட்டேன் ஜீவா…..கண்டிப்பா இன்னைக்கு அருள்கிட்ட பேசனும்…” என்று கூற…”சரி வா…” என்று சொல்லி முன்னே சென்றான் ஜீவா.சென்றவன் சட்டென்று நின்று…”மச்சான் தப்பு என் மேல இல்லை.கதவை சாத்தாம விட்டது உன் தப்புதான்….ஆனா ஒன்னு மச்சான் வாழறடா…ஹிம்..நடத்து நடத்து…” என்று திரும்பாமலே சொல்லி விட்டு செல்ல….சூர்யா பின்னந்தலையில் தலைமுடிக்குள் கைவிட்டு கோதியவாறு மெதுவாய் புன்னகைக்க…அவனைப் பார்த்த நிலா சத்தமாய் சிரிக்க துவங்கினாள்.

யோசனையுடன் அமர்ந்திருந்தான் அருள்.நேற்று வரை அமைதியாய் இருந்த வீடு இன்று கலகலப்பாய் இருந்தது.தீபாவின் குரலும், ரம்யாவின் குரலும் அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது.மனதின் ஏதோ ஒரு மூலையில் நிறைவாய் உணர்ந்தான் அருள்.அவனின் இப்போதைய யோசனைக்கு காரணம் சற்று முன் நடந்தது தான்.

குளிக்கலாம் என்று சென்றவன் மனம் சலிப்படைய தோட்டத்து பக்கமாய் சென்றான்.தீபா வைத்த ரோஜா செடியில் இரண்டு பூக்கள் அழகாய் பூத்திருக்க…..அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் சூர்யாவின் குரல் கேட்டது.

சூர்யா அந்த அறையில் இருந்தது அருளுக்கு தெரியாத காரணத்தால் சூர்யாவின் பேச்சுக் குரல் கேட்டதும் அந்த இடத்தை விட்டு நகரப் போக….சூர்யாவின் பேச்சு தன்னைப் பற்றியதாக இருக்க…. அவனுடைய கால்கள் தானாக நின்றது”.

சூர்யா ஒவ்வொரு வார்த்தையாய் சொல்ல சொல்ல…..அருளுக்கும் மனதில் அவன் சொல்வதெல்லாம் சரியாகவே பட்டது.சில இடங்களில் தானும் பிடிவாதமாய் நடந்து கொண்டதை உணர்ந்தான் அருள். சூர்யாவை பிடிக்கவில்லை என்று மூளை சொன்னாலும் மனதில் அவன் உயர்ந்து கொண்டே போனான்.அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வந்துவிட்டான் அருள்.

ஆனால் வந்ததில் இருந்து என்ன முடிவு எடுப்பது என்று அருளால் தெளிவாய் சிந்திக்க முடியவில்லை.ஒரே குழப்பமாக இருந்தது. அப்போது அவனின் அறைக்கதவு தட்டப்பட….”வாங்க…கதவு திறந்து தான் இருக்கு..” என்றான் அருள். பட்டென்று உள்ளே நுழைந்தாள் ரம்யா.

ரம்யாவை அங்கு பார்த்த அருளின் முகம் கோபத்தைக் காட்டியது. “ஏய்..! நீ எதுக்கு என் ரூம்க்கு வந்த…?” என்று எரிந்து விழுந்தான். ஆனால் ரம்யாவோ அவனை பேச்சை சட்டையே செய்யாமல் அங்கு இருந்த அவனின் அழுக்கு துணிகளை எடுக்க….அவளின் கைப் பிடித்து தடுத்தான் அருள்.

நான் பேசிகிட்டே இருக்கேன்….நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்…. முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு….எதுக்காக என் ரூம்க்கு வந்த…?” என்றான் பிடித்த பிடியை விடாமல்.

கைய விடுங்க…” என்று ரம்யா சொல்ல….அருள் விடாமல் பார்த்துக் கொண்டிருக்க…”கையை விடுடா…” என்றாள் பல்லைக் கடித்தபடி. “என்னது டாவா…” என்று அருள் வாயைப் பிளக்க….

அப்பறம் டான்னு சொல்லாம…மாமா,மச்சான்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தியா…? என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது….. ஏதோ ஆடு மாடுகிட்ட பேசுற மாதிரி பேசுற…ஏன் எனக்கு பேர் இல்லை.எங்க அம்மா  அப்பா எனக்கு அழகா ரம்யான்னு பேர் வச்சிருக்காங்க…. அப்பறம் என்ன கேட்ட…? உன் ரூம்க்கு என்ன உன்னை மயக்கவா வந்தேன்.அத்தை அழுக்கு துணியெல்லாம் எடுத்துட்டு வர சொன்னாங்க வந்தேன் அவ்வளவு தான். அதுக்காக இப்படி ஓவரா கேள்வி கேக்குறது,மிரட்டுறது,இதையெல்லாம் வேற யாருகிட்டயாவது  வச்சுக்கங்க.ஏன்னா நான் ரொம்ப பொல்லாதவ…” என்று கண்களை உருட்டினாள் ரம்யா.

யாப்பா என்னா பேச்சு பேசுறா….முதல்ல பார்த்தப்ப இந்த பூனையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிருந்தா….இப்ப என்னடான்னா இந்த பூனை பீரே குடிக்கும் போல….” என்று மனதில் அருள் புலம்பிக் கொண்டிருக்க…வெளியே சென்ற ரம்யா மறுபடியும் திரும்பி வந்து….

“இங்க பாருங்க மமாமமா…..சுதா அத்தை உங்களை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு என் கிட்ட சத்தியம் வேற வாங்கிகிட்டாங்க.நானும் போனா போகுதுன்னு உங்களுக்கு வாழ்க்கை குடுக்க சம்மதிச்சுட்டேன். அதனால இப்ப நீங்க என்ன செய்யனும்ன்னா…. காலத்தைக் கடத்தாம என் கழுத்து தாலி கட்டுற வழியப் பாருங்க….நான் ரொம்ப நாள் எல்லாம் இப்படி பொறுமையா இருக்க மாட்டேன்….ஜாக்கரதை” என்று விரல் நீட்டி சொல்லிவிட்டு போக…அருளுக்கும் அப்பொழுதுதான் அந்த விஷயமும் நியாபகம் வர அப்படியே சமைந்து அமர்ந்தான்.

முகவரி 40:

அருளின் முன் அமைதியாக நின்றிருந்தான் சூர்யா.அருளும் சூர்யாவிடம் எதுவும் பேசாமல் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தான்.

முதன் முறையாக இருவரும் சண்டை இடாமல் அமைதியாய் நிற்கும் தருணம்.”சுதா அம்மா இறந்ததைப் பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்டே நீ கேட்கலையே அருள்…” என்றான் சூர்யா.

“கேட்க என்ன இருக்கு..?” என்றான் அருள்..

அவனை வியப்பாய் பார்த்த சூர்யா…”உனக்கு என் மேல கோபம் இல்லையா…?” என்றான் சூர்யா.

அருள்…”எனக்கு கோபமோ ,சந்தேகமோ எதுவும் கிடையாது.நான் ஊருக்கு கிளம்பும் போதே அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம தான் இருந்தது.இருந்தாலும் போக வேண்டிய கட்டாயம்.அதான் போனேன்.உன்னை எனக்கு பிடிக்காம இருக்கலாம்.ஆனா…., தானா நடந்த விபத்துக்கு உன்னை எப்படி நான் பொறுப்பாக்க முடியும்.அவங்க விதி அவ்வளவுதான்…”  என்றான்.

பரவாயில்லை இந்த அளவுக்கு யோசித்திருக்கிறானே என்று மனதில் நினைத்த சூர்யா….” இருந்தாலும் எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்துகிட்டே இருக்கு அருள்.அன்னைக்கு நடந்த விபத்துக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்….” என்றான் சூர்யா.

“இதுல குற்ற உணர்ச்சிக்கு ஒன்னுமேயில்லை.நடந்தது விபத்து அவ்வளவுதான் சூர்யா.இனி அதைப் பத்தி பேச வேண்டாம்..” என்றான்.

முதன் முறையாக தன்னை சூர்யா என்று அழைத்திருக்கிறான் என்று தனக்குள் நினைத்த சூர்யாரம்யாவை திருமணம் செய்து கொள்வது பற்றி உன்னோட முடிவு என்ன அருள்…?” என்றான் சூர்யா.

இதுல முடிவு பண்ண என்ன இருக்கு…?என்னால அது முடியாது.இன்னொரு கல்யாணத்தைப் பத்தி என்னால நினைக்கக் கூட முடியாது…?” என்றான் அருள் வெறுமையாய்.

அப்பறம் எதுக்காக சுதா அம்மாவுக்கு வாக்கு குடுத்த..?”என்ற சூர்யாவின் கேள்வியில் விக்கித்து நின்றான் அருள்.

அது அம்மாவோட கடைசி ஆசையை கெடுக்க வேண்டாமேன்னு தான் அப்படி சொன்னேன்…” என்று அருள் இழுத்து சொல்ல….

இப்படியே கல்யாணம் பண்ணாம எத்தனை நாள் இருக்கிறதா உத்தேசம்.ரம்யாவைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா….தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பொண்ணு உன் மேல ஆசைய வளர்த்துகிடுச்சு….இப்ப போய் நீ இப்படி சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்…

அம்மாவோட இறுதி நேரத்துல அவங்க மன திருப்திக்காக ரம்யாவை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றதும்…. இப்ப மாட்டேன்னு சொல்றதும்…ரம்யாவோட மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தும்ன்னு நீ நினைச்சுப் பார்த்தியா அருள்….” என்றான் சூர்யா.

சூர்யா சொல்வதும நியாயம் தானே…ரம்யாவின் மனதைக் காயப்படுத்த எனக்கென்ன உரிமை இருக்கு….என்று மனதில் நினைத்த அருள்….நாளைக்கு கண்டிப்பா என் முடிவை சொல்லிடுறேன்…என்றான்.

இருவர் பேசுவதையும், அருளின் வாயிலிருந்து வரும்  வார்த்தைக்காகவும் காத்திருந்த ரம்யா…..அவன் இவ்வாறு சொல்லவும் நொந்து போனாள்.”இவன் நாளை வரை யோசிச்சா…தேவையில்லாததை எல்லாம் யோசிப்பானே…!” என்று நினைத்தவள்….நேராய் தீபாவிடம் சென்றாள்.

இங்க பார் தீபா ….உங்க அண்ணன் பிடி குடுத்து பேச மாட்டேங்கிறான்.நீ என்ன செய்வியோ ஏது செய்விவோ எனக்கு தெரியாது……உங்க அண்ணன் இன்னைக்கே எனக்கு ஒரு பதிலை சொல்லணும்.அப்படி இல்லை அண்ணனும் தங்கச்சியும் என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டியது வரும்…”  என்று தீபாவைப் பார்த்து மிரட்டினாள் ரம்யா.

வேண்டாம் சின்ன அண்ணி இந்த முகத்தையே பார்க்க முடியலை….கர்ண கொடூரமா இருக்கு….” என்று பயந்தவாறு முகத்தை வைத்துக் கொண்டு தீபா சொல்ல…

நக்கலு…..!இருக்குடி உனக்கு….,அண்ணி கொடுமைன்னா என்னான்னு உனக்கு காட்டாம விட மாட்டாள் இந்த ரம்யா…”என்று வீர வசனம் பேசினாள் ரம்யா.

அதுக்கு முதல்ல நீ அவளுக்கு அண்ணியாகனும்…,மத்ததெல்லாம் அப்பறம்…” என்றபடி வந்தாள் நிலா.

வாடி ராசாத்தி…..உனக்கு சூர்யா அத்தான் கூட ரொமான்ஸ் படம் ஓட்ட தான் நேரம் சரியா இருக்கு….!எங்களையெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுமா…?” என்று அங்கலாய்த்தாள் ரம்யா.

நிலா அவளைப் பார்த்து முறைக்க….அப்பொழுது அங்கு வந்த சூர்யா”இப்ப எதுக்கு உண்மைய சொன்னா முறைக்கிற நிலா….ஆமாம்ன்னு சொல்லி ஜகா வாங்க வேண்டியது தானே…” என்று அவளை தோளோடு அணைத்தபடி சொல்ல…

போங்கப்பாபோங்க இங்க இருந்து ….எதுவாஇருந்தாலும் உங்க ரூம்க்குள்ள போய்டுங்க…அதுதான் உங்களுக்கும் நல்லது…. மக்களுக்கும் நல்லது….” என்று கடுப்புடன் கூறினாள் ரம்யா.

ரம்யாவின் முகம் போன போக்கைப் பார்த்து சூர்யா வாய் விட்டு சிரித்தான்.இவர்களின் உரையாடல்களை வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் அருள்.அவனின் முகத்தைப் பார்த்த ரம்யா….

வாங்க மாமா…வந்து இவங்களை எல்லாம் என்னன்னு கேளுங்க…?எல்லாரும் சேர்ந்து என்னை ஓட்டுறாங்க…” என்று அவனிடம் புகார் உரை வாசித்தாள் ரம்யா.

ரம்யா உரிமையாய் தன் கைக்குள் அவளின் கைகளை கோர்த்துக் கொண்ட விதம் அருளுக்கு வியப்பை அளித்தது.எப்படி..? இவள் இப்படி இருக்கிறாள்….இதை எல்லாம் தெரிந்து செய்கிறாளா…? அல்லது யாதார்த்தமாக செய்கிறாளா….? என்று ரம்யாவின் முகத்தை உற்றுப் பார்த்தான் அருள்.

உன் பருப்பு என் கிட்ட வேகாது மகனே…என்று மனதில் நினைத்த ரம்யா…”என்ன மாமா…ஏன் அப்படிப் பார்க்குறிங்க…?” என்று ஒன்றும் அறியாதவளைப் போல் கண்களை படபடவென்று சிமிட்ட…..நிலாவும் தீபாவும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.

என்ன இது கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம….வயசுப் பையன் கைய பிடிச்சுகிட்டு நிக்குற….?” என்று அங்கு வந்த ஜக்கு தன்னுடைய புராணத்தை தொடங்க….

ஜக்குவைப் பார்த்து முறைத்த ரம்யா…..”முதல்ல இந்த கிளவிய போட்டுத் தள்ளனும்…..பேசாம தூங்கும போது தலையில் கல்லைத் தூக்கி போட்டுறலாமா…” என்று  மனதிற்குள் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க….அவளை மிரண்ட பார்வை பார்த்தான் அருள்.

“இப்ப எதுக்கு இப்படி பயந்து பார்க்கிறான் பய புள்ள….” என்று ரம்யா யோசிக்க….அவளது எண்ணம் புரிந்த நிலா….”அதுவா ரம்யா…நீ பாட்டிய போட்டு தள்ளுறது எப்படின்னு..? மனசுக்குள்ள பேசுறதா நினைச்சுகிட்டு வாய் விட்டு சொல்லிட்ட….” என்றாள் ஏற்ற இறக்கமாய்.

ஹோ அதுதான் மேட்டரா…..இது நல்லா இருக்கே….” என்று நினைத்தவள்…அருளைப் பரர்த்து”கொலையும் செய்வாள் பத்தினி…அது கல்யாணமாகியிருந்தாலும் சரி….கல்யாணம் பண்ணாம டேக்கா குடுத்தாலும் சரி…” என்று ஒரு தோளை ஒரு வெட்டு வெட்டி விட்டு சென்றாள்.அருளின் அருகில் சென்ற தீபா…..”இன்னமும் நீ நடந்ததையே தான் யோசிச்சுகிட்டு இருக்கியா அண்ணா….” என்றாள்.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை தீபு” என்றஅருள் நிலாவை சங்கடமாய் பார்க்க….

நீ நடந்ததை மறந்திட்ட… அதாவது நிலா அண்ணிய மறந்திட்ட…. உன் மனதில் பழைய நினைவுகள் எதுவும் இல்லைன்னு நீ சொன்னது உண்மைன்னா…நிலா அண்ணியும் அவங்க வாழ்க்கைய  சந்தோஷமாவாழணும்ன்னு  நீ நினைச்சா, ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கோ…அப்படி இல்லைன்னா நீ இன்னும் மாறலைன்னு நாங்க நினைத்துக் கொள்கிறோம்…” என்று ஒரே போடாய் போட்டாள் தீபா.

“என்னோட விருப்பமும் அது தான் அருள். நடந்த எல்லாவற்றுக்கும் நானும் ஒரு காரணம்….அதை நானே சரி செய்யனும்ன்னு நினைக்கிறேன்.நீங்க ரம்யாவை திருமணம் செய்துகிட்டா உங்க வாழ்க்கையும் நல்லாயிருக்கும்.அவ வாழ்க்கையும் நல்லா இருக்கும்.உங்க அம்மா ஆசையும் நிறைவேறும்.எல்லாரும் சந்தோஷப் படுவாங்க.இப்ப எல்லாருடையைசந்தோசம்,நிம்மதி எல்லாமே உங்க கைல தான் இருக்கு.நீங்க எடுக்க போற முடிவுல தான் இருக்கு….” என்றாள் நிலா.

ரம்யா ஏக்கமுமாய்….மற்றவர்கள் எதிர்பார்ப்புமாய்அருளின் முகத்தைப் பார்க்க….அனைவரையும் ஒரு முறை பார்த்தவனின் கண்கள்….ஒரு இடத்தில் நிலை பெற்றது.அது ரம்யாவிடம் தான்.அவளது முகத்தில் இருந்து எதோ ஒரு உணர்வு அவனை சம்மதம் என்னும் அர்த்தத்தில் தலை ஆட்ட செய்தது.

எனக்கு சம்மதம்…” என்று வாய் வார்த்தையாகவும் வர…..அங்கிருந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோசம்.அதுவரை அமைதியாக இருந்த ரம்யா…”ஸ்ஸ்சப்பா…..இதை இவன் வாயிலிருந்து வர வைக்கவே இத்தனை பாடா…. இன்னும் எவ்வளவோ இருக்கே…சரி அதையும் பார்ப்போம்..” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள் ரம்யா.

கால தேவன் யாரையும் சார்ந்திருக்காமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.காலம் தான் ஒரு மனிதனுக்கு சிறந்த மருந்து என்பது அருளின் விஷயத்தில் உண்மையாகிப் போனது.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில்……

அந்த மிகப் பெரிய கல்யாண மண்டபமே மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.அருள் மணமகனாய் மேடையில் அமர்ந்திருக்க….. மணமகளாக அலங்கரிக்கப்பட்ட ரம்யா பெண்கள் புடை சூழ மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள்.

இத்தனை நாள் தன்னுடைய வேண்டுதலுக்கும் ஆசைக்கும் இன்று கடவுள் தனக்கு வரமளிக்க போவதாக தோன்றியது ரம்யாவிற்கு.

இரண்டு மாத இடைவெளி அருளை முழுதாக மாற்றவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு மாறியிருந்தான்.அதில் முழு பங்கும் சூர்யாவை சார்ந்திருந்தது.அனைத்து பொறுப்புகளையும் அருளின் தலைமையில் விட்டு அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினான்.அவனுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் முரளி அவனுக்கு எடுத்து சொல்ல….சுதாவின் இடத்தில் இருந்து மகேஸ்வரி அவனை தாயாய் தாங்க……அந்த பிடிவாத குழந்தையும் சற்று மனம் இறங்கியது அவர்களின் அன்பைப் பார்த்து.

அவனின் மாற்றம் இப்பொழுது திருமணம் வரை வந்திருக்கிறது. ரம்யா மீது அவனுக்கு காதல் வரவில்லை என்றாலும் அத்தை மகள் என்ற அன்பு வரத்தான் செய்தது.அவளுடன் சேர்ந்து வாழ யோசித்தாலும் அவளின் வால் தனம் பிடிக்கத்தான் செய்தது. அவளுடன் சரசமாய் பேச முடியாவிட்டாலும் அவளைப் பார்க்கும் போது சிறிதாய் சாமரம் வீசதான் செய்தது.

“இன்று மணமேடையில் தன்னருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த அருளுக்கு…..திருமணத்திற்கு பிறகு அவளை நேசிக்க கற்றுக் “கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

நல்ல நேரம் நெருங்க…..ஐயர் மந்திரம் ஓத….கோடான கோடி தேவர்கள் வாழ்த்த…”நீயும் நானும் இனி கணவன் மனைவிஅன்பால் இனி இணைந்திருப்போம்…” என்னும் உறுதி மொழியுடன் ரம்யாவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான் அருள்.

நாத்தனார் முடிச்சை தீபா போட….பிரபு-மாலாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பூக்க……மகேஸ்வரியோ இந்த திருமணம் நல்ல படியாக முடிந்ததில் மன திருப்தியுடன் இருக்க….முரளிக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. என்னதான் சுதா தவறு செய்திருந்தாலும்….பெற்ற மகன் திருமணத்தை பார்க்காமல் அவர் காலனிடம் சென்றது அனைவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அருளுக்கும் மனதில் அந்த வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.பேரனின் திருமணத்தை கண்டுவிட்ட சந்தோஷத்தில் இருந்தார் ஜக்கு.

சூர்யாவிற்கும் ஜீவாவிற்கும் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை நெட்டித் தள்ளியது.இருவரும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக் கொண்டனர்.

அருளின் வீடும் இல்லாமல், சூர்யாவின் வீடும் இல்லாமல் புதிதாய் ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருந்தான் சூர்யா.பிளானிங் சூர்யா போடஅருளின் கைவண்ணத்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது.

அருளுக்கு திருமணம் முடிந்த கையோடு அனைவரும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தனர்.புதிய வீட்டில் ரம்யா விளக்கேற்றினாள்.அவர்களின் முதலிரவுக்கான வேலைகளை நிலாவும் தீபாவும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மச்சான்…..இன்னைக்கு அருளுக்கு மட்டும் தான் ஏற்படா…?” என்றான் ஜீவா சூர்யாவிடம்.

சூர்யா ஜீவாவை விநோதமாய் பார்க்க….”இல்லை…உன் தங்கச்சி வரவர என்னை கண்டுக்கறதே கிடையாது அதான்” என்று இழுக்க…

“ஐயோ ஐயோ…” என்று தலையில் அடித்த சூர்யா…”டேய் மானங்கெட்ட மச்சானே….கொஞ்சம் கூட மூளையே இல்லையாடா உனக்கு….நான் அவளுக்கு அண்ணன்டா….பேசுறதை கொஞ்சம் பார்த்து பேசுடா பக்கி…” என்று பல்லைக் கடித்தான் சூர்யா.

“ஹி…ஹி…உனக்கென்ன மச்சான்…நீ கிடச்ச கேப்ல எல்லாம் கெடா வெட்டுன.மண்டபத்துல நான் பார்த்துட்டுதான இருந்தேன்.ஆனா நான் அப்படியா.அடிப்படையிலயே நான் வேற ரொம்ப நல்லவனா….அதான்…” என்று ஜீவா சொல்ல…

“யாரு நீ நல்லவன்…..எல்லாம் என் நேரம் தான்டா…” என்று சூர்யா கடுப்பாக….இவர்களின் உரையாடல் அருளுக்கு சிரிப்பை வரவழைத்தது.மெதுவாய் தீபா இருக்கும் இடம் சென்றவன்…. தீபாவை அமைதியாய் இருக்க சொல்லிவிட்டு….”மாமோய்…..நீங்க எங்க இருக்கீங்க….?” என்று தீபாவின் குரலில் கத்தினான் அருள்.

“செல்லக் குட்டி நான் இங்க இருக்கேன்டா….” என்று ஜீவா ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போல் வர…..அங்கு அருள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க…..தீபா பல்லைக் கடிக்க….பல்பு வாங்கின ஜீவாவோ எதுவும் நடக்காததைப் போல்….”ஹிம்…” என்று தோளைக் குலுக்கி விட்டு சென்றான்.

“பரவாயில்லையே…..மிமிக்கிரி எல்லாம் பண்றான். இவனும் பெரிய வாலா தான் இருப்பான் போல….” என்று நினைத்த சூர்யா….மன நிம்மதியுடன் தனது அறைக்கு சென்றான்.

அறையின் பால்கனியில் அமர்ந்தபடி நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தாள் நிலா.ஒரு வழியாக எல்லா பிரச்சனைகளும் சரியாகி….அருளுக்கும் ரம்யாவிற்கும் திருமணமும் முடிந்து விட்டது.

இந்த இரண்டு மாத காலத்தில் சூர்யாவை வீட்டில் பார்ப்பதே நிலாவிற்கு அரிதாகிப் போன ஒன்று.புதிய ஜுவல்லரி திறப்பதற்காகவும்…அருளின் மாற்றத்திற்காகவும்…அருள்-ரம்யா கல்யாண வேலைகளையும் பார்ப்பதில் சூர்யா பம்பரமாய் சுழன்றான்.

அவன் நிலாவிடம் கேட்டிருந்த கால அவகாசம் அன்றோடு முடிந்த நிலையில் சூர்யாவின் வரவிற்காய் அமர்ந்திருந்தாள் நிலா.எவ்வளவு வேலைப் பளுவாய் இருந்த போதும் கிடைக்கும் நேரங்களை எல்லாம் நிலாவிற்காக ஒதுக்கி விடுவான்.  அவனுடைய காதலை சின்ன சின்ன சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்த தவறியதில்லை. சூர்யாவின் நினைவுகள் நிலாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

“என்ன வக்கீல் மேடம்..? கனவா..?” என்றபடி வந்தான் சூர்யா.

அவள் இல்லை என தலையசைக்க….அவளின் அருகில் வந்து அமர்ந்தான் சூர்யா.”சாரிடா….” என்றான் ஒற்றை சொல்லாய் அவள் கண்களைப் பார்த்தபடி.

“எதுக்கு…?” என்ற அர்த்தத்தில் முகத்தில் தனது புருவங்களை உயர்த்தினாள் நிலா.

“முதல்ல உன்னைப் பார்க்காம…உன் குரலை கேட்டு லவ் பண்ணி….பிறகு பார்த்தும் லவ்வை சொல்ல முடியாம……ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிந்து லவ்வ சொன்னா…. அடுத்து அருள் பிராப்ளம்.இப்படி ஒரே தடங்கல் தான் இல்லையா….ஆனா இப்ப எல்லாமே சால்வ் ஆகிடுச்சு.இனி வரக்  கூடிய நாட்கள் எல்லாமே நமக்கான நாட்கள் தான் நிலா…” என்றான் சூர்யா.

சூர்யாவைப் பார்த்து நிலா வாயில் கை வைத்து சிரிக்க….”இப்ப எதுக்குடி சிரிக்கிற…..?” என்றான் சூர்யா.

நிலா…” இல்லை என் அப்பாஇந்தா மாப்பிள்ளை போட்டோ அப்படின்னு சொல்லி குடுத்த போதே நான் பார்த்திருக்கணும். இல்லை உங்க கிட்ட சொன்ன போது நீங்களாவது பொண்ணு யாருன்னு பார்த்திருக்கணும்…. இதையெல்லாம் விட்டுட்டு நானும் பார்க்காம நீங்களும் பார்க்காம இப்படி தலைய சுத்தி மூக்கை தொடுற கதையா ஆகிடுச்சே…. அதை நினைச்சேன் சிரிச்சேன்….” என்றாள் நிலா.

அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்த சூர்யா….”உண்மைதான் நிலா…நமக்கு உதய் சாரே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.ஆனா நாம ரெண்டு பேருமே அதை மிஸ் பண்ணிட்டோம்.உன்னை பெரிய லாயர்   ஆக்கி பார்க்கணும்ன்னு என் கிட்ட அடிக்கடி சொல்லுவார்.ஆனா அப்ப எல்லாம் அந்த பொண்ணு நீ தான்னு எனக்கு தெரியாது.

இப்ப அவர் நம்ம கூட இல்லைன்னாலும் அவருடைய ஆசைய நீ நிறைவேத்தனும்.நீ மறுபடியும் உன் பிராக்டிசை ஆரம்பிக்கணும்.    உங்கப்பா மாதிரி நீயும் பெரிய லாயர் ஆகணும்.என்னோட விருப்பமும் அதுதான்….” என்றான் அவளை தன் நெஞ்சில் சாய்த்தபடி.

உதயகுமாரை பற்றி பேசவும் நிலாவின் கண்களில் கண்ணீர் அருவியாய் வர….தன் நெஞ்சில் ஈரம் உணர்ந்தவன் நிலாவின் முகத்தை நிமிர்த்தினான்.அவளது கண்ணீரை தன் கரங்களால் மெதுவாக துடைத்தவன்…..உனக்கு இனி எல்லாமே நான் தான் என்பதை உணர்த்தும் விதமாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அவனின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்தாள்.”ஏன் சூர்யா உங்களுக்கு நடந்த அந்த விபத்துக்கும்  ருத்ரத்துக்கும் ஏன் சம்பந்தம் இருக்க கூடாது….?” என்றாள்.

“பரவாயில்லையே….என் பொண்டாட்டி மறுபடியும்லாயர் ஆகணும்ன்னு சொன்னதும் சொன்னேன் அதை உடனே செய்றாளே….” என்று இழுத்தவன்….”இந்த சந்தேகம் ஆரம்பத்துலையே எனக்கும் வந்தது.ஆனா ருத்ரம் இதில் தலையிடலை.நடந்தது உண்மையாலுமே ஒரு விபத்து தான்.லாரி டிரைவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருந்திருக்கான். போலீசும்  தீர விசாரிச்சுட்டாங்க….. லாரி டிரைவரைக் கூட அரெஸ்ட்  பண்ணிட்டாங்க….” என்றான்.

“ஓ….” என்பதைப் போல் நிலா பார்க்க….

“அப்பறம் நிலா….மாலா அத்தைக்கு பேச்சு வரக் கூடிய சாத்தியம் இருக்கான்னு ஒரு பேமஸ் டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணேன்.ஆனா அவர் அவங்களை நேரில் அழைச்சுட்டு வர சொல்லி இருக்கார். அடுத்த வாரம் அப்பாயின்மென்ட் குடுத்திருக்கார்.கண்டிப்பா வர ரிசல்ட் பாசிட்டிவா வரணும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிப்போம். அப்படி சாத்தியம் இருந்தா….எவ்வளவு செலவானாலும் உடனே ட்ரீட்மென்ட்ட ஆரம்பிச்சுடணும்…” என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….

நிலா அவனை இறுக்கி அணைத்து…அவன் முகம் எங்கும் முத்தமிட ஆரம்பித்தாள்.”ஏய் என்னாச்சு……” என்று சூர்யா அவளை நிறுத்த… “தேங்க்ஸ் சூர்யா….நானே இதை பத்தி உங்க கிட்ட பேசணும்ன்னு நினைச்சிருந்தேன்… ஆனா நீங்களாவே எல்லாம் பண்ணிட்டிங்க…. தேங்க்ஸ்…” என்று கண்கலங்கியபடி சொல்ல….

“என்ன இன்னைக்கும் இப்படியே பொழுதை ஒட்டிடலாம்ன்னு நினைப்பா…..நெவர்….விட மாட்டான் இந்த சூர்யா…..சூர்யா ஸ்டார்ட் த மியூசிக்…” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்…. நிலாவை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

நிலா வெட்கப்பட்டவளாய் அவனின் தோள் வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள…..அது சூர்யாவிற்கு மேலும் ஆசையைத் தூண்ட…..நிலாவை கைகளில் ஏந்தியபடி இல்லறம் என்னும்  நல்லறத்திற்குள் அழைத்து சென்றான்.அந்த இரவு அவர்களுக்கு விடியா இரவாகிப் போனது.

தனது காத்திருத்தலுக்கான தேடலை…..தனது காதலுக்கான தேடலை…… தனது நேசத்திற்கான தேடலை…..காமத்தை விடுத்து உண்மையான காதலுடன்நிலாவிடம் தேடத் தொடங்கினான் சூர்யா.

ஆனால் அங்கு அருளின் நிலையோ அந்தோ பரிதாபமாய் இருந்தது. ரம்யா வந்தவுடன் அவளிடம் தன மனதில் உள்ளதை பேசி விட வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.

சிறிது நேரத்தில் ரம்யாவும் உள்ளே வந்தாள்.உள்ளே வந்து கதவை அடைத்தவள் அருளின் அருகில் வந்து நிற்க…”ரம்யா…” என்று ஆரம்பிக்க….

“ஸ்டாப்….நிறுத்துங்க….இப்ப நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.என் மனசு இன்னும் முழுசா மாறலை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அது வரைக்கும்ஊருக்கு தான் நாம புருஷன் பொண்டாட்டி.ஆனா இங்க அப்படி எல்லாம் இல்லை…. அதானே, இப்ப இதைத்தானே சொல்ல வந்திங்க…..என்றாள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி.

அருள் ஆச்சர்யமாய் கண்களை விரித்து ரம்யாவை பார்க்க…. “இதென்ன புதுசா….எத்தனை படத்துல…எத்தனை நாவல்ல படிச்சுருக்கேன்….நீங்க வேற…வேற…வேற புதுசா ஏதாவாவது டிரை பண்ணுங்க…..” என்றாள் நக்கலாய்.

“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை.எனக்கு டைம் வேணும்…” என்றான் அருள் மொட்டையாக.

“ஐயோ என்ன மாமா நீங்க…இதுக்காக நீங்க என்கிட்டே இவ்வளவு தூரம் சொல்லனுமா….எனக்கு உங்க மனைவியானதே போதும்.நீங்க எவ்வளவு டைம் வேணும்ன்னாலும் எடுத்துக்கோங்க.நான் அதுவரைக்கும் காத்திருப்பேன்….” என்று உருக சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அமைதியாகநிற்க..,அருள் அவளை வியப்பாய் பார்த்தான்.

பிறகு மெல்ல சிரித்த ரம்யா….”சத்தியமா இப்படி எல்லாம் சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதிங்க மாமா.நான் பெரிய தியாகி எல்லாம் கிடையாது.எனக்கு சீக்கிரம் அம்மா ஆகணும்.எங்க அம்மா ,அப்பா… சீக்கிரம் தாத்தா பாட்டி ஆகணும்.அது முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் நடந்தா உங்களுக்கும் நல்லது…எனக்கும் நல்லது.ஏன்னா நான் எப்பவும் இப்படி நல்லவிதமாவே பேசிட்டு இருக்க மாட்டேன் சரியா….” என்று கண்களை உருட்டி மிரட்டினாள்.

அடிப்பாவி ஏதோ ரவுடி ரேஞ்சுக்கு பேசுறா….. என்று மனதில்  நினைத்தவனின் தலை அவனையும் அறியாமல் ரம்யாவின் முன் சரி என்பதைப் போல் ஆடியது.

“அப்படி வாடா வழிக்கு….” என்று நினைத்த ரம்யா….”சரி சரி….எனக்கு ஒரே அலுப்பா இருக்கு…நான் தூங்கணும்.ஒருவேளை நான் அசந்து தூங்கிட்டா….. காலைல என்னை சீக்கிரம் எழுப்பி விட்டுடணும் சரியா…..இல்லை இந்த மாலா என்னை முறைச்சே கொன்னுடும்….” என்று வரிசையாக  கணவனுக்கு கட்டளைகளை பிறப்பித்துவிட்டு……இயல்பாய் அவன்    அருகில் படுத்துக் கொண்டாள்.

“அருள் ரம்யாவை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே இருந்தான்.எப்படி இவள் எல்லாவற்றையும் இப்படி இயல்பாய் ஏற்றுக் கொள்கிறாள்.என்ன தான் வாய் வழியாக மிரட்டல் விடுத்தாலும்…அவளின் முகமோ குழந்தைத்தனம் மாறாமல் இருந்தது.இனி இவள் என் மனைவி…..எனக்கு வாழ்வின் முழுமைக்கும் இவள் தான்….” என்று ரம்யாவைப் பார்த்து யோசித்துக் கொண்டே….அவளது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவனாய்….அவளைப் பற்றிய சிந்தனைகளிலேயே அந்த இரவை ஓட்டினான் அருள்.

 

அருள்-ரம்யாவின் வாழ்வும் தங்கள் பயணத்தின் முதல் படியை தொடங்கியிருந்தது.கண்டிப்பாய் தங்கள் வாழ்வும் நன்றாய் இருக்கும்      என்று மனமார நம்பினான் அருள்.அதற்கான மனப் பக்குவமும் அவனிடம் வந்திருந்தது.

அங்கே ஜீவாவின் அறையில்……….

“தீபு….தீபு குட்டி…..வரவர நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்கிற…” என்று ஜீவா தீபாவை கெஞ்சிக் கொண்டிருக்க….தீபாவோ முறுக்கிக்     கொண்டவளாய் அமைதியாய் படுத்திருந்தாள்.

“டார்லிங்…..என்னாச்சு…? ஏண்டா டல்லா இருக்க…?” என்றான் ஜீவா.

“அது வந்து….வந்து….” என்று தீபா இழுக்க….”ம்ம்..வந்ததுக்கப்பறம் சொல்லு டார்லிங்…” என்று மேலும் ஜீவா ஊக்கம் கொடுத்தான்.

“உங்களை நான் படுத்துன பாடு பத்தாதுன்னு இன்னொருத்தரும் உங்களை பின்னி பெடலெடுக்க வரப் போறாங்க….” என்றாள் பீடிகையாய்.

“அடிப்பாவி அடியாள் செட் பண்ணியிருக்கியா….? ஏற்கனவே உன்னையும் உன் பாசாக்கார அண்ணனுங்களையும் சமாளிக்கிறதுக்குள்ள நான் படுற  பாடு எனக்கு தான் தெரியும்…இதுல புதுசா வேற யாரு…?” என்று    அலறினான் ஜீவா.

“ஐயோ..ஐயோ…” என்று தலையில் அடித்த தீபா…..”நீங்க அப்பா ஆகப் போறீங்க….அதைத்தான் அப்படி சொன்னேன்…” என்றாள் பல்லைக்      கடித்தபடி.

ஜீவாவால் ஒரு நிமிடம் நம்ப முடியாமல்…..காதுகளை தேய்க்க…. “நம்புங்க….நீங்க கேட்டது உண்மை.நீங்க அப்பா ஆகப் போறீங்க….” என்றாள் தீபா அவனின் காதிற்குள்.

சடனாக ஜீவாவின் கண்கள் கலங்க….”ஹேய் நான் அப்பா ஆகப்    போறேன்….” என்று கண்களில் கண்ணீருடன் கத்தியவன்….தீபாவை அலாக்காய் தூக்கி சுத்த…..”ஐயோ விடுங்க…..ப்ளீஸ்..” என்று தீபா அவனின் கைகளில் இருந்து இறங்கினாள்.

“தேங்க்ஸ்….தீபு…..நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா…?      இந்த அனாதையும் அப்பா ஆகப் போறேன்.என்னையும் அப்பான்னு    அழைக்க ஒரு ஜீவன் வரப் போகுது….இதெல்லாம் உன்னால தாண்டா…….” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான் ஜீவா.தீபாவும்         மறுப்பின்றி அவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்.

மூன்று வருடங்களுக்கு பிறகு…………..

கோர்ட் வாசலில் நின்றிருந்தான் சூர்யா.”என்ன இன்னும் நிலாவைக் காணோம்….டைம் வேற ஆகுது…..” என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க….சரியாக வந்து சேர்ந்தாள் நிலா.

“என்னாச்சு….?” என்று சூர்யா கண்களால் கேட்க….”வெற்றி…” என்பதைப்   போல் நிலாவும் கண்களை அமர்த்தினாள்.

சூர்யாவின் ஆசைப்படியும்…..உதய குமாரின் கனவையும் நனவாக்கியிருந்தாள் நிலா.இன்று பேர் சொல்ல கூடிய லாயர்களில்   அவளும் ஒருத்தி.இது இவ்வளவு சீக்கிரம் சாத்தியமானதற்கு காரணம்   சூர்யா மட்டுமே.தன் மனைவியின் நிழலாய் இருந்து அவளை வழி நடத்தினான்.

இன்று அவர்களின் நகைக்கடையின் இரண்டாவது கிளையின் கடை       திறப்பு விழா.அதற்காகத்தான் நிலாவிற்காக காத்திருந்தான் சூர்யா.  குடும்பமே அங்கு இருக்க…..முக்கியமான தவிர்க்க முடியாத கேஸ்  என்பதால் நிலா கோர்ட்க்கு வந்திருந்தாள்.சூர்யா நிலாவை அழைத்துக் கொண்டு போக…..அங்கு அனைவரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.

NRT ஜுவல்லர்ஸ் என்னும் பெயர் தாங்கிய பலகை மினுமினுக்க…,அந்த இரண்டடுக்கு மாடி, நகைகளின்ஜொலி ஜொலிப்பில் அழகாய்       காணப்பட்டது.

“சீக்கிரம் வாடி….” என்றபடி நிலாவை ரம்யா இழுத்துக் கொண்டு போக…..சூர்யாவை திரும்பி பார்த்தபடியே சென்றாள் நிலா.

“ம்ம்…மச்சான் உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகப் போகுது.   ஆனா இன்னும் உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போகுது.உனக்கு எங்கையோ மச்சம் இருக்குடா…” என்றான் ஜீவா.

ஜீவாவை முறைத்த சூர்யா…..”உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பார்ப்போம் வா….” என்றபடி அழைத்துக் கொண்டு போக….அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாய் கவனித்துக் கொண்டிருந்தான் அருள்.

இந்த மூன்று வருடங்களில் அருளிடம் நல்ல மாற்றம் வந்திருந்தது.தொழிலையும் சிறப்பாக நிர்வகிக்க பழகியிருந்தான்.

“ஏங்க…” என்றபடி ரம்யா வர…”ஐயோ ரம்ஸ்…முதல்ல இந்த சேர்ல உட்கார்.பார் எப்படி மூச்சு வாங்குதுன்னு…” என்று அவளை அணைவாய் பிடித்து உட்கார வைத்தான் அருள்.ரம்யா இப்பொழுது நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள்.அவர்களின் நெருக்கத்தைப் பார்த்த ஜீவா…

“பாரு மச்சான்…உன் தம்பி எனக்கு கல்யாணம் பிடிக்கலை….     வேண்டாம்ன்னு சொன்னவன் தான் இன்னைக்கு உனக்கு முதல்ல     அப்பா ஆகப் போறான்.பொண்டாட்டியா என்னா தாங்கு தாங்குறான்.இனி அப்பாவியாய் இருக்குறவங்களை நம்பவே கூடாதுடா சாமி.ஆனா ஒன்னுடா….அண்ணனும் தம்பியும் எதுல ஒற்றுமையா இருக்கிங்களோ இல்லையோ பொண்டாட்டிய தாங்குறதுல உங்களை மிஞ்ச ஆள் இல்லைடா….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே….

“உங்களை எங்க எல்லாம் தேடுறது….இந்தாங்க இவனைப் பிடிங்க…இவன் சேட்டையை என்னால தாங்கவே முடியலை…” என்று தனது இரண்டு    வயது மகன் அம்பிரீஷ்வரை ஜீவாவிடம் குடுத்து விட்டு சென்றாள் தீபா.

“பிரபலம் ஒருவர் வந்து கடையை திறந்து வைக்க….”அவர்களின் இரண்டாவது கிளையும் அன்றிலிருந்து செயல்பட ஆரம்பித்தது.

சூர்யா தங்கள் பரம்பரைத் தொழிலை விடாமல் அதையும் நகைக்    கடையாக திறந்ததில் ஜக்குவிற்கு அவன் மீதான கோபத்தை சற்று குறைத்தது.ஆனால் முழுமையாக அவரின் குணத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

அனைவரும் வீட்டிற்கு கிளம்பும் சமயத்தில் மயங்கி விழுந்தாள் நிலா.”நிலா…என்னாச்சு….?” என்று சூர்யா அவளைத் தாங்கிக் கொண்டு பதற….”அண்ணி….” “நிலா…” என்று ரம்யாவும் தீபாவும் மாறி மாறி அழைக்க….நிலா அப்படியே இருந்தாள்.

“தள்ளுங்கடி அங்கிட்டு…” என்று வந்த ஜக்கு….அவளின் நாடி பிடித்து பார்க்க….”உன் பொண்டாட்டி முழுகாம இருக்கா….” இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா…என்றார் ஜக்கு.

விஷயத்தை கேட்ட சூர்யாவிற்கு தன்னுடைய மகிழ்ச்சியை எப்படி பிரதிபலிப்பது என்றே தெரியவில்லை.அந்த உணர்வை அவனால்    வெளியில் சொல்லவும் முடியவில்லை.கண்விழித்த நிலா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.தன்னும் ஒரு ஜீவன் உதித்திருக்கிறது         என்ற உணர்வே அவளை அப்படியே மிதக்க செய்தது.

அவர்களை விடுத்து அனைவரும் செல்ல….நிலாவை அழைத்துக்         கொண்டு நேராய் கடற்கரைக்கு  வீட்டிற்கு அழைத்துசென்றான் சூர்யா.

“பொங்கி வரும் அலைகளும்,நீல வண்ண கடலும்…கண்ணுக்கு விருந்தாக…..அதைப் பார்த்துக் கொண்டிருந்தவவளை “ஐ லவ் யூ சோ மச் நிலா….” என்றபடி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் சூர்யா” .

“ஐ லவ் யூ சூர்யா… எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா…?ரொம்ப சந்தோஷமா உணர்றேன்.இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்….” என்று நிலா உணர்ச்சி வசப்பட்டு பேச…அவளின் வாயை தனது கையை வைத்து மூடினான் சூர்யா.

நிலாவின் முன்னேற்றத்திற்காக சூர்யா தான் குழந்தை பிறப்பைப் தள்ளிப் போட்டிருந்தான்.ஆனால் இப்பொழுது அனைத்தும் அவனுக்கு கிடைத்து விட்டது.அவர்களின் அன்புக்கு சான்றாய் ஒரு குழந்தையும் வரப்       போகிறது.

“ஒரு காலத்துல எனக்கு நான் ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்காதுன்னு விரக்தியா பேசியிருக்கேன்…ஆனா இப்போ எனக்கு எல்லாமே கிடச்சுடுச்சு நிலா.அதுக்கு நீதான் காரணம்.தேங்க்ஸ்டி…” என்று அவளின் இதழில் முத்தமிட்டவன் அவளை தன்னில் சாய்த்துக் கொண்டான்.

“இல்லை சூர்யா என்னோட இந்த வளர்ச்சிக்கும்….இப்ப நான் இருக்கிற     இந்த நிலைக்கும் நீங்க தான் காரணம்.உங்க தூய்மையான காதல்,அன்பு இதெல்லாம் தான் காரணம்.என்னை எனக்கே புரியவச்சு என்னை வழிப்படுத்தியதும் நீங்கதான்.என் மனதில் நிறைந்திருப்பதும் நீங்க தான்….” என்று நிலா உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்க…

“சரி…சரி…. உங்க ரெண்டு பேருக்கும்…..ஒருத்தர் மாத்தி ஒருத்தர்  நீங்களேதான் காரணம்…போதுமா….டயலாக்க மாத்துங்கப்பா…எவ்வளவு     நேரம் சொன்னதையே சொல்லுவிங்க…” என்று ஜீவாவின் குரல் கேட்க…      இருவரும் திகைத்து திரும்பினர்.

அங்கு குடும்பமே நின்றிருக்க…அவர்களைப் பார்த்து வெட்கப்பட்டவளாய் நிலா சூர்யாவின் பின் தன் முகத்தை மறைக்க…”டேய்..நீங்க எப்படா இங்க வந்திங்க…” என்று பல்லைக் கடித்தான் சூர்யா.

“சாரி மச்சான்..இந்த முறை நாங்க பூஜை வேலை கரடியாய் தெரிந்தே    தான் வந்தோம்….இல்லை ரம்யா,…” என்று ஜீவா ராகம் பாட….”ஆமாம் ஆமாம்..” என்று ரம்யாவும் வேதம் ஓதினாள்.

“அண்ணா சும்மா சொல்லக் கூடாது….பெர்பாமென்ஸ்ல பின்ற போ…”       என்று அருள் சொல்ல….அவனின் “அண்ணா..” என்ற வார்த்தையில்     திகைத்து மகிழ்ந்தவன்….அருளை அணைத்துக் கொண்டான்.அவர்களைப் பார்த்து அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தோன்ற…

“ம்க்கும் பெரிய உலகத்துல இல்லாத அண்ணன்…” என்று ஜக்கு நொடிக்க….”பாட்டி நிலாவை காபி போடா சொல்லவா…?” என்று ரம்யா மிரட்ட….கப்சிப் என்று அடங்கினார் ஜக்கு.

அதைப் பார்த்து அனைவரும் தங்களை மறந்து சிரிக்க…..அவர்களின் மகிழ்ச்சியில் அதில் நாமும் இணைந்து விடைபெறுவோம்.

Advertisement