Advertisement

முகவரி 25:

 

நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி…?எப்படி…? இது சாத்தியம். வினோத்தை….சூர்யாவுக்கு தெரியுமா…? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா…?தெரிந்து தான் எதுவும் தெரியாத நல்லவன் மாதிரி என் கழுத்தில் தாலியைக் கட்டினானா…? ஐயோ..!கடவுளே என்னை சுற்றி என்ன தான் நடக்குது…? என்று தனக்குத் தானே எண்ணி….நடந்தவைகளை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் நிலா. 

எப்படி யோசித்தும் நிலாவின் மனம்….  பார்த்த புகைப்படத்தை மறப்பேனா என்று சண்டித்தனம் செய்தது.சூர்யா,வினோத் இடையிலான உறவு  எப்படிப் பட்டது….? எதற்காக என்னை திருமணம் செய்ய வேண்டும். ஒருவேளை…. ஒருவேளை…இதெல்லாம் நாடகமாய் இருக்குமோ…?என்று நினைத்து கலங்கிக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு யோசித்தாலும் நிலாவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஒரு மனம் சூர்யாவை நம்பு என்று சொன்னால் இன்னொரு மனம் அவனை நம்பாதே என்று சொல்லியது.ஒரு மனம் சூர்யாவை நல்லவன் என்று சொன்னால் இன்னொரு மனம் அவனை கெட்டவன் என்று சொல்லியது.

யோசித்து யோசித்து அவளுக்கு தலை எல்லாம் வலிப்பது போல் இருக்க…அந்த அறையில் இருந்த மற்றொரு அறைக்குள் சென்றவள் கதவை அறைந்து சாத்தினாள்.நிலாவிற்கு இப்பொழுது யாரை நம்புவது என்றே தெரியவில்லை.நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் எதிர்பாராததாய் இருந்தது.

அனைத்தையும் யோசித்த நிலாவிற்கு தன் மீது தனக்கே கழிவிரக்கம் தோன்ற….கண்கள் கலங்கியது.அவளின் மனம் தன் அப்பாவின் அருகாமைக்காக ஏங்கியது.அப்பா…என்றவுடன் அவளது நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

அந்த காலை வேளையில்…. நவம்பர் மாத உறைய வைக்கும் பனியில்… டெல்லி மாநகரமே நிசப்தமாய் உறங்கிக் கொண்டிருந்தது.எந்த சீதோஷ்ன நிலையையும் அதிகம் தருவது டெல்லி மாநகர்.கோடை காலத்தில் அதிக வெப்பத்தையும்…,குளிர் காலத்தில் அதிக குளிரையும் உள்ளடக்கிய… யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள……இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரம்.

பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய டெல்லி மாகரில்….முக்கிய புள்ளிகள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் காலை ஐந்து மணியளவில் ஒரு வீட்டில் மட்டும் மங்கிய வெளிச்சம் காணப்பட்டது.அதிகாலையில் எழுந்த அந்த பெண் சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருக்க…. பின்னால் ஏதோ நிழலாடியது போல் இருக்க…திரும்பிப் பார்த்தார்.ஆனால் யாரையும் அங்கு காணவில்லை.ஏதோ பிரம்மை என்று நினைத்தவர் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தார்.

ஆனால் மீண்டும் அந்த நிழல் மறுபக்கம் வந்தது போல் இருக்க….மீண்டும் திரும்பிப் பார்த்தார்.யாரோ செல்வது போல் இருக்க…”யார்…?யார் இருக்கிங்க…?” என்றார் மெதுவாக.ஆனால் எந்த பதிலும் இல்லாமல் போகவே…அவருக்கு மனதில் லேசாக பயம் ஒற்றிக் கொண்டது.அதை வெளியில் காட்டாமல்…அமைதியாய் வெளியில் வந்து பார்க்க…அங்கு கும்மிருட்டாய் இருந்தது.

அந்த இருட்டு அவருக்கு அதிக பயத்தைத் தர…மீண்டும் சமயலறைக்குள் செல்ல திரும்பியவர்…ஆஆஆஆஆஆஆஆ” என்று கத்த…,பதிலுக்கு “ப்ப்ப்பேபேஆ” என்றது அந்த பெண் குரல்.அவரின் அந்த கத்தலைக் கேட்டு அனைவரின் தூக்கமும் கலைந்தது.

என்னம்மா..? என்னாச்சு…? என்றபடி வந்தாள் ரம்யா.”என்னாச்சு…? என்ன சத்தம்..?” என்றபடி அடுத்தடுத்து இறங்கி வந்தனர் உதயக் குமாரும்…பிரபுவும்.

அங்கே  மாலா…அந்த குளிரிலும் முகத்தில் வியர்வையுடன் நின்றிருக்க…. அருகில் நிலா.., தலையில் இருந்த மாஸ்க்கை கழட்டியவாறு….சிரிப்புடன் நின்றிருந்தாள்.ஆனால் மாலாவோ இன்னும் சகஜ நிலைமைக்கு திரும்பாமல் இருந்தார்.

ஏண்டி எருமை…நீ தூங்கிகிட்டு தான இருந்த..இங்க எப்படி எழுந்து வந்த..?” என்று தூக்கக் கலக்கத்தில் கடுப்புடன் கேட்டாள் ரம்யா.

ஹா..ஹா..அதுவா ரம்ஸ்…என்று அவளின் தோளில் கையைப் போட்டவள்…மாலா அம்மா மட்டும் தனியா வந்து வேலை பார்த்துட்டு இருந்தாங்களா..சரி போய் கொஞ்சம் உதவி பண்ணலாமேன்னு…என் தூக்கத்தை எல்லாம் தியாகம் பண்ணிட்டு வந்தா….ஏதோ பேயப் பார்த்த மாதிரி அம்மா இந்த கத்து கத்துறாங்கப்பா…!” என்றாள் அப்பாவியாய்.

நல்லவேளை…! நீ மாஸ்க்கை போட்டதால அம்மா கொஞ்சமா கத்துனாங்க.நீ மட்டும் எதுவும் போடாம அப்படியே வந்து இருந்த….. அப்பதான் அம்மா இன்னும் பயந்துருப்பாங்க…”என்றாள் ரம்யா.

ம்ம்ம்ம்..ரம்ஸ் உனக்கு கொழுப்பு கூடிப் போய்டுச்சு வேற ஒன்னும் இல்லை.நீ சொன்ன மாதிரி நாளையில் இருந்து உன்னை எழுப்பிக் கூட்டிட்டு வந்து உன் முகத்தை காட்றேன் பார்.அவ்வளவுதான் அம்மா பயந்து மயக்கமே போட்டுடுவாங்க,…”என்றாள்  நிலா.

என்ன நிலா விளையாட்டு இது…?பாரு மாலா எவ்வளவு பயந்துட்டான்னு. வரவர உன் விளையாட்டுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு…” என்று கடிந்து கொண்டார் உதய குமார்.

விடுடா…நிலாகுட்டி சின்ன பொண்ணு..ஏதோ விளையாட்டாய் செய்தா…,மாலா இதுக்கெல்லாம் போயா பயப்படுவ…?” என்று நிலாவிற்கு வக்காலத்து வாங்கினார் பிரபு.

அப்படி சொல்லுங்க பிரபுப்பா….என்று அவரிடம் ஹைபை தட்டிக் கொண்டாள்.மாலாவின் அருகில் சென்று அவரின் கன்னத்தில் முத்தமிட்டவள்…”மாலாம்மா சாரி….சாரி.நானும் நிறைய தடவை சொல்லிட்டேன்.இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம்ன்னு.ஆனா நீங்க கேட்டபாடில்லை.அதான் இப்படி பயம்காட்டினேன்.இந்த குளிர்ல இவ்வளவு சீக்கிரம் எழுந்தா…உடம்பு எதுக்காகும்…”என்று கடிந்து கொண்டாள்.    

அது அப்படியே பழகிடுச்சு நிலா குட்டி.நானே நினைத்தாலும் அந்த டைம்க்கு சரியா முழிப்பு வந்துடுது.நான் என்ன பன்றது…? அதான் வேலையாவது பார்க்கலாம்ன்னு எழுந்து வந்தேன்.ஆனா ஒரு நிமிஷம் உயிரே போய்ட்டது…” என்றார் நெஞ்சில் கை வைத்தவராய்.

ஐயோ…! உங்க பாச மழைய விடுஞ்சதுக்கு அப்பறம் வச்சுக்கக் கூடாதா..? பாருங்க என் தூக்கம் எல்லாம் கலஞ்சு போய்டுச்சு..என்றாள் ரம்யா கண்களைத் துடைத்தவாறு.

அடியே தூங்கு மூஞ்சி..போ..போய் நல்லா இழுத்துப் போர்த்தி தூங்கு என்று ரம்யாவிடம் உரைத்த நிலா….உதயகுமார் பக்கம் திரும்பி…”என்ன மசமசன்னு நிக்குறிங்க டாட்.ஜாக்கிங்க் போக வேண்டாம்.ம்ம்ம் கமான் குயிக்…என்றவள் பிரபுவையும் கிளம்ப சொல்லப் போக..அதற்குள் அவர் ரெடியாகி வந்தார்.

 

நிலா குட்டி நான் ரெடி.இவன் தான் சோம்பேறி.எனக்கென்னமோ இவன் இன்னைக்கு டேரா போட்டுடுவான்னு நினைக்கிறேன்.பார்த்தா பாவமா இருக்கு.அதனால் நாம மட்டும் போகலாமா..?” என்றார் பிரபு.

இருவரையும் முறைத்த நிலா…”ரெண்டு பெரும் கூட்டு களாவானிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.அதனால் ஒழுங்கா கிளம்பி வரனும் உதய். இல்லன்னா உங்களுக்கு கிடைக்கும் உதை…”  என்றாள் நிலா.

உதயக்குமார் பாவாமாய் சென்று …..ஜாக்கிங்க்ற்கு தயாராகி வந்தார்.ரம்யா கொட்டாவி விட்டபடி மறுபடியும் தூங்கப் போக…மூவரும் கிளம்பினர்.மாலா சிரித்துக் கொண்டே சமையலைக் கவனிக்க சென்றார்.

உதய குமார் டெல்லியில் புகழ் பெற்ற கிரிம்னல் லாயர்களில் ஒருவர். படித்தது எல்லாம் சென்னை தான் என்றாலும் தன் வாழ்வை டெல்லிக்கு மாற்றிக் கொண்டவர்.நிலாவிற்கு ஐந்து வயது இருக்கும் போது…இதய நோயாளியான உதய குமாரின் மனைவி இறைவனிடன் சென்று விட…அன்று முதல் இன்று வரை…தன் மகளுக்காக மட்டும் தன் வாழ்க்கையை வாழ்பவர்.செய்யும் தொழில் நேர்மையும்,நியாமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.அதை இன்று வரை கடைபிடித்தும் வருகிறார்.

உதய குமாரின் உயிர் என்றால் அது நிலாதான்.அவளும்….. அவருக்கு வாரிசு என்பதை அச்சுப் பிசகாமல் நிறைவேத்துவாள்.எப்பொழுதும் துடிப்புடன்… கலகலப்பாய் இருப்பாள்.தந்தையின் ரத்தம் அவள் உடம்பிலும் ஓட…தானும் வக்கீலுக்கு தான் படிப்பேன் என்று பிடிவாதமாய் நின்று..,அதையே படித்து…இப்பொழுது தன் தந்தையிடமே ஜூனியராக சேர்ந்திருக்கிறாள்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பிரபு நேராய் சென்றது தன் உற்ற நண்பன் உதயக் குமாரின் வீட்டிற்கு தான். அவர் வக்கீலாக பிராக்டிஸ் செய்து கொண்டிருந்த சமயம்.பிரபுவிற்கு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து…அவரை தங்கள் வீட்டு கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தனர் உதய குமாரும் அவரின் மனைவியும். இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் மாலாவையும் பெண் பார்த்து பிரபுவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.நிலா அப்பொழுது 6 மாதக் குழந்தையாக இருந்தாள்.

இரு குடும்பங்களும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருந்த போது தான்…நிலாவின் அம்மாவிற்கு இதய நோய் இருப்பது தெரியவர….அவரின் உடல் நிலை மோசமானது.ரம்யாவும் பிறந்து…,நிலாவையும் மாலாவே கவனித்துக் கொண்டார்.நிலாவும்…. மாலாவையே அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள்.எவ்வளவு மருத்துவம் பார்த்தும்…நிலாவின் அம்மா தேறவில்லை.நிலாவிற்கு  கொஞ்சம் விவரம் தெரியும் வயதில் அவர் இறந்து விட….அன்றில் இருந்து இன்று வரை மாலா தான் நிலாவிற்கு தாய்.

உதயை விட….பிரபுவுக்கும் மாலாவுக்கும் நிலா செல்லாமாகிப் போனாள்.ரம்யா கூட சில சமயம் கேட்பாள்.நான் மகளா..? இல்லை நிலாவா..? என்று.அப்பொழுது எல்லாம் மாலாவின் வாயில் இருந்து உடனே பதில் வரும்.”ரெண்டு பேருமே எனக்கு ரெண்டு கண்ணுதான்…” என்று.

“என்ன சொல்லுங்கப்பா…,இந்த காலைநேரத்தில் ஜாக்கிங்க் வரலைன்னா அன்னைக்கு நாளே முழுமையடையாதது போல இருக்கு…” என்றபடி ஓடினாள் நிலா.”உண்மைதான் நிலாகுட்டி…” என்றவாறு அவளுடன் சேர்ந்து ஓடிக் கொண்டிருந்தார் பிரபு.

“என்ன பிரபுப்பா…உங்க பிரண்ட்….,அவர் பிரண்ட பார்க்க போய்ட்டாரா. தினமும் நம்ம கூட தான் வரார்.ஆனா இடையிலையே காணாம போய்டுறார்.அப்படி யாரந்த பிரண்ட்ன்னு கண்டுபிடிக்கனும் …” என்றாள் நிலா.

“விடுமா..அவன் தொழில்ல அவனுக்கு தெரிஞ்ச நிறைய பேர் இங்க வராங்க.அதுல யார்கூடவாவது பேசிட்டு இருப்பானாக்கும்…” என்று அவர் தன் நண்பனைக் காப்பாற்ற…நிலா அவரை முறைத்தாள்.

நிலா பிரபுவை முறைத்துக் கொண்டிருக்கும் போதே உதய குமார் வந்து சேர்ந்தார்.”என்னப்பா…உங்க நண்பரைப் பார்த்துட்டிங்களா…?அது என்ன தினமும் அவரைப் பார்க்க போய்டுறிங்க…!அவ்வளவு பெரிய ஆளா.. அவரு..” என்றாள் நிலா கடுப்புடன்.

உதய்…”ஆள் பெரியவங்களா…சின்னவங்களா அப்படின்றது முக்கியம் இல்லை நிலா.எப்படிப் பட்டவங்க அப்படின்றது தான் முக்கியம் சரியா…” என்றார்.

காதைத் தேய்த்து விட்டுக் கொண்ட நிலா…”யப்பா சாமி..தெரியாம கேட்டுட்டேன்.காதுல ரத்தம் வருது…நீங்க பிரண்டைப் பார்க்க போனாலும் சரி…பிகரைப் பார்க்க போனாலும் சரி….இனி நான் எதுவும் கேட்க மாட்டேன்…போதுமா…” என்றாள் கும்பிட்டபடி.

உதய குமாரும்..பிரபுவும் சிரிக்க….நிலாவும் இவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டாள்.ஆனால் இவர்கள் சிரிப்பதை அங்கு இரண்டு ஜோடி கண்கள் வெறித்துக் கொண்டிருந்தது.

*********

மாலா சமைத்தவற்றை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.தனது காலேஜ் பேக்குடன் கீழே வந்த ரம்யா….”ம்ம்ம் வாவ் ஸ்மெல் சூப்பரா இருக்கே….பூரிக் கிழங்கு தான..”என்று தன் அரிய கண்டுபிடிப்பை சொன்னாள் ரம்யா.

ஆமா ரம்யா உங்களுக்கு பிடிச்ச பூரிக் கிழங்கு..பன்னீர் பட்டர் மசாலா தான். நிலா எங்க…?அவளையும் கூப்பிடு சாப்பிட…” என்றார் மாலா.

ஐயோ … அம்மா..!அவ வரதுக்குள்ள எனக்கு பசில உயிர் போய்டும்.பசி என்னும் நோய் என்னைத் தாக்காமல் காப்பது என்னைப் பெற்ற உங்களின் கடமை தாயே..!” என்றாள் ரம்யா.

காலங்காத்தாலயேவா….!”என்றபடி இறங்கி வந்தாள் நிலா.இளம் மஞ்சள் நிற சுடிதாரில்…கையில் கருப்பு கோட்டுடன்…விரிந்த கூந்தலை கிளிப்பில் அடக்கிய வண்ணம்  வந்தவளைப் பார்ப்பதற்கே பாந்தமாய் இருந்தது…”

வேகமாய் வந்தவள்….ரம்யாவை முந்திக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க…”அடியே திண்ணிப் பண்டாரம்.மெதுவா முழுங்கு…விக்கிக்க போகுது…” என்று கடிந்து கொண்டாள் ரம்யா.

நிலா சிரித்தவாறு அதே வேகத்துடன் சாப்பிட…”உன்னை எல்லாம் திருத்த முடியாது…” என்று சொல்லிய ரம்யா…”ஆமா இன்னைக்கு ஈவ்னிங் நீ  உனக்கு ஏதாவது வேலை இருக்கா…கொஞ்சம் ஷாப்பிங்க் போகனும்..” என்றாள்.

ம்ம்ம்ம்…,கோர்ட்ல இருந்து நேரா…டிஸைனிங் கிளாஸ்…அப்பறம் டான்ஸ் கிளாஸ்…அப்பறம் கிட்டார் கிளாஸ்…சோ….ம்ஹிம்ம்” என்று உதட்டைப் பிதுக்கினாள் நிலா.

ரம்யா..”பாருங்கம்மா…ஒரு நாள் தான கூப்பிடுறேன்.அதுக்கே இந்த பிகு பன்னிக்கிறா…ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன்.நீ தான் வக்கீல் ஆகிட்ட இல்லை.அப்பறம் எதுக்கு இந்த டிசைனிங் கிளாஸ் …லொட்டு லொசுக்கு எல்லாம்..” என்றாள் கடுப்பாக.

ரம்யா…வக்கீல் என்பது என்னோட ப்ரொபஷன்.நான் கிளாஸ் போறது …என்னோட ஹாபி.என்னோட பொழுது போக்கு கூட அர்த்தம் உள்ளதா இருக்கனும் என்பது தான் என்னோட ஆசை.இருந்தாலும் உனக்காக நான் இன்னைக்கு வரேன் போதுமா..”என்றாள் நிலா.

ம்ம்ம் இது போதும்.நிலான்னா நிலா தான்…ஓகே பாய்.எனக்கு காலேஜ்க்கு லேட் ஆகிடுச்சு..நான் வரேன்..” என்றபடி சிட்டாய் பறந்தாள் ரம்யா.

ரம்யா என்னதான் நிலாவிற்கு ஒன்னரை வருடங்கள் சின்னவளாக இருந்தாலும்…இருவரும் நல்ல தோழிகள்.பிரிக்க முடியாத பாசம் இவர்களிடையே பிணைக்கப் பட்டிருந்தது.

 

போராடுவோம்..!போராடுவோம்…! நீதி கிடைக்கும் வரை போராடுவோம்…!

கைது செய் ..!கைது செய்..! கயவனை கைது செய்..!

நீதி எங்கே..!நேர்மை எங்கே…!பெண்ணுரிமை எங்கே…!

என்று போராட்டக் குரல்கள் முழங்கிக் கொண்டிருந்தது.நிலா முதல் ஆளாய் நின்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தாள்.

தினம் ஒரு கொலை…கொள்ளை …..கற்பழிப்பு நடப்பதும்…அதற்காக மக்கள் கோஷங்கள் எழுப்புவதும் டெல்லி மாநகரில் தினமும் நடக்கும் அன்றாட விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டிருந்தது.கல்லூரி மாணவிகள் வரிசையாக மூன்று பேர் காணாமல் போய்….அடுத்தடுத்து சடலங்களாய் மீட்கப் பட்டிருந்தது…… அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

திரும்ப கிடைத்த பெண்களின் சடலங்கள் அனைத்தும்…,அவர்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப் பட்டு கொல்லப் பட்டிருப்பதை படம் பிடித்துக் காட்டின.நகர் முழுவதும் இப்பிரச்சனை தீயாய் பரவ… அதற்காகத்தான் இந்த கரகங்களும்..,கோஷங்களும்.

பிணம் தின்னும் கழுகுகள்….இப்பொழுது உயிருள்ள பெண்களையும் திண்ண ஆரம்பித்து விட்டன.” என்று சொல்லி… “போராடுவோம்.. போராடுவோம்..!” என்று நிலா கத்திக் கொண்டிருந்தாள்.அவளின் குரலிற்கு ஏற்ப பின்னால் இருந்த மகளிர் அமைப்பினரும் கோரசாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு ஜோடிக் கண்கள் அவளை வெறிக்க….ஒரு ஜோடி காதுகள் அவளது குரலை ரசித்துக் கொண்டிருந்தது.கூட்டத்தில் அவளது முகம் சரியாக தெரியவில்லை.ஆனால் பின்னால் இருந்த வாகன ஓட்டிகளுக்கு அவளது குரல் கணீர் கணீரென்று கேட்டது.

அவளது குரலைக் கேட்டு ரசித்தவனின் கண்கள்…அவளைப் பார்க்க துடிக்க…கடைசிவரை அது முடியாமல் போனது.

அதே சமயம் நிலாவின் போன் அடிக்க,….அதை எடுத்து ..”ஹலோ..” என்றாள்.

என்னடி ஹலோ..!காலைல நீ என்ன சொன்ன…இன்னைக்கு என்னோட ஷாப்பிங் வரேன்னு சொன்னியா இல்லையா…?ஆனா இன்னும் நீ வந்தபாடில்லை….இன்னைக்கு எங்க வழக்கடிச்சுகிட்டு இருக்க..ஒரே சத்தமா இருக்கு..கிளாஸ்  போகலையா..?”  என்று ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தாள் ரம்யா.

ஐயோ ரம்ஸ்….காது வலிக்குது..கொஞ்சம் நிறுத்து.நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.நீ வெயிட் பன்னுடி…”என்றாவாரு போனை துண்டித்தாள்.

 

நிலா அவசர அவசரமாய் அருகில் இருந்த ஒரு பெண்ணிடம்….தன் கையில் இருந்த அட்டையைக் கொடுத்துவிட்டு…அவரிடம் ஏதோ சொன்னவள்… வேகமாய் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

நிலாவின் குரலை ரசித்த அந்த காதுகளுக்கு சொந்தக்காரன்…ஒருவழியாய் கூட்டத்தை விலக்கி விட்டு முன்னால் வர….அங்கு நிலாவின் குரலும் ஒலிக்கவில்லை…நிலாவும் இல்லை.

உங்க பக்கத்துல ஒருத்தவங்க சுடிதார் போட்டு நின்னு இருந்தாங்களே..! அவங்க எங்க..?” என்றான் அருகில் இருந்த பெண்ணிடம்.”அவங்க இப்பதான் போனாங்க…” என்ற அந்த பெண்ணின் பதிலில்..அவனது முகம் ஏமாற்றத்தைக் காட்டியது. 

ஆனால் அவளை வெறித்த கண்களோ….அவளைப் பின்தொடர்ந்தது.அவளது ஒவ்வொரு செயல்களும் அந்த கண்களால் கண்காணிக்கப் பட்டது.தனக்கு பின்னால் ஆபத்து ஒன்று தொடர்வதை அறியாத நிலா….உற்சாகமாய்…. பிரபலமான சிட்டிவாக் ஷாப்பிங் மாலை அடைந்தாள்.

 

முகவரி 26:

 

நிலாவின் மீது சரியான கோபத்தில் இருந்தாள் ரம்யா.ஆனால் நிலாவோ எதுவும் நடக்காதது போல் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

எருமை…எருமை….காலைலயே சொன்னேன்லடி….சரி…சரின்னு தலைய ஆட்டிட்டு….மேடம் உங்க சமூக சேவைய பார்க்க போய்ட்டிங்கலோ…! நீயெல்லாம் நல்லா வருவடி…” என்று காய்ச்சி எடுத்தாள் ரம்யா.

ரம்யா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….என்னை முகத்துக்கு நேரா புகழாதன்னு…எனக்கு வெட்க வெட்கமா வருது….” என்று நேரம் காலம் தெரியாமல் ரம்யாவின் கோபத்தை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தாள் நிலா.

அடியே…!உன்னை..உன்னை..என்று பல்லைக் கடித்த ரம்யா…”போடி..” என்றவாறு கோபித்துக் கொண்டு போக…சரி..சரி…வா..” என்றவாறு ரம்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு போனாள் நிலா.

சிட்டி வாக் ஷாப்பிங் மால் எப்பொழுதும் போல் பரபரப்பாய் இருக்க….”ஏய் கையை விடுடி எருமை….எங்கடி இப்படி இழுத்துட்டு போற..”என்று கடுப்புடன் ரம்யா கேட்க…

ம்ம்ம்ம்….பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் பிடிச்சு பாரிஸ் கூட்டிட்டு போறேன்…,பேசாம வா…” என்றவாறு அவளை தள்ளிக் கொண்டு போனாள் நிலா.

நீ பேச்சை மாத்தாத…எங்க போய்ருந்த இவ்வளவு நேரமா….கோர்ட்ல இருந்து நீ அப்பவே கிளம்பிட்டதா உதய் அப்பா சொன்னாரே…! கிளாஸ்க்கும் போகாம…எங்க போய் எந்த வம்ப இழுத்து வச்சுருக்க..” என்றாள் ரம்யா.

ஷ்ஷ்ஷப்பா,…”என்று மூச்சை உள்ளிழுத்த நிலா…”அதுவா…அந்த மூணு பொண்ணுங்க ரேப்பிங் கேஸ் இருக்குள்ள…அந்த விஷயமா..மகளிர் அணி சார்பா இன்னைக்கு ஒரு போராட்டம்…அதுக்கு தான் தலைமை தாங்கிட்டு வரேன்..” என்றாள் கூலாக..

ஆரம்பிச்சுட்டியா…அம்மாதான் அதுக்கு எல்லாம் போக கூடாதுன்னு சொன்னாங்கல்ல….எல்லாரும் அப்படியா இருக்காங்க..? நீ மட்டும் ஏன் இப்படி பிரச்சனைய விலை குடுத்து வாங்குற…”என்று தலையில் அடித்துக் கொண்டாள் ரம்யா.

அய்யோ கிழவி…ஆரம்பிக்காதடி….நான் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவேனாம்…நீயும் சமத்தா சாப்பிடுவியாம்…அப்பறமா ரெண்டு பேரும் சேர்ந்து ஷாப்பிங்க முடிச்சுட்டு வீட்டுக்கு போவோமாம்…சரியா…” என்றாள் நிலா தலையை ஆட்டி….ஆட்டி.

ஐஸ் கிரீம் என்ற வார்த்தையில் அமைதியான ரம்யா…அப்பொழுதுதான் கவனித்தாள்….சற்று தள்ளி ஒரு ஓரமாய் நின்று…,ஒருவன் நிலாவையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பதை.

 

எதுக்குடி இப்படி முழிக்கிற…?” என்று நிலா கேட்க..”நிலா சட்டுன்னு திரும்பி பார்க்காத..ஆனா அங்க ஒருவன் உன்னையே பார்த்துட்டு இருக்காண்டி…அவன் பார்வையே சரி இல்லை….” என்றாள் ரம்யா.

அப்படியா….?யாரா இருக்கும்…என்று நிலா மெதுவாக திரும்ப…அங்கே ரம்யா சொன்ன இடத்தில் யாரையும் காணவில்லை….”

அங்க யாரும் இல்லை ரம்ஸ்….உன்னோட பிரமையா இருக்கும்…சரி வா நாம போய் நம்ம வேலைய பார்ப்போம்…!”என்று சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டு போனாள்…வரும் ஆபத்தை அறியாமல்.

 

“என்ன உதயா….?அமைதியா உட்கார்ந்து அப்படி எதை பத்தி யோசனை பன்னிட்டு இருக்க..?” என்றார் பிரபு.

யோசனைகளில் இருந்து கலைந்த உதய குமார்…..”ம்ம்ம்ம்..அது ஒன்னும் இல்லை பிரபு…..எல்லாம் நிலாவை பத்தி நினைச்சாதான் ஒரே கவலையா இருக்கு.அவளை நான் லாயர் ஆக்கி இருக்க கூடாதோன்னு தோணுது….” என்றார் கவலையாய்.

பிரபு…”உனக்கு எப்படி இப்படி தேவை இல்லாத சிந்தனை எல்லாம் வருது.இப்போ நிலா லாயர் ஆனதுல உனக்கு என்ன கஷ்ட்டம்…?” என்றார் பிரபு.

“கஷ்ட்டம் எனக்கில்லை பிரபு….,நிலா லாயர் ஆனதுல சந்தோஷப்பட்ட முதல் ஆளும் நான் தான்.ஆனா இப்போ கவலைப் படுற ஆளும் நான் தான்…… நிலாவோட ஒவ்வொரு நடவடிக்கையும் எனக்கு பயத்தை தருது.ஒரு சீனியர் வக்கீலா இருந்து அவ வேகத்தை பார்க்கும் போது பெருமையா இருக்கு.அதேசமயம் ஒரு அப்பாவா இருந்து பார்க்கும் போது மனசுல கொஞ்சம் பயமும் வருது….நிலாக்கு இருக்குற துடிப்பும் வேகமும்…இந்ததுறைல ஆபத்து……..என்னை மாதிரியே என் பொண்ணையும் வளர்த்ததுக்கு இப்போ முதல் முறையா கவலைப் படுறேன்…” என்றார் உதய் கவலையுடன்.

 

“தேவையில்லாம மனசப் போட்டு குழப்பிக்காதடா….!நிலாவுக்கு தன்னைப் பாதுகாத்து கொள்ளும் பக்குவம் இருக்கு. சமயோசித புத்தியும் இருக்கு….”என்று பிரபு சொல்லிக் கொண்டிருக்கும் போதே…”அப்படி சொல்லுங்கப்பா…”என்றபடி வந்தாள் நிலா.அவள் பின்னால் ரம்யாவும்.

“என்ன அப்படி சொல்லுங்கப்பா…?இன்னைக்கு நீ என்ன காரியம் பண்ணி வச்சுருக்க.உன்னை யார் ரோட்ல எல்லாம் போய் போரட்டம் பண்ண சொன்னது….?” என்று கோபமாய்க் கேட்டார் உதய்.

நிலா”நீ தான் சொன்னியா..?” என்பதைப் போல் ரம்யாவை முறைக்க…. “என்னை ஏண்டி முறைக்கிற  எருமை…நான் உன் கூடதான இருந்தேன்..”என்று பதிலுக்கு எகிறினாள் ரம்யா.

“யாரும் சொல்ல தேவை இல்லை.அதான் எல்லா நீயூஸ் சேனல்லையும் போட்டு போட்டு காட்டுறானே..! நான் தான் சொன்னேன்ல நிலா……அந்த கேஸ் விஷயமா எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு.அப்ப எல்லாம் தலைய ஆட்டிட்டு…,அந்த அமைப்புக்கு ஆதரவா போனேன்…இந்த அமைப்புக்கு ஆதராவா போனேன்னா என்ன அர்த்தம்…?”என்றார் உதய் கோபமாக.

“இப்படியே விட்டா அந்த மூணு பொண்ணுங்களை கொன்னவன எப்படிக் கண்டு பிடிக்குறது.போலீஸ்காரங்க எனக்கென்னான்னு இருக்காங்க.நாலு அமைப்பு…நாற்பது பேர் போரட்டம் இப்படி போனாதான்…கொஞ்சமாவது இந்த கேஸ்ல போலீஸ் ஆக்சன் எடுப்பாங்க..”என்றாள் நிலாவும் கோபமாக.

நிலாவின் தலையைத் தடவிய உதய குமார்…”நிலா சொன்னாக் கேளுமா… போலீஸ் கண்டிப்பா குற்றவாளி யார்ன்னு கண்டு பிடிப்பாங்க.அது மட்டும் இல்லாம நான் தான் இருக்கேன்ல.ஒரு லாயரா நீ என்னை கண்டிப்பா நம்பலாம் நிலா……பட் நீ இந்த கேஸ்ல வராத….ஒரு பொண்ண பெத்த தகப்பனா என் கவலை உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.அப்படி புரியாவிட்டாலும் பரவாயில்லை….நீ எனக்கு ஜூனியர் தான்….. சோ நான் சொல்றதை கேட்க வேண்டியது உன்னோட கடமை.அதனால் இந்த கேஸ்ல இருந்து நீ விலகிடு.நீ தாக்கல் செய்த மனுவையும் வாபஸ் வாங்கிடு.இல்லை அதையும் நான் பார்த்துக்கறேன்…”என்று அன்பாய் ஆரம்பித்து கட்டளையில் முடித்தார்.

இரண்டு நிமிடம் யோசித்த நிலா….”ஓகே டாட்.பட் ஒரு கண்டிஷன் கண்டிப்பா நீங்க இந்த கேஸை எடுத்துக்கனும்…ஒரு அரசாங்க தரப்பு வக்கீலா…” என்றாள் நிலா.

ஒகே டன்…!”என்று உதய குமாரும் விரலை உயர்த்திக் காட்டினார்.

ரம்யா கவலையாய் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.”என்னடி ரம்ஸ்…எதுக்கு இப்படி ஒரு போஸ்ல உக்கார்ந்துருக்க..?”என்றாள் நிலா.

ரம்யா…”இல்லை நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன்…போலீஸ்ன்ற… கேஸுன்ற…தண்டனைன்ற..ம்ம்ம்ம்…ஒன்னும் மட்டும் நல்லா புரியுது…நீ கேஸ் கண்டுபிடிக்க போறேன்னு கடைசில லூஸாகப் போறேன்னு…” என்றாள்.

நிலா பல்லைக் கடிக்க….”சரி சரி..விடு….ஆமா கள்ளி சொல்லவே இல்லை…!” என்று நிலாவின் கன்னத்தை நிமிண்டினாள் ரம்யா.

ஏற்கனவே கடுப்பில் இருந்த நிலா…”என்னடி கள்ளி..மல்லின்னுட்டு…நான் என்னத்தை சொல்லலை…?” என்றாள்.

ம்ம்…உனக்கு தெரியாதா….உனக்கு கூடிய சீக்கிரம் டும்..டும்…டும்…. கொட்ட போறாங்களே..!” என்றபடி ஓடிவிட்டாள் ரம்யா.

என்ன டும்..டும்..டும்…லூசு என்று திரும்பிய நிலா..அதன் அர்த்தம் புரிய…”அப்பா அவ என்ன சொல்லிட்டு போறா…? என்ன டும் டும்…? யாருக்கு..?” என்றாள் புரியாமல்.

பிரபுவும்…..,உதய குமாரும் சிரித்துக் கொள்ள…”ம்ம் உனக்கு தான்…கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கோம்.இந்த கவர்ல மாப்பிள்ளை போட்டோ இருக்கு.. மத்த எல்லா விஷயமும் பத்தி டீட்டெயிலா இருக்கு…..” என்றபடி கொடுத்தார் உதய்.

பிரபுப்பா….!என்ன இது…இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்…?” என்று சிணுங்கியபடி கவரை வாங்கினாள் நிலா.”ஆமா மாப்பிள்ளை எப்படி பிரபுப்பா..?” என்றாள்.

 

எங்கம்மா…இவன் இன்னும் எங்ககிட்டையே போட்டோவைக் காட்டலை.உனக்கு பிடிச்சு இருந்த மட்டும் தான் எங்ககிட்ட எல்லாம் காட்டுவேன்னு சொல்லிட்டான்…” என்று உதட்டைப் பிதுக்கினார் பிரபு.

நானும் பார்க்கவே போறதில்லை பிரபுப்பா…!”என்று மனதில் நினைத்த நிலா…,”பார்த்துட்டு அப்பறமா என் முடிவை சொல்லுறேன் டாட்…”என்றபடி சென்றுவிட்டாள்.

எப்படியும் மகள் கண்டிப்பாய் சம்மதம் சொல்லிவிடுவாள் என்று முழுமனதார  எண்ணினார் உதய குமார்.ஆனால் அவரின் ஆசை வெரும் கனவாகவே போய்விடும் என்று அப்பொழுது அவர் அறிந்திருக்கவில்லை.

நிலாவைக் கல்யாணம் செய்து அனுப்ப வேண்டும் என்ற நினைவே மாலாவிற்கு கஷ்ட்டமாய் இருந்தது.ரம்யா இல்லாமல் கூட மாலா இருந்து விடுவார்.ஆனால் நிலா இல்லாமல் அவரால் ஒரு நாளும் இருக்க முடியாது.அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.ரம்யா எப்பொழுதும் தன் விஷயங்களைத் தானே கவனித்துக் கொள்வாள்.ஆனால் நிலா அப்படி அல்ல.எல்லா விஷயங்களிலும் நிலா…மாலாவை எதிர்பார்ப்பாள்.அதே போல் மாலாவிற்கு உடம்பிற்கு ஏதாவது என்றாள் ரம்யா துடிப்பதை விட நிலா இரண்டு மடங்காய் துடிப்பாள்.இப்படியாக அவர்களுக்குள் பாசம் என்னும் நூல் கயிறு இறுக்கமாய் பிணையப் பட்டிருந்தது.

ஏய் மாப்பிள்ளை போட்டோவா…? குடுடி பார்ப்போம்” என்று ரம்யா பிடுங்கப் போக…”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரம்ஸ்..” என்று தர மறுத்து விட்டாள் நிலா.

ஏண்டி…!நான் பார்க்கக் கூடாதா..?” என்றாள் ரம்யா பாவமாய்.

அடி லூசே…அந்த போட்டோவை நானே பார்க்க போறதில்லை.அப்பறம் எதுக்கு நீ பார்க்கிற…இந்த சேப்டர் குளோஸ்…” என்றாவாறு அந்த போட்டோவை அங்கிருந்த ஷெல்பில் போட்டு விட்டாள்…”

அதன் பிறகு நிலாவும் அந்த போட்டோவை மறந்து விட்டாள்.”பிறகு பார்த்துக் கொள்ளலாம்..” என்று எண்ணிய ரம்யாவும் அதை மறந்துவிட்டாள்.

 

நிலா அந்த போட்டோவை அப்போதே பார்த்திருந்தாள்…? விதி தனது விளையாட்டில் காய்களை நகர்த்துவதற்கு தயாராய் இருந்தது.

ஆனால் அங்கு நிலாவின் குரலைக் கேட்டு ரசித்தவனோ…..! பித்துப் பிடித்ததைப் போல் அமர்ந்திருந்தான்.இப்பொழுது மட்டுமல்ல…இதோடு மூன்றாவது முறையாக அவளின் குரலை மட்டும் கேட்டு ரசித்தவன்.. அவளைப் பார்க்கத் துடிக்க…அதை அறியாத நிலா….எப்பொழுதும் போல் அவன் வருவதற்குள் அந்த இடத்தை விட்டு சென்றிருப்பாள்.அவளுடனான முதல்  சந்திப்பு அவனது மனக்கண்ணில் விரிந்தது.

ஒரு நாள்….. சாலையில் நடந்த விபத்தை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க…அங்கு கூட்டம் கூடியதே தவிர…யாரும் உதவிக்கு முன் வந்த பாடில்லை.ஆனால் அதே சமயத்தில் அங்கு சரியாய் வந்த நிலா…அங்கிருந்த அனைவரையும் ஹிந்தியில்  ஏக வசனத்தில் திட்டத் தொடங்கினாள்.

பரவாயில்லையே..!நல்லா வேடிக்கை பார்க்குறிங்க…!ஒரு சேர் எடுத்துட்டு வந்து உட்கார்ந்து பார்க்கலாம்ல…பாவம் உங்களுக்கு எல்லாம் கால் வலிக்கும்…” என்று இடக்காய் சொன்னவள்….”உங்களுக்கு எல்லாம் அறிவில்லை…வேடிக்கை பார்த்த நேரத்திற்கு…இன்னேரம் அவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருந்தா…அவர் உயிராவது மிஞ்சி இருக்கும்.அதெல்லாம் விட்டுட்டு.. எப்பப் பார்….எந்த ஆக்சிடெண்ட் நடந்தாலும்…வயசுப் புள்ளைய பார்த்த மாதிரி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு நிக்க வேண்டியது…. விலகுங்க சார்…” என்று சொல்லும் போதே அவள் சொன்ன ஆம்புலஸ் வர…அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தான் வந்த ஆட்டோவை நோக்கி சென்றாள்.

ஆனால் இவளது கணீர் குரலில் ஈர்க்கப் பட்டவன்…ஓடி வந்து பார்த்தது… ஆட்டோவில் ஏறிய அவள் பின்புறத்தை தான்.அவளைத் தொடர முடியாமல்   வந்த வேலை தடுக்க…வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பினான் அவன்.

இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தவனுக்கு…இன்று நடந்ததும் நியாபகத்திற்கு வர…அவளைப் பார்த்தே ஆக வேண்டும்…என்ற முடிவை எடுத்தான்.

ஒவ்வொரு நாளும் அந்த குரல் அவனை இம்சை படுத்தியதைப் போல் இருந்தது.அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது.அந்த உணர்விற்கு பெயர் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை.

ஒரு வாரம் சென்ற நிலையில்……

நிலா கோர்ட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்க…..அப்பொழுது அங்கு வந்தார் உதய குமார்….”நிலா நான் அன்னைக்கு உன்கிட்ட ஒரு மாப்பிள்ளைப் போட்டோ குடுத்தனே….! அதைப் பார்த்தியாம்மா…?” என்றார் எடுத்த எடுப்பில்.

ஐயோ..! இப்ப அப்பாகிட்ட என்ன சொல்றது…அந்த கவரை எங்க வச்சேன்…” என்று மனதில் நினைத்த நிலா…”எதுக்குப்பா கேக்குறிங்க….? உடனே என் பதிலை சொல்லனுமா…?” என்றாள் சற்று தாங்கலாக.

முகம் சோர்ந்தவராய்…..”இல்லம்மா பார்க்கலைன்னா….இனியும் நீ அதைப் பார்க்க வேண்டாம்மா..!” என்றார் உதய குமார்

.ஏன் டாட்..?என்னாச்சு….என்ன பிரச்சனை….ஒருவேளை மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிக்கலையா…?” என்றாள் மனம் முழுதும் மகிழ்ச்சியுடன்.

உதய குமார்…”அதெல்லாம் ஒன்னும் இல்லை நிலா….அந்த பையனுக்கே தெரியாம தான் நான் அவன் போட்டோவை உன்கிட்ட கொடுத்தேன்.ஆனா இன்னைக்கு எதேச்சையா பார்க்கும் போது….இதைப் பத்தி பேசினேன்.பட் அவன்  இன்னொரு பெண்ணை காதலிக்கிறதா சொல்லிட்டான்…” என்றார் விளக்கமாய்.

முகம் தெரியாத அந்த மனிதனை நினைத்து….மனதிற்குள் விசில் அடித்தாள் நிலா.அப்பாடா….அவன் யாரா இருந்தாலும் நல்லா இருக்கட்டும்… ” என்று நினைத்தவள்…,வெளியில் முகத்தை கவலையாய் வைத்துக் கொண்டாள்.

நிலாவின் கவலையான முகத்தைப் பார்த்தவர்….”கவலைப் படாத நிலா…! அந்த பையன் மட்டும் சரின்னு சொல்லி இருந்தா நான் ரொம்ப சந்தோஷப் பட்டு இருப்பேன்.இருந்தாலும் ஒன்னும் கெட்டுப் போகலை…நீயும் அந்த போட்டோவைப் பார்க்கலை……அதுவும் நல்லதுக்குதான்.ஏன்னா  இப்போ…மிஸ்டர் ருத்ரமூர்த்தி  இருக்கார் இல்லையா…அவர் பையன் வினோத்க்கு உன்னைப் பெண் கேக்குறாங்க நிலா” என்றார்.

ஐயோ டாட்….இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை…..என்னைக் கடத்துறதுலையே குறியா இருக்கிங்க…எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்.எனக்குன்னு வாழ்க்கைல சில லட்சியங்கள் இருக்கு…..அது எல்லாம் நிறைவேறினதுக்கு அப்பறம் தான் கல்யாணம் எல்லாம்..” என்றாள் உறுதியாக.

என்னோட விருப்பம்…உன்னை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் குடுக்கனும்…அதை கண் குளிர பார்க்கனும்…..உன் அம்மா போனதுக்கு அப்பறம் எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான்.உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.உனக்கு என்ன தோணுதோ அதை செய் நிலா..” என்றவர் தளர்ந்த நடையுடன் வெளியேறினார்.

“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..?பாரு உதய் அப்பா எப்படி டல்லா போறார்ன்னு….இப்ப உனக்கு சந்தோஷமா…எப்பவாவது அவர் சொல்றதை நீ கேக்குறியா…எல்லாமே உன் இஷ்ட்டத்துக்கு தான் பன்ற….” என்று பொரிந்து தள்ளினாள் ரம்யா…உதய குமாரின் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு பாவமாய் போய்விட்டது.

நிலாவிற்கும் அப்படித்தான் தோன்றியது.”நான் அப்பாவை ரொம்ப கஷ்ட்டப் படுத்துறேனோ…!” என்று மனதில் நினைத்தவள்…””இருந்தாலும் கல்யாணமா….எனக்கா….ஐயோ…!” என்று மற்றொரு மனமும் சொல்லியது.இறுதியில் தந்தையின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்ற முடிவுக்கு வந்தாள் நிலா.

ஹேய் ரம்ஸ்….ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பயங்கரமா வசனம் எல்லாம் பேசுற….! ம்ம்ம்…பெரிய ஆள் தான் போ…சரிடி எனக்கு கல்யாணத்தில் சம்மதம்….போதுமா….எங்க சிரி…” என்றாள் ரம்யாவின் கன்னத்தைக் கிள்ளியபடி.

ஹே…..நிஜமா….!சூப்பர்டி…சூப்பர்டி….நான் இப்பவே உதயப்பாட்ட சொல்லப் போறேன்….”என்றபடி சிட்டாகப் பறந்துவிட்டாள்.

நிலாவின் முகத்தில் புன்னகை தோன்ற….அடுத்த ஐந்தாவது நிமிடன் மொத்த குடும்பமும் கூடியது.”நிஜமாவாடா…!” என்றர்  பிரபு.

நான் சொல்வதெல்லாம் உண்மை…உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை…போதுமா….எல்லாம் அப்பாக்காக மட்டும் தான்.என் மேரேஜ்ல தான் அப்பாவுக்கு சந்தோஷம்ன்னா…..கண்டிப்பா நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்…..ஓகே…”என்றாள் நிலா.

நிலாவின் பதிலில் சந்தோஷமடைந்த உதய குமார்…”நிலா…அது வந்து மாப்பிள்ளை வினோத் பெரிய பிஸ்னெஸ்மேன்…..”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே….

அப்பா…ப்ளீஸ் ஸ்டாப்….நீங்க யாரை பார்த்து கழுத்தை நீட்ட சொன்னாலும் எனக்கு சம்மதம்….போதுமா…மத்த விவரம் எல்லாம் நீங்களே பார்த்துக்கங்க….பட் இப்பவே சொல்லிட்டேன்…..வருபவன் எப்பேர் பட்டவனா இருந்தாலும்…என்னோட கொள்கைகளுக்கு குறுக்க நிற்காதவனா இருக்கனும்….” என்றபடி சென்றுவிட்டாள் நிலா.

இன்னும் விளையாட்டுப் பொண்ணாவே இருக்கா…” என்று பிரபு கூற….”அது தான் கொஞ்சம் கவலையா இருக்கு..”என்றார் உதயும் பதிலுக்கு.

கண்மூடித்தனாமான பாசம் சில விஷயங்களை ஆராயத்தவறி விடும்….அதே சமயம் எப்பேர்பட்ட புத்திசாலிகளும்  சில சமயங்களில் சறுக்கி விடுகிறார்கள் என்பது உதய குமாரின் வாழ்வில் உண்மையாகிப் போனது.

வினோத் பார்ப்பதற்கு அழகனாகவும்…..மிகப் பெரிய குடும்பத்தை சேர்ந்தவனாகவும்….குற்றம் குறை சொல்ல முடியாதவனாகவும் இருந்தான்.அவன் அப்பா ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பேர் சொல்லக் கூடிய கூடியவர்களில் ஒருவராக இருந்தார்.

நிலாவிற்கும்-வினோத்திற்கும் திருமணம் செய்வது என்பது உறுதியாகிப் போனது.நிச்சயதார்த்தத்தை மிகப் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று அனைவரும் கணக்குப் போட்டனர்.நிலாவிற்கும் வினோத்தை பார்த்தால் பிடித்தது போலவும் தோன்றவில்லை.பிடிக்காதைப் போலவும் தோன்றவில்லை.மொத்தத்தில் மனதில் எந்த குழப்பமும் இன்றி…அவளும் அந்த இனிய நிகழ்வுகளுக்கு தயாரானாள்.

நிலாவும்…ரம்யாவும் அந்த மிகப் பெரிய அழகு நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தனர்.ரம்யா தான் அவளை கட்டாயப் படுத்தி அழைத்து வந்திருந்தாள்.

இப்ப இதெல்லாம் ரொம்ப தேவையா….? பார்லர் எல்லாம் எதுக்கு வரனும் இருக்குற அழகு பத்தாதா…ஏண்டி இப்படி என் உசுர வாங்குற…”என்று சலித்துக் கொண்டாள் நிலா.

அதெல்லாம் ரொம்ப அவசியம் தான்….,இப்போ நான் சொல்றதை மட்டும் தான் நீ கேட்கனும் சரியா..?” என்றபடி அவளை உள்ளே அனுப்பினாள்.

ரம்யாவும்….நிலாவும் எதிரெதிரே நின்று பேசிக் கொண்டிருக்க…அருகில் உள்ள பில்டிங்கில் இருந்து வெளியே வந்தவன்….நிலாவின் குரல் காதில் விழ…ஆவலுடன் திரும்பினான்.ஆனால் அவன் பார்த்தது…கதவை உள்ளே தள்ளி அவள் செல்ல…அவள் கூந்தல் மட்டும் தான் கண்ணில் பட்டது.

ஷிட்..என்ன ஒவ்வொரு தடவையும் பார்க்க முடியாம போய்டுது….”என்று  நினைத்தவன்…அங்கு ரம்யா போன் பேசிக் கொண்டு நின்றிருக்க…”இந்த பொண்ணு அவ கூடதான நின்றிருந்தா….என்று மனதில் நினைத்தவன் அவள் அருகில் சென்றான்.அவளோ போன் பேசுவதில் பிஸியாய் இருக்க…”எக்ஸ்கீயூஸ்மி….”என்று அவளின் கவனத்தைத் திருப்பினான்.போன் பேசிக் கொண்டே ரம்யா திரும்ப…”இப்ப உள்ள போனாங்களே…! அவங்க பேர் என்ன..? எந்த ஏரியா…?” என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்த ரம்யா….”என்ன சார் நக்கலா…” என்றாள் முன்ன பின்ன தெரியாத பெண்ணிடம் சென்று…பேர் என்ன..? எந்த ஏரியா..? என்று கேட்டாள் அவளும் பாவம் என்ன நினைப்பாள்.

அவளது பார்வையின் பொருள் உணர்ந்தவன்….மானசீகமாய் தனக்குத் தானே கொட்டிக்  கொண்டான்.”சாரி சிஸ்டர்….பட் ப்ளீஸ்..எனக்கு தெரிஞ்சே ஆகனும்….அவங்க பேர் மட்டுமாவது சொல்லுங்க…எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சுருக்கு….அதான்…” என்றான்..அதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

இதென்ன புது குழப்பம்.அவளே இப்பதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கா….இப்ப பார்த்து இது வேறயா….” என்று மனதில் நினைத்த ரம்யா…”இதோ பாருங்க சார்…நீங்க தப்பா நினைச்சுகிட்டு இருக்கிங்க…கூடிய சீக்கிரம் அவளுக்கு கல்யாணம்….” என்றவள்…அடுத்து உனக்கும் எனக்கும் பேச்சில்லை என்பதைப் போல் திரும்பி நின்று தன் கடலையை ஆரம்பித்தாள்.

திருமணமா..?”என்று நொடி திகைத்தவன்….”இல்ல இன்னைக்கு எப்படியாவது அவளைப் பார்த்தே ஆக வேண்டும்….”என்று அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

சரி உள்ளே போகலாம் என்று நினைத்தவனை….அங்கு வெளியில் இருந்த…”ஆண்களுக்கு அனுமதி இல்லை..” என்ற வாசகம் தடுத்தது.நின்று நின்று பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தான்.ஆனால் ரம்யாவோ இன்னமும் போனில் தன் கடலையை விடாமல் வறுத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அவனுக்கும் போன் வர அதை எடுத்தவன்….”இதோ வரேன்..” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான்.ரம்யாவின் அருகில் மீண்டும் சென்றவன்…”சிஸ்டர் இது என் என்னோட கார்ட்….உள்ள இருந்து அவங்க வந்த உடன்…அட்லீஸ்ட் இதையாவது அவங்ககிட்ட குடுத்துடுங்க…..ப்ளீஸ்… என்று இரண்டாய் மடிக்கப் பட்ட ஒரு பேப்பரையும் அதனுடன் கொடுத்தான்”

அவனைப் பார்த்தால் அவளுக்கு பாவமாகவும் இருந்தது….போன போக்கில் அதை வாங்கி…. நிலாவின்  ஹேண்ட் பேக்கிலேயே வைத்தாள்.

தான் கொடுத்த  கார்ட்  மற்றும் பேப்பர் அவளை சென்றடையும் என்று நம்பி அப்பொழுது சென்றவனுக்கு தெரியவில்லை….அது எப்பொழுதும் அவளை சேரப் போவதில்லை என்று.

எப்படியும் அவள் தன்னை தொடர்பு கொள்வாள் என்ற நம்பிக்கையுடன்…. மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் சென்றான்.ஆனால் அது நடக்கவே நடக்காத ஒன்று என்று அவன் என்ன கனவா கண்டான்.

Advertisement