Advertisement

முகவரி 29:

நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்…. சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான்  அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு பெரிய கேள்வியாக இருந்தது. நினைவிலும்,மனதிலும் நிலாவே நிறைந்திருக்க…..வேலை எதுவும் செய்யத் தோன்றாமல் குஷனில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான் சூர்யா.

என்ன மச்சான்…நைட் எல்லாம் தூங்கவே இல்லையா…?இங்க ஆபீஸ்ல வந்து தூங்கிகிட்டு இருக்க….?இதுக்கா அவ்வளவு வேகமா கிளம்பி வந்த…? என்றான் ஜீவா.

டேய் ஜீவா….! நீ எதுக்குடா இப்ப ஆபீஸ் வந்த…?” என்றான் சூர்யா.

நல்லாயிருக்குடா நீ பேசுறது….என்னை வர வேண்டாம்ன்னு சொல்லிட்டு  நீ மட்டும் வந்துட்ட.இருந்தாலும் மனசுக் கேக்கலை.சரின்னு நானும் கிளம்பி வந்துட்டேன்.”ரெண்டு பேரும் சேர்ந்து வொர்க்கை முடிசுட்டு சீக்கிரமா வீட்டுக்கு கிளம்பி போகனும்…இது என் யோசனை இல்லடா நண்பா…உன் அருமை தங்கச்சி தீபாவோடது..”என்றான் ஏற்ற இறக்கங்களுடன்  ஜீவா.

ஜீவாவின் பேச்சு காதிலையே விழாமல் தன் யோசனைக்கு சென்று விட்டான் சூர்யா.அவனின் யோசனையான முகத்தைப் பார்த்த ஜீவாவிற்கு ஏதோ சரியில்லை என்பதைப் போல் தோன்றியது.காலையில் சூர்யா சரியாக சாப்பிடாமல் சென்றதையும் தீபா கவனித்து,ஜீவாவிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். “என்ன நடந்திருக்கும்..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

என்னாச்சு சூர்யா…? உனக்கும் நிலாவுக்கும் இடையில் என்ன பிரச்சனை…? அங்க நிலாவும் எதையோ பறிகுடுத்த மாதிரி இருந்தா…..இங்க  வந்து பார்த்தா நீயும் அப்படித்தான் இருக்க.சொல்லக் கூடாதுன்னு நினைச்சா வேண்டாம் சூர்யா…” என்றான் ஜீவா.

 

சொல்லக் கூடாதுன்னு எல்லாம் ஒன்னுமில்லை ஜீவா.ஆனால் சொல்லக் கூடிய விஷயம் இல்லை.சில பிரச்சனை எல்லாம் வெளிய சொல்ல முடியாது ஜீவா….ஆனா அவ என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறா மச்சான். உடனே புரிஞ்சுக்கலைன்னாலும் பரவாயில்லை….அதுக்கான முயற்சி கூட பண்ணாம…எதுக்கெடுத்தாலும் யோசிக்காம பேசிடுறா….அதுதான் மனசுக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு ஜீவா…” என்றான் கவலை படிந்த முகத்துடன்.

நண்பனின் கவலை ஜீவாவிற்கும் கவலை தந்தது.அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும்…. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்…”சூர்யா…உனக்கு தெரியாதது ஒன்னுமில்லை…..நீ நிலா நிலமையில் இருந்தும் கொஞ்சம் யோசிக்கனும்…பாவம் அந்த பொண்ணு…அது மனசுக்குள்ள என்ன ஓடிகிட்டு இருக்கோ…கண்டிப்பா ஒரு நாள் நிலா உன்ன புரிஞ்சுக்குவா…அவ முயற்சி எடுக்கலைன்னா என்ன…,நீ எடுக்க வை….” என்றான் ஜீவா.

ம்ம்ம்…புரியுது மச்சான்….கண்டிப்பா அவ என்னை புரிஞ்சுப்பா…என் காதல் அதை புரிய வைக்கும்…ஆனா கொஞ்ச நாள் அவளை விட்டு விலகி தான் இருக்கனும்….அது தான் அவளுக்கும் நல்லது…எனக்கும் நல்லது…” என்றான் சூர்யா.

ஜீவா…..”அப்பறம் சூர்யா…. அந்த ருத்ரத்தைப் பத்தி விசாரிச்ச அளவுக்கு அந்த ஆள் தன்னோட நலத்துக்காக எதுவும் செய்ய துனிஞ்சவன்னு சொல்றாங்க…அதனால் இனி நிலாவை எந்த அளவுக்கு பாதுகாப்பா வைக்க முடியுமோ…. அந்த அளவுக்கு நம்ம முன்னெச்சரிக்கையாவும்  இருக்கனும்….” என்றான்.

தெரியும் ஜீவா…..ம்ம்ம்…அதுக்கான எல்லா ஏற்பாடும் எற்கனவே நான் செஞ்சுட்டேன்…பார்ப்போம் அவனா..?இல்ல நானான்னு…” என்றான் சூர்யா.

ஜீவா..”எப்படி மச்சான்…கல்யாணம் முடிஞ்சதில் இருந்து எங்க கூடவே தான் இருந்த….அப்பறம் எப்புடிடா…” என்றான் வாயைப் பிளந்தவாறு.

ம்ம்ம்…அது அப்படித்தான்..” என்ற சூர்யா….திறந்த அவன் வாயை தன் கையால் மூடிவிட்டு சென்றான்.இருந்தாலும் சூர்யாவின் வேகத்தைப் பார்த்து ஜீவாவிற்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அப்பொழுது ஜீவாவின் போன் அடிக்க….அதை எடுத்தவன்…”சொல்லு டார்லிங்….மாமா ஆபீஸ்க்கு வந்து அரைமணி நேரம் தான் ஆகுது…அதுக்குள்ள உனக்கு என் நியாபகம் வந்துட்டதா..மை டியர் பொண்டாட்டி…” என்றான் ஜீவா.

ம்ம்ம்..மண்ணாங்கட்டி…அங்க அண்ணா என்ன பன்றார்…. சரியாவே சாப்பிடலை.இங்க நிலா அண்ணியும்  அப்ப மேல போனவங்க தான்…..இன்னும் சாப்பிடவே வரலை…பாவம் மகிம்மா என்ன பன்றதுன்னு தெரியாம….வெளிய சொல்ல முடியாம…மனசுக்குள்ளயே புலுங்கி தவிக்கிறாங்க…” என்றாள் தீபா.

இதோ பார் தீபா….!அதெல்லாம் தானா சரியாகிடும்.நீயும் சரி மகிம்மாவும் சரி எதையும் கண்டுக்காதிங்க….சூர்யா பிரச்சனைய அவன் பார்த்துப்பான்….சரியா…” என்றான் ஜீவா.

அப்ப சரி நான் வச்சுடுறேன்…”என்று தீபா போனை வைக்க போக…,”ஏய் டார்லிங்….சட்டுன்னு போனை வச்சுட்டா எப்படி….?கொஞ்சம் கவனிக்கிறது…., மாமன் பாவமில்லை…”என்றான் ஜீவா.

பாவமில்லை….” நான் வச்சுடுறேன் என்றபடி தீபா பட்டென்று போனை வைக்க…”ம்ம்ம் ஜீவா உனக்கு கொஞ்சம் கூட மரியாதையில்லை…சரி விடு என்ன பன்றது…போகப் போக பழகிடும்…” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான் ஜீவா.

அந்த பக்கம்…போனை வைத்த தீபா…தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். ஜீவாவின் வெகுளித்தனமும்,அவன் செய்யும் சேட்டைகளும்.. குறும்பும் தீபாவிற்கு அவன் மீதான நேசத்தை அதிகரித்தது.

என்ன தீபா…?ம்ம்ம்ம் எப்பப் பாரு கனவுலையே இருக்க…?கொஞ்சம் நடப்புக்கு வாங்க..? என்று கிண்டலடித்தாள் ரம்யா.

ஐயோ ரம்யா…உங்களுக்கு நான் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியிறேனா….? அங்க நிலா அண்ணியும் இருக்காங்க…அவங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது…” என்றாள் தீபா.

அப்படிங்கிற…சரி கவனிச்சுடுவோம்…நீயும் வா..”என்று தீபாவையும் இழுத்துக் கொண்டு ஓடினாள் ரம்யா.

நிலாவோ விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.சாப்பிட பிடிக்கவில்லை… தூங்கப் பிடிக்கவில்லை….அவளது மூளைக்குள் குழப்பம் என்னும் பேய் நுழைந்து….அவளை யோசி..யோசி என்று  ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. தன்னிலை மறந்த தாரகையாய்…எதிர்காலத்தை எண்ணி கலங்கும் கன்னியாய் இருந்தாள் நிலா.

உள்ளே நுழைந்த ரம்யா,நிலாவைப் பார்த்து..”இப்ப எதுக்கு இப்படி இருக்குறா…?”என்று மனதில் நினைத்தவள்…”ஏண்டி எருமை மாடே…இப்ப எதுக்கு இடியாப்பமே இடிஞ்சு போனது போல் இருக்க…?” என்றாள் ரம்யா.

இடியாப்பம் எப்படி இடிஞ்சு போகும்…” என்று மனதிற்கு கேள்வி கேட்ட தீபா…அதை அப்படியே ரம்யாவிடமும் கேட்க….”ஏதாவது வித்யாசமா சொன்னா அக்செப்ட் பன்னிக்கனும்…ஆராய்ச்சி பண்ணக் கூடாது…ஓகே..” என்றாள் வில்லன் பாணியில்.

ஐயோ ரம்யா…என்னை கொஞ்ச நேரம் தனியா விடு,..எனக்கு தலை வலிக்குது….”என்று எரிந்து விழுந்தாள் நிலா.

தீபாவின் முகம் வாட…ரம்யாவோ அசராமால் திருப்பி அடித்தாள்… “தலைவலிக்கு என்ன செய்யலாம்…உங்கள் தலைவரை அழைக்கலாமா…? தலைவனைப் பார்த்தால் தலைவலி எல்லாம் தலை தெறித்து ஓடிவிடும்…” என்று ராகம் பாட…தீபா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

தலைவன் என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன் நிலாவின் நினைவு எல்லாம் சூர்யாவை நோக்கி சென்றது.காலையில் நடந்தது எல்லாம் கண் முன் வர கண்கள் தானாக கலங்கியது.”இதற்கு அவனிடம் நேராகவே கேட்டுவிடலாம்…ஏன் நானும் குழம்பி மற்றவர் நிம்மதியையும் கெடுக்க வேண்டும்.ஒரு வேளை சூர்யாவும்,வினோத்தும் நண்பர்களாய் இருந்தால்…. அடுத்த நிமிடம் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிந்து விட வேண்டும்….” என்று மனதிற்குள்  நினைத்தவள்…ரம்யாவின் முன் லேசாக சிரித்து வைத்தாள்.

ம்ம்ம்…இப்பதான் நீ குட் கேர்ள்…இவ்வளவு நேரமா எங்க ஒளிச்சு வச்சிருந்த இந்த சிரிப்பை…? சரி வா..! வந்து சாப்பிடு…” என்று ரம்யா கூப்பிட…”இல்ல ரம்யா…எனக்கு பசிக்கலை..நான் அப்பறம் வந்து சாப்பிடுறேன்…” என்றாள் நிலா.

ரம்யா மேற்கொண்டு ஏதோ பேசப் போக…அவளின் தோளில் கைவைத்த தீபா…”வேண்டாம்…வாங்க போவோம்..” என்பது போல் தலையால் சைகை செய்ய…ரம்யாவும் அவளின் தலையசைப்பிற்கு ஒப்பி…நிலாவை தனிமையில் விட்டு சென்றாள்.

அவர்கள் சென்றவுடன் ஒரு முடிவுக்கு வந்த நிலா…அதை செயல் படுத்த எண்ணி…அங்கிருந்த சூர்யாவின் லேப்டாப்பை தேடினாள்.ஏதோ அவளது நல்ல நேரம்..போகும் அவசரத்தில் சூர்யா அதை எடுத்து செல்லாமல் அது அவ்விடத்திலேயே இருந்தது.

உடனே வேகமாக அதனை எடுத்த நிலா….அதை ஓப்பன் செய்தாள்.ஆனால் உள்ளே நுழைவதற்கு அது பாஸ்வேர்ட் கேட்க….இப்பொழுது முழிப்பது நிலாவின் முறையாயிற்று.”என்ன இது பாஸ்வேர்ட் எல்லாம் கேட்குது…? என்று நினைத்தவள் தன் ஊகத்தில் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய…அது தோல்வியில் முடிந்தது.”கருவாப்பைய நான் எதையும் தெரிஞ்சுக்க கூடாதுன்னு தான் எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணியிருக்கான்…” என்று நொந்து கொண்டாள் நிலா.

**************

ஒரு வாரம் சவரம் செய்யப்படாத முகமும்….சந்தோஷம் தொலைத்த கண்களுடனும்…கடனே என்று…. ஆபீஸிற்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான் அருள்.எங்கு திரும்பினாலும் அவனுக்கு சூனியமாக காட்சியளித்தது.தீபா இருந்தபோது கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்த வீடு…இப்பொழுது பொலிவிழந்து காணப்பட்டது.

பேரனின் இத்தகைய கோலத்தைக் காண சகியாத ஜக்கு…”என்ன அப்பு…? இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்ப…? அப்பறம் வேலையெல்லாம் யார் பார்க்குறது..?உடையவன் பார்க்கலைன்னா உடுப்பு கூட மிஞ்சாது அப்பு…” என்றார்.

ஆனால் அதற்கு அருளிடம் இருந்து மௌனமே பதிலாய் கிடைத்தது. யாரிடமும் பேசாமல்…யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.அவனது அமைதி ஜக்குவிற்கு கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது.

“என் பேரனை என்ன சொல்லி மயக்குனாளோ….இவன் இப்படி கிடக்குறானே…! அவ போய்ட்டா…. அந்த சிறுக்கி பெத்தவனக் கட்டிகிட்டு…இங்க என் குடும்பம் அல்லு சில்லா போச்சே…” என்று ஜக்கு புலம்ப ஆரம்பித்தார்.

ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காத அருளிற்கு கல்யாணத்திற்கு முதல் நாள் நடந்தது நியாபகத்திற்கு வந்தது.நிலாவிடம் இப்பொழுதாவது கொஞ்சம் தனியாய் பேசலாம் என்று  நிலாவைத் தேடி செல்ல…அங்கு நிலாவும் ரம்யாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஏண்டி நிலா….!விடிஞ்சா உனக்கு கல்யாணம்.ஆனா நீ என்னடான்னா யாருக்கோ கல்யாணம் அப்படின்ற மாதிரி இருக்க…” என்றாள் ரம்யா.

“ம்ம்பச்…,நீ வேற ஏண்டி என் கடுப்பை கிளப்புற…எனக்கு இப்ப கல்யாணம் பன்றதில் விருப்பமே இல்லை.நானே ஏகப்பட்ட டென்சன்ல இருக்கேன். இதுல நீ வேற…தவளை தன் வாயால் கெட்ட மாதிரி….என் வாயால் நானே மாட்டிகிட்டேன்…” என்று சலிப்பாய் பதில் சொன்னாள் நிலா.

“என்னடி சொல்ற…இப்ப என்ன குறைந்து போச்சு….நீ விரும்பின பையனத்தான நீ கல்யாணம் பண்ணிக்க போற…இது முழுக்க முழுக்க உன்னோட விருப்பத்தின் பேரில் நடக்குற கல்யாணம் தான.என்னமோ பிடிக்காதவரைக் கல்யாணம் பண்ணிக்க போறது மாதிரி பேசுற…”என்றாள் ரம்யா.

“அதை ஏண்டி கேக்குற…என்னோட எம்.டி..அதான் அந்த சிடுமூஞ்சி கருவாப்பையன் இருக்கான்ல அவனை வெறுப்பேத்தத்தான் அன்னைக்கு அப்படி சொன்னேன்.மத்தபடி எனக்கு அருள் மேல காதல் எல்லாம் ஒன்னும் இல்லை…இந்த லட்சனத்துல இந்த அருள் வேற…நான் அவனைப் பார்த்து என்  புருஷன்னு சொன்னேன்னு ஒரு கதை சொல்றான்…ஆனா நான் அப்படி சொல்லவே இல்லைடி…அது நான் இல்லைன்னு சொல்லப் போற ஒவ்வொரு தடவையும்…ஏதாவது ஒரு தடங்கல்…என் நிலமையப் பார்த்தியா…கடைசில கல்யாணத்துல வந்து நிக்குது…சரி வேற வழியில்லைன்னு தலையை ஆட்டிட்டேன்..” என்றாள் நிலா.

“அடிப்பாவி..!அப்ப நீ உண்மையிலயே அருள் மாமாவை லவ் பண்ணலையா..?”என்றாள் ரம்யா.

நிலா..”இல்லன்னு இப்ப தான் சொன்னேன்….அன்னைக்கு ஹோட்டல்ல கூட அந்த கருவாயன் என்னையும் அருளையும் சேர்த்து வச்சு தப்பா பேசுனான். அவன் வாயை அடைக்கத்தான் அப்படி சொன்னேன்.மத்தபடி என் மனசுல ஒன்னும் இல்லை ரம்யா” என்றாள்.

தலையைக் குனிந்த ரம்யா…”நிலா நான் ஒன்னு சொல்லுவேன்…என்னை தப்பா நினைக்க மாட்டியே..?” என்றாள் பீடிகையுடன்.

“முதல்ல சொல்லு….அப்பறமா வாய மெல்லு.என்னமோ பேசவே தெரியாதவ பேசுற மாதிரி பேசுற…சொல்ல வந்ததை சொல்லுடி லூசு..”என்று கடிந்து கொண்டாள் நிலா.

“இல்லை அன்னைக்கு….அதான் நீ கூட என்னை ரோட்ல பார்த்துட்டு…,திட்டி கூட்டிட்டி போனியே அன்னைக்கு….அன்னைக்கு ” என்று ரம்யா இழுக்க… “அன்னைக்கு என்ன…? சொல்லித்தொலலை…இழுக்காத” என்று நிலா எரிச்சலாய் சொன்னாள்.

“அன்னைக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டேனா.ஆனா கைல காசே இல்லடி.அப்ப பார்த்து அருள் அங்க வந்து உட்கார்ந்தாரா…..சரி இதான் சான்ஸ்ன்னு….கவுண்ட்டர்ல போய் அவர் தான் என் புருஷன்…அவர்கிட்ட பில் வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டு போய்ட்டேண்டி…” என்றாள் ரம்யா.

தலையில் கைவைத்த நிலா…”லூசு லூசு…எருமை..ஏன் புருஷன்னு தான் சொல்லனுமா…? ஏன் அண்ணன் சொல்லக் கூடாதா…? அதென்ன புருஷன்னு சொல்லியிருக்க…?கடைசில சிக்குனது நானா…?” என்று நொந்து கொண்டாள் நிலா.

“இப்ப என்ன குடி முழுகிப் போச்சுன்னு இப்படிக் கத்துற…பன்றதை எல்லாம் நீ பன்னிட்டு என் மேல ஏன் கோபப் படுற…? நான் அந்த ஒரு வார்த்தைய சொன்னது தான் இப்ப உனக்கு பிரச்சனையா…ஏன் நீ வாயில மிட்டாயா வச்சிருந்த….நீ சொல்லியிருக்க வேண்டியது தான அருள் கிட்ட…” என்று ரம்யாவும் எகிறினாள்.

சரி விடு ரம்ஸ்…..இப்ப என்ன…இப்ப வரைக்கும் நான் அருளை லவ் பன்னலை.பட் கல்யாணத்துக்கு அப்பறம் லவ் பண்ண முயற்சி பன்றேன் போதுமா…? என்றாள் நிலா.

ஆனால் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருளின் மன நிலையை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.தான் என்ன கேட்டோம்…அதை எப்படி உணர்கிறோம் என்று புரியாத மன நிலையில் நின்றிருந்தான் அருள்.

நிலா என்னை காதலிக்கவில்லையா…? சூர்யாவை வெருப்பேற்ற என்னிடம் நடித்தாளா…? வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் நூலளவு வித்யாசம் தான் …என்று எங்கோ படித்தது அப்போது அருளுக்கு நியாபகம் வந்தது.

சூர்யா,நிலாவை விரும்புவது தெரிந்திருந்தாலும்…நிலா தன்னைத்தான் விரும்புகிறாள் என்று இறுமாப்புடன் இருந்து…..சூர்யாவிடம் சபதம் எல்லாம் போட்டு….என்று நினைத்த அருளுக்கு…தன்னை நினைத்து தனக்கே வெட்கமாய் இருந்தது.நடந்ததில் தன் தவறு என்ன..? நிலாவின் தவறு என்ன ..? என்று அவனால் யோசிக்க கூட முடியவில்லை.

இருந்தாலும் ஏதோ ஒரு உணர்வு அருளை தடுத்தது….”இல்லை …நிலா இப்ப வேணுமின்னா என்னை விரும்பாம இருக்கலாம்…ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் கண்டிப்பா என்னை காதலிப்பாள்….அவளே ரம்யாகிட்ட சொன்னாளே..! நான் அந்த சூர்யா முன்பு தோற்க கூடாது…” என்று மனதில் எண்ணியவனாய்…வந்த சுவடு தெரியாமல் திரும்பி சென்றான்.

இப்போது அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு  வெறுமையான புன்னைகை தோன்றியது.அருள் சிரிப்பதைப் பார்த்த ஜக்குவிற்கு கோபம் இன்னும் பெருகியது.”என்ன அப்பு நான் சொல்றது என்ன…? நீ செய்றது என்ன…? இப்ப இந்த சிரிப்பு தேவையா…?” என்றார் கோபமாக.

ஜக்குவின் கோபக் குரலில் …அருளின் நினைவு நடப்புலகிற்கு திரும்பியது…”இப்ப என்ன பாட்டி செய்யனும்….? எதுக்காக இப்படிக் கத்திட்டே இருக்கிங்க…? உங்களுக்கு என்ன தான் பிரச்சனை…?” என்று  எரிந்து விழுந்தான்.

என்ன அப்பு குரல உசத்திப் பேசுற….நான் சொன்னது,கேட்டது எதுவும் உன் காதில் விழலையா….? எங்க நீ தான் அந்த சிறுக்கி நினப்புலையே இருக்கியே…அப்பறம் எப்படி என் குரல் எல்லாம் உனக்கு கேட்கும்…பெத்த ஆத்தா,…அப்பத்தான்னு இங்க ரெண்டு பேரு இருக்கோமே…அதாவது உன் கண்ணுக்குத் தெரியுதா…? என்றார் ஜக்கு.

“பாட்டி என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு…அதை ரொம்ப சோதிக்காதிங்க…அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்று அருள் கூற…”என்ன அருள்..பாட்டிய எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டியா…?” என்றார் சுதா.’

“அம்மா போதும்…நான் எந்த அளவுக்கும் வரலை…ஆனா நீங்க தான் வர வைக்கிறிங்க…அப்பறம் நிலாவை சிறுக்கி,கிறுக்கி அப்படின்றதை எல்லாம் இதோட நிறுத்திக்கங்க….அது எனக்கு பிடிக்கலை….” என்றான்.

“என் பெரன் என் பேச்சைக் கேட்டு அந்த கேடு கெட்டவளை வேண்டாம்ன்னு சொல்லிட்டான்னு பெருமையா நினச்சுகிட்டு இருந்தேன்…ஆனா இவன் என்னடான்னா அந்த நினப்புல எல்லாம் மண்ணை அள்ளிப் போட்டுடுவான் போல இருக்கே…அவளை சொன்னா இவனுக்கு கோபம் வருது….” என்றார் ஜக்கு.

“போது நிறுத்துங்க பாட்டி…நான் ஒன்னும் நீங்க சொன்னதுக்காக நிலாவை வேண்டாம்ன்னு சொல்லலை …கல்யாணத்துக்கு முதல் நாள் தான் எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தது.நானே அந்த குழப்புத்துல இருந்தேன்…. மனசுல இருந்த அந்த குழப்பத்துல தான் அன்னைக்கு எதுவும் பேசாம இருந்தேனே தவிர…நிலாவை சந்தேகப்பட்டு இல்லை போதுமா….தெரிஞ்சோ தெரியாமலோ…நிலா இப்போ சூர்யாவோட மனைவி…பிடிக்குதோ பிடிக்கலையோ எனக்கு அண்ணி முறை…அதனால் இனி நிலாவைப் பத்தி யாரும் இங்க தப்பா பேசக் கூடாது….” என்றான் முடிவாய்.

ஜக்கு..”இங்க பார்த்தியாடி சுதா….அந்த சிறுக்கி இவனுக்கு அண்ணியாம்…! என்ன பேச்சு பேசுறான்னு பாரு….உன் வாழ்க்கை இங்க அந்தரத்துல இருக்கு…உன் மகன் அந்த வீட்டோட உறவு கொண்டாடிகிட்டு இருக்கான்…” என்றார்.

இவர்களிடம் பேசி தலைவலியை வர வைப்பதற்கு பதில் ….ஆபீஸிற்கு செல்வதே மேல் என்று எண்ணிய அருள் அவ்விடத்தைக் காலி செய்ய…..ஜக்குவும்,சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜக்கு…”இங்க பாரு சுதா…அருள் கொஞ்ச கொஞ்சமா அவங்க பக்கம் போற மாதிரி இருக்குது,…..இப்ப நமக்கு இருக்குற ஒரே அச்சாரம் அருள் மட்டும் தான்….அவனை வச்சுதான் மிச்ச ஆட்டத்தையும் நாம் ஆடி ஆகனும்… எவ்வளவு சீகிரம் இவனுக்கு ஒரு கால் கட்டு போடுறோமோ…அவ்வளவு நல்லது…வர மருமக நம்ம பேச்சுக்கு ஆடுறவளா இருக்கனும்…” என்று வேதம் ஓத….சுதா எப்பொழுதும் போல் தலையை ஆட்டினார்.

“சார் உங்களைப் பார்க்க ருத்ரம்ன்னு ஒருத்தர் வந்துருக்கார்.உள்ள அனுப்பலாம சார்…?” என்ற வரவேற்பு பெண்ணின் கேள்விக்கு….ஒரு நிமிடம் யோசித்த சூர்யா…”வர சொல்லுங்க…!” என்றான் பதிலாய்.

சூர்யா பதில் சொன்ன ஐந்தாவது நிமிடம் …..அவனின் அனுமதியின்றி உள்ளே நுழைந்தார் ருத்ரம்.மனதில் பெரிய பகையுணர்வு இருந்தாலும்…அதை வெளியில் காட்டிக் கொள்ளாது சற்று சிரித்த முகமாய் சூர்யாவின் அனுமதியின்றி அவன் எதிரில் அமர்ந்தார் ருத்ரம்.

“இப்ப எதுக்காக நீங்க இங்க வந்துருக்கிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்றான் சூர்யா,டேபிள் வெயிட்டைய் உருட்டியபடி.

“என்ன சூர்யா இப்படி கேட்டுட்ட…நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியாது….கடைசியா ஒரு முறை உன் கிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்….வெளிய விசாரிச்சேன்….சின்ன வயசுல…இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவது கொஞ்சம் பெரிய விஷயம் தான்….இப்படி ஒரு நல்ல நிலமைக்கு வந்துட்டு இருக்கும் போது…ஏன் இந்த தேவை இல்லாத தொல்லைய எல்லாம் தோளில் தூக்கி போட்டுக்கிறிங்க..?” என்றார் ருத்ரம்.

“ஹோ அப்படியா ருத்ரம் சார்….அது தொல்லையா இல்லையான்றதை நான் தான் முடிவு பண்ணனும்…நீங்க இல்லை…நீங்க வந்தது இதுக்குத்தான்னு சொன்னா…தயவுசெஞ்சு வெளிய போறிங்களா…? எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்றான் சூர்யா அசால்ட்டாய்.

“வேண்டாம் சூர்யா…நான் யார்ன்னு உனக்கு நல்லா தெரியும்ன்னு நினைக்கிறேன்….இப்பவும் சொல்றேன் பிரச்சனை வேண்டாம் நிலாவையும் அந்த பொண்ணு ரம்யாவையும் என்கிட்ட ஒப்படைச்சுடு….இல்ல இல்ல வேண்டாம் நிலாவை மட்டுமாவது என்கிட்ட ஒப்படைச்சுடு….இல்லைன்னு சொன்னா…நீ சந்திக்க கூடிய விளைவுகள் பயங்கரமானதா இருக்கும்…” என்று கால் மேல் கால் போட்டபடி ருத்ரம் கூறினார்.

பதிலுக்கு தானும் கால் மேல் கால் போட்ட சூர்யா…”அதைத்தான் நானும் சொல்றேன் ருத்ரம் சார்….நிலா இப்ப என்னோட ஒய்ப்…ஏன் என்னோட லைப்ன்னு கூட சொல்லலாம்.என்னோட உயிர்…உலகம் எல்லாமே அவதான்…அவளை விட்டு எந்த அளவுக்கு ஒதுங்கிப் போறிங்களோ…அந்த அளவு உங்களுக்கு நல்லது….” என்றான் சூர்யா.

ருத்ரம்….”உன் தலை எழுத்தை மாற்ற யாரால் முடியும்…?” என்றபடி எழுந்து செல்ல தயாராக….”ஆனா உங்க தலை எழுத்தை இந்த  சூர்யா மாத்துவான்… மாத்திக் காட்டுவான்…” என்றான் சூர்யா.

ருத்ரம் வெளியேறுவதைப் பார்த்த ஜீவா…கோபமுடன்..”இப்ப எதுக்கு சூர்யா இந்த ஆள் இங்க வந்துட்டு போறான்?” என்றான்.

சூர்யா நடந்தவற்றை சொல்ல….ஜீவாவிற்கு கொஞ்சம் உதறல் எடுத்தது உண்மைதான்.இருந்தாலும் அவனும் அந்த ருத்ரத்தின் மேல் அளவில்லாத வெறுப்பில் இருந்தான்.தன் நண்பனை எப்படி அவன் வந்து மிரட்டலாம் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது.

சரி விடு ஜீவா…என்னை மிரட்டனும்ன்னு வந்து அந்த ஆள் மிரண்டு போனது தான் மிச்சம்…என்றான் சூர்யா.

சரி சூர்யா…நாம இப்ப வீட்டுக்கு கிளம்பலாமா…? இல்லை நேரமாகுமா..?” என்றான் அப்பாவியாய்.

ஜீவாவின் முகத்தைப் பார்த்த சூர்யாவிற்கு அந்த நிலமையிலும் சிரிப்பு வந்தது….”பரவாயில்லை மச்சான்…ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாதான் இருக்க…நீ பிழச்சுக்குவ..” என்றான் சூர்யா.

எல்லாம் உன் ஆசீர்வாதம் தான் மச்சான்…என்ன நான் போகலைன்னா பாதிக்கப் படுறது உன் தங்கச்சி தான் …சரி என்னால் ஒரு மனசு வாடக் கூடாதேன்னு நினைச்சேன்…இது தப்பா…ம்ம்ம்..இந்த உலகத்துல நல்லதுக்கே காலம் இல்லை…” என்றான் ஜீவா.

யப்பா சாமி..போதும்டா உன் அருவை…வா கிளம்பலாம்” என்றபடி கிளம்பினர் இருவரும்…இனி வரும் பூகம்பத்தை அறியாமல்.

முகவரி 30:

சுடிதாரின் துப்பாட்டாவை….”அதற்கு வாயிருந்தால் அழுதுவிடும்..” என்னும் அளவிற்கு  கையால் நொடித்து நொடித்து…எடுத்துக் கொண்டிருந்தாள் நிலா. சூர்யாவும்,ஜீவாவும் வந்து கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் சூர்யா மேலே வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது தான் நிலாவிற்கு எரிச்சலிலும் எரிச்சலாய் இருந்தது.

மகாராசா..அவ்வளவு சீக்கிரம் வருவாங்களா…? ஆடி அசஞ்சு உட்கார்ந்து… போன கதை வந்த  கதை எல்லாம் பேசி முடிச்சுட்டு வர வேண்டாம்…?” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள்.

நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன்……ஆனா இப்ப என் நிலைமையப் பார்த்தா…நிலவுக்கே போனாலும் பிரச்சனை தீராது போல…கடவுளே….! என்னைப் பார்த்தா உனக்கே பாவமா இல்லையா…  ஏதாவது ஒரு வகையில் கருணை காட்டுப்பா…” என்று நடு அறையில் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

அந்த சமயம் பார்த்து அங்கு வந்த சூர்யா…”என்னாச்சு இவளுக்கு…இங்க நின்னு சாமி கும்பிடுறா…ம்ம்ம்….முன்னாடி எதுவும் சாமி படம் இருக்கா…?” என்று நினைத்தபடி அறையைப் பார்த்துக் கொண்டே நுழைந்தான் சூர்யா. அவன் வந்ததை அறியாத நிலா தன் போக்கில்  வேண்டிக் கொண்டிருந்தாள்.

என்னதான் நிலாவைப் பார்க்க கூடாது என்று நினைத்தாலும்….சூர்யாவின் கண் பார்வையில் நிலா மட்டுமே தெரிந்தாள்.வச்ச கண் வாங்காமல் அவளைப் பார்க்க…”டேய் லூசு என்னடா பன்ற…காலைல தான் அவ்வளவு வீராப்பா அவகிட்ட பேசிட்டு போன…? இப்ப எங்க போச்சு உன் வசனம் எல்லாம்…?” என்று மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க….”ம்ம்ம்..வசனம் எல்லாம் வட்டிக் கடைக்குப் போய்ருக்கு..” என்று தன் மனசாட்சிக்கு பதில் அளித்து விட்டு நிலாவைப் பார்ப்பதைத் தொடர்ந்தான்.

 

உள்ளுணர்வு உணர்த்த நிமிர்ந்தாள் நிலா.அவள் தலையை நிமிர்ந்தவுடன் தன் தலையை குனிந்து கொண்டான் சூர்யா.தன் போக்கில் சென்றவன்… கையிலிருந்த பைலை வைத்துவிட்டு குளிப்பதற்காக பாத்ரூமிற்குள்  நுழைந்து கொண்டான்.நிலா என்ற ஒருத்தி அங்கு இருப்பதையே அறியாதவன் போல் அவன் நடந்து கொண்டது…நிலாவிற்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.

பாத்ரூமிற்குள் சென்ற சூர்யா பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்… “நல்ல வேளை நான் பார்த்ததை அவ பார்க்கலை…..இல்லை மறுபடியும் அவ பல்லவியை ஆரம்பிச்சுருப்பா….சூர்யா நீ கிரேட் எஸ்கேப்டா….” என்று தன்னைத் தானே தட்டிக் கொண்டான் சூர்யா.

எவ்வளவு நேரம் கடத்தினாலும் ஒரு கட்டத்தில் வெளியே வந்து தானே ஆக வேண்டும்…சூர்யாவும் வெளியே வர…நிலாவோ…”அவன் எப்பொழுது வருவான் என்று காத்துக் கிடப்பதைப் போல….பாத்ரூம் கதவையே பார்த்தபடி இருந்தாள்…”

நிலாவின் முக பாவத்தைப் பார்த்த சூர்யா…”இப்ப எதுக்கு இவ மீனுக்கு காத்து கிடக்குற கொக்கு ரேஞ்சுக்கு இருக்கா….இவ கிட்ட சிக்க கூடாது…..தப்பித் தவறி சிக்குனேன்…இவ வாய் வண்ணார பேட்டை வரை போய்ட்டு வரும்…தேவையில்லாம பேசுவா…அப்பறம் சும்மா இல்லாம நான் அடிக்க போக….வேண்டாம் சாமி இந்த வம்பு….” என்று நினைத்த சூர்யா…..அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் கண்ணாடி முன் நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.

என்ன இது இவன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறான்..இப்ப எப்படி இவன் கிட்ட அந்த போட்டோ பத்தி கேட்குறது…? இன்னைக்கு எப்படியாவது கேட்டே ஆகனும்…..என்ன பன்னலாம்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா.தானாய் சென்று பேசவும் அவளது ஈகோ அவளைத் தடுத்தது.

இருந்தாலும் விடாமல்…”ம்ம்க்க்கும்…ம்ம்க்கும்…” என்று தொண்டையை செறுமினாள் நிலா.”என்ன..?” என்பதைப் போல் பார்த்த சூர்யா மறுபடியும் திரும்பிக் கொண்டான்.

 

ம்ம்ம்….உங்ங்களைத்தான்….” என்று மறுபடியும் சொல்ல…,சூர்யாவுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.முதல் முறையாக அவனை மரியாதையாக பேசியிருக்கிறாள்.”என்னடா இது இப்படி மரியாதையா கூப்பிடுறா….பின்னாடி மத்தாப்பு எதுவும் வச்சிருக்காளா…?” என்று யோசித்தவனாய் சென்றவன்…”என்ன..?” என்றான்.  

நிலா…”உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்….” என்றாள் மொட்டையாக.

ம்ம்ம்….இப்பவும் பேசிட்டு தான இருக்க….அப்பறம் என்ன…? என்றவன்… “என்கிட்ட ஏதாவது சொல்லனுமா…?” என்றான்…அவள் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்ல வருகிறாளோ என்ற நப்பாசையுடன்.

அதெல்லாம் இல்லை….,உங்ககிட்ட சொல்ல ஒன்னுமில்லை…ஆனா கேட்க ஒரு விஷயம் இருக்கு…அதான்…” என்று இழுத்தாள் நிலா.

என்ன பூகம்பம் இருக்கோ…என்று நினைத்தபடி…”என்ன கேட்கனும் ….?” என்றான் சூர்யா.”அது வந்து….வந்து..அந்த போ…” என்று நிலா ஆரம்பிக்கும் போது…சரியாக கதவைத் தட்டும் சத்தம் கேட்க….சூர்யா திறக்க போக…”கடவுளே..!” என்று பல்லைக் கடித்துக் கொண்டாள் நிலா.

கதவைத் தட்டியது ரம்யா தான்.ரம்யாவைப் பார்த்த சூர்யாவிற்கு சிரிப்பு வர…நிலா கோபத்தின் எல்லைக்கே சென்றாள்.”என்னா ரம்யா…? வா உள்ள…!” என்று சூர்யா அழைக்க….நிலா அவளை முறைத்தாள்.நிலாவின் முகத்தைப் பார்த்த ரம்யா….”அய்யோ அத்தான் நான் பூஜை வேளை கரடியா..?” என்றாள்.

இங்க பூஜை நடந்தாத்தான் நீ கரடி.இங்க இருக்கும் நிலவரத்தைப் பார்த்தா….இந்த ஜென்மத்துக்கும் பூஜையே நடக்காது போல..” என்று சூர்யா சலித்துக் கொள்ள….நிலாவோ..”கருமம்..கருமம்..பேச்சைப் பாரு..” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஆளை விடுங்க சாமி…..உங்க சண்டைக்குள்ள என்னை இழுக்காதிங்க…! அத்தை உங்க ரெண்டு பேரையும் சாப்பிட வர சொன்னாங்க….நானும் வந்து சொல்லிட்டேன்…”என்றபடி ஓடிவிட்டாள் ரம்யா.

ரம்யா சென்றவுடன் காளியாய் மாறினாள் நிலா….”உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா….இங்க என்ன நடக்குது..நீங்க என்னமோ அவ கிட்ட சரசமா பேசிட்டு இருக்கிங்க…? பூஜை கேட்குதா பூஜை உனக்கு…” என்று ஒருமைக்குத் தாவினாள் நிலா.

சூர்யா…”கொஞ்சம் நிறுத்துறியா….அதுக்காக எங்க ரெண்டு பேருக்கும் சண்டை….அதுல உடையுது மண்டை…” அப்படின்னு எல்லார்கிட்டையும் போய் சொல்லிட்டு திறிய சொல்றியா…உன்னை மாதிரி  என்றான் இடக்காய்.

“என்னை மாதிரியா…? நான் என்ன பண்ணினேன்…? இப்ப எதுக்காக என் தலைய உருட்டுற…” என்று நிலா கண்ணை உருட்டிக் கேட்ட விதத்தில் சூர்யாவுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு…”அப்பறம் எதுக்கு காலைல சாப்பிடாம…முகத்தை தூக்கி வச்சுகிட்டு இருந்தியாமே…! அதுக்கு பேர் என்ன… ? நீ இவ்வளவு செஞ்சா பத்தலை…எல்லாரும் முடிவே பண்ணியிருப்பாங்க…நீ எல்லாம் லாயர்…”என்று தலையில் அடித்துக் கொண்டபடி சென்றான்.

“ச்ச்ச என்ன இது…அந்த போட்டோ பத்தி விசாரிக்கலாம்ன்னா…அதுக்குள்ள எஸ்கேப் ஆகிட்டான்…இல்லை விடக் கூடாது.சாப்பிட்டு வந்த உடன் கண்டிப்பா கேட்கனும்…” என்று முடிவெடுத்தவளாய் அவன் பின்னாலேயே  சென்றாள் நிலா.

டைனிங் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தான் ஜீவா. முரளியும்,பிரபுவும் சற்று நேரம் முன்னமே சாப்பிட்டு முடித்திருக்க …இளசுகள் மட்டும் அமர்ந்திருந்தனர்.மாலாவும்,மகேஷ்வரியும் பறிமாறிக் கொண்டிருந்தனர்.

வேகமாய் வந்த நிலா…”இப்ப எங்க உட்காருவது…?” என்று ஒரு நிமிடம் யோசித்து….சூர்யாவின் அருகிலேயே அமர்ந்தாள்.மற்றவர்கள் கண்டும் காணாமல் இருக்க….சூர்யாவிற்கு அவள் தன்னருகே அமர்ந்தது ஜிவ்வென்று இருந்தது.

தீபா சப்பிடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க….”அவளின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினான் ஜீவா…”. எதிர்பாராத அந்த நிகழ்வில் தீபா.. “அண்ணா..” என்று கத்தினாள்.

 

ஜீவா….”அடிப்பாவி…எல்லாரும் அம்மான்னு கத்தினா இவ மட்டும் அண்ணான்னு கத்துறா…? வீம்புக்கு அப்படி செய்றாளோ..!” என்று அவளைப் பார்க்க….ஜீவாவை ஒரு முறை முறைத்தவள்…மீண்டும் சாப்பிடுவதில் முனைந்தாள்.மறுபடியும் தீபாவின் காலைத் தட்ட….அவள் அவஸ்தையாய் நெளிந்தாள்.  

மச்சான்ன்ன்ன்…” என்று இழுத்தான் சூர்யா….சாப்பிட்டுக் கொண்டே…!  “நண்பா..!” என்று வாயில் இட்லியை வைத்தபடி ஜீவா நிமிர…..”தகதிமிதா ஆடாம தட்டப் பார்த்து சாப்பிடு மச்சான்…” என்றான் சூர்யா போன போக்கில்.

ஹி…ஹி…” என்று ஜீவா இளிக்க….,அவனைப் பார்த்த நிலாவிற்கு கூட சிரிப்பு வந்தது.”ஐயோ….வாயை மூடுங்க….ரொம்ப வழியுது….” என்றபடி தீபா பல்லைக் கடிக்கவும்… வாயை மூடினான்  ஜீவா.

சூர்யாவையும்,நிலாவையும் கவனித்துக் கொண்டே தான் இருந்தார் மகேஷ்வரி.காலையில் இருந்ததுக்கு இப்பொழுது நிலாவின் முகம் கலகலப்பாய் தெரிந்தாலும் அதில் ஒரு ஒட்டுதல் தன்மை இல்லை என்பது அவருக்கு தெளிவாய் புரிந்தது.அதே மாதிரி சூர்யாவின் முகமும் வெளிப் பூச்சாய் மட்டுமே புன்னகையை ஒட்டிக் கொண்டிருந்தது.அவன் கண்களில் தெரிந்த ஏக்கம்..நிலாவை அவன் பார்க்கும் பார்வை இவை அனைத்தும் அவன் மனதை தெளிவாய் மகேஷ்வரிக்கு உணர்த்தியது. கணவன் மனைவிக்குள் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்த மகி….நடக்கப் போவதை எண்ணி கவலை கொண்டார்.

 மகேஷ்வரி கவனிப்பதை சூர்யா பார்க்காவிட்டாலும் நிலா பார்த்துவிட்டாள். “இந்த கருவாப்பய சொன்ன மாதிரி அத்தை நம்மை கவனிக்கிறாங்களோ..! இனி பார்த்து கவனமா இருக்கனும்….பாவம் என்னால் அவங்களுக்கு மனக் கஷ்ட்டம் வர வேண்டாம்..” என்று முடிவெடுத்துக் கொண்டாள் நிலா.

அனைவரும் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க…அவர்களின் நிம்மதியைக் கெடுப்பது போல் அங்கு புயலாய் நுழைந்தார் ஜக்கம்மாள். யாரும் எதிர்பாராத தருணத்தில் அவரின் வரவு அனைவருக்கும் திகைப்பையும்,அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுத்தது.

சூர்யா…. ஜக்குவை இடுங்கிய பார்வை பார்க்க…..மகேஷ்வரிக்கோ சகலமும் ஆடியது.”பயப்படக் கூடாது..” என்று மூளை சொன்னாலும் அவரின் மனம் எப்பொழுதும் போல் நடுங்கத் துவங்கியது. எங்கே வெளியே காட்டிக் கொண்டால்  இன்னும் தன்னை இளக்காரமாக எண்ணக் கூடும் என்று நினைத்த மகேஷ்வரி….முகத்தில் எதையும் காட்டாது அமைதியாய் இருந்தார்.

ஜக்குவின் வரவு அங்கு இருந்த யாருக்கும் பிடிக்கவில்லை என்பது அனைவரின் முகபாவனைகளில் இருந்து தெரிந்து கொண்டாள் நிலா.இதில் நாம் பேச என்ன இருக்கிறது என்பதைப் போல் அமைதியாக சாப்பிட…தீபா அந்த சூழ்நிலையை சங்கடமாய் உணர்ந்தாள்.திருந்துவார் என்று எண்ணிய பாட்டி இன்னமும் அப்படியே இருப்பது அவளுக்கு அவமானமாய் இருந்தது.

முரளிக்கோ எரிச்சலாய் இருந்தது….இருந்தாலும், இங்கு தான் பேசினால் சரி வராது என்று உணர்ந்தவர் சூர்யாவைப் பார்க்க….அவன் கை சாப்பிடாமல் சாப்பாட்டை பிசைந்தவாறே இருந்தது.

ஜக்கு…”என்ன எல்லாரும் அப்படிப் பார்க்குறிங்க…?இதுக்கு முன்னாடி என்னைப் பார்த்ததே இல்லையா…?” என்றவர் அதிகாரமாய் டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

என்னடி பார்த்துகிட்டு இருக்க…ஒரு மாமியார் வந்து உட்கார்ந்திருக்கேன்… சாப்பிட சொல்லனும்ன்னு தோணுதா….?உன்னை சொல்லி என்ன செய்ய…, எல்லாம் வளர்ப்பு அப்படி…” என்று மகேஷ்வரியை வார்த்தைகளால் வதைக்க…செய்வதறியாது திகைத்த மகி…அவருக்கு வேக வேகமாய் பறிமாறினார்.

தீபா சாப்பிட பிடிக்காமல் எழுந்திருக்க…அவளைப் பார்த்தவாறே சாப்பிட துவங்கினார் ஜக்கு.ஒரு வாய் வைத்தவர்..”த்தூ….சாப்பாடா இது…..ஒரு உப்பில்லை..உரப்பில்லை…இதை எல்லாம் மனுஷன் சாப்பிடுவானா…?” என்று துப்ப…”அதனால தான் உங்களுக்கு போட்டுருக்காங்க…” என்று முனுமுனுத்தாள் ரம்யா.

முதல்ல எழுந்து வெளிய போங்க…!”என்று கத்தினான் சூர்யா முகம் சிவக்க….அவனின் கோபத்தில் நிலாவே ஒரு நிமிடம் திகைத்து போனாள்.

ஜக்கு…”என்ன அப்பு சத்தம் எல்லாம் பலமா இருக்கு…..என்னைய என்ன ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சியா..? சட்டம் பேசி தான என் வாய அடச்ச…சரி நீ சொன்னது சரிதான்….இதோ இந்த சிறுக்கி…அதான் உன் ஆத்தா இருக்குறப்போ சுதாவைக் கல்யாணம் பண்ணி வச்சது தப்புதான்…இப்போ என் மகன் இவ வீட்ல இல்ல வந்து இருக்குறான்.அப்ப நானும் இங்க தான இருக்கனும்….பெத்த தாயைப் பார்த்துக்கலைன்னா தூக்கி ஜெயில்ல போட்டுடுவங்களாமே…! நான் சொல்லலை அப்பு…சட்டம் சொல்லுது…. வேணுமின்னா உன் பொண்டாட்டி வக்கீலு தான கேட்டுப் பாரு..” என்று அன்று சூர்யா சொன்னதைப் போலவே சொல்ல….சூர்யா அடைந்த எரிச்சலுக்கு அளவே இல்லை.

“இந்த கிழவி லேசு பட்ட கிழவியா இருக்காது போல இருக்கே….! ம்ம்ம்ம்….இந்த போடு போடுது…பாவம் அத்தை..இப்பவே இவ்வளவு பேச்சு வாங்குனா….கல்யாணம் ஆன புதுசுல எவ்வளவு பேச்சு வாங்கியிருப்பாங்க..!” என்று மனதிற்குள் ஜக்குவை திட்டிக் கொண்டிருந்தாள் ரம்யா.

“இனி நானும் இங்க தான் இருப்பேன்…எனக்கு தங்குறதுக்கு ரூம் ஏற்பாடு பண்ணு..!” என்று மகியிடம் அதிகாரமாய் கூறியவர்…நிலாவைப் பார்த்து…. “இந்தா பொண்ணு…போய் நல்லா திக்கா ஒரு காப்பி போட்டு கொண்டு வா..!” என்றார் நிலாவிடம்…..கோபத்தில் சூர்யா எதையோ சொல்ல போக… மகியோ வேண்டாம் என்பதைப் போல் தலையை ஆட்டினார்.பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான்.

ஜக்குவை மேலும் கீழும் பார்த்த நிலா….மகியைப் பார்க்க….என்ன நினைத்தாளோ தெரியவில்லை…வேகமாய் சமயலறைக்குள் சென்றாள். ஆனால் அதைப் பார்த்த ரம்யாவிற்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை.

“இந்த நேரத்துல கூட உனக்கு சிரிப்பு வருதா…?இருந்தாலும் எங்க பாட்டி இருக்கே சரியான எமகாத பாட்டி…” என்று தீபா சலித்துக் கொள்ள…”நான் அதுக்கு சிரிக்கலை…நிலா காபி போட போய்ருக்கா இல்லையா…?அதை நினைத்து சிரித்தேன்…” என்றாள் ரம்யா.

ஏன்..!அண்ணி கோபத்துல சர்க்கரைக்கு பதிலா உப்பை போட்டுடுவாங்களா..? என்றாள் தீபா சந்தேகத்துடன்.

ரம்யா..”அட நீ வேற தீபா…அவளுக்கு காபியே போட தெரியாது…அப்படியே  போட்டாலும் அது காபி மாறி இருக்காது….அவ சமையல என்னைக்கு நாம சாப்பிடுறோமோ..! அன்னைக்கு தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்குற கடைசி நாள்…நல்ல வேளை பாட்டி காபி மட்டும் கேட்டது….ஒரு வேளை சமைக்க சொல்லியிருந்தது,….ஜக்கு பாட்டி  டிக்கெட் வாங்கியிருக்கும்…” என்றாள் ரம்யா.

ரம்யா சொன்ன விதத்தில் தீபா சத்தமாய் சிரிக்க….அவளை முறைத்த ஜக்கு…”இன்னும் நீ இப்படி சிரிக்கிறத நிறுத்தவே இல்லையா…? ” என்று திட்ட…ஜக்குவை எதிரி போல் பார்த்தான் ஜீவா.

“டேய் என்னடா நடக்குது இங்க..?இப்ப எதுக்காக இந்த கிழவி இப்படி வந்து பிரச்சனை பன்னுது..?” என்றான் ஜீவா சூர்யாவிடம்.

சூர்யா…”வேற எதுக்காக…,இங்க வந்து இப்படி பிரச்சனை பண்ணினா அப்பா எரிச்சலாகி அவங்க கூட கிளம்பிடுவார்ன்னு கணக்குப் போட்டு இங்க வந்திருக்காங்க…அவங்க நோக்கம் இங்க இருக்குறதா இருக்காது… அப்பாவை இங்க இருந்து அடியோட கூட்டிட்டு போறதாத்தான் இருக்கும்… பார்த்துக்கறேன்..” என்றான்.

நிலா பவ்யமாய் வந்து காபியை நீட்ட….எகத்தாளமாய் அதை வாங்கினார் ஜக்கு.”காபியை வாங்கி வாயில் வைத்தவரின் முகம் அஷ்ட்ட கோணலாகியது….ச்ச்சீ….காபி போடுன்னா….இவ்வளவு சக்கரையா போடுவ…. காபி தண்ணியா…இல்லை சக்கரைத் தண்ணியா…? ஒழுங்கா ஒரு காபி போட தெரியலை…உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு..!  என்று ஜக்கு திட்ட…

அத்தை வார்த்தைய அளந்து பேசுங்க….!அவ என் பொண்ணு….” என்றார் பிரபு.

வாடாப்பா….உன் பொண்ணுன்னா….,இதோ உன் பொண்டாட்டி இவளை பத்து மாசம் சுமந்து பெத்தாளா… எவனோ பெத்த பிள்ளைக்கு என் வீட்டு பிள்ளை அப்பனா..? அதான் கல்யாண மண்டபத்துல பார்த்தேனே..! இவளை ஒருத்தன் சொந்தம் கொண்டாடிட்டு வந்ததை….ஆமா உனக்கு அப்பன்…ஆத்தா இருக்காங்களா….இல்லை உன்னை  ஊர் மேய விட்டுட்டு போய் சேர்ந்துட்டாங்களா…?” என்று சொல்லி முடிக்கும் முன்…சூர்யா கத்திய கத்தல் அந்த வீடே எதிரொலித்து நின்றது.

இந்த அளவுக்கு தான் உங்களுக்கு மரியாதை…..என்றவன்…முரளியின் பக்கம் திரும்பி..”இதோ பாருங்க…அவங்க இந்த வீட்ல தான் இருப்பேன்னு சொன்னா…ஒரு ஓரமா ஒருக்க சொல்லுங்க.அதை விட்டுட்டு இந்த அதிகாரம் பன்றது..ஆணவமா பேசுறது…இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்க வேண்டாம்ன்னு சொல்லி வைங்க….”என்றவன் ஜக்குவின் புறம் திரும்பி…”ஊர் மேயறதோ….இல்லை தெரு மேயறதோ…நானும் என் பொண்டாட்டியும் சேர்ந்தே மேஞ்சுக்கறோம்….என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசுறது இது தான் முதலும் கடைசியும்…ஜாக்கரதை….” என்று  மிரட்டியவன்…நிலாவின் பக்கம் திரும்பினான்.

“யார் என்ன சொன்னாலும் இப்படி தான் கேட்டுகிட்டே இருப்பியா…நீ ஒரு வக்கீல் தான….உனக்கு திருப்பி பேசத் தெரியாது…..சும்மா ரோட்ல அடிபட்டவனுக்காக எல்லாம் பக்கம் பக்கமா பேசுன…இப்ப உனக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது இப்படி கல்லு மாதிரி நிக்குற….எல்லா நேரமும் நானே பேசுனா…அது எனக்கே எரிச்சலா இருக்கு…இனியாவது கண்டவங்கள பேசவிட்டு வேடிக்கை பார்க்காம…..வெட்டு ஒன்னுன்னா… துண்டு ரெண்டா இருக்கனும்…” என்று நிலாவிடம் சொன்னவன்..”அம்மா இது உங்களுக்கும் பொருந்தும்…” என்று போற போக்கில் ஜக்குவை ஒரு முறை முறைத்து விட்டு சென்றான்.

“அடிச்சான் பாரு மச்சான் நெத்தியடி…..! சும்ம சொல்லக் கூடாது…என் நண்பனும் விடாக் கொண்டன் தான் இல்லையா தீபு டார்லிங்…” என்றான் ஜீவா.

“வீட்ல என்ன நடக்குது இப்ப இந்த கொஞ்சல் எல்லாம் ரொம்ப முக்கியம்….”என்று அவள் பல்லைக் கடிக்க…

“இதென்ன வம்பா போய்டுச்சு… அதுக்காக உன் பாட்டி வருஷமெல்லாம்  பிரச்சனை பண்ணுவாங்க…அதை பார்த்துட்டே இருக்கனுமா…அது ஒரு பக்கம் போய்ட்டே இருக்கட்டும்…..நம்ம வேலையும் ஒரு பக்கம் போய்ட்டே இருக்கனும்… அப்பதான் என்னை அப்பான்னு சொல்லவும்,உன்னை அம்மான்னு சொல்லவும் ஒரு அழகு குழந்தை பிறக்கும்….இது நான் சொன்னது இல்லம்மா…நம்ம முன்னோர்கள் சொன்னது…” என்ற ஜீவா அவளிடம் இருந்து அடி விழும் முன்னே எஸ்கேப் ஆகினான்.

ஜக்குவை ஆழ்ந்து பார்த்த நிலா….”நான் அமைதியா இருக்குறதுனால எனக்கு பேசத் தெரியாதுன்னு எல்லாம் இல்லை….நான் வாய திறந்தா….நீங்க கண்ண மூடிடுவிங்க..வசதி எப்படி…நீங்க தான் முடிவு பண்ணனும்…அப்பறம் அத்தைய இனி ஒரு வார்த்தை தப்பா பேசுனிங்க….நான் பேச மாட்டேன்…நீங்க சொன்ன சட்டம் தான் பேசும்..” என்றபடி நிலா மகியிடம் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

“போங்கடி போங்க…என்னை யாருன்னு நினைச்சிங்க…..நான் வந்த வேலை முடியுற வரைக்கும்…உங்களை எல்லாம் படுத்தி எடுக்கலை நான் ஜக்கம்மா இல்லடி….!கேடுகெட்டவளுக்கு பேச்சைப் பாரு பேச்சை…” என்று மனதில் நினைத்தபடி மகியைப் பார்க்க அவரும் கண்டும் காணாமல் சென்று விட்டார்.

நடந்தை எல்லாம் பார்த்த முரளி…”நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்….இப்படியே விட்டா யாருமே நிம்மதியா இருக்க முடியாது…” என்று ஒரு முடிவெடுத்தார் முரளி. ஆனால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை,…… ஜக்கு அவருக்கு மேல் கணக்கு போடுபவர் என்று.யார் கணக்கு சரியாகும் என்று யார் அறிவார்…?

இப்போ கண்டிப்பா அவன் கிட்ட கேட்கனும் அந்த போட்டோ பற்றி..” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்…எதிரில் இருந்த சூர்யாவை கவனிக்காது அவன் மேலேயே முட்டிக் கொண்டாள்.ஸ்ஸ்ஸ்ஸ்…என்று தலை தேய்த்துக் கொள்ள…சூர்யா கடுப்பானான்.”ஏதோ கல்லுல மோதுன மாதிரி தலைய வேற தேய்ச்சு விட்டுக்கறா…?” என்று கடுப்பானான்.

நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு சொன்னேன்…!”என்றாள்.

சூர்யா…”நானும் பேசுன்னு சொன்னேன்..!” என்றான் சூர்யா.

நிலா..”நேத்து நான் அப்படி பேசியிருக்க கூடாது தான்….சாரி…ஆனா எனக்கு என்ன பன்றதுன்னே புரியலை…யாரையும் நம்ப முடியலை…அது மட்டும் தான் காரணம்….” என்று இழுக்க…

 

இதைத்தான் பேசனும்ன்னு சொன்னியா..?”என்றான் சூர்யா.

இல்லை…நான் ஒன்னும் கேட்கனும்…உங்களுக்கு வினோத்தை முன்னமே தெரியுமா…?” என்றாள்….மனதில் “இல்லைன்னு சொல்லு…இல்லைன்னு சொல்லு..” என்னும் வேண்டுதலுடன்.

சூர்யாவின் முகத்தில் அதிர்வலைகள் தெரிந்தது….அது இவளுக்கு எப்படி தெரியும்…இப்ப என்ன பன்றது  என்று ஒரு நிமிடம் யோசித்த சூர்யா…. “தெரியும்…” என்றான் ஒரு வார்த்தையில். அவனது பதில் நிலாவிற்கு முதல் அடியாக விழுந்தது.

உங்க லேப்டாப்பில் நீங்களும்,வினோத்தும் சேர்ந்த மாதிரி எடுத்த போட்டோ இருந்ததே…..அது நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்டதா…ஐ..மீன்…அது உண்மையா…?” என்றாள் நிலா.

ஆமாம்..! உண்மைதான்..” என்றான் சூர்யா…. இப்பொழுதும் ஒரே வார்த்தையில்.

நிலாவோ அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் இடிந்து போய் அமர்ந்துவிட்டாள்.அப்போ ரெண்டு பேரும் பிரண்ட்ஸா…..?அதையும் ஆமாம்ன்னு சொல்றான்…இப்ப என்ன பன்றது…?அப்ப நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸா,….? என்றாள் நிலா.

“ஆமாம்ன்னும் சொல்ல முடியாது….அதே சமயம் இல்லைன்னும் சொல்ல முடியாது…!” என்றான் சூர்யா.

சூர்யாவின் சட்டையைக் காலரோடு பிடித்தவள்…”அப்ப நடந்தது எல்லாம் தெரிந்து தான் என் கழுத்தில் தாலி கட்டுனிங்களா..? சொல்லுங்க….எல்லாம் தெரிஞ்சும் ஏன் தெரியாத மாதிரி இருந்திங்க….? சொல்லுங்க…சொல்லுங்கன்னு சொல்றேன்ல…” என்று அவனைப் பிடித்து குலுக்கினாள்.

ஆனால் சூர்யாவோ அவளை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றிருந்தான்.

 

Advertisement