Advertisement

 

முகவரி 23:

 

சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க…அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று.மகேஷ்வரியை வாழ விடாமல் அடித்து விரட்டிய அந்த வீட்டில்….தன்னுடைய வாழ்வு தொடங்குவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.அதேசமயம் ஜீவா-தீபா வாழ்க்கையும் அங்கு தொங்குவதற்கு அவன் அனுமதிக்கவில்லை.அதனால் அனைவரும் சென்னை வந்து இறங்கினர்.

அங்கு இறங்கிய நிலாவிற்கு மனதில் கலவையான உணர்வுகள் மனதில் தோன்றியது.முதன் முதாலாக இந்த வீட்டிற்கு வந்த நினைவு அவளுக்கு வந்தது.ஒரு பந்தை எடுப்பதற்காக வந்து..சூர்யாவிடம் அகப்பட்டு..அவனை அறைந்து…அவனிடன் தானும் அறை வாங்கி..இப்படி அனைத்தும் அவளுக்கு நினைவுப் பெட்டகத்தில் இருந்து வெளி வர…அவள் இதழோரம் ஒரு சின்ன புன்னைகைக் கீற்று தோன்றி மறைந்தது.

நிலாவையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா…”இப்ப எதுக்கு இவ சிரிக்கிறா…? அது ரொம்ப ஆபத்தாச்சே…!” என்று அவளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அந்த வீட்டின் அழகு நிலாவை மிகவும் கவர்ந்தது.இதற்கு முன்னால் இரண்டு முறை இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள்.ஆனால் அப்பொழுது எல்லாம் அவளுக்கு சூர்யாவிடம் சண்டை போடத்தான் நேரம் சரியாக இருந்தது.மற்றவற்றை கவனிக்க தவறிவிட்டாள்.அப்பொழுது கண்ணில் படாத அந்த வீட்டின் அழகு இப்பொழுது அவளுக்கு கண்ணில் பட்டது. மிகவும் ஆடம்பரமும் இல்லாமல்….. அதே சமயம் எளிமையாகவும் இல்லாமல்….ஒரு நேர்த்தியுடன்….கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

மகேஷ்வரி இரண்டு ஜோடிகளுக்கும் ஆரத்தி எடுக்க….முதலில் நிலா வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.அடுத்ததாக தீபாவும் சென்றாள்.ஆனால் தீபாவின் முகம் சந்தோஷமாக இல்லாதது போல் இருந்தது.பயணம் முழுவதும் அவள் அமைதியாக வந்தது வேறு…ஜீவாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

“என்ன தீபா என்னாச்சு…? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு…? அம்மாவைப் பிரிஞ்சு வந்தது  கஷ்ட்டமா இருக்கா…?” என்றார் மகேஷ்வரி.முரளியும் அப்பொழுதுதான் தீபாவின் முகத்தைக் கவனித்தார்.”என்னடா செல்லக் குட்டி என்னாச்சு..?” என்றார் அவரும் தன் பங்கிற்கு.

தீபா..”அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா.ஒரே அலுப்பா இருக்கு.கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு அவ்வளவுதான்…” என்றாள் சமாளிப்பாக. சூர்யா அவளை கூர்ந்து பார்க்கவும்  தலையைக் குனிந்து கொண்டாள்.

ரொம்ப தலை வலிக்குதாடா…?”என்றான் ஜீவாவும்.

இல்லை இப்ப கொஞ்சம் பரவாயில்லை…” என்பதைப் போல் சமாளித்து வைத்தாள் தீபா.ஆனால் என்ன முயன்றும் அவளுக்கு அன்று அவள் அம்மா சொன்னதை மறக்க முடியவில்லை.பொள்ளாச்சியில் இருந்து கிளம்பும் போது..ஜக்குவும்,சுதாவும்  தீபாவை தனியே அழைக்க…. என்னவென்று கேட்பதற்காக அவளும் சென்றாள்.

சுதா..”இதோ பார் தீபா.ஜீவாவுக்கு யாரும் இல்லை.அவரே ஒரு அனாதை….அதனால் நீ அங்க போனதும் முதல் வேலையா அவரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு…சரியா.அவர் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கட்டும்.என்ன நான் சொல்றது  புரிந்ததா..?” என்றார்.

தீபா தன் அம்மாவை முறைக்க…” என்னடி முறைக்கிற….இப்பவாவது நான் சொல்றதைக் கேளு.உனக்கு பிடிச்சவனையே கட்டிகிட்ட சரி.ஆனா  இதுக்கு மேல நாங்க சொல்றதைக் கேளு தீபா.நீ என்ன செய்வியோ..ஏது செய்வியோ தெரியாது….ஜீவாவை அங்க இருந்து கூட்டிட்டு வந்துடு….” என்றார் ஜக்குவும்.

 

இருவரையும் முறைத்த தீபா…”இன்னுமா நீங்க திருந்தலை.அவர் அனாதைன்னு யார் சொன்னது.அவருக்கு அம்மாவா மகி அம்மா இருக்காங்க.அப்பறம் கட்டிய மனைவி நான் குத்துக் கல்லாட்டம் இருக்கேன்.அப்பறம் எப்படி அவர் அனாதை ஆவார்.அவரை சுத்தி அன்பானவங்க இருக்குறாங்க.அதனால் அவர் எப்பவும் அனாதை இல்லை”.

ஆனால் எனக்கு….”வெளியில் சாதுவாய் தெரிந்தாலும்… உள்ளே அன்பு, இரக்கம் இதெல்லாம் இல்லாத அம்மா… அதிகாரமும்,அந்தஸ்து மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற பாட்டி,தனக்கு கல்யாணம் நின்ற உடனே…தங்கையைப் பத்தி கூட கவலைப் படாமல் ஓடிய அண்ணன்… இப்படி எல்லாரும் இருந்தும் நான் தான் அனாதையா இருக்கேன்…” என்று கத்தினாள் தீபா.

ஜக்கு..”தீபா சின்ன பிள்ளை மாதிரி பேசாத.வெளுத்ததெல்லாம் பால் கிடையாது.அந்த சூர்யா பய ஏதோ திட்டத்தோட தான் இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கான்.புரிஞ்சுக்க…பிழைக்கிற வழியப் பாரு..” என்றார்.

தீபாவின் இதோழரம் இகழ்ச்சியாய் ஒரு சிரிப்பு வந்தது…”சிலபேர் பட்டு திருந்துவாங்க…சிலர் கெட்டு திருந்துவாங்க..ஆனா நீங்க ரெண்டு பேரும்…. பட்டும் திருந்தலை,கெட்டும் திருந்தலை.இப்ப என்னயும் நிம்மதியா வாழவிட மாட்டிங்க போல.நீங்க சொல்றதை எல்லாம் கேட்டு நடக்க நான் ஒன்னும் பொம்மை இல்லை.உயிருள்ள மனுஷி.என் வாழ்க்கையை எப்படி வாழனும்ன்னு எனக்கு தெரியும்.அதனால் உங்களோட அறிவுறை எல்லாம் எனக்குத் தேவை இல்லை.உங்க மேல கொஞ்சம் நஞ்சம் ஓரமா இருந்த பாசம் இப்ப சுத்தமா போய்டுச்சுமா…உங்க முகத்து முழிக்க கூட முழிக்க எனக்கு பிடிக்கலை…” என்றவாறு சென்று விட்டாள் தீபா.

இப்படி பொள்ளாச்சியில் நடந்த பேச்சு வார்த்தையை நினைத்து  தீபா… கண்கலங்கிக் கொண்டிருந்தாள்.அவளது கவிழ்ந்த தலையை வைத்தே அவளது எண்ண ஓட்டம் தெளிவாய் புரிந்தது சூர்யாவுக்கு.அவளுக்கு அருகில் சென்ற சூர்யா….அவளின் தோள் அணைத்து…”யாருமே அனாதை இல்லடா. எல்லா மனுஷங்களும் ஒரே மாதிரியும்  இருக்க மாட்டாங்க. அப்படி இருந்தாலும் அது நல்லா இருக்காது.அதனால் எதைப் பத்தியும் கவலைப் படாமல் ஜீவா உயிரை எப்படி வாங்குவது..? என்பதைப் பத்தி மட்டும் யோசி…” என்றான் சிரிக்காமல்.

சூர்யா முதலில் சொன்ன வார்த்தைகளுக்கு கண் கலங்கிய தீபா…அவனது கடைசி வார்த்தையில் அவனை முறைத்தாள்.ஆனால் அவளுக்கு ஒன்று தெளிவாய் புரிந்து.அங்கு நடந்த பேச்சு வார்த்தையை சூர்யாவும் கேட்டிருக்கிறான் என்பது தான் அது.

போதும் மாம்ஸ்… அண்ணனும் தங்கையும் ஓவரா….சீன் போடாதிங்க. பாருங்க ஜீவா அண்ணா எவ்வளவு கவலைப் படுறார்ன்னு…? அப்பறம் இங்க நிலா மேடமும் தான்” என்றாள் ரம்யா.

ரம்யாவை…நிலா முறைக்க…”நிலாவின் பாவனையைப் பார்த்த சூர்யா சிரிக்க ஆரம்பித்தான்.அவனது சிரிப்பு சத்தத்தில் திகைத்து திரும்பினாள் நிலா.அவளுக்குத் தெரிந்து சூர்யா வாய்விட்டு சிரிப்பது இதுதான் முதல் முறை.அவனையே விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…”

நிலா போதும்டி…தனியா போய் எவ்வளவு நேரம் வேணும்ன்னாலும் பாரு…இது பப்ளிக்..பப்ளிக்…”என்று ரம்யா கூறவும்…சூர்யா  சிரித்துக் கொண்டே ..புருவத்தை உயர்த்தி என்ன..? என்று கேட்கவும் சரியாக இருந்தது.நிலா சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.

சரி எல்லாரும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு….,அப்பறமா பிரெஷ் ஆகி வாங்க.அதற்குள் சமையல் ரெடி ஆகிடும்.”என்றார் மகேஷ்வரி.

ஜீவா..தீபாவை தனது அறைக்கு அழைத்து சென்றான்.மாலாவும்,மகியும் சமையறைக்குள் நுழைய…ரம்யாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். பிரபுவும்,முரளியும் அப்படியே தோட்டத்து பக்கம் செல்ல…நிலா மட்டும் அப்படியே நின்றிருந்தாள்.

நிலாவின் பெட்டியயையும் சூர்யா தூக்கிக் கொண்டு முன்னால் செல்ல…வேறுவழியின்றி அவனைப் பின் தொடர்ந்தாள் நிலா.மாடிக்கு சென்ற சூர்யா ஒரு பெரிய அறைக்குள் செல்ல நிலா தயங்கி வெளியவே நின்றாள்.எப்படி செல்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். இன்னமும் அந்த வீட்டில் அவளுக்கு ஒட்டுதல் வரவில்லை என்பதை விட…சூர்யாவிடம் அவளுக்கு ஒட்டுதல் வரவில்லை என்பதே உண்மை.

உள்ளே சென்ற சூர்யா…நிலா வருவாள் வருவாள் என்று பார்த்தவன் அவள் வராமல் இருக்கவே திரும்பி வந்து பார்க்க..அங்கு கைகளைப் பிசைந்தவாறு அவஸ்தையுடன் நின்றிருந்தாள் நிலா.”இப்ப எதுக்கு இப்படி நிக்குறா…? உள்ள வரதுக்கு தயக்கமா…இல்லை பிடிக்கலையா…?” என்று ஒரு நிமிடம் யோசித்தவன்..இது சரிப் பட்டு வராது என்று மனதில் நினைத்தவாறு.. “வேகமாய் நிலாவின் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்தவன்…கதவை வேகமாய் சாத்தினான்”.எல்லாம் நிலா எதிர்பார்க்காமல் நடந்ததால்….சூர்யா இழுத்ததில் சற்று தடுமாறி நின்றாள் நிலா.அவ்வளவுதான் அந்த நிமிடம் பழைய நிலாவாக அவதாரம் எடுத்தாள்.  

டேய் லூசு எதுக்கு இப்ப இப்படி இழுத்த….? கருவாப்பையலே…பாரு கையெல்லாம் சிவந்துடுச்சு…ஸ்ஸ்ஸ்” என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் நிலா.சூர்யாவோ சிரித்துக் கொண்டிருந்தான்.அவன் எதிர்பார்த்ததும் அதுதானே..! அமைதியாய் இருக்கும் நிலாவை அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.அவள் எப்பொழுதும் சூர்யாவிற்கு அறிமுகமான.., சூர்யாவின் நிலாவாய் படபடவென்று இருப்பதைத்தான் அவன் விரும்பினான்.

அப்பொழுதுதான் அந்த அறையை நன்றாய்ப் பார்த்தாள் நிலா.அறை முழுதும் அவளின் ரசனைக்கு ஏற்றவாறு இருந்தது.தன் அப்பாவிடம்… எப்படியெல்லாம் தன்னுடைய அறையை மாற்ற வேண்டும் என்று சொன்னாளோ..அதே அலங்காரத்தில் இருந்தது.இது எப்படி சாத்தியம். இருவரின் ரசனையும் ஒன்றாக இருந்தாலும்..இப்படி அச்சுப் பிசகாமல் எப்படி இருக்க முடியும்… என்ற குழப்பம் அவளுக்குள் வந்தது.

அதையே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு..அவளது அப்பாவின் நினைவும் வர அவளது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது. நிலாவிம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக திரும்பிப் பார்த்த சூர்யா திகைத்தான்.

நிலா கண்கலங்கி நின்ற கோலம் அவனது மனதைப் பிசைந்தது.”அருளை உண்மையாவே காதலிச்சுருப்பாளோ..? இல்லை இந்த கல்யாணம் அவளுக்கு பிடிக்கவில்லையோ..?” என்று பல கேள்விகளும் அவனது மனதைப் பிசைந்தது.

நிலாவின் அருகில் சென்ற சூர்யா…அவளது இரு கன்னங்களையும் தனது இரு கைகளால் பிடித்தவன்…அவளது முகத்தை நிமிர்த்தி கூர்ந்து பார்த்தான். “இதோ பார் நிலா…இந்த கல்யாணம் எந்த ஒரு நிலையில் நடந்து இருந்தாலும் அதைப்பற்றி நீ கவலைப் பட தேவையில்லை. அதே சமயம் நீ நினைக்கிற அளவுக்கு நான் கெட்டவனும் கிடையாது.ஆனா ஒன்னு மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும்.இது வரைக்கும் உன் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை.ஆனால் இனி உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவிட மாட்டேன். அதனால் தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காம…நீ ரெஸ்ட் எடு…” என்று கன்னத்தை தட்டியவன்…வெளியில் சென்று விட்டான்.

நிலாவிற்கு அவன் சொன்னது தலையும் புரியவில்லை..வாலும் புரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது.அவன் தன்னிடம் பேசினாலோ…அல்லது தன்னை ஆழமாய்ப் பார்த்தாலோ தனது மனம் அமைதியடைகிறது என்று.கன்னத்தில் அவனது கைகள் பிடித்து இருந்த இடம் குறுகுறுக்க…சமைந்த சிலையாய் அமர்ந்திருந்தாள்.

பொள்ளாச்சியில் இருந்து இப்பொழுது வரை நடந்த ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தாள் நிலா.ஒவ்வொரு விஷயத்திலும் சூர்யா இருந்தான்.ஒவ்வொரு நிகழ்விலும் சூர்யா இருந்தான்.சின்ன சண்டைகளையும் கோபங்களையும் தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் சூர்யாவிடம் ஒரு குறையையும் நிலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.அதே சமயம் ருத்ரத்தை நினைத்து அவளது மனம் கலங்கியது.தன்னால் சூர்யாவுக்கும் ஆபத்து வரும் என்று அவளுக்கு தெளிவாய் தெரிந்தது.இருந்தாலும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அருளை அவள் காதலிக்கவில்லை என்று அவளுக்கு தெரியும்.ஆனால் இப்பொழுது அது தேவை இல்லாதது என்று நினைத்தாள் நிலா.அதே சமயம் அவளது கடந்த கால நினைவுகள் அவளை அவ்வப்போது வந்து தீண்டி சென்று கொண்டிருந்தது.

உள்ளே வந்த சூர்யா..அப்பொழுதும் நிலா அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து..”என்ன நிலா…இன்னுமா குளிக்கலை.ம்ம்ம்…எழுந்திரு..சீக்கிரம்… சீக்கிரம் இந்தா டவல்.போய் பிரெஷ் ஆகிட்டு வா. அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..!” என்று எதுவும் நடவாதது போல் அவன் யதார்த்தமாய் பேச…நிலா தான் அவளைப் பார்த்து பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதும் நிலா அப்படியே இருக்க…”என்னடா…குளிக்கவும் என் உதவி தேவைப்படுதா உனக்கு.எப்படிக் கேக்குறதுன்னு தெரியாம இப்படி நிக்குறியா…? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைஎன்றான் குறும்பாக.

ங்ஹஹா…என்று அதிர்ந்த நிலா..,அவனைப் பார்த்து முறைத்தவள் பல்லைக் கடித்துக் கொண்டு சென்றாள்”.

சூர்யா… இவளுக்கு அப்ப அப்ப இப்படி ஷாக் டிரீட்மெண்ட் குடுத்துகிட்டே இருக்கனும் போல..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்…. சிரித்துக் கொண்டே கதவை சாற்றி விட்டு சென்றான். 

சூர்யா கீழே வர…அப்பொழுது ஜீவாவும் வந்தான்.சூர்யாவின் சிரித்த முகத்தைப் பார்த்த ஜீவா”என்ன மச்சான் ரொம்ப சந்தோஷமா இருக்க போல..?” என்றான் ஜீவா.

ஆமா ஜீவா.இப்ப இந்த உலகத்துலையே நான் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.கடைசி வரைக்கும் நிலா எனக்கு கிடைப்பான்ற நம்பிக்கையே இல்லை.ஆனா இப்ப…..நிலா என் மனைவி.நினைக்கும் போதே எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா ஜீவா.இன்னைக்கு நான் திருப்தியா சாப்பிடுவேன்.நிம்மதியா தூங்குவேன்டா.அப்படி ஒரு அமைதி மனதில்” என்றான் சூர்யா.

என்னது தூங்கப் போறியா..?என்னடா சொல்ற…” என்றான் அதிர்ச்சியாய் ஜீவா.

“நீ என்ன லூசா என்பதைப் போல் சூர்யா அவனைப் பார்த்து விட்டு போக…” ஜீவா கடுப்பாகி நின்றிருந்தான்.

என்னாச்சு ஏன் இப்படி பேயறஞ்ச மாதிரி இருக்கிங்க..” என்றாள் தீபா.

ஜீவா..”ம்ம்ம் எல்லாம் உன் அண்ணன் தாண்டி…..சப்பிட்டு நிம்மதியா தூங்க போறானாம்..!” என்றான் கடுப்புடன்.

 

தூக்கம் வந்தா தூங்கமா என்ன செய்வாங்க.பாவம் அண்ணன்.அவருக்கு எவ்வளவு அலைச்சல்.” என்று தீபா அண்ணனைத் தாங்கிப் பேச..”நீங்க எல்லாம் நல்லா வருவிங்க…அதெப்படி அண்ணனும் தங்கையும் ஒன்னும் தெரியாத பச்ச பிள்ளைங்க மாதிரியே பேசுறிங்க” என்று தலையில் அடித்தான் ஜீவா.

ம்ம்ம்..,அதெல்லாம் எங்க கூடவே பிறந்தது..”என்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொண்டு போனாள் தீபா.

இந்த வீட்ல அண்ணனுக்கும் தங்கைக்கும் நிறைய அல்லண்டி சில்லண்டி வேலையெல்லாம் பார்க்கனும் போல் இருக்கே ஜீவா.கொஞ்சம் சிரமம் தானோ…” என்றபடி பெருமூச்சு விட்டான் ஜீவா.

மாலாவிற்கும்,பிரபுவிற்கும் மனம் நிறைந்து இருந்தது.நிலாவிற்கு அரணாய் சூர்யா வந்துவிட்டான் என்ற நிம்மதி தான் அது.சொல்லப் போனால் மாலாவிற்கு இப்பொழுதுதான் நிறைவாய் இருந்தது.அருளுக்கும் நிலாவிற்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது போல் இருந்தது. மனதிலும் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது.ஆனால் இப்பொழுது அந்த நெருடலும் காணாமல் போனது.

சூர்யா ஹாலில் வந்தமர…அவனின் அருகில் வந்து அமர்ந்தார் பிரபு.”தம்பி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்று பீடிகையுடன்  ஆரம்பித்தார்.

சொல்லுங்க அங்கில்…என்ன விஷயம்…?எதுக்காக தயங்குறிங்க..?” என்றான் சூர்யா.

அது வந்து…வந்து தம்பி…நிலாவோட கடந்த காலத்தை பற்றி நீங்க எதுவுமே கேட்கலை.நாங்களும் சொல்லலை.அதான் அதைப் பத்தி நீங்க தெரிஞ்சுகிட்டா…”என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையமர்த்தினான் சூர்யா.

நல்லதோ…கெட்டதோ..! எனக்கு என் மனைவியின் கடந்த காலம் பற்றி மத்தவங்க சொல்லிக் கேட்க விருப்பம் இல்லை.என்னைக்கு அவளே வந்து என்கிட்ட சொல்லனும் என்று நினைக்கிறாளோ…அப்ப அவளே சொல்லட்டும்.என்னை தப்பா நினைச்சுக்காதிங்க அங்கிள்….” என்றான் சூர்யா.

பிரபுவிற்கு அவனைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.நிலாவின் மீதான அவனது நம்பிக்கையைக் கண்டு பிரபுவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. முரளிக்கும் சூர்யாவின் பேச்சு ஆச்சர்யம் அளித்தது.அதே சமயம் தன் மகனுக்கு இருக்கும் தெளிவும் தீர்க்கமும் தனக்கு இல்லாமல் போனதே என்று அவமானமாகவும் இருந்தது.

பிரபு..”ரொம்ப நன்றி தம்பி.நிலாவை ஒரு நல்ல இடத்தில் ஒப்படைத்த திருப்தி வந்துட்டது எனக்கு.மனசார சொல்லனும்ன்னா நிலாக்கு தப்பு செய்யத் தெரியாது தம்பி.கோபம் கொஞ்சம் அதிகமா வருமே தவிர… மத்தபடி தங்கமான பொண்ணு  நிலா.யாருக்கும் மனதால கூட தீங்கு நினைக்க மாட்டா..”என்று சொல்லி கண்கலங்கினார் பிரபு.

நிலா இப்போ என்னோட மனைவி அங்கிள்.அவளை நான் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்.அதே சமயம் நிலா,ரம்யாவுக்கு என்ன ஆபத்துன்னு எனக்கு தெரியாது.ஆனால் என்னை மீறி எதுவும் நடக்காது.,நடக்கவும் விடமாட்டேன்..” என்றான் சூர்யா தீர்மானமாய்.

குளித்து விட்டு,தயாராகி வந்த நிலாவின் காதுகளில் இருவரின் உரையாடலும் தெளிவாய்க் கேட்டது.சூர்யாவின் ஒவ்வொரு செய்கையும் அவளைத் திகைக்க வைத்தது.”நீ அவனைப் பற்றி நினைத்த எண்ணங்கள் எல்லாம் தவறு..”  என்று அவளது மனசாட்சி அவளுக்கு அறிவுரை வழங்கியது.சூர்யா தன்னையறியாமலே நிலாவின் மனதில் குடியேறிக் கொண்டிருந்தான்.ஆனால் இதை சம்பந்தப் பட்ட இருவருமே அறியவில்லை.

எது எப்படி நடந்திருந்தாலும் இனி சூர்யா தன் கணவன்.தனக்கு மட்டுமே சொந்தமானவன்.எனக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இனி இதுதான் என் குடும்பம்..” என்று தனக்குத் தானே சொல்லி அதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள் நிலா. “அருளை நிலா காதலிக்காததும்…. அவளிற்கு சரியெனப்பட்டது.இல்லையென்றால் இப்படி ஒரு சூழ்நிலையை தன்னால் இவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா…?” என்றால் அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. 

*************

என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு சார்…!நீங்க அவங்களை அங்க இருந்து கூட்டிட்டு வந்துருக்கனும்…”என்றான் ஜான்.

ருத்ரம் இரையைத் தவற விட்ட புலியின் வேகத்துடன்  இருந்தார்.எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வேளையில் இந்த சூர்யா வந்து….அனைத்தையும் ஒரு நிமிடத்தில் பாழாக்கிவிட்டானே…! என்று மனதில் நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.ஜானின் கேள்வி அவருக்கு எரிச்சலைக் கிளப்பியது.

என்னடா தப்பு.எல்லாம் உங்களால் தாண்டா.அவளை டெல்லியிலயே பிடிச்சு இருந்தா இப்ப இங்க வரைக்கும் நாம வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.அதை விட்டுட்டு இப்படி புதையலை அப்படியே தூக்கி அடுத்தவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்த மாதிரி..இப்ப அந்த சூர்யா அவளுக்கு தாலி கட்டிட்டான்…” என்று பொங்கினார் ருத்ரம்.

சூர்யா என்ன சார் சூர்யா.அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா…? ஒரே போடா போட்டுத் தள்ளிட்டு பொண்ணைத் தூக்கிடுவோம் சார்..”என்றான் ஜானும் ஆவேசமாக.

நீ ஒரு முட்டாள்ன்னு அப்ப அப்ப நிரூப்பிக்கிற ஜான்.அவன் என்ன பொட்டப் பயன்னா நினைச்ச.அவனைப் பத்தி நான் விசாரிச்சுட்டேன்.பய பயங்கர புத்திசாலி.அதோட ரொம்ப திறமையானவனும் கூட…அதனால் இதை வேற மாதிரி தான் டீல் பன்னனும்..” என்றார் யோசித்தவாறே.

என்ன யோசித்தாலும் எல்லா வழியும் அடைபட்டது போல் இருந்தது ருத்ரத்திற்கு.படுத்த படுக்கையாய் இருக்கும் தன் மகன் வினோத்தை நினைக்கும் போது…அவருக்கு அடங்கிய கோபம் மீண்டும் துளிர்விட்டது. அடுத்து செய்ய வேண்டிய செயலில் தீவிரமாய் இறங்கினார்.

 

முகவரி 24

மாலை மங்கிய அந்த வேளையில்..புதுப் பெண்ணிற்கான பொலிவுடன்… முகத்தில் களையிழந்து  அமர்ந்திருந்தாள் தீபா.அவளுக்கு அருளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.இத்தனை வருடமாக தன்னை உயிராய் நினைத்த தன் அண்ணனின் நினைவு அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

அருள் இப்பொழுது கண்மூடித்தனமாக இருந்தாலும்..,இதற்கு முன்னால் வரை தீபாவிற்கு ஒரு பொறுப்பான அண்ணனாகத்தான் இருந்திருக்கிறான். தீபாவிற்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவான்.எத்தனைக் கோபங்கள் அவன் மீது இருந்த போதிலும்….அருள் தன்னருகில் இல்லாதது ஒரு குறையாகத்தான் இருந்தது தீபாவிற்கு.

அன்று இரவு சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை மகியும்..,மாலாவும் கவனித்துக் கொண்டிருக்க..,தீபா மட்டும் அவர்களில் இருந்து பிரிந்து வந்து இப்படிக் கவலையாய் அமர்ந்திருந்தாள்.

ஹாய் தீபா மேடம்….என்ன இப்படி அமைதியா இருக்கிங்க..? ம்ம்ம்ம் இப்ப இருந்தே கனவா…?”என்று வம்பிழுத்தாள் ரம்யா.

அதெல்லாம் ஒன்னும் இல்லை ரம்யா.எங்க நிலா அண்ணி கண்ணிலயே படமாட்டேங்கிறாங்க…!நானும் இப்ப வருவாங்க…அப்ப வருவாங்கன்னு பார்க்குறேன்.ம்ம்ஹூம் ஆள் அட்ரஸையே காணாம்..” என்றாள் தீபா.

நீயுமா….!எனக்கும் அதேதான் என்ற ரம்யா …”அதோ வந்துட்டாளே நிலா…” என்றவள் நிலாவைப் பார்க்க…,நிலாவோ திகைத்தபடி வீட்டு வாயிலைப் பார்த்தவாறு இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

இப்ப எதுக்கு இப்படிப் பேயப் பார்த்த மாதிரி பார்க்குறா…?”என்று மனதில் எண்ணிய ரம்யா திரும்பி வாயிலைப் பார்க்க அவளும் திகைத்துப் பார்த்தாள்.

என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்…? அப்படி  என்ன அங்க இருக்கு..? என்றவாறு திரும்பிய தீபா….அங்கு அருள் நின்றிருப்பதைப் பார்த்து விழிவிரித்து சட்டென எழுந்து ஓடியவள்…ஓடி அருளைக் கட்டிக் கொண்டாள்.

வாண்ணா..!எதுக்கு வெளியவே நிக்குற..?உள்ள வாண்ணா…!” என்று கையைப் பிடித்துக் இழுத்துக் கொண்டிருந்தாள் தீபா.

நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் தலையைக் கீழே குனிந்து அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.அருள் இப்பொழுது இங்கே வந்திருப்பதற்கான காரணமும் அவளுக்கு தெரியவில்லை.

அலுவல் அறையிலிருந்து சூர்யாவும்,ஜீவாவும் பேசிக்கொண்டே வெளியே வர..அருளை முதலில் பார்த்த சூர்யா…ஜீவாவின் காதில் ஏதோ சொல்லிவிட்டு சென்றான்.

வாங்க மச்சான்…உள்ள வாங்க..!” என்றபடி ஜீவா..அருளை உள்ளே அழைத்து வந்தான்.தங்கையின் கணவன் என்ற முறையில் அவன் சொல்லிற்கு மதிப்பளித்து உள்ளே வந்தான் அருள்.

தீபா கண்கலங்கி நின்றிருக்க….”எனக்கு தீபாவைப் பார்க்கனும் போல் இருந்தது.அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்று ஜீவாவிடம் விளக்கம் கூறியவன்..தீபாவிடம் திரும்பி..”சாரி தீபு குட்டி.நான் அப்படி இடைலயே உன்ன விட்டுட்டு வந்திருக்க கூடாது.தப்புத்தான். இருந்தாலும் எனக்கு அப்ப இருந்த மன நிலையில் அங்க இருக்க முடியும்ன்னு தோணலை.அதான் உன்னப் பத்திக் கூட யோசிக்காம என் போக்கில் நான் வந்துட்டேன்.சாரிடா..” என்றான் அருள்.

பரவாயில்லைண்ணா…அதான் இப்ப வந்துட்டியே..!உனக்கு ஒன்னு தெரியுமா..?இப்பதான் உன்னப் பத்தி நினச்சுகிட்டு இருந்தேன்.அதே நேரத்துல நீயும் சரியா வந்துட்ட.ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா…” என்றாள் தீபா கண்கலங்க.

அதே நேரம் அங்கு வந்த மகேஷ்வரி..”வாப்பா அருள்..!” என்று அழைக்க… அருளோ..! பதில் ஏதும் பேசாது முகத்தை தீபாவின் பக்கமாய்  திருப்பிக் கொண்டான்.இதை எல்லாம் மேலே இருந்து பார்த்த சூர்யாவின் கை முஷ்டி இறுகியது.கடுப்புடன் நிலாவைப் பார்க்க…அவள் அவஸ்தையுடன் அங்கு இருந்ததைப் பார்த்து கீழே இறங்கி வந்தான் சூர்யா.

அருள் அப்படி முகத்தை திருப்பியது தீபாவிற்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து சண்டையை ஆரம்பிக்க அவள் விரும்பவில்லை.அதனால் அமைதியாய் இருந்துவிட்டாள்.

 

சூர்யா கீழே வருவதற்கும்..,அருள் நிலாவின் முன் வருவதற்கும் சரியாய் இருந்தது.நிலாவின் முன் வந்த அருள் அவள் முள்மீது நிற்பது போல் இருப்பதைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.”பயப்படாதிங்க நிலா.நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்.தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க…! நல்லா யோசிச்சுப் பார்த்த போதுதான் எனக்கு சில விஷயங்கள் தெளிவாய் புரிந்தது.என்றவன் ரம்யாவை ஒரு ஊடுருவும் பார்வை பார்த்தான்.”

இப்ப எதுக்கு இவன் நம்மளை இப்படிப் பார்க்குறான்..?”என்று படபடப்பாய் உணர்ந்த ரம்யா…,பார்வையை வேறு பக்கம் திருப்ப…,அருள் தனது பார்வையைத் தொடர்ந்தான்.

சில சொந்தங்களை என்னால கண்டிப்பா ஏத்துக்க முடியாது என்று சூர்யாவையும்,மகேஷ்வரியையும் பார்த்த அருள்…”அப்படி நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நியாப்படி இப்ப நீங்க என் அண்ணி ஸ்தானத்துல இருக்கிங்க.அண்ணிங்கறவங்க இன்னொரு அம்மான்னு சொல்வாங்க. அதனால் உங்களைப் பத்தி இனி மனசால நினைக்குறது கூட தப்புன்னு எனக்கு தெரியும்.கண்டிப்பா அந்த தப்பை நான் செய்ய மாட்டேன்.இதுவரைக்கும் நடந்த நிகழ்வுகளில்.., ஏதாவது உங்க மனசைக் காயப் படுத்துற மாதிரி நடந்திருந்தா அதற்கு மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்..” என்றான்.

சூர்யாவைப் பார்த்த நிலா எதுவும் பேசாமல் அமைதியாய் தலையைக் குனிந்து கொண்டாள்.தீபாவிற்கு ஒரு புறம் பெருமையாய் இருந்தாலும்… இன்னொரு புறம் வருத்தமாகவும் இருந்தது.

முரளியும்,பிரபும் அந்த நேரத்திற்கு வர..அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான் அருள்.அனைவரும் ஒன்றாய் இருப்பது போலவும்… தாங்கள் மட்டும் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தான் .அந்த உணர்வில் வந்த கோபம் அவன் கண்ணை மறைத்தது.

பரவாயில்லையே…! இங்க ஆறு மாசம்..,அங்க ஆறு மாசமா..?இல்லை இனி நிரந்தரமா இங்கதான் தங்க போறிங்களா..?” என்றான் அருள் முரளியைப் பார்த்து குத்தலாய்.

 

அருள்..!”என்று முரளி ஒரே வார்த்தையில் அதட்ட…,அருளின் கோபம் தான் அதிகமானது.

சும்மா கத்தாதிங்க..!உண்மைய சொன்னா உங்களுக்கு கோவம் எல்லாம் வருது.சும்மா சொல்லக் கூடாது குடுத்து வச்சவர் தான் நீங்க.இங்க இல்லைன்னா அங்க.அங்க இல்லைன்னா இங்க…ம்ம்ம் பிரமாதம் போங்க..”என்றான் அருள்.

அப்படி எல்லாம் இல்லை அருள்.நடந்தையே பேசி என்ன ஆகப் போகுது.எனக்கும் வயசாயிடுச்சு.என் மேலயும் தப்பு இருக்கு…நான் இல்லைன்னு சொல்லலை.அதுக்கான தண்டைனயை தான் இப்ப அனுபவிக்கிறேன்.இதுக்கு மேலயாவது சண்டை இல்லாம ஒன்னா இருக்கலாமே..” என்றார் சூர்யாவிடம் கேட்ட அதே கேள்வியை அருளிடமும்.

ஒன்னாவது…. மண்ணாவது….எதுக்காக நடக்காத ஒன்னுக்கு ஆசைப் படுறிங்க.திடீரென்று வந்த சொந்தத்தை நீங்க ஏத்துக்கலாம்.அதுக்காக நாங்களும் ஏத்துக்கனும்ன்னு எந்த அவசியமும் கிடையாது.அதுக்கான வாய்ப்பும் இல்லை.ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுன கதைதான இங்க நடக்குது..” என்றான் அருள் கோபத்தில்.

வார்த்தைய அளந்து பேசு அருள்…!”என்றான் சூர்யா.

இதுல அளந்து பேச என்ன இருக்கு…! எங்க குடும்பம் எவ்வளவு சந்தோஷமா இருந்த குடும்பம் தெரியுமா…?ஆனா இப்ப அக்கு வேரா..,ஆணி வேரா இருக்குறதுக்கு யார் காரணம்..? நீங்கதான்.நீயும் உன் அம்மா மட்டும் தான் காரணம்.முதல்ல என் தங்கைய பிரிச்ச.இப்ப அப்பாவைப் பிரிச்சிருக்க…இன்னும் என்ன எல்லாம் செய்யப் போற..?” என்றான் ஆவேசமாய்.

நீ அளவுக்கு மீறி பேசுற அருள்…! சரி  சின்ன பையன் புரியாம பேசுறான்னு விட்டா ….நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற..?” என்றான் சூர்யாவும் கோபமாய்.

இதைப் பார்த்த நிலாவிற்கு அதிர்ச்சி.எதற்காக இருவரும் இப்படி மோதிக் கொள்கின்றனர் என்று  தெரியாமல்…அரைகுறையாய் தெரிந்த விஷயத்தை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல்  இருந்தாள்.

சூர்யா…! பேசாம இரு.எதுக்காக சண்டைய மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்..? விட்டுடு..”என்றான் ஜீவா.

நான் எங்கடா ஆரம்பிக்கிறேன்….!அவன் தான் வீம்புக்கு வந்து பேசுறான். சொல்லிவை அவன் கிட்ட இந்த சூர்யா எல்லா நேரமும் இப்படி பொறுமையா இருக்க மாட்டான்னு.என்னமோ அவன் குடும்பத்தை நான் பிரிச்ச மாதிரியும்..,அவன் குடும்ப சந்தோஷத்தை நான் கெடுத்த மாதிரியும் பேசுறான்.அப்படிப் பார்த்தா இத்தனை வருஷம் குடும்பமே இல்லாம வாழ்ந்த நானும் எங்க அம்மாவும் என்ன பன்றது.

வீட்ல இருக்குறவங்களைத் திருத்த துப்பில்லை பேசவந்துட்டான் இங்க…” என்ற சூர்யா…”இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்..”என்பதைப் போல் தன் தாயையும் ஒருப் பார்வை பார்த்துவிட்டு கோபமுடன் சென்று விட்டான்.

தீபா..”அண்ணா..என்று அருளை அழைக்க…” அவனும்..”நான் போறேன் தீபா..” என்றவாறு சென்று விட்டான்.இதை எல்லாம் பார்த்த பிரபுவிற்கு ..”அருள் கண்மூடித் தனமாக பேசுகிறானோ..” என்று தோன்றியது.

ஆனால் அங்கு முரளியின் நிலை தான் சொல்லும் படியாக இல்லை. அவரின் நிம்மதிக்கான கதவுகள் எல்லாப் பக்கமும் அடைக்கப் பட்டிருந்தது.காலத்தின் விளையாட்டில்.

அறைக்குள் வந்த தீபாவையே விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.நடந்த பிரச்சனைகளில் அவளது முகம் சற்று துவண்டு இருந்தாலும்…வெட்கமும்,நாணமும் அவற்றை எல்லாம் முழுங்கி விட்டது.எவ்வளவு தைரியமாக வெளியில் காட்டிக் கொண்டாலும் மெல்லிய அச்ச உணர்வு மனதை ஆக்கிரமித்திருந்தது.

அவளின் நிலை புரிந்த ஜீவா…”எவ்வளவு ஸ்கொயர் பீட்…?” என்றான் மொட்டையாக.

 

தீபா புரியாமல் முழிக்க..”இல்லை அடிமேல் அடி வச்சு வந்தையே..அதான் ஒரு வேளை எவ்வளவு ஸ்கொயர் பீட் இருக்குன்னு அளக்குறியோன்னு நினைச்சேன்…” என்றான் வேடிக்கையாய்.

ம்ம்ம் எல்லாம் என் நேரம்…இப்படி ஒரு மொக்கை எல்லாம் கேட்கனும்ன்னு…” என்று சலித்துக் கொண்ட தீபா… கையில் இருந்த பாலை நங்கென்று அருகில் இருந்த டேபிளில் வைத்தாள்.

பார்த்து..பார்த்து…”என்று பொய்யாய் அக்கறைப் பட…தீபா கோபமாக அமர்ந்தாள்.அவளின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட ஜீவா தன் விளையாட்டுத் தனத்தை கைவிட்டான்.அவளின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன்..”நடந்ததையே நினைச்சுகிட்டு இருக்காத தீபா…இப்படித்தான் ஒவ்வொன்னும் நடக்கனும்ன்னு இருக்குறப்போ..அதை யாரால மாத்த முடியும்.அதனால் நீ எப்பவும் போல் இரு.நடப்பது எல்லாமே நல்லதுக்குத்தான்..” என்றான் ஆறுதலாய்.

என்னால அப்படி எடுத்துக்க முடியலை ஜீவா.அருள் அண்ணா வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா…? ஆனா அந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நேரம் தான்.அவன் மறுபடியும் பழைய பல்லவியையே பாட ஆரம்பிச்சுட்டான்.நிலா அண்ணிகிட்ட மன்னிப்புக் கேட்டப்ப உண்மைக்குமே அவன் மனசு மாறிட்டான்னு நினைச்சேன்.ஆனா அவன் கடைசியா பேசிய பேச்சு……இன்னும் அவன் பொய்யான முகமூடிய போட்டுகிட்டு இருக்கான்னு தெளிவா சொல்லுது.எவ்வளவு பொறுப்பானவன் தெரியுமா ஜீவா.ஆனா இப்ப எல்லாம் அவன் எதையும் யோசிக்கறதே இல்லை..” என்றாள் வேதனையுடன்.

ஜீவா…”தீபா பிரச்சனைகள் வருவதும் போவதும் சகஜம்.எல்லா பிரச்சனைகளுக்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவுன்ற இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்யும்.அதுக்காக அதையே நினைச்சுகிட்டு இருந்தா யாருமே வாழ முடியாது.அதனால் நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா….நீ இப்ப உன் கணவனை மட்டும் தான் கவனிக்கனும்…சரியா…?” என்றான் குறும்பாக.

அவனது கடைசி வரிகளைக் கேட்ட தீபா..”கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது…” என்று முனங்கினாள்.ஆனால் ஜீவா அவளது முனங்களை சரியாக நூல் பிடித்து விட்டான்.

அய்யோ..! என் அருமைப் பொண்டாட்டியே…!இதில் விவஸ்தபட என்ன இருக்கு.எல்லாம் காலம் காலமாக..தலைமுறை தலைமுறையாக நடப்பது தானே,….” என்று விளையாட்டாய் கூறியவன்…பின்பு அமைதியாகி..”எனக்கு தான் என் தலைமுறை என்னன்னே தெரியாதே…பெத்தவங்களே யாருன்னு தெரியாதப்போ..தலைமுறை பற்றி என்ன தெரியும்…” என்றான் வேதனையான குரலில்.

அவனின் வருத்தம் புரிந்த தீபா….அவந்து கைகளை சற்று அழுத்தத்துடன் பிடிக்க…அந்த ஆறுதலான உணர்வு ஜீவாவிற்கு அப்பொழுது மிகவும் தேவையாய் இருந்தது.

உனக்கு ஒன்னு தெரியுமா தீபா….நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு.என்ன தான் சூர்யாவும் மகி அம்மாவும் எனக்கு ஆறுதலாய் இருந்தாலும்..,சில சமயம்  எனக்குன்னு யார் இருக்கான்னு தோணும்…? ஆனா இப்போ..எனக்குன்னு ஒரு குடும்பம் வந்துவிட்டது.மனைவின்னு சொல்ல நீ இருக்க.அப்பறம் என் குழந்தைங்க வருவாங்க.என்னை அப்பான்னு சொல்லுவாங்க….அதை நினைக்கும் போதே எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருக்கு.எனக்கு என்ன எல்லாம் கிடைக்கலையோ..!நான் எதுக்காக எல்லாம் ஏங்கினேனோ..அதெல்லாம் ரெண்டு பங்கா என் பிள்ளைங்களுக்கு குடுப்பேன்….” என்ற ஜீவா அவனது கனவுப் பட்டியலை வாசிக்கத் துவங்கி இருந்தான்.

ஜீவாவின் பேச்சினைக் கேட்ட தீபாவிற்கு நடந்த பிரச்சனைகளை மறந்து…இப்பொழுது ஜீவா மட்டுமே கண்ணிற்கு தெரிந்தான்.அவனின் ஆசைகள்…… அவனின் ஏக்கங்களை அவளுக்கு சொல்லியது. உறவுகளுக்கான அவனின் ஏக்கமும் அவளுக்கு நன்றாய்ப் புரிந்தது.

கண்டிப்பா….!நீங்க ஆசைப் படுறது எல்லாமே நடக்கும்..! என்ன கொஞ்சம் லேட்டா நடக்கும்.எனக்கு இப்ப அசதியா இருக்கு தூங்கலாமா?” என்றாள் தீபா கடைக்கண்ணால் அவனைப் பார்த்தவாறு.

 

என்னது தூக்கம் வருதா..?சரித்தான் டேய் ஜீவா ரொம்ப சிரமம்டா…! இவளை வச்சுகிட்டு ஒன்னும் பன்ன முடியாது.உனக்கு விதி விட்டது அவ்வளவுதான்…” என்று தனக்குத் தானே பேசிக்கொள்ள…தீபாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

என்ன உங்களுக்கு தூக்கம் வரலையா..?”என்றாள் தீபா கிண்டலாய்.

தூக்கம் தான..? அதுக்கென்ன வரும் போது வரும்.நீ தூங்குமா..நல்லா தூங்கு…” என்றான் ஆதங்கத்துடன்.

சிரிப்பை அடக்கிய தீபா..”தூங்கப் போறேன்னா சொன்னேன். தூங்கலாமான்னு தானக் கேட்டேன்…”என்றாள் தலையைக் கவிழ்ந்தபடி.

அதற்கான அர்த்தம் ஜீவாவிற்கு லேட்டாய்ப் புரிய….”ஹைய் தீபுக் குட்டி…” என்று சந்தோஷத்தில் அவளைத் தூக்கி சுத்த…”ஐயோ எதுக்கு இந்த கத்துக் கத்துறிங்க….மானம் போகுது…” என்று தீபா பொய்யாய் சலித்துக் கொள்ள.. அதன் பிறகு அங்கு பேச்சு வார்த்தைகள் அர்த்தமற்று போயின. அவர்களின் இல்லறப் பயணம் துவங்கியது.

இதுவரை தனிப் பறவையாய் சிறகடித்த ஜீவாவின் வாழ்க்கை…குடும்பம் என்னும் கூட்டிற்குள் அடையத் துவங்கியது.

ஆனால் அதற்கு நேர்மாறாக நிலாவின் இதயமோ எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது.நிலா ஓரளவுக்கு இதை எல்லாம் எதிர் நோக்கி இருந்தாள். ஆனால், எல்லாம் இவ்வளவு சீக்கிரம் நடைபெறும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.அருளுடன் ஏற்பட்ட மோதலில் சூர்யாவின் கோபத்தைப் பார்த்த நிலாவிற்கு.., அவளின் தைரியம் எல்லாம் ஆட்டம் கண்டது.ஊரில் உள்ள தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டு சென்றாள் நிலா.

ஆனால் சூர்யாவோ எந்த பதட்டமும் இல்லாமல் தனது லேப்டாப்பில் எதையோ வெகு தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு நிமிர்ந்த சூர்யா…”வா நிலா..!எதுக்காக அங்கயே நிக்குற கம் ஆன்..” என்று சொல்லிவிட்டு மீண்டும் தனது வேலையில் மூழ்கினான்.

 

உள்ளே வந்த நிலா என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டு நிற்க…”உட்கார் நிலா..”என்ற சூர்யாவின் சொல்லில் நடப்பிற்கு வந்து… அவனுக்கு அடுத்த ஓரத்தில் அமர்ந்தாள். என்ன பேசுவதென்று புரியாமல் நகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

நிலாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.எப்படியும் தன்னிடம் கோபப்படுவான்… கத்துவான் என்று எண்ணியிருந்த நிலாவிற்கு…..தன் கழுத்தில் தாலி கட்டியது முதல் சூர்யா நடந்து கொண்ட முறை வினோதமாய்ப் பட்டது. தன்னிடம் கோபப்பட்டு எரிந்து விழுந்தவன்…, இப்பொழுது தன்னிடம் இவ்வளவு தன்மையாக நடந்து கொள்வதை நிலாவால் நம்ப முடியவில்லை.

எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் சூர்யா….”என்றாள் நிலா….,சற்று தைரியம் வரப் பெற்றவளாய்.

அவளை வியப்புடன் பார்த்த சூர்யா…”என்ன கேட்கனும் நிலா…!எதா இருந்தாலும் தயங்காம கேளுமா…” என்றான்.

இல்லை என் மேல் உங்களுக்கு கோபமே வரலையா..? அங்க அத்தனை பேர் நம்பாம பார்த்தப்போ…நீங்க மட்டும் எப்படி என்னை நம்புனிங்க…!”என்றாள் நிலா.

நிலா கண்டிப்பாய் இந்த கேள்வியைக் கேட்பாள் என்று சூர்யா எதிர்பார்த்திருக்கவில்லை.தன்னிடம் கத்துவாள்,கோபப்படுவாள் என்று அவனும் நினைத்திருக்க….நிலா இப்படி அமைதியாய் இருப்பது அவனுக்கும் நம்ப முடியவில்லை.

உன்னோட கேள்விக்கு பதில் இப்போ சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.நேரம் வரும் போது கண்டிப்பா பதில் சொல்றேன்..” என்றான் சூர்யா.

நிலா..”இல்லை எனக்கு இப்பவே பதில் சொல்லுங்க…!” என்றாள்.

முதலில் வாயைத் திறந்த சூர்யா…பின் சுதாரித்துக் கொண்டவனாய்…”ஆமா இது பெரிய பரம வித்தை.நீ பேந்த பேந்த முழிச்சுகிட்டு நின்னியே…அதைப் பார்த்தவுடன் தெரிஞ்சுடுச்சு….” என்றான் சமாளிப்பாய்.

சரி அப்படி தெரிஞ்சாலும்…,அருள் கிட்ட எடுத்து சொல்லி என் கல்யாணத்தை நடத்தி இருக்கலாம். இல்லை அப்படியே நின்ற கல்யாணம் நின்றதாவே இருந்திருக்கலாம்.எதுக்காக அவ்வளவு அவசரமா என் கழுத்தில் தாலியக் கட்டுனிங்க,..?” என்றாள் நிலா ஆராய்ச்சிப் பார்வையுடன்.

டேய் சூர்யா….இப்பவே இந்த குறுக்கு கேள்வி கேட்க்குறா….வக்கீல் புத்தியக் காட்டுறா…ம்ம்ம்ம் வாயைத் திறக்காத…” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்…”இப்ப உனக்கு என்ன பிரச்சனை…சரி பாவமா இருந்தது உன்னப் பார்க்க..அதான் போனாப் போகுதுன்னு வாழ்க்கை குடுத்தேன்..” என்றான் சிரிப்புடன்.

அதான் அப்படி வாழ்க்கை குடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்ததுன்னு கேட்குறேன்…”என்றாள் நிலா…,பல்லைக் கடித்துக் கொண்டு.

அதற்கு மேல் பொறுமை இழந்தான் சூர்யா..”இப்ப உனக்கு என்னடி பிரச்சனை….இப்ப என்ன நாளைக்கே அந்த ருத்ரத்தை வர சொல்றேன்.அவர் கூட போகனும்ன்னா போ…அதை விட்டுட்டு இப்படி முதல் நாளே கேள்வி கேட்டு உசிர வாங்காத…” என்றான் கடுப்பாய்.

ருத்ரம் என்ற பெயரைக் கேட்ட நிலா ….அப்படியே திகைத்தவாறு இருக்க….அவளைப் பார்த்த சூர்யாவிற்கு பாவமாய் போனாது.”சும்மா உன்ன ஆப் பன்றதுக்காக அப்படி சொன்னேண்டா…அதுக்குப் போய் இப்படியா பயப்படுவாங்க….”என்றவாறு அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

சூர்யாவிடம்  கேட்க வந்த கேள்விகளெல்லாம் மறந்து…, அவனது அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள் நிலா.அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை விலக்கியவன்…”கண்டிப்பா உன்னுடய எல்லா கேள்விகளுக்கும் சீக்கிரமா பதில் சொல்றேன்.இப்ப எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குமா…வர பிரச்சனைகளை அப்பறம் பார்த்துக்கலாம்…” என்றவன்… “உனக்கு நம்பிக்கை இருந்தா இங்கயே தூங்கலாம். இல்லையென்றால் உள்ள ஒரு ரூம் இருக்கு… அங்கயும் தூங்கலாம்.எதுவா இருந்தாலும் அது உன் விருப்பத்தைப் பொருத்தது…” என்று சொல்லிவிட்டு “நான் ஒரு கால் பண்ணிட்டு வந்துடுறேன்…” என்றவாறு சென்று விட்டான்.

“நான் கேட்ட கேள்விக்கு… பதிலைத் தவிர மத்த எல்லாத்தையும் வியாக்கியானாப் பேசுறான் கருவாப்பய….அதையும் மீறிக் கேட்டா..அந்த ருத்ரம் பேரை சொல்லி அமைதியாக்கிடுறான்.என்ன நடந்தாலும் இவன் அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.ஆனா இவன் நல்லவனா..!கெட்டவனா..!” என்று தனது மனசாட்சியுடன் தீவிர ஆலோசனையில்  ஈடுபட்டிருந்தாள் நிலா.

“கொஞ்சம் நல்லவன் தான்… “என்று தன் இறுதி முடிவை எடுத்தவள் இங்கயே தூங்கலாம் என்று முடிவு பண்ணி…எழுந்தாள்.நிலா எழுந்த வேகத்தில் அருகில் இருந்த லேப்டாப்பை தெரியாமல் தட்டிவிட்டுவிட்டாள். அதைக் கீழே விழாமல் பிடித்தவள்…பழைய இடத்தில் வைக்கப் போக…, அவளது கைப் பட்டதினால் அதில் மினிமைஸ் செய்யப்பட்டிருந்த புகைப்படம் பெரிய அளவில் வந்து நின்றது.

அந்த புகைப்படத்தைப் பார்த்த நிலாவின் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு நிலைகுத்தி நின்றது.லேப்டாப்பை பழையபடி வைத்தவள்..அதில் கண்ட புகைப்படத்தை நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

வினோத்தும்..,சூர்யாவும் தோளில் கைப் போட்டு நின்றிருந்த புகைப்படம் தான் அது…!

Advertisement