Advertisement

முகவரி 17:

 

நிலாவிற்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை.”இப்ப எதுக்காக இவன் இப்படி கத்திட்டு இருக்கான்.திடீர்ன்னு என்ன ஆச்சு…பைத்தியம் முத்திப் போய்ட்டதா….? கடவுளே..! என்னை நீதான் காப்பாத்தனும்..” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் நிலா.

 

சூர்யா…தன் மனதில் அடைத்து வைத்திருந்த அனைத்துக் கோபத்தையும் நிலாவின் மேல் காட்டிக் கொண்டிருந்தான்..”என்ன நினச்சுகிட்டு இருக்க…? இதென்ன ஆபீஸா…இல்லை உன் வீடா…? அப்படி ஒரு தூக்கம்.இங்க வேலை பார்க்க வறியா…இல்லை இப்படி படுத்துகிட்டே…கனவுல மிதக்கவா…? நீ இப்படி கனவு கானவா நான் ஆபீஸ் கட்டி வச்சுருக்கேன்…?” என்று இடை விடாது திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.

 

நிலா..”சார்..நான் சொல்றதை கொஞ்சம்….” என்று சொல்லி முடிக்கும் முன்..

 

நீங்க ஒன்னும் சொல்லத் தேவை இல்லை.செய்றதையும் செஞ்சுட்டு காரணம் வேற.இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்..போய் உங்க  பைலைக் கொண்டு வாங்க..!” என்றான் சூர்யா…கொஞ்சமும் கோபம் குறையாத குரலில்.

 

நிலாவிற்கு அவன் ஏதோ திட்டுகிறான் என்று தெரிந்தது.ஆனால் அது என்னவென்று அவளுக்கு புரியவில்லை.உடலின் பாரம் அவளை தெம்பிழக்கச் செய்தது.மவனே எனக்கு உடம்பு சரி ஆகட்டும் ….மொத்தமா இருக்கு உனக்கு..” என்று மங்கம்மா சபதம் எடுத்தவளாய் அமைதியாய் சென்றாள் நிலா.

 

என்ன ஆச்சு சூர்யா உனக்கு., இப்ப எதுக்காக அவங்களை இந்த வாங்கு வாங்குற.. பார்த்தாலே தெரியுது…அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு. அப்பறம் ஏன் இப்படி தேவை இல்லாம பேசி அவங்களை காயப் படுத்துற..உன் கோபம் யார் மேல.அப்படி கோபம் யார் மேல இருந்தாலும் அதை நிலா மேல காட்டுறது ரொம்ப தப்பு.” என்றான் ஜீவா.

 

சூர்யா…”தெரியுது ஜீவா.நானும் மனுஷன் தான.என்னால ஒரு அளவுக்கு மேல கோபத்தை கன்ட்ரோல் பன்ன முடியலை.அதோட ஆபீஸ் வந்தா…இங்க அவ அந்த தூக்கம் தூங்குறா..அதான் என் கோபத்தை எல்லாம்  அவ மேல காட்டிட்டேண்டா…” என்றான் மிகவும் வருத்தமான மனதோடு.

 

ஜீவா..”அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்க சூர்யா..?”

 

சூர்யா..”ஒன்னும் புரியலை ஜீவா. அம்மா வேற அப்பா கூட தான் இனி இருக்கனும்ன்னு சொல்றாங்க.ஆனா சத்தியமா என்னால் அது முடியாது ஜீவா.இத்தனை வருஷம் இல்லாத ஒரு உறவை.,இப்ப என்னால உடனே எப்படிடா ஏத்துக்க முடியும்.அதே சமயம் இனியும் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுதுடா…ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலையாவது அருளோட அம்மா திருந்துவாங்கன்னு பார்த்தேன்.ஆனா அது நடக்கவே நடக்காத காரியம்ன்னு அவங்க ஒவ்வொரு முறையும் நிருபிக்கிறாங்க.இனியும் நான் சும்மா இருக்க போறது இல்லை ஜீவா. அதுக்கு ஆரம்பம் தான்  உனக்கும் தீபாவுக்கும் கல்யாணம்..” என்றான் தீவிரமாய்.

 

இதெல்லாம் சரியா நடக்குமா சூர்யா..? என்றான் ஜீவா.

 

சூர்யா..”நடக்கனும்…நடந்தே ஆகனும். இல்லை நடத்திக் காட்டுவான் இந்த சூர்யா.” என்றான்.

 

என்னடி சுதா..? நாம ஒன்னு நினச்சுப் போனோம்.ஆனா அங்க நடந்தது என்னவோ வேற மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக்கொண்டிருந்தார் ஜக்கு.

 

ஆமா…உள்ள குட்டையையும் குழப்பி விட்டுட்டு…இப்ப வந்து புலம்புங்க..” என்று மனதில் நினைத்த சுதா..அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

 

“ஆமாம் அத்தை..நானும் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை..” என்றார்.

 

ஜக்கு..”அந்த பய என்கிட்டையே என்னமா துள்ளுறான்.இன்னும் என்நைப் பத்தி அவனுக்கு சரியா தெரியலை சுதா. இருக்கட்டும் இந்த ஜக்கம்மா யாருன்னு தெரிஞ்சுக்காமலா போய்டுவான்.ஆனா.,எனக்கு ஆச்சர்யமெல்லாம், அந்த சிறுக்கிக்கு எப்படி இவ்வளவு வாய் வந்ததுன்னு தான்…என்னா பேச்சு பேசுறா…உரிமையாம்..,கடமையாம்., ம்ம் இன்னும் எத்தனை நாள் இப்படி பேசுவா..” என்று ஜக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் போதே….அங்கு வந்த முரளியின் வரவை, ஜக்குவும் சுதாவும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் இருவரின் திகைத்த முகத்திலிருந்து தெரிந்தது.

 

முரளி..”இன்னும் என்ன எல்லாம் பண்ணி.,என் நிம்மதிய கெடுக்கலாம்ன்னு நினைக்கிறிங்க…?நான் உயிரோட இருக்கனும்மா..இல்லை பொட்டுன்னு மேல போகனுமா.? இதுல எது உங்க விருப்பம்…” என்று கத்தினார்.

 

ஜக்கு..”சும்மா அடங்குடா.இப்ப என்ன..?நாங்க அந்த சிறுக்கி வீட்டுக்குத்தான் போனோம்.நான் தான் சுதாவையும் கூட்டிட்டு போனேன்.அதுக்கு என்ன இப்ப செய்யனுங்கற? பெரிய உத்தமி மாதிரி பேசுனா…உடனே உன்கிட்ட சொல்லிட்டாளா?” என்று   தன் பங்குக்கு தானும் கத்தினார்.

 

இதோ பாருங்க…நீங்க யாரும் ஏத்துகிட்டாலும்., ஏத்துக்கலைன்னாலும் அவ தன் என் முதல் காதலி .முதல் மனைவி.ஒரு தடவை வாழ்க்கையில் முட்டாள்தனமா நான் செய்த ஒரு தப்புதான் இன்னைக்கு என்ன இந்த நிலைக்கு தள்ளியிருக்கு. அதே தப்பை நான் எப்பவும் செய்வேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்குறிங்க..? எல்லா தாயும் பெத்த புள்ளைங்க நிம்மதியா வாழனும்ன்னு ஆசைப்படுவாங்க.நீங்க அப்படி ஆசைப்படலைன்னாலும் பரவாயில்லை.உள்ள நிம்மதிய கெடுக்காமயாவது இருங்க.உங்க வயித்துல நான் பிறந்தேன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு. உங்க அந்தஸ்து வெறிக்கும்., வீண்பிடிவாதத்துக்கும் தான…… என் வாழ்க்கைய இப்படி சின்னா பின்னமாக்குனிங்க. ஆனா இனியும் அதை தொடரலாம்ன்னு நினச்சிங்க….உங்களுக்கு கொள்ளி போட பிள்ளையா நான் இருக்க மாட்டேன்….” என்று ஜக்குவிடம் கர்ஜித்தவர்…சுதாவைப் பார்த்தார்.

 

உனக்கு வெட்கமா இல்லை.எப்படி இவ்வளவு நடந்துக்கு அப்பறமும் இப்படி அசராம இருக்க.கல்யாண வயசுல ரெண்டு பிள்ளைங்க இருக்கு.இப்ப போய் இவ்வளவு கேவலமா நடந்துக்கற.இதோ பார்.இப்பவும் சொல்றேன் நான் அமைதியா இருக்குறதுக்கு ஒரே காரணம் தீபா மட்டும் தான்.என் பொண்ணுக்காக மட்டும் தான் நான் இங்க இருக்குறதே.அதை நீ நல்லா புருஞ்சுக்கனும்.அதை விட்டுட்டு மகேஷ்வரிட்ட போய் பேசுறது.,மிரட்டுறது எல்லாம் வச்சுகிட்ட நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.நீயே பார்த்திருப்பயே…சிங்கம் மாதிரி அங்க ஒருத்தன் இருந்துருப்பானே..! அவனைக் கண்டா எனக்கே நடுங்குது.என்ன மாதிரி என் மகன் ரொம்ப பொறுமையானவன் கிடையாது.அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை.ஆனா ஒன்னு…. இனி மகிக்கு ஒன்னுன்னா கேட்க புருஷன் நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன்.பெத்த புள்ளையும் தீ மாதிரி இருக்கான்.அதனால இனியாவது கொஞ்சம் திருந்துற வழியப் பாரு..” என்று சுதாவிடன் கணீர் குரலில் ஒலித்தவர்,சுதாவின் முகத்தைப் பார்க்கவும் பிடிக்காது சென்று விட்டார்.

 

முரளி பேசிய அனைத்தையும் கேட்டு அமைதியாய் நின்று கொண்டிருந்த சுதா..அவர் சென்ற பிறகு,கோபமாய் ஜக்குவைப் பார்த்தார்…”இப்ப உங்களுக்கு சந்தோஷமா..?எல்லாம் உங்களால் தான்.நான் தான் அன்னைக்கே அவரை கல்யாணம் பண்ணிக்க  மாட்டேன்னு சொன்னேன்ல. அவ திரும்பி வரமாட்டா..அப்படி இப்படின்னு சொல்லி என் மனச மாத்துனிங்க…இப்ப என்னாச்சு..?” என்று சுதா முதன் முறையாக ஜக்குவை எடுத்தெறிந்து  பேசினார்.

 

சுதாவின் பேச்சில் ஜக்கு இன்னமும் நிலைகுலைந்து போனார்.”சுதா என்ன இப்படி பேசுற..எனக்கு என்ன தெரியும்,இத்தனை வருஷம் கழித்து இப்படி ஒரு பிரச்சனை வரும்ன்னு…” என்றார் கடுப்பாக.

 

சுதா..”நீங்க என்ன செய்விங்க..ஏது செய்விங்கன்னு எனக்கு தெரியாது.அவர் எனக்கு மட்டும் தான் புருஷனா இருக்கனும்.என் பிள்ளைங்களுக்கு மட்டும் தான் அப்பாவா இருக்கனும்..அது உங்க கைல தான் இருக்கு…என்னால அவ்வளவு ஈஸியா விட்டுக்குடுக்க முடியாது…” என்று கத்த…அதைக் கேட்ட தீபா தான் திகைத்து நின்றாள்.

 

இத்தனைநடந்தும் அம்மா திருந்தவில்லையா..? இத்தனை வருஷம் அமைதியா இருந்த தன் அம்மாவா இப்படி..? என்று நினைக்கும் போதே தீபாவிற்கு  ஏதோ குமட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது. சாந்த சொரூபியாய் வலம் வந்த தன் அம்மாவிற்குள் இப்படி ஒரு ஆங்காரமா..? இல்லை இப்பொழுதுதான் உண்மையான குணம் வெளிப்படுகிறதா?” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள் தீபா.

 

 “நிலா கொடுத்த ஒவ்வொரு பைலையாய் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.என்னதான் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நிலாவின் சோர்வு, சூர்யாவுக்கும் தெரிந்தே இருந்தது. பைலைக் குடுக்கும் போது தெரியாமல் பட்ட நிலவின் கை அனலாய் கொதித்தது.கேட்டால்  அதுக்கும் கத்துவாளோ…!” என்று அமைதியாய் இருந்தான்.

 

ஆனால் நிலாவோ அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாமல் இருந்தாள்.எப்படா முடியும்…எப்படா அந்த இடத்தை விட்டு காலி செய்யலாம் என்று நின்றிருந்தாள்.ஆனால் அவள் நினைப்பது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன..? அவளே எதிர்பார்க்காத விதமாய்…கண்கள் சொறுகி சூர்யாவின் மேலேயே விழுந்தாள்.

 

பைலில் இருந்த டிசைன்களில் கவனமாய் இருந்த சூர்யா…திடீரென்று நிலா தன் மீது பூக்குவியலாய் விழவும் அதிர்ந்தான். பிறகுதான் நினைவிற்கு வந்தது அவள் மயங்கி விழுந்திருக்கிறாள் என்று.தன் மேல் விழுந்த நிலாவின் முகத்தைத் தட்ட…அவளின் இமைகள் நாங்கள் பிரிவோமா..என்று அடம் பிடித்தன.

 

இப்ப என்ன பன்றது…என்று அவனுக்கு கையும் ஓடவில்லை….காலும் ஓடவில்லை.இந்த பதட்டம் எல்லாம் நிலாவின் முகத்தை ஆழ்ந்து பார்க்கும் வரை மட்டுமே….!

 

பூங்கொடியாய் துவண்டு விழுந்திருந்த நிலாவைப் பார்க்கும் போது.., சூர்யாவின் கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைந்தது.சோர்ந்த நிலாவாய் இருந்த அவள் முகத்தை மென்மையாய் வருடினான்.தன் மடியில் கிடத்தியிருந்தவளை அப்படியே தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல் வேகம் பிறந்தது.இவள் உனக்கானவள், உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று அவனின் மனதினுள் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது”.

 

நிலாவை தெளிய வைக்க வேண்டும் என்ற எண்ணமே….,அவனுக்கு தோன்றவில்லை.நிலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளின் உடல் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது.சூர்யாவிற்கு அந்த நொடி எல்லா பிரச்சனைகளும் மறைந்தது போல் இருந்தது.நிலா மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாள். அனைத்தயும் மறந்து அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

ஆனால் வேலை நிறுத்தம் செய்த அவனது மூளை திடிரென்று முழித்துக் கொண்டது.”என்ன செய்ற சூர்யா..அவள் இன்னொருவனின் காதலி..அதுமட்டுமில்லாமால் அவள் இப்பொழுது சுய நினைவில் இல்லை..” என்று அவனின் மனசாட்சி அவனுக்கு நியாபகப்படுத்த.., தனது மாயையிலிருந்து மீண்டான் சூர்யா.வேகமாய் நிலாவைத் தூக்கி அருகில் இருந்த குஷனில் கிடத்தியவன்…அவளது முகத்தில் வேகமாய் தண்ணீரைத் தெளித்தான்..”

 

நிலா…கஷ்ட்டப் பட்டு இமைகளைப் பிரிக்க…சூர்யா வேகமாய் ஜீவாவை அழைத்தான்.ஜீவா பதறி அடித்துக் கொண்டு வர…நிலாவின் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தவன்….நிலாவின் முகத்தைப் பார்க்க கூட தயங்கியவாறு சென்றுவிட்டான்”.

 

ஆனால் நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இப்ப எதுக்கு இவன் இப்படி போறான்.அதுவும் என்ன நிமிர்ந்து கூட பார்க்காம? நாம அவ்வளவு அகோரமாவா இருக்கோம்…?” என்று நினைத்தவள்,தனது சந்தேகத்தை ஜீவாவிடம் கேட்கவும் தவறவில்லை.

 

அவளின் கேள்வியில் ஜீவாவிற்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. “ஆனாலும் நிலா இந்த நிலையிலுல் எப்படி உன்னால இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியுது…” என்றான் ஜீவா சிரிக்காமல்.

 

ஹி..ஹி அதெல்லாம் கூடவே பிறந்தது அண்ணா…அது சரி  எனக்கு தான மயக்கம் வந்தது..,உங்க பிரண்ட் எதுக்கு மயக்கம் வந்த மாதிரி போறார்.கொஞ்சமாவது நெஞ்சுல ஈரம் இருக்கா. அப்படியே கல்லு மனசு.உடம்புக்கு என்ன ஏதுன்னு கேட்கலைன்னாலும் பரவாயில்லை.ஆனா முடியாம ஏதோ கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்.அதுக்கு அந்த பேச்சு பேசுறார்.இன்னைக்கு ஏதோ எனக்கு உடம்பு சரி இல்லாத தால் நான் ஒன்னும் பேசலை.சொல்லி வைங்க அந்த கருவாப்பையகிட்ட..” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

 

அமைதி… அமைதி..!நிலா.ஏற்கனவே முடியாம இருக்க…அப்பவே இந்த பேச்சு பேசுற… ம்ம்ம்…..கொஞ்சம் கஷ்டம்தாம்மா…”என்றான் ஜீவா.

 

அண்ணா..! எனக்கு ஒரு ஆட்டோ பிடித்து தர முடியுமா…இதுக்கு மேலையும் இருந்தா…உங்களுக்கும் சேர்த்து கஷ்ட்டம்..மாத்திரை போட்டும் சரி ஆகலை.வீட்டுக்கு போய் அம்மா கைல ஒரு கப் காபி குடிச்சா எல்லாம் சரி ஆகிடும்…” என்று சோர்வாய் உரைத்தாள் நிலா.

 

ஜீவா..”ஐயோ…! தனியாவா..? அப்பறம் சூர்யா என்ன கொன்னுடுவான் என்று மனதிற்குள் நினைத்தவன்…நானே வந்து டிராப் பன்றேன் நிலா.உன்ன இப்படி காய்ச்சலோட எப்படி தனியா அனுப்புறது..அதனால் இன்னைக்கு நான் தான் உனக்கு டிரைவர்” என்றான் சிரிப்போடு.

 

ஆனால் வெளியில் சென்ற சூர்யாவின் மனமோ..! அவனை கேள்விகளால் துளைத்தது.”இன்னும் எத்தனை நாளைக்கு சூர்யா இப்படி உன்ன நீயே ஏமாத்திக்க போற…? நீ என்னதான் நிலாவை மறக்க நினைத்தாலும் உன்னால் அது முடியுமா…? இல்லை அவளை விட்டுக் கொடுத்து தியாகிப் பட்டம்வாங்கிக்கிற எண்ணமா…?” என்று மனசாட்சி கேள்வி கேட்க…..சூர்யாவால் பதில் மட்டும் தான் கூற முடியவில்லை.

 

அவ அருளை லவ் பண்ணா என்ன….? நீ அவளை யாருக்கும் விட்டுத் தரக் கூடாது.வேண்டாம் சூர்யா..விட்டுடாத..” என்று மனம் அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது.”உடம்புக்கு வேற முடியாம இருந்தா…!நான் வேற அப்படியே விட்டுட்டு வந்துட்டேனே..!” என்று மனதிற்குள் மறுகினான் சூர்யா.

 

நிலாவின் முன் என்னதான் தன்னைக் கடினமாகக் காட்டிக் கொண்டாலும்.,தன்னால் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லையே..! என்று மனதிற்குள் நொந்தான் சூர்யா.தான் அப்படி கடினாமாய் நடந்து கொண்டால் அவள் கண்டிப்பாய் வேலையை விட்டு சென்று விடுவாள் என்று தான், அவளைக் காணும் போதெல்லாம் எரிந்து விழுந்தான்.ஆனால் நிலாவோ..அத்ற்கு எல்லாம் அசராமல் அவனுக்கு பதிலுக்கு பதிலடி கொடுத்தவாறு இருந்தாள்.அவளின் அந்த குணமும் சூர்யாவை மேலும் ஈர்க்கத்தான் செய்தது.

 

எதற்கும் கலங்காதவன்….எதை நினைத்தும் கவலை கொள்ளாதவன்…எதையும் தெளிவாய் சிந்திப்பவன்..இன்று தெளிந்த சிந்தனையின்றி..,மனம் முழுவதும் கவலையுடன்.,கலங்கி நிற்கிறான். காதலுக்கும் கடமைக்கும் இடையில் சிக்கி இன்று சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறான் சூர்யா.

 

கங்கைக்கொரு கரை கட்டலாம்….

காவிரிக்கும் அணை கட்டலாம்…

காதலுக்கே வேலி கட்டலாமா…?

 

காலமும் நேரமும் எதற்காகவும் காத்திருப்பதில்லை.அது அதன் போக்கில் வேகமாய் சென்று கொண்டிருக்கிறது என்பது அதன் ஓட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு வாரம் சென்ற நிலையில் யாரின் வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் இல்லை.அது அதன் போக்கில் தான் சென்று கொண்டிருந்தது.

 

தீபாவும்,ஜீவாவும் தங்கள் காதலை போனிலேயே வளர்த்துக் கொண்டிருந்தனர்.அருளோ…!அடுத்து நிலாவை எப்படி கைப்பிடிப்பது என்ற எண்ணத்தில் இருந்தான்.சூர்யாவோ தன் காதலை மறைக்க…அதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தான்.இந்த ஒருவார காலத்திற்குள் நிலா, ரம்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.இப்படி அவரவர்கள் அவரவர்களின்   பிரச்சனைகளுடன் நாளைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

 

உள்ளே வரலாமா..? என்ற குரலில்,படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு வாயிலைப் பார்த்தார் முரளி. சூர்யாவும்,ஜீவாவும் மகேஷ்வரியுடன் நின்றிருந்தனர்.

 

முரளிக்கு தன் கண்களை தன்னாலயே நம்ப முடியவில்லை.அன்று சண்டே என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர்.சூர்யா தன் வீடு தேடி வருவான் என்பது முரளி சற்றும் எதிர்பார்க்காதது. சில நாட்கள் கழித்து மகேஷ்வரியைப் பார்த்தது.., முரளிக்கு மனதிற்குள் இதமாய் இருந்தது. அவரின் தலை தானாக அசைய..சூர்யா அதிகாரமாய் உள்ளே வந்து அமர்ந்தான்.ஜக்கு அவனை முறைத்துப் பார்க்க..பதிலுக்கு சளைக்காமல் ஒரு பார்வையை அளித்து விட்டு…அன்று ஜக்கு, சூர்யா வீட்டில் அதிகாரமாய் அமர்ந்தது போல் அமர்ந்திருந்தான் சூர்யா.

 

இதைப் பார்த்த சுதாவிற்கு மயக்கமே வருவது போல் இருந்தது.”இப்ப எதுக்கு இங்க வந்துருக்காங்க…?” என்று உள்ளே யோசித்துக் கொண்டிருந்தார்.

 

அருள் பல்லைக்கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க….தீபா வேகமாய் உள்ளேயிருந்து வந்தவள்..சற்றும் யோசிக்காது..”வாங்க மகி அம்மா..வாங்க சூர்யா அண்ணா..என்றவள்,ஜீவாவைப் பார்த்து வாங்க..!” என்றாள்.

 

தீபாவின் உபசரிப்பு சூர்யாவிற்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றால்..அருளுக்கு எரிச்சலைத் தந்தது.தீபாவை கோபமாகப் பார்த்தவன்..”தீபா என்ன புதுசா உறவுமுறை கொண்டாடுற…? இது எப்ப இருந்து நடக்குது…அவன் என்ன உனக்கு கூடப் பிறந்தவனா..?” என்று எரிந்து விழ…சூர்யாவிற்கு கோபம் ஏறிக் கொண்டே சென்றது. இருந்தாலும் வந்த காரியத்தை நினைத்து தனது கோபத்தை அடக்கிக் கொண்டான்.

 

முரளி..”அருள்..என்ன இது..சொன்னாலும் சொல்லாட்டியும் தீபாவுக்கு சூர்யாவும் அண்ணண் தான். தீபா சரியாதான் இருக்கா…ஆனா இங்க சில பேருக்கு தான் வெறி பிடிச்சிருக்கு…” என்று ஜக்குவையும்,சுதாவையும் பார்த்தார் .

 

சொல்லு சூர்யா…நீ இங்க வந்தது..ரொம்ப சந்தோஷம்ப்பா. நான் என்ன பன்னனும்…” என்றார் முரளி.

 

அதுவரை அமைதியாக இருந்த சூர்யா…அனைவரையும் பார்வையால் ஒரு சுற்று சுற்றி வந்தான். பிறகு தன் கையில் இருந்த பத்திரிக்கையை முன்னால் இருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு,..நான்றாக சாய்ந்து அமர்ந்தான்.

 

சூர்யாவின் செயல் அங்கு யாருக்கும் புரியவில்லை…மகேஷ்வரி,ஜீவா உட்பட.முக்கியமான விஷயம் என்று மட்டும் தான் சொல்லியிருந்தான்.ஆனால் என்ன விஷயம் என்று அவர்களுக்கும் தெரியாது.அவர்களும் புரியாமல் சூர்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

முரளியும் ஒன்றும் புரியாமல் அந்த பத்திரிக்கயை எடுத்து பிரிக்க..பிரித்தவர் அதிர்ந்தார்.ஏனென்றால் அது ஜீவா….தீபாவின் கல்யாணத்திற்காக அடிக்கப் பட்டு இருந்தது.அவரின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த அருள் வேகமாய் அதை வாங்கிப் பார்க்க…அதில் உள்ள பெயரைப் பார்த்தவன்…”உலகத்தில் உள்ள கோபத்தை எல்லாம் குத்தகைக்கு எடுத்தவனாய் கத்தத் தொடங்கினான்.என்னடா இது…?என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருடா..? அவளுக்கு அண்ணன்..அப்பா எல்லாம் குத்துக் கல்லாட்டம் இருக்கோம்..” என்று கத்தத் தொடங்கினான்.

 

அருள் பேச பேச…சூர்யா நன்றாய் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்.ஜக்குவிற்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாய் இருந்தது.ஆனால் தீபாவிற்கு கொஞ்சம் ஷாக் என்றாலும் உள்ளே மனதிற்குள் மகிழ்ச்சியாகவே இருந்தது.ஜீவாவும்., மகேஷ்வரியும் அங்கு வைத்து எதுவும் கேட்க கூடாது என்று அமைதியாய் இருந்தனர்.

 

அருள்…”என்னடா…நான் கேட்டுகிட்டே இருக்கேன்.திமிரா உட்கார்ந்துருக்க…சொந்த வீட்ல உட்கார்ந்து இருக்குற மாதிரி…”  என்று அவன் சொல்லி முடிக்கும் முன் சூர்யா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

 

ஐயோ…! எப்படிடா..இப்படி குடும்பமே அறிவாளியா இருக்கிங்க…தம்பிப் பையா…உனக்கு இந்த வீட்ல என்ன அதிகாரம் இருக்கோ அதே தான் எனக்கும்.இதென்ன சினிமாவா…! எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு போக…! வாழ்க்கை” என்றான் கூலாக சூர்யா.

 

முரளி..”இப்ப எதுக்காக சூர்யா இந்த கல்யாண ஏற்பாடு..அதுவும் என்கிட்ட கூட ஒரு வார்த்தைக் கேட்காம..என்னைப் பழிவாங்கவா…? இல்லை உன் கோபத்தை தீர்த்துக்கவா..?” என்றார்.

 

முரளியின் கேள்வியில் சூர்யாவிற்கு கோபம் வந்தது…”உங்க வாழ்கையில் முக்கியமான விஷயம் எல்லாம் உங்களைக் கேட்காம தான் நடந்திருக்கு..இதுவும் அதே மாதிரிதான். அப்ப அமைதியா இருந்த நீங்க இப்பவும் அப்படியே இருங்க.அதுதான் உங்களுக்கும் நல்லது.எனக்கும் நல்லது..” என்றான் கோபமாய்.

 

மகேஷ்வரி..”சூர்யா…!” என்று அதட்ட…”அம்மா ப்ளீஸ் இதுல நீங்க தலையிடாதிங்க…!” என்றான் சூர்யா அமைதியாய்.

 

சூர்யாவின் பதில் சாட்டையடியாய் முரளியைத் தாக்க….அவர்  மௌனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்.ஆனால் அருளோ…குதிக்க ஆரம்பித்தான்.”இதோ பார்..தீபாவுக்கு எப்ப கல்யாணம் பன்னனும்., அதையும் யார்கூட பண்ணனும் அப்படின்னு எங்களுக்கு தெரியும்…உன் வேலையை மட்டும் நீ பாருடா..எங்க குடும்ப விஷயத்துல எல்லாம் நீ தலையிடாத.அதுக்கான அருகதை உனக்கும் கிடையாது…உங்கம்மாவுக்கும் கிடையாது” என்ற அருள் மகி அம்மாவை ஒரு மாதிரிப் பார்க்க…அவன் பார்வையின் பொருளையும்.,அவன் சொல்ல வந்ததையும் உணர்ந்த சூர்யா..,அருளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான்.

 

அருள் தீப்பார்வை பார்க்க..”அது எப்படிடா..உங்க வீட்ல ஒருத்தர் கூட ஒழுங்கு கிடையாதா…தாய்க்கு தப்பாம பிறந்திருக்க.என் அம்மாவைப் பத்தி பேசுற அருகதை…. உங்க வீட்ல தான் யாருக்கும் இல்லை…இதோ பார்..நீ சம்மதிச்சாலும்..சம்மதிக்காவிட்டாலும்…..தீபாவுக்கும்,ஜீவாவுக்கும் கல்யாணம் நடப்பது உறுதி.அதுவும் நான் குறித்த தேதியில். இதுல ஏதாவது ஏடாகூடம் பண்ணனும்ன்னு நினைச்ச…இந்த சூர்யாவை நீ முழுசா பார்ப்ப. என்ன பத்தி தெரியலைன்னா..வெளியில் விசாரிச்சு தெரிஞ்சுக்க…” என்றவன் தீபாவின் பக்கம் திரும்பி..” உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா தீபா..?” என்றான்.

 

தீபா..”முரளியை ஒரு பார்வைப் பார்க்க….அவரின் அமைதியை சம்மதமாய் எடுத்துக் கொண்டு,எனக்கு முழு சம்மதம் அண்ணா..! “என்றாள். தீபாவின் சம்மதத்தைக் கேட்ட…அருளுக்கும்,ஜக்குவிற்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. இதை இருவரும் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் முகத்தில் இருந்து தெரிந்தது.

 

“அப்பறம் என்ன….இனி கல்யாணம் தான்..” என்றான் சூர்யா. ஜக்குவின் அருகில் சென்றவன்…”பாட்டிம்மா…பாட்டிம்மா..கல்யாணம் எங்கன்னு தெரியுமா…?” என்றான் நக்கலாய்.

 

ஜக்கு கோபமாய் அவனை முறைக்க..”இப்படி எல்லாம் கோபப் படக்கூடாது பாட்டிமா…உங்க உடம்புக்கு ஆகாதுல.அதுக்காகத்தான் சொன்னேன்.அப்பறம் கல்யாணம் எங்கன்னா…என்று சற்று இடைவெளி விட்டவன்…பொள்ளாச்சியில தான்…” என்றான் இரு பொருள் பட.

 

அங்கு இருந்த யாருக்கு புரியவில்லை என்றாலும்,ஜக்குவிற்கு தெளிவாய் புரிந்தது….சூர்யா ஏதோ திட்டத்துடன் தான் இந்த கல்யாணத்தை நடத்துகிறான் என்று.இதை எப்படித் தடுப்பது என்று அவரின் மனம் யோசிக்க…”ஆணியே புடுங்க முடியாது பாட்டி…” என்றான் சூர்யாவும்,ஜக்குவின் மனம் புரிந்தவனாய்.ஜீவாவிற்கும் லெசாய் புரிவது போல் இருந்தது.

 

ஆனால் இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் முரளி….மகி அம்மாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்.மகி ஒரு வார்த்தை பேச மாட்டாரா…? என்று முரளி ஏங்கிக் கொண்டிருக்க..அதைப் பார்த்த சுதா மனதிற்குள் குமைந்து போனார்.

 

அப்பொழுதுதான் கவனித்தான் சூர்யா..”சுதாவின் நெற்றியில் குங்குமமும் கழுத்தில் தாலியும் தொங்கிக் கொண்டிருக்க…தன் தாயின் கழுத்தில் தாலி இல்லாததையும்,நெற்றியில் திருநீறு வீற்றிருப்பதையும். சூர்யா பார்த்துக் கொண்டிருக்கும் போதே..அவனின் பார்வையை வைத்து தீபாவும் கண்டு கொண்டாள்.திடிரென்று ஒரு யோசனை தோன்ற வேகமாய் உள்ளே சென்றாள் தீபா.

 

சூர்யாவின் குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்த முரளிக்கு அப்பொழுதுதான் எல்லாம் விளங்கியது.”நான் இதை எப்படி கவனிக்காம விட்டேன்..”என்று மனதிற்குள் மறுகினார். கட்டிய கணவன் நான் உயிருடன் அவள் முன்னால் இருக்கும் போது இவள் இப்படி விதவைக் கோலத்தில் இருப்பதா…? என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டார்.

 

முரளி மகியிடம் ஏதோ சொல்ல வருவத்ற்கும்,தீபா உள்ளே இருந்து வருவதற்கும் சரியாய் இருந்தது.சூர்யாவின் அருகில் வந்து நின்றவள்…அப்பா இந்தாங்க…என்றாள்.

 

தீபாவின் கைகளில் அவர்கள் வீட்டின் பரம்பரைத் தாலி இருந்தது. முதன் முதலாக மகேஷ்வரியின் கழுத்தில் ஏறிய பரம்பரைத் தாலி தான் அது. அதைப் பார்த்த மகேஷ்வரி அதிரவில்லை.முரளி தான் அதிர்ந்தார்.

 

முரளி..”இதெப்படி நம்ம வீட்ல இருக்கு தீபா..” என்றார்.

 

“தெரியலைப்பா…பீரோல இருந்தது.நான் ஒரு நாள் அம்மாகிட்ட கேட்டேன்.அதுக்கு அவங்க இது நம்ம குடும்பத்தொட பரம்பரைத் தாலி.அருளுக்கு வர மனைவிக்கு போடனும்ன்னு சொன்னாங்கப்பா…” என்றாள் தீபா ஒன்றும் அறியாதவளாய்.

 

வேகமாய் ஜக்குவின் அருகில் சென்ற முரளி..”சபாஷ்…இன்னும் என்ன என்ன பண்ணி வச்சுருக்கிங்க…அப்போ என் பொண்டாட்டிய, தாலிய எல்லாம் பிடுங்கிட்டுதான் வெளிய அனுப்பியிருக்கிங்க இல்லையா….?எப்படி இப்படி ஒரு நாடகம் நடத்த உங்களுக்கு மனசு வந்தது….” என்று கோபத்தில் கத்திய முரளிக்கு படபடப்பாய் வரவும் சற்று அமைதியானார்.

 

ஆனால் அதைக் கேட்ட சூர்யாவிற்கு கோபம் எல்லைகளைக் கடந்தது.தீபாவின் முகத்திற்காக் அடக்கிக் கொண்டான்.

 

தீபா..” அப்பா..இதை மகி அம்மா..கழுத்துல போடுங்கப்பா..” என்று சொல்ல….சுதாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.பெத்த மகளே..தனக்கு எதிராய் திரும்புவாள் என்று கனவா கண்டார்.

 

மகேஷ்வரி அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை என்பது அவரின் முகத்தில் இருந்தே தெரிந்தது.ஆனால் முரளியோ…உள்ளுக்குள் புது வேகம் பிறந்தவறாய்…”தாலியை வேகமாய் வாங்கி மகியின் கழுத்தில் அணிவித்து விட்டார்.தீபா குங்குமத்தை நீட்ட…முரளியின் கரங்கள் மகேஷ்வரியின்  நெற்றியில் திலகமிட்டது”.

 

தன் தாயின் புதுக் கோலத்தைப் பார்த்து சூர்யாவிற்கு கண்கள் கலங்க…”தீபாவிற்கு கண்களாலேயே நன்றி சொன்னான்.தீபாவும் அதை ஆமோதிப்பதைப் போல் கண் இமைகளை அமர்த்தி திறந்தாள்”.

 

தன்னவளின் செய்கைகளைப் பார்த்த ஜீவாவிற்கு மனம் பெருமையில் பொங்க….அருளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.., ஜக்குவிற்கோ….பேச நா எழும்பவில்லை. சுதாவும் வாயடைத்துப் போய் நின்றார்.

 

தண்ணிக்குள்ளே எந்நாளும்…

தாமரைப் பூ நின்றாலும்…

தண்ணீர் அதில் ஒட்டாது…

உண்மை என்றும் பொய்க்காது..

வீண் பழிகள் சொல்லவே…

ஆளிருந்தால் போதுமே…

பத்தினியான போதிலும்…

பாவம் வந்து சேருமே…

காலம் என்கிற தேவன் கையில்…

ஆடும் பம்பரம் நாமே..!

 

முகவரி 18:

 

விந்தையிலும் விந்தையாய் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட அனைத்தையும் மகேஷ்வரி ஒரு முறை மனதினுள் உரு போட்டார்.காதலித்து கல்யாணம் செய்து,அவ்வாழ்க்கையும் நிலைக்காமல் சென்று,இத்தனை வருடங்களாய் தன் காதலை மட்டுமே மனதில் சுமந்து,இன்று மறுபடியும் தன் வாழ்வுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணி….தனக்குத் தானே சிரித்துக் கொண்டார் மகேஷ்வரி.தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்து சிரிப்பதா., இல்லை இப்பொழுது தன் தாலி……. தன் கழுத்தில் மறுபடியும் ஏறிய நிகழ்வை நினைத்து சிரிப்பதா என்று அவருக்கு தெரியவில்லை.

 

மகேஷ்வரிக்கு தெரியும்..!ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் சூர்யா தான் இருக்கிறான் என்று. சூர்யாவை நினைத்து மகிக்கு பெருமையாக இருந்தாலும்..,அவனது இந்த முரட்டு குணத்தால் அவனுக்கு ஏதும் பாதிப்பு வருமோ என்று சிறிது மனக் கலக்கம் அடைந்தார் மகேஷ்வரி.ஆனால் அதை எல்லாம் சூர்யா கணக்கில் எடுத்துக் கொள்பவனாக தெரியவில்லை.

 

நடந்த நிகழ்வுகளைப் பார்த்து சுதாவால் பேசவே முடியவில்லை.தன் இத்தனை வருட திருமண வாழ்வு…ஒரு நொடியில் சரிந்து விட்டதாய் நினைத்தார்.மகேஷ்வரிக்கு தான் செய்தது துரோகம் என்று சுதாவிற்கு நன்றாய் புரிந்தது.அதேபோல்….அவருடைய வாழ்க்கையை.., தான் வாழ்ந்து கொண்டிருப்பதும் புரிந்தது. ஆனால் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

 

இத்தனை நடந்தும் மகிழ்ச்சியாக இருந்தது முரளி மட்டுமே….! தன் கைவிட்டு போன பொக்கிஷமே திரும்பி வந்தது போன்ற பிரம்மை அவருக்குள்.அருடைய மகிழ்ச்சி அவரின் கண்களிலும் முகத்திலும் நன்றாய் தெரிய…அதைக் கண்ட ஜக்குவிற்கு தான் அங்கு வயிறு எரிந்தது.

 

அந்த இடமே அமைதியில் இருக்க…”என்ன எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கிங்க…?” என்றான் சூர்யா.

 

பிறகு ஜக்குவைப் பார்த்தவன்..”அப்பறன் என்ன பாட்டி நான் வந்த வேலை முடிந்தது.அப்ப நான் கிளம்பறேன். கண்டிப்பா எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடனும் சரியா…:” என்றான் சிரிக்காமல்.

 

அருள் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தான்.”பார்க்குறேண்டா….இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு…நான் உயிரோட இருக்குற வரை இது நடக்காது…” என்றான் ஆவேசமாய்.

 

சூர்யா…”சரி அப்ப செத்துடு…நோ..பிராப்ளம்…அப்பறம் கல்யாணத்தைப் பண்ணிக்கலாம்…ம்ம்ம்” என்றான் கூலாக.

 

சூர்யாவின் பதிலில் அருள் எரிச்சலானது தான் மிச்சம்.எதை சொன்னாலும் அசராமல் திருப்பி அடிக்கும் சூர்யாவைப் பார்க்கும் போது அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.ஆனால் தீபாவே சரி என்று சொல்லும் போது அருளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

சூர்யா…”கடைசியா எல்லாருக்கும் சொல்றேன்….இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்…..நடந்தாகனும்…இல்லை” என்று ஜக்குவைப் பார்த்தவன்…” என்ன பாட்டி நான் தான் அன்னைக்கு சொன்னேன்ல….கலி திங்க ரெடியா இருக்கிங்களா….? பார்த்துக்கங்க…இவன் சின்ன பையன்…விவரம் தெரியலை.நான் தான் தெளிவா சொன்னேன்ல உங்ககிட்ட….சொல்லி புரியவைங்க…சரியா பாட்டி…” என்றான் போலி பவ்யம் காட்டியபடி.

 

பாவிப் பய….எப்படியெல்லாம் மிரட்டுறான்.நான் கலி திங்கனுமா…? “என்று அந்த காட்சியை ஒரு நிமிடம் யோசித்தவர்…கண்ட காட்சியில் அலறியவாறு….”சூர்யாவைப் பார்த்து சரி என்பதைப் போல் தலையை ஆட்டினார்..”.

 

சூர்யா…”பரவாயில்லையே பாட்டி சரியா புரிஞ்சுகிட்டாங்களே..! பெரியவங்க எப்பவும் பெரியவங்க தான் இல்லையா…?” என்றவன்..”தீபா…உனக்கு என்ன என்ன வாங்கனுமோ…அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு எனக்கு சொல்லுமா. எல்லா செலவும் என்னதுதான்…” என்றான் அருளை இறுமாப்புடன் பார்த்தபடி.

 

சூர்யா பாட்டியை சொன்ன விதத்தை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்த தீபா….கடைசியாக அவன் சொன்னதை எண்ணி திகைத்தாள்…” பயத்துடன் அருளைப் பார்க்க.,அருளோ..! தீபாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

தீபாவின் முகத்தை பார்த்தே சூர்யா அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டான்.”சாரி தீபா…இந்த விஷயத்துல என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.எல்லாமே என் செலவுலதான் நடக்கனும்…நடந்தாகனும. உன்னால் ஏத்துக்க முடியாதுன்னா…இதை என் நண்பனுக்காக நான் செய்றேன்னு நினச்சுக்க…” என்றான்.

 

அப்ப நாங்க வறோம்…! என்றவாறு கிளம்ப..,”முரளி சூர்யாவை ஏக்கமாய்ப் பார்த்தார்.ஆனால் சூர்யாவோ அவரின் முகத்தைப் பார்க்கவே இல்லை.மகேஷ்வரியும் முரளியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவர்..தன் மகனின் பின்னால் சென்றார்.

 

முன்னே சென்ற சூர்யா….இரண்டடி பின்னால் வந்து …ஜக்குவிடம்…”வரட்டா பாட்டி”என்று…..ஸ்டைலாக கூலிங் கிளாசை மாட்டியவாறு…”சீக்கிரம் பொள்ளாச்சிக்கு போய்…ஆக வேண்டிய கல்யாண வேலைகளைப் பாருங்க பாட்டி…” என்று தோளைக் குலுக்கியாவாறு சென்றான்.

ஜக்கு செய்வதறியாது வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.அவரைப் பார்த்த தீபாவிற்கு சிரிப்பு வர…அதை மறைக்க வீட்டிற்குள் ஓடினாள்.

 

தனது அறைக்கு சென்று ஜன்னல் வழியாக ஜீவாவைப் பார்க்க., அவனும் இவளை எதிர்பார்த்து காத்திருந்தவன் போல்…”போய்ட்டு வரவா..?” என்றான் கண்களால்.தீபாவும் “சரி…”என்பதைப் போல் கண்களால் அபி நயம் பிடித்தால்.

 

ஜீவா…முத்தமிடுவது போல் …உதட்டைக் குவித்து காட்ட… “தீபாவோ…கொன்னுவேண்டா…!” என்பதைப் போல் கண்களால் அம்பை எய்தாள்.

 

சூர்யா…”போதும்டா…மச்சான்.ரொம்ப வழியுது.அம்மா வேற இருக்காங்க…கொஞ்சம் அடக்கி வாசி” என்றான்.

 

சூர்யாவைப் பார்த்து அசடு வழிந்த ஜீவா..”இவன் முன்னால தான் போனான்.அப்பறம் எப்படிப் பார்த்தான்…உடம்பெல்லாம் கண்ணு இவனுக்கு…கொஞ்சம் ஜாக்கிறதையா இருக்கனும் ஜீவா…இல்லை உன் மானம் கப்பலேறி அந்தமான் தீவு வரை செல்வது உறுதி..” என்று மனதிற்குள் கூறியவாறு காரில் ஏறினான் ஜீவா.

 

தீபாவிற்கு நடந்தவற்றை இன்னமும் நம்ப முடியவில்லை.சூர்யா கண்டிப்பாய் தங்களின் கல்யாணத்தை நடத்தி வைப்பான் என்று தெரியும்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அதற்கான வேலையில் இறங்குவான் என்று எதிர் பார்க்கவில்லை.இருந்தாலு அனைத்தயும் மீறி., தனக்கு கல்யாணம் என்பது அவளின் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது”.

 

அருளோ…! தன் தங்கை தன்னை மதிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தான்..”அம்மா…கூட பிறந்த அண்ணனை விட..நேத்து வந்த அவன் உங்க மகளுக்கு பெரிசா போய்ட்டான் இல்லை….” பார்க்குறேன்..இது எது வரைக்கும் போகும்ன்னு…என்றான்.

 

கல்யாணம் வரைக்கும் தான்..” என்று அமைதியாக கூறியவாறு எழுந்து சென்றார் முரளி.

 

                                     ————————————–

 

ரம்யா எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.ரம்யா நிலாவின் வீட்டிற்கு வந்து ஒரு வார காலம் ஆகிவிட்டது.ஆனால் எப்பொழுதும் யோசனையிலேயே அமர்ந்திருந்தாள்.அவளை கலகலப்பாக மாற்ற நிலாவும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டாள்.ஆனால் பலன் என்னவோ பூஜை தான்.

 

நிலா…”ஏண்டி இப்படி இருக்க…?” கொஞ்சம் சிரியேன்.பாரு உன்ன பார்த்து அம்மாவும் அப்பாவும் பயப்படுறாங்க.இப்படி உம்முன்னு முகத்தை வச்சு அவங்களை நீ பயபடுத்தலாமா..? என்றாள் நிலா.

 

நான் நல்லா தான் இருக்கேன்…! நீ ஆபீஸ் போகலையா….?”  என்றாள் ரம்யா.

 

நிலா,…”போகனும்டி…நீ வேற அதை நியாபகப் படுத்தாத….அந்த சிடுமூஞ்சி கிட்ட வேலை பார்க்குறதுக்கு., வேலை பார்க்காமலேயே இருக்கலாம். என்ன அந்த கம்பெனியில கூப்பிட்டாக., இந்த கம்பெனியில கூப்பிட்டாக.., என் கிரகம் அவன்கிட்ட வேலை செய்றேன்..”என்றாள் கோவை சரளா பாணியில்.

 

அவளது செய்கையில் ரம்யா சட்டென்று சிரித்து விட்டாள்.”நீ ஏண்டி கவலைப் படுற…உன் கிட்ட சிக்குன உன் எம்.டி தான் கவலைப்படனும்….எப்படித்தான் உன்னை எல்லாம் வச்சு மேய்க்கிறாரோ….அந்த புண்ணியவான்..” என்று சிலாகித்தாள் ரம்யா.

 

அடிப் போடி நீ வேற…அவன் சரியான சிடுமூஞ்சி…சிரிக்கிறதுன்னா என்னன்னு கேட்பான்..சரியான திமிர் பிடிச்சவன். அவன் செய்றது,அவன் சொல்றது…தான் சரி அப்படின்ற ரீதியில் பேசுவான்.என் போதாத காலம் அந்த கருவாப்பைய கம்பெனியில இருக்கேன்….” என்று இழுத்தாள்.

 

ரம்யா..”என்னது கருவாப்பையலா…? என்னடி எம்.டிய இப்படி எல்லாம் பேசுற…?” என்றாள் ஆச்சர்யம் விலகாமல்.

 

எம்.டின்னா….. அவனுக்கு என்னா கொம்பா முளைச்சிருக்கு…?அவனும் அவன் மண்டையும்.அவனைப் பார்த்தாலே எனக்கு பத்திகிட்டு வருது ரம்ஸ்” என்றாள் நிலா.

 

நீ அவர்கிட்ட நேர்லையும் இப்படித்தான் பேசுவியா…? நீ சொல்றதைப் பார்த்தா அவருக்கு சின்ன வயசா இருக்கும்போலவே..? என்றாள் ரம்யா.

 

நிலா…”ஆமாமா…நல்ல வயசுப் பையன்…என்ன ஒரு 29 இல்ல 30 வயசு இருக்கும்…” என்றாள் குத்து மதிப்பாக.

 

நமட்டு சிரிப்பு சிரித்தபடி…”பரவாயில்லையே…! வயசு எல்லாம் நல்லா கணக்கு பன்ற…” என்றாள் ரம்யா.ஆனால் மனதிற்குள் அவளுக்குள் ஏதோ உறுத்த தொடங்கியது.ஆனால் அதை அலசி ஆராயவில்லை.

 

ரம்யா சிரித்ததன் உள் நோக்கத்தை அறிந்து கொண்ட நிலா…” நீ நினைக்கிற மாதிரி ஒரு மண்ணும் இல்லை….அவன் எல்லாம் காதல் என்றால் என்ன…? அப்படின்னு கேட்குற ரகம்….அதனால் உன் கற்பனைக் குதிரைக்கு உடனே கடிவாளம் போட்டுடு..சரியா” என்றாள்.

 

மறுபடியும் சிரித்த ரம்யா…”நான் அப்படி சொல்லவே இல்லையே…?” என்றாள்.

 

அம்மா தாயே..! ஆளை விடும்மா…எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிட்டது.எதா இருந்தாலும் வந்து பேசிக்கலாம் …சரியா…நீ நிம்மதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடு…” என்றவாறு சிட்டாக பறந்து விட்டாள்.

 

                                               ———————–

 

மீட்டிங்க் ஹால் சலசலப்பாய் காணப்பட்டது.ஒரு மிகப் பெரிய வெளி நாட்டு கம்பெனியின்., தங்களின் பிஸ்னெஸை தமிழ் நாட்டில் விரிவு படுத்த திட்டமிட்டு, இங்குள்ள சிறந்த கம்பெனியுடன் டையப் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.அதற்கான கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தில் அனைத்து முன்னணி கம்பெனிகளும் அங்கு குழுமியிருந்தன.

 

அருளும்., முரளியும் தங்களுக்கான இடத்தில் அமர்ந்து இருந்தனர்.முரளி அருகில் உள்ள பெரிய மனிதரோடு சீரியசாய் எதையோ பேசிக் கொண்டிருக்க..,அருளோ கெத்தாய் அமர்ந்திருந்தான்.அந்த வருடத்தின் சிறந்த கம்பெனியாக அவர்கள் கம்பெனி விருது வாங்கியிருந்ததால்.., எப்படியும்  இந்த வாய்ப்பு தங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தான்.

 

அருளின் நிம்மைதியைக் குழைக்க…,கடைசி நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்தனர் சூர்யாவும்., ஜீவாவும்.முரளி பேசிக்கொண்டிருந்ததால் சூர்யாவைக் கவனிக்கவில்லை.ஆனால் அருளுக்கோ…! சூர்யாவைப் பார்த்தது தான் மாயம்..எரிச்சலும் கோபமும் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.ஆனால் சூர்யாவோ..! அவனை ஒரு ஆளாக கூட பார்க்காமல் ..தனக்குரிய இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 

அந்த வெளி நாட்டு கம்பெனியின் உரிமையாளர்கள் வர..அந்த ஹால் அமைதியானது.அப்பொழுதுதான்..தனக்கு எதிரில் சூர்யா அமர்ந்திருப்பதைப் பார்த்தார் முரளி. ஆனால் அவருக்கு அருளைப் போல் கோபம் வரவில்லை.மாறாக பெருமையாக இருந்தது.அவருக்கு தெரியும் ….இந்த இடத்தில் அமர வேண்டுமென்றால்…எந்த அளவிற்கு உழைத்து…முன்னேறி இருக்க வேண்டுமென்று.இன்று அந்த இடத்தில் தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தார் முரளி.

 

அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்க…சூர்யா மட்டும்..எந்த பரபரப்புமின்றி எப்பொழுதும் போல் தனக்குரிய தோரணையுடன் அமர்ந்திருந்தான்.ஜீவாவும் அவனுக்கு இணையாக அமர்ந்திருக்க..மனதில் முரளி…”ஜீவா,தீபாவிற்கு ஏற்ற சரியான மாப்பிள்ளைதான். என் மகனின் தேர்வு சோடை போகவில்லை..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். தீபாவின் கல்யாணத்தைப் பற்றி அவர் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச மன சிலேகங்களும் விலகி…ஜீவாவை மாப்பிள்ளையாக …அவரின் மனம் முழுதாய் ஏற்றுக் கொண்டது.

 

மாமனாரின் மனதில் இடம் பிடித்த கதையை அறியாத ஜீவா…”என்ன சூர்யா….நமக்கு கிடைக்குமா…வாய்ப்பு..” என்றான்.

 

சூர்யா…”உன் மாமனார் உன்ன தான் வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்.அதனால் நீ உன் பெர்பாமன்ஸ கண்டினியூ பண்ணூ மாப்பிள்ளை…அவரு பார்வைய பார்த்தா எப்படியும் நீ பாஸ் மார்க் வாங்கியிருப்பன்னு நினைக்கிறேன்…” என்று ஜீவாவையும்., முரளியையும் பார்க்காமலே சொல்ல….ஜீவா அதிர்ந்தான்.

 

உனக்கு மட்டும் எப்படிடா…இப்படி எல்லாம் தெரியுது…என்றவாறு ஓரக்கண்ணால் முரளியைப் பார்க்க…சூர்யா சொன்னதை மெய்ப்பிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் முரளி…”ஆனால் அப்பொழுதும் சூர்யா திரும்பவில்லை.”ஆமா மச்சான் ….உங்கப்பா என்ன தான் பார்க்குறார்.இருந்தாலும் நீ எங்கயோ  போய்ட்டா…” என்று கூறிக் கொண்டிருக்கும் பொதே…அங்கு பேச்சு ஆரம்பமாகியது.

 

அந்த கம்பெனியை சேர்ந்த ஒருவர்…பேசத் துவங்கினார்.” வெல்கம் டு ஆல். எங்களோட டையப் வச்சுக்க…எல்லா கம்பெனிஸுமே…ஆர்வா இருக்கிங்க.அதற்கு முதலில் எங்கள் நிறுவனத்தின் சார்பாக நன்றி.ஆனா நாங்க ஒரு கம்பெனி கூட தான் டையப் பண்ண முடியும். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நாங்க பார்த்ததில் எங்களுக்கு ஒரு கம்பெனிய ரொம்ப பிடிச்சிருக்கு.இதுவரைக்கு அவங்க செயல்பாடுகள் அனைத்தும்  நல்ல முறையிலும்.., அதே சமயம் வெற்றிகரமாகவும் இருக்கு. அது எம்.எஸ்.குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் தான். அந்த கம்பெனி எம்.டி.மிஸ்டர்.சூர்யவேந்தன் அவர்களுக்கே இந்த வாய்ப்பை வழங்கலாம் என்று இருக்கிறோம்…” என்று பேசி முடித்தார்.

 

அதைக் கேட்ட அருளிற்கு கோபம் தறிகெட்டு ஓட…ஜீவாவிற்கு சந்தோஷமாய் இருந்தது.ஆனால் சூர்யாவோ..முதலில் எப்படி இருந்தானோ அப்படித்தான் அப்பொழுதும் அமர்ந்திருந்தான்.அவனின் இத்தன்மையைப் பார்த்து முரளியே வியந்து போனார்.”எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருப்பவன்…விரைவில் வெற்றி அடைவான்…” என்று அவர் கேள்விப் பட்ட கூற்று அப்பொழுது அவருக்கு சரியாய் நியாபகத்திற்கு வந்தது.

 

அருள்…”இது எப்படி சாத்தியம்.இந்த வருடத்துக்கான ஒன் ஆப் த பெஸ்ட் கம்பெனியா எங்க காம்பெனிஸ் தான் அவார்ட் வாங்கியிருக்கு…அப்படி இருக்கும் போது இது எப்படி நடந்தது…” என்றான் வெறியுடன்.

 

“மிஸ்டர் அருள்….!எங்களுக்கு, கம்பெனி பவரை விட….மேன் பவர் தான் முக்கியம்.அது மிஸ்டர் சூர்யாகிட்ட இருக்க போய்தான் அவரும் இந்த வருடம் இளம் தொழிலதிபர் அவார்ட் வாங்கியிருக்கார்.இது கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லைன்னு நினைக்கிறேன்…” என்றார் அவர்.

 

அருள் கோபமாய் வெளியேற…அருளின் பேச்சு முரளிக்கும் கோபத்தைத் தூண்டியது.”இப்ப எதுக்காக இவன் இப்படி பேசிட்டு போறான்…”என்று யோசித்தவர்…அவனின் சார்பாக அனைவரிடமும் மன்னிப்புக் கோரினார்.

 

ஜீவா..”என்ன சூர்யா…இவனுக்கு என்ன பைத்தியமா…?சொந்த விஷயத்தையும்,பிஸ்னெஸையும் ஒன்னாப் பார்க்குறான்…” என்றான் கடுப்பாக.

 

லேசாய் சிரித்த சூர்யா…”அவன் இன்னும் வளரனும் மச்சான்..” என்றவன்..அனைவருக்கும் நன்றி தெரிவித்து அதற்கான பேச்சு வார்த்தையில் இறங்கினான்.அரைமணி நேரத்தில் பார்மாலிட்டிஸை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர் சூர்யாவும்,ஜீவாவும்.

 

ஜீவா..”எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சூர்யா.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.ஏன் யாருமே எதிர்பார்க்கலை.இது நமக்கு நல்ல சான்ஸ்..” என்றான்.

 

“எனக்கு நம்பிக்கை இருந்தது ஜீவா…என்னோட வெற்றி தோல்வியை நான் மட்டும் தான் டிசைட் பண்ணுவேன்..எல்லா விஷயத்திலும்” என்றான் முகம் இறுக.

 

ஜீவா..”இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.நிலாகிட்ட உன் காதலை சொல்ல முடியலை. உன் ஆபீஸ்ல உனக்கு கீழ தான் வேலை செய்றா…இருந்தும் என்ன பிரையோஜனம்.அந்த அருள் முந்திகிட்டான்.இருந்தாலும் இப்பவும் சொல்றேன் நிலாக்கு அருள் மேல லவ் வந்திருக்க சான்ஸ் இல்லை.நீயாதான் தேவை இல்லாததைப் போட்டு மனசைக் குழப்பிக்கிற…” என்றான்.

 

இவர்கள் பேசியதைக் கேட்ட அருளுக்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.காரை எடுப்பதற்காக சூர்யாவும் ஜீவாவும் வந்து காரின் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்க..அருகில் காரினுள் அமர்ந்திருந்த அருளுக்கு அனைத்தும் தெளிவாய்க் கேட்டது.ஆனால் ஜீவாவும்,சூர்யாவும் அருளைக் கவனிக்கவில்லை.

 

என்னது சூர்யாவும் நிலாவை லவ் பன்றானா..? என்று நினைத்த அருளுக்கு அதை நினைக்க கூட முடியவில்லை.இல்லை…நிலா என்னதான் லவ் பன்றா…எனக்குத் தெரியும் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.இருந்தாலும் நிலா..,சூர்யாவின் கம்பெனியில் வேலை பார்க்கும் செய்தி அருளுக்கு புதிய செய்தி. அவ எப்படி அங்க….என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று யோசித்தான்.

 

இல்லைன்னாலும் நிலா உன் கூட தினமும் மணிக் கணக்கா பேசுறாளாக்கும்…!என்று அவனின் மனம் கிண்டல் அடித்தது.இதுவரை சூர்யாவின் அதிரடி நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்திருந்ததினால்..,கொஞ்சம் உள்ளூர பயம் கொடுக்கத்தான் செய்தது”.

 

ஜீவாவின் வார்த்தைகளுக்கு..,சூர்யா ஏதாவது மறுப்பு கூறுவான் என்று எதிர்பார்க்க…சூர்யாவோ எதுவும் சொல்லாமல்…வேகமாய் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

 

ஆனால்..,அருளுக்கு நிலை கொள்ளவில்லை. இதை எப்படி டீல் பன்றது என்று யோசித்தவன் இல்லை இதை இப்படியே விடக் கூடாது.இந்த விஷயத்தில் கண்டிப்பா நான் தோற்க மாட்டேன்.நிலா எனக்கு தான்.எனக்கு மட்டும் தான்.என்று வேகமாய் மனதினுள் திட்டங்களை வகுத்தவன்…அதை செயல் படுத்த சீறிப் பாய்ந்தான்”.

 

என்ன ராசா சொல்ற..?”என்று அதிர்ச்சியாய் கேட்டார் ஜக்கு. சுதாவும் என்னவோ ஏதோவென்று வெளியே வந்தார்.

 

அருள்..”ஆமாம் பாட்டி…அவனும் நிலாவை லவ் பன்றானாம். ஆனா நிலா என்னதான் லவ் பன்றா பாட்டி…..என்றான் வேகமாய். இருந்தாலும் அவன் எப்ப என்ன செய்வான்னே தெரிய மாட்டேங்குது.அதனால் இப்பவே நிலா வீட்டுக்கு போய்  என்னன்னு பேசி முடுச்சுட்டு வந்துடலாம்.அதுக்காக தான் ஆபீஸ் கூட போகாம நேரா வீட்டுக்கு வந்தேன் ….” என்றான் மூச்சுவிடாமல்.

 

ஜக்கு..”பொண்ணுக்கு உன்ன தான ராசா பிடிச்சுருக்கு.அப்பறம் எதுக்கு பயப்படுற..?விடு அந்த பொண்ணு உனக்குத்தான்..கவலைப் படாத ராசா,…” என்றார்.

 

ஐயோ..! நான் சொல்றதே..உங்க யாருக்கும் புரியலையா…என்றவன் வேகமாய் சுதாவின் அருகில் சென்றான்.அம்மா நீங்களாவது புரிஞ்சுக்கோங்க….என்னோட மன நிலை என்னன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்…ப்ளீஸ் ம்மா..” என்றான்.

 

அருள்…புரியுது..!ஆனா இப்ப போனா அவ ஆபீஸ் போய்ருப்பாளே..!அப்பறம் எப்படி பேசுறது…?”என்றார் சுதா.

 

அருள்..”பரவாயில்லைம்மா…நாம அவங்க அப்பா,அம்மாகிட்ட பேசிட்டு வரலாம்…வாங்க.. எனக்கு அவங்க சம்மதம் தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. ” என்று பேசி ஒருவழியாய் ஜக்குவையும்,சுதாவையும் சம்மதிக்க வைத்து நிலாவின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.இதை எதுவும் அறியாத தீபா…துவைத்த துணிகளைக் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

காரை நிறுத்திய அருள்…”வாங்க பாட்டி.., வாங்க அம்மா…இந்த வீடுதான்..” என்று நிலாவின் வீட்டிற்குள் அழைத்து சென்றான் அருள்.

 

ஆண்ட்டி…! அங்கில்…!..” என்ற அழைப்பில் வெளியே வந்த மாலா இவர்களைக் கண்டு தெரியாமல் முழிக்க…வெளியே வந்த பிரபுவோ..ஜக்கம்மாவையும், சுதாவையும் பார்த்து அதிர்ந்து நின்றார்.ஜக்குவும்,சுதாவும் அங்கு பிரபு எதிர்பாராது திகைத்து நின்றனர்.மாலாவும்,அருளும் இவர்களைப் பார்த்து புரியாமல் நின்றனர்.

 

முதலில் மீண்ட ஜக்கு..”என்ன அப்பு…வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூப்பிட மாட்டிகளா..?” என்றார்.

 

பிரபுவும் அப்பொழுதுதான் சுய சிந்தனைக்கு வந்தவராய்…”வாங்க அத்தை..வா சுதா..” என்றார்.அவர்களின் பேரைக் கேட்ட மாலாவிற்கு அவர்கள் யாரெனத் தெரிய வர…அவரும் வாங்க..! என்று சைகை செய்தார்.ஆனால் ஜக்குவிற்கும்,சுதாவிற்கும் அவரின் சைகைகள் புரியவில்லை.

 

இவங்களை எல்லாம் முன்னமே தெரியுமா..? எல்லாம் தெரிஞ்சவங்க மாதிரி பேசிக்கிறாங்களே..!” என்று யோசித்தபடி சென்றான்.

 

ஜக்கு..”ராசா…என்ன புரியாம பார்க்குற..இது வேற யாருமில்லை.உன் சொந்த தாய்மாமன்  தான்.உன் ஆத்தா கூட பொறந்த ஒத்தப் பொறப்பு ராசா…”என்றார் அருளிடம்.

 

என்னது மாமாவா….அப்ப நிலா எனக்கு மாமா பொண்ணா…ஹையா…!பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது அருளுக்கு.இது அவன் முற்றிலும் எதிர்பாராதது.ஆனால் இத்தனை வருடம் இந்த மாமா எங்கே இருந்தார்..?ஏன் நமக்கு இவரைப் பற்றி தெரியவில்லை.மாமா இருக்கார்ன்னு சொன்னாங்க..ஆனா இப்படி,இப்படி அழகான பொண்ணொட., இவ்வளவு பக்கத்துல இருக்கார்ன்னு தெரியாம  போய்டுச்சே….!” என்று மனதிற்குள் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான் அருள்.

 

சுதாவிற்கு இத்தனை வருடம் கழித்து..இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தன் அண்ணனைக் காண்போம் என்று கனவு கூட காணவில்லை.தன் அண்ணன் மகளைத்தான் அருள் விரும்பியிருக்கிறான் என்பது சுதாவிற்கு கூடுதல் சந்தோஷம்.”இப்படி ஒரு தங்கச்சி இருக்குறதையே மறந்துட்ட இல்லையாண்ணா..?” என்றார் வேதனையாய்.

 

தன் தங்கையையும்.,தன்னைத் தாயாய் இருந்து வளர்த்த தன் அத்தையையும் இத்தனை வருடம் கழித்து பார்த்தது பிரபுவிற்கும் மகிழ்ச்சியாய் இருந்தது.எதிர்பாராத இந்த நிகழ்வில் அவர் வாயடைத்து நின்றார்.இபொழுது சுதாவின் கேள்வி அவரை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.

 

பிரபு..”அப்படி எல்லாம் இல்லை சுதா.நான் ஏன் போனேன்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும்.எனக்கு பொருந்தாத இடத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை.அதான் விதி விட்ட வழின்னு வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.அண்ணன் மேல் உண்மையான பாசம் உனக்கு இருந்து இருந்தா..நான் சொன்னதைத்தான கேட்டு இருப்ப….அதை விட்டுட்டு…என்றவரது மனக் கண்ணில் பழைய நியாபகங்கள் படையெடுக்க….”தலையை உதறிக் கொண்டார் பிரபு.

 

அதைவிடு சுதா..”நீ எப்படி இருக்க..? மாப்பிள்ளை எப்படி இருக்கார்..? எத்தனை பிள்ளளைங்க..?” என்றார் அடுக்கடுக்காய். அவரின் முகத்தைப் பார்த்தே அவர் மனதில் இருப்பதை தெரிந்து கொண்டார் சுதா.மகியை விரட்டி..,முரளியை தான் கல்யாணம் செய்ததைத் தான் சொல்கிறார் என்பது அவருக்கு புரிந்தது.

 

சுதா..”நான் நல்லா இருக்கேண்ணா…அவர் அபீஸ் போய்ருக்கார்.இவன் என் பையன் அருள். ஒரு பொண்ணு தீபா.வீட்ல இருக்கா.இது உங்க வீடுன்னு எனக்கு தெரியாது.இல்லைன்னா அவளையும் அழைச்சுட்டு வந்துருப்பேன்..” என்ற சுதா..”அண்ணி பேர் என்ன அண்ணா..?” என்றார்.

 

மாலா காபி எடுத்து வந்து அனைவருக்கும் தர..”எனக்கு ஒரு பொண்ணு.இது என் மனைவி மாலா. அவளால் பேச முடியாது.ஒரு விபத்துல இப்படி ஆகிட்டது…அப்பறம் பொண்ணு வீட்ல இல்லை” என்றார்.

 

ஜக்கு..”இந்த அத்தைய மறந்திட்ட இல்ல அப்பு…” என்றார் பாசமாய்.

 

அப்படி எல்லாம் இல்லை அத்தை.நான் அப்படி எல்லாம் நினைச்சு வீட்டை விட்டு போகலை.என் போதாத காலம்…என்ன என்னவோ நடந்து விட்டது என்றார்.

 

இப்பவாச்சும் இந்த கடவுள் கண்ணைத் திறந்தானே…! யார் கண்ணு பட்டுச்சோ..!என் குடும்பம் இப்படி சின்னா பின்னமா சிதறி போய் கிடக்குதே…!” என்று வாய்விட்டு புலம்பினார்.

 

பிரபு..”எல்லாம்   நீங்க செய்த பாவம் தான்..” என்று மனதில் நினைத்த பிரபு அதை வெளியே சொல்லவில்லை.அதே போல் தான் இங்கு மகேஷ்வரியைப் பார்த்ததையும்..அவரிடம் மன்னிப்புக் கேட்டதையும்…. அவர்களிடம் சொல்லவில்லை.அவர்களுக்கு தெரியாது என்று பிரபு நினைத்திருக்க…..,பிரபுவிற்கு தெரியக் கூடாது என்று…… சுதாவும்,ஜக்குவும் பிரபுவிடம் மகேஷ்வரியைப் பார்த்தையோ..,அல்லது நடந்த பிரச்சனைகளைப் பற்றியோ எதுவும் சொல்லவில்லை.இப்படியாக இவர்கள் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டனர். இவர்களைப் பற்றி தெரிந்த மாலாவே..!எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்.

 

இவர்களின் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருள்..எப்போதடா…தன் கதையைக் கூறுவார்கள் என்று காத்திருந்து..காத்திருந்து..ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தான்.இருந்தாலும் நிலா தனக்கு முறைப் பெண்…அதனால் அந்த சூர்யாவால் ஒன்றும் செய்ய முடியாது என்ற மிதக்கத்தில் அமர்ந்து இருந்தான்.

 

பிரபு..”நான் இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றார்.

 

சுதா…”இது உங்க வீடுன்னு தெரியாது அண்ணா.நாங்க இங்க பொண்ணு பார்க்க வந்தோம்.கடைசில பார்த்தா இது உங்க வீடு..”என்றார்.

 

பொண்ணு பார்க்கவா..?”என்று அதிர்ந்தார் பிரபு.

 

ஜக்கு..”ஆமா அப்பு.அருளும்..,உன் பொண்ணு..பேர் என்னவோ சொன்னானே…என்று இழுக்க..”நிலா” என்று அருள் எடுத்துக் கொடுத்தான். ஆங் நிலா….அதான் அப்பு ரெண்டு பேரும் லவ் பன்றாங்களாம்…உங்ககிட்ட சம்மதம் வாங்க பாப்பாக்கு தயக்கமா இருக்கும் இல்லையா…அதான் அருள் எங்களைக் கூட்டிட்டு வந்தான்.இங்க வந்து பார்த்தா..இங்க நீ  இருக்க.கடைசில மாமன் பொண்ணதான் மனசுல நினைச்சுருக்கானா..என் பேரன்” என்று சிலாகித்தார் ஜக்கு.

 

பிரவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.”என்னது நிலா லவ் பன்றாளா..? இது எப்ப இருந்து நடக்குது.அப்படி எதும் இருந்திருந்தா அவளே என்கிட்ட சொல்லி இருப்பாளே..! “என்று மனதிற்குள் யோசித்தார் பிரபு.

 

இவர்களின் பேச்சைக் கேட்ட மாலாவிற்கும் அப்படித்தான் இருந்தது.ஆனால் மாலாவிற்கோ..நிலா கண்டிப்பாய் அப்படி எல்லாம்  செய்திருக்க மாட்டாள் என்று நம்பினார்.இருந்தாலும் அவரின் மனம் கேட்கவில்லை.இது என்ன புது பிரச்சனை என்று அவரும் மனதினுள் கவலை கொண்டார்.

 

சூர்யா ஏகப்பட்ட கடுப்பில் இருந்தான்.டிஸைன்ஸ் பைலை கேட்டால் நிலா அதை மாத்தி கொடுத்திருந்தாள்.அவனுக்கு இருக்கும் வேலை பரபரப்பில் …அது வேறு அவனின் கோபத்தை தூண்டியது.”இந்த சுதாகரன் அங்கிலும் இதைப் பார்க்கவில்லையா..?” என்று அவர்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.இன்னும் காலையில் இருந்து நிலாவைப் பார்க்கவில்லை என்பது தான் அவனது கோபத்திற்கு உண்மையான காரணம் என்பதை அவன் மனம் அறிந்து கொள்ளவில்லை.அதற்கு பொய்யாய் ஒரு காரணத்தைப் பூசிக்கொண்டது அவனின் மனம்.

 

நிலா..கொஞ்சம் உதறலுடன் தான் உள்ளே…நுழைந்தாள்..”இன்னைக்கு என்ன சொல்லப்  போறானோ…? பாவிப் பய.தினமும் என்னை திட்டலைன்னா..இவனுக்கு தூக்கமே வராது போல..” என்று மனதில் நினைத்தவாறு சூர்யாவின் கேபினுக்குள் நுழைந்தாள் நிலா.

 

இளம் கிளிப்பச்சை வண்ண சுடிதாரில்..எளிமையாய் அதே சமயம் நேர்த்தியாய் இருந்த அவளது அழகு அப்படியே சூர்யாவின் மனதில் ஒட்டிகொண்டது.”மாற்றான் காதலியைப் பார்ப்பது தவறு..” என்று நினைத்து தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனாய் ..பொய்யான கோப முகத்தோடு அவளை ஏறிட்டான்.

 

நீ இனி வேலைக்கு வரத் தேவை இல்லை.இன்னையில் இருந்து உனக்கு இங்க வேலை இல்லை..” என்றான் சூர்யா எடுத்த எடுப்பில்.

 

இன்னைக்கு ரொம்ப திட்டுனான்…இந்த வேலைய விட்டே போய்டனும்..”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வந்த நிலா..,சூர்யாவின் இந்த வார்த்தைகளில் சடனாகி நின்றாள்.அவன் சொல்லி நான் வேலையை விட்டுப் போவதா என்ற  எண்ணம் அவளுக்கு தலை தூக்க..அவளின் பழைய துடுக்குத் தனமும் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது.

 

நிலா..”நான் எதுக்கு வேலைய விட்டுப் போகனும்.நான் என்ன தப்பு செய்தேன்.எந்த சரியான காரணமும் இல்லாமல் நீங்க என்னை வேலைய விட்டு தூக்க முடியாது..”என்றாள் பதிலுக்கு.

 

அவள் குடுத்த பைலை அவள் முன்னே விசிறிஅடித்தான் சூர்யா..”உங்க வேலைய நீங்க எப்பவாவது சரியா செய்துருக்கிங்களா…மிஸ்.நிலா. நான் கேட்டது என்ன..? நீங்க குடுத்து இருக்குரது என்ன..?” என்றான் சூர்யாவும் கோபமாய்.

 

வேகமாய் அதை எடுத்துப் பார்த்த நிலா…அதிர்ந்தாள்.இது நான் குடுத்தது இல்லையே…என்று யோசித்தவள்..சுதாகரன் அப்பா தான் மாத்தி குடுத்து இருக்கனும்.இப்ப இவன்கிட்ட அதை சொன்னால் அவரையும் சேர்த்து திட்டுவான்.எதுக்கு வம்பு…பாதி வாங்கிட்டோம்..மீதியையும் நாமே வாங்கிக்கலாம் என்று நினைத்தவளாய்…”சாரி சார்…இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன்…” என்றாள் நிலா.

 

அவளை ஏளனமாய் பார்த்த சூர்யா..”நீங்க இப்படி எல்லாம் இங்க வேலை பார்க்கனும்ன்னு அவசியமே இல்லையே.நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க போறவனே…பல கம்பெனிக்கு முதலாளி.நீங்க இங்க வேலை பார்க்குறது பாவம் சாருக்கு கவுரவ குறைச்சலாகிடப் போகுது…” என்றான் நக்கலாய்.அவனின் கோபமும் இயலாமையும்,காதலும்…. வார்த்தை வடிவில் வெளி வந்தது.

 

நிலாவிற்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது..அவள் பதிலுக்கு ஏதோ சொல்லப் போக…அவளின் கையில் இருந்த மொபைல் ஒலித்தது. “இப்ப இது வேறா…என்று நிலா கட் செய்தாள்”.

 

ஆனால் அது மறுபடியும் ஒலிக்க…”எடுத்துப் பேசுங்க..உங்க லவ்வர் கோவிச்சுக்குவார் இல்லையா..?” என்ற சூர்யாவின் நக்கலுரையில் நிலா…கடுப்பாகி போனை அட்டென் செய்தாள்.

 

அது ஏசி அரை என்பதாலும்..,மிகவும் அமைதியாக இருந்ததால் நிலாவின் தொலைபேசி உரையாடல் அப்படியே வெளியே கேட்டது.

 

ஹலோ…!”என்றாள் நிலா.நிலா நான் அப்பா பேசுறேன்மா..கொஞ்சம் பெர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு வர முடியுமாம்மா..!இங்க அருள் வந்திருக்கார்.அவர் ஏதேதோ சொல்றார்.அது உண்மையாமா..?” என்றார் முரளி.

 

நிலா..”அப்பா..!நீங்க என்ன சொல்ல வறிங்க..?எனக்கு ஒன்னும் புரியலை…” என்றாள் நிலா.

 

பிரபு..”நீ அருளை லவ் பன்றியாமா…அவன் அப்படித்தான் சொல்றான்.இங்க வீட்டுக்கு எல்லாரும் வந்துருக்காங்கடா. கடைசில பார்த்தா அருள் என் சொந்த தங்கச்சிப் பையன் தான் நிலா. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.நீ லீவ் சொல்லிட்டு கூட….. கிளம்பி வாடா..!” என்றார்.

 

நிலாவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது.”என்னது தங்கச்சிப் பையனா,..? இது என்ன புதுக் கதையா இருக்கு…என்று யோசித்தபடி சூர்யாவைப் பார்க்க…அவனோ நக்கலாய் ஒரு பார்வைப் பார்த்தான்..கடைசியில் நான் சொன்னதுதானே சரி என்பதைப் போல்..”

 

நிலாவிற்கு சூர்யாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே தவிர..அதனால் வரும் பின் விளைவுகளைப் பற்றி அவள் அறியவில்லை.

 

நிலா…”அப்பா…!அவர் பொய்யெல்லாம்  சொல்லலை.அவர் சொவது உண்மைதான்.நாநும் அவரை லவ் பண்றேன்…உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை…அதான்..” என்று இழுக்க…”என்னால் இப்பக் கூட நம்ப முடியலை நிலா..” என்றார் பிரபு.

 

அப்பா..! ப்ளீஸ்..நான் சொல்றது உண்மைதான்.அப்பறம் இப்ப எல்லாம் லீவ் சொல்லிட்டு வர முடியாது.அதானால் எதுன்னாலும் நீங்களே…பார்த்து பேசிக்கங்கப்பா…!”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…”தேங்க் யூ நிலா..” என்ற அருளின் சந்தோஷக் கத்தல் கேட்டது.

 

ஆனால் சூர்யாவோ..நிலாவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மடிந்து கொண்டிருந்தான்.காலையில் ஜீவா சொன்ன போது கூட..கொஞ்ச நஞ்ச நம்பிக்கை இருந்தது அவனிடம்.ஆனால் இப்பொழுது அனைத்து நம்பிக்கையும் இழந்தான் சூர்யா.ஆனால் அவனுடைய வலிகளையும்.., துயரத்தையும் அவனது முகம் சற்ரும் பிரதிபலிக்கவில்லை. மாறாக நிலா உள்ளே வரும் போது எப்படி அவன் முகம் இருந்ததோ..அப்படியே தான் இப்பொழுதும் அப்படியே தான் இருந்தது.

 

அவனின் முகத்தில் கடுப்பை எதிர்பார்த்த நிலாதான் இப்பொழுது ஏமாந்து போனாள்.சரியான பைலை அவனிடம் எடுத்து வந்து கொடுக்கும் போது கூட அப்படியே  தான் இருந்தான் சூர்யா.அவனிடம் நிலா என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே எதும் புரியவில்லை.அவனைக் கடுப்பேற்ற நினைத்து…, தான் கடுப்பாகி சென்றாள் நிலா.

 

அங்கு அருள் வானத்தில் பறக்காத குறையாக பறந்து கொண்டிருந்தான்.அவன் கொஞ்சம் சந்தேகத்தில் தான் நிலாவின் வீட்டிற்கு சென்றான்.ஆனால் இப்பொழுது அவன் எண்ணம் உறுதியானதில் அவன் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது.

 

இங்கு சூர்யாவோ..நிலா வெளியேறும் வரை..தன்னை அடக்கியவன்..

அவள் வேளியே சென்ற உடன் அனைத்து சக்திகளையும் உடனடியாக இழந்தான்.துவண்டு போய் அமர்ந்திருந்தவனின் கண்களின் ஓரம் கசிந்தது.

 

கனவுகளே..!கனவுகளே..!

கலைந்து செல்லுங்கள்……

உறவே பிரிவாகி …வழிமாறும் போது..

உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது..

நினைவிழந்தேன்…என்னைமறந்தேன்..

காதலினால்…மதியிழந்து வாடுகின்றேன்…!

ஜீவன் மறைந்தாலும்…

விலகாத நேசம்….

காலம் பிரித்தாலும்..

மறையாத சோகம்…

விதி எழுதும்..சதி இதுவோ..

யாராறிவாரே…

விழி இருந்தும்… பார்வை இல்லை..

என்னை மறந்தேன்….

 

Advertisement