Advertisement

முகவரி 21:

 

கல்யாண வீடு பரபரப்பாய்க் காணப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமத்து பெண்களின் பட்டுபுடவைகள் ஒரு பக்கம் சரசரக்க… ஒரு பக்கம் சொந்த பந்தங்கள் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க…,இன்னும் சிலரோ சூர்யாவை பற்றியே பேசிக் கொண்டிருக்க..அந்த வீடு ஆட்களின் வரவால் நிறைந்து காணப்பட்டது.

சென்னையில் இருந்து பல முக்கியப் புள்ளிகளும் வருகை தந்து கொண்டிருந்தனர்.ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்களைப் பார்த்து அந்த கிராமமே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.எவ்வளவு தான் நகரத்தின் சாயல் கிராமத்தில் வீசினாலும்….அவர்களின் மண் மனம் மாறவில்லை.

“அதிலும் ஊரில் பெரிய குடும்பம் வேறு…சொல்லவா வேண்டும்..? ஊரே அங்குதான் இருந்தது.பிரபுவிற்கு இத்தனை வருடங்கள் கழித்து தன் ஊருக்கு வந்ததால்….அனைத்து சொந்த பந்தங்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே அவருக்கு நேரம் போதவில்லை. அவருடன் இணைந்து மாலாவும் சிரித்த முகமாய்…தன் புன்னைகையால் மட்டும் அனைவருக்கும் பதில் அளித்துக் கொண்டிருந்தார்”.

சூர்யா காலில் சக்கரம் கட்டாத குறையாய் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.ஆனால் ஜீவாவின் நிலை தான் பரிதாபமாய் இருந்தது.இந்த ஊரில் அவனை யாருக்கும் தெரியாது.அவனுக்கும் யாரையும் தெரியாது.அவன் என்ன செய்வான் பாவம்..? கடமையே என்று தயாராகிக் கொண்டிருந்தான்.

தீபா தனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.அவளது நிறம் அவளை செம்மையாகக் காட்டியதா…? இல்லை அவளது வெட்கம் அவளை செம்மையாகக் காட்டியதா…? என்று தெரியாத அளவுக்கு அவளின் முகம் செம்மையைப் பூசி இருந்தது.அங்கு ஏதோ எடுக்க வந்த அருள்….தீபாவைப் பார்த்து திகைத்தான்.

 

அருள்…”என்ன தீபு…வெட்கப் படுறியா என்ன…? நான் கனவு ஏதும் காணுறேனா..?” என்றான் விளையாட்டாய்.

அந்த நேரத்திலும் அருளைப் பார்த்து தீபா பல்லைக் கடிக்க.. “சரி..சரி…முறைக்காத..பயமா இருக்கா இல்லையா…என்று வடிவேல் பாணியில் சொன்னவன்..” தங்கையின் அழகை நெட்டி முறித்தான்.”இந்த ஏற்பாடு அனைத்தையும் என் தங்கைக்கு நான் பார்த்து பார்த்து செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..” என்ற ஒரு நொடி ஏக்கம் அவன் மனதில் வந்து போனது.ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் முகம் கண் முன் வர…தன் எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்தை காலி செய்தான்.

அருள் இப்படி திடிரென்று வந்து பாசமாக பேசுவதும்..பின் தானாக கூட்டுக்குள் சுருண்டு கொள்வதும் தீபாவின் கண்களுக்கு தப்பவில்லை. அருள் தன் பிடிவாதத்தை விட்டு பழைய அருளாக..,தன் பாசமான அண்ணனாக வந்தால் எப்படி இருக்கும் என்று தீபா யோசித்துக் கொண்டிருக்கும் போதே…அங்கு வந்தாள் ரம்யா.

ரொம்ப அழகா இருக்க தீபா..!”என்றாள் ரம்யா.

தேங்க்ஸ் ரம்யா…!” என்று சொன்ன தீபா தலையைக் கீழே குனிந்து வெட்கப்பட…”ஸ்ஸ்ப்பா…இந்த கல்யாணம் பன்றப்போ….எங்க இருந்து தான் வருமோ வெட்கம்..ஆனா ஊனா தலையக் கவுத்திக்கிறிங்க…” என்று ரம்யா அலுப்பாய் சொல்ல…அவளது பேச்சில் தீபாவிற்கு சிரிப்பு வந்தது.

நிலா அண்ணி ரெடி ஆகிட்டாங்களா..?”என்றாள் தீபா.

ரம்யா..”மேடம் உங்களுக்கு தான் முதல் திருமணம்.அதனால் நீங்க தான் சீக்கிரம் தயாராகனும் சரியா? நிலா ரெடியாகிட்டே இருக்கா.அவதான் “போய் தீபாவை பார்த்து வாமா மகராசி..” என்று என்னை அனுப்பி வைத்தாள் என்றாள் ரம்யா.

தீபா…”நீங்க இவ்வளவு நல்லா பேசுவிங்களா…? நீங்க அமைதியா இருக்குறதைப் பார்த்து..ரொம்ப அமைதியானவங்கன்னு நினைத்தேன்.ஆனா இப்பதான் தெரியுது நீங்க எப்படி பேசுவிங்கன்னு..!” என்றாள்.

ஹலோ..!ஹலோ…!இங்க நீதான்மா கல்யாணப் பொண்ணு..அதனால் நாங்கதான் உன்னை கிண்டல் பண்ணனும்.இதுதான் காலம் காலமா நம் நாட்டு கலாச்சாரம் சரியா..?கலாச்சாரத்துல கை வைக்கக் கூடாதுமா…” என்று ரம்யா கண்ணை உருட்டி உருட்டி சொல்ல…தீபா சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அது சரி..! உங்களுக்கும் ஒரு நாள் கல்யாணம் வைபோகம் வரும்.அப்ப இருக்கு உங்களுக்கு….” என்றாள் தீபா.

தீபாவின் வார்த்தைகளில் ஒரு நிமிடம் ரம்யாவின் முகம் இருண்டு மீண்டது….”அதெல்லாம் நான் அசால்ட்டா ஹேண்டில் பண்ணுவேன் தீபா….” என்று கெத்தாய் சொல்ல…இருவரின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

“என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க இங்க..?”என்ற ஜக்குவின் அதிகாரமான குரலில் இருவரும் அமைதியாகினர்.

ரம்யாவின் காதருகில் குனிந்த தீபா..”எங்க பாட்டி…பெரிய ஹிட்லர்ன்னு மனசுல நினைப்பு…ஆனா சூர்யா அண்ணாகிட்ட மட்டும் டம்மி பீசு…” என்று சொல்லி சிரித்தாள்.சூர்யாவைப் பற்றி எதுவும் விரிவாக தெரியாத போதும் தீபாவுடன் சேர்ந்து ரம்யாவும் சிரித்தாள்.

“பொம்பள சிரிச்சா போச்சு…புகையிழை விரிச்சா போச்சு..” அதனால கொஞ்சம் அளவா சிரி தீபா.பொம்பளைப் பிள்ளை இப்படி சிரிச்சா…குடும்பத்துக்கு ஆகாதுடியம்மா….என்று நீட்டி முழக்கி விட்டு சென்றார் ஜக்கு.

“தீபா…! பாட்டி இப்ப மட்டும் தான் இப்படியா..? இல்லை எப்பவுமேவா..?” என்றாள் ரம்யா……பவ்யமாய்.

“அவங்க பிறவியே அப்படித்தான் ரம்யா.அதையெல்லாம் கண்டுக்காதிங்க…” என்றாள் தீபா.

அதுசரி.., இவங்களை கண்டுகிட்டு எனக்கென்ன ஆகப் போகுது.அந்த விஷத்துல நிலாதான் கவலைப் படனும்.என்ன…. பாட்டிய நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு….அவகிட்ட மாட்டிகிட்டு இவங்க என்ன பாடுபட போறாங்களோ…! என்று நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா.

மயில் வண்ண பட்டுப் புடவையில் மயில் தோகையாய் விரிந்த கூந்தலுடன் யோசனையில் அமர்ந்திருந்தாள் நிலா.”நிலா நீ செய்வது சரியா….இந்த கல்யாணத்துனால மத்தவங்களுக்கு பிரச்சணை வருமா…?” என்று அவளின் மனம் அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.பாதி கிளம்பியும்..பாதி கிளம்பாமலும் யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் நிலா.

கதவு தட்டும் ஒலியில் சிந்தனையில் இருந்து மீண்ட நிலா… “ரம்யாவாத்தான் இருக்கும்..இவ்வளவு நேரமா…?தீபாவைப் பார்த்துட்டு வர..”என்று மனதில் எண்ணியவளாய் கதவைத் திறந்தவள் திகைத்தாள்.அவள் எதிர்பார்த்தது ரம்யாவை.ஆனால் அங்கு நின்றிருந்தது சூர்யா.

ஜீவாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவனும் பட்டு வேட்டி சட்டையில் இருந்தான்.இத்தனை நாள் பார்த்த சூர்யாவிற்கும் இப்பொழுது பார்க்கும் சூர்யாவிற்கும் நிறைய வித்யாசங்கள் தெரிந்தது நிலாவிற்கு.சென்னையில் பார்த்த சூர்யாவின் முகத்தில் ஒரு இறுக்கம் இருக்கும்.சிரிப்பு கிலோ எவ்வளவு என்ற ரீதியிலான முகமாய் இருக்கும்.ஆனால் இன்று முகத்தில் அந்த சிரிப்பு இல்லாவிட்டாலும் எப்பொழுதும் காணப்படும் அந்த இறுக்கம் இல்லை.இத்தனை நாள் கருவாயனாக தெரிந்தவன் இன்று அழகனாய் தெரிந்தான்.அடர்ந்த சிகை அடங்க மறுக்காமல் நெற்றியில் முன் பகுதியில் படர்ந்திருந்தது.நிலா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிலாவின் முகத்தின் முன் சூர்யா சொடக்குப் போட…தன்னிலைக்கு வந்த நிலா அப்படியே முழித்துக்  கொண்டிருக்க…”கொஞ்சம் வழிவிட்டிங்கன்னா.. உள்ள இருக்க மாலைய எடுத்துப்பேன்.அதுக்காகத் தான் வந்தேன்.ப்ளீஸ் கொஞ்சம் நகர்ந்துக்கிறிங்களா..? என்றான் சூர்யா.

சூர்யா இப்படி பேசுவது நிலாவிற்கே புதிதாய் இருந்தது.அவன் எப்பொழுதும் நிலாவிடம் பேசும் அந்த கெத்து இல்லை.எப்பொழுதும் மரியாதை இல்லாமல் அதிகாரமாய் பேசுபவன் இன்று அமைதியாய் மரியாதையாய் பேசுவது நிலாவிற்கு வித்யாசமாய் இருந்தது.அவள் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சூர்யா மின்னலாய் விரைந்து சென்று விட்டான்.

என்னடி இப்படி பேயறைந்த மாதிரி இருக்க…? என்றாள் அங்கு வந்த ரம்யா.”ஒன்றும் இல்லை என்பதை போல் நிலாவின் தலை தானாக ஆடியது..”.

ரம்யா..”அதுசரி என்னடி எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்கிங்க.இப்படி ஒரு சின்னப் பிள்ளைய பக்கத்துல வச்சுகிட்டு மாத்தி மாத்தி ரொமான்ஸ் பன்றிங்க…”என்றாள்.ஆனால் அவளின் பேச்சு நிலாவின் காதுகளில் விழுந்தால் தானே..!

நிலாவைப் பார்த்து விட்டு சென்ற சூர்யாவின் நிலையை சொல்லவா வேண்டும்.முதன் முறையாக சேலையில்..,அதுவும் பட்டு சேலையில் அவளைப் பார்த்தவனின் மனம் எக்குத் தப்பாய் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது. எங்கே பேச்சுக் கொடுத்தால் தன் கட்டுப்பாடுகளை மீறி விடுவமோ..என்று பயந்து எதையும் முகத்தில் காட்டாமல் வந்துவிட்டான்.ஆனால் இன்னமும் சூர்யாவின் மனம் சமாதானம் அடைய மறுத்தது.அதிலும் நிலா அவனைப் பார்த்த பார்வை அவனுக்கு பல கதைகளை திரித்து சொல்லியது.

யோசித்துக் கொண்டிருந்தவனின் தோளில் கை விழுக திரும்பிப் பார்த்தான்.பார்த்தவனின் மனம் உடனடியாக மகிழ்ச்சிக்கு மாறியது.அங்கு அவனது பள்ளித் தோழன் ராம் நின்றிருந்தான்.(நம்ம “விண்மீது வெண்பிறையாய்” பஞ்ச் ராம் தாங்க)​

டேய் வேந்தா….!என்னடா நீ மாப்பிள்ளை மாதிரி நிற்குற..!” என்ற ராம் அவனை அணைத்துக் கொண்டான்.

டேய் மாப்பிள்ளை…வாடா..வாடா..எங்க நீ வரமா போய்டுவியோன்னு நினைச்சேன்.நல்ல வேளை வந்துட்டடா மச்சான்.ரொம்ப சந்தோஷமா இருக்குடா.ஆமா நீ மட்டும் வந்துருக்க அனிதா எங்க..?” என்றார் சூர்யா உரிமையாய்.

அந்தக் கொடுமைய ஏண்டா கேக்குற..?இன்னைக்குதான் அவ பிரண்ட் சத்யாவுக்கு கல்யாணம்.அதனால் மேடம் அங்க ஆஜர்.நான் இங்க ஆஜர்.”என்றான் ராம்.

அதற்குள் சூர்யாவை அங்கு யாரோ அழைக்க…”அதோ அந்த ரூமல ஜீவா இருக்கான் மச்சான்.நீ பேசிட்டு இரு நான் வந்துடுறேன்..” என்றவாறு சென்றான் சூர்யா.

நேராய் ஜீவாவின் அறைக்குள் நுழைந்தான் ராம்.அவனைப் பார்த்த ஜீவா..முறைக்க..”சாரிடா மச்சான்.நான் நேத்தே வரனும்ன்னு தான்  நினைச்சேன்.ஆனா முடியலைடா.அது ஏன்னு கல்யாணம் பண்ணுணதுக்கு அப்பறம் உனக்கே தெரியும்..” என்றான் சலிப்பாய் ராம்.

டேய் போதும்…சாக்கு சொல்றதுக்கு உன்ன மிஞ்ச இன்னும் ஆள் பிறந்து வரலை சரியா…லேட்டா வந்துட்டு பில்டப்பு வேற..” என்று முறுக்கிக் கொண்டான் ஜீவா.

ராம்..”என்னடா..! நான் தான் சொல்றேன்லா..அப்பறம் இப்படி பேசுனா எப்படி.அப்பறம் நான் பஞ்ச் சொல்ல ஆரம்பிச்சுடுவேன்..” என்று மிரட்டினான்.

அப்பா சாமி…! தயவு செய்து அதை மட்டும் செய்துடாத…..உனக்கு ஒரு புண்ணியமா போய்டும்.நாங்க பாவம்டா..”என்றான் ஜீவா பாவமாய்.

சரி சரி அந்த பயம் இருக்குல்ல அப்பறம் ஏண்டா…என்ன பேசவிட்டு வேடிக்கை பாக்குறிங்க என்று ராம் கெத்தாய் சொல்ல ஜீவா அவனை மொத்தத் தொடங்கினான். 

 

ஐயர் மந்திரங்கள் ஓத….ஜீவா அதை திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான்.ஆனால் மனதில் எப்போதடா தீபாவை கண்ணில் காட்டுவார்கள் என்ற ஏக்கத்துடன் அமர்ந்திருந்தான்.அக்னி குண்டத்தில் இருந்த வந்த புகை மண்டலம் ஜீவாவின் கண்களை எரிய செய்து கண்ணீரை வரவைத்தது.அதை பார்த்த ராம்…ஜீவாவின் காதருகில் குனிந்து..”டேய் மாப்பிள்ளை..இப்பவே அழுதா எப்படி…?இன்னும் காலம் இருக்கா இல்லையா..?சோ கொஞ்சம் மிச்சம் வைடா கண்ணீரை.பின்னால் உபயோகப் படும்..” என்று அவன் வயித்தெரிச்சலைக் கிளப்பிப் கொண்டிருந்தான்.

ஜீவா வாயைத் திறந்து பதில் சொல்ல முற்படும் முன்..”பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ..”என்ற ஐயரின் குரல் ஜீவாவின் காதில் தேன் வார்த்தது.

மாம்பழ வண்ண பட்டுப் புடவையில்..இயற்கை அழகுடன் சேர்த்து,அழகு நிலைய பெண்களின் கைவண்ணமும் தீபாவை மிளிர்வாய்க் காட்டியது.குறும்பு கூத்தாடும் அவள் கண்களை பார்க்க ஜீவா ஆசைப் பட..,ஆனால் தீபாவோ குனிந்த தலை நிமிராமல் ரம்யாவின் உதவியுடன் மணமேடை  ஏறினாள்.

எல்லாவற்றையும் மறந்து தன் பெண்ணை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் சுதா.எத்தனை பிரச்சனைகள் இருந்த போதிலும்.. மணமேடையில் தன் மகளைக் கண்ட தாயின் உள்ளம் நிம்மதி அடைந்தது.

சூர்யா..”தீபாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் உடன் பிறக்காவிட்டாலும்,அவளுக்கு அண்ணனாய் ஒரே வீட்டில் இல்லாமல் இருந்தாலும்…ஏதோ ஜென்ம ஜென்மமாய் அவள் தன் தங்கையாய் இருந்த உணர்வுடன் நின்றிருந்தான்”.

“முரளி குட்டி போட்ட பூனையாய்….. சூர்யாவின் அருகிலேயே இருந்தார். அவரின் எதிர்பார்ப்பு சூர்யாவிற்கும் தெளிவாய் தெரிந்து இருந்தது.அதனால் அவனும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை”. 

“பொண்ணோட அண்ணை வர சொல்லி மாப்பிள்ளைக்கு முறை பண்ண சொல்லுங்கோ…!”என்று ஐயர் அழைக்க…,சூர்யா தயங்கி நின்றான். சூர்யாவின் தயக்கத்தைப் பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தான் அருள்.சூர்யாவின் அருகில் சென்றவன்..”என்ன தான் விழுந்து விழுந்து செய்தாலும்…அவளுக்கு அண்ணன் நான் மட்டும் தான்…என்ன தான் உயரமா பறந்தாலும் ஊர்க்குருவி…..பருந்து ஆகாது…”என்றான் யாருக்கும் கேட்காத வண்ணம்.

அருள்…முன்னே செல்ல…சரியாக இடைமறித்தது ஒரு பாட்டியின் குரல்..”என்ன அப்பு மூத்த அண்ணன் இருக்கும் போது இளைய அண்ணன் செய்யக் கூடாது அப்பு…உனக்குத் தெரியாதா..” என்றவர்..”என்ன ஜக்கம்மா நீ கூடவா சொல்லலை….?”என்று இழுக்க…,அருள் கடுப்பாகி நின்றான்.

அருளின் அருகில் சென்ற சூர்யா..”இப்ப ஊர்க்குருவி யாரு..?பருந்து யாருன்னு தெரிஞ்சுருக்குமே..! நான் தான் சொன்னேன்ல தம்பி..நீ இன்னமும் வளரனும்.ஆள் மட்டும் வளர்ந்தா போதாது.அறிவும் சேர்த்து வளரனும் சரியா..?”என்றவன் மேடையேறினான்.

எங்கே அருளுக்கும்.., சூர்யாவிற்கும் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்த தீபா அப்பொழுதுதான் பெருமூச்சு விட்டாள்.ஆனால் ரம்யாவோ அதிர்ச்சியாகிப் போனாள்.”அருளும் சூர்யாவும் அண்ணன் தம்பியா..?”என்று வாயடைத்துப் போனாள்.மேலே தனது அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த நிலாவுக்கும் அப்படித்தான் இருந்தது.

ஜீவா..,தீபாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவளோ அவன் பக்கமே திரும்பவில்லை.என்னடா இது என்று நொந்து திரும்பும் போது… ஜீவாவின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள் தீபா.ஸ்ஸ்ஸ் என்று ஜீவா கத்த…”மாப்பிள்ளை நான் தான் சொன்னேன்ல..அமைதியா இரு…தீபா உன்னைக் கண்கலங்காமல் பார்த்துக்குவா…” என்றான் ராம்.

ஆனால் தீபாவோ அப்பாவியாய் அமர்ந்திருந்தாள்.”டேய் ஜீவா இவகிட்ட கொஞ்சம் இல்ல நிறைய உஷாரா இருக்கனும் நீ..”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ஜீவா.

அவர்களின் சில்மிஷங்களையும்..,கலாட்டாக்களையும் கண்டும் காணாமல்..,சூர்யா தான் செய்ய வேண்டிய அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து முடித்தான்.சூர்யாவைப் பார்த்து தீபாவின் கண்கள் கலங்க..”தன் கண்களாலேயே அவளை சமாதனப் படுத்தினான் சூர்யா”.

ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜக்குவிற்கும்.., சுதாவிற்கும் வயிரு எரிந்தது.அருளின் இடத்தில் சூர்யாவை வைத்துப் பார்க்க அவர்களால் முடியவில்லை என்பதே நிதர்சனம். இப்படி எல்லாம் நடக்கும் என்று அவர்கள் கனவா கண்டார்கள்.ஆனால் முரளிக்கு இப்பொழுதுதான் மன நிறைவாய் இருந்தது.

நடந்த அனைத்தும் அருளுக்கு எதிரான செயலாகவும்..,சூர்யாவின் திட்டமிட்ட செயலாகவும் நடந்து முடிந்திருந்தது.ஒரே நேரத்தில் அண்ணனாய் கடமையை செய்தவன்…தான் தான் மூத்த வாரிசு என்பதை செயல் மூலம் நிரூபித்தான்.மகேஷ்வரியின் வாழ்வில் நடந்த அத்தனை துன்பங்களும் மறைந்து..,அந்த இடத்தில் அவரின் வாழ்வு முழுமை பெற்றது  முரளியின் முதல் மனைவியாய்.

தன் தாயைக் கேள்வியாய் பார்த்த கண்கள் அனைத்தும் இப்பொழுது மதிப்புடன் பார்ப்பதை கண்ட சூர்யாவிற்கு அப்பொழுதுதான் மனம் நிம்மதி அடைந்தது.

கெட்டிமேளம்…கெட்டிமேளம்..”என்று ஐயரின் வார்த்தைகள் முழங்க.. தீபாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் ஜீவா.தாலி தன் கழுத்தில் ஏறும் போது..தீபாவின் உடல் ஒருமுறை நடுங்கி பின் சீரானது.அவளின் பதட்டத்தைப் பார்த்த ஜீவா..அவளைப் பார்த்து கண் சிமிட்ட…”திடீரென்று வெட்கம் வந்தவளாய் தலையைக் குனிந்து கொண்டாள் தீபா..”.

ஜீவா-தீபா தம்பதியினர் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க…அடுத்த ஜோடிக்கான மேடை தயார் செய்யப்பட்டது.சூர்யாவின் மனப் போராட்டம் தெரிந்த மகேஷ்வரியாலும் நிம்மதியாய் இருக்க முடியவில்லை.பிரபுவும்-மாலாவும் எப்படியாவது இந்த கல்யாணம் தடங்கல் இல்லாம நடந்துடனும் என்று இல்லாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தனர். நிலாவும் கடமையே என்று தயாராகிக் கொண்டிருந்தாள்.

அருள் மாப்பிள்ளையாய் மணமேடையில் அமர்ந்திருக்க…சூர்யாவோ மனதளவில் பிணமாய் நடமாடினான்.மீண்டும் மீண்டும் நிலாவின் முகம் அவனது மனதில் வந்து அவனை இம்சை பண்ணியது.எங்கே இங்கே இருந்தால் எல்லாம் கை மீறி நடந்துவிடுமோ என்று அஞ்சிய சூர்யா… கிளம்ப எத்தனிக்க..”எங்க போற சூர்யா..?அவ்வளவு மன திடம் இல்லாதவனா நீ..? நீ தான் அவளை மறந்துட்டயே …?அப்பறம் ஏன் கிளம்புற..?” என்று அவனின் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க…அப்படியே நின்றான் சூர்யா.எவ்வளவு பெரிய பலசாலியும் காதலின் முன் பலவீனமாகிறான் என்பது சூர்யாவிற்கு சரியாக பொருந்தியது.

 

இம்முறை ஐயர் மீண்டும் பெண்ணை அழைக்க….ரம்யாதான் நிலாவையும் அழைத்து வந்தாள்.ஆனால் நிலா..தீபாவைப் போல் தலை குனிந்து வரவில்லை.நேர்கொண்ட பார்வையுடன் நடந்து வந்தாள்.அதைக் கண்ட ஜக்குவின் மனம் துணுக்குற்றது..”என்ன இப்படி வரா..?புதுப் பொண்ணுக்குரிய வெட்கம்..,நாணம் இதெல்லாம் இவளுக்கு என்னன்னு தெரியாதா..?” என்று அருகில் இருந்த சுதாவிடம் வினவ..சுதாவோ ..தன் மருமகளின் அழகில் மெய்மறந்து நின்றிருந்தார்.

பிரபுவும்..,மாலாவும் கண்களில் நிறைந்த கண்ணீருடன் நிலாவையே பார்த்திருந்தனர்.அவர்களைப் பார்த்த சூர்யாவிற்கு மனதில் ஏதோ நெருடியது.அவர்களின் கண்களில் சந்தோஷக் கண்ணீரையும் மீறி ஏதோ கலக்கம் ஒன்று தெரிவது நிச்சயமாய் புலப்பட்டது.ஆனால் அது என்ன என்று சூர்யாவிற்கு விளங்கவில்லை.

அருளின் அருகில் அமர்ந்த நிலா…அப்பொழுதும் தலை குனியாமல் அமர்ந்திருந்தாள்.நிலாவின் இந்த செயல் ஜக்குவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.நிலாவைப் பார்த்த  அருளுக்கு சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷம்.ஒரு மனிதனின் காதல் கல்யாணத்தில் முடியும் போது இருக்கும் மகிழ்ச்சி அப்பட்டமாய் அருளின் முகத்தில் தெரிந்தது.

“என்னடியம்மா பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்க..? கொஞ்சமாவது வெட்கப் பட வேண்டாம்..அப்படியே நெடுமரம் மாதிரி உட்கார்ந்திருக்கா..?” என்று பிரபுவிடமும்..,மாலாவிடம் பொரிந்தார் ஜக்கு.மாலா கலக்கமாய் பிரபுவைப் பார்க்க..”அத்தை அவ சின்ன பொண்ணு…அது மட்டும் இல்லை கொஞ்சம் தைரியமாவே வளர்ந்துட்டா…அதான்” என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

நிலாவைப் பார்த்த மகேஷ்வரிக்கு…மனதில் உள்ள ஆசை அதிகரித்தது. சூர்யாவின் ஆசை தெரிந்திருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கலங்கி நின்றார்.அவரின் கலக்கத்தைக் கண்டு கொண்ட முரளி..”என்னாச்சு மகி..? ஏன் ஒரு மாதிரி இருக்க…சூர்யாவுக்கு முன்னாடி அருள் கல்யாணம் பன்றது மனசுக்கு கஷ்ட்டமா இருக்கா..?”என்று பரிவாய் வினவினார்.

 

அதெல்லாம் ஒன்றும் இல்லை…என்று தலையை ஆட்டிய மகி…கண்களால் சூர்யாவைப் பார்க்குமாறு முரளிக்கு சொல்ல… முரளியும் அதன் அர்த்தம் புரிந்தவராய் சூர்யாவைப் பார்த்தார்.அங்கு சூர்யா உடல் நரம்புகள் விரைக்க நின்றிருந்தான்.ஆனால் முரளிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு மன நிலையில் இருக்க…ஐயர் “கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” சொல்ல..அருள் சந்தோஷமாய் நிலாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.அதைப் பார்க்கும் திறனற்றவனாய் சூர்யா கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ஆனால் அருள் தாலியைக் கட்டும் முன்னர்….அங்கு வந்தவர்களைப் பார்த்து அவன் கை தானாக இறங்கியது.தன் கண்களை இறுக மூடியிருந்த சூர்யா…எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாய் இருப்பதைப் பார்த்து கண்களைத் திறக்க..அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து அவனும் திகைத்தான்.

“இவர் ருத்ரமூர்த்தியாச்சே…இவர் எப்படி இங்க..?இவரை நான் இன்வைட் பண்ணவே இல்லயே?” என்று யோசித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

நிலாவும்..,ரம்யாவும்  அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க…பிரபு-மாலாவின் கண்களிலும் அதே அதிர்ச்சி தெரிந்தது.அதிலும் மாலாவின் கண்கள் பயத்தை அப்பட்டமாய் காட்டியது.இவர்களின் முகத்தைப் பார்த்த சூர்யாவிற்கு எதுவும் விளங்கவில்லை.இருந்தாலும் அனைவரையும் அவனது கூரிய கண்கள் எடை போட்டுக் கொண்டிருந்தது.

என்ன செய்வதென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அருள்… தாலியைக் கட்ட போக..”ஒரு நிமிஷம் தம்பி..”என்று அதிகாரமாய் சொன்னார் ருத்ரம்.

யாருக்கும் எதுவும் புரியாமல் பார்க்க…முன்னால் சென்ற முரளி..”ஹலோ..!ருத்ரம் .நீங்க எப்படி இங்க..?”என்று வினவினார்.

“நீங்கதான் சொல்லனும் முரளி…! என்னோட மருமகளுக்கு நீங்க எப்படி கல்யாணம் பண்ணலாம்..?” என்றார் ருத்ரம். “மருமகளா..?” என்று ஜக்கு வாயைப் பிளக்க..அனைவரது முகமும் அதிர்ச்சியை காட்டியது. அனைவரையும் விட இது சூர்யாவிற்கு பேரதிர்ச்சியைத் தர… அருளோ…அதிர்ச்சியில் மேடையில் இருந்து எழுந்தே விட்டான்.

“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கிங்கன்னு நினைக்கிறேன்..!நிலா என் மச்சினன் பிரபு பொண்ணு.நீங்க வேற யாரோன்னு நினைச்சு வந்துருக்கிங்க..!”என்றார் முரளி.

“நான் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கேன் மிஸ்டர் முரளி.நிலா என்னோட மருமகள்.என் பையன் வினோத்தின் மனைவி…” என்று அசால்ட்டாய் ருத்ரம் சொல்ல…முரளிக்கு அதிர்ச்சி.அருள் பேயறைந்தது போல் நின்றிருந்தான்.

“என்ன பிரபு…? அவுக வந்து என்னனென்னமோ சொல்றாக.நீயும் உன் பொண்டாட்டியும் அமைதியா இருக்கிங்க..?” என்று அதட்டினார் ஜக்கு.

அவரை ஏன் மிரட்டுறிங்க..? அவர் என்ன செய்வார் பாவம்..? நிலா அவர் பெத்த பொண்ணா இருந்தாதான அவர் பேசுவார்..! இல்லையா பிரபு..? என்றார் ருத்ரம்.

“என்னது நிலா உன் பொண்ணு இல்லையா…?என்னதான் நடக்குது இங்க..?” என்றார் ஜக்கு.அனைவரும் அதிர்ச்சியில் இருக்க.. சூர்யா  ரம்யாவைப் பார்த்தான்.இதுவரையில் இருந்த அவளது கலகலப்பான முகம் மாறி.. பயத்தில் சுவரோடு சுவராக ஒட்டியிருந்தாள்.

“அவர் பேச மாட்டார்.ஏன்னா நிலா என் மருமகள்.அதோ அங்க நிக்குறாளே..!அந்த பொண்ணு ரம்யா அவதான் இவர் பெத்த பொண்ணு…” என்று ருத்ரம் அனைத்தையும் போட்டு உடைத்தார்.

“என்னது..?”என்று எல்லோரும் அதிர்ச்சியாகி வாயில் விரல் வைக்க..பிரபு தலை குனிந்தார்.

“என்ன அப்பு என்ன நடக்குது இங்க…? எனக்கு அப்பவே சந்தேகம்..?என்னடா இப்படி தலை நிமிர்ந்து வராளேன்னு..? சொல்லு இவ யாரு..? ஐயோ கடவுளே..!இவள் என்ன சாதியோ…என்ன கோத்திரமோ..? இப்படி இன்னொருத்தன் பொண்டாட்டியத்தான் என் பேரன் தலையில் கட்டப் பார்த்தியா..?”என்று ஜக்கு சராமரியாக கேள்விகளைத் தொடுத்தார்.

“அத்தை நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க..?” என்று பிரபு ஏதோ சொல்ல வர..” போதும் நிறுத்துடா..!எதுக்காக இப்படி திட்டம் போட்டு எங்களை ஏமாத்தின..? எங்க குடும்ப கவுரவத்தை சந்தி சிரிக்க வைக்கவா..?” என்று ஆங்காரமாய்ப் பாய்ந்தார் ஜக்கு.சுதாவோ எதுவும் பேசாமல் இருக்க..அருளுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

இத்தனைக் கலவரத்திலும் சூர்யா…நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் முகம் உணர்த்திய செய்தி அவனுக்கு ஏதோ உணர்த்தியதை போல் இருந்தது.அதே சமயம் ருத்ர மூர்த்தையைப் பற்றியும் அவனுக்கு நன்றாய் தெரியும்.டெல்லியில் புகழ் பெற்ற புள்ளி.அவரின் பின்னால் நின்றிருந்த அடியாட்களும்..அவரின் முக பாவனையையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

ருத்ரம் நிலாவை மருமகள் மருமகள் என்று சொல்லிய போதெல்லாம் நிலாவின் தலை இல்லை என்பதை போல் ஆடியது.கழுத்தில் இருந்த மாலையை அவளது கரங்கள் இறுக்கிப் பிடிக்க…மாலையில் இருந்த பூக்கள் ஒவ்வொன்றாய் உதிரத்தொடங்கியது.நிலாவின் முகமோ பாறாங்கல்லாய் மாறிப் போனது.அருளைப் பார்க்க..அவனோ நிலாவைப் பார்க்காது ஜக்குவின் அருகில் நின்றிருந்தான்.திரும்பி ரம்யாவைப் பார்த்து கண்களால் ஏதோ சொல்லியவள்…மேடையை விட்டு இறங்கி வந்தாள்.

“பாட்டி அவங்கதான் ஏதேதோ சொல்றாங்கன்னா..நீங்களும் அதை நம்புறிங்க.நிலா அப்படிப் பட்ட பொண்ணு இல்லை..”என்று நிலாவிற்காக வக்காலத்து வாங்கினான் அருள்.

அவன் சொல்லி முடிக்கும் முன்னர்…அவன் முன்னால் போட்டோக்கள் சிதறியது.அதில் நிலாவும் வினோத்தும் மாலையும் கழுத்துமாய்  சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.சிதறி இருந்த போட்டோக்களைப் பார்த்த அருளின்  மனமும் சிதறியது.ஆனால் சூர்யா அனைத்து அதிர்ச்சிகளையும் மனதில் மட்டுமே உள்வாங்கிக் கொண்டான்.முகத்தில் காட்டவில்லை.

 

“இப்பவாவது நம்புறிங்களா..?இல்லையா..?இதும் பத்தாதுன்னா என் கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு.அப்பறம் நீங்க எல்லாம் வருத்தப் படக்கூடாது. நான் என் மருமகளை அழைச்சுட்டு போகட்டுமா..?” என்றார் ருத்ரம்.

“ஐயோ…!வேண்டாம்..விட்டுடுங்க என் பொண்ணை…அவளை வாழவிடுங்க…” என்று பிரபு கெஞ்ச..”அதைத்தான் நானும் சொல்றேன் பிரபு…….நிலா அவ புருஷன் கூடதான வாழனும்.அதான் கூட்டிட்டு போறேன்…” என்றார் ருத்ரம்.  

“எது நடக்கக் கூடாது என்று மாலா நினைத்தாரோ..,கடைசியில் அதுவே நடந்துவிட்டது.

“ஏண்டி உனக்கு எல்லாம் வெட்கமா இல்லையா.அங்க ஒருத்தனைக் கட்டுவாளாம்.அதை மறைச்சு இங்க ஒருத்தனைக் கட்டுவாளாம்…த்து..என்ன மானம் கெட்ட பொழப்பு இது…” என்று ஜக்கு தன் வேலையை ஆரம்பித்தார்.அவரின் பேச்சில் யாருக்கு கோபம் வந்ததோ இல்லயோ மகேஷ்வரிக்கு முகம் தீயாய் மாறியது.

என்ன முயன்றும் நிலாவின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் ஒன்றும் மட்டும் மகேஷ்வரிக்கு நன்றாய்ப் புரிந்தது…அவளின் முகத்தில் எந்த கள்ளம் கபடமும் தெரியவில்லை என்று.

பிரபுவின் அருகில் சென்ற ருத்ரம்..”உன் பொண்ணை இப்ப விட்டுட்டு போறேன்.ஆனா என்னைக்கா இருந்தாலும் அவ சாவு என் கைல தான்.இப்ப என் முதல் வேலை நிலாவை இங்க இருந்து கூட்டிட்டு போறதுதான்”  என்று அவருக்கு மட்டும் கேட்கும் படியாக உரைக்க பிரபுவின் முகம் வெளுத்தது.

ருத்ரம் முன்னால் செல்ல நிலா எதுவும் பேசாமல் அவரின் பின்னால் சென்றாள்.ரம்யா பாவமாய் பார்த்துக் கொண்டு நிற்க….சூர்யா..,அருளைப் பார்க்க..அவனோ செய்வதறியாது நின்றிருந்தான்.

“ஒரு நிமிஷம்…..மிஸ்டர் ருத்ரம்” என்ற சூர்யாவின் குரலில் அந்த  இடமே அமைதியானது.

 

நிலாவின் அருகில் சென்றவன் நிலாவின் கையைப் பிடிக்க…”சூர்யா என்ன பன்ற…?” என்று கர்ஜித்தார் ருத்ரம்.

ஒரு நிமிஷம் சார்..எனக்கும் இவங்களுக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு.அதை தீர்த்துட்டு உங்க கூட அனுப்பி வைக்கிறேன்..என்று சொன்னவன் ஜீவாவைப் பார்க்க….அதற்காகவே காத்திருந்தவன் போல் சூர்யாவின் கைகளில் வந்து எதையோ தந்தான்.சூர்யா மகேஷ்வரியை அர்த்தத்துடன் பார்க்க….அவனின் மனம் தெரிந்த மகியும் கண்களாலேயே தன் சம்மதத்தை அளித்தார்.

பிறகு நேராய் நிலாவைப் பார்த்தான்.நிலா புரியாது அவனைப் பார்க்க….அங்கிருந்த யாரும் எதிர்பாராத அந்த சமயத்தில் நிலாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் சூர்யா.

சூர்யா..”தீபா..” என அழைக்க…”அண்ணா..” என்றவாறு முன் வந்த தீபா…கடைசி முடிச்சைப் போட்டாள்.அருள் அதிர்ச்சியாகிப் பார்த்துக் கொண்டிருக்க…ஜக்கு கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

பிரபுவின் முகத்திலும் மாலாவின் முகத்திலும் கண்ணீர் மறைந்தது. ரம்யாவுக்கு இன்னதென்று சொல்ல முடியவில்லை.மனதில் பயம் அப்பிக் கிடந்தாலும் முகம் கவலைகளை மறந்தது.

“சூர்யா இப்படி செய்வான் என்று நிலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நடந்த நிகழ்வு கனவு போல் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது. குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்தவன்…அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்”.

“இப்போ இவள் என் மனைவி….மிஸ்ஸஸ் சூர்ய வேந்தன்.இப்ப தாராளமா அழைச்சிட்டுப் போங்க…..! தில் இருந்தா..?” என்றான் சூர்யா சவாலாய்.

“சூர்யா நீ என்ன பண்ணியிருக்க தெரியுமா..?யார்கூட மோதி இருக்க தெரியுமா..?இப்பக் கூட அந்த தாலிய அவ கழுத்துல இருந்து அறுத்து எறிஞ்சுட்டு என்னால கூட்டிட்டு போக முடியும் பார்க்குறியா..?” என்று கத்தினார் ருத்ரம்.

 

அருகில் இருந்த சேரில் ஆயாசமாய் அமர்ந்தான் சூர்யா. ஸ்ஸ்ஸ்ப்பா….என்று கால்மேல் கால் போட்டவன் நிலாவையும் அருகில் இருத்திக் கொண்டான்.”உன்னால முடிஞ்சா நீ சொன்னதை செஞ்சுதான் பாரேன்..”என்றான் கெத்தாய்.

“இப்படி அடுத்தவன் பொண்டாட்டியை கல்யாணம் பன்னியிருக்கியே உனக்கு வெட்கமா இல்லை.இவ எப்பேர்பட்டவன்னு தெரியுமா உனக்கு…? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை…அவளை என் கூட அனுப்பிடு…” என்று ருத்ரம் கொதிக்க…

“இதோ பார்…என் நிலா தப்பானவளாவும் இருக்க முடியாது.அவளால தப்பு செய்யவும் முடியாது…” என்று அவளை அணைத்துக் கொண்டே சொல்ல….”அதுவரை அமைதியாய் இருந்த அவளது கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது….அது சூர்யா தன்னை தப்பானவள் இல்லை என்று சொன்னதால் வந்த கண்ணீர்..” 

சூர்யாவின் கையணைப்பு அவளுக்கு எல்லா பாதுகாப்பையும் தருவது போல் இருந்தது.அவளது மனதின் பயம் புரிந்த சூர்யாவும் அவளது நடுங்கிய கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

“பின்னால் நீ ரொம்ப வருத்தப் படுவ சூர்யா….ஏண்டா என்கிட்ட மோதுனோம்ன்னு நினைச்சு நினச்சு நீ அழற நாள் கூடிய சீக்கிரம் வரும்…அது சரி இவ பிரபு மகள் இல்லைன்னு தெரியும்.ஆனா இவ யாருன்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்ட ருத்ரம்….அவள் யாரென்று சொல்ல அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

பிரபல கிரிம்னல் லாயர் உதயக்குமாரின் ஒரே வாரிசு…நிலா B.A.,B.L  என்ற செய்திதான் அது.

 

ஆணில் பாதி பெண்மை என்று  வேதம் சொல்லியது…….

எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது….

தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது…

வேள்வித் தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது…

நிலவினை கிரகணம் தீண்டியது….

மறுபடி பௌர்ணமி தோன்றியது…,

விதியும் புதியது….கதையும் புதியது…

காலத்தின் தீர்ப்பு இது…தெய்வத்தின் சேர்ப்பு இது….

 

முகவரி 22:

 

நிலா ஒரு வக்கீல் என்பதை அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் சூர்யாவே ஒரு நிமிடம் திகைத்து நிலாவைப் பார்க்க…அவளோ அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாய் இருந்தாள்.அருள் வாயடைத்து நின்றான்.

நிலா வக்கீல் என்று தெரிந்த ஜக்குவிற்கு சர்வமும் ஆட்டம் கண்டது.இருந்தாலும் தனது கெத்தை விட்டு விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஏற்கனவே சூர்யா போலீஸ் போலீஸ் என்று பயம் காட்டுவான்.இப்பொழுது வக்கீலுக்கு வேற தாலியைக் கட்டி இருக்கான்.இன்னும் என்ன என்ன கூத்து பன்னக் காத்திருக்கானோ…? என்று மனதில் நினைத்த ஜக்கம்மாள்…முகத்தில் ஏதும் காட்டாமல் நின்றிருந்தார்.

அவர் சொல்றது உண்மையா நிலா…? நீ ஒரு வக்கீலாமா..?அதுவும் பிரபல வக்கீல் உதயக் குமார்….. உங்க அப்பான்னு சொல்றாரே…” என்றார் முரளி.

நிலாவின் வாய் அமைதியாய் இருக்க…தலை மட்டும் ஆமாம் என்பதைப் போல் ஆடியது.முகம் இறுக நின்றிருந்தவளிடம் அதற்கு மேல் என்ன கேட்பது என்று எண்ணிய முரளி அமைதியாகிவிட…சுதா தன் வேலையை ஆரம்பித்தார்.

நீ ஒரு வக்கீல் என்று எங்ககிட்ட ஏன் மறைச்ச..? அதுமட்டும் இல்லாம என் அண்ணன் பொண்ணா நீ ஏன் நடிக்கனும்..?எதுக்காக எங்களையும்..என் பையன் அருளையும் நம்ப வச்சு கழுத்தறுத்த…?” என்றார் அடுக்கடுக்காய் கேள்விகளுடன்.

நிலா அப்பொழுது இறுக்கமாய் இருக்க…அவளைத் தன் தோள் வளைவில் கொண்டு வந்த சூர்யா…”இதுக்கு முன்னாடி எப்படியோ..! ஆனா இப்ப இவ என் பொண்டாட்டி.இவளைக் கேள்வி கேக்குற அதிகாரம் என்னைத் தவிர இங்க யாருக்கும் இல்லை.இதுக்கு முன்னாடி அவ வாழ்க்கையில் என்ன நடந்தது…ஏன் நடந்தது..,எப்படி நடந்தது…இது பத்தி எல்லாம் நான் தான் கவலைப் படனும்.நீங்க யாரும் இல்லை.எல்லா விசயத்தையும் உங்ககிட்ட சொல்லியே ஆகனும்ன்ற கட்டாயமும் கிடையாது….”என்று அதிகாரமாய் சொன்னவன் ருத்ரத்தின் பக்கம் திரும்பினான்.

இன்னும் உங்களுக்கு இங்க ஏதாவது வேலை இருக்கா…வந்தது தான் வந்துட்டிங்க மறக்காம பந்தில உட்கார்ந்து சாப்பிட்டு போய்டுங்க..” என்றான் அசால்ட்டாய்.

“வேண்டாம் சூர்யா…!நீ யார் கூட மோதுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா…? நான் நினைச்சா என்ன வேணாலும் செய்ய முடியும்.கண்டிப்பா….நான் நினைச்ச காரியத்துல ஜெய்ப்பேன்.அதே நேரத்துல அந்த ரம்யா கதையையும் என் கையால தான் முடிப்பேன்…”என்றார் ருத்ரம் ஆங்காரமாய்.

அது நான் இருக்குற வரைக்கும் ஒரு காலும் நடக்காது…!உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ…!”என்றான் சூர்யாவும் அதே ஆத்திரத்துடன்.

ருத்ரம்…”நீ இருக்குற வரைக்கும் நடக்காதா…? அப்ப நீ உயிரோட இருந்தாத்தான..?” என்று எகத்தாளமாய்க் கேட்டார்.

ஹஹாஆ…ஐயோ…ஹஹாஹ…என்று ஒரு நிமிடம் சிரித்த சூர்யா…காமெடி பண்ணாம போய் வேலையப் பாருங்க ருத்ரம் சார்.சினிமா பட வில்லன் மாதிரி வசனம் பேசிட்டு….”என்று சிரித்த படியே சொன்னவன் அடுத்த நொடியே தீவர பாவனைக்கு மாறினான்.”நானும் வில்லன் தான் ருத்ரம் சார்…வில்லனுக்கு மட்டும்.அதனால ஓவரா பேசாம இடத்தை காலி பண்ணுங்க…இல்லை நான் வேற மாதிரி செயல்பட வேண்டியிருக்கும்..” என்றான் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவாறு.

உன்னப் பார்த்துக்கறேண்டா…”என்ற ரீதியில் ருத்ரம் தீயாய் சூர்யாவை முறைத்துவிட்டு செல்ல…மகேஷ்வரிக்கு ஒரு நிமிடம் உடல் ஆடியது அவரின் முறைப்பில்.ஆனால் சூர்யாவோ..இதெல்லாம் ஒரு விஷயமா என்ற  பாணியில்…,நிலாவின் தோள்களைப் பிடித்த கையை இறக்காமல் அப்படியே நின்றிருந்தான்.

எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தும் அதிரடியாய் நடந்து முடிந்திருந்தது. அந்த வீடே அமைதியாய் காட்சியளித்தது.ருத்ரமூர்த்தியின் தாண்டவங்கள் எல்லாம் முடிந்து அவர் கிளம்பியிருந்தார்.போனவர் அமைதியாய் போகாமல் ஒரு புயலையும்,பூகம்பத்தையும் கிளப்பி விட்டு சென்றிருந்தார். நடந்தவைகளை நம்ப முடியாமல் ஒவ்வொருவரின் மன நிலையும் ஒவ்வொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

அருளின் மனமோ..நடந்தவைகளை நம்ப மறுத்தது.ஒரு நிமிடத்தில் அவன் வாழ்வே வழி மாறியது போலிருந்தது.நிலா கண்டிப்பாய் கல்யாணம் ஆனவளாக இருக்க முடியாது என்று அவனுக்கு நூறு சதவிகிதம் தெரியும்.இருந்தாலும் தன்னைப் பெற்றவர்களுக்கும்..,பாட்டிக்கும் புரியவைக்க வேண்டும் என்று நினைத்த வேளையில் அவன் நிலாவினைப் புரிந்து கொள்ள மறந்துவிட்டான்.

அருள் சிந்தித்த அந்த ஒரு நிமிடம்..,சூர்யா சிந்திக்காத அந்த ஒரு நிமிடம் இருவரின் வாழ்க்கை பாதையையே மாற்றி அமைத்தது.

நிலாவோ…!நடந்த அனைத்தையும் ஏற்கவும் முடியாமல்…மறுக்கவும் முடியாத நிலையில் இருந்தாள். நடந்த திருமணத்தை விட…ருத்ரம் வந்தது தான் அவளுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.எப்படி தெரிந்திருக்கும் அவருக்கு…?என்ற யோசனையிலையே நிலாவின் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

மகேஷ்வரிக்கும்,ஜீவாவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.சூர்யா-நிலா திருமணத்தில் இவர்கள் மட்டுமே எந்த சந்தேகமும் இல்லாமல் சஞ்சலமும் இல்லாமல் மகிழ்ச்சியாய் இருந்தனர்.இவர்களைப் பார்த்த முரளிக்கும் அப்படித்தான் இருந்தது.அவருக்கும் நிலாவைப் பார்த்தால் தப்பான பெண்ணாக தெரியவில்லை.வந்தவரின் தோரணையும் நன்றாய் இருந்ததாய் அவருக்கு தோணவில்லை.இதை எல்லாவற்றையும் விட…சூர்யா எது  செய்தாலும் எதாவது ஒரு காரணம் இருக்கும் என்று முழுமையாக நம்பினார் முரளி.

ஆனால் இதற்கு நேர்மாறாய் சுதாவின் மனமோ நெருப்பாய் தகிக்க… ஜக்குவோ கொலை செய்யும் அளவுக்கு கோபத்தில் இருந்தார்.அவருக்கு நிலாவின் மீது நம்பிக்கை வரவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்… அவளின் கழுத்தில் சூர்யா தாலி கட்டியது சுத்தமாய் பிடிக்கவில்லை.சூர்யா வெளியில் சென்று ஒரு போன் கால் பேசிவிட்டு வர…

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம்…” அந்த கதையாவுல்ல இருக்கு இங்க நடக்குறது எல்லாம் என்று தன் பல்லவியை ஆரம்பித்தார் ஜக்கு.

தன் யோசனைகளில் இருந்த நிலாவை..,ஜக்குவின் குரல் நடப்புக்கு இழுத்தது.ஜக்குவின் பழமொழி பற்றி தெரியாவிட்டாலும்..அவருக்கு தன்னை சுத்தமாய் பிடிக்கவில்லை என்பது மட்டும் நிலவாவிற்கு தெளிவாய் தெரிந்தது.கோபத்தில் வாயைத் திறக்க போக…”பிரபுவின் கெஞ்சல் பார்வையைப் பார்த்தவள்..” வாயை அடக்கிக் கொண்டாள்.

அவர்களின் நெருங்கிய சொந்த பந்தங்கள் மட்டும் சில பேர் அங்கு இருந்தனர்.”சரி நடந்தது தான் நடந்து முடுஞ்சுடுச்சு..இன்னும் அதையே நினைச்சுகிட்டு இருந்தா எப்படி..?அடுத்து ஆக வேண்டிய வேலையப் பாருங்க..”என்றார் அங்கிருந்த பெண்மணிகளில் ஒருவர்.

அனைவரும் அமைதியாய் இருக்க…மகேஷ்வரி வேகமாய் உள்ளே சென்றார்.மாலாவும் அவருக்கு உதவியாக செல்ல…அங்கு மீண்டும் பழைய கலகலப்பு சற்று தோன்றியது போலிருந்தது.அருள் வேகமாய் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.ரம்யா…நிலாவை பழைய மாதிரி சிரிக்க வைக்க எண்ணிக் கொண்டிருந்தாள்.

உள்ளே..சென்ற மகேஷ்வரியும் மாலாவும்.,பாலும் பழமும் கொண்டு வந்தனர்.இதைப் பார்த்த ஜீவா சிரிக்க ஆரம்பித்தான்.தீபா அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ள…”ஹி..ஹி…இல்ல தீபா..எல்லா பிரச்சனையிலும் நம்மளைக் கண்டுக்காம விட்டுடுவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன்.ஆனா மகி அம்மா கிரேட் .அதையெல்லாம் மறக்கவே இல்ல.கண்டிப்பா இன்னைக்கு ..இன்னைக்கு ..” என்று அவன் இழுக்க….தீபா  “கருமம் கருமம்..”என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்படி எல்லாம் சொல்லக் கூடாது செல்லம்….” என்று வம்பிழுக்க… அவனின் காதருகில் தலை சாய்த்து…”மவனே இருக்கு உனக்கு.., மரியாதையா பேசாமா இரு இல்ல…”என்று இழுக்க…ஜீவா அப்பாவியாய் முழித்தான்.

என்ன மாப்பிள்ளை இப்பவே ரொமான்ஸா….நாங்களும் இருக்கோம்டா…” என்று ராம் வம்பிழுக்க…”ஆமா இங்க இருக்குற லட்சனத்துக்கு அது ஒன்னுதான் குறைச்சல்…” என்று முனுமுனுத்தவன் ஹி..ஹஹி என இளித்து வைத்தான்.

இரண்டு ஜோடிகளையும் அருகருகே அமர வைத்து மாலா பாலும் பழமும் கொடுக்க…ரம்யா அதை வாங்கி கொடுக்க….”ஜீவா முதலாலாக வாங்கியவன் தீபாவிற்கு ஊட்டிவிட்டான்.ஆனால் சூர்யா ஊட்டவும் இல்லை.நிலா வாயைத் திறக்கவும் இல்லை…”

இந்த பார்மாலெட்டிஸ் எல்லாம் வேண்டாம்…” என்ற சூர்யா…நிலாவை வேகமாய் கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போனான்”.அவனது செயலிற்கான அர்த்தம் விளங்காததால் அனைவரும் அவன் பின்னே செல்ல..நிலாவோ..”இப்ப எங்க கூட்டிட்டு போறான்…?” என்று மனதில் நினைத்தவளாய் அவன் பின்னே சென்றாள்.

நிலாவை நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்றவன்…”அங்கிருந்த விளக்கின் முன் அவளை நிறுத்தினான்.தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்தவன்..”விளக்கேத்து நிலா…” என்று சொல்ல….ஜக்கு திகைத்தார்.

என்னடா பன்ற..? யார் வீட்ல யார் விளக்கேத்துறது…?அதுக்கு தகுதி தராதரம் வேண்டாம்.இவ யாரோ..?என்னவோ…?” என்று கத்த ஆரம்பிக்க….”போதும் நிறுத்துங்க…!” என்றான் சூர்யா.

இவ யாரோ எவரோ இல்லை.என் மனைவி.இந்த வீட்டுக்கு மூத்த மருமகள்.அவ விளக்கேத்துறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனைன்னா நீங்க இந்த இடத்துல இருக்கத் தேவையில்லை….”என்று கோபமாக மொழிந்தவன்…”விளக்கேத்து..நிலா…”என்றான் கடுமையாய்.

அவனது முகத்தில் இருந்த ஏதோ ஒன்று நிலாவை அவன் கூறிய செயலை செய்யப் பணித்தது.அமைதியாய் விளக்கினை ஏற்றினாள் நிலா.பிறகு தீபாவை அழைத்தவன்…அவளையும் விளக்கேற்ற சொல்ல….தீபாவும் அண்ணன் சொன்னதை அச்சுப் பிசகாமல் செய்தாள்..

அத்தை என்ன நடக்குது..?எல்லாம் எதிர்மறையா நடக்குது…?இப்ப என்ன தான் பன்றது..? என்று சுதா அழாத குறையாய் கேட்க….”ம்ம்ம் கொஞ்சம் மண்னெண்னை இருந்தா என் தலைல ஊத்திக் கொளுத்து….”என்றவர்..,”அடி என்னடி இவ…ஒன்னும் செய்ய முடியாம இல்ல நம்மளை நிக்க வச்சுருக்கான் அந்த சிறுக்கி பெத்தவன்….”என்று தன் குமுறலைக் கொட்டினார் ஜக்கு.

 

*********************

 

“அண்ணா பாவம் இல்லைங்க..”என்றாள் தீபா.

“நீ எந்த அண்ணனை சொல்ற..?”என்றான் ஜீவா.

“ரெண்டு பேரையும் தான் சொல்றேன்.ஒரு அண்ணனுக்கு பிடிச்ச பொண்ணு கிடைக்கலை.இன்னொரு அண்ணனுக்கு எதிர்பாராம யார்ன்னு தெரியாத பொண்ணு மனைவி ஆகிட்டாங்க இல்லை…சூர்யா அண்ணன் பாவம்…அப்பறம் அருள் அண்ணாவும் தான்..” என்றாள் தீபா அப்பாவியாய்.

ஜீவா…”யாரு..?சூர்யாவுக்கு அந்த பொண்ண பிடிக்காது…?ம்ம்ம் அறிய கண்டுபிடிப்பு.ஆமா நீ பிறந்ததுல இருந்தே இப்படித்தானா..? இல்லை இடைல இருந்தா..?” என்றான்.

“ஏன் கேக்குறிங்க…?”  என்ற தீபா…அவன் சொன்ன செய்தியின் பொருள் சற்று நேரம் கழித்து புரிய வர..”உங்களை…என்று பல்லைக் கடித்தவள்… என்ன லூசுன்னு சொல்றிங்களா..?”என்றாள் சிணுங்களுடன்.

ஜீவா..”ச்ச்சச்ச…நான் போய் அப்படி எல்லாம் சொல்லுவேனா…கண்டிப்பா நீ லூசுதான்…” என்றான்.பின்ன என்ன..,சூர்யாவுக்கு நிலாவை பிடிக்கலைன்ன்னா.. அத்தனை பேர் சும்மா நின்றிருந்தப்போ…உன் அருமை அண்ணன் எதுக்காக அப்படி அவசர அவசரமா நிலா கழுத்துல தாலியக் கட்டனும்.அவன் நினைச்சிருந்தால் அருளை ரெண்டு தட்டு தட்டி கட்டுடா தாலியன்னு சொல்ல முடியாதுன்னா நினைச்ச..? ஆனா அவன் அப்படி பன்னலை.கிடச்ச அந்த சந்து கேப்ல…சட்டுன்னு தாலியக்கட்டிட்டான் ஏன்..?” என்று கேட்க…”ஏன்..?” என்று தீபா பின் பாட்டு பாடினாள்.

“ஏன்னா…சூர்யாவுக்கு நிலாவை ரொம்ப பிடிக்கும்.லவ்வுன்னாலும் லவ்வு எக்கச்சக்கமான லவ்வு….ப்ப்பாஅ….சும்மா சொல்லக் கூடாது மச்சான் ரொம்ப பாஸ்ட்டா இருக்கான்..” என்று ஜீவா சொல்லிக் கொண்டிருக்க…தீபா விழிவிரித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.”சூர்யா.., நிலாவைக் காதலித்தான்..” என்பது அவளுக்கு புது செய்தி.

பிறகு ஜீவா நடந்தவற்றை சுருக்கமாக தீபாவிடம் சொல்ல…அவளுக்கு ஒவ்வொன்றாய் புரியத் துவங்கியது. அருள் இப்பொழுது கஷ்ட்டப்பட்டாலும்… பிறகு மறந்து விடுவான் என்று எண்ணினாள் தீபா.

பிரச்சனைகள் நடந்து முடிந்திருந்தாலும்…அதன் தாக்கம் அனைவரது மனதில் இருந்தாலும்..,அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முறைப்படி நடந்தது.பந்தி முதற்கொண்டு அனைத்தும் தடபுடலாய் ரெடி பண்ணியிருந்தான் சூர்யா.அந்த ஊரில் இருந்த அனைவரும் சூர்யாவின் புகழ் பாட…ஜக்குவிற்கோ அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருடைய அதிகாரம் அங்கு ஆட்டம் கண்டது போல் இருந்தது.

அருளோ..!சென்னை கிளம்பி போய்விட்டான்.அவனுக்கு யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை.பேசவும் பிடிக்கவில்லை.அனைத்திலும் அடி வாங்கியது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு.சுதாவிடமும்…தீபாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சென்னை சென்று விட்டான்.

ரொம்ப நன்றி சூர்யா…!தீபா கல்யாணத்தை நான் பார்த்து நடத்தியிருந்தாக் கூட இவ்வளவு சீரும் சிறப்புமா நடத்தியிருக்க முடியாது.அவ்வளவு பிரமாதமா பண்ணியிருக்க எல்லாத்தையும் என்று முரளி மனம் திறந்து மகனைப் பாராட்ட…மகேஷ்வரியின் மனம் பெருமையில் விசும்ப…சுதாவின் மனமோ பொறாமையில் பொசுங்கியது.

சூர்யா..”தீபா யாரு…? கூடப் பிறக்கலைன்னாலும் என் தங்கை.அதுமட்டும் இல்லாம.., இப்ப  உயிர் நண்பனின் மனைவி.எங்க வீட்டு பொண்ணு.அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்..” என்றான் பெருந்தன்மையாய்.

நான் இங்க தேடி வந்தது என் அம்மாவுக்கான அங்கிகாரம்.எனக்கான அடையாளம்.இந்த ரெண்டுமே இப்ப நானே எடுத்துகிட்டேன்னு நினைக்கிறேன்.இனி யார் நினைத்தாலும் மறுக்க முடியாது..,என் அம்மாதான் உங்கள் முதல் மனைவி என்று.நான் நினைத்தது எல்லாம் நல்ல படியா முடிந்தது.நான் எதைத் தேடி வந்தேனோ..அந்த தேடலின் வெற்றி தான் எனக்கான அடையாளம்.அதாவது முரளிதரனின் மூத்த வாரிசு…வீர பாண்டியனின் மூத்த பேரன் என்ற அடையாளம்.அது எனக்கு கிடச்சாச்சு..இப்பதிக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன்…” என்று ஜக்குவைப் பார்த்தவன்…”இதுக்கு மேலையும் என்னை சீண்டினா..அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றான் சூர்யா.

அவர்கள் பேசுவது நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும்…. முரளிக்கு இரண்டு மனைவிகள் என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது.நடந்த பிரச்சனைகள் தெரியாததால் நிலா அமைதியாய் இருந்தாள்.

நடந்து எல்லாம் நடந்துடுச்சு…,இனியும் ஏன் எல்லாரும் தனித் தனியா இருக்கனும்.நாம எல்லாம் ஒன்னாவே இருக்கலாமே சூர்யா…?” என்றார் முரளி ஏக்கமாய்.

அது மட்டும் ஒரு காலமும் நடக்காது.என் அம்மாவும் அதை விரும்ப மாட்டாங்கன்னு தெரியும்.இப்பவும் சொல்றேன்…நீங்க அம்மாவைப் பார்க்க வரலாம்..போகலாம்.இல்லை ஒரே அடியா தங்க விருப்பமென்றாலும் தங்கலாம்.ஆனா நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க கூட ஒன்னா இருப்பேன் என்பதெல்லாம் கனவில் கூட நடக்காத ஒன்று.

முரளியோட பையன் சூர்யா என்று சொல்லிக் கொள்வதை விட…சூர்யாவின் அப்பா முரளி அப்படின்னு எல்லாரும் சொல்றதைக் கேட்கத்தான் எனக்கு ஆசை….உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்…” என்று தன்மையாகவே எடுத்துக் கூறினான் சூர்யா. முரளியும் அமைதியாய் உள்வாங்கிக் கொண்டார்.

 

பரவாயில்லையே இந்த கருவாயனுக்கு கூட நல்லா பேச வருதே….ஆனா இவன் திமிர் மட்டும் குறையவே மாட்டேங்குதே..” என்று தன் பிரச்சனைகளையும் மறந்து நிலா…சூர்யாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் நிலா ஒன்றை மனதார ஒத்துக் கொண்டாள்.சூர்யா திமிர் பிடித்தவனாய் இருந்தாலும் கண்டிப்பாய் நல்லவனாய் இருக்கிறான் என்று.இன்று சூர்யா செய்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவளுக்கு அவனைப் பற்றி குறைவாய் மதிப்பிட தோன்றவில்லை.அவன் கண்களில் பொய்யில்லை.ஒரு நேர்மை இருந்தது.ஆனால் தன் கழுத்தில் தாலி கட்டும் போதும் மட்டும் ஏதோ கள்ளத்தனம் தெரிந்தது போல் இருந்தது நிலாவிற்கு.

என்ன மேடம்…!தலைவனோடு டூயட்டா.…?” என்றாள் ரம்யா.

அவளைப் பார்த்து முறைத்த நிலா…”இங்க நடந்த லட்சனத்துக்கு டூயட் ஒன்னுதான் குறைச்சல்..” என்று பொரிந்தாள் நிலா.ருத்ரத்தால் எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பயம் நிலாவை அப்படி பேச வைத்தது.ஆனால் அவளின் அந்த பதில் சூர்யாவின் காதுகளிலும் விழுந்து..,எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவித்தது.

ஏன் இந்த லட்சனத்துக்கு என்னவாம்…? நீயா தேடினாலும் இப்படி ஒரு ஹேண்ட்ஸம் உனக்கு கிடைக்க மாட்டாரு.எனக்கென்னமோ இவர் தான் உனக்கு சரியான ஜோடின்னு தோணுது.இந்த எண்ணம் அவர் முதன் முதலா நம்ம வீட்டுக்கு வந்த போதே எனக்கு தோணுச்சு…சொன்னா நீ மிதிப்பையோன்னு அமைதியா இருந்துட்டேன்…” என்றாள் ரம்யா.

நீ வேற சும்மா இருடி..!அந்த ருத்ரம் எந்த நேரத்துல என்ன பன்னுவார்ன்னு நினச்சா எனக்கு உதறல் எடுக்குது.உனக்கு ஆபத்து இருக்குடி…” என்று தனது தோழிக்காக அவள் மனம் பரபரத்தது.

ரம்யா..”எனக்கும் பயம் இருந்ததென்னவோ  உன்மைதான் நிலா.ஆனா இப்ப நம்ம மாம்ஸோட பெர்பாமன்ஸைப் பார்த்ததுக்கு அப்பறமா..அந்த பயம் எல்லாம் போயிந்தி..” என்றாள் கூலாக.

 

நம்ம மாம்ஸா…?”என்றாள் நிலா வாயப் பிளந்தபடி.

ஆமா…நம்ம மாம்ஸ் தான்.இதோ பார் சூர்யா அத்தான் எனக்கு முறை மாப்பிள்ளை.போனாப் போகுதுன்னு உனக்கு விட்டுக் குடுத்துட்டேன்… அதனால் அவர் கூட ஒழுங்க குடும்பம் நடத்துற வழியப் பாரு…” என்றாள் ரம்யா கெத்தாய்.

“ஆத்தா மகமாயி…உனக்கு ஒரு புண்ணியமாப் போகும்…என்னை ஆளைவிடு.நான் நார்மலான மனநிலையில் இல்லை ரம்யா.என்னைப் பத்தி….நடந்ததைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேட்காம என்னை மட்டும் நம்பி என் கழுத்தில் தாலிய கட்டியிருக்கான் அந்த கருவாயன்.அதனால் உடனடியா இல்லைனாலும்..கொஞ்சம் கொஞ்சமா அவனை…சாரி…அவரைப் புரிஞ்சுக்க முயற்சி பன்றேன்…” என்றாள் நிலா.

இப்பொழுது சீரியசாய் மாறினாள் ரம்யா…”நிலா நடந்தது எல்லாம் கசப்பானது தான்.என்னாலையும் அதை மறக்கவும் முடியாது.ஆனா அதுக்காக எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்க முடியும் நானும் இருக்க முடியும்.எல்லாம் ஒரு நாள் மாறி தான் ஆகனும்.நீ தான் எனக்கு தைரியம் சொல்லுவ.ஆனா இன்னைக்கு நீயே இப்படி இருக்கன்னா…நடந்த சம்பவங்கள் உனக்கு அதிர்ச்சியா இருக்கு…அவ்வளவுதான். மத்தபடி என்னை விட நீதான் தைரியமா இருப்ப…அதனால் நீ எப்பவும் போல் இரு.உன் பிரச்சனை எல்லாம் இனி சூர்யா பார்த்துப்பார்டி..” என்றாள்.

“நான் எப்பவும் என் பிரச்சனைகளுக்காக மத்தவங்களை சார்ந்து இருக்குறது இல்லை ரம்யா.என் பயமே உன்னைப் பத்தி தான்…மத்தபடி நான் எப்பவும் அதே பழைய நிலா தான்…”என்றாள் பழைய மிடுக்குடன்.

இதைத்தான் நிலாவிடம் ரம்யாவும் எதிர்பார்த்தாள்.அவளுடைய நிமிர்வு அவளிடம் வந்தால் தான் இனி நடப்பவை அனைத்தும் நல்ல படியாக நடக்கும் என்று நம்பினாள் ரம்யா.ஆனால் அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை….இனி தான் நிலா படாதபாடு படப் போகிறாள் என்று.

Advertisement